Friday, August 31, 2012

வாசித்ததில் நேசித்தது 
 
தெரு விளக்கு


கடவுள் உற்பத்தி மையம்!
பாரதி தம்பி
படங்கள் : எஸ்.தேவராஜன்
ரு மாபெரும் சமூக நீதிப் போராட்டத்தை 40 ஆண்டு காலம் தனி ஓர் ஆளாக நடத்திவருகிறார் சிற்பி ராஜன். பாண்டிச்சேரி ஆரோவில் காடுகளுக்குள் நுழைந்தால், காட்டுப் பறவையின் குரலோடு சேர்ந்து ஒலிக்கிறது ராஜனின் உளியோசை. ''வாங்க... இதுதான் என் புது இடம். சுவாமிமலையில் நம்ம பசங்க 200 பேரை உருவாக்கிவிட்டாச்சு. இனிமேல் அங்கே அவங்க பார்த்துக்குவாங்க. இங்கே இனிமேல்தான் ஆட்டத்தை ஆரம்பிக்கணும்!'' - நீண்டுகிடக்கும் ராஜராஜன் சிலை அருகே கம்பீரமாக அமர்கிறார் சிற்பி ராஜன்.
பெரியாரின் அரசியல் வாரிசுகள் பலர் தடம் மாறி சுயம் ஒழிந்த நிலையில், அவருடைய சமூக நீதிக் கொள்கையை நிலைநிறுத்த இடைவிடாமல் பணி செய்கிறார் ராஜன். உயர் சாதியினர் மட்டுமே கோலோச்சும் சிற்பக் கலையை, தலித் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வேலையையே தன் வாழ்வாக ஏற்றவர், ''தலித்தைக் கோயிலுக் குள் விட்டா, கடவுளுக்கே தீட்டுங்கிறான். ஆனா, உங்க கடவுளை உருவாக்குறதே என் தலித் பையனுங்கதான். 40 வருஷமா சிலை செஞ்சு... செஞ்சு... தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்கள் எல்லாத்துலயும் கருவறை வரை புகுந்தாச்சு. இந்து மதத்தின் தலைமை பீடமான காஞ்சிபுரம் கோயில்லயே என் பசங்க உருவாக்குன சிலைகள் இருக்கு. அதனால் இப்போ என்னா கெட்டுப் போச்சு? நீங்க தெய்வீகம்னு பக்தியோடு வழிபடுற சிலையில் மிளிரும் அழகு உங்கள் கடவுளின் சக்தியால் வந்தது அல்ல, அது எங்கள் உழைப்பால் வந்தது!'' - தங்கு தடையற்ற அழகு தமிழில் உரையாடும் ராஜனிடம் பேசுவதே ஓர் அலாதியான அனுபவம். ஒரு வருடத்துக்கு முன்பு வரை இவர் சுவாமிமலையில் நடத்திவந்த சிற்பப் பயிற்சி நிலையத்துக்கு 'கடவுள் உற்பத்தி மையம்’ என்று பெயர். இப்போது பாண்டிச்சேரியில் புதிய கடவுள்களை உற்பத்தி செய்கிறார். எப்படித் துவங்கியது இந்தப் பயணம்?
 
 
''எனக்கோ என் குடும்பத்துக்கோ சிற்பத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது. எனக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். எங்க வீட்டில் 12 பிள்ளைங்க. நான் 11-வது பையன். அண்ணன்கள் எல்லாம் படிச்சு அரசு உத்தியோகத்தில் இருந்தாங்க. நானும் அப்படி ஆகணும்கிறது குடும்பத்தோட விருப்பம். நமக்குப் படிப்பு ஏறலை. அப்பா திட்டினார். 'கடவுள்கிட்ட வேண்டினேன்... ஒண்ணும் நடக்கலையே’னு சொன்னேன். 'நீதான்டா படிக்கணும்’னார். அப்பவே புரிஞ்சுடுச்சு, இது வெறும் கருங்கல், இதுகிட்ட வேண்டி நடக்கப்போறது எதுவும் இல்லைனு. 13 வயசுலயே யாரும் சொல்லாம, நானே நாத்திகனா மாறிட்டேன்.
 
அப்போ பள்ளிக்கூடத்தில் கிடைக்கிற காகித அட்டைகளைவெச்சு உருவங்கள் செய்வேன். அப்படியே ஓவியம், சிலைகள் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வந்துச்சு. ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சுட்டு, 17 வயசுல நான் சிற்பம் படிக்கப்போறேன்னு சொன்னதுக்கு வீட்ல எதிர்ப்பு. 'கைத்தொழில் கத்துக்கிட்டா, பிச்சைதான் எடுப்பே’ன்னாங்க. வீட்டைவிட்டு வெளியில் வந்துட்டேன். 41 வருஷம் ஆச்சு. இதுவரை ஒரு தடவைகூட வீட்டுக்குப் போனது இல்லை. கல்யாணமும் கட்டிக்கலை. நானே ராஜா, நானே மந்திரி. ஆனா, எனக்கு லட்சியங்கள் இருக்கு. இல்லாத கடவுளின் பெயரைச் சொல்லி, இல்லாத மதத்தைச் சொல்லி, இல்லாத சாதியைச் சொல்லி மக்களைப் பிரிக்கும் கடவுள், மதம், சாதி... இது மூணையும் காலி பண்ணணும். 41 வருஷமா அதுக்குத்தான் போராடிக்கிட்டு இருக்கேன்'' என்கிற ராஜன், வீட்டைவிட்டு வெளியேறியதும் சுவாமிமலையில் உள்ள அரசு கைத்திறன் வளர்ச்சிக் கழகத்தில் ஒரு வருடம் படித்துவிட்டு, அங்கேயே பாரம்பரியமாகச் சிற்பம் செய்யும் சிற்பி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
 
''அந்த ஏழு வருஷமும் கொடுமையானது. சேர்க்கும்போதே, நீ என்ன சாதினு கேட்டாங்க. சிற்பம் செய்யுற சாதி என்னவோ, அதைச் சொன்னேன். பொய்தான். சேர்ந்து வேலை கத்துக்கிட்டேன். அங்கே தலித்துகளை நடத்துற விதம் சகிக்க முடியாம இருக்கும். தொட்டுப் பேச மாட்டாங்க. பாத்திரத்தில் தண்ணீர் தர மாட்டாங்க. அப்பவே, 'நாம எப்போ தனியாப் பட்டறை போடுறமோ, அன்னைக்கு தலித் பையன்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கணும்’னு முடிவு பண்ணி னேன். ஒரு கட்டத்தில் தலித்துகளுக்கு அவங்க பண்ண கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் கேள்வி கேட்டேன், அப்போ என் சாதி என்னன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருச்சு. அங்கிருந்து வெளியேறி, 27 வயசுல சுவாமிமலையில் தனிப் பட்டறை போட்டேன்.
சுற்று வட்டாரத்தில் யாரெல்லாம் சாதிரீதியா ஒடுக்கப்படுறாங்களோ, யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ... அவங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து சிற்பப் பயிற்சி கொடுத்தேன். தலித் பையன்களைச் சாமி சிலை செய்ய விடுறதானு எதிர்ப்பு வந்துச்சு. அப்புறம் தனியா ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, அதுல 'கடவுள் உற்பத்தி மையம்’ தொடங்கினேன். இப்போ இன்னும் அதிகமான பையன்கள் கத்துக்க வந்தாங்க. யார்கிட்டயும் ஒரு பைசா கட்டணம் வாங்கினது இல்லை. முடிஞ்சவரைக்கும் நானே எல்லாருக்கும் சமைச்சுப் போடுவேன். எல்லாரும் முழு மனசோட ஆர்வமா கத்துக்க ஆரம்பிச்சாங்க.
 
சிலை செய்வது ஒரு கலைதான். ஆனால், அது ஒண்ணும் தெய்வீகக் கலையோ, ஒரு குறிப்பிட்ட சாதியால் மட்டுமே செய்யக்கூடியதோ இல்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால், யாராக இருந்தாலும் கத்துக்கலாம். நான் என்கிட்ட கத்துக்கிட்ட எந்தப் பையனுக்கும் இது சாமி சிலை, தெய்வீகமாப் பண்ணணும்னு சொன்னது இல்லை. சிலை செய்யுற எங்களை விடுங்க... அதை வழிபடுற யாரும் கடையில் போய் 'தெய்வீகமா ஒரு சிலை வேணும்’னு கேட்பது இல்லை. '10 கிலோ பிள்ளையார் கொடுங்க’னுதான் கேட்குறாங்க. எடை போட்டுத் தான் வாங்குறாங்க. அப்புறம் எந்த இடத்தில் அந்தச் சிலைக்குத் தெய்வீக சக்தி கிடைக்குது? கோயில் கர்ப்பக்கிரகத்தில் புரியாத சம்ஸ்கிருத மொழியில் பத்து வரி சொல்லிட்டா, சக்தி கிடைச்சுடுமா? நான் இதுக்காகவே ரெண்டு வருஷம் சம்ஸ்கிருதம் கத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகுதான் இந்தச் சாதி முறையை எப்படி நுணுக் கமா சாமியோட முடிச்சுப்போட்டு மக்களை மயக்கிவெச்சிருக்காங்கனு தெளிவாப் புரிஞ்சது.
நானும் என் மாணவர்களும் 40 வருஷமா செய்த சிலைகள் உலகம் முழுக்கப் பல கோயில்கள்ல இருக்கு. கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, ஜெர்மனி வரை எங்கெங்கோ இருக்கு. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்துக்கு ஏராளமான சிலைகள் செஞ்சிருக்கோம். அதே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ராமானுஜருக்கு தங்கக் கவசம், அகோபில மடத்துக்குச் சிலைகள், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோயிலுக்குத் துவாரபாலகர், கும்பகோணத்தில் ஐயப்பன் கோயில் சிலை எல்லாமே தலித் மாணவர்கள் செஞ்சதுதான். இதை எல்லாம் வணங்கியதால் யாருக்கும் தீட்டு ஒட்டிக்கலையே? கம்ப்யூட்டர் செய்யுறதுக்குனு ஒரு சாதி கிடையாது. செல்போன் செய்யுறதுக்குனு ஒரு சாதி கிடையாது. சிலை செய்ய மட்டும் எதுக்குச் சாதி? டூ-வீலர் கண்டுபிடிச்சவன் என்ன சாதி? ரயில் கண்டுபிடிச்சவன் என்ன சாதி? நமக்குத் தெரியுமா? இந்தப் பொருட்கள்லாம் இல்லாம இப்போ நம்மளால ஒரு மணி நேரம்கூட இருக்க முடியலையே? ஆனா, கடவுள் இல்லாமலோ, சாதி இல்லாமலோ எத்தனை தலைமுறையும் வாழலாம். அதுவும் நிம்மதியா, சந்தோஷமா இருக்கலாம்.
 
 
நிறையப் பேர் என்கிட்ட, 'கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்றீங்க? ஏன் கடவுள் சிலை செய்யுறீங்க?’னு கேட்டிருக்காங்க. குதிரைச் சிலை செய்தால், குதிரை மேல பக்தி வேணுமா? நான் ஒரு சிற்பி. நீங்கள் கேட்கிறதைச் செஞ்சு தருவேன். குதிரைக்காகத் தனி மெட்டல், கடவுளுக்காகத் தனி மெட்டல் கிடையாது.
 
'கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக’னு வள்ளலார் சொன்னார். ஒரு கலையை ரசிக்கலாம். அதைத் தெய்வீகம்னு நம்புற இடத்தில்தான் மூட நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்குது.
 
இப்படிப் பேசுறதால் பல நடைமுறைப் பிரச்னைகள் வந்துச்சு. ஆர்டர் கொடுத்ததுக்கு அப்புறம் நான் நாத்திகன்னு தெரிஞ்சதும் டெலிவரி எடுக்க மாட்டாங்க. நான் பரம்பரையா சிலை செய்யுற சாதினு நினைச்சு வந்து திரும்பிப்போனவங்களும் உண்டு. கிராமங்கள்ல இருந்து வர்றவங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் ஆர்டர் வாங்க மாட்டேன். முடிஞ்ச வரைக்கும் பேசித் திருப்பி அனுப்பப் பார்ப்பேன். பாவம், அவங்க விவசாய வேலை செஞ்சு உழைச்ச காசு. அதை இந்தச் சிலை மேல கொட்டுறாங்களேனு பரிதாபமா இருக்கும்.
 
என் மாணவர்கள்ல சுமார் 200 பேருக்கும் மேல இந்தத் தொழிலைச் செய்றாங்க. 40 பேர் தனியாப் பட்டறை போட்டிருக்காங்க. சுவாமிமலையில் 32 வயசுப் பையன், தன் உழைப்பில் 45 பேருக்கு வேலை கொடுத்திருக்கார். இவங்க அத்தனை பேரும் என்னைப் போலவே கொள்கை பேசுறவங்கனு சொல்ல மாட்டேன். ஆனா, யாரும் தெய்வீகச் சிலைனு ஏமாத்த மாட்டாங்க. அது அவங்களோட தொழில். எல்லாத்தையும் தாண்டி, காலம் காலமா கடவுளின் பெயரைச் சொல்லி ஒடுக்கப்பட்டவர்கள், இன்னைக்குக் கடவுளை உற்பத்தி செய்றாங்க. உங்க உயர் சாதிக் கடவுளை உருவாக்குறது என்னோட தலித் மாணவர்கள். இனி, கடவுளைப் பயபக்தியோடு வணங்கும்போது மனசுல வெச்சுக்குங்க... நீங்க வணங்குறது ஒரு தலித் மாணவனின் உழைப்பை. கோயில் கர்ப்பக்கிரகத்தில் நுழைஞ்சு உங்க சாதி அடுக்குக்கு நாங்க சவால் விடுகிறோம். முடிஞ்சா, தடுத்துப் பாருங்க!''

Thursday, August 23, 2012



லை விற்கும் அஞ்சலை
கையாலாகாத மாமனோடு
வாழாததையும் சேர்த்து
கூவிக் கூவிச் சொல்கிறாள்
'வாழலே... வாழலே!’
- நா.கிருஷ்ணமூர்த்தி


 
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் போட்டியில் குவோர் மாரியல் என்ற வீரர் ஓடினார். அவர் 47-வது இடம்தான் பிடித்தார். ஆனால், அவர் படைத்திருப்பது ஓர் அசாத்திய சாதனை.

மாரியல் சூடான் நாட்டைச் சேர்ந்தவர். சூடானின் அரசப் படைகள் தெற்கு சூடான் மக்களை மோசமாகச் சித்ரவதை செய்து, கொலை செய்தது. மாரியலின் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 12 வருடங்களுக்கு முன்பு சூடானில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தார் மாரியல். லண்டன் ஒலிம்பிக்கின் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றும் அவரால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாத நிலை. ஏனெனில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டுமாயின் ஒரு நாடு வேண்டும். அமெரிக்காவில் வசிப்பிட உரிமைதான் உண்டே ஒழிய, குடியுரிமை கிடையாது. அண்மையில் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், அதனிடம் ஓர் ஒலிம்பிக் குழு இல்லை

'மாரியல் விரும்பினால் சூடான் சார்பாக ஓடலாம்’ என்று சூடான் அதிபர் அழைப்புவிடுத்தார். ஆனால், தன் சகோதரர்களைக் கொலை செய்த, தன்னை நாட்டை விட்டு விரட்டியடித்த சூடான் சார்பாக ஓட மாரியல் விரும்பவில்லை. அந்த அழைப்பை நிராகரித்தார்.

இதற்கிடையே, தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று ஓட முடியாத மாரியலுக்கு ஆதரவாகப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்தது. ஏராளமானோர் கையெழுத்திட்டு மனு அனுப்பினார் கள். இறுதியில் மாரியல் ஒலிம்பிக்கில் பங்கெடுக்க அனுமதித்தது ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி. ஆனால், அவருக்கு என்று ஒரு நாடு இல்லாத தால் ஒலிம்பிக் கொடியே அவருடைய அடை யாளம் ஆனது. 'என்னிடம் தெற்கு சூடான் கொடி இல்லை. ஆனால், நான் ஓடும்போது ஒட்டுமொத்த நாடும் என் பின்னால் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் மாரியல்.
 
இதைப் பற்றித் தனது இணையதளத்தில் எழுதி இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 'குவோர் மாரியல் ஓடும்போது சூடான் உள்நாட்டுப் போரில் மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைத்துக்கொள்வேன். போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மாரியலின் எட்டு சகோதரர்களை நினைத்துக்கொள்வேன். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டவீரன் அவன்தான், நாடற்றவன்!’ என்று முடித்திருக்கிறார். வெற்றி என்பது முதல் இடம் மட்டும்தானா

Sunday, August 5, 2012

நான் எழுதி கிழித்தது 

எனக்கு கனவு உண்டு
கனவு காண.
ஆனால்
நினைவு தப்பாத கனவே வருகிறது
மற்றவரின் நகைப்புக்குள்ளாகும் அக்கனவால்
நான் வேடிக்கை மனிதனைப்போல்
விளையாட்டு பொம்மையானேன்
ஓடி ஒளிந்து கனவு காண
இடமில்லா இவ்வெளியில்
கனவு காணச்சொல்லி
அந்தக் கனவே என்னை விரட்டுகிறது.