Friday, December 19, 2014

பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.
 
 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
 
 
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில்ப்ரீ-கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்துகொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.
 
 
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். கற்றலில் போட்டி கிடையாது என்பதால்,  தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
 
 
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.
 
தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.  அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில்  இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.
 
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்துவருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிஷிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். 
 
இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!
 
மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று... என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
 
முன்னோடி முயற்சி!
சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்த டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உடைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்புக் கவனம் தரும் வகையிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவராக வள்ளலார் இருந்தபோது, தேசிய மனநல மற்றும் நரம்பியல் பல்கலைக்கழகத்துடன் (NIMHANS) இணைந்து செயல்படுத்திய இந்தத் திட்டத்தினால் ஏராளமான குழந்தைகள் இனம் காணப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறப்புப் பள்ளியும் திறக்கப்பட்டது. இங்கு தரப்பட்ட பயிற்சியின்மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்ட பல குழந்தைகள் வழக்கமான பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான இது, இப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
 
“தாய்மொழி கல்விதான் சிறந்தது!”
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்...
 
 
''பின்லாந்து ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருக்கிறது. இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல, எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும் என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல; கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும் மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க வேண்டும்''
 
''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்கு எவ்வாறு போதிக்கப்படுகிறது?''
''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்ற பகுதியில் அதிகபட்சமாக 30 சதவிகித மாணவர்கள் புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப் பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில் முனைப்புடன் இருக்கிறோம். தாய்மொழியைப் பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை உண்மையான கல்வியைப் பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில்
44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''
 
''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?''
''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுடனும் வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒரு நாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம் அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனை அல்ல. பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர் பெறும் சராசரி ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!''
 
''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள் எவை?''
''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில்தான் கற்பிக்கிறோம். நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல் குறைபாட்டுடன் இருக்கும் குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். அதைத் தாண்டினால் ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோல எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும் அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''
கீரை கொடுக்கும் பணம் 
 
யற்கை, மனிதகுலத்துக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் ஒன்று, கீரை. 'உணவே மருந்து’ என்ற தத்துவத்தின்படி உணவு மற்றும் மருந்தாகப் பயன்படும் கீரைகளுக்கு சமீப ஆண்டுகளாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாக, விவசாயிகளுக்கு அட்டகாசமான வருமானம் உறுதியாகிக் கொண்டிருக்கிறது. 50 சென்ட் இடத்தில் கீரை சாகுபடி செய்வதன் மூலமாக ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் பார்க்கும் சிவகங்கை மாவட்டம், மேலச்சாலுர் கிராமத்தைச் சேர்ந்த போஸ் மற்றும் நாராயணன் சகோதரர்களே இதற்கு சாட்சி!  
 
 
சிவகங்கை  மேலூர் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, சாலூர் பிரிவு. இங்கிருந்து பிரியும் கிராமத்துச் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது, மேலச்சாலூர். விவசாயத்தைப் பிரதானத் தொழிலாக கொண்ட அழகிய கிராமம்.
 
குறைந்த தண்ணீர்! குறைந்த நாட்கள்! அதிக வருமானம்!
 
நம்மிடம் முதலில் பேசியவர் மூத்தவர் போஸ். ''பூர்விகமாகவே நாங்க விவசாயக் குடும்பம். இந்த 50 சென்ட் இடம்தான் எங்க கடைசி சொத்து. இதுல விளையற வெள்ளாமையை வெச்சுதான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. எங்க மாவட்டமே வறண்ட பூமி. மழையை நம்பித்தான் பெரும்பாலும் வெள்ளாமை செய்றாங்க. எங்களுக்கு கிணத்துப் பாசனம் இருக்கு. ஆனா, அது அஞ்சு பேருக்கு சொந்தமான கிணறு. அதுலயும் தண்ணி கொஞ்சமாத்தான் இருக்கு. அஞ்சு நாளைக்கு ஒரு தடவை கிடைக்குற பங்கு தண்ணியை வெச்சு ஆரம்பத்துல கருணைக்கிழங்கு வெள்ளாமை செஞ்சோம். காலப்போக்குல மழை இல்லாம போனதால அதையும் செய்ய முடியல. அடுத்து கொறைஞ்ச தண்ணிய வெச்சு என்ன வெள்ளாமை செய்யலாம்னு யோசிச்சு, கீரை சாகுபடியில இறங்கினோம்.
 
 
எடுத்ததும் கொஞ்ச இடத்துல மட்டும் கீரை விதைச்சோம். எங்க நல்ல நேரம் அந்த தடவை நல்ல மகசூல் கிடைச்சதும் அதிலிருந்து முழுக்க கீரை விவசாயத்துல இறங்கிட்டோம். எங்க மண்ணு கரிசல் மண்ணும், செம்மண்ணும் கலந்த கலவை. அதனால சிவப்புப் பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி, பச்சைப் பொன்னாங்கண்ணி, பருப்புக்கீரை, புளிச்சக்கீரை, தண்டங்கீரை, பாலக்கீரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, மஞ்சள்கரிசலாங்கண்ணி, சிறுகீரைனு பலவகையான கீரைகளை இயற்கை முறையில சாகுபடி செய்றோம்'' என்று தாங்கள் கீரை விவசாயிகளாக மாறிய கதையைச் சொன்ன போஸைத் தொடர்ந்த இளையவர் நாராயணன், கீரை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
 
 
நான்கு நாட்களுக்கு ஒரு பாசனம்!
 
''50 சென்ட் நிலத்தில் பத்து டன் குப்பை உரத்தை (மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை கலந்தது) கொட்டி, 5 கலப்பை கொண்டு நிலத்தை உழுது, ஆறவிட வேண்டும். பிறகு, 4 கலப்பை மூலம் உழுது, நிலத்தை மட்டம் கட்டி, பரம்படிக்க வேண்டும். அதன் பிறகு, 10 அடிக்கு 10 அடி அளவில் சதுரப் பாத்திகளை அமைக்க வேண்டும். 50 சென்ட் நிலத்தில் சராசரியாக 200 பாத்திகளை அமைக்கலாம். அனைத்து பாத்திகளிலும் ஒரே ரக கீரையை விதைக்காமல், ஒரு பாத்திக்கு ஒரு ரகம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையைத் தூவினால் போதுமானது. தூவிய பிறகு, கைகளால் விதைகளை நன்றாகப் பரப்பி பாத்திகளில் தண்ணீர் நிற்பது போல பாசனம் செய்ய வேண்டும். ஐந்து நாட்களில் கீரை தழையத் தொடங்கும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாத்தி நன்றாக நனையுமாறு பாசனம் செய்தால் போதுமானது.
 
பூச்சித்தாக்குதலுக்குப் பிரண்டைக் கரைசல்!
 
 
15-ம் நாள் களை எடுத்து, செம்பூச்சித் தாக்குதல் நிகழாமல் தடுக்க, ஒரு பாத் திக்கு, வேப்பங்கொட்டை10 கிராம், பிரண்டைக்கொழுந்து 2 கிராம், கோழிக் கழிவு 2 கிராம், சோற்றுக்கற்றாழை 5 கிராம் ஆகியவற்றைக் கலந்து உரலில் இட்டு நன்கு இடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, மூழ்கும் வரை நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, அதிலிருந்து வரும் கஷாயத்தை வடிகட்டி, தெளிப்பான் மூலமாக கீரைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.
 
மாதம் 2 டன் !
அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, தண்டுக் கீரை போன்ற கீரைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை அறுத்து, களை எடுத்து பாசனம் செய்தால் தண்டுகளில் தழைத்து அடுத்த15 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். மல்லித்தழை, வெந்தயக்கீரை போன்ற சில கீரைகளை 30 நாட்களில் வேரோடு பிடுங்கி, நிலத்தை மண்வெட்டியால் கொத்திவிட்டு, மறுபடியும் விதை தூவி விட வேண்டும்.
50 சென்ட் நிலத்தில் அனைத்து கீரைகளையும் சேர்த்து சராசரியாக மாதம் இரண்டு டன் அளவுக்கு அறுவடை செய்யலாம்.'
 
மாதம் 30 ஆயிரம் லாபம்!
 
சாகுபடிப் பாடம் முடித்த நாராயணனைத் தொடர்ந்து, வருமானம் பற்றிச் சொன்னார், போஸ். ''மாசம் சராசரியா ரெண்டு டன் கீரை கிடைக்குது. விற்பனைக்கு எந்த வில்லங்கமும் இல்லை. 200 கிராம் எடையில முடிச்சு போடுறோம். பாத்திக்கு 50 முடிச்சுங்குற கணக்குல 200 பாத்திக்கு மாசம் 10 ஆயிரம் முடிச்சுகள் கிடைக்குது. பாலக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி கீரைகளை ஒரு முடி 10 ரூபாய்க்கும், சாதாரண கீரைகளை 5 ரூபாய்க்கும், மஞ்சள் கரிசலாங்கண்ணியை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம். வியாபாரிகளே நேரடியா வந்து வாங்கிட்டுப் போறாங்க. அதனால போக்குவரத்துச் செலவு இல்ல. சராசரியா ஒரு முடிச்சு 5 ரூபாய்னு விலை வெச்சுகிட்டாலும், 10 ஆயிரம் முடிச்சுக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல சாகுபடிச் செலவு 20 ஆயிரம் ரூபாய் போக 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை குப்பை அடிக்கறது, உழவு, பாத்தி பிடிக்கறதுனு30 ஆயிரம் ரூபாய் செலவாகும். எல்லாம் போக, வருஷத்துக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்' என்றார்.
 
நிறைவாகப் பேசிய சகோதரர்கள், 'மத்த பயிர்களை வெச்சுட்டு மாசக்கணக்குல காத்துக்கிட்டு இருக்கறதை விட, தினமும் வருமானம் கொடுக்குற கீரையை இயற்கை முறையில விவசாயம் செய்தால் நிச்சயம் நல்ல வருமானம் பாக்கலாம். விதைக்கறதுக்கு முன்ன ஏற்கெனவே கீரை சாகுபடியில அனுபவம் இருக்கற விவசாயிகளையும், வியாபாரிகளையும் கலந்துக்கிட்டு சாகுபடியில இறங்கினா நிச்சய வருமானம் கிடைக்கும். நம்மளோட ஈடுபாடும், உழைப்பும் இல்லைனா ஒரு ஏக்கர்ல விதைச்சாலும் இந்த வருமானம் கிடைக்காதுங்கிறதையும் விவசாயிகள் நினைவில வெச்சுக்கணும்'' என்று சொல்லி விடை கொடுத்தனர்.
 

Friday, November 28, 2014

தமிழின் திரை ஆசிரியரைக் கொலைசெய்து விட்டோம்
 
செழியன்
திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகும் ஆசையுடன் நான் ஒரு கோடைகாலத்தில் சென்னைக்கு வந்தேன். வந்த புதிதில் நண்பர் குமாருடன் திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டியிருந்த அவரது வீட்டில் தங்கியிருந்தேன். குமார், எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்கான தனியார் அலுவலகத்தில் பணியில் இருந்தபடி, நடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தார். நானும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்ததால், இரவு வெகுநேரம் வரை இருவரும் சினிமாக்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.
 
அப்படி ஒருநாள் இரவுப் பேச்சின் நடுவே, 'செழியன்... உங்கள என் அங்கிள்கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணிவைக்கிறேன்...’ என்று சொன்னார். அவர் சொன்ன அங்கிள் இயக்குநர் ருத்ரய்யா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த வாரத்தில் நான் அவசரமாக சிவகங்கைக்குக் கிளம்பவேண்டி இருந்தது. கிளம்பும்போது, 'எய்ட்ஸ் குறித்த விழிப்புஉணர்வுப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருகிறீர்களா?’ என்று குமார் கேட்டார். அது எனக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் திரைக்கதையை ஒரு வாரத்தில் எழுதி ஷாட்டெல்லாம் பிரித்து ஒரு ஷூட்டிங் ஸ்கிரிப்ட்போல அனுப்பிவைத்தேன்.
 
அதற்கு அடுத்த வாரம் சென்னை திரும்பியதும் 'செழியன்... நீங்க அனுப்புன ஸ்கிரிப்ட்டை மாமாகிட்ட குடுத்தேன். படிச்சுட்டு நல்லாயிருக்குனு சொன்னார். உங்களைப் பாக்கணும்னு சொன்னார்.’
'சாரைப் பாக்கணுமே...'
 
'பொறுங்க ரெண்டு நாள்ல தலைவரே நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார்.'
 
 
இரண்டு நாட்கள் கழித்து ஓர் இரவு. குமார், பைக்கில் அவரை வீட்டுக்கு அழைத்துவந்தார். வேட்டி கட்டி, கை மடித்துவிடப்பட்ட சட்டையுடன் அவர் வண்டியில் இருந்து இறங்குவதை பால்கனியில் இருந்து பார்த்தேன். திரைப்பட ஆசை வந்த பிறகு நான் பார்க்கப்போகிற முதல் திரைப்படப் பிரபலம். சிரித்துக்கொண்டே கைகொடுத்தார். கொஞ்ச நேரம் என்ன செய்வதெனத் தெரியாத மௌனம்.
 
' 'அவள் அப்படித்தான்’ ரொம்பப் பிரமாதமான படம் சார்.’
'தேங்க்ஸ்.’
படம் பற்றி மேலும் பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. அமைதியாக இருந்தேன்.
கடல் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது
'மாப்ள...’
குமார் இரண்டு பியர் பாட்டில்களை எடுத்து வைத்தார்.
 
'நீங்க குமாருக்கு எழுதி அனுப்பிச்ச கதையைப் படிச்சேன். ஒரு கதையா நீங்க எழுதுனது ஓ.கே. ஆனா அதை ஒரு நல்ல ஸ்கிரிப்ட்னு சொல்ல மாட்டேன். எதுக்கு அத்தனை க்ளோஸப். அத்தனை ட்ரக் இன்... ஜூம் இன். சினிமாங்கிறது காட்சி மொழி இல்லையா? வார்த்தை வார்த்தையா ஏன் கதை சொல்லணும்? காட்சி காட்சியாத்தான் சொல்லணும். போட்டோகிராபி உங்களுக்குத் தெரியுமா செழியன்?’
'போட்டோ எடுக்கத் தெரியும். அவ்வளவுதான் சார்.'
 
'முறையா போட்டோகிராபி கத்துக்கங்க... நாளைக்கு இன்ஸ்டிட்யூட் போவோம். நான் அப்ளிக்கேஷன் வாங்கித் தர்றேன். சினிமாட்டோகிராபி ஸீட் வாங்கிரலாம். புக்ஸ் எல்லாம் படிப்பீங்கனு குமார் சொன்னான். நிறையப் படிக்கணும்... படிங்க. சினிமா எங்கேயும் போயிறாது. இங்கதான் இருக்கும். லிட்ரேச்சர் படிச்சுட்டு சினிமாட்டோகிராபியும் கத்துட்டு வாங்க. அப்புறம் நீங்கதான் ராஜா... உங்களை யாரும் அசைக்க முடியாது.'
 
இரண்டு நாட்களில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் அழைத்துப்போய் ஒளிப்பதிவில் சேர்வதற்கான விண்ணப்பம் வாங்கிக் கொடுத்தார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்த சூழலில், திரும்பவும் படிப்பது சாத்தியமாகவில்லை. எனவே, என் திரைப்பட ஆசைகளை முறையான  தொழில்நுட்பத்துடன் சந்திப்பதுதான் சரி என்கிற தெளிவு  ருத்ரய்யாவின் சந்திப்புக்குப் பிறகுதான் எனக்குத் தோன்றியது. உதவி இயக்குநர் ஆசையை விட்டுவிட்டேன். அரைகுறையாகத் தெரிந்த போட்டோகிராபியை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொண்டு சென்னை வரலாம் என சிவகங்கை திரும்பினேன்.
 
திரும்பவும் ஐந்து வருடங்கள் கழித்துதான் சென்னை வந்தேன். ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமுடன் எனது முறையான திரைப்பட வாழ்க்கை தொடங்கிவிட்டது. அப்போது ஒருமுறை  சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமாருடன் அவரைப் பார்த்தேன்.
 
'என்ன செழியன்... பி.சி-கிட்ட இருக்கீங்களாமே. வெரிகுட். நாம மீட் பண்ணுவோம்... கூப்பிடுறேன்'’ என தோளைத் தொட்டார்.
திரைப்படத்தின் டிஸ்ஸால்வ்போல வருடங்கள், சூழல்கள், பருவங்கள், நொடிகளில் கடந்துசெல்கின்றன. ஒருநாள் கைபேசியில் அழைத்தார்.
'செழியன், நாம மீட் பண்ணணுமே...'
 
இரவு 7 மணிக்கு சென்னை லைட்ஹவுஸ் அருகில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. அவர் சொன்ன இடத்துக்கு நான் வந்தபோது, கடந்து செல்லும் வாகனங்களின் மஞ்சள் ஒளியில் வெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்த ருத்ரய்யா சாலையோரம் நின்று கைகாட்டினார்.
 
ஒன்பதாவது மாடியின் மேல்தளத்துக்கு வந்தோம். கடல் காற்றும் அந்த ஏகாந்தமும் அற்புதமாக இருந்தது. ஒரு நாற்காலி தனியே கிடந்தது. இன்னோர் இரும்பு நாற்காலியைத் தூக்கி வந்தார். 'சார் குடுங்க...’ என்று வாங்கி தனியே இருந்த நாற்காலியின் எதிரில் போட்டேன். 'இருங்க வந்துர்றேன்’ என்று சொல்லிவிட்டு இருளில் நடந்தார்.
 
நான் மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரம் நின்று, கடற்கரைச் சாலையைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான ஒளிப்புள்ளிகள் நகர்ந்துகொண்டிருந்தன. கலங்கரை விளக்கத்தின் ஒளி என்னைத் தொட்டு அந்தக் கட்டடத்தின் மேல்தளத்தைத் தடவிக் கடந்து சென்றது. முதல்முறையாக கலங்கரை விளக்கத்தின் ஒளி இவ்வளவு அருகில் கடந்துசெல்வதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். மாநகரத்தின் இருளை வாசிக்கும் ஒற்றைக்கண் போல, அந்த ஒளி வானத்தில் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது.
 
'இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு சார்...'
'பல நேரங்கள் இங்கதான் வந்து தனியா உக்காந்துருவேன்...' எனச் சொல்லும்போது ஒரு வேலைக்காரச் சிறுமி கையில் சில்வர் பாத்திரத்துடன் வந்தது. 'குடுப்பா' என வாங்கி அந்தச் சிறுமியை அனுப்பிவிட்டு தேநீரை ஊற்றினார்.
 
'சார் குடுங்க...' என்று சொல்கையில் 'இருக்கட்டும் செழியன்...' எனச் சொல்லி அவரே ஊற்றிக் கொடுத்தார். தேநீர் அருந்தும்போது தலை சாய்த்துக் கீழே பார்த்து கண்களை அடிக்கடி இமைத்துக்கொண்டிருந்தார். கதை சொல்லத் தயாராகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். கலங்கரை விளக்கத்தின் ஒளி, அவர் முகத்தின் ஒரு பாதியை மஞ்சளாக வெளிச்சமிட்டு நகர்ந்தது.
'ஒரு சப்ஜெக்ட் செழியன்...'
 
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கிற கதை. முதல் காட்சியை அவர் விவரிக்கிறபோது சில நொடிகளில் அது நிஜக் காட்சியாக மலரும் விதம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. களங்களும் நுட்பமான மனித உணர்வுகளும் மாறிச் செல்லும் கதை. கதையின் சில இடங்களைச் சொல்லும்போது அவர் கண்கள் பனிப்பதை, கடந்துசெல்லும் வெளிச்சத்தில் பார்த்தேன். 30 நிமிடங்களில் சொல்லி முடித்துவிட்டு, இன்னொரு ஐடியா என அதையும் அடுத்த 30 நிமிடங்களுக்குள் சொல்லி முடித்தார்.
'சப்ஜெக்ட் எப்படி இருக்கு செழியன்... ஓல்டா இல்லையே..?'
'இல்ல சார்.'
'இல்ல... இப்ப கரன்ட்ல இருக்கது மாதிரி இருக்கா? ஏன்னா நான் படம் பண்ணி 35 வருஷம் ஆச்சு.'
'கரன்ட் என்ன சார்... 'அவள் அப்படித்தான்’ இப்பவும் கரன்ட்ல இருக்கிறது மாதிரிதான் சார் இருக்கு. ரெண்டு கதைகளுமே ரொம்ப நல்லாயிருக்கு சார்.'
 
பிறகு பிரபலமான இளம் நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் இருந்தா நல்லா இருக்கும் என்றார். அவரை எப்படி அணுகுவது என்று பேசினோம்.
 
'திரும்பக் கேக்குறேன்னு நினைக்காதீங்க. இந்த சப்ஜெக்ட் ஓல்டா இல்லையே..?'
'நிச்சயமா இல்ல சார்.'
 
'நானும் 35 வருஷமாப் போராடுறேன் செழியன்.பிடிவாதமா இருந்துட்டேன். இனிமே பண்றதை சாதாரணமாப் பண்ண முடியாது. நிறையப் படிக்கிறேன்... எழுதுறேன். முதல்ல சொன்ன கதைக்கு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. முதல்ல சொன்னதுக்கு மூணு கோடி போதும். ரெண்டாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன்கிறதால 3D-யில் பண்ணணும். பெரிய பட்ஜெட். அதுதான் கமல்கிட்ட பேசியிருக்கேன். பாசிட்டிவாதான் இருக்கு.'
 
'சார், முதல் கதையை உடனே பண்ணலாம் சார்.'
'நல்ல புரொடியூசர் வேணும் செழியன். உங்களுக்கு யாராவது தெரியுமா?'
'இருக்காங்க சார்... பேசலாம். ஆனா, அவங்களுக்கு இந்தக் கதை புரியணுமே சார். காமெடி கதைதான் எல்லாரும் கேக்குறாங்க.'
'ப்ச்... அதுதாங்க இங்க பிரச்னை.'
'உங்க மேல அபிமானம் இருக்கிற நண்பர்கள் யாராவது வந்தாங்கன்னா, ரொம்பக் கம்மியான பட்ஜெட்ல டிஜிட்டல்ல பண்ணிடலாம் சார்.'
'இருக்காங்க... பேசிட்டுத்தான் இருக்கேன். இந்த வருஷம் நாம எப்படியும் பண்ணிடணுங்க.'
'பண்ணிடலாம் சார்.’
அமைதியாக இருந்தார்.
'சார்... பசங்கல்லாம் நல்லா இருக்காங்களா சார்..?'
'நல்லா இருக்காங்க. பையன் ஒர்க் பண்றான்.பொண்ணு கனடால படிக்குறா. நல்ல பசங்க செழியன்... அவங்கதான் என்னை இப்ப சப்போர்ட் பண்றாங்க. டைவர்ஸ் ஆனது உங்களுக்குத் தெரியும்ல... குமார் சொன்னானா?'
'ஆமா சார்.'
அமைதியாக இருந்தார். தலை சாய்த்து கதை சொல்வதற்கு முன் இருந்ததைப் போன்ற மனநிலை.
 
'இடையில நிறைய நடந்துருச்சு செழியன். என் மேல நிறையத் தவறுகள் இருக்கு. ஆனாக்கூட இருந்தவரைக்கும் என்னையை அப்படிப் பாத்துக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல ஒரு வேலைகூட நான் செஞ்சது இல்ல; இங்க இருக்க டம்ளரைக்கூட நான் இப்படி நகர்த்திவெச்சது இல்ல.'
அமைதியாக இருந்தார். வெளிச்சம் அவர் முகத்தைக் கடந்துசெல்லும்போது, அவர் கண்களின் ஓரங்கள் மினுங்குவதைப் பார்த்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டார். எழுந்து இரண்டு அடிகள் நடந்து நின்றார்; நானும் நின்றேன்.
 
வெளிச்சம் வெற்று நாற்காலிகளின் மேல் கடந்துசென்றது.
'11.30 ஆயிருச்சுங்க...'
'ஆமா சார்.'
 
கீழ்த்தளம் வந்து காரில் அவரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
'சார்... 'அவள் அப்படித்தான்’ படத்தை இப்ப இருக்க ரெண்டு பேரை வெச்சு ரீமேக் செய்யலாமா சார்..?' பிரபலமான இரண்டு இளம் நடிகர்களின்  பெயர்களையும் சொன்னேன்.
'ஏங்க அந்த ரெண்டு கதைகள் உங்களுக்குப் புடிக்கலையா..?'
'இல்ல சார்... நீங்க சொன்ன கதை ரொம்ப நல்லாயிருக்கு. 'கோடார்ட்’ படம் மாதிரி இருக்கு சார். ஆனா, இவங்க எல்லாருக்கும் காதல் கதைதானே சார் தேவைப்படுது... அதான்.'
அது குறித்து சில நிமிடங்கள் பேசினோம். 'இனிமே காதல் கதையெல்லாம் பண்ண முடியாதுங்க. லெஃப்ட்ல போங்க. இந்த ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்குல்ல... இதைப் பண்ணினாப் போதும் செழியன்.'
நள்ளிரவின் அமைதி. இருவரும் பேசவில்லை.
'இங்க இறங்கிறேன்...’
காரை நிறுத்தினேன்.
'நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க... நானும் பாக்குறேன். கிடைச்சா பாக்கலாம். இல்லைன்னா அதுக்காக என்னங்க செய்ய முடியும்? சோத்தைத் தின்னே சாக வேண்டியதுதான்.'
சில நொடிகள் அமைதியாக இருந்தவர், காரைத் திறந்து இறங்கினார். நான் கைகாட்ட, அவரும் கைகாட்டினார்.
 
கண்ணாடியின் வழியே பின்நகர்ந்து மறையும் முகம். பிறகெல்லாம் இருள். ஆட்களற்ற சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு உடல் நடுங்கிவிட்டது. திரைப்பட வாழ்க்கை குறித்த பயமும் கடுமையான அவநம்பிக்கையும் முதல்முறையாக மனதை அழுத்த, என் கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன.
 
நல்ல சினிமாவே யாரும் எடுப்பது இல்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதை நம் அருகில் இருந்து எடுத்த ஒருவரை, அடுத்த படம் எடுக்கவிடாமல் 35 வருடங்கள் காக்கவைக்கிறோம்.
 
'புதிய அலை’ சினிமா இயக்கம் தொடங்கியபோது பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல் ஜனரஞ்சகமான மர்மப் படங்களை எடுத்து, அதில் இருந்து வருகிற பணத்தை தனது சகாக்களான கோடார்ட், த்ரூபோவிடம் படம் தயாரிக்கக் கொடுத்திருக்கிறார். 'நான் இதுமாதிரிப் படங்கள் எடுத்துப் பணம் தருகிறேன். நீங்கள் எந்தச் சமரசமும் இல்லாமல் விரும்பிய மாதிரி படத்தை எடுங்கள்' என்று. நம்மில் ஒருவர்கூட அப்படி இல்லையே... ஏன்?
 
அதற்குப் பிறகு அவரிடம் பேசிய விஷயங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல குமாரும் நானும் சந்தித்தோம். மூன்று கோடிக்கான தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டே இருந்தோம். இந்த வாரம் ஒருநாள் இரவு கைபேசியில் குறுஞ்செய்தியை குமார்தான் அனுப்பியிருந்தார்.
uncle is no more..
 
தமிழில் முக்கியமான கலை ஆளுமைகள் யார் மறைந்தாலும், அது இயற்கையான மரணமாக எனக்குத் தெரியாது. அது ஒரு கொலையாகத்தான் தெரியும். வாழும் காலத்தில் எந்தக் கவனிப்பும் இருக்காது. அவர்களது பங்களிப்பு குறித்து குறைந்தபட்சக் கவனிப்புகள்கூட இருக்காது. மலினமான விஷயங்கள் தொடர்ந்து வெளிச்சம் பெறுவதையும் வெற்றி அடைவதையும் அவர்கள் பார்க்கவேண்டியிருக்கும். புறக்கணிப்பின் வலியும், லௌகீக வாழ்க்கையின் தோல்விகளும் மௌனமாகப் பின்தொடரும். தன் படைப்புக்காக அடைந்த பெருமையெல்லாம் போய், 'ஏன்டா இதைச் செய்தோம்... செய்திருக்கக் கூடாதோ?’ என்று வருந்தவைக்கும்.
 
அந்த வகையில் தமிழின் பெருமைக்குரிய இன்னோர் ஆசிரியரைக் கொலைசெய்து விட்டோம்!

Thursday, November 27, 2014

அணையே துணை!
 
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!’ எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
 
பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்’ என்று!
 
 
பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்’ என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!
 
'முல்லைப் பெரியாறு’ என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு’ என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை’ என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.
 
உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
 
 
பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.
 
அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்’ எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே’ எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்’ என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!’ - அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.
 
அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.
 
கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்’ தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள், தமிழர் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் 'தமிழர் பிரச்னை’யாகத் தள்ளி நிற்கும் சரித்திரத் துக்கு முல்லைப் பெரியாறும் விதிவிலக்கு அல்ல.
 
இடுக்கி அணையைக் கட்டி இடைஞ்சல்களை ஏற்படுத்தியது கேரளா. அதில் தண்ணீர் நிரம்பாதபோதெல்லாம், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என குழவிக் கல்லால் காந்தாரி இடித்துக்கொண்டதைப்போல இடித்துக் கொள்ளும் கேரளா. இடுக்கி நிறையாததற்குக் காரணம் தமிழன் அல்ல; இயற்கை. இன்னும் சொன்னால், இயற்கைகூட காரணம் அல்ல; கேரள அரசியல்வாதிகளின் ஏமாற்றும் பேராசை. 555 அடி உயரம் கொண்டது அந்த அணை. அதாவது முல்லைப் பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு பெரியது. 142 அடி நிரம்புவதற்கும், 555 அடி நிரம்பாமல்போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தொட்டியைப் பெரிதாகக் கட்டியவனின் நிலைமைதான் கேரளாவுக்கு.
 
இன்னொன்றையும் சொல்கிறார்கள்... '142 அடி... 152 அடி எனத் தமிழகம் பேராசைப் படுகிறது’ என்று. முல்லைப் பெரியாறு அணை என்பது, மதகுவைத்துத் திறந்துவிடப்படும் அணை அல்ல; தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணை. 104 அடி வரை தேங்கும் நீரை எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் '142’ எனத் தமிழகம் கோரிக்கை வைக்கிறது. அணையின் கொள்ளளவு 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருப்பது 142 அடி மட்டுமே.
 
கேரளா சொல்லும் அனைத்து காரணங்களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (27.2.2006) தவிடுபொடி ஆக்கிவிட்டது. 'கேரளாவின் அறிக்கைகள், கேரளா அரசின் தரப்பில் முட்டுக்கட்டைபோடும் அணுகுமுறையையே தெளிவுபடுத்துகிறது’ என மண்டையில் கொட்டினார்கள் மூன்று நீதிபதிகள். 'அணை கட்டியதால் வனவளம் பாதிக்கப்பட்டது’ என கேரளா கூறியதற்கு, 'காட்டுக்குள் இருக்கும் ஓர் அணையைப் பலப்படுத்தும் பணியை ஒரு வனவிரோத நடவடிக்கையாகக் கருத இடம் இல்லை. இயற்கையில் நீர் பரவியிருக்கும் இடத்தைத்தான் அனைத்து பறவைகளும் விலங்குகளும் நேசிக்கும்’ என்றனர் நீதிபதிகள். 'அணை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எந்த அறிக்கையும் இல்லை’ என்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கேரளா, கேவலமான முஸ்தீபுகளைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் பார்க்கிறது.
 
சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல் உபயோகித்துக் கட்டப்பட்ட அணையை, குடை வைத்து தட்டிப் பார்க்கிறார் ஓர் அமைச்சர்.  குத்திப் பார்க்கிறார் ஒரு எம்.எல்.ஏ. எப்படியாவது அதை அசைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் கேரளா அரசியல்வாதிகள் தூக்கம் இல்லாமல் கிடக்கும்போது... இயற்கை இம்முறை கைவிடவில்லை. 142 அடித் தண்ணீரைத் தாங்கி நிற்கிறது அணை.
 
 

Wednesday, November 26, 2014

முடிந்தால் பிடி 
 
'ஸ்ட்ரீட் ஆர்ட்’ என அழைக்கப்படும் தெரு ஓவியத்தில் இவர்தான் முன்னோடி. இவர் தீட்டும் ஓவியத்துக்காக அல்ல... ஓவியத்தின் புகைப்படத்துக்கே ரசிகர்களிடம் அவ்வளவு அடிதடி. 2010-ம் ஆண்டில் 'டைம்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் இவரும் ஒருவர். இவ்வளவு புகழ்பெற்ற ஒருவர் எவ்வளவு பிரபலமாக இருக்க வேண்டும்? ஆனால், 'யார் அவர்?’ எனத் தெரியாமலேயே சந்துசந்தாகத் தேடிக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய போலீஸ்.
 
 
1990-94 காலகட்டத்தில் லண்டன் புறநகர் பகுதிகளில் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள், காலை கண் விழித்துப் பார்த்தால், வீட்டுச் சுவரில் பென்சிலில் பயன்படும் கிராஃபைட் தூள் கொண்டு ஏதாவது ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பெரும்பாலும் அது அரசின் கொள்கைகளை விமர்சிக்கும்; நாட்டுநடப்பைக் கிண்டல் செய்யும். சுவரில் இருக்கும் ஜன்னல், சிராய்ப்புகள், செடி-கொடிகள் என இருப்பவற்றைவைத்தே கிரியேட்டிவிட்டி கில்லியாக இருக்கும் அந்த ஓவியம். மறுநாள் இன்னொரு சுவர், இன்னோர் ஓவியம். சில ஓவியங்கள் செம ஜாலியாக இருக்கும்; நுணுக்கமாக விழிப்புஉணர்வு பரப்பும்; பொளேரென அரசியல் பேசும். எப்படி இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவரில் வரைவது தப்புதானே? 'யார் அந்த ஆர்ட்டிஸ்ட்?’ எனத் தேட ஆரம்பித்தது உள்ளூர் போலீஸ். யாருக்கும் தெரியவில்லை. காரணம், ஓவியம் வரையப்படும் நேரம் நள்ளிரவு. இருக்கும் ஒரே தடயம் ஓவியத்துக்குக் கீழே இருக்கும் 'பாங்க்ஸி’ என்ற கையெழுத்து மட்டும்தான்.  
 
'நான் உலக வெப்பமயமாதலை நம்பவில்லை’ என ஒரு வாசகம். அதுவே பாதித் தண்ணீரில் மூழ்கியிருப்பதுபோல இருக்கும். இப்படி சிம்பிள் ஐடியாவில் பாங்க்ஸி விழிப்பு உணர்வு ஓவியங்கள் வரைய வரைய, 'யார் அவர்?’ என்ற ஆர்வம் ஒருபுறம், 'பின்றான்யா’ என்ற ரசனை மறுபுறம். முகம் தெரியாமலேயே அவரை ஆராதிக்கத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை ராணுவ வீரர்கள் திருடுவதுபோல, டெடிபியர் வைத்திருக்கும் பெண் குழந்தையை, ஒரு போலீஸ் அத்துமீறி சோதனை செய்வதுபோல... அதிகாரத்துக்கு எதிரான ஓவியங்களும் சுவர்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தன. போலீஸ் செம காண்டாகி அவரைத் தேட ஆரம்பித்தது. மக்களிடையிலும் எதிர்ப்பு ஒரு பக்கம், ஆதரவு மறுபக்கம் என பாங்க்ஸிக்குப் புகழ் எகிறியது. ஒவ்வொரு நாளும் விடிந்ததும் முதல் வேலையாக பாங்க்ஸியின் சுவர் ஓவியங்களைத் தேட ஆரம்பித்தார்கள் மக்கள். இரவு முழுக்க விழித்திருந்து போலீஸ் பாரா காவல் காக்க, மறுநாள் வேறு ஊர் சுவரில் இரண்டு போலீஸ்காரர்கள் முத்தமிட்டு க்கொள்வதுபோல வரைந்து அவர்களுக்கு பி.பி ஏற்றினார் பாங்க்ஸி.
 
வறுமை, மனிதநேயம், மனித உணர்வுகள் என அவர் வரைந்த ஒவ்வோர் ஓவியமும் புகைப்படங்களாக மக்களிடையே பரவ ஆரம்பித்தது. பாங்க்ஸியைப் பிடிக்க நகரைத்தையே போலீஸ் காவல் காக்க, அடுத்த நகரம், அடுத்த சுவர் என தாவிக்கொண்டே இருந்தார் அவர். 2000-ம் ஆண்டில் பாங்க்ஸி ஐரோப்பா முழுக்க பிரபலம் ஆக, அவரது படைப்புகளைக் கொண்டு ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் ஒரு பார்வையாளரைப்போல வந்துபோனார் பாங்க்ஸி. அவரைப் பிடிக்க போலீஸ் லண்டன் புறநகர் முழுக்க, சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்த, 'ஓர் உலகம்- கண்காணிப்பு கேமராவின் கீழ்!’ எனக் கொட்டை எழுத்தில் வரைந்து கிண்டலடித்தார். சிலசமயம் அவர் வரையும்போது போலீஸ் பார்த்துவிட, திடுதிடுவென ஓடி பக்கத்து சுவரில் ஏறிக் குதித்துத் தப்பிவிடுவார். ஒரு சுவரை வரையத் தேர்ந்தெடுக்கும்போதே அந்த இடத்தின் அமைப்பு, எங்கெல்லாம் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என முன்கூட்டியே பார்த்துவிட்டு வருவதால், போலீஸ் துரத்தும்போது, மிக எளிதாகத் தப்பிவிடுவது பாங்க்ஸிக்கு சுலபமாக இருந்திருக்கிறது.
 
 
அவரைத் தொடர்புகொள்ள மிக அதிகபட்ச வழி மெயில் ஐ.டி-தான். அதுவும் மாறிக்கொண்டே இருக்கும். அது அவரது வக்கீலுக்கு மட்டுமே தெரியும். அவருடைய பேட்டிகள் மெயில் மூலம்தான் கிடைக்கும். 2003-ல் ஒருமுறை முகத்தை மூடிக்கொண்டு செய்தித்தாள் ஒன்றுக்கு நேருக்குநேர் பேட்டி கொடுத்தார். அதற்கு அடுத்து அவரை யாரும் பார்க்கவே இல்லை. 'என்னை நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். அரசுக்கு எதிரான கண்டனக் கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நான் வந்துசெல்வேன். நான் யார் என யாரிடமும் கூறியது இல்லை’ என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் பாங்க்ஸி.
 
 
லண்டன் தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இவருக்கு ஆதரவு பெருக, மற்ற நாடுகளுக்கும், அதன் தலைநகரங்களுக்கும் பயணம் செய்ய ஆரம்பித்தார். வியன்னா, சான் பிரான்சிஸ்கோ, பார்சிலோனா, பாரீஸ், டெட்ராய் போன்ற நகரங்களுக்கு எப்போது வந்தார், எப்படி வெளியேறினார் எனத் தெரியாது. திடீரென ஒருநாள் அந்தந்த நகரின் ஆள் இல்லாத சந்து ஒன்றில் அரசைக் கிண்டலடித்து கறுப்பு ஓவியம் வரையப்பட்டிருக்கும். 'எங்க ஆளு வந்துட்டார்யா’ என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அவரது சமூக விழிப்பு உணர்வுப் பணிக்காக இதுவரை நான்கைந்து விருதுகள் அறிவித்துவிட்டார்கள். ஆனால் ஒருமுறைகூட அவர் அவற்றைப் பெற்றுக்கொண்டது இல்லை.
 
 
பாங்க்ஸி தனிப்பட்ட ஓர் நபரா அல்லது ஒரு குழுவா, அவ்வளவு உயரமான கட்டங்களின் மேல் எப்படி ஏறுகிறார் என்ற கேள்விகளுக்கு போலீஸிடமே இதுவரை பதில் இல்லை. அவரைத் தெரிந்தவர்களும் அவரைக் காட்டிக்கொடுப்பது இல்லை. 'அவர் ஒரு பெண்’, 'அது ஏழுபேர் கொண்ட குழு’, 'பாருங்கள், 2014-ம் ஆண்டு அக்டோபருக்கு அப்புறம் அவர் படம் வரையவே இல்லை... ஏன்னா 'பாங்க்ஸியைக் கைதுபண்ணிட்டாங்க’ என மக்கள் விதம்விதமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ மக்களோடு மக்களாக நின்றபடி அதையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டே இருக்கிறார் அவன் / அவள் / அல்லது அவர்கள்!

Friday, October 31, 2014

தூளி!
நன்றி : விகடன் 
 
குழந்தை நலத் துறையில் பதறவைக்கும் ஒரு சொற்றொடர், Sudden infant death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு  முக்கியமான காரணம் என்பதை, சமீபத்திய ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளது அமெரிக்கக் குழந்தைகள் நல அமைப்பு. உடனே அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அவசர அவசரமாக, குழந்தைகள் பாதுகாப்பாகத் தூங்குவதற்கான பழக்கத்தை (safe sleep practice) வெளியிட்டனர். அதன்படி, தூங்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும், முதுகு அழுந்தும்படியாக  குழந்தை தூங்க வேண்டும். வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப் படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில் புரண்டுவிடாது இருக்க, அணைக்கும்படியாக மிருதுவான பருத்தித் துணி படுக்கை அவசியம்... என அந்தப் பட்டியல் நீண்டது. ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம் பல தலைமுறைகளாக இன்னொரு பெயர் உண்டு... அது தொட்டில் அல்லது தூளி!
'கொவ்வை இதழ் மகளே - என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’ எனத்
தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்   தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000 வருடங்களாக நம்மிடம் உண்டு. ஆனால், தூளியில் குழந்தையைப் போட்டு, நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனத்தை நிலைநிறுத்திய சில மணித்துளிகளில், அந்தக் குழந்தை தன்னை மறந்து தன் நாவை ஆட்டிப் பார்த்து, பின் அப்படியே பாடலின் ஒலியில் சொக்கி உறங்கும். இந்த அற்புதப் பண்பாடு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்வருகிறது. வழக்கமாக அம்மாவின் பழைய பருத்திச் சேலைதான் தூளி செய்யும் துணி. அன்னையின் மணத்துடன், இருபக்கமும் பருத்திப் புடவையின் அணைப்பில் முதுகில் மட்டுமே படுக்க முடியுமான தொட்டிலின் துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில் கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள். காற்றில் ஆடும்போது சுருண்டுகொண்டு, உள்ளே காற்று இறுக்கம் வந்துவிடாமல், தொட்டிலை எப்போதும் விரித்திருக்க உதவும் அந்தக் கம்பு. அதை அங்கு வைத்த பாட்டிக்கு சத்தியமாக Sudden infant death syndrome  பற்றி தெரியாது. safe sleep practice குறித்து தேட அப்போது இணையம் என்ற ஒன்றே இல்லை. 
 

இன்றைய அறிவியலின் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான், தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில் தங்காமல் ஓடும் இந்தத் துணித்தூளியில், அதன் தொங்கி ஆடும் குணத்தால், பூரான் - பூச்சிகளும் ஏறாது. குழந்தைகளுக்கு உணவு புரையேறிவிடாமல் காக்கும் படுக்கை நுட்பமும் தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம் குலப்பெருமையும், குசும்பு எள்ளலும், உறவின் அருமையும் என எல்லாம் ஏற்றி தூளியில் தாலாட்டு பாடி அமைதியாக உறங்கவைத்தும், ஆர்ப்பரிக்க எழுந்து நிற்க வைக்கவும், களம் அமைத்தது தொட்டில்பழக்கம் மட்டும்தான். நகரங்களில் பழைய பேன்ட்டை ஆணியில் மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தொங்கவிட்டிருப்பதைப் பார்க்கும்போதும், '20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்; நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப் பேசுவதைக் கேட்கும்போதும், இன்னும் எத்தனை விஷயங்களை இப்படித் தொலைக்கப் போகிறோமோ என மனம் பதறுகிறது!
 
'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது. நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
 


இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது. மொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது!
 
உரை மருந்து கொடுத்தாலும், சேய்நெய் தந்தாலும், வசம்பு கருக்கிக் குழைத்துக் கொடுத்தாலும் 'அந்தச் சங்கை எடு... கொஞ்சம்’ என்ற சத்தம் கேட்கும். வட மாவட்டத்தில் 'பாலாடை’ என்றும் தெக்கத்தி மண்ணில் 'சங்கு’ என்றும் அழைக்கப்படும் அந்தக் கால குழந்தை மருந்தூட்டும் கலன், இப்போதைய பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாஸிலும் ட்ராப்பர் குழலிலும் தோற்றுப்போய், தொலைய ஆரம்பித்துவிட்டது.  வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன பாலாடையில், குழந்தைக்கு மருந்தூட்டும்போது தாயின் சுத்தமான ஆள்காட்டிவிரலால், மருந்தைக் குழைத்து வாயினுள் அனுப்பும் வசதி உண்டு. மடியில் குழந்தையைத் தலை உயர்த்திக் கிடத்தி, பாலாடையின் மழுங்கிய முனையை, இதழ் ஓரத்தில் வைத்து, மருந்தை அல்லது மருந்து கலந்த தாய்ப்பாலைப் புகட்டும் வித்தை, தாய்க்குக் கட்டாயம் தெரியவேண்டிய உயிர்வித்தை. முடிந்த மட்டும் பிஞ்சுக் குழந்தையின் வாய் நஞ்சு பிளாஸ்டிக்கைச் சுவைக்காமல் இருக்க, இந்த நல்ல பழக்கம் நிச்சயம் மீட்டு எடுக்கப்பட வேண்டும்.
ஏழு, எட்டாம் மாதத்தில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களும் தலையணை அணைப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, 11-ம் மாதத்தில்  நடை பழக ஆரம்பிக்கும்போது, அன்று நாம் வாங்கித் தந்த நடைவண்டி இப்போது இல்லை. கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால வண்டிக்கு இப்போதைய walker இணையாவதே இல்லை. குழந்தை மருத்துவ ஆய்வாளர்கள், 'குழந்தைகளுக்கு walker வாங்கித் தராதீர்கள்’ எனக் கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறும் முன்னர், எல்லா பக்கமும் தாங்கிக்கொள்ளும் walker வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், நம் ஊர் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து நடையைச் செம்மையாக்கும்.
 
இப்படி, நம் இனப் பழக்கங்கள் எல்லாம் பெருவாரியாக நம் நலத்துக்கு வித்திடும் நலப் பழக்கங்கள். இடையிடையே வரலாற்றில் அப்போதைய சமூக, மத, இனப் பிணக்குகளும், ஆளுமைப் புகுத்தல்களும் செருகி வந்திருந்தாலும், இன்னும் மிச்சம் இருக்கும் பழக்கங்களையாவது எடுத்தாளத் தவறிவிடக் கூடாது. கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படும்போது, எதைச் சாப்பிட வேண்டும் என மட்டும் சொல்லிச் சென்றுவிடாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான்.
 
'முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலி ருந்தக்கால்’ என நம்மோடு நம் வயதில் பெரியவர் உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழும் முன்னதாக நாம் எழக் கூடாது என நம் இனக் கூட்டம் கிட்டத்தட்ட 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆசாரக் கோவை நூலில் சொன்னதில் உணவு அறிவியல் கிடையாது; ஆனால் ஓங்கிய உணவுக் கலாசாரம் உண்டு. அதேபோல் தலை தித்திப்பு, கடை கைப்பு எனச் சாப்பிடச் சொன்ன முறையில் இனிப்பில் தொடங்குவது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டும் அல்ல; ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும் சேர்த்துத்தான். இப்படி மாண்பு நிறைந்த உணவுப் பழக்கத்தை, அளவு அறிந்து, பகுத்து உண்டு உண்ணச் சொன்ன செய்தி நம் மண்ணில் பந்தியில் மட்டும் பரிமாறப்படவில்லை; பண்பாட்டிலும் சேர்த்துத்தான். இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? எப்போது முழுமையாகக் கைக்கொள்ளப்போகிறோம்?
 

Friday, September 26, 2014




ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவுக்கு ஒரு இளவரசன் இருந்தானாம். ஒரு நாள் ராஜாவும் இளவரசனும் குதிரை மேலே ஏறிக் காட்டுக்குப் போனார்களாம். ஓர் இடத்தில் குதிரைகளுக்கு முன்பு இரு காலடித் தடங்கள் தெரிந்தனவாம். அந்தக் காலடித் தடங்கள் இரு பெண்களின் காலடித் தடங்கள் என்று யூகித்த ராஜா சொன்னானாம்: ‘பெரிய தடம் அழகான அம்மாவுடையதாக இருக்கலாம். சின்ன தடம் அழகான அவளுடைய மகளுடையதாக இருக்கலாம். நாம் இருவரும் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடிப்போம். பெரிய தடத்துக்குச் சொந்தக்காரியை நான் கட்டிக்கொள்கிறேன். சின்ன தடத்துக்குச் சொந்தக்காரியை நீ கட்டிக்கொள்.’ இளவரசனுக்கும் இது சரி எனப் பட்டது. இரண்டு பேருமாகச் சபதம் எடுத்துக்கொண்டு தேடினார்கள், காலடிக்குச் சொந்தக்காரிகளை. சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கவும் செய்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கை. பெரிய தடங்களுக்குச் சொந்தக்காரி மகளாக இருந்தாளாம். சின்னத் தடங்களுக்குச் சொந்தக்காரி தாயாக இருந்தாளாம். அதற்காக சொன்ன வார்த்தைகளை மாற்றிக்கொள்ள முடியுமா? முடிவெடுத்தபடி மகளை அப்பனும் தாயை மகனும் கட்டிக்கொண்டார்களாம். இதைச் சொல்லிவிட்டு மருதண்ணா கேட்பார்: “இப்போ ஒரு கேள்வி. இந்த இரண்டு தம்பதிக்கும் பிள்ளைகள் பிறந்தால், அந்தப் பிள்ளைகள் ஒருத்தரையொருத்தர் என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டுக்கொள்ளும்?”

Friday, August 29, 2014

சிக்கன் 65 சிக்கல் - 65
ம.பிரியதர்ஷினி
சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!
 
சமீபத்தில் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, 'கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு பெயர் போன நாமக்கல்லில் பிராய்லர் கோழி வளர்க்கும் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தன் பெயர், அடையாளங்களைத் தவிர்த்துப் பேசியவர், ''நாங்க பெரிய கோழி கம்பெனிகளுக்காக ஒப்பந்த முறையில கோழிகளை வளர்த்து தர்றோம். அவங்க குஞ்சு கோழியோட, மக்காச்சோளம், சோயா, கருவாடு, உப்பு, கடலைப் புண்ணாக்குனு கோழிகளுக்கான தீவனங்களோட இன்னும் சில மருந்துகள் கலந்து உலர்தீவனமா மூட்டையில கொண்டுவந்து இறக்குவாங்க. அதைப் பிரிச்சு கோழிகளுக்குக் கொடுப்போம். 35 - 42 நாள்ல வளர்த்து உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். 42 நாள் கோழி, தன்னோட வாழ்நாள்ல 3 கிலோ 600 கிராம் தீவனத்தை சாப்பிட்டிருக்கும். பிராய்லர் கோழியை கறிக்கோழினு சொல்வோம். இது கறிக்கு மட்டும்தான் உபயோகப்படும். முட்டைக்காக வளர்க்கப்படுற கோழியை லேயர்னு சொல்வோம்'' என்றவர்,
 
''தடுப்பூசி, குடிநீர்ல கலக்குற மருந்து இதையெல்லாம் கம்பெனிக்காரங்களே தந்துடுவாங்க. இதுபோக கோழிகளுக்கு கண்ல டிராப்ஸ் ஊத்துவோம். கோழிகளுக்கு தண்ணீர் எல்லாம் சொட்டு நீர் முறையிலதான் கொடுப்போம். அந்த தண்ணியில சில மருந்துகளையும் கலப்போம். ஆனா, இதுக்கெல்லாம் பேர் எதுவும் தெரியாதுங்க'' என்றார் வெள்ளந்தியாக!
 
பூப்பெய்தும் வயது... குறையும் ஆபத்து!
இப்படிப் பல ஊசிகளும், ஊட்ட மருந்துகளும் கொடுத்து வளர்க்கப்படும் இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது பற்றி, திருமானூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் காசி.பிச்சையிடம் பேசினோம்.
 
''ஒவ்வொரு உயிரினத்துக்குமான வளர்ச்சியை, இயற்கை தானாக அதன் உடம்பில் நிர்ணயித்திருக்கும். அப்படியிருக்க, ஒன்றரை மாதத்திலேயே ஒரு கோழி செயற்கையாக வளர்க்கப்படுகிறது என்றால், அதை சந்தேகப்பட வேண்டாமா? அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள், மருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், க்ரோத் ஹார்மோன் எனப்படுகிற வளர்ச்சிக்கான மருந்துகளே இந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படுகின்றன என்பது உண்மை. குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தக் கோழிகள் அடைய இதுவே காரணம். இத்தகைய கோழிகளில் சிக்கன்-65 எல்லாம் செய்து சாப்பிடுவது... நம் உடலுக்கு சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களையே கொண்டுவந்து சேர்க்கும்.
 
 
கிராமத்து நாட்டுக்கோழியை கவனித்தீர்களென்றால், அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ கணக்கில்தான் அதன் எடை இருக்கும். நம் வீட்டில், தெருவில் உள்ளதை உண்டு, ஓடியாடி, இயல்பாக வளரும் கோழி அது. அதனால் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் (இப்போது நாட்டுக்கோழியையும் கலப்பின மாற்றம் செய்து, பிராய்லர் போலவே வளர்ப்பவர்களும் பெருகியுள்ளனர் என்பது தனிக்கதை). அதேபோலதான் மனிதனின் வளர்ச்சியும் இயல்பானது, சீரானது. ஆனால், சமீப வருடங்களாக பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது 14-ல் இருந்து படிப்படியாகக் குறைந்து, இன்று 10, 9 என்று வந்து நிற்கிறது. மாதவிலக்குப் பிரச்னைகள், சீக்கிரமே ஏற்படும் மெனோபாஸ் நிலை என இவையெல்லாம் சங்கிலி விளைவுகளாகிவிடும்.
 
உயரம் ஊட்டத்தால் அல்ல!
ஆண் குழந்தைகளும் சட்டென ஏழடியில் வளர்ந்து நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் நின்று யோசித்தால், இப்படி வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்படுகிற இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால்தான் என்பது புரியும். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சியை, உணவால் ஏற்பட்ட பிரச்னை என்று உணராமல், ஏதோ ஊட்டச்சத்தால் ஏற்பட்ட போஷாக்கு என்று நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவு அறியாமை!'' என்று சொல்லி பதறவைத்த டாக்டர், இந்த வகை உணவுகளால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இன்னும் விரிவாகப் பேசினார்.
 
''வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட உணவுகள் விஷயத்தில், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தபோது, 'மாதவிலக்கில் பிரச்னை உள்ள பெண்கள் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள்’ என்று சொன்னேன். அத்தனை பெண்கள் என் அறைக்கு முன் வந்து நின்றதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்! இதற்கெல்லாம் காரணம், உணவுப் பழக்கம்தான். தவிர, அதிகப்படியான ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தாய்மார்களின்  பால் சுரக்கும் தன்மை மாறிப்போகிறது. இதனால் பால் சுரப்பு நின்றுபோகும் தாய்மார்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள். இன்னொருபுறம், இந்த உணவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சீக்கிரமே பூப்படைதல், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே மெனோபாஸ் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன'' என்று எச்சரித்தார் டாக்டர்.
 
சிக்கனை, கிச்சனிலிருந்து தள்ளுங்கள்!
அசைவப் பிரியர்கள் தங்கள் உணவு முறையில் செய்யவேண்டிய மாற்றங்களை அறிவுறுத்தினார், கோவையைச் சேர்ந்த 'செக்ஸாலஜிஸ்ட்' கோமதி சின்னசாமி. ''நாட்டுக்கோழி சாப்பிட கடினமாக, சமைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேசமயம், அதிக வலு தருவது நாட்டுக்கோழிதான். சென்னை போன்ற மாநகரங்களில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கூடவே பிராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், சாப்பிட மிருதுவாக இருப்பதுடன் சீக்கிரமே சமைக்க முடிகிறது என்பதாலும், பிராய்லர் கோழிகளைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான கொழுப்பால், அதை சாப்பிடும் பலருக்கும் ஒபிசிட்டி ஏற்படுவது நிஜம். இன்றைய குழந்தைகள், அரை கிலோ சிக்கன்-65 உணவை தனியாளாகவே சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கொழுப்பைக் கரைப்பதற்குத் தேவையான உடல் இயக்கம் தராமல் டி.வி முன் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் எப்படி அந்தக் கொழுப்பு கரையும்? இப்படி அதிகப்படியான கொழுப்பால்தான், பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இதுவே ஆண்களுக்கு, அவர்களின் ஆண் உறுப்பின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்தக் குழந்தைகள் வளரும்போது, இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது'' என்று அதிர்ச்சி கொடுத்தவர், சிக்கனை உடனே விடமுடியாது என்பவர்களுக்கான டிப்ஸ் (பார்க்க: பெட்டிச் செய்தி) கொடுத்ததோடு...
''மொத்தத்தில், சிக்கனை கொஞ்சம் தள்ளி வையுங்கள்... உங்கள் கிச்சனில் இருந்து!'' என்று முத்தாய்ப்பாய் சொன்னார்.

 
 
சிக்கனை விடமுடியாது எனநினைப்பவர்களுக்கு...
 வாரம் ஒரு முறை அரை கிலோ சிக்கனை குழம்பாக வைத்து, ஆளுக்கு இரண்டு பீஸ் சாப்பிடலாம்.
 உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு முதலியவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.
 வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடலாம். இவை, கொழுப்பை குறைவாக சேமித்து வைக்கும்.
 வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கறியில் ஹார்மோன் அபாயம் இல்லை. எனவே, மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.
 கடல் மீன்களைப் பொறுத்தவரை, ஒரே வகை மீனாக அல்லாமல் பல வகை மீன்களாக சாப்பிடலாம். மீனில் கொழுப்பு மிகக்குறைவு.
 
பின்குறிப்பு: குளத்து மீன் என்று சொல்லப்படுகிற நெய் மீனை (பார்க்க வழுவழுவென்று இருக்கும்) உயிரோடு நம் கண் முன்பாகவே வெட்டித் தருவார்கள். இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை, கோழியின் கழிவுகளை சாப்பிட்டு வளரும், இந்த மீனைச் சாப்பிட்டால், சரும அலர்ஜிகள் வர வாய்ப்பிருக்கிறது.
 
ஆன்டிபயாடிக் ஆபத்து!
கோழிகளுக்கு அதிகப்படியாக செலுத்தப்படும் டெட்ராசைக்ளின், அமினோக்ளைக்கோசைட், ஃப்ளோரோகைனோலோன் போன்ற ஆன்டிபயாடிக் எல்லாம் கோழிகள் உடம்பில் ஏற்படும் கிருமிகளை அறவே அழித்துவிடுகின்றன. இத்தகைய மருந்துகளை உட்கொண்ட கோழிகளை சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள செல்களை அழிப்பது, எதிர்பார்த்திராத சைட் எஃபெக்ட்ஸ் வர வைப்பது என நம் உடம்பின் இயல்பான மாற்றத்தை, வளர்ச்சியை அது சீர்குலைத்துவிடும்!

 
'
 
'அதிகப்படி ஏதுமில்லை!''
சிக்கன் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாளர்களின் பதில்..?
இதைப் பற்றி பேசும் 'வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ்' நிறுவனத்தின் தமிழக துணைப்பொதுமேலாளார் டாக்டர் செல்வகுமார், ''பொதுவா எல்லா கோழி பண்ணையிலயும் இந்த மாதிரி ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுறதில்லை. கோழிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளுக்கு குஞ்சுகளா கொடுத்திருவோம். அந்தந்த ஊர்ல உள்ள வெட்னரி டாக்டர் உதவியோட கோழிகளுக்கு ஊசி போடுவாங்க. கோழிகள் வளர்ந்ததும் அதை அப்படியே வித்துட முடியாது. நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் விற்பனை செய்ய முடியும். இப்படி செய்யுறப்ப கோழிக்கு எதாவது பிரச்னை இருந்தாகூட தெரிஞ்சுடும்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படுற டிரக்ஸ் என்ன அளவுல எப்படி கொடுக்கணும்ங்கிற மாதிரியான சார்ட் இருக்கு. அதை அரசாங்கம் எப்பவும் கவனிச்சுட்டே இருக்கும். அங்க உபயோகிக்கிற மருந்துகள் அளவைத்தான் இங்கேயும் நாங்க உபயோகிக்கிறோம். இந்தியாவுக்குனு எந்தவித அளவீடும் கிடையாது. ஆனாலும் தேவையில்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுறது கிடையாது. இந்திய பிராய்லர் கோழிகளை ஜப்பான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். அதிகப்படியான ஆன்டிபயாடிக் கொடுக்கிறதா இருந்தா, அவங்கள்லாம் தங்கள் நாட்டுக்குள்ள எப்படி அனுமதிப்பாங்க?'' என்று கேட்டார்

Friday, August 1, 2014

வைரமுத்துவின் வரிகளில் வருத்தமும் விருத்தமும் 
11 ஜூலை காலை... மதுரை செல்லும் விமானத்தில் ஆரம்பித்தது அது. இடுப்பில் சூல்கொண்ட ஒரு வலி, வலது கால் தொடையில் மையம்கொண்டு, கெண்டைக் காலில் கரை கடக்கிறது. சற்று நேரத் தில் என் கட்டுப்பாட்டில் இருந்து உடல் நழுவுவது தெரிகிறது. விமானத்தில் என்னோடு பயணித்த முன்னாள் மத்திய அமைச்சர் சகோதரர் ஜி.கே.வாசன், என்னோடு பேசிய சொற்கள் எல்லாம் செவியில் விழுகின்றன; ஆனால் மூளையில் சென்று முட்டவில்லை. விமானத்தை விட்டு இறங்கும்போது, என் வலது காலை ஊன்ற முடியவில்லை. ஏன் என்று தெரிய வில்லை. இதற்கு முன் இப்படி ஓர் அனுபவத்தை உடல் உணர்ந்தது இல்லை.
 
அத்தை பேத்தியின் திருமணத்தில் வலியோடு வாழ்த்திவிட்டு, மதுரை அப்போலோ விரை கிறோம். காந்த ஒத்ததிர்வுத் தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) எடுத்துப் பார்த்தால் அதிர்ச்சி. முதுகெலும் பில் இருந்து விலகி வந்த சவ்வுச் சதை ஒன்று, வலது கால் நரம்பை ஆழ்ந்து அழுத்துகிறது; ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது; நடக்கும் வலிமையை அது உடைக்கிறது. கலங்கிப் போன மருத்துவர்கள் நீங்கள் பயணம் செய்யக் கூடாது என்று அச்சுறுத்தி அறிவுறுத்தினார்கள். என் புன்னகையில் துயரம் கசிந்தது.
 
விடிந்தால், கோவையில் தமிழ்ப் பெரு விழா, என் மணி விழா. பன்னீராயிரம் இளைஞர்கள் என் தலைமையில் தமிழுக்காக நடை நடந்து வருகி றார்கள். நாளை தமிழ் நடக்கப்போகிறது, தலைமை தாங்கும் என்னால் நடக்க முடியாதாம். 'என்ன கொடுமை இது’ - காலைப் போலவே மரத்துப் போனது மனது.
 
அறிஞர் பெருமகன் அப்துல் கலாம் வருகிறார்; உலகத் தமிழர்கள் ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள்; கோவையில் என் உயிர்ச் சகோதரர்கள், மூன்று திங்களாக வேர்வை கொட்டி வேலை செய்திருக் கிறார்கள்; அறிஞர் கூட்டம் கொட்டி முழக்கவிருக் கிறது; ஒரு துண்டுத் தமிழ்நாடு ஒரு கூரையின் கீழ் அமரவிருக்கிறது. 'மருத்துவ நண்பர்களே, என்னை மூட்டை கட்டியேனும் கோவையில் சென்று கொட்டிவிடுங்கள்' என்றேன்.
 
மாத்திரை தந்தார்கள்; ஊசியிட்டார்கள். என் அன்பு உறவுகள் அபிநாத், ஈஸ்வர், சுரேஷ் மூவரும் என்னை முன் ஆசனத்தில் தூக்கி வைத்தார்கள்.
 
'வலியே வழிவிடு. விழா முடியும் வரை வலிக்காதே என் விலாவே’
 
பிரசவத்தில் தவிக்கிறவளுக்குத்தான் தெரியும் மருத்துவமனையின் தூரம். கொள்ளை வலியில் துடிக்கிறவனுக்குத்தான் தெரியும் கோவை வழியின் நீளம்.
 
கோவை நகரத்தில் சரிந்த வாழையாக நான் முறிந்து விழுந்தபோது, என் காலைக் கட்டிக் கொண்டு கதறினார் என் கூடப் பிறவாச் சகோதரர் கோவை ரமேஷ். முட்டும் கண்ணீரோடு எட்டி நின்றிருந்தார் என் இலக்கிய இணை மரபின் மைந்தன் முத்தையா. அங்கு குவிந்த அப்போலோ - கங்கா மருத்துவர் குழு என்னைச் சோதித்த பிறகு 'நாளை தமிழ் நடை உங்களுக்குச் சாத்தியம் இல்லை. அதை மீறியும் அக்கறை இருந்தால், சக்கர நாற்காலியில் செல்லலாம்' என்றது. என் வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது.
 
தமிழ் நடைக்குச் செல்லாவிடில், இந்தக் கால் இருந்தென்ன இழந்தென்ன என்று உள்ளுக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டேன். மகன்களும் மருமகள்களும் விடிய விடிய விழித்திருக்க, ஊசி மருந்தில் உறங்கினேன்.
 
ஐந்தே கால் மணிக்கு எழுந்தேன். ஒற்றைக் கால் ஊன்றி என் உடல் தயாரித்தேன். என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன். பன்னீராயிரம் இளைஞர்களைத் தமிழ் நடையில் கண்டதும் மொத்த வலியும் மறந்துவிட்டேன். உடம்பின் பாரத்தை இடது காலில் மட்டும் இட்டு, வலது காலைப் பட்டும் படாமல் வைத்துக்கொண்டேன். தமிழ் நடையில் நான் மட்டும் நடந்து வராமல், திறந்த வாகனத்தில் ஏன் வந்தேன் என்பதை என் துயரம் அறிந்த கண்கள் மட்டும் துப்பறிந்துகொண்டே வந்தன. பேரணி வெற்றி; பெரு வெற்றி.
பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக வேண்டும்; நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும்... என்ற பல்லவிகளை பன்னீராயிரம் பதினெட்டு வயதுக் குரல்கள் கூடிப் பாடியபோது குலுங்கியது கோவை.
 
மாலையில் கோவை பொன்னே கவுண்டன் புதூரில் ஆறாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், வைர வனம் உண்டாக்கினார்கள் என் உயிர் நண்பர்கள். அங்கே சென்றேன்; மரக்கன்றும் நட்டேன்.
 
மறுநாள் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அய்யா அப்துல் கலாம் தலைமையில், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனும், நீதியரசி விமலாவும் கலந்துகொண்ட கவிஞர்கள் திருநாளிலும், பிற்பகல் நடந்த மணி விழாவிலும் உலகத் தமிழர்களாலும், அறிஞர்களாலும், இயக்குநர் பெருமக்களாலும் என் தமிழ் கொண்டாடப்பட்டபோது உள்ளுக்குள் கவிஞர் அபி எழுதிய ஒரு கவிதையை நினைத்துக் கொண்டேன். 'பழத்தின் அழகைப் பாராட்டுவீர், உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாரறிவீர்.’
 
நிறைந்தது விழா. விரைந்தேன் சென்னைக்கு. ரஜினியின் 'லிங்கா’வுக்கு ஒரு பாட்டு; கே.வி.ஆனந் தின் 'அநேகன்’ படத்துக்கு ஒரு பாட்டு; விகடன் நிகழ்த்திய ஜெயகாந்தன் விழாவுக்கு என் பேச்சை ஒலிப்பதிவுசெய்த குறுந்தகடு; இந்த ஆண்டு இலக்கியத்துக்காக எனக்குத் 'தமிழன் விருது’ வழங்கிய புதிய தலைமுறைக்கு ஒரு நேர்காணல்... போன்ற அவசரக் கடமைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கோவை திரும்பினேன்.
 
கங்கா மருத்துவமனையில் என்னை ஒப்படைத் தேன். உலகப் புகழ்மிக்க முதுகெலும்பு நிபுணர் மருத்துவர் ராஜசேகர் உலகப் பயணம் கொள்ளாமல் இந்தியாவில் இருந்தது என் நற்பேறு.
 
ஜூலை 23 அதிகாலை 5:45-க்கு மயக்க மருந்து கொடுத்தது மட்டுமே எனக்குத் தெரியும். என் மகன்கள் என்னை எழுப்பியபோது, மாலை மணி 5. நான் கிடத்தப்பட்டிருந்தேன்; இன்னொரு கிரகத்தில் இருந்தேன்; என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்; மறந்துபோன இதயம் மீண்டும் மலர்ந்தேன்.
 
என் கைகளும் கால்களும் மருத்துவத் தளையுண்டு கிடந்தன. அசைய நினைக்கிறது மனம், அசைய மறுக்கிறது உடல். இந்த நிலைதான் அறுவைசிகிச்சையின் துன்ப நிலை. 'இந்த இரவில் இருந்து மட்டும் என்னை எப்படியாவது கடத்திவிடுங்கள் டாக்டர்' என்கிறேன். இரவின் அத்தனை இருளும் என் மீதே சொட்டுச் சொட்டாய்ச் சொட்டுவதாய், அத்தனை அடர்த்தி அந்த இரவு. ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது.
 
இப்போது நான் சந்தித்த முக்கியத் துன்பத்தை முன்மொழியப்போகிறேன். என் சிறுநீர்ப் பை நிறைந்து, நவம்பர் மாதத்துச் செம்பரம்பாக்கமாய்த் ததும்பி நிற்கிறது; வெளியேற வாசல் தேடி எல்லாத் திசைகளையும் எல்லாத் திசுக்களையும் முட்டுகிறது. ஆனால், வெளியேற்றும் திறம் என் உடலுக்கு இல்லை. 'என்னால் முடியவில்லை டாக்டர்' என்று முனகுகிறேன். படுத்த நிலையிலேயே கழியுங்கள் என்று பாத்திரம் பொருத்தப்படுகிறது. அப்படி ஒரு முயற்சியை என் வாழ்க்கையில் மேற்கொண்டது இல்லையே என்று வருந்துகிறேன். என் உயிர்த் துன்பம் அறிந்து என்னைத் தூக்கி உட்கார வைக்கிறார்கள்; முக்குகிறேன். சொட்டுகள் கசிகின்றன. ஆனால், வெள்ளம் வெளியேறவில்லை. முதுகுப் பக்கம் அறுக்கப்பட்ட சதை, என்னை முக்கவிடவில்லை.
 
என்னைத் தூக்கி நிறுத்துங்கள் என்று துடிக்கிறேன். தலைமை மருத்துவரின் அனுமதி பெற்று என்னைத் தூக்கி நிறுத்துகிறார்கள் மருத்துவப் பணியாளர்கள். வாழ்க்கையில் முதன்முதலாய் ஆண்கள் புடைசூழ சிறுநீர் கழிக்கச் சித்தமாகிறேன். என் வெட்கத்தைத் தின்றுவிட்டது வலி. மழை கழிந்த பின்னிரவில் அதிகாலையில் சொட்டும் இலைத் துளிகளைப் போல, சொட்டுச்சொட்டாய் வெளியேறுகிறது வலியின் திரவம். ஆனாலும் முற்றும் முடியவில்லை. உடலின் சூத்திரமும் படைப்பின் மர்மமும் இப்போது புரிகிறது. நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நடத்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்... என்ற உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டுமொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை; முழுமையும் அடைவது இல்லை.
 
ஒட்டுமொத்தத் தசைகளின் ஒத்திசைவுதான் உயிர்ப்பு. இது பிரபஞ்சத்துக்கும் பொருந்தும்; இந்தப் பிண்டத்துக்கும் பொருந்தும். ஒற்றை மழைத்துளி மண்ணில் விழுவதற்கும் ஐம்பூதங்களும் ஒரே நேரத்தில் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. என் பின் தசைகளின் ஒத்திசைவு இல்லாவிடில், மூளியாகிப்போகிறது முன்னுறுப்பு. எனவே உடல் நலம் என்பது ஒட்டுமொத்த உறுப்புகளின் கூட்டணி என்ற உண்மையை என் காதில் சொல்லி வெளியேறுகிறது வலி.
 
நோயை வரவேற்க வேண்டாம், வந்தால் எதிர்கொள்வோம். உடலை நோய் கொண்டாடுகிறது; நோயை நாம் கொண்டாடுவோம். நோய் கொண்டாடிவிட்டுப் போக, நம்மைவிட்டால் யார் இருக்கிறார்கள்? நோயை நம் ஆரோக்கியம் கற்றுக்கொடுக்கும் ஆசான் என்று அறிவதே சரி.
 
ஆசியாவின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவர், கோவை கங்கா மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகர். அவர்தான் சிலந்தி வலை பின்னுவது போல எனக்குச் சிறப்பு அறுவை சிகிச்சை செய்தவர். இவரைப் போன்ற அறிவாளர்கள் ஆராதிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மனிதவளம் என்பது இவர்களையும் சேர்த்துத்தான். டாக்டர் ராஜசேகருக்கு என் வருத்தம் தீர்ந்த பிறகு ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தேன். அது இது.
 
ஆள்நடை கண்டே என்னை
   அடையாளம் அறிந்த பேர்கள்
கால்நடை தளர்ந்த தென்றே
   கலங்கியே நின்ற வேளை
கோல்நடை காணும் முன்னம்
   கொற்றவன் போல என்னை
மேல் நடை காணவைத்த
   மேதையே ராஜ சேகர்
துரும்பொன்று நுழையும் வண்ணம்
   துளையொன்று செய்து; சின்ன
எறும்பொன்று புகுதல் போலே
   எந்திரம் செலுத்தி; ஒற்றை
நரம்பொன்றும் பழுது றாமல்
   நலமுறச் செய்த உம்மைக்
கரும்பொன்று தந்த சொல்லால்
   கவிகட்டி வாழ்த்து கின்றேன்.
 
இந்த உடலின் வழியேதான் உலக இன்பங்கள் உணரப்படுகின்றன. ஆனால், உடல் என்பது சந்தோஷங்களை மட்டும் உணரும் சதைக்கருவி அல்ல, துன்பங்களை உணர்வதும் அதுவேதான். இன்பங்கள்... பெற்றுக்கொள்ள. துன்பங்கள்... கற்றுக்கொள்ள.
 
கற்றுக்கொண்டேன்.
 
வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று.
 உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.
 உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.
 எவர் மீதும் பகை கொள்ளாதே.
 அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை.
 எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு.
 உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்