Wednesday, May 31, 2017

உலகை நடுநடுங்க வைத்த ஹேக்கர்ஸ்!

ஜெ.அன்பரசன்

லகம் முழுவதும் தற்போது அனைவரையும் கதிகலங்க வைத்துவருகிறது ரான்சம்வேர். இது இணையத்தில் உலவி அதன் மூலம் கணினிகள் ஹேக் செய்து வருகின்றன. அப்படி ஹேக் செய்யப்பட்ட கணினியின் மொத்த தகவல்களையும் திருடி வைத்துக்கொண்டு கணினியைச் செயலிழக்கச் செய்து வருகின்றனர். அப்படி செயலிழக்கவைக்கப்பட்ட கணினிகளை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் அந்த ஹேக்கர்களுக்கு பிணையத் தொகையாகத் தரவேண்டும். இதுவரை சுமார் 150 நாடுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகளை இது தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரான்சம்வேர் ஆனது வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய ஃபார்மெட்டுகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
உலகில் இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இதுதான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.  ஆனால், இந்த ரான்சம்வேரை எந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கினார், எப்படி பரப்பிவருகிறார் என்பது போன்ற தெளிவான உண்மைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ரான்சம்வேர் ஹேக்கிங் போல இதற்கு முன் சில வைரஸ்களைப் பரப்பிவிட்டு உலகை நடுங்கச் செய்த அதிமுக்கியமான ஹேக்கர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். டெக்னாலஜி இன்றளவு இல்லாத காலத்திலேயே வைரஸ்களால், இவர்கள் உலகை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளார்கள் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ராபர்ட் மோரிஸ் :
கம்ப்யூட்டர் உலகின் முதல் வைரஸ் ராபர்ட் மோரிஸ் உருவாக்கிய 'மோரிஸ் வைரஸ்'தான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1988-ம் ஆண்டு கார்னல் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இந்த வைரஸை உருவாக்கினார். சாதாரண வைரஸாக உள்நுழைந்து மொத்த கம்ப்யூட்டரையும் காலி செய்துவிடும் இந்த மோரிஸ் வைரஸ். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் 3 நாள்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களின் தகவல்களைத் திருடி, அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டார் மோரிஸ். 'இன்டர்நெட் எங்கெல்லாம் வீக்காக இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்' என்று கைது செய்யப்பட்டபோது சொன்னாராம் மோரிஸ். இதனால் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், 'ஹேக் செய்து பிறர் கம்ப்யூட்டரை நம்மால் கட்டுப்படுத்தவும் முடியும்' என அனைவருக்கும் புரிய வைத்தவரும் மோரிஸ்தான்.
டேவிட் எல்.ஸ்மித் :
இப்போது ரான்சம்வேரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான 'பேட்ச்' ஃபைலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை நிறுவிக்கொண்டால் ரான்சம்வேரிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அறிவுரையும் வழங்கி வருகிறது. ஆனால், ஒருகாலத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பையே ஹேக் செய்து அந்த நிறுவனத்தை மட்டுமல்லாமல், அந்த நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைவரையும் அலறவிட்டவர்தான் டேவிட் எல்.ஸ்மித். 1999-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ் வேர்டை குறிவைத்து உருவாக்கப்பட்ட வைரஸின் பெயர் 'மெலிஸ்ஸா வைரஸ்'. இந்த வைரஸ் மெயிலில் வரும். அட்டாச் செய்யப்பட்ட எம்.எஸ்.வேர்டு ஃபைல் கொண்ட மெயிலைத் திறந்தாலே போதும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மொத்த ஜாதகமும் டேவிட் கைக்கு போய்விடும். அதோடு இதே வைரஸ் ஃபைல், உங்கள் மெயிலிலிருந்து தானாகவே 50 பேருக்கு ஃபார்வர்ட் ஆகிவிடும். அந்த 50 பேர் அந்த ஃபைலைத் திறந்தால், அவர்கள் கணக்கிலிருந்தும் தலா 50 பேருக்குச் செல்லும். இவரால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 80 மில்லியன் டாலர்.
ஜோனதன் ஜேம்ஸ் :

ஹேக்கிங் உலகின் முடிசூடா மன்னன். 'காம்ரேட்' என்ற பெயரில் ஹேக்கிங் விளையாட்டைக் காட்டி அமெரிக்காவையே நடுநடுங்கச் செய்தவர். 1999-ம் வருடம் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆயிரக்கணக்கான சீக்ரெட் மெயில்களைத் திருடினார். பல ராணுவ அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை மொத்தமாக உருவி அமெரிக்க ராணுவத்துக்கு பெரிய தலைவலியை உருவாக்கியவர். நாசாவின் கம்ப்யூட்டர்களை வசப்படுத்தி மூன்று முறை விண்வெளிப் பயண ஆராய்ச்சியை நிறுத்தி சுமார் 2 மில்லியன் டாலர் நஷ்டத்தை நாசாவுக்கு ஏற்படுத்தியவர். யார் இவர்? என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறைப்பிரிவு சல்லடை போட்டு துளைக்க... அந்த 'காம்ரேட்' ஹேக்கர் கண்டுபிடிக்கப்பட்டான். குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டபின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நாசாவுக்கு விளையாட்டு காட்டியது ஜோனதன் ஜேம்ஸ் என்கிற 15 வயது சிறுவன். இவன் சிறியவன் என்பதால், அமெரிக்க அரசு தண்டனை அளிக்காமல், எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. ஆனால், ஜோனதன் ஜேம்ஸ் இதோடு நிறுத்திவிடவில்லை. மக்களின் கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி பண மோசடி செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த வழக்கின் கீழ் 2008 -ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டான். வழக்கு நடந்துகொண்டிருந்த வேளையில், பல கார்ப்பரேட் நிறுவனங்களும், இணையதளங்களும் ஜேம்ஸ் மீது அடுக்கடுக்கான பல புகார்களைக் கொடுத்தன. இதனால் மனம் வேதனை அடைந்த ஜேம்ஸ் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டான். ஜேம்ஸ் தற்கொலை செய்துகொண்டபோது தி டெலிகிராப் பத்திரிகை கூறியது என்ன தெரியுமா? 'ஒரு அறிவாளியைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொன்றுவிட்டன.'
கேரி மெக்கினோன் :
"வேற்று கிரகவாசிகளைப் பற்றி ஏதேனும் மறைக்கப்பட்ட தகவல்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத்தான் ஹேக் செய்தேன்" என்று இப்போதும் தனது சொந்த நாடான ஸ்காட்லாந்தில் இருந்துகொண்டு சொல்லிவருகிறார் கேரிமெக்கினோன். இவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் போராடி வருகிறது. ஒருவேளை கேரி கைது செய்யப்பட்டால், அவருக்கு அமெரிக்காவில் 70 ஆண்டுகள் சிறை தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகள் சிறை தண்டனையா? அப்படி எதை ஹேக்கிங் செய்தார் என்கிறீர்களா? அமெரிக்காவின் ராணுவ தளத்துக்குள்ளும், நாசா விண்வெளி ஆராய்ச்சிக்குள்ளும் சர்வசாதாரணமாக சென்று வந்தவர் கேரி. ராணுவதளம் மற்றும் நாசாவில் 2001-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டுவரை சுமார் 97 கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 300-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களின் மொத்த ஃபைல்களையும் அழித்து சுமார் 7 லட்சம் டாலருக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். விக்கிலீக்ஸிடம் இருப்பதை விட 100 மடங்கு ரகசியங்களைத் தன்வசம் வைத்துள்ளாராம் இந்த கில்லாடி கேரி.
கெவின் பால்சன் :
'டார்க் டேன்ட்டி, என்ற புனைபெயரோடு உலாவந்த கெவின் செய்து வந்தது சற்று நூதன ஹேக்கிங் ரகம். ரேடியோ நிறுவனங்கள் தொடர்ச்சியாகப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தன. அப்போது அந்த நிறுவனங்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து முதல் பரிசு பெறுபவராகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு முதல் பரிசுகளைத் தட்டி வந்தார். இதை நூதனமாக செய்து வந்ததால், யாரிடமும் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கவனம் வேறுபக்கம் திரும்பி அமெரிக்காவின் உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அத்தனை ரகசியங்களையும் அள்ளிவிட்டார். பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு 51 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதோடு, 56,000 டாலர் நஷ்ட ஈடும் கட்டியுள்ளார். அதன் பிறகு வெளிவந்த கெவின் தற்போது 'வயர்டு' என்ற செய்தி இணையத்தின் ஆசிரியராகவும், பெண்கள் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமை தடுப்பு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்

Monday, May 22, 2017

நம்மாழ்வாரை  புரிஞ்சுக்கலையே

யற்கையை நேசிக்கும், இயற்கை விவசாயத்தை விரும்பும், இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் கரங்களைத் தடுத்து நிறுத்த இன்று வீதியில் போராட இறங்கும் மனிதர்கள் முன்னத்தி ஏராக உச்சரிக்கும் பெயர்... நம்மாழ்வார்.  

கைநிறையச் சம்பளம் கொடுத்த அரசு வேலையைச் `செக்குமாட்டுத்தனம்' என்று உதறித் தள்ளியவர் நம்மாழ்வார். செயற்கை உரங்களை அள்ளித்தெளித்து புதுப்புது நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற `பசுமைப் புரட்சி'க்கு எதிராக நின்று, விவசாயிகளைக் காடு, மேடு, கரட்டு எங்கும் அலைந்து சந்தித்து, `இயற்கை விவசாயத்துக்கு வாங்கப்பா' என்று மன்றாடியவர். டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குகிற மீத்தேன் எடுக்கும் திட்டத்தை, பம்பரமாகச் சுழன்று போராட்டம் மூலம் களமாடி தடுத்து நிறுத்தியவர்.





















நம்மாழ்வார் ஊர் உலகமெல்லாம் கால் தேய நடந்து போய் இயற்கை விவசாயத்துக்குப் பலரை மாற்றிக்கொண்டிருந்தபோது, அவரின் மனைவி அவர்களது சொந்த நிலத்தில் 10 ஆண்டுகள் செயற்கை விவசாயம்தான் செய்து வந்தார்! 

``அவரு உயிரோட இருந்தப்போ ஒரு துளி சுயநலம் இல்லாம வாழ்ந்து, இயற்கை விவசாயத்துக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிடணும்னு சொல்லித் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தினாரு. ஆனா, அவரை அப்போ கொஞ்ச பேருதான் ஆதரிச்சாங்க. `இந்தக் கிழவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேல? எங்கள நட்டத்துல தள்ளப் பார்க்கிறார்'னு  அவச்சொல் பேசினாங்க. அதுல நானும் ஒருத்தி. அவர் கொடுத்த காசை மிச்சம் புடிச்சு வாங்குன மூன்று ஏக்கர் நெலத்துல 10 வருஷம் செயற்கை விவசாயம்தான் பார்த்தேன். அவரோட இறப்புக்கு அப்புறம், அவரோட முரண்பட்ட பலரும் அவரோட அருமை தெரிஞ்சு இப்போ இயற்கை விவசாயத்துக்குத் திரும்புறதைப்போல, அவர் கொள்கைக்கு எதிரா செயல்பட்டதை நினைச்சு நானும் இப்போ வருந்துறேன்'' என்று உள்ளுக்குள் உதைக்கும் ஆற்றாமையோடு பேசுகிறார், நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள். `அவர் இல்லையே' என்ற ஏக்கம் குரலிலும் ஒலிக்கிறது. 

``என் குடும்பம் ஓரளவு வசதியானது. அதனால, எனக்கு வசதியான மாப்பிள்ளையைப் பார்த்தாங்க. ஆனா, `சாதாரண குடும்பமா இருந்தாலும், அரசாங்க வேலையில இருக்கிற மாப்பிளையாப் பாருங்க'னு சொல்லிட்டேன். அப்படித்தான், என்னோட அத்தை இவரை எனக்குப் பேசி, கட்டி வச்சாங்க. 

சடங்கு, சம்பிரதாயங்களை முறையா கடைப்பிடிக்கிற வழக்கம் எங்களுக்கு. 

ஆனா இவரோ, பகுத்தறிவுப் பேசி, தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாரு. `நான் அவங்களுக்குத் தாலி கட்டணும்னா, பதிலுக்கு அவங்க எனக்குத் தாலி கட்டணும்'னு இவரு குதர்க்கமா பேச, 1964-ம் வருஷம் வெறும் மோதிரம் மட்டும் மாத்தி என்னை மனைவியா ஏத்துக்கிட்டாரு.

முதல் ராத்திரியில என்கிட்ட, `எங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் அவங்க  மனைவிகளைக் கோபத்துல அடிப்பாங்க. அதைப் பார்த்து பார்த்து வளர்ந்த நான், பெண்களை மதிக்கணும், அவங்களைப்போல அடிக்கக் கூடாதுனு உறுதி எடுத்துக்கிட்டேன். அந்த மரியாதைக்கான ஆரம்பம்தான், உங்களுக்கு நான் தாலி கட்டாதது'ன்னார். புது மாப்பிள்ளையா இருக்கிறப்போ எல்லா ஆம்பளைங்களும் சொல்ற வசனம்தானேனு நெனச்சேன். ஆனா, அவரோட வாழ்ந்த வாழ்க்கையில ஒரு தடவைகூட என்னை கைநீட்டி அடிச்சதில்ல. அவ்வளவு ஏன்? கோபமா பேசுனதில்ல; `நீ, வா, போ'னு ஒருமையிலகூட கூப்பிடமாட்டாரு, `வாங்க, போங்க'னுதான் பேசுவாரு. கடைசிக் காலம் வரை அப்படித்தான். 

அவருக்கு 400 ரூபாய் சம்பளம். இப்போ ஒரு லட்சம் மாதிரி அப்போ அதோட மதிப்பு. அதுல அஞ்சு ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை அப்படியே என்கிட்ட வந்து கொடுத்துடுவாரு. அதுல அப்படி இப்படி மிச்சம் பண்ணியும், இருக்குற நகைகளை அடகு வெச்சும், ஊருல மூணு  ஏக்கர் நெலம் வாங்கிப் போட்டேன். அங்கதான் எங்க ஒரே மக மீனா பொறந்தா. நாலு வருஷம் ஒழுங்கா வேலைக்குப் போனவரு, ஒருநாள் தயங்கித் தயங்கி என்கிட்ட வந்து, `உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'னு மென்னு முழுங்கினாரு. `நான் வேலையை விட்டுட்டேன்'னு  படீர்னு  சொன்னாரு. எனக்கு பக்குனு ஆயிட்டு. `ஏன்?'னு கேட்டேன். `எனக்கு செக்கு மாடாட்டம் வேலை பார்க்கப் பிடிக்கல. செயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவா நான் விவசாயம் படிச்சேன்?'னு  ஏகப்பட்ட வேதாந்தம் பேசினாரு. `சோத்துக்கு என்ன பண்றது?'னு  கேட்டேன். `சமாளிச்சுக்கலாம்'ன்னாரு.

நான் கோச்சுக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன். ஆனா, அவரு வந்து,  என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டுப் போனாரு. களக்காடுங்கிற ஊருல பெல்ஜியம் நாட்டு தனியார் கம்பெனி இயற்கை விவசாயப் பண்ணை வச்சுருந்தாங்க. அதுல வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் வேலை பார்த்தாரு. அப்புறம், தருமபுரியில உள்ள மலையில் மோட்ராகிங்கிற கம்பெனியில மூணு  வருஷம் வேலை பார்த்தாரு. நாடோடி மாதிரி நானும், என் மகளும் அவரு பின்னாடி போனோம். ஆனா அதையும் விட்டுட்டு, எங்களை சொந்த மாவட்டமான தஞ்சைக்கே அழைச்சுட்டு வந்துட்டாரு. அங்கே, `குடும்பம்'னு ஒரு  இயற்கை விவசாய வழிகாட்டி அமைப்பை ஆரம்பிச்சு, 10 வருஷம் இயற்கை விவசாய வழிமுறைகளை பிரசாரமா செஞ்சாரு. 

`இந்த மனுஷனை நம்பினா, பொண்ணையும் கட்டிக்கொடுக்க முடியாது, குடும்பமும் கரை சேராது'னு நெனச்சு, நான் ஊருல வாங்கிப் போட்ட மூணு ஏக்கர் நெலத்துல விவசாயம் பண்ணினேன். என்னையும் அவர் இயற்கை விவசாயம் பண்ணச் சொல்லி வற்புறுத்தினாரு. ஆனா, நான் கேக்கல!

 அவருக்கு மக மீனா மேல கொள்ளை பிரியம். `நேருவுக்கு இந்திராபோல, எனக்கு மீனா. அவளை ரஷ்யா வரை அனுப்பிப் படிக்க வைப்பேன்'னு  அடிக்கடி சொல்வாரு. நான்தான், `ஒத்தப் புள்ளையை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்'னு மறுத்துட்டேன். 

கடந்த எட்டு வருஷத்துக்கு, முன்னாடி கரூர் வானகத்துல 65 ஏக்கர் பொட்டல்காடு நிலத்தை வாங்கி, அதை சோலையாக்கணும்னு முனைப்புக்கு வந்தபிறகு, அவர் வீட்டுக்கே வர்றதில்லை. எப்பவாச்சும் இந்த வழியா போகும்போது, `நான் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்'னு  சொல்லிட்டு வருவாரு. அரை மணி நேரம் இருந்துட்டு கிளம்பிடுவாரு. இதனால, நான் என் மக வீட்டுலேயே இருந்தேன்.

`குடும்பத்தை விட்டுட்டு நாடோடியா, இப்படி கருத்து  சொல்லிட்டு திரியுறாரே?'னு அவர் மேல வருத்தமா இருக்கும்தான். ஆனா, அவரை சொந்தம், அக்கம்பக்கம் யாராச்சும் ஏசினா பொசுக்குனு கோபம் வந்துடும். பிலுபிலுனு  அவங்ககிட்ட சண்டைக்குப் போயிருவேன். அவரு குடும்பத்தை மறந்து போனாலும், எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டேதான் இருந்திருக்கார். 

நான் விவசாயம் பார்த்தப்போ, ஒரு தடவை அடி உரத்துக்குப் பதில் எருக்கஞ்செடிகளை போட்டு பயிர் செஞ்சேன். நல்ல மகசூல். அதைப் பத்தி எல்லார்கிட்டயும் பெருமையா பேசி இருப்பார்போல. சமீபத்துல மாமல்லபுரத்துல உள்ள ஒரு அமைப்பு அவருக்கு விருது கொடுத்தாங்க. அதை வாங்கப் போனேன். அப்போ அங்க பலரும், `நீங்க செயற்கை விவசாயம் பண்ணினாலும், எருக்கஞ்செடிகளை போட்டு சிறப்பான மகசூல் எடுத்ததை அய்யா எங்ககிட்ட பலதடவை பெருமையா சொல்லி இருக்கார்'னு  சொன்னாங்க. அப்படியே உருகிப்போயிட்டேன்.

அவர் இறந்தப்ப வந்த கூட்டத்தை பார்த்தப்போதான், `இந்த மனுசன் வாழ்ந்த வாழ்க்கைய நாம புரிஞ்சுக்கலையே'னு  மனசை அறுத்துப் போட்டிருச்சு. அதுவும், பலநூறு இளைஞர்கள், இளம் பெண்களெல்லாம் வந்து அழுதப்ப, `நம்மாழ்வார் மனைவி'ங்கிற பெருமையை, கர்வத்தை முதல் முறையா நான் உணர்ந்தேன். ஆனா,  அப்போ அவரு  மூச்சில்லாத உடலாயிட்டாரேனு வெடிச்சு அழுதேன். 

இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் ஒவ்வொருத்தருக்கும் அவரு தலைவன். 

பல ஆயிரம் இளைஞர்களும், இளைஞிகளும் அவர் கொள்கையால ஈர்க்கப்பட்டு, எந்தக் கட்சி சாயமும் இல்லாம அவரைக் கொண்டாடுறதைப் பார்க்குறப்போ நம்பிக்கையா இருக்கு. முதல்முதலா கோயில்பட்டியில அவர் வளர்த்த பாகற்கொடிபோல, இன்றைய சந்ததிகிட்ட புது நம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்காரு. 

இப்போ இயற்கை விவசாயத்துக்கு ஆதரவா எடுக்கப்படுற ஒவ்வொரு அடியிலயும் அவரை என்னால பார்க்க முடியுது. அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன், அவரை எனக்கு எவ்வளவு தேடுதுங்கிறதை சொல்றதுக்கு இப்போ அவரு இல்ல. இருந்தாலும், இந்த நெனப்பெல்லாம்தான் எனக்கு இப்போ ஜீவனா கெடக்குது!'' 

இன்மையில் உணரப்படும் அன்பு வலிமிகு அழகு. ஒரு கண்ணில் காதலும் ஒரு கண்ணில் கண்ணீருமாகச் சிரிக்கிறார் சாவித்திரி அம்மாள்

Wednesday, May 3, 2017

லிப்பிகா சிங்நான்கு தேசிய விருதுகள்


லிப்பிகா சிங் டராய். ஒடிஸாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். தனது ஏழு வருடகால திரைப் பயணத்தில் நான்கு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், லிபிக்காவின் `த வாட்டர்ஃபால் (The Waterfall)' ஆவணப்படம், `சிறந்த கல்விப் படம்' என்ற பிரிவில் விருது வென்றுள்ளது. 

`ஹூ' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லிப்பிகாவுக்கு ஃபேஸ்புக் வழியாக வாழ்த்துத் தெரிவித்தேன். உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.




``ஒரு பழங்குடிப் பெண்ணாக லித்திகா வளர்ந்த சூழல் எப்படிப்பட்டது?''

 ``ஒடிஸாவில் இருக்கிற மயுர்பஞ்ச் என்ற குக்கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை வங்கி ஒன்றில் பணி புரிந்தார். அதனால் அடிக்கடி பணியிட மாறுதல் இருக்கும். அது எனக்கு பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. பட்டப் படிப்பை விசாகப்பட்டினத்தில்  முடித்த பின்னர், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஆடியோகிராஃபி படித்தேன். 

என் வீட்டுச்சூழலால் பழங்குடிப் பெண் என்பதற்கான இட ஒதுக்கீடோ, கல்வி உதவித்தொகையோ எப்போதும் அவசியமாக இருந்ததே இல்லை. ஆனாலும், என் நிறத்தால்  நான் பிறந்த இனத்தால் தினசரி வாழ்வில் பின்னடைவுகளையும் மிகமோசமான பாகுபாடுகளையும் சந்தித்திருக்கிறேன். 

முதன்முதலாக பள்ளி விழா ஒன்றில் நடனமாடும்போது, நன்றாக நடனம் ஆடும் நான் பின் வரிசையிலும், நடனம் ஆடத் தெரியாவிட்டாலும் நல்ல நிறமாக இருந்த பெண் மையத்திலும் நிற்கவைக்கப்பட்டோம்.  நம்மைச் சுற்றி இருக்கிற பாகுபாடுகளை உணரத் தொடங்கியது அப்போதிருந்துதான். அப்போது இருந்தே இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும், மன தைரியத்தை எனக்கு நானே ஊட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். 

எனக்கு தேசிய விருது கிடைத்ததைக்கூட இட ஒதுக்கீட்டில் பெற்றதாகக் கேலி செய்கிறவர்களை இப்போதும் எதிர்கொள்கிறேன். 

சில இடங்களில் நான் பெண், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள் உள்ளிட்ட அடையாளங்கள் ஏற்படுத்தும் தடைகளால் ஓர் கடுமையான அழுத்தத்தை உணர்கிறேன். அதிலிருந்து வெளிவந்தாலும், அந்த அழுத்தத்தை அனுமதிப்பதை  என் பலவீனம் என நினைக்கிறேன்.'' 


``அடுத்தடுத்து வெல்லும் தேசிய விருதுகள் பற்றி?''

``முதல் தேசிய விருதை ‘காருட்’ என்கிற படத்தின் சவுண்ட் இன்ஜினீயரிங் வேலைக்காகப் பெற்றேன். அடுத்ததாக, எனக்கு மியூஸிக் கற்றுத்தந்த, சங்கீதத்தை சேவையாகச் செய்துவந்த என் ஆசானின் குரலைப் பதிவிட நினைத்தேன். அவரைத் தேடிச் சென்றபோது அவர் உயிருடன் இல்லை. அச்சமயத்தில், நான் இயக்குநர் ஸ்ரீ மணி கவுல் படத்தில் சவுண்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவர்தான், ஆசிரியரைப் பற்றி ஆவணப்படம் எடுக்கச் சொல்லித் தூண்டினார். அப்படி உருவானதுதான் ‘A Tree A Man A Sea’. அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அந்தப்படம். 

அடுத்த முயற்சி, `ட்ராகன் ஃப்ளை மற்றும் ஸ்நேக்’ ஆவணப்படம். நகர வாழ்வில் இருக்கும் ஒரு பள்ளி மாணவி விடுமுறையில் கிராமத்துக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள், அவள் வளர்ந்த பின், கிராமத்துக்குச் செல்ல இயலாத அவள் சூழல் மற்றும் ஏக்கத்தைப் பேசும் படம். அதுவும் எனக்கு சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது. 

இதோ இம்முறை தேசிய விருது வென்றிருக்கும் ‘த வாட்டர்ஃபால்’, பள்ளி விடுமுறையில் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் பற்றியது. இயற்கையை ரசித்தபடி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பற்றிப் பேசித் திரியும் அவர்கள், அரசின் அறிவிப்பால் நீர்வீழ்ச்சி அழியும் நிலை வரும்போது என்ன செய்கிறார்கள் என்பதே கதை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 700 பள்ளிகளில் திரையிடப்பட உள்ளது.''

``ஆவணப்பட தயாரிப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?''

``படம் தயாரிப்பதற்கான பணம்தான் சவால்.  அதைத்தாண்டி பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமீபத்தில் ‘ஸ்டோரீஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ என்ற, சூனியம் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தேன். படத்துக்காக அந்த மாந்திரீக உலகைச் சேர்ந்த பல பகுதிகளுக்கும் சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். என்னுடைய பட வேலைகளில் பெரும்பங்கை நானே செய்துவிடுவதால் அனைத்தும் என் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். இங்கு நானே பாஸ்.