Thursday, October 24, 2013

இந்தியாவின் மார்ஸ் மிஷன்!
நன்றி : விகடன் 
    
 சூரியனைச் சுற்றிவரும் மூன்றாவது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். ஆங்கிலத்தில் 'மார்ஸ்’ என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டிவிட்டன!
 
இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு சாதனைப் பயணத்துக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இந்தியாவின் விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ESA (ஃப்ரான்ஸைத் தலைமையாகக்கொண்ட 13 ஐரோப்பிய நாடுகள்), ஜப்பான், சீனா... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!
 
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள்...
 
பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும்.  
 
 
பிரம்மாண்ட ஆழமும் அகலமும்கொண்ட பள்ளத்தாக்குகள், எரிமலைகள் பூமியில்
இருப்பதைப் போல செவ்வாயிலும் உண்டு. செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 7 கி.மீ., அகலம் 4,000 கி.மீ.; பூமியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 1.8 கி.மீ., நீளம் 400 கி.மீ. (அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான்). செவ்வாயில் இருக்கும் மிகப் பெரிய எரிமலையின் உயரம் 26 கி.மீ., இதன் விட்டம் 602 கி.மீ; பூமியில் உள்ள மிகப் பெரிய எரிமலையின் உயரம் 10.1 கி.மீ., விட்டம் 121 கி.மீ.
 
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன. 2008-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 'சந்திராயன்-1’ அனுப்பப்பட்டதற்கு பிறகு, அடுத்த சாதனைப் பயணத்துக்கு 'இஸ்ரோ’ தயார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் 3,850 லட்சம் கி.மீ. இந்தத் தூரத்தை இந்திய விண்கலம் கடந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய சுமார் 10 மாதங்கள் பிடிக்கும். அதாவது, இந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை 4.27 மணிக்கு விண்கலம் சரியாகப் புறப்படுமானால், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு செவ்வாய்க்குப் போய்ச் சேருமாம். எவ்வளவு வியப்பூட்டும், துல்லியமானத் தகவல்!
 
 
எம்.ஓ.எம். (’மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’) என்ற இந்தத் திட்டத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி. 1,350 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
பெங்களூரூவில் உள்ள 'இஸ்ரோ’ மையத்தின் திட்ட இயக்குநரான சுப்பையா
 அருணன், ஒரு தமிழர். ''இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் இது. செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், அந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆராய்வதுமே நமது நோக்கங்கள். இவற்றுக்கு மேலாக, கிரகம்விட்டு கிரகம் பயணிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு இந்தப் பயணம்தான் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.  
 
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ’விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப்  பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண்கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!
 
நாம் அனுப்பும் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கப்போவது இல்லை. செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரப்போகிறது. இது ஒரு தொழில்நுட்ப சோதனைத் திட்டமே தவிர, அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அல்ல. கிரகம்விட்டு கிரகம் பயணிக்கும் சாத்தியக்கூறு நம்மிடம் இருப்பதை உறுதிசெய்யும் திட்டம். பல்வேறு விதமான நோக்கங்களுடன் ஐந்து முக்கியக் கருவிகளை இந்த விண்கலத்தில் பொருத்தியுள்ளோம்.
 
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் உபகிரகமாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு உபகிரகங்கள். இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயிலிருந்து தரையையும் உப கிரகங்களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக்கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.
 
விண்கலத்தின் எடை 1,350 கிலோ என்றாலும், அதனுள் 852 கிலோ எரிபொருள் அடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புறப்படவுள்ள விண்கலத்தை ஏற்றிச் செல்ல பி.எஸ்.எல்.வி. சி 25 என்ற ராக்கெட், நான்கு எரிபொருள் நிலைகளுடன் தயார். இது இந்தியாவின் சில்வர் ஜூப்ளி ராக்கெட்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுப்பையா அருணன்.
 
செவ்வாய் கிரகத்தை ஆராய, அட்லஸ் மற்றும் டைட்டன்ஸ் எனும் மிகப் பெரிய, ஏராள பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, ராக்கெட்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அவற்றை ஒப்பிடுகையில் குறைந்த செலவிலான இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் பயன்படுத்துவது இந்திய விண்வெளி ஆய்வுச் சிறப்புகளில் ஒன்று. பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவுபெறும் இடத்தை அடைய 9,18,347 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். 'இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் விண்கலத்தில் மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தி இந்தச் சாதனையைச் செய்ய இருக்கிறது.
 
'
'ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். தூய்மையான நீர், கழிவு நீரால் அசுத்தமாகி வருகிறது. சுவாசிக்கும் பிராண வாயு, நச்சுப்புகையால் மாசுபடுகிறது. ஓஸோன் மண்டலம் பழுதுபட்டு வருகிறது. சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. இப்படி பூமியை நாம் பாழ்படுத்திவருகிறோம். ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன்.  
 
'அக்டோபர் 28’ என்று நாள் குறித்திருப்பதில் ஒரு நுட்பம் இருக்கிறது. இந்த நாளில் இந்தியாவைவிட்டு விண்கலம் புறப்பட்டால்தான் அது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசையில் செலுத்தப்பட்டு, செவ்வாயின் சுற்றுப்பாதையைச் சரியாக அடைய முடியுமாம். சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் 44 டிகிரியில் ஒன்றுசேருதல் (மிகக் குறைந்த எரிபொருள் செலவில்) சாத்தியமாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 15 வரைதானாம்.  இந்தக் காலத்தைத் தவறவிட்டால், ஜனவரி 2016 அல்லது மே 2018தான்
 
 
அடுத்தடுத்த சாய்ஸ்! ''நாம் நிச்சயம் சாதிப்போம்'' என்கிறார் அருணன் உற்சாகமாக.
தமிழன் சாதிப்பான். விகடனின் வாழ்த்துகள்!
 
யார் இந்த அருணன்?
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர். மனைவி கீதா, பெங்களூரூவில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியை. மகள் ஸ்ருதி அருணன், பெங்களூரூவில் எம்.பி.பி.எஸ்.  மாணவி. அருணனின் தாயார் மாணிக்கம், ராக்கெட் உளவு வழக்கில் சிக்கி, நிரபராதி என்று விடுதலைசெய்யப்பட்ட பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மூத்த சகோதரி. அருணனின் மனைவி கீதா, நம்பி நாராயணன் - மீனா தம்பதியரின் மகளே!
வாழ்க தோழர் 
- நன்றி விகடன் 
 
 
''யாரு... டேப்பு காதரைக் கேக்கிறீங்களா? மூச்சுவிடாமப் பாடித் திரிஞ்ச மனுஷனப்பா. இப்போ அதோ அந்தக் குச்சுக்குள்ள முடங்கிக்கிடக்குறாரு!'' என்று ஒரு குடிசையைக் காட்டுகிறார்கள் தஞ்சையின் உப்பிலி மானோஜிப்பட்டி ஏரியாவாசிகள்.
 
குனிந்து குடிசைக்குள் போன நம்மைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார் காதர். முடியவில்லை. முதுமையின் வீச்சத்தை நிறைத்திருக்கும் அந்தக் குடிசைகூட அவருடையது அல்ல. இறுதிக் காலத்தை இரவலாகக் கழிக்கும் டேப் காதர், தமிழகத்தில் மிக அரிதாக மிஞ்சியிருக்கும் லாவணிக் கலைஞர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடத் தொடங்கி, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்காகவும் தமிழகமெங்கிலும் தெருத் தெருவாக முழங்கி ஓய்ந்துபோன காதரை, இப்போது கட்சியும் கவனிக்கவில்லை; குடும்பத்தினரும் விலக்கிவிட்டார்கள்.
 
தனது 87-வது வயதில், செருப்பு தைக்கும் தொழிலாளி ராஜேந்திரன் - செல்வி தம்பதியரின் வயதான  குழந்தையாக இருக்கும் டேப் காதருக்கு பூர்வீகம் கும்பகோணம் அருகே மேலகாவிரி.
 
''வீட்ல எனக்கு வெச்ச பேரு, அப்துல் காதர். 'டேப்’புங்கிறது கை விரலால தாளம்போடும் ஒரு வாத்தியம். இஸ்லாமிய பக்கீர்கள் பயன்படுத்தி வந்த அதை, இப்போ என்னை மாதிரி லாவணிக் கலைஞர்கள் பயன்படுத்துறாங்க. அதனால 'டேப் காதர்’ ஆகிட்டேன் நான். என் அம்மா நெல் அவிச்சு அரிசி வியாபாரம் பார்த்தாங்க. அப்பாவுக்கு மாந்திரீகத் தொழில். மந்திரிச்சு கயிறு கட்ட நிறையப் பேர் வீட்டுக்கு வருவாங்க. நான் பள்ளிப் படிப்பை அஞ்சாப்போட நிறுத்திட்டேன். என் தாய்மாமன் ஷேக் தாவூத், நல்ல லாவணிப் பாடல் கலைஞர். அவர்கிட்ட இருந்துதான் லாவணிக் கலைஞர் ஆகும் ஆசை எனக்குத் தொத்திக்கிச்சு. பகல் முழுக்க வேலை பார்த்துட்டு, சாயங்காலத்துக்கு மேல லாவணிப் பாட்டு கத்துக்கப் போவேன்!'' என்று நிறுத்தி மூச்சு வாங்கிக்கொள்கிறார்.
 
 
லாவணிப் பாடல் என்பது, வயல் வேலை பார்ப்பவர்கள் பதிலுக்குப் பதிலாகப் பாடிக்கொள்ளும் எசப்பாட்டு வடிவம் கொண்டது. தஞ்சை மண்ணுக்கே உரிய பிரத்யேக சொத்தான இந்த லாவணிப் பாடல்களை, இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய கலைஞர்களே பாடுகிறார்கள்.
''மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தயாரிக்கும் கம்பெனில நான் ஹெல்ப்பர் வேலைக்குப் போனப்போ, அங்கே தொழிலாளர் பிரச்னை வந்தது. அந்தச் சச்சரவுதான்,  தொழிற்சங்கவாதி டி.எஸ்.சோமரா விடம் என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. நான் பாடுவதையும், இயல்பா  பழகுவதையும் பார்த்த அவர், என்னை கம்யூனிஸ்ட் கட்சியில சேரச் சொன்னார்; சேர்ந்தேன்!  
 
நாடு சுதந்திரம் அடைய இருந்த நிலையில், தெலங்கனா உள்ளிட்ட சில இடங்களில் கட்சி, ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதனால கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை பண்ணிட்டாங்க. அந்த சமயம் நான் கிராமம் கிராமமாப் போய் ஐஸ் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன். அப்போ தலைமறைவா இருந்த தோழர்களுக்கு ஐஸ் பெட்டிக்குள்ள மறைச்சுவெச்சு செய்தியை எடுத்துட்டுப் போய் கொடுக்குறதுதான் என் வேலை. அது தெரிஞ்சதும் போலீஸ் என்னைத் தேடவும், நான் மும்பைக்குத் தப்பிச்சுப் போயிட்டேன். கட்சிக்குத் தடை நீங்கிய பிறகு, தஞ்சாவூருக்குத் திரும்பினேன்.
 
 
1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போ கம்யூனிஸ்ட்களை பொதுமக்கள் கொஞ்சம் பயத்தோடதான் பார்ப்பாங்க. ஏன்னா, காங்கிரஸ்காரங்க சிவப்புக் கட்சிக்காரங்க மேல அந்தளவுக்கு பீதியை உருவாக்கிவெச்சிருந்தாங்க. அப்போ தேர்தல் பிரசாரத்துக்காக நான் தஞ்சாவூர் முழுக்க போய் பாடுவேன்...
 
'காங்கிரஸ் கட்சியிலே கொழுத்த பண முதலைகள்
கட்டாயம் தேர்தலில் நிப்பாங்க நிப்பாங்க...
இவங்கக் கருதி வந்துங்களிடம்
காசுக்கு ஓட்டு கேட்டால்
காரித் 'தூ’ என்று துப்புங்க... துப்புங்க’னு
 
பாடி பிரசாரம் செய்வேன். அது அப்போ பாட்டாளி மக்களிடம் நல்ல மாறுதலை ஏற்படுத்துச்சு!'' என்று அப்போதைய நினைவுகளில் மூழ்கி மௌனமாகிறார் டேப் காதர்.
 
ஒரு லாவணிப் பாடகராகக் கட்சிக்குள் வந்த டேப் காதர், தஞ்சை நகரச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கட்சியில் சில காலம் இருந்திருக்கிறார்.
 
''ரேஷன் அரிசி கடத்தல், வாய்க்கால் தகராறு, தீண்டாமைனு எல்லாப் பிரச்னையிலும் கட்சி தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுச்சு. களத்தில் நானும் நின்னேன். 1969-ல் சிவப்பு நாயக்கன் வாரி என்ற ஊரிலிருந்து ஜமீலானு ஒரு பொண்ணைப் பிடிச்சுட்டு வந்து காவல் நிலையத்தில் வெச்சு, 14 போலீஸ்காரங்க ரேப் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணு செத்துப்போச்சு. 'விஷம் குடித்து தற்கொலை’னு வழக்கு பதிஞ்சு ஜமீலாவைப் புதைக்கப் பார்த்தாங்க. நான் மக்களைத் திரட்டி ஊர்வலம் போனேன். அப்போ தமிழக முதல்வரா இருந்த கலைஞர், இந்த விவகாரம் தொடர்பா போலீஸ் கொடுத்த அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிச்சார். எங்களின் போராட்டம் காரணமா, மறு விசாரணைக்கு உத்தரவாகி அந்தக் குறிப்பிட்ட காவல் நிலையத்தின் மொத்த போலீஸாரும் சஸ்பெண்ட் ஆனாங்க. ஆனா, இப்படி அரசியல்ல நல்ல பேர் வாங்கினாலும், ஒரு வெத்துக் காகிதம் கணக்காதான் என்னை மதிச்சாங்க வீட்டு ஆளுங்க.
 
'கால் காசுக்குப் பெறாத கம்யூனிஸ்ட் உன் அப்பன். நீங்களும் அப்படி ஆகிடாதீங்கடா’னு சொல்லிச் சொல்லித்தான் என் அஞ்சு பிள்ளைங்களையும் வளர்த்தாங்க என் மனைவி. அதனால பிள்ளைங்களும் என்னை மதிக்கலை. ஒரு கட்டத்தில் அந்த அவமானம் பொறுக்காம, வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். அதுவும் 30 வருஷம் ஆகிப்போச்சு!'' சின்ன இடைவெளி கொடுத்து தொடர்கிறார்.
 
''மூணு வருஷத்துக்கு முன்னாடி வரை நான் பாடிட்டுதான் இருந்தேன். கடைசியா ம.க.இ.க. மேடையில் பாடினேன். இப்போ இடுப்புல ஒரு ஆபரேஷன் பண்ணிட்டதால, நடக்க முடியாமப்போச்சு. பெத்த புள்ளைங்க என்னை மதிக்கலைனோ, உசுரைக் கொடுத்த வளர்த்தக் கட்சி என்னை மறந்துருச்சுன்னோ புகார் சொல்லலை. ஒரு கம்யூனிஸ்ட்டா திருப்தியா, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன். அந்த மனநிறைவு போதும் எனக்கு. எந்திரிச்சு நடக்கவே முடியாத என்னை செல்வித£ன் ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிறா. அவதான் என் மக!'' என்றபடி பாடத் தொடங்குகிறார் காதர்.
 
'உப்பக் கூடவா திருடுவாங்கனு
கடைக்கு வெளியே வெச்சது
அந்தக் காலம் ஓ அந்தக் காலம்...
இப்போ விக்கிற விலையில
வெளியில வெச்சா
வெச்ச இடம்தான் மிச்சம்
இந்தக் காலம் ஓ இந்தக் காலம்’
 
காதரின் பாடல் காற்றில் கலக்க, நிரம்பிக்கிடந்த காதரின் சிறுநீர் பையை சுத்தம் செய்ய எடுத்துப்போகிறார் செல்வி.

Thursday, October 17, 2013

யார் ஏழை?
நன்றி : ஆனந்த விகடன்
ரு குக்கிராமத்தின் மண் ரோட்டில் வயல்கள், எலுமிச் சைத் தோட்டங்களைத் தாண்டி இருக்கிறது ஒரு சிறு குடிசை. அதன் பின்புறத்தில் விவசாய வேலை பார்க்கும் ஒரு பெரிய வரைக் காட்டி, 'இவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதிஎன்றால் எப்படி உணர்வீர்கள்?
'உலகின் ஏழை ஜனாதிபதிஎன்று அழைக்கப்படும், உருகுவே நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகாதான் இப்படி வாழ்பவர். இவருக்குச் சொந்தமாக இருப்பது பழைய வோல்ஸ்வோகன் கார் மட்டும்தான். தவிர, தன் மாதச் சம்பளத்தின் 90 சதவிகிதப் பணத்தை ஏழைகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
தன் ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர், சிறு வயதில் வறுமையை விரட்ட சைக்கிளிங் கிளப்புகளில் சேர்ந்து, சைக்கிள் ஓட்டிப் பிழைப்பு நடத்தினார். 'உழைத்தால் மட்டுமே சோறுஎன்ற நிலைமையில் கொஞ்சம் கொஞ்ச மாகத் தேசிய அரசியலில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவம்தான் காரணம் என்று, வீதிகளில் முழங்கியவர், அதை எதிர்க்கும் 'டுபாமராஸ்கெரில்லாப் படையில் இணைந்து, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். ஒரு தாக்குதலில் ராணுவம் இவரைச் சுட்டுப் பிடி
த்து, 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை தந்தது. 1985-ல் ஜோஸ் விடுதலையானபோது நாடு மக்களாட்சிக்கு மாறியது. மக்களாட்சி சமூகம் புது ரத்தம் பாய்ச்ச... மீண்டும் தீவிர அரசியலில் இயங்க ஆரம்பித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வரை பல ஆண்டுகள் செனட் உறுப்பினராகவும், விவசாயத் துறை, மீன்வளத் துறை அமைச்சராக வும் இருந்தார்.

ஜோஸின் எளிமை மக்களுக்குப் பிடித்துப்போக, அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். அரசு அளித்த ஜனாதிபதி மாளிகையை உதறிவிட்டு, தன்னுடைய சிறிய குடிசையில் வாழ்கிறார். 'நான் ஒன்றும் ஏழை கிடையாது. அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாதுஎன அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.