Friday, May 10, 2013

வாசித்ததில் நேசித்தது 
ஆறாம் திணை  - நல்ல சிந்தனை  ( நன்றி: ஆனந்த விகடன்)
 
ண்ணத்துப்பூச்சியைப் பார்த்துச் சிலாகிப்பதும், சிட்டுக்குருவியைக் காணாமல் தவிப்பதும், வரகரிசிப் பொங்கலில் நலம் பேணுவதும், புவி வெப்பம் அடைவதை, நச்சுக் கசிவதை, கதிர்வீச்சு உமிழ்வதைப் பற்றி அக்கறையாகச் சிந்திப்பதும் மட்டும்தான் சூழல் கரிசனமா? இவற்றையெல்லாம் தாண்டிய முக்கிய சிந்தனை ஒன்றும் இருக்கிறது!
 
'வேண்டாம் இந்த வேளாண்மைக் கூலித் தொழில்; சமூக அவமானத்துடன், அடிப்படைக் கல்வி, மருத்துவம், வாழ்வியல் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் சவால் நிறைந்த கிராமத்துச் சேரியில் அடிமையாக வாழ்வதைக் காட்டிலும், நகர்ப்புறக் கூலியாக வாழ்வதில் எனக்குச் சில குறைந்தபட்ச உத்தரவாதமாவது கிடைக்கிறது. நகரத்தில் என் அடையாளத்தைத் தொலைக்க முடியும்!’ என வேகமாகக் கிராமங்களைவிட்டு வெளியேறுபவர்கள் இன்று ஏராளம். தமிழகத்தில் மட்டுமல்ல; பீகாரில் இருந்தும், ஜார்கண்டில் இருந்தும், சத்தீஸ்கரில் இருந்தும்... வெளியேறி சென்னைக்கு வந்து, பெரும் அடுக்குமாடிக் கட்டடங்களிலும் சுரங்க ரயில் பாதைகளிலும் உழைக்கும் வேதனையான ஒடுக்கப்பட்டவரின் வாழ்வில்தான் நம் சொகுசு வாழ்வு தொடங்குகிறது. நகரமயமாக்கம் சூழல்கேட்டுக்கு முக்கியச் சவால் என முழங்குகிறோம் நாம். ஆனால், அந்த நகரமயமாக்கலுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே காரணமல்ல; சக மனிதனை நேசிக்காத, வாழவிடாத இந்தச் சாதீயச் சமூகமும் ஒரு காரணம் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
 
படுக்கை அறையை வண்ணமுடன் அலங்கரிக்க நானோ துகள்களில் வண்ணப்பூச்சு, கருப்பைக்குள்ளே உள்ள கருவுக்குக்கூட மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை, விண்கூடத்தில் இருந்துகொண்டு வீட்டில் கொதிக்கும் சாம்பாரில் வேகும் முருங்கைக்காயின் பதம் பார்க்கும் துல்லியத் தொழில்நுட்பம், இத்தனையும் இருக்கும் இந்த நாட்டில் கழிவு நீக்கத்தில் மட்டும் நவீனத் தொழில்நுட்பம் காணோம்.
 
இங்கே இந்தியாவில் இன்னும் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்யும் அவல நிலையில்தான் எட்டு லட்சம் மனிதர்களை வைத்திருக்கிறோம் என்ற செய்தி எவ்வளவு வேதனையை உண்டாக்குகிறது? இவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 27 ஆயிரம் பேர் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. 'வெட்கமாயில்லை உங்களுக்கு..?’ என இந்தியாவைப் பார்த்து ஐ.நா. கேட்ட பின்னர், இந்தக் கொடிய அவலத்தைக் கடுமையாகக் கண்டித்து, 1993-ல் சுப்ரீம் கோர்ட் தடை செய்தது. ஆனால், 20 ஆண்டுகளில் என்ன நடந்தது? எந்தப் பெரிய முன்னேற்றமும் நிகழவில்லை என்பதற்கு மேற்குறிப்பிடப்பட்ட அந்தச் சமீபத்திய புள்ளிவிவரங்களே சாட்சி. உச்ச நீதிமன்றம் சொன்ன பின்னரும், இதுவரை ஒருவரைக்கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தியமைக்காகக் கைது செய்ய வில்லை என்பது கூடுதல் செய்தி.
இந்தியாவில் ஒரு துறைக்கு எனப் பிரத்யேக பட்ஜெட் அரங்கேறுவது ரயில்வே துறையில் மட்டும்தான். கடந்த ரயில்வே பட்ஜெட்டில், 'ரயில் பெட்டிக் கழிப்பிடங்கள் ஸ்டீல் பிளேட்டில் இருக்க வேண்டும். தண்ணீர் நல்ல அழுத்தத்துடன் வர வேண்டும்; உள்ளே கண்ணாடி பளபளப்பாக இருக்க வேண்டும்; தாழ்ப்பாள் இப்படி இருக்க வேண்டும்’ என்றெல்லாம் விவாதித்த நம் பிரதிநிதிகள், இன்னமும் ரயில் நிலையங்களில் கைகளால் மலம் அள்ளும் நிலையை ஒடுக்கப்பட்ட மக்களைக்கொண்டு செய்வதை ஒருகணம்கூட யோசிக்க மறுப்பது ஏன்?
 
வயிற்றுக் குடலுக்குள் உள்ள புண்ணின் அளவை, இயல்பைச் சொல்லி, அதை வெட்ட, ஒட்டப் பயன்படுத்தப்படும், எண்டாஸ்கோப்பி மாதிரியான ஓர் உபகரணத்தை வடிவமைத்து, கழிவுநீர் அடைப்புகளைத் துல்லியமாகச் சரிசெய்ய முடியும். வருடத்துக்கு 1 லட்சம் பொறியாளர்கள் தமிழகத்தில் மட்டும் உருவாகின்றனர். ஒவ்வொரு சமயம் செய்தித்தாளில், 'என் கடைசி ஆண்டு புராஜெக்ட்டில் குட்டியாக விமானம் தயாரித்தேன், குறைந்த பெட்ரோலில் வேகமாகச் செல்லும் வாகனம் தயாரித்தேன். கையடக்க கம்ப்யூட்டர் தயாரித்தேன்...’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். இத்தனையும் செய்யும் இளம்பொறியாளர்கள் சமூக அக்கறையுடன், சமூக அவமானத்துடன் செத்து மடியும் நம் சக மனிதருக்கு உதவியாக, கழிவுகளை நீக்குவதற்கென ஒரு கருவியை வடிவமைக்க முடியாதா? ஒருவேளை அப்படி ஒன்றைக் கண்டறிந்து ஓரமாக வைத்திருந்தால், அதை இந்த அரசு இயந்திரம் மீட்டெடுத்துப் பயன்படுத்தினால்தான் என்ன?
 
சூழல் கரிசனம் என்பது புவியை நேசிப்பதோடு நின்றுவிடாமல், நம் சகமனிதரை எந்தவித சாதி, மத அடையாளமும் இன்றி நேசித்தால் மட்டுமே சாத்தியம். 'மூட்டுல பசி உள்ளவங்க நீங்க... வயித்துப் பசில நாங்க முனங்குறது உங்களுக்கு எப்படிக் கேட்கும்?’ என்ற கேள்வியுடன் கிராமங்களை வலியுடன் தொலைக்கும் சாமானியன்; 'அணை கட்டுகிறேன்; அடியில் உள்ள கனிமத்தைத் தோண்டுகிறேன்... நீ நகர்ந்து போ’ என்று ஆங்காங்கே விரட்டப்படும், காட்டைத் தன் வாழ்வாதாரமாகவும் வாழ்வியலாகவும்கொண்ட மலைவாழ் மக்கள்; உப்புக் கரிக்கும் கண்ணீருடன் ஒவ்வொரு நாளும் உயிரோடு திரும்பிவந்தால்தான் ஆச்சு எனக் கடலோடு உறவாடும் மீனவன்; 'சிங்காரச் சென்னையாக்கப் போறோம்; கூவம் ரொம்ப அசிங்கமா இருக்கு, நீங்கள் உங்கள் குடிசையை எடுத்துக்கொண்டு 50 கி.மீ. அந்தப் பக்கமா போங்க...’ என விரட்டப்படும் ஏழை; 'என் வீட்டு வாசலில் கார்ப்பரேஷன்காரன் குப்பைத் தொட்டியை வெச்சுட்டான். எப்படியாச்சும் எடுத்துடுங்க’ என தனக்குத் தெரிந்த உயர் அதிகாரியைக் கையைக் காலைப் பிடித்து மாற்றச் சொல்லும் நாம், அதே குப்பையை, நம் கழிவுகளை அன்றாடம் அப்புறப்படுத்துவதையே தொழிலாகச் செய்யும் ஒடுக்கப்பட்ட நம் சக தோழர்கள்; இவர்கள் எல்லோரின் நலவாழ்வையும் உள்ளடக்கியதுதான் சுற்றுச்சூழல் அக்கறை. அந்த மனிதரின் விடுதலை யோடு சேர்த்துதான் சுற்றுச்சூழலின் விடுதலையும் சாத்தியம். 'கார்பன் கசிவு கூடிப்போச்சு; ஓசோன்ல ஓட்டை; நாமெல்லாம் நாளைக்கு பீச்சில் இதுக்கு விழிப்பு உணர்வுக்கு டி ஷர்ட், தொப்பிப் போட்டு மாரத்தான், சைக்ளோட்ரான் போறோம்...’ என்று பேசுவதில் மட்டும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
 
ஏனென்றால், இங்கே விடியல் கிழக்கில் இருந்துதான் வந்து சேரும் என்றிருக்க முடியாது. எட்டுத் திக்கில் இருந்தும் எட்டிப் பார்க்க வேண்டும். ஏனெனில், எல்லா பக்கமும் இருட்டு விதைக்கப்பட்டுள்ளது!

Thursday, May 2, 2013

Virtual Water  ('மறை நீர்’) 
நன்றி - ஆனந்த விகடன் 
 
 
'மறை நீர்’ (Virtual water) என்று ஒன்று உண்டு. அதனைக் கண்டுபிடித்தவர் லண்டனைச் சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். மறை நீர் என்பதற்கு அவர் தரும் விளக்கம் இது - ''கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இருப்பது இல்லை. அதேசமயம் அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. அதுதான் மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,300 கன மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,000 டன் நீருக்குச் சமம்'' என்கிறார் ஆலன். அதாவது, நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வேண்டும். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட புத்திசாலி நாடுகள் அப்படித்தான் செய்கின்றன.
 
ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கான மறை நீர் அளவு 4,810 லிட்டர். பன்றி இறைச்சி, சீனர்களின் பிரதான உணவு. ஆனால், பன்றி உற்பத்திக்கு சீனாவில் கெடுபிடி அதிகம். ஏற்றுமதிக்கும் தடை. மாறாக, இறக்குமதி செய்துகொள்ளலாம். ஓர் ஆரஞ்சுப் பழத்துக்கான மறை நீர் அளவு 50 லிட்டர். சொட்டு நீர்ப் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு ஏற்றுமதிக்குத் தடை!
சரி, இப்போது நம் கதைக்கு வருவோம். முட்டை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது நாமக்கல். உலகெங்கும் ஏற்றுமதி ஆகிறது நாமக்கல் முட்டை. ஒரு முட்டைக்கான மறை நீர் அளவு 200 லிட்டர். மூன்று ரூபாய் முட்டை எங்கே? 200 லிட்டர் தண்ணீர் எங்கே?
 
சென்னையின் கதையைப் பார்ப்போம். பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. இது நமக்குப் பெருமையாம். 1.1 டன் எடைகொண்ட ஒரு காரின் மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
ஒரு கிலோ தோலைப் பதனிட்டு ஒரு கைப்பையோ ஒரு ஜோடி ஷூவோ, செருப்போ செய்ய 29,000 லிட்டர் மறை நீர் தேவை. நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கும் 90 லிட்டர் மறை நீர் தேவை. நீங்கள் அணிந்திருக்கும் ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிப்புக்கு 10 ஆயிரம் லிட்டர் மறை நீர் தேவை. ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செலவுக்கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ஏனெனில், நாம் இளிச்சவாயர்கள்!