Friday, July 1, 2011


எனக்கு சிறு பிராயம் முதலே
ஒரு தேடல் உண்டு

வருடம் ஒரு முறை
மரணம் எனக்கு ஒரு அறிவுறுத்தலை
கொடுத்து கொண்டே இருக்கிறது.

எங்கிருந்து வருகிறது இந்த தகவலும்
தகவல் சார்ந்த நிகழ்வுகளும்?

எனக்குள் ஒரு கூக்குரல்.
வாடா தம்பி!
என்னென்னவோ கற்றுகொள்கிறாய்
என்னைப்படிடா என்று.
எங்கு கற்றுத்தருகிறார்கள்
நல்ல மரணம்?
அல்லது
எவன் கத்து தர்றான் நல்ல சாவு?

இன்று வரை மனதுக்குள்
அந்த கேள்விகயிறு எங்கு சென்றாலும்
தொடர்ந்து வருகிறது
அது ஒரு சிக்கு கயிறு. 

யார் தான் இந்த மரணத்தை
விரும்பி படிக்கிறார்கள்?
படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.

காலன் வந்து காலடியில் நிற்கும் போது
நிம்மதியாக போனவர்கள் எத்தனை பேர்?

என் வாழ்க்கையை நான் நிம்மதியாக,
மகிழ்ச்சியாக களித்தேன்,கழித்தேன்
அல்லது
என் வாழ்நாள் களி தேன் என்று.
விரும்பி விடை கொடுத்தவர் எவர்?


எனக்கு மரணம் கற்று கொடு
நான் தயார் என்று காலனின் பாடத்தை 
காதருகில் கேட்டவர்கள் எத்தனை பேர்  

அது போல் கேட்கவும் கற்கவும் தான் ஆசை
காலா என்னை கூப்பிட்டு செல்லும் முன்
எனக்கு மரணம் கற்றுக் கொடு...
நான் என்ன வாழ்க்கை வாழ்ந்தாலும்
முழு மனதோடு விடை கொடுத்து
மரணப்பள்ளியில் விசும்பலில்லா
சேர்க்கை கிடைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும்
முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
இயற்கை செல்வங்களே
இயற்கை கடவுள்களே!