Friday, January 29, 2016

உணவும் உணவு சார்ந்த மொழியும் 


 
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
* கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !
* கையில் நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் !
* வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும் !

Thursday, January 28, 2016

புளிச்சகீரை
 
ந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன.

புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு.

பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு.
இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும்.

புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும்.

புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

Friday, January 22, 2016

இவர்தான்யா இயக்குநர்!
ங்களுக்கு மிகவும் பிடித்த வேலையை 20 ஆண்டுகளுக்கு செய்யக் கூடாது என அரசாங்கம் சொன்னால் என்ன செய்வீர்கள்? குடும்பத்தினரை மனதில் வைத்து வேறு வேலை செய்ய ஆயத்தமாவீர்கள். அங்குதான் தனித்து நின்றார் ஈரானிய இயக்குநரான ஜஃபர் பனாஹி.
‘தி வொயிட் பலூன்’ , ‘தி மிர்ரர்’ , ‘தி சர்க்கிள்’, ‘கிரிம்சன் கோல்ட்’, ‘ஆஃப்சைட்’ என இவர் எடுத்த படங்கள் எல்லாம் ஈரான் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவை. ஈரான் இந்தப் படங்களுக்குத் தடை விதித்து இருக்கிறது. இவரது படங்கள் மட்டும் அல்ல, ஈரானில் இருந்து வெளியா கும் எல்லாப் படைப்புகளுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

இதையெல்லாம் கடந்துதான் ஈரானிய படைப்புகள் வெளியுலகத்திற்கு வருகின்றன. பிப்ரவரி மாதம்  2010 வரை சில காரணங்களைச் சொல்லி பனாஹியை கைது செய்வதும், விடுவிப்பதும் என பூச்சாண்டி காட்டியது ஈரான் அரசு. அதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் படங்களை இயக்கி வந்தார் பனாஹி. மார்ச் மாதத்தில் அரசுக்கு எதிராகப் படம் இயக்குவதாக கூறி பனாஹியையும், அவரது குடும்பத்தாரையும் கைது செய்தது ஈரான் அரசு. மற்றவர்களை விடுவித்துவிட்டாலும், பனாஹிக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை, 20 ஆண்டுகள் திரைப்படங்கள் எடுக்கக் கூடாது, ஈரானை விட்டு செல்லக் கூடாது என்று தடை போட்டது.
 
தடைக்குப் பிறகும் பனாஹி படங்கள் இயக்குவதை நிறுத்தவில்லை. தன் வீட்டினுள் இருந்தபடியே ‘திஸ் இஸ் நாட் எ ஃபிலிம்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தார். ‘படம்தானே இயக்கக் கூடாது’ எனத் தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் திரைக்கதையைச் சொல்லி அதை அவரது வீட்டிலேயே வீடியோ எடுத்தார். இதை பென் ட்ரைவில் பதிவு செய்து ஒரு பிறந்த நாள் கேக்கிற்குள் ஒளித்து வைத்து கேன்ஸ் திருவிழாவிற்கு அனுப்பினார்கள்.

2013-ம் ஆண்டு கம்போசியா பர்டோவி என்ற இன்னொரு இயக்குநருடன் இணைந்து, ‘குளோஸ்டு கர்டைன்’ என்ற அடுத்த படத்தை இயக்கினார் பனாஹி. பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த கதைக்கான விருது வென்றார். ‘எங்கள் அனுமதி இல்லாமல், இப்படி சிலர் அனுப்பும் படங்களை ஒளிபரப்புவது கண்டனத்திற்குரியது’ என எச்சரித்தது ஈரான் அரசு. பர்டோவியின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தது.
 
இப்படிப்பட்ட நிலையில் தன் அடுத்த படமான ‘டாக்ஸி’யைக் கடந்த ஆண்டு வெளியிட்டார் பனாஹி. படத்தில் ஒரு டாக்ஸி ஓட்டுநராக வருவார் பனாஹி. சிலர் பனாஹியை அடையாளம் கண்டுகொள்ள, சிலர் அவரை ஓட்டுநர் என நினைத்துப் பேசிக்கொண்டே வருவார்கள். அரசைப் பல காட்சிகளில் எள்ளி நகையாடி இருப்பார்கள் டாக்ஸியில் பயணிப்பவர்கள். படம் முழுவதும் காருக்குள்ளேயே படமாக்கப்பட்டது. ‘சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில்தான் தூக்குத் தண்டனை அதிகம். அதனால் இங்கு குற்றங்கள் குறைந்துவிட்டனவா?’ போன்ற வசனங்கள் எடுத்துக்காட்டு. இறுதியாய் அங்கு படம் பதிவு செய்துகொண்டு இருந்த கேமராவை சிலர் திருடிவிட்டதாய்ப் படம் முடியும். இது ஏதோ ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட படம் அல்ல. நிஜ மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

ஐரோப்பிய பாராளுமன்றம் மனிதநேயத்திற்காகவும், விடுதலை சிந்தனைகளுக்காவும் சக்கரோவ்  என்ற விருதினை வழங்கிவருகிறது. 2012ல் ஈரானின் பெண் வழக்கறிஞர் நஸ்ரின் சொடோடெவிற்கும், பனாஹிக்கும்  இந்த விருதை வழங்குவதாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் இருவருமே விருது வாங்க இயலாத நிலையில் இருந்தார்கள். தேசியப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி நஸ்ரினை 20 ஆண்டு காலம் வழக்காடாமல் இருக்கவும், ஈரானை விட்டுச் செல்ல முடியாமலும் தடை விதித்தது ஈரான் அரசு. 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நஸ்ரினும் ‘டாக்ஸி’ படத்தில் வக்கீலாகவே நடித்து இருக்கிறார்.
பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கக் கரடி விருது வென்றது ‘டாக்ஸி’. பனாஹிக்கு தடை விதித்து இருப்பதால், படத்தில் அவரோடு நடித்த அவரது சகோதரர் மகள் ஹனா சைதி பரிசை பெற்றுக்கொண்டார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், மார்ட்டின் ஸ்கர்கோஸி போன்ற பலர் பனாஹியின் விடுதலைக்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

‘டாக்ஸி’யின் இறுதி வசனம் என்ன தெரியுமா ?

‘நாங்கள் திரும்பி வருவோம்’

Thursday, January 14, 2016

தமிழன் 2.0
அப்டேட்டிங்...அதிஷா, ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா

பீட்சா சாப்பிடுவான், பீர் குடிப்பான், பிள்ளைகளை சைட் அடிப்பான், மக்களுக்கு ஆபத்து என்றால் அரைபாடி லாரி பிடித்து அப்போதே கிளம்புவான்... இவன்தான் `ட்யூட்' தமிழன். ஹமாம் சோப், ஸ்ப்ளெண்டர் பைக், முட்டை பரோட்டா, நோக்கியா போன் என தனக்குன்னு ஒரு தனி ரூட்டு, தனி டேஸ்ட் வெச்சிருப்பான். தமிழனின் இந்த நிறம், குணம், மனம் எல்லாம் எப்படி மாறியிருக்கின்றன?

உணவு

பொழுதன்னிக்கும் திங்கிறது அரிசிச் சோறா இருந்தாலும், பரோட்டாதான் இவனுக்குக் கனவு, உணவு எல்லாமே! தாய்மாமன் தந்த காசுல திருவிழாக் கடையில பரோட்டா சாப்பிட்டு, வருஷம் பூரா அந்த ருசியை அசைபோட்டவன், கொஞ்ச வருஷமா ஃப்ரைடு ரைஸ் பக்கம் சைடு ஸ்டாண்டு போட்டிருக்கான். உலகத்துக்கே டூப்ளிகேட் போடுறவன் சைனாக்காரன். அவனையே அசரவெச்சு, `சைனீஸ் ஃபிரைடு ரைஸ்', `சைனீஸ் நூடுல்ஸ்' போடுறான் பாரம்பர்ய பச்சைத் தமிழன். அதையும் தாண்டி இப்போ முக்குக்கு முக்கு பிக்கப்பாகி வருது பிரியாணி கடை. திண்டுக்கல், ஆம்பூர், ஹைதராபாத், வாணியம்பாடி என ஊரு பேர்ல சோறு போட்டு, சோற்றுக்குள்ள பீஸை வெச்சு, அந்த மசாலா வாசத்துலயே மயங்கிக்கிடக்கிற தமிழனின் பிரியாணி தாகம் தாறுமாறா எகிறுது. `இயற்கை உணவு சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது ப்ரோ'னு பத்து பேர் சொல்றதைக் கேட்டுட்டு, பதினோரு கடை ஏறி இறங்கி விலை விசாரிப்பான். `கேப்பை 200 ரூபாய், குதிரைவாலி 300 ரூபாய்'னு அங்க சொல்ற விலையைக் கேட்டு, `ஒரு சிக்கன் பிரியாணி பார்சேல்...'னு க்யூவில் வந்து நிற்பான்.
உடை

அஞ்சு ஜீன்ஸ் பேன்ட்டும், பத்து ரவுண்டு நெக் டி-ஷர்ட்டும்தான் ப்ரோ தமிழனின் வார்ட்ரோப். உள்ளாடை தெரிய பேன்ட் போட்ட பயல், இப்போ வெல்குரோ வேட்டியில் பண்பாடு காக்கிறான். ஆனால், இந்த `ஒட்டிக்கோ கட்டிக்கோ' வேட்டிக்கு அலுவலகங்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் என்ட்ரி பாஸ். பொங்கல் சடங்கு முடிந்ததும், `வேட்டிக்கு வேலிடிட்டி முடிஞ்சிருச்சு... மடிச்சுக்கோ வெச்சுக்கோ' என பாரம்பர்யத்தில் பஞ்சர் போடுகின்றனர். `கோயிலுக்கு ஜீன்ஸ் போட்டு வராதீங்க.

லெகிங்ஸ் போட்டா உள்ளே விடாதீங்க' எனச் சொன்னால், `அப்போ அர்ச்சகர், மேல்சட்டை போடலியே, அது பரவாயில்லையா?' என ட்விட்டடித்துத் திணற வைக்கிறார்கள். `செல்ஃபி வித் வேட்டி' என விதவிதமாக ஒளிப்படம் எடுத்த இவன்தான், `அது லெகிங்ஸோ, லுங்கியோ... என் உடை என் உரிமை' என உறுதியாக நிற்கிறான்.
பொழுதுபோக்கு

தமிழனின் தன்னிகரற்ற ஒரே பொழுதுபோக்கு, டாஸ்மாக். பண்டிகையா, சாவா, திருமணமா, சுற்றுலாவா... நாலு பேர் கூடினால் போதையில் பொங்கல் வைப்பதே இவனது ஒரே பொழுதுபோக்கு. தியேட்டருக்குப் போனாலும் போதையே கதியாகக் கிடக்கிறான். போதை இல்லாத காலங்களில் வாட்ஸ்அப் குரூப்களில் நாட்டுக்கு நல்ல செய்தி சொல்கிறான். ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் உக்கிரமாக வெடிக்கிறான்.

மெகா சீரியல்களின் கலரோ வேறுமாதிரி மாறிவிட்டது. இளம்பெண்களுக்கு, சப்பை மூக்கு அழகன்களின் கொரியன் சீரியல். இளம் பையன்களுக்கு, இங்கிலீஷ் சீரியல்கள். குழந்தைகளுக்கு மோட்டுபொட்லு என கார்ட்டூன் சீரியல்கள். போக்குவதற்கு மேற்கொண்டும் பொழுது இருந்தால், போனில் கேண்டிக்ரஷ் ஆடுவான். ஆக்ஸிஜனுக்குப் பதிலாக சினிமாவை உள் இழுப்பான். படம் பார்க்கும்போதே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றுவான். உலக சினிமா பார்த்து உள்ளூர் இயக்குநர்களை அம்பலப்படுத்துவான். `நல்ல சினிமாவை நாமதான் ஓடவைக்கிறோம்' என மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டே ஆன்லைனில் படம் பார்த்து அல்வா கொடுப்பான்.

பெயர்கள்

குஸ்கிதா, நஷ்டிகா, ஜிஷ்டுகா என `இஸ்க்கு புஷ்க்கு’ இல்லாமல் தமிழனால் பெயர்வைக்க முடியாது. காளகேயர்கள் மொழிகூட புரியும், ஆனால் தமிழ்க் குழந்தைகளின் பெயர்களைப் புரிந்துகொள்ள தனி அகராதி தேவை. பிள்ளை பிறந்ததும் அதற்கு `ல, லா, லு, லூ-வில் வருகிற மாதிரி பேர் வெச்சிருங்கோ' என ஜோசியர் ஏதாவது எழுத்தைச் சொல்லிவிட, `ல லா லூவும் வரணும், ஸ், ஷ், ஜ்-ம் வரணும்’ என்றால் பாவம் அவன்தான் என்ன செய்வான்? கடைசியில் `லூஜ்மா’, `லிஜ்பிகா’ என விநோதமாகப் பெயர் வைத்துவிட்டு, `பேர் யுனிக்கா இருக்குல்ல... உலகத்துலயே வேற யாருக்கும் இந்தப் பேர் இருக்காது' என கெத்துகாட்டி முட்டுக்கொடுப்பான். பேரன், பேத்திகளின் பெயர்களை மனப்பாடம் செய்வதற்குள் தாத்தா  பாட்டிகளுக்கு நாக்குத் தள்ளிப்போவது, ட்ராஜடி ஆஃப் தி செஞ்சுரி.
உறவுகள்

`ஐயம் இன் ரிலேஷன்ஷிப்'னு ஸ்டேட்டஸ் போடுவான். ஆனா, எந்த ரிலேஷன்ஷிப்பும் யாருனு தெரியாது. அப்பாவைத் தவிர எல்லாருமே அங்கிள்; அம்மாவைத் தவிர எல்லாருமே ஆன்ட்டி. அம்மாவின் அக்கா கணவர் தூரத்துச் சொந்தம், தாத்தாவின் தம்பி பையன் ரொம்பத் தூரத்துச் சொந்தம்... அவ்வளவுதான் உறவு. `கொழுந்தியானா என்ன உறவுமுறை?'னு ட்யூட் தமிழன்கிட்ட கேட்டா, மூஞ்சில பூரான் வுட்ருவான். குடும்பமா உட்கார்ந்து பேச இவனுக்கு நேரமே இல்லை. அதுக்கு ஊரே வெள்ளத்துல மிதக்கணும்; கரன்ட் போகணும்; டி.வி ஆஃப் ஆகணும்.

லைக் போடாததால் கோபப்படும் பாசக்காரத் தங்கைகள், அப்பாவையே பிளாக் பண்ணும் கோபக்கார தனயன்கள் என சமூக வலைதளங்கள் வேறு தமிழன் வாழ்வில் கபடி ஆடத் தவறுவதே இல்லை.

வேலைவாய்ப்பு

நாலு ஏக்கர் நிலத்தை வித்து கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சா, மாசம் எட்டாயிரம் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்கலை. யாருமே வேலை குடுக்காம எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்டா, பாவம் தமிழன் என்ன பண்ணுவான்?

`பேப்பர் போட்டுட்டேன் ப்ரோ'ங்குறான் ஐ.டி தமிழன். உண்மை என்னன்னா... ஐ.டி வேலை கொத்துக்கொத்தாக் காலியாகுது. `வீட்டு டியூ என்ன பண்றது, கார் இ.எம்.ஐ எப்படி அடைக்கிறது?’னு முழி பிதுங்கி நிக்கிறான்.

வயக்காட்டை வித்து, படிச்சு, வேலைக்குப் போன காலம் போக, இப்போ ஐ.டி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்ய கிராமத்துக்குக் கிளம்புறான் நவீன தமிழன். இன்னொரு பக்கம் கிராமத்தில் களையெடுத்து நாற்று நட்டுக்கொண்டிருந்த விவசாயக் கூலிகள் எல்லாம் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிஸியாகிவிட, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் நாக்ரி டாட்காமில் விளம்பரம் கொடுக்கவேண்டிய கட்டாயம். நகரங்களில் செக்யூரிட்டி வேலைபார்க்கிற பாதிப் பேர், விவசாயத்தைக் கைவிட்ட முன்னாள் விவசாயிகள்தான்.
பயணம்

`ஏப்ரல்ல குடும்பத்தோட கோவா போகணும் பாஸ்' என்பான். `எந்த ஏப்ரல்?’ என நாமும் கேட்பது இல்லை; அவனும் சொல்வது இல்லை. வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வருவதுதான் தமிழனின் ஒரே பயணம். குடும்பத்தோடு கூடிக் குழுமி மகிழ்ந்திருந்த காட்சி எல்லாம் 30 வயதிலேயே ஃப்ளாஷ்பேக் ஆகிவிட்டது.

`லீவ் இல்ல பாஸ், சேலரி கட் ஆகிடும், வேலையை யார் பார்க்கறது, குழந்தைங்களை என்ன பண்றது..?’ என பயணம் போகாமல் இருக்க ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கிற இவன், பயணத்துக்கு ஒரு காரணத்தைக்கூட கண்டறிய மாட்டான். வீட்டில் டார்ச்சர் அதிகரித்தால், புளிசாதம், சப்பாத்தியோடு செம்மொழிப் பூங்காவுக்கு ஷேர் ஆட்டோவில் போய் வருவான். வீடு திரும்பி `எவ்ளோ செலவாச்சு?' என கணக்குப்போட்டுக் கவலைப்படுவான். ஆனால், `ஒரு பத்து நாள் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது நிம்மதியா போய்ட்டு வரணும்ங்க' என கடைசிவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பான்.

காதல்

ஜெனிஃபர் டீச்சரைக் காதலித்தவன், இப்போது மலர் டீச்சரின் மீது பிரேமம்கொண்டு அலைகிறான். ஃபேஸ்புக் சாட்டில் ரூட் பிடித்து, வாட்ஸ்அப் சாட்டில் `டபுள் டிக்'கடித்து பவர் பேங்க் உடன் கடலை வறுக்கிறான். தமிழ் தின்று, ஆங்கிலம் கொன்று இவன் டைப் செய்யும் தமிங்கிலீஷ், எப்படித்தான் அந்தப் புள்ளைக்குப் புரியுமோ? ரெண்டு வார்த்தை டைப் செய்ய சோம்பேறித்தனம்.
எமோடிகான்ஸைவெச்சே காலம் தள்றான். `ஆர் யூ ஓ.கே பேபி?' என ஃபீலிங்கில் பிராண்டி, இரண்டாவது விண்டோவில் `ட்ரூலி மேட்லி'யில் வலை வீசுகிறான். டேட்டிங் அழைப்பில்தான் சாட்டிங்கையே தொடங்குவான். ஆனாலும் `வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடி' என வாள் சுழற்றுவான். காதல் தோல்விகளை லாங் ஜம்ப் தாண்டுவான். டாஸ்மாக்கில் `இந்தப் பொண்ணுங்க ரொம்ப மோசம்' என சூப் சாங் பாடுவான். `ரீசார்ஜ்லாம் வேண்டாம். எனக்கு ஐந்நூறு எம்.பி டேட்டா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிட்ரு' என்பது சமீபத்திய காதல் சங்கீதம். காதலிக்கும்போது ஜாலியாக எடுத்துக்கொண்ட ஜாயின்ட் செல்ஃபிக்களை, பிரேக்அப்புக்குப் பிறகு பரப்பிவிடுவது புதுவகை காதல் பழிவாங்கல்
பொங்கல் வாழ்த்து அட்டைகள்

இப்போதெல்லாம் பண்டிகைகளின் பெயருக்கு முன்னால் ஒரு `ஹேப்பி’ போட்டு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்அப்பிலோ ஷேர் செய்துவிட்டு, கடனே என்று நாளைக் கழிக்கிறோம். அடுத்த நாள் அலுவலக வேலையை நினைத்துக்கொண்டு மந்தமான சாயங்காலத்தைக் கடக்கிறோம். இந்த வார மினிமலிச ஓவியத்தில் உள்ளதுபோல ரிமோட்டின் சேனல்களுக்கு இடையே பொங்கலைக் கடந்துபோகிறோம். பண்டிகைகள் ஓர் ஓய்வு நாளாகச் சுருங்கிப்போய்விட்டன.
அன்றெல்லாம் பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பே கடைகளில் வாழ்த்து அட்டைகள் வந்துவிடும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் படம் முதல், பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி போன்ற சாமி படங்கள் வரை தேவைக்குத் தேர்ந்தெடுக்கலாம். மாதவன் போன்ற ஓவியர்களின் கைவண்ணத்தில் கிராமத்துப் பெண்கள் கதிர் கொய்வதோ, உழவன் ஏர் ஓட்டுவதோ அல்லது குடும்பத்துடன் பொங்கல் வைப்பதோ போன்ற வண்ணமயமான படங்கள் மை வாசனையுடன் கிடைக்கும்.

ஐந்து பைசா முதற்கொண்டு ஐம்பது பைசா வரை வர்க்கவேறுபாடுகளில் கிடைக்கும் அந்த அட்டைகளை வாங்கி, எங்கோ ஊரில் இருக்கும் உறவுகளுக்கு கவிதை மாதிரி எதையாவது எழுதிவிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி சிவப்பு வண்ண போஸ்ட் பாக்ஸ்களைத் தேடி சமர்ப்பிப்போம். அது ஒரு `கார்டு காலம்’!

உலகின் ர்மம்
ர்மமான சூழலில் இருக்கும் மற்றும் மர்மமான முறையில் இயங்கும் இடங்கள் உலகில் ஏராளம். அதில் குறிப்பிட வேண்டிய சில முக்கியமான இடங்கள்!
அயர்ன் மவுன்டைன்: எதிர்காலத் தேவைக்காக விதைகளைச் சேகரித்து வைக்கும் ‘விதை வங்கி’ மாதிரி, தகவல்களைப் பாதுகாத்து வைக்கும் இடம். அமெரிக்காவின் போஸ்டன் நகரின் மலை அடிவாரம் ஒன்றில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளின் முக்கியமான நிறுவனங்கள், வங்கிகள், புகைப்படங்கள், அரசு சார்ந்த ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறார்கள். உலகின் அரிய பொக்கிஷங்கள், உலகப் புகழ்பெற்ற 27 மில்லியன் புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ் என நாளைய சந்ததியினருக்குத் தேவையான வரலாற்று ஆதாராங்களை (?!) இவ்விடத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 1951-ல் ஹெர்மென் என்பவரால் துவங்கப்பட்ட இந்த ‘அயர்ன் மவுன்டைன்’னில், உலகின் முக்கியமான டேட்டா பேஸ்களில் இருந்து, வங்கிகளின் முக்கியமான கையெழுத்து நகல்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பில்கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்களின் முக்கியமான ஆவணங்கள் இங்கேதான் இருக்கிறதாம். இப்படி உலகின் மொத்தத் தரவுகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இந்த நிறுவனம், ஆவணங்களைப் பாதுகாக்கும் வசதிகளுக்காக ஒற்றை வாசலோடு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
கோகோ கோலா-சீக்ரெட் ரெசிபி: ஏறத்தாழ 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டு பில்லியன் மக்கள் கோகோ கோலாவைக் குடிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இன்றைய தேதிக்கு உலகின் மதிப்புமிக்க பிராண்ட் ‘கோக்’தான்! இத்தனை சிறப்புமிக்க கோக் எப்படி உருவாகிறது? என்று கேட்டால், கோலா கொட்டைகள் மற்றும் இலைகளைக்கொண்டு உருவாக்கப்படுகிறது என்று பதில் வருவதோடு, ‘இது தவிர ரகசியமான ஒன்று கலக்கப்படுகிறது’ என்ற பதிலும் வரும். அந்த ரகசியமான பொருள் என்ன என்பதுதான் இன்றுவரை தொடரும் மர்மம். கோகோ கோலாவில் கலக்கப்படும் ரகசிய ரெசிபி பற்றிய குறிப்புகள் தாங்கிய பெட்டி ஒன்று கோகோ கோலா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு அந்தப் பெட்டியைப் பார்க்கும் அனுமதி இருக்கிறதே தவிர, பெட்டிக்குள் இருக்கும் ரெசிபி குறிப்பினைப் பார்க்க அனுமதி இல்லை!
 
நாஸ்கா கோடுகள்: அவ்வப்போது படிக்கும் ‘பயிர் வட்டங்கள்’ பற்றிய மர்மத்தைப் போல, பெரு நாட்டில் காணப்படும் அடையாளங்களுக்கு நாஸ்கா கோடுகள் என்று பெயர். விமானத்தில் பறந்தபடி பார்த்தால் மட்டுமே முழு உருவத்தையும் பார்க்க முடியும். அந்த அளவுக்குப் பெருத்த உருவங்கள் குரங்கு, பறவை, சிலந்தி என உயிரினங்களின் உருவங்களாகவும், மாறுபட்ட சங்கேத உருவங்களாகவும் பொறிப்பட்டிருக்கின்றன. மனிதர்களால் உருவாக்க சாத்தியம் இல்லாத இவற்றை ஏலியன்கள் வரைந்திருப்பார்கள் என்பது ஒரு வாதம். ‘வானத்தில் இருந்து கடவுள் பார்ப்பார்’ என்ற நம்பிக்கையில் மக்கள் இதை வரைந்திருப்பார்கள் என்பது இன்னொரு வாதம். இன்றுவரை தொடரும் மர்மமான நாஸ்கா கோடுகள் 1553-ம் ஆண்டு முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
 
பங்கார் கோட்டை: இராஜஸ்தானில் இருக்கும் இந்தக் கோட்டை நம்ம ஊர் பேய்க்கதையைப் போல பிரசித்தி பெற்றது. இந்தியாவின் பயங்கரமான இடமாகக் கருதப்படும் இது, 1573-ல் கட்டப்பட்டதாம். இந்தக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் மந்திரவாதி ஒருவரால் சபிக்கப்பட மர்மமான முறையில் இறந்தார்கள். அப்புறமென்ன? வழக்கம்போல இறந்தவர்கள் அனைவரும் ஆவியாக அலைந்து திரிய, இன்றுவரை இரவில் யாரும் இந்த கோட்டைப் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லையாம்!
 
 
சென்டினல் தீவு: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுக்கு அருகே இருக்கும் தீவுகளில் ஒன்றுதான் சென்டினல் தீவு. உலகில் மனிதர்களுடைய காலடி படாத இடங்களின் பட்டியலில், சென்டினல் தீவுக்கும் இடம் உண்டு. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் வெளியுலகத் தொடர்பு முற்றிலும் அறுபட்ட நிலையிலேயே வாழ்ந்து பழகியிருக்கிறார்கள். தங்களது இனத்தைத் தவிர, எல்லோரையும் இந்தத் தீவின் மக்கள் எதிரிகளாகவே பார்க்கிறார்கள். 2006-ல் இத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள், சென்டினல் தீவு மக்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார், 60,000 ஆண்டுகளாக இத்தீவில் மக்கள் வாழ்ந்து வருவதாக அறியப்பட்டாலும், இத்தீவில் வசிக்கும் மக்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் போன்ற எதையுமே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆராயும் நோக்கத்தோடு இத்தீவின் மேல் பறந்த விமானங்கள் தீப்பந்தம், கற்கள் போன்றவற்றால் தாக்கப்பட்டிருக்கின்றன. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில், சென்டினல் தீவு மக்களின் தோற்றமும் தெளிவாக இல்லை. மனிதர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பை விரும்பாத இந்த மக்களின் பாதுகாப்புக்காக சென்டினல் தீவையும், அதைச் சுற்றி மூன்று மைல் தொலைவுக்குச் செல்வதும் குற்றம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே தனிமைப்படுத்தப்பட்ட ஒரே தீவாக அறியப்படும் இந்த சென்டினல் தீவின் மக்கள் தொகை 100-ல் இருந்து 400 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது!