Wednesday, March 30, 2016

டோரன்ட் டவுன்லோடுகள் - இதில் இவ்வளவு வில்லங்கமா?   

நாம் நேர்மையானவர் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், நம்மை அறியாமல் நாம் செய்யும் சின்னசின்ன தவறுகள் கூட கிரிமினல் குற்றங்களாக இருக்கின்றன.

இன்டர்நெட் கனெக்‌ஷன் வாங்கும்போது இணைய வேகம் குறைவாக இருந்தாலும்  ‘அன்லிமிடெட்’ பிளான்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு எப்போதும் குஷிதான். குறைவான கட்டணம், நிறைவான டவுன்லோடுகள் என முதலில் டோரன்ட் மென்பொருளைத்தான் இன்ஸ்டால் செய்வார்கள். முதல் வேலையாக நான்கு படங்கள், மூன்று மியூஸிக் ஆல்பம், ஒரு 10 ஜிபி கேம் என டவுன்லோடை போட்டு தெறிக்கவிடுவார்கள். இவர்களில் பாதிப்பேருக்கு இது சட்டப்படி குற்றம் என்று தெரிவதில்லை. மீதிப்பேர் தெரிந்தேதான் செய்கிறார்கள்.

ஒன்று தெரியுமா? டோரன்ட்டில் டவுன்லோடு செய்வது டெக்னிக்கலாக குற்றம் கிடையாது!

அட ஆமாம் பாஸ்..டோரன்ட் பயன்படுத்துவது தப்பில்லை. ஆனால், அதில் எதை டவுன்லோடு செய்கிறீர்கள் என்பதுதான் சிக்கல். காப்புரிமை பெற்ற, விலை கொடுத்து வாங்கும் எந்த ஒரு படத்தையும், பாடலையும், மென்பொருளையும், கேமையும், புத்தகத்தையும் இலவசமாக டோரன்ட் மூலமாக பதிவிறக்கம் செய்வது தவறுதான்.


ஓ.கே..முதலில் டோரன்ட் உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்!

உதாரணத்துக்கு, ஒரு PDF ஃபைலை டோரன்ட் நெட்வொர்க் மூலமாக பகிர, முதலில் டோரன்ட் மென்பொருளை இன்ஸ்டால் செய்யவேண்டும். பகிர விரும்பும் ஃபைலை மென்பொருளில் தேர்வு செய்ததும், அது ‘torrent’ எனும் எக்ஸ்டென்ஷனுடன் இன்னொரு ஃபைலை தரும். இந்த ஃபைலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களால் டோரன்ட் மென்பொருள் மூலம் உங்களுடைய PDF ஃபைலை பதிவிறக்கம் செய்ய முடியும்.

நீங்கள் Torrent ஃபைலை இன்னொரு நண்பருக்கு மட்டும் கொடுத்தால், அவர் மட்டும்தான் டவுன்லோடு செய்யமுடியும். ஆனால், உங்களுடைய PDF ஃபைலை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ள நினைத்து, பொது இணையத்தில் Torrent ஃபைலை வெளியிட்டால் என்ன ஆகும்? பல லட்சம் பேர் உங்களுடைய PDF ஃபைலை டவுன்லோடு செய்ய முடியும்.

உங்களுடைய PDF ஃபைலை பல லட்சம் பேரில் ஒரே ஒருவர் டவுன்லோடு செய்துவிட்டால் போதும். அதன்பிறகு, உங்களுடைய இணையம் நிறுத்தப்பட்டாலும், அவர் மூலம் உலகம் முழுக்க அந்த ஃபைல் பரவிக்கொண்டுதான் இருக்கும்.

அது எப்டி பாஸ்?

டோரன்ட் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட நெட்வொர்க். அதாவது Decentralized நெட்வொர்க். டைரக்ட் டவுன்லோடு என்றால், ஒரே ஒரு சர்வர் மட்டுமே உங்களுக்கான ஃபைலை அனுப்பும். ஆனால், டோரன்ட் நெட்வொர்க்கில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களில் இருந்து குட்டி குட்டியாக ஃபைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.

இந்த கான்செப்ட்டின்படி, உங்களுடைய PDF ஃபைலை ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களில் 800 பேர் தொடர்ந்து டோரன்ட் செய்தால், தானாகவே PDF ஃபைலை டவுன்லோடு செய்யும் மற்றவர்களுக்கு 800 பேரின் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைல் அப்லோடு ஆகும். எனவே, ஒருவரிடம் இருந்து சென்ற ஃபைல், ஆயிரம் பேரிடம் சென்று அங்கிருந்து கோடிக்கணக்கானோரை அடைகிறது. இதனால், இந்த PDF ஃபைல் ஏதேனும் ஒரு சர்வரில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. டோரன்ட் இருக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டருமே ஒரு மினி சர்வர்தான். ஏனென்றால், இந்த கம்ப்யூட்டர் டவுன்லோடு மட்டும் செய்வதில்லை. அப்லோடும்தான் செய்கிறது,

இங்குதான் Seeders/Leechers ratio எனும் மிக முக்கியமான கான்செப்ட் வருகிறது. ஒரு டோரன்ட் ஃபைலை உயிரோடு வைத்திருப்பது இதுதான்.
 


இதில், ஃபைலை மற்றவர்களுக்கு பகிர்பவர்கள், அதாவது அதிகம் அப்லோடு செய்பவர்களை Seeders எனும் அழைக்கிறார்கள். டவுன்லோடு செய்பவர்களை Leechers என்று அழைக்கிறார்கள். இப்போது ஒரு டோரன்ட்டுக்கு 1,000 பேர் Seeder-களாகவும், 1,000 பேர் Leecher-களாகவும் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்படியானால், அப்லோடுகளும், டவுன்லோடுகளும் சரிசமமாக இருக்கிறது. எனவே, இந்த 2,000 பேரின் இணைய வேகத்தைப் பொறுத்து அனைவருக்கும் ஃபைல் கச்சிதமாக பிரிந்து செல்லும்.

இப்போது 10,00,000 பேர் Leecher-களாக இருக்கிறார்கள் என்றால், 1,000 பேர், 10 லட்சம் பேருக்காக அப்லோடு செய்யவேண்டும் அல்லவா? எனவே, இந்த 10 லட்சம் பேரின் டோரன்ட் டவுன்லோடு வேகம் குறையும். இப்போது இந்த 10 லட்சம் பேரும் PDF ஃபைலை டவுன்லோடு செய்துவிட்டு, அப்லோடு செய்கிறார்க்ள் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கேதான் ‘மேஜிக்’.

இப்போது 10 லட்சம் பேர் Seeder-களாக இருக்கிறார்கள். ஆனால், PDF ஃபைலை வேண்டுபவர்களின் எண்ணிக்கை வெறும் 500-ஆக குறைகிறது. அப்படியானால் 500 Leecher-கள்தான். எனவே 10 லட்சம் பேர், 500 பேர் கேட்கும் PDF ஃபைலை கொடுக்கப்போகிறார்கள் அல்லவா? எனவே, இந்த 500 பேருக்கு அதிக டவுன்லோடு வேகத்துடன், விரைவாக ஃபைல் கிடைக்கும். 
 

ஒருவேளை, இந்த Seeder-களின் எண்ணிக்கை ‘0’-வாக குறைந்தால், அன்றுடன் அந்த டோரன்ட்டை இணையத்தில் மரணித்ததாக கருதிக்கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் மட்டும்கூட அந்த  ஃபைலை தொடர்ந்து பகிர்ந்தால், அந்த டோரன்ட் உயிருடன் இருக்கிறது என்றே அர்த்தம்.

எல்லாம் சரி.. வில்லங்கம் என்று  தலைப்பு வச்சீங்களே…!

ரைட்டு. நீங்கள் பகிர்ந்த PDF ஃபைல்,  நீங்களே டைப் செய்த டாக்குமென்ட் என்று வைத்துக்கொள்வோம். இதை உலகுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி நீங்கள் டோரன்ட் செய்தால் தப்பே இல்லை.

ஆனால், நீங்கள் டோரன்ட் செய்தது நேற்று ரிலீஸான ‘கபாலி’ படம் என்றால்... தவறு தானே! டெக்னிக்கலாக காப்புரிமை பெற்ற, இன்னொருவர் விற்பனை செய்யும் தயாரிப்பை நீங்கள் உலகுக்கு இலவசமாக பகிர்ந்திருக்கிறீர்கள் அல்லவா? இதற்கும் திருட்டு விசிடிக்கும் வித்தியாசம் இல்லை பார்த்தீர்களா? ஷாக்கிங்காக இருக்கிறதா? ஆம், காப்புரிமை பெற்ற ஃபைல்களை டோரன்ட் செய்வது திருட்டு விசிடி போன்று குற்றம்தான். ஆனால், இங்கு பல லட்சம் பேர் ஒரே படத்தையோ, பாடலையோ பகிர்கிறார்கள் என்பதால், அத்தனை பேரையும் பிடித்து கூண்டில் நிறுத்த முடியாது. முதலில் அப்லோடு செய்பவர்களையே வேட்டையாடுவார்கள். ஆயிரக்கணக்கானோரை கூண்டில் நிறுத்திய சம்பவங்கள் வெளிநாட்டில் நடந்திருக்கின்றன.

ஆனால், திருட்டு விசிடி குற்றம் என்று பரவலாக இருக்கும் விழிப்புணர்வு, தவறான டோரன்ட் பதிவிறக்கங்களுக்கு இல்லை. இதனால், டோரன்ட் பயன்படுத்தி புதிய படங்களை, பாடல்களை, மென்பொருள்களை டவுன்லோடு செய்வது தவறு என்று தெரியாமலேயேதான் செய்கிறார்கள்.

மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு இருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு, முதலில் படத்தயாரிப்பாளர்களுக்கும், மியூஸிக் நிறுவனங்களுக்கும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்பொதெல்லாம் ரொம்பவே முன்னேறிவிட்டார்கள் என்பதால், விரைவில் தமிழ் டோரன்ட் தளங்களுக்கு கெடுபிடி வரலாம். தமிழ் ராக்கர்ஸ் தளம் ‘ப்ரேமம்’ படத்தை பகிர்ந்து சிக்கியது நினைவிருக்கலாம். ‘ரஜினி முருகன்’ படத்துக்காக டோரன்ட்டுகளை எதிர்த்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தால், பிரபல டோரன்ட் டிராக்கரான ‘TrackerFix’ சேவையே முடங்கியது. ‘மேக்னட் லிங்க்’ போன்று டோரன்ட் சேவைகள் டெக்னிக்கலாக அப்டேட் ஆனாலும், உலகெங்கும் தயாரிப்பு நிறுவனங்களும் டெக்னிக்கலாக அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன.

டோரன்ட் உலகின் கதாநாயகனான பைரேட் பே தளமே இன்று முடக்கப்பட்டு, ப்ராக்ஸிகள் மூலமாகவே இயங்கி வருகிறது.

எனவே, காப்புரிமை பெற்ற எதையும், படமாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, நீங்கள் டோரன்ட்டில் உலகுடன் பகிர்ந்தால் டெக்னிக்கலாக கிரிமினல்தான்

Wednesday, March 16, 2016

சாதிக்கு எதிரான கேள்வியை உங்கள் சாதியிடம் இருந்து தொடங்குங்கள்

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...?" என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.


தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய "தலித் இளைஞர்களின்" கொலைகளில் இது மூன்றாவது கொலை.



இன்னும் சரியாக அதிகபட்சம் ஒரு வாரம் இதைப்பற்றி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பேசிக்கொண்டிருப்போம்.  பேசிக்கொண்டே...... இருப்போம். அடுத்து தேர்தல் செய்திகள் வந்ததும் அதில் நடக்கும் களேபேரங்களை எல்லாம் விவாதிக்க கிளம்பிவிடுவோம். சங்கரின் கொலையும் இளவரசன், கோகுலராஜின் கொலையைப் போல் எளிதாக மறக்கப்படும். மறப்பது நமக்கு என்ன அத்தனை கடினமான செயலா? இல்லைதான்,  ஆனால் இந்த கொலையையும் மறப்பதற்கு முன்பு உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள சில கேள்விகள் இருக்கின்றன.



உங்களிடம் என்றால் உங்கள் எல்லோரிடமும் தான். உங்களுக்கு கொஞ்சம் கூட சாதிப்பற்றே இல்லையென்றாலும் இந்த கேள்விகளை உங்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் தெரியுமா?  சங்கரின் மரணத்திற்கு யாரோ சிலர் மட்டும் காரணம் அல்ல நீங்களும், நானும், அதிகபட்சம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த சிசிடிவி கேமராவைப் போன்ற நம் சமூகமும் தான் காரணம். அதனால் உங்கள் ரத்தத்தின் அணுக்களிலும், ஆழ்மனதின் கோடுகளிலும் புதைந்திருக்கும் உங்களுக்கு தெரியாமல் உங்களை ஆக்கிரமித்திருக்கும் அந்த சாதி வெறியிடம் இந்த கேள்விகளைக் கேளுங்கள்....!

முதலாவதாக சங்கரை தலித் இளைஞன் என்று குறிப்பிட்டிருந்தேன், அதை படித்த போது உங்களுக்கு ஏதேனும் வித்தியாசமாக தோன்றியதா, கண்டிப்பாக இருக்காது ஏனென்றால் நம் மொத்த தமிழ்நாடும் இதை தலித் இளைஞனின் மரணம் என்றுதான் கூறியது. இதுவே இந்த இடத்தில் "தேவர் சாதியை சேர்ந்தவர்கள் சங்கரை வெட்டிக் கொன்றனர்" என்று குறிப்பிட்டிருந்தால் உங்களுக்கு அந்த வாக்கியம் கண்டிப்பாக ஏதேனும் உறுத்தலை தந்திருக்கும். ஏன் தெரியுமா....நாம் இப்படியே பழகிவிட்டோம். தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.  மாறாக தேவர் என்றோ, கள்ளர் என்றோ, வன்னியர் என்றோ பயன்படுத்துவதில்தான் எல்லா பிரச்னையும்.இதுவரை யாரும் இந்த கொலை பற்றி எழுதும் போது சமூக வலைதளங்களில் தேவர் என்று குறிப்பிடவில்லை ஆனால் வரிக்கு வரி தலித் இளைஞன் என்ற வார்த்தை மட்டும் இருக்கிறது. இதுதான் நம்முள் ஊறியுள்ள சாதியின் முதல் அடையாளம், தலித் என்று குறிப்பிட்டால் பெரிதாக என்ன ஆகிவிடும் என்ற மானோபாவம், யார் என்ன செய்துவிடுவார்கள் என்ன நினைப்பு. அதே எண்ணம்தான் உங்களை தேவர் என்ற சொல்லை பயன்படுத்துவதில் இருந்தும் தடுக்கிறது. ஏதோ ஒரு பயமோ, பாதுகாப்பற்ற  உணர்வோ, நமக்கு ஏன் வீண் 




வம்பு என்ற எண்ணமோதான் இதற்கெல்லாம் காரணம். தவறு செய்த ஒரு சாதியின் பெயரைக் கூட குறிப்பிட முடியாத அந்த அச்சம்தான் இந்த கொலைக்கு முதல் காரணம்.



நம் நாட்டில் பொது இடத்தில் எல்லோரும் "பார்க்கும் படி" கொலை செய்ய முடியும். ஆனால் அந்த கொலை செய்தவர்களின் சமூகத்தின் பெயரை மட்டும் பொதுவாக பேச முடியாது. தேவரை தேவர் என்று சொல்வதிலும்,  வன்னியரை வன்னியர் என்று சொல்வதிலும் உங்களுக்கு என்னதான் பிரச்னை இருக்கிறது. இந்த மனோபாவத்தை முதலில் கேள்வி கேளுங்கள். இந்த பயம்தான் நம் சாதிய முறைக்கு பெரிய தூண்.

ஆணாவக் கொலை, தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட ரத்தம் படிந்த புதிய சொல். கொளரவக் கொலைதான் ஆணவக் கொலையாகி இருக்கிறது. பிரச்னை இந்த சொற்பிரயோகம் மாற்றப்பட்டதில் இல்லை. நம்முடைய வேலையெல்லாம் இந்த வார்த்தையை மாற்றுவதில்தான் இருக்கிறதா என்பதுதான். கெளரவக் கொலை என்ற வார்த்தை பிரயோகத்தை மாற்றுவதால் எத்தனை பேர் திருந்திவிடுவார்கள். நம்முடைய இலக்கிலிருந்து நம்மை திசைதிருப்பும் செயல் இல்லையா இது. உண்மையில் கெளரவக் கொலை என்ற வார்த்தை உறுத்தலாக இருந்தால் அந்த வறட்டு கௌரவத்திற்கு எது காரணம் என்று தானே பார்க்க வேண்டும். இந்த வார்த்தையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் நீங்களும் இந்தப் பிரச்னையை கொஞ்சம் திசை திருப்புகிறீர்கள் என்று அர்த்தம். அது ஏன் என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் வெறும் கௌரவக் கொலை என்ற வார்தையிலோ, ஆணவக் கொலை என்ற வார்த்தையிலோ இல்லை இந்த பிரச்னை. இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

தமிழ்நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் தங்களுக்கே உரித்தான ஓர் "ஆண்ட பரம்பரை" கதையை வைத்திருப்பார்கள்.எல்லா சாதிக்கும் ஒரு நீண்ட வீர வரலாறு இருக்கும். எல்லா தெருவிலும் தொங்கும் ஏதேனும் ஒரு வாழ்த்த வயதில்லை கட் அவுட்டிலோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலோ பெயரின் பின் இணைப்பாக சாதிப் பெயர் இருக்கும். அதை இதுவரை நீங்கள் எந்த அசூகையும் இல்லாமல் கடந்து சென்றிருக்கிறீர்கள் தானே...? உங்கள் பகுதியின் உள்ளூர் சேனலில் மூன்று வயது சிறுவனின் பிறந்தநாளுக்கு "ஆண்ட பரம்பரை" பாடலை ஒளிபரப்பும் செயலை எதுவுமே கேட்காமால் தானே இருந்திருக்கிறீர்களா...?ஆம் என்றால் இந்த கொலைக்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் வாழ்க்கை சாதியுடன் குடித்தனம் நடத்த எளிதாக பழகிவிட்டது என்று அர்த்தம். அப்படியென்றால் இந்த சாதியுடன் வாழ்ந்து பழகிய உங்கள் வாழ்க்கை முறையை கேள்வி கேளுங்கள்.  நான் ஏன் இந்த விளம்பரங்களையும், போஸ்டர்களையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று உங்களுக்குள்ளேயே கேளுங்கள்.

இதோ தேர்தல் வந்தவிட்டது. எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கண்டிப்பாக எந்த தொகுதியிலும் திறமையின் அடிப்படையில் எல்லாம் வேட்பாளர்களை தேர்வு செய்யப் போவதில்லை. எதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே, வேறென்ன சாதிதான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சாதி ஓட்டுகளை கணக்கில் எடுத்து வேட்பாளரை அறிவித்துவிட்டு நல்லாட்சி தருவோம் என்று கூறும் கட்சிகளை என்றாவது கேள்விகேட்டு இருக்கிறீர்களா...? இல்லைதானே. மாறாக இதில் பலருடைய மனம் நம் வேட்பாளர் என்ன சாதி என்று தேடுவதில்தானே குறிக்கோளாக இருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் உங்கள் அபிமான கட்சிக்கு வாக்களித்திருக்கிறீர்களா....? ஆம் அப்படியென்றால் உங்களுக்குள் கண்டிப்பாக சாதி அரசியல் மீதான் பலமான ஆதரவு இருக்கிறது. அது ஏன் என்று கண்ணாடியை பார்த்து உரக்கக் கேளுங்கள். சாதி படுகொலை பற்றி பதில் சொல்லாமல் செல்லும் தலைவர்களை நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேளுங்கள்.

"நாய் நாய் உடனும், சிங்கம் சிங்கத்துடனும்தான் சேரணும் மாறி சேர்ந்தா உலகம் தாங்காது" - இது சங்கரின் படுகொலை செய்தியைத் தொடர்ந்து வந்து ஒரு முகநூல் பதிவு. இந்த பதிவை கண்டதும் அதிகபடசம் அவரை பிளாக் செய்தோ இல்லை அவரை திட்டி ஒரு பதிவு எழுதியோ உங்களது சாதிக்கு எதிரான மனோபாவத்தை காட்டிவிட்டீர்கள் என்றால் மன்னிக்கவும்,  உங்களுக்குள்ளும் சாதி லேசாக படர்ந்திருக்கிறது.

ஆம்.  உங்களால் முடிந்தது எல்லாம் அவ்வளவுதான் என்ற விட்டேந்தியான மனசு உங்களிடம் இருக்கிறது. சாதிக்கு தீனி போடும் மனசு அது. யார் நம்மளை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தை சாதிவெறியர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய மனசு அது. உங்கள் கேள்வியை அந்த பாழய்போன மனசிடமும் கேளுங்கள்.





இதோ அந்த கொலையாளிகளை பிடித்து உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்துவிட்டாகிவிட்டது. நம்முடைய கோவத்தை எல்லாம் அந்த புகைப்படத்தை பதிவிட்டு காட்டமாக எழுதித் தள்ளுவதிலேயே சரியாகிவிடும். இரண்டு நாள் கழித்து என்ன செய்வோம்?  எதுவும் செய்ய மாட்டோம். சாதிய அமைப்புக்கு எதிரான கோவம் எல்லாம் அந்த புகைப்படத்தை ஷேர் செய்ததிலேயே நமக்கு குறைந்திருக்கும். அதன்பின் நாம் செய்ய என்ன இருக்கிறது. நம்மால் முடிந்தது எல்லாம் அதிகபட்சம் ஷேரும், லைக்கும்தான் என்றால் மன்னிக்கவும் சங்கரையும், கோகுல் ராஜையும், இளவரசனையும் கொன்றது நீங்கள்தான்.

நாயர் டீ கடை என்று போகிற போக்கில் சாதி பேசும், தனியார் பல்கலைக்கழகங்களில் எல்லாமே குறிப்பிட்ட சாதியினரே ஆசிரியர்களாக நியமிக்கப்படும், இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பிட்ட சாதி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும், பள்ளிக்கு கலர் பேண்ட் கட்டி செல்வதை எந்த பிரச்னையும் இல்லாமல் அனுமதிக்கும் செயல்களையெல்லாம் கேள்வியே கேட்காமல் கடந்து செல்லும் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக சாதிக்கு எதிரான கேள்வியை உங்கள் சாதியிடம் இருந்து தொடங்குங்கள். திட்டுவது என்றால் முதலில் உங்கள் சாதியை திட்டுங்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை உங்கள் பாப்பாவிற்கு சொல்லிக்கொடுப்பதை விடுத்து உங்களுக்கே முதலில் சொல்லிக் கொடுத்து கொள்ளுங்கள். பாரதி இப்போது இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்

Tuesday, March 15, 2016

விக்கிப்பீடியாவில் அசத்தும் தமிழன்!

விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இ.மயூரநாதன். உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி விக்கிபீடியாவில் பதியும் வசதி செய்துதரப்பட்டபோது, தமிழ் மொழிக்காக இணையத்தில் குதித்தவர் மயூரநாதன். இலங்கைத் தமிழரான இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். 

‘‘விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?’’

‘‘ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. ஆனால், தமிழில் அதற்கான ஆரம்ப முயற்சிகூட அப்போது இல்லை. எல்லா மொழி விக்கிப்பீடியா திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவில் இயங்கும் விக்கிமீடியா நிறுவனத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. அவர்களின் நோக்கத்தை முழுமையாகப் படித்து அறிந்தேன். பிறகு, தமிழில் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கான அடிப்படை மென்பொருட்களைத் தேர்வுசெய்வதுடன் சில அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணிகளையும் செய்தேன்.  முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏறத்தாழ தனியாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்துவந்தேன். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் சுந்தர், ரவி, நற்கீரன், சிறீதரன், சிவகுமார், பேராசிரியர் செல்வகுமார் போன்ற பலரும் இணைந்தனர்.
நான் மட்டும் இதுவரை சிறிதும் பெரிதுமாக 4,300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்துள்ளேன். மேலும், பிற பயனர்கள் எழுதிய பல நூறு கட்டுரைகளை விரிவாக்கி யுள்ளேன். பல புதிய 
ஒளிப்படங்களையும் வரைபடங்களையும் உருவாக்கிப் பதிவேற்றியுள்ளேன்.’’

‘‘விக்கிப்பீடியா தமிழ் பக்கங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?’’

‘‘நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா, ஒரு மாதத்தில் 35 லட்சம் முறை பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு நாளில் ஒரு லட்சம் தடவைக்கு மேல் பார்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்து கின்றனர்.’’

‘‘விக்கிப்பீடியாவில் யாரும் எழுதலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. அதில் உண்மைத்தன்மையை எப்படிச் சரிபார்க்கிறீர்கள்?’’

‘‘யாரும் எழுதலாம் என்பது விக்கித் திட்டங்களின் அடிப்படைகளில் ஒன்று. அதன் வியப்பான வெற்றிக்கு இதுவே முக்கியக் காரணம். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் எவரும் பிழையான தகவல்கள் குறித்து, பிற பயனர்களின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் அல்லது அவற்றைத் திருத்தவோ, திருத்த முடியாததை முற்றாக நீக்கவோ முடியும். பொதுவாக விக்கிப்பீடியாவில் தகவல்களைச் சேர்ப் பவர்கள் எவரும் கட்டுரையில் அதற்கான சான்றுகளைத் தரவேண்டும். சான்றுகள் இல்லாத, ஐயத்துக்கு இடமான தகவல்களுக்கு அருகில் `சான்று தேவை' எனக் குறிப்பு இடுவதற்கு வசதி உண்டு. நீண்டகாலம் சான்றுகள் சேர்க்கப்படாத, சந்தேகத்துக்கு உரிய தகவல்களை நீக்கலாம்.
சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்து, ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக இருக்கும் உரையாடல் பக்கங்களில் பிற பயனர்களுடன் கலந்துரையாடி மேலதிகத் தகவல்களைப் பெற முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் பல துறை சார்ந்த பங்களிப்பாளர்கள் இணையும் போது கூடிய அளவுக்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்ள முடியும்.’’
‘‘தமிழில் இதுவரை எத்தனை பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?’’

‘‘சிறியதும் பெரியதுமாக ஒரு லட்சம் கட்டுரைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 36 புதிய கட்டுரைகள் உருவாகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, உயிரினங்கள், சமயம், கலைகள், புகழ்பெற்ற மனிதர்கள் என கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையிலானவை. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்படவேண்டும். இணையத்தில் இயங்கும் தமிழ் ஆர்வலர்கள், விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பை செயல்படுத்துவதன் மூலம், எதிர்கால தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லும் பணி இன்னும் எளிதாகும்; இன்னும் விரைவாகும்

Monday, March 7, 2016

''மணியின் உடல் மொழிக்கு எந்த பாஷையும் தேவையில்லை''- மம்முட்டி உருக்கம்  

றைந்த நடிகர் கலாபவன் மணி மறைவு குறித்து நடிகர் மம்முட்டி ஒரு தனது பிளாக்கில் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் நம்மை அப்படியே உருகச் செய்கிறது. அந்த கடிதத்தின் தமிழாக்கம் இங்கே...

'' இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. மணி இனிமேல் மாம்பழம், திராட்சைகள் அடங்கிய கூடைகளுடன் என் வீட்டுக்கு வரமாட்டான் என்று. பெங்களுருவில் ஒரு படபிடிப்பில் இருந்தேன். அப்போது தொலைக்காட்சிகளில் ஸ்குரோலிங் ஓடத் தொடங்கியது. மணி இறந்து விட்டார் என்று அதில் செய்தி. சகோதரர் போல பழகியவரின் ஒருவர் மறைவு நம்மை எப்படி பாதிக்கும்? அப்படித்தான் என்னையும் பாதித்தது. என்னால் என்னை தேற்றிக் கொள்ள முடியவில்லை.

குனிந்த தலையுடன் கண்ணீர் சிந்திய கண்களுடன் என் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து எனது வீட்டையும் தனது வீடு போலத்தான் அவன் நினைத்திருந்தான். என்னை ஒரு சகோதரராகவேத்தான் அவன் பார்த்தான்.  சிகரேட் குடிப்பான். நான் அந்த இடத்துக்கு வந்து விட்டால், கைக்குள் அதனை மறைப்பான். அந்த அன்பை என்னவென்று சொல்வது?
'மறுமலர்ச்சி' என்ற தமிழ் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க வேண்டிய ஒருவர், அவர் கொடுத்த கால்ஷீட்படி, படபிடிப்புக்கு வர முடியவில்லை. அப்போதுதான் இயக்குநரிடம் கலாபவன் மணி பற்றி நான் கூறினேன். அவரை கூப்பிட்டால், பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக் கொண்டேன்.

ஏனென்றால் மிகச்சிறந்த நடிகன் அவன். குழந்தை மனம் கொண்ட அவனை எந்தவிதத்திலும் நோக விடக் கூடாது என்பதில் நான் குறியாக இருப்பேன். அதனாலேயே அந்த உறுதி மொழியை நான் வாங்கினேன். மணியை அழைத்துள்ளனர். அவனோ எனக்கு தமிழ் தெரியாதே என்று மறுத்துள்ளான்.

இது எனக்கு தெரிய வர, மணி மீது கோபம் கோபமாக வந்தது. மணியை போனில் அழைத்து திட்டி தீர்த்து விட்டேன். எவ்வளவு பெரிய வாய்ப்பு மறுக்கிறீயே  என்று கத்தினேன். எனது கோபத்தை பார்த்து பயந்த மணி நாளை காலையே அங்கே இருக்கேன் என்றான். இப்படிதான் மணியின் தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. கடைசி வரை தமிழ் சினிமாவில் டிமான்ட் உள்ள நடிகனாகவேத்தான் மணி இருந்தான்.

சாலக்குடி பக்கத்துல எனக்கு படபிடிப்பு இருந்தா மணி சூட்டிங் ஸ்பாட்டுக்கே சிக்கன், மட்டன் இன்னும் பல இத்யாதிகளுடன் ஆஜராகி விடுவான். அன்னைக்கு முழுக்க அவன் கையால்தான் சாப்பாடு.  மணியே பிரமாதமாக சமைப்பான். எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை சூட்டிங் ஸ்பாட்டுலயே செஞ்சு போடுவான்.

மணி கொஞ்சம் சேட்டைக்காரன். அது எனக்கும் தெரியும். அவ்வப்போது எனக்கு தகவல் வரும். அவனை கொஞ்சம் கண்டிச்சு வைனு. நான் போனில் கூப்பிட்டு சத்தம் போடுவேன். இனிமேல் அப்படி நடக்காது என்பான்.  அமைதியாக கேட்டுக் கொள்வான்.

கார்ல் லீவிஸ் அவனுக்கு பிடித்த வீரர். அவரது உடல் அமைப்பை பார்த்து மயங்கிய அவன், தன்னையும் கார்ர் லீவிஸ் என்றே அழைக்கும்படி கூறுவான். மணி மிகச்சிறந்த நாட்டுப்புறக் கலைஞன். 100க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளான். பாடியுள்ளான். நாட்டுப்புற பாடல்கள் குழுவை உருவாக்கி நடத்தியும் வந்தான்.

ஒரு முறை வளைகுடா நாடு ஒன்றில் நிகழ்ச்சி. மணி மலையாள மொழியில் நாட்டுப்புற பாடல் ஒன்றை மேடையில் பாடுகிறான். அந்த நிகழ்வில் இருந்த பெரும்பாலான மக்களுக்கு மலையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த மக்கள் தன்னை மறந்து மேடைக்கு கீழே ஆடிக் கொண்டே இருக்கின்றனர். அதனை பார்த்து எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் மணியின் உடல் மொழி பாஷைகளை கடந்தது

Friday, March 4, 2016

வெந்தயக்கீரை
வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள்கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம்.

வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும்.

வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். இதைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும்.

உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது, வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட, வீக்கம் குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் விரைவில் ஆறும்.

வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.
இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து தேன்  கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு குணமாகும்.

வெந்தயக்கீரையை நன்கு வேகவைத்து, சிறிது வெண்ணெய் சேர்த்துக் கலக்கி உட்கொள்ள, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் மயக்கம் குணமாகும்.

இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும். இடுப்பு வலி நீங்கும்.

வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும்.

வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும்.

வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது

Thursday, March 3, 2016

தூய்மை = கமிகட்ஸு

கார்க்கிபவா

வ்வொரு சென்னைவாசியும் ஒரு நாளில் முக்கால் கிலோ குப்பையை உருவாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே சென்னைக்குத்தான் முதலிடம். ஆனால், ஜப்பானின் கமிகட்ஸு நகரமோ வேறொரு விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. `உலகின் முதல் `ஜீரோ வேஸ்ட்’ கம்யூனிட்டி' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தத் தூய்மை நகரம்.

இந்த நகரத்தில் வாழும் 1,700 பேருமே குப்பைகளைக் கையாள்வதில் செம எக்ஸ்பெர்ட் கில்லாடிகள். `Reduce, Reuse, Recycle’ - அதாவது குப்பைகள் உருவாக்குவதைக் குறைப்பது, பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது... இவையே இந்த நகரவாசிகளின் தூய்மைத் தாரக மந்திரம். அப்படி என்னதான் செய்கிறார்கள் கமிகட்ஸு நகரத்தில்?

34 வகையான குப்பைத்தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். பேப்பர், பிளாஸ்டிக் தொடங்கி செல்போன், இரும்பு வரைக்கும் அனைத்துக்கும் தனித்தனிக் குப்பைத் தொட்டிகள். ஒரு கன்டெய்னரில் இருந்தே பொருட்களைப் பிரித்தெடுக்க உலகம் திணறும்போது, ஒரு நகரத்தின் குப்பையை இவ்வளவு துல்லியமாகப் பிரித்து கையாள்வதுதான் கமிகட்ஸு மக்களின் சிறப்பு.

  இப்போது ஊரின் மொத்த குப்பையில் 20 சதவிகிதம் மட்டுமே நிலத்தில் கொட்டப்படுகின்றன. மற்றவை அனைத்தும் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்த 20 சதவிகிதத்தையும் ஜீரோ நிலைக்குக் கொண்டுவர திட்டம் இருக்கிறதாம். `அது சாத்தியமானால், கமிகட்ஸு  உலகின் சொர்க்கம்' என்கிறார்கள்.
  ஊர் நிர்வாகம், குப்பைகளைப் பிரிக்கும் எந்த ஒரு வேலையையும் செய்வது இல்லை. காரணம், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குப்பைகள் பிரிக்கப்பட்டே வருகின்றன.

  நகரின் எல்லைக்குள் ஒரு தொழிற்சாலை கட்டி, குப்பைகளை மறுசுழற்சிக்கு எடுத்துக்கொண்டு, அதில் இருந்து உடைகள், பரிசுப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.

பயன்படுத்தப்படாத பொருட்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கவேண்டியது இல்லை. உடனே நகர நிர்வாகத்தின், `கிரேய்க் லிஸ்ட்’டில் சேர்த்துவிடலாம். வேண்டியவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஒரு பொருளின் மதிப்பு எந்த வகையிலும் குறையாமல் இந்த சிஸ்டம் பார்த்துக்கொள்கிறது.

  13 ஆண்டுகளாக இதை வெற்றிகரமாக நடத்திவரும் கமிகட்ஸு நகருக்கு, உலகமெங்கிலும் இருந்து மாணவர்கள் வந்து வேஸ்ட் மேனேஜ்மென்ட் பற்றி பாடம் கற்கிறார்கள்.  இதற்காகவே இங்கு ஒரு அகாடமி நடத்தப் படுகிறது. `ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாற்றத்தைத் தொடங்கினால் மட்டுமே இந்தத் தூய்மைத் திட்டம் சாத்தியம்’ என்கிறது கமிகட்ஸு அகாடமி.

  வீடு கட்டத் தேவையான பொருட்களைக்கூட, பழைய கழிவுகளில் இருந்தே தயாரிக்கிறது கமிகட்ஸு நகரம்.
நகரத்தின் கழிவு மேலாண்மையை `ஜீரோ வேஸ்ட் அகாடமி’ கண்காணிக்கிறது. இந்த அகாடமி, உலகமெங்கும் இருந்துவரும் பார்வையாளர்களுக்கு என, தனி பயணத் திட்டங்களையும் நடத்துகிறது. இரண்டு இரவுகள் + மூன்று பகல்கள் நம்மை ஜப்பானில் இருக்கும் கமிகட்ஸு நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த நகரின் சிறப்புகளை விவரித்து, பார்வையிடவும் அனுமதிக்கிறார்கள். ஆண்டு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கமிகட்ஸுக்கு வந்து கழிவு மேலாண்மையைப் பற்றி அறிந்துகொண்டு செல்கிறார்கள்.
குப்பைகள் உருவாவதைத் தவிர்ப்பது நவீன உலகில் சாத்தியம் இல்லை. உருவாகும் குப்பைகளை வெற்றிகரமாகக் கையாள்வதில் இருக்கிறது தூய்மையின் சூட்சுமம். அதற்கு `தூய்மை இந்தியா' எனப் பெயர் வைத்தால் மட்டும் போதாது. செயல்படவும் வேண்டும். எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தெரிய வேண்டும் என்றால், எங்கெங்கோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கமிகட்ஸுக்கு ஒருமுறை சென்று வரட்டும்
போடுங்கம்மா ஓட்டு
போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து’ என பள்ளிச் சிறுவர்கள் சகிதமாக, தெருத் தெருவாகச் சுற்றித்திரிந்த தேர்தல் அல்ல இது. தேர்தல் வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஊரில் உள்ள எல்லா சுவர்களிலும் ‘DMK Reserved’, ‘ADMK Reserved’ என எழுதிவைத்த தேர்தல் அல்ல இது. ஆட்டோக்களில் வளையவரும் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், ‘வாக்காளப் பெருங்குடி மக்களே...’ எனக் கரகரக் குரலில் மக்களை அழைக்கும் தேர்தல் அல்ல இது. ‘இதோ, நமது வேட்பாளர் வந்துகொண்டிருக்கிறார். உங்கள் வீட்டுப் பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்...’ என ஏழெட்டு வாகனங்கள் புடைசூழ வேட்பாளர்கள் கிராமத்து வீதிகளில் வளையவரும் தேர்தல் அல்ல இது.

இது வேற மாதிரி!

வதந்திகள் உலவும் வாட்ஸ்அப்பில், ‘உங்கள் சகோதரி பேசுகிறேன்...’ என்கிறார் ஜெயலலிதா. மிஸ்டு கால் கொடுத்தால், கருணாநிதியே  கதைக்கிறார். நகைக்கடைகளும் துணிக்கடைகளும் விளம்பரம்செய்யும் நாளிதழ் முதல் பக்கத்தில், `சிங்கம்’ பட பன்ச் வசனத்தை ரீமிக்ஸ் செய்து கலவரப்படுத்துகிறார்கள். விஜய்-அஜித் ரசிகர்கள் மல்லுக்கட்டும் ஹேஷ்டேக் ஏரியாவில் #jayafails என அதிரடியாக மிரட்டுகிறார்கள். ஆங்ரிபேர்ட்ஸும் சப்வே சர்ஃபரும் முந்தும் ஆப்ஸ் உலகில் அன்புமணி ஆப் `உள்ளேன் ஐயா’ என்கிறது. நிச்சயம் சொல்லலாம், இது தேர்தல் சீஸன் 2.0.
‘மூணு படி லட்சியம்... ஒரு படி நிச்சயம்’ என்பது 40 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் முழக்கம். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பது

10 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் முழக்கம். இப்போதைய தேர்தல் முழக்கம், ‘#என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!’

வீடு வீடாகச் சென்று துண்டு நோட்டீஸ் கொடுத்தவர்கள், இப்போது வாட்ஸ்அப்பில் வாக்குறுதிகள் தந்துகொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக்கு, இனி மதிப்பே  இருக்காது. நள்ளிரவு 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாக்கு கேட்பதை ஆணையத்தால் தடுக்க முடியுமா? வாட்ஸ் அப்பில் மீம்ஸ் அனுப்புவதை யாரால் என்ன செய்ய முடியும்? ஃபேஸ்புக்கில் களமாடுவதை யார் கேட்க முடியும்? 

ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால், இதுவரை நாம் தேர்தலை அணுகிவந்த பாரம்பர்ய முறையை அடியோடு தகர்க்கிற முதல் தேர்தல் இது. அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றம் வந்திருக்கிறது. அவர்கள் நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சல்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வதந்திகளை உருவாக்கி, கூட்டணிகளை உருவாக்குவது, கூட்டணிகளை உடைப்பது என்பதில் தொடங்கி, வாக்காளர்களை இறுதிநேர மனமாற்றத்துக்குத் தூண்டுவதற்கும் இந்தத் தொழில்நுட்பங்கள் பெரும் பக்கபலமாக இருக்கப்போகின்றன. தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே செல்போன் வழியிலான இந்த யுத்தம் பெரும் உச்சத்தைத் தொடும். தன் பலத்தைச் சொல்வதைக் காட்டிலும் எதிராளியின் பலவீனத்தைப் பகிரங்கப்படுத்தி, மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அதைத் தனக்கான ஆதரவுத் தளமாக மாற்றிக்கொள்ளும் போக்கு அதிகரிக்கும்.
 
பொதுவாக இந்திய அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்தப் பிராந்திய சிக்கல்களை முன்னிறுத்தி, அதற்காகப் போராடித்தான் தலைவர்கள், மக்களின் செல்வாக்கைப் பெறுவார்கள். இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி தி.மு.க மேலெழுந்தது. கல்வியின் தேவையைப் பூர்த்திசெய்து காமராஜர் மக்கள் நாயகராக உயர்ந்தார். மாயாவதி, பஸ்வான், சந்திரபாபு நாயுடு... ஆகியோர் இப்படித்தான். உள்ளூர் மக்கள் பிரச்னைகளை அவர்கள் பிரநிதித்துவப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தலைமையாக உருவெடுத்தார்கள். ஆனால், இப்போது மக்களின் தேவைகளுக்கும், அரசியல் தலைவர்களின் எழுச்சிக்கும் சம்பந்தமே இல்லை. எங்கே இருந்தார் என்றே தெரியாத, சில ஆண்டுகள்கூட அரசியல் பின்புலம் இல்லாத அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென தலைவராக உருவெடுக்கிறார். ஒரு மாநிலத் தலைவர், தேசியத் தலைவராக மாற்றம் பெறுவது அத்தனை சுலபமா? ஆனால், குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, திடீரென தேசியத் தலைவராக முன்னிறுத்தப்பட்டு இந்தியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். இவர்கள் இணையம் வழியே தங்களுக்கான இமேஜை உருவாக்கி, தக்கவைத்து, பிரமாண்டப்படுத்தி வாக்குகளாக மாற்றினர். இந்த ட்ரெண்டுதான் இன்னும் டாப் ஸ்பீடில் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைக்கிறது. ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் அணுகுமுறையில் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
 
‘முதல்முறையாக வாக்களிக்கப்போகும் இரண்டு கோடி இளைஞர்கள்தான் எங்கள் இலக்கு’ என வெளிப் படையாக அறிவித்து, அந்த இளைய மனங்களை வெல்வதற்கு ஏற்ற நவீன அணுகுமுறையைப் பின்பற்று கிறார் அன்புமணி. `மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ விளம்பரத்தில் தொடங்கி, கடைசியாக வண்டலூர் மாநாட்டில் பிரமாண்டமான திறந்தவெளி மேடையில்... மைக் மாட்டிக்கொண்டு நடந்துகொண்டே பேசியது வரை எல்லாமே இந்த அஜண்டாவின் ஒரு பகுதிதான். இதுவரை வார்த்தைக்கு வார்த்தை ‘சின்ன அய்யா’ என அன்புமணியை அழைத்துக்கொண்டிருந்த பா.ம.க-வினர், இந்த மாநாட்டில் `அன்புமணி’ எனப் பெயரைச் சொன்னார்கள். தவறியும் ‘சின்ன அய்யா’ என்ற வார்த்தை உச்சரிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்களின் இலக்கு வாக்காளர்களான (Target voter) இளைஞர்கள், இத்தகைய புகழாரங்களின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே, அவர் தன்னை நவீன ஆளாக முன்னிறுத்த முயற்சிக்கிறார். ஸ்டாலினும் இதேதான். `முடியட்டும்! விடியட்டும்!’ பேரணி மற்றும் தற்போதைய ‘என்னம்மா’ விளம்பரங்கள், இளைய மனங்களை வெல்வதற்கான வழிமுறைதான்.
 
அரசியல் கட்சிகளின் இந்தப் புதிய வகை பிரசாரத்துக்குப் பின்னால், மிகப் பெரிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள்தான் இந்தக் கட்சிகளின், தலைவர்களின் ஒவ்வோர் அசைவையும் தீர்மானிக்கிறார்கள். எல்லாமே ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நம் முன்னே நடித்துக்காட்டப்படுகிறது. தி.மு.க-வின் தற்போதைய பிரசார விளம்பரங்கள் அனைத்தையும் ‘ஜே.வால்டர் தாம்சன்’ என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இது, உலகின் முன்னணி விளம்பர நிறுவனங் களில் ஒன்று. இணையத்தில் புகழ்பெற்ற ஹேஷ்டேக் ஆன, #jayafails என்பது தி.மு.க-வின் சார்பில் இயக்கப்படுகிறது. இதை ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனின் விளம்பர நிறுவனம் இயக்குகிறது. திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்தி ‘முடியட்டும்! விடியட்டும்!’ கோஷத்தை  ஸ்டாலின் அறிமுகப்படுத்திய போது #MudiyattumVidiyattum என்ற ஹேஷ்டேக் கொல்கத்தாவில் ட்ரெண்ட் ஆனது. காரணம், கொல்கத்தாவில் இயங்கும் ஆன்லைன் நிறுவனம் ஒன்று இந்த வேலையைப் பெற்றிருந்தது. பா.ம.க-வின் பின்னாலும் இதே கதைதான். 

இப்படி தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு விளம்பர நிறுவனத்தைப் பணியமர்த்தி, தேர்தலை ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்போல மாற்றும் இந்தப் போக்கை, தீவிரமாகத் தொடங்கிவைத்தது நரேந்திர மோடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பிரசார உத்திக்குப் பின்னால் APCO Worldwide என்ற நிறுவனம் செயல்பட்டது. அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்குப் பணிபுரிந்ததும் இந்த நிறுவனம்தான். இவர்கள், ஒரு புதுப்பொருளை சந்தையில் அறிமுகப்படுத்துவதைப் போல, தேர்தல் பிரசாரத்தையும் செய்கிறார்கள். அவர்களின் வார்த்தையிலேயே இதற்கு ‘பிராண்ட் லான்ச்சிங்’ (Brand Launching) என்றுதான் பெயர். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்திசெய்யும் திட்டங்களை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட காலம், கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருக் கிறது. மாறாக, தேர்தல் பிரசாரம் என்பது 20:20
ஐ.பி.எல் மேட்ச்போல மாறிவிட்டது. ஏலம் எடுப்பது, ஏலம் விடுவது, சூதாடுவது... எல்லாம் இங்கு உண்டு.

இதில் ஒரு முக்கியமான அம்சம், அரசியல் கட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஹேஷ்டேக், மீம்ஸ் என நவீன வடிவம் எடுப்பதற்குக் காரணம். ‘அப்படிச் செய்தால் தான் இளைய தலைமுறை வாக்காளர்களைக் கவர முடியும்’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒரு மோசடியான வாதம். உண்மையில் வாக்குறுதிகளை முன்வைத்து மக்களைக் கவரும் தகுதியை அரசியல் கட்சிகள் இழந்துவிட்டன. ‘ஊழலை ஒழிப்போம்’ என தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வாக்குறுதி கொடுக்க முடியுமா? ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்’ என ஜெயலலிதாவால் சொல்ல முடியுமா? ‘மதுவின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம்’ என்று சொல்லும் தகுதி அ.தி.மு.க-வுக்கு இருக் கிறதா? ‘சாதிக் கலவரங் களைத் தடுத்து நிறுத்து வோம்’ என பா.ம.க-வால் உறுதிதர முடியுமா? எதுவும் முடியாது. வாக்குறுதி தந்து வாக்கு கேட்கும் அருகதையை இழந்து விட்டதால்தான், இவர்கள் நவீனத்தின் பின்னே ஒளிந்துகொள்கிறார்கள். இது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கிறது.
 
‘சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த அம்மையார் தண்டிக்கப்பட்டாரே...’ என ஸ்டாலின் பேச ஆரம்பித்தால், பதிலுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடங்கி,

30 வருடங்களுக்கு முந்தைய ஊழல் கதை வரை ஜெயலலிதா தோண்டுவார். எதற்கு இதெல்லாம்? ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு, ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ எனச் சொன்னால், பதிலுக்கு அவர்களும் இதேபோல ஏதாவது பன்ச் லைன் வெளியிடு வார்கள். அதோடு முடித்துக்கொள்ளலாம். ‘கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்; நீயும் வரக் கூடாது’ டீலிங்.
 
ஆனால், இவர்களின் ஆபாசமான இந்தத் தேர்தல் பிரசாரத்தில், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் நகைச்சுவையாக மாற்றப்படுகின்றன. சென்னை மழை வெள்ளத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய, மோசமாக நடவடிக்கை எடுத்து பெரும் உயிர் சேதத்துக்கும், பொருள் சேதத்துக்கும் காரணமாக இருந்த இந்த அரசை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக... அதை ஒரு நாள் விளம்பரமாக, அன்றைய நாளின் ட்ரெண்டிங் மெட்டீரியலாக மாற்றுகிறது தி.மு.க. எல்லாவற்றையும் மேம்போக்கான தாக அணுகும் இணைய மனநிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதையே பொதுப் பண்பாக வளர்த்தெடுக்கிறது. அதேநேரம் நவீனம், தொழில்நுட்பம் ஜிகினா காட்டும் இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எது பெரும்பான்மை சாதியோ, அந்தச் சாதியை சேர்ந்தவருக்குத்தான் ஸீட் தரப்போ கின்றனர். அங்கு நவீனத்தின் ஒரு சிறுதுளி கூட எட்டிப்பார்க்காது.

இவர்கள் நம் முன்னே ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் பழையவர்கள்... வேடம்தான் புதிது