Wednesday, October 5, 2011

செய்தியும் சிந்தனையும்

நான் இந்தியன்



நான் சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அதில் என்னை பாதித்த
சில பத்திகளை இங்கே பதித்துள்ளேன் நீங்களும் படிங்க..


இந்திய மக்களைப் படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது. ஒரு பக்கம் பிளாட்ஃபார்மில் சாமி கும்பிட்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் குடும்பம் குடும்பமாக பக்கெட் சிக்கன் வாங்கிக்கொண்டு இருக் கிறார்கள். ஓட்டுக்குக் காசு வாங்குகிறார் கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார் கள். ஈழப் பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது வைகோவைத் தோற்கடிக்கிறார்கள். வடிவேலுவில் இருந்து குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டு கிறார்கள். கருத்துக் கணிப்புகளை அடித்து நொறுக்கி, வாக்குகளை மாத்திக் குத்து கிறார்கள். அன்பே சிவத்தையும் ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள். 'திருப்பாச்சி’யை ஹிட்டாக்குகிறார்கள். அதே டெம்போவில் 'திருப்பதி’ எடுத்தால், மொட்டை அடிக்கிறார்கள். ஈழப் பிரச்னைக்கு 'உச்சு’ கொட்டிக்கொண்டே ஐ.பி.எல். பார்க்கிறார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டு, ஆர்.டி.ஓ. ஆபீஸில் லஞ்சம் கொடுக்கிறார்கள். குழந்தையை ப்ரீ.கே.ஜி. சேர்க்க ஒரு லட்சம் டொனேஷன்கொடுக் கிறார்கள். உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களைத் திட்டுகிறார்கள். விஜய்க்கு எதிராக எஸ்.எம்.எஸ். இயக்கம் கட்டுகிறார்கள். 'மக்கள் இயக்கம்’ மாநாடு போட்டால், ரவுண்ட் கட்டுகிறார்கள். மதுக் கடைகளிலும் கூட்டம். தியான மையங்களிலும் கூட்டம். துணிக் கடை, நகைக் கடை எங்கெங்கும் கூட்டம். ஆனால், எப்போது யாரைக் கேட்டாலும், ''ஒரே பணக் கஷ்டம் பாஸ்'' என்கிறார்கள். நேர்மை, நியாயம், கோபம், அன்பு பேசும் எழுத்துக்கும் சினிமாவுக்கும் பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள், அழுகிறார்கள். எதிர் ஃப்ளாட்டில் நடக்கும் வெட்டுக்குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருவில் ஒரு சத்தம் கேட்டால், கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். திருட்டு வி.சி.டி. பார்க்கிறார்கள். நித்யானந்தா சி.டி-க்கு அலைகிறார்கள். யாருக்கும் எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் அழுகிறார்கள். சமூகத்தின் பெரும் அவலங்களையும் அபத்தங்களை யும் நொடியில் கடந்து சென்றுவிடுகிறார் கள்!




ஒரு முறை நண்பனை பஸ் ஏற்றிவிட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். அது பண்டிகை நாள் என்பதால் கூட்டம் கும்மியடித்தது. 200 ரூபாய் டிக்கெட்டுகள் 1,000 ரூபாய்க்கும் கிடைக்கவில்லை. திடுதிப்பென்று ஒரு பிளாட்ஃபார்மில் முண்டியடித்தது கூட்டம். ஒரு வயசுதான் இருக்கும்... ஒரு குழந்தையை யாரோ நடு பஸ் ஸ்டாண்டில் விட்டுப் போயிருக்கிறார்கள். ஒரு தூண் ஓரமாக அது கிடந்து அலறியது.



''ரொம்ப நேரமா அது அங்கதான் கெடக்குது. நானும் யாராவது வருவாங்கனு பாக்கறேன்... காணோம்'' என்கிறார் பக்கத்துக் கடைக்காரர். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க... ஒரு பெண்மணி மட்டும் சட்டென்று குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு, ''ச்சூ... ச்சூம்மா... அம்மாவைக் காணமா... வந்துருவாங்கடா குட்டி'' எனத் தட்டிக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. மைக்கில் குழந்தையைப் பற்றி அறிவிப்பு கொடுத்தார்கள். அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏதோ ஒரு நொடியில், அந்தப் பெண்மணி சட்டென்று குழந்தையை முந்திக்குள் வைத்துப் பால் கொடுக்க ஆரம்பித்தார். கூட்டத்தைக்கூடப் பார்க்கவில்லை. எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்த கணம், உடல் சிலிர்த்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்து ஓடியது. அவரவர்க்கான பேருந்துகளில், அவரவர்க்கான ஊர்க ளுக்கு, அவரவர் போய்ச் சேர்வதுதான் முக்கியம் அல்லவா? போலீஸோடு குழந்தையை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி சென்றார். எனக்கு அந்தப் பேருந்து நிலையமே நம் தேசத்தைப் போலத் தோன்றுகிறது