Thursday, August 25, 2016


கலாச்சாரமும் காதலும் 
(சமீபத்தில் படித்தது)

ரசனை மண்ணுக்குரியதா? அது ஏன் ஏரியாவுக்கு ஏரியா மாறிவிடுகிறது' என அடிக்கடி யோசிப்பேன். `பெங்களூர் டேஸ்' ஏன் தமிழில் ஓடவில்லை?, `ஆட்டோகிராஃப்' ஏன் தெலுங்கில் ஓடவில்லை?, `துப்பாக்கி' ஏன் இந்தியில் ஓடவில்லை?

கலாசாரப் பரிவர்த்தனைகள் (Cross Cultural Management) பற்றி நிறைய கார்ப்பரேட் பயிற்சிகள் எடுக்கும்போது பிரியதர்ஷனையும் பிரபுதேவாவையும் ஒப்பிட்டுப் பேசுவேன். தான் எடுத்த கிளாசிக்கல் மலையாள காமெடிகளையே இந்தியில் மூன்றாம் தரப் படங்களாக ஆக்கியவர் பிரியதர்ஷன். பிறரின் ஹிட்ஸை இந்திக்கு மொழிமாற்றம் செய்து இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் டைரக்டர் ஆனவர் பிரபுதேவா. 

மண் சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகள் மற்றும் நம்பிக்கைகள் ஒவ்வொரு கதையின் அடிநாதத்திலும் உள்ளன. அதை ஒதுக்கிவிட்டு வேறு மொழியில் கதை பண்ண முடியாது. கலாசாரம் தெரியாமல் காலடி வைத்தால், தோல்விதான். சினிமா மட்டும் அல்ல, வாழ்க்கையிலும்!

#கெளரவக்_காதல்

காதலிக்கும்போது கலாசார ஒற்றுமைகள் தெரியும்; கல்யாணத்துக்குப் பிறகு கலாசார வேற்றுமைகளே தெரியும்.

`இன்று சாதிக் காதலுக்குப் பெரும் தடை இல்லை' என நகர்புறத்தில் சாதிக்கிறார்கள்.ஆனாலும் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் சாதி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது தெரிகிறது. கிராமங்களில் இன்றும் காதலர்களைப் பிரித்து, தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் கொல்கிறார்கள்.

#இரு_நபர்கள்

நகரத்துக் காதல் கல்யாணங்களும் விவாகரத்துக்காக கோர்ட்டில் நிற்கக் காரணம், அடிப்படைப் புரிதல் இன்மைதான். திருமணம் என்பது, மேற்குக் கலாசாரத்தில் வேண்டுமானால் இரு நபர்கள்சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் இங்கு, இரு குடும்பங்களைச் சார்ந்தது; இரு கலாசாரங்களைச் சார்ந்தது.

காதலிக்கும்போது காதலிக்கும் ஆள் மட்டும்தான் தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு பின்புலத்தில் உள்ள மொத்தக் கலாசாரமும் தெரியும். அதை எதிர் நோக்குவதில் வெற்றி பெறாதவர்கள்தான் திருமணத்தில் தோற்றுப்போகிறார்கள்.

 #காதல்_கத்திரிக்காய் 

எந்த முறையில் திருணம் என்று ஆரம்பித்து, அதன் பிறகு எல்லாவற்றிலும் `எங்க பழக்கம் இது... உங்க பழக்கம் அது!' என்று யோசிக்க வைக்கும்.

இதனால் காதலைக் கைவிட வேண்டாம் பாஸ். கல்யாணத்துக்கு முன்னர் எல்லாவற்றையும் பேசிவிடுங்கள். சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையில் பின்னால் பெரிய பெரிய டார்ச்சர்களைக் கொடுக்கும்.

பீட்சா ஆர்டர் செய்துகொள்ளலாம் இப்போது. ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு எண்ணெய்க் கத்திரிக்காய் செய்தால் சாப்பிடப் பிடிக்குமா என்பதையும் பேசிவிடுங்கள்.

#மிதி_மொழி 

நம் வேலைச் சூழலில் பாஸை அமெரிக்கக் கலாசாரத்தில் பெயர் சொல்லி அழைக்கச் சொல்கிறார்கள். ஆசிரியரைப் பார்த்தால் இங்கிலாந்து கலாசாரப்படி “சார்...” என்று விளிப்போம். வடக்கத்திய ஆள் பழக்கப்பட்டால், “ஹரே யார்?” என்போம்.. பற்றாக்குறைக்கு ரஹ்மானும் ஹாரிஸும் வேறு பன்மொழி வார்த்தைகளைப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். 

சரி, நம் ஒரிஜினல் கலாசாரம் எது? உங்கள் காலை யாராவது தெரியாமல் மிதிக்கும்போது வரும் மொழிதான் உங்கள் நிஜமான கலாசாரம்!

#விசில்

உலக மயமாக்கம் இன்று பன்னாட்டுக் கலாசாரத்தை இங்கு கொண்டுவந்து குவித்துள்ளது. வர்த்தகம் மெதுவாக கீழைக் கலாசாரங்களை அழித்து ஒரு mono culture யை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இன்றுகூட உங்கள் ஊரிலேயே உங்கள் உணவு கிடைக்காவிட்டாலும் பன்னாட்டு பிராண்ட் உணவுகள் அனைத்தும் கிடைக்கும். 

உணவு முதல் உணர்வு வரை அனைத்தையும் உங்களை கவ்வியுள்ள கலாசாரம் தீர்மானிக்கிறது. அதனால்தான் மாலில் உங்களால் தலையணை சைஸில் குற்ற உணர்ச்சி இல்லாமல் பாப்கார்ன் வாங்க முடிகிறது. தனியாக உள்ளபோது விசில் அடிக்காமல் படம் பார்க்க முடிகிறது. 

அண்மையில் கேட்ட முத்து இது: 

தலைவர் படத்தை எல்லாம் மாலில் பார்க்கக் கூடாது. லோக்கல் தியேட்டரில் பார்க்கணும். அப்பதான் அந்த ஃபீல் கிடைக்கும்!

#அர்ஜென்ட்

இன்று பலரின் பிரச்னை அவசரம்தான். நினைத்ததும் நுகரக் கிடைக்கும் வசதிகள் வாய்க்கையில், எல்லாவற்றையும் உடனே அடைந்துவிட ஆசைப்படுகிறோம். எதை வாங்கவும் ஆப்பு வைத்திருக்கிறோம். I mean app. அதனால் நாம் சொன்னதும் எதிராளி உடனடியாகப் புரிந்துகொள்ள வில்லை என்றால் நம்மால் தாங்க முடிவதில்லை.

செல்லைத் தூக்கிப் போட்டு உடைக்கும் பழக்கம் சகஜமாகிவருகிறது. உடைவது கைபேசி மட்டும்தானா?

#நோ_மொபைல்

மண்டை சூடாகும் இளம்பிராயத்தினர் ரிலாக்ஸ் ஆக, சில க்விக் டிப்ஸ்! 

இரவில் மொபைலை நோண்டாமல் எட்டு மணி நேரத் தூக்கம், கூடுதல் குளிர்வைத் தரும். Old fashioned?

ஒரு நல்ல செய்தி, Phone fasting பிரபலமாகி வருகிறது. அப்படியென்றால்? மாதத்துக்கு ஒரு நாள் மொபைல் இல்லாமல் வாழ்வது!

என்னைத் திட்டாதீர்கள். இன்னொன்றையும் சொல்கிறேன். `கவிதைகள் படிப்பது, உங்கள் மூளையின் இளகுத்தன்மையையே (Cerebral Plasticity) மாற்றுகிறது' என்று படித்தேன். மூளை இறுக்கம் அடைவதால்தான் மூப்பும், அதைச் சார்ந்த மறதிக் கோளாறுகளும் வருகின்றன.இசையும் கவிதையும் இளமையுடன் வைத்திருக்கும் என்கிறது அறிவியல்.

ஜிம் போவதைப்போல மனுஷ்ய புத்திரன், கலாப்ரியா, ஞானக்கூத்தன் கவிதைகளையும் கொஞ்சம் படியுங்கள். Feel Young!

Friday, August 12, 2016


Wi-Fi வேணுமா Li-Fi வேணுமா 

இருட்டில் டார்ச் லைட்

அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் ரூட்டில் பல நுண்ணியத் துகள்களைப் பார்க்கலாம். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-Fi டெக்னாலஜி. wifi டெக்னாலஜியில், வீடு வரை கேபிள் வழிவரும் டேட்டா, வொயர்லெஸ் மோடம் மூலம் ரேடியோ அலைகளாக மாறுகிறது. ரேடியோ அலைகளில் டேட்டா நமது மொபைல் அல்லது லேப்டாப்புக்குக் கடத்தப்படுகிறது. அங்கே அந்த அலைகள் டீ-கோட் ஆனதும் தேவையான தகவல்களாக ஸ்கிரீனில் தெரிகிறது. இந்த ரேடியோ அலைகளின் வேகம்தான் wifi-ன் வேகத்தை முடிவுசெய்கிறது.

Li-Fi-ல் டேட்டா, ஒளியின் மூலம் கடத்தப்படுவதால் ஸ்பீடு அதிகம். wifi-ன் வேகத்தைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் டேட்டா பயணிக்கும்.  

#Howitworks

பல்புக்குச் சீரான மின்சாரம் கிடைக்கும்போது அது போட்டானை வெளிப்படுத்தும். அந்த போட்டானைத் தான் வெளிச்சம் என்கிறோம். 

லோ-வோல்டேஜில் மின்சாரம் வரும்போது அந்த ஒளி குறைவதைப் பார்த்திருக் கிறோம். பல்புக்கு வரும் மின்சாரத்தின் அளவைக் கட்டுப்படுத்தினால் பல்பும் அதற்கு ஏற்றதுபோல ஃபோட்டானை வெளிப்படுத்தும். Li-Fi வசதி இருக்கும் மொபைல் அல்லது லேப்டாப் அந்த சிக்னலை டீ-கோட் செய்து டேட்டாவைப் பயன்படுத்திக்கொள்ளும்.

#FOUNDER

ஜெர்மனைச் சேர்ந்த பேராசிரியர் ஹெரால்டு ஹாஸ் என்பவர்தான் Li-Fi-ன் காட்ஃபாதர். 2011-ம் ஆண்டு ஒளியால் டேட்டாவைக் கடத்த முடியும் என்ற தியரியைச் சொன்னார் ஹெரால்டு. அடுத்த ஆண்டில் இந்தத் தொழில்நுட்பம் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவந்த சிலரை ஒன்றுசேர்த்து `Pure Li-Fi' என்ற குழுவை உருவாக்கினார். இவர்கள் இதுவரை Li-Fi-ல் இயங்கும் இரண்டு புராடக்ட்களைத் தயாரித்திருக்கிறார்கள்.

#Plus

100 MBPS-க்கே நம்ம ஊர் நெட் நொண்டியடிக்க, 10GBPS சோதனையில் வெற்றிபெற்றிருக்கிறது Li-Fi. wifi சிக்னலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்க முடியாது. அதாவது நமது வீட்டைத் தாண்டி சிக்னல் போகாமல் பார்த்துக்கொள்ள Li-Fi-ல் வழி உண்டு. ரேடியோ அலைகளோடு ஒப்பிடுகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது. வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் பிராடுபேண்ட் ரிசீவர்களாகச் செயல்படும் சாத்தியங்களும் இருக்கிறது. அதாவது நம் வீட்டுக்கு வரும் இணைய கேபிளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, நேரிடையாக அருகில் இருக்கும் டவரில் இருந்து இணையத்தைப் பெற முடியும் என்கிறார்கள்.

#Minus

Li-Fi என்பது wifi-க்கு மாற்று கிடையாது. ஒளி நாம் போகும் எல்லா இடங்களுக்கும் வந்துவிடாது. இதை இன்னொரு வொயர்லெஸ் தொழில்நுட்பமாக மட்டுமே கருத முடியும். ஆனால், விலை குறைந்த, எந்தப் பாதகமும் இல்லாத எளிமையான, வேகமான தொழில்நுட்பம்




Thursday, August 11, 2016

ரியோ ஒலிம்பிக் - ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகள்

டந்த ஜூன் 30- ம் தேதி. அன்று ஆர்வமாக நெட்டிசன்கள் உலக சமூக ஊடக தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக ஊடகத்திற்கும் தங்களுக்குமான பந்தத்தை உருக்கமாக, கிண்டலாக, நெகிழ்ச்சியாக என்று விதவிதமான நடைகளில் எழுதி,  சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்த, அதே நன்னாளில்தான், பிரேசிலின் ரியோ விமான நிலைய வாசலில், ஏறத்தாழ 30 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவர்கள் நாட்டிற்கு வந்தவர்களை மிகவும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி, வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆம். சந்தேகம் வேண்டாம், 'வித்தியாசமான வாசகங்கள்' கொண்ட பதாகைதான். அதில் இவ்வாறாகதான் எழுதி இருந்தது,  “நரகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை”.

உள்நாட்டு பயணிகளுக்கு இதற்கான காரணம் தெரியும், வருத்தத்துடன் அவர்களை கடந்து சென்றார்கள். புதிதாக அந்த நாட்டிற்கு வந்தவர்கள், செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ஆம், அவர்கள் எந்த நாட்டு விமான நிலையத்திலும் இப்படியான வரவேற்பை பெற்றிருக்க மாட்டார்கள். அதுவும் சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையே ‘உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை...’ என்று எந்த நாட்டிலும் சொல்லி இருக்காது.
ஏன் அவர்கள் அவ்வாறாக வரவேற்றார்கள்...?:
இந்த கேள்விக்கான விடை, மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிமையானது. காவல் துறையினருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் தரவில்லை. அதனால் அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட இவ்வாறாக போராடினார்கள் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த பிரச்னையை கொஞ்சம் ஊடுருவி பார்த்தோமென்றால், பிரேசிலில் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் பிரச்னை புரியும். அந்த பிரச்னையால், அந்த நாட்டில் அமைதியாக நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தம் புரியும். யுத்தம் அமைதியாக நடக்குமா...? ஆம் அந்த நாட்டில் அப்படியாக நடந்து கொண்டிருக்கிறது.  அரசு, தம் குடிகளை கணக்கு வழக்கில்லாமல்  கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
‘கணக்கு வழக்கில்லாமல்’ -இது ஏதோ சொல் நயத்திற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை. அரசால் கொல்லப்பட்டவர்களின் சரியான கணக்கு அரசிடமே இல்லை என்கிறது  ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’. வேண்டுமானால் தோராயமாக, இந்த நான்கு ஆண்டுகளில் இறந்தவர்கள் 2600 எனலாம்.  அரசுக்கும், அதாவது அரசின் படையான காவல் துறைக்கும், அந்த நாட்டு மக்களுக்குமான இந்த அமைதியான யுத்தத்தில், காவல் துறையைச் சேர்ந்த 59 பேரும் இறந்திருக்கிறார்கள்.
என்ன நடந்து கொண்டிக்கிறது பிரேசிலில்...?:
என்ன நடந்துகொண்டு இருக்கிறது பிரேசிலில்... ? அந்த  அரசு,  தம் சொந்த குடிகளை கொன்று கொண்டிருக்கிறதா....? இதற்கான தெளிவான விடை வேண்டுமானால், பிரேசிலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். அதற்கு பிரேசிலின் சில நூற்றாண்டு  கால வரலாறை தெரிந்து கொள்ளவேண்டும்.
15- ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், போர்ச்சுகீசிய காலனி நாடாக இருந்தது பிரேசில். நாடுகள் அடிமையாவதற்கு என ஒரு பொதுவான காரணம் இருக்கும்தானே... அந்த காரணம்தான் பிரேசில் அடிமை நாடாக மாறியதற்கும். ஆம், அதன் மழைக்காடுகளும், வளமான மண்ணும்தான், அந்த நாட்டை அடிமையாக்கியது. வளமான மண், தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை.... வந்த போர்ச்சுகீசய பிரபுகள் அமைதியாக இருப்பார்களா...? என்ன செய்யலாம் என்று எண்ணினார்கள். அப்போது அவர்களுக்கு தங்கமாக தெரிந்தது ‘கரும்பு’.  பார்க்கும் இடங்களில் எல்லாம் கரும்பு சாகுபடி செய்தார்கள். ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள். கொள்ளை லாபம் வந்தது. கரும்பின் சுவையை முதலில் ருசி கண்டவர்கள்... இப்போது அதன் வருமானத்திலும் ருசி கண்டார்கள். இந்த வருமானத்தை இரட்டிப்பாக்க தீர்மானித்தார்கள். வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டுமென்றால், விளைச்சலும் இரட்டிப்பாக வேண்டு. என்ன செய்யாலாம்...?  காட்டை அழித்து கரும்பு நடலாம்... ஏன், இயன்றால் 'கடலையும் தூர்த்து கரும்பு நடலாம்' என்று திட்டமிட்டார்கள்.
 
திட்டமிட்டால் மட்டும் போதுமா... இதை செயல்படுத்த ஆட்கள் வேண்டுமல்லவா...? ஏற்கெனவே முரண்டு பிடிக்கும் உள்ளூர் கூலிகளை வைத்து மட்டும் இதை சாதிக்க முடியாது. என்ன செய்யலாம்...? அப்போது கனஜோராக அடிமைகள் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. இப்போது கேரளாவிற்கு லாரிகளில் அடிமாடுகளை அனுப்புவது போல், அப்போது கரிபீயன் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மனிதர்களை, கப்பல்கள் மூலம் அடிமைகளாக இறக்குமதி செய்து கொண்டிருந்தது தென் அமெரிக்கா.
இந்த அடிமைகள் வர்த்தகத்தில் பிரேசிலும் ஈடுப்பட்டது.  ஏறத்தாழ 50 லட்சம் கருப்பினத்தவர்களை இறக்குமதி செய்தது... இன்னொரு நாட்டில் போய் அமர்ந்து கொண்டு, அந்த நாட்டை அடிமையாக்கியது மட்டுமல்லாமல், பிற இனத்தவர்களையும் இறக்குமதி செய்து தங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்வது  அறமாகாதுதானே...?  அடிமைகள் பொறுத்து பொறுத்துப் பார்த்தார்கள். கிளர்ந்தெழுந்தார்கள். தப்பித்துச் செல்லத் துவங்கினார்கள். (இவர்களை குயிலொம்போ என வரலாறு பதிவு செய்தது.)
கடலும், காடும் இணையும் இடம் அவர்களுக்கு பாதுகாப்பான கூடாக அமைந்தது. அங்கு ஒரு சமூகத்தை உண்டாக்கினார்கள்.  தங்களுக்கான இடமாக மட்டும் அதை வைத்துக் கொள்ளவில்லை, தங்களைப் போல் தப்பித்து வந்த பூர்வகுடிகளுக்கும் அடைக்கலம் தந்தார்கள்.  
போர்ச்சுகீசிய அரசு பொறுமையாக இருக்குமா...? அது பல முறை அவர்களைத் தாக்கி, பணிய வைக்க முயற்சி செய்தது. ஆனால், இழப்பதற்கு தங்களது உயிரைத் தவிர எதுவும் இல்லாத அந்த அடிமைகள், திருப்பித் தாக்கினார்கள்.  ஆணவ அரசு பின் வாங்கியது. பின் தந்திரமாகச் செயல்பட்டு, கருப்பினத்தவர்களின் தளபதியாக இருந்த ஷூம்பியைக் கொன்றது. பின் அவன் தலையை கொய்து, கருப்பினத்தவர்களை அச்சமூட்ட,  பிரேசில் எங்கும் அதை எடுத்துச் சென்றது.
பின் பலகட்ட போராட்டத்திற்கு பின், மே 13, 1888 ம் ஆண்டு, இந்த அடிமை முறை முடிவுக்கு வந்தது. மேற்குலகில் பிரேசில்தான், அடிமை முறையை நிறுத்திய கடைசி நாடு. ஆனால், அதற்குள் பிரேசில் எங்கும் அடிமைகளின் குருதி சிந்தி இருந்தது.  
அதற்கு பின் பல விஷயங்கள் மாறின. அரசுகள் மாறின. ஆனால், அந்த குயிலோம்பாக்களின் வம்சாவழியினரின் துயரம் மட்டும் அப்படியே இருக்கிறது. அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இன்றும் பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் பின் தங்கிதான் இருக்கிறார்கள்.
நிலத்திற்கான போராட்டம்:
குயிலொம்போக்கள், 'தாங்கள் பூர்வீகமாக தங்கி இருந்த பகுதிகளை, எங்களுக்கே தர வேண்டும்' என்கிறார்கள். அதுவும் குறிப்பாக, அவர்கள் தப்பித்து கடலும், காடும் சந்திக்கும் பகுதியில் வசித்தார்கள் அல்லவா...? அந்த இடத்திற்கு உரிமை கோருகிறார்கள். அவர்களை பொறுத்த வரை, அது அவர்களின் புனித இடம். தங்கள் மூதாதையர்கள் ரத்தம் சிந்திய இடம்.  அந்த நிலத்திற்காக அம்மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அரசாங்கம் அவர்களுக்கு அந்த இடத்தை தர மறுக்கிறது.  நீதிமன்றம் இதில் தலையிட்ட பின், பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டும் இடம் வழங்கியது.
 
போர்ச்சுகீசிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிட்டு,  உடலெங்கும் உரமேறிய அந்த மக்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து போராடி வந்த சூழலில்தான்,  'பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,  போட்டி நடத்துவதற்காக பிரேசில் தேர்ந்தெடுத்த இடம், குயிலொம்போக்கள் வசித்த இடம். அவர்களின் வம்சாவழியினர்களின் புனித இடம். அந்த இடத்தில் கட்டுமானங்களை துவங்க, ஒரு பெருநிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுத்தது.  குயிலொம்போக்கள் புதைக்கப்பட்ட இடத்தில், ஒலிம்பிக் பூங்கா  எழுப்பப்பட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள், போராடி பார்த்தார்கள். அரசு கேட்பதாய் இல்லை. இந்த மக்களும் விடுவதாக இல்லை.  மிச்சம் இருக்கும் தங்களின் அடையாளங்களை தற்காத்துக் கொள்ள, அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
குயிலொம்போக்கள் சார்பாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் அடில்சன், “எங்களின் புனித இடங்களை பெயர்த்து எடுத்துவிட்டார்கள்...  நாங்கள் எவ்வளவு போராடியும் அவர்கள் (அரசு) கேட்பதாய் இல்லை. நாங்களும் ஓயப்போவதாயில்லை...” என்கிறார்.
வகைதொகை இல்லாத மரணம்:
 
இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரேசில் அரசாங்கம் தேசத்தைச் சுத்திகரிக்கிறோம் என்ற பெயரில் தம் குடிகளை கொன்று வருகிறது. ஆம், அடிமையினத்தவராக இருந்தவர்கள்  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள் அல்லவா... அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள தேர்ந்தெடுத்தது வழிப்பறியும், பிக்பாக்கெட்டும்தான். ஆம், கொள்ளைகாரர்களாக மாறினார்கள். சுற்றுலாப் பயணிகளிடம், செல்வந்தர்களிடம், ஏன் யார் கையில், பையில் பணம் இருந்தாலும் வழிமறித்து, கொள்ளை அடித்தார்கள்... பணம் இல்லையா...? பிழை இல்லை. கழுத்தில், கையில் இருந்ததை பறித்தார்கள். நீங்கள் கூட இது தொடர்பாக சில வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கக் கூடும்.... இல்லை என்றால் பாருங்கள். சிறுவர்கள் கூட வழிமறித்து பணம், நகை பறிப்பது தெரியும். ஆனால், இப்போது அந்த சிறுவர்கள் உயிருடன்  இருப்பார்களா என்றால் தெரியாது.
ஆம். ஒலிம்பிக் நடக்க இருக்கிறது. 'வெளிநாட்டவர்கள் மத்தியில் தேசத்திற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது' என்பதற்காக, பிரேசில் அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிட்டது. அதாவது, கையில் புண் இருந்தால் அதற்கு மருந்திடுவது அல்லது அந்த புண்ணிற்கு என்ன காரணம் என்று பார்த்து அதை சரி செய்ய பார்க்காமல், கையையே வெட்ட முடிவு செய்தது. ஆயிரக்கணக்கானவர்களை கொன்று இருக்கிறது.
திருடர்கள், கயவர்கள் மீது மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. அப்பாவிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறது.  கடந்த ஆண்டு,  விட்டோர் என்னும் இளைஞர் வெளியே கால்பந்து விளையாடச் சென்றிருக்கிறார். அவரையும் காவல்துறை சுட்டு இருக்கிறது. அதனால், அவரது இடுப்பிற்கு கீழே அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.
இது இப்படி நடந்துகொண்டிருக்க, ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்த  பிரேசில் பொருளாதாரம், FIFA கால்பந்தாட்டப் போட்டி நடத்தியதாலும், ஒலிம்பிக் போட்டிக்கு செலவு செய்ததாலும், மேலும் சரிவடைந்தது. இந்த ஒலிம்பிக்கிற்கான பட்ஜெட் மட்டும் ஏறத்தாழ 12 பில்லியன் அமெரிக்க டாலர்.
பொருளாதாரம் சரிவு என்றால் சில காலங்களில் சுதாரித்து எழக் கூடிய அளவிற்கான சரிவு இல்லை... மிக மோசமான சரிவு. ஆசிரியர்களுக்கு, காவல் துறைக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு சரிவு.  ஆசிரியர்கள் வெகுண்டெழுந்து, கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒலிம்பிக் சுடரோட்டத்தில் புகுந்து, சுடரை கைப்பற்றி அதனை அணைத்தார்கள்.
ஒரு பக்கம் நிலத்திற்கான போராட்டம், இன்னொரு பக்கம் சீட்டுக்கட்டாய் சரியும் பொருளாதாரம், மற்றொரு பக்கம் ஆயிரக்கணக்கான மரணங்கள். ஸிகா வைரஸ் ஏற்படுத்திய சோகங்கள்... இத்தகைய சூழலில்தான், அங்கு பலரின் குருதியை குடித்து ஒலிம்பிக் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
பதக்கப்பட்டியலில் நம் நாட்டு பெயர் வருமா என்று, நாம் ஆவலாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க...  'நமக்கு அடுத்த மாதமாவது சம்பளம் வருமா' என்று ஒரு பிரேசிலிய அரசு ஊழியரும், 'வீட்டை விட்டு வெளியே செல்லும் மகன் மீண்டும் வீடு வருவானா..' என்று ஒரு பிரேசிலிய தாயும், 'தங்களுக்கு உரிமையான  இடம் மீண்டும் கிடைக்குமா' என்று என்று ஒரு ஆப்ரிக்க பிரேசிலேயே வம்சத்தில் வந்தவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பின் குறிப்பு:
'ஒரு நாட்டின் உருவாக்கத்தில், பொருளாதார முன்னேற்றத்தில், நாகரிக வளர்ச்சியில் சில பிழைகளும் இருக்கும் தானே... கரைப்படியாத நாடுகள் எத்தனை... குருதி நாற்றம் அடிக்காத வளர்ச்சி என்று ஏதாவது இருக்கிறதா என்ன... ஏன் உலகமே கொண்டாடும் ஒரு போட்டி குறித்து இப்படி ஒரு கட்டுரை...?' -இது போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் எழுந்தால், மன்னிக்கவும். யாரையும், எவரையும், எவற்றையும் களங்கப்படுத்த வேண்டும் என்பது விகடனின் நோக்கம் அல்ல. எப்போதும் வென்றவர்களின் வாழ்வு மட்டும் தான் வரலாறு ஆகிறது. அதன் பின்னால் இருப்பவர்களை, இருந்தவர்களை, அவர்களின் இன்னல்களை புரிந்துக் கொள்ளாமல் அடுத்தக் கட்ட வளர்ச்சி என்பது இல்லை. அலெக்ஸ் ஹாலி அமெரிக்க கருப்பினத்தவர்களின் வரலாறை ‘Roots' என்னும் நாவல் மூலம் பதியாமல் போயிருந்தால், மனசாட்சி உள்ள இக்கால வெள்ளை அமெரிக்கர்களுக்கே, கருப்பினத்தவர்களின் இன்னல்கள் தெரியாமல் போயிருக்கும், ஏன் ஒபாமா கூட அந்நாட்டின் அதிபர் ஆகாமல் போயிருக்கலாம். ஒரு விஷயத்தை அனைத்து பரிமாணங்களிலும் புரிந்துக் கொள்வோம். அப்போதுதான் அந்தப் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்திலேனும் கவனமாக எதையும் திட்டமிட முடியும். அதுதான் பொதுவெளியில் அனைவருக்குமான நலனாக இருக்கமுடியும்

Friday, August 5, 2016

ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?


இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.
*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.
* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.
*தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.
*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.
*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்