Wednesday, May 20, 2015

இன்ப சுற்றுலாவில் ஏன் இன்பமே இல்லை ?
ஆர்.சரண்
 
க்னி வெயில், உச்சந்தலையில உளி வெச்சுக் கொத்த ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் என்ன... கூட்டம் கூட்டமா டூருக்குக் கிளம்புவாங்களே நம்ம ஆளுங்க! மொத்தப் பூமிப் பந்தும் பரந்து விரிஞ்சுகிடக்க, 'மிடில் கிளாஸ் மாதவன் சூழ்’ தமிழ்நாட்டுல பெரும்பாலும் சம்மர்னா ஊட்டி, கொடைக்கானல்தானே குல வழக்கம். 
 
இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். சுற்றுலா போறதை சாமி குத்தமா நினைக்கிற நாடுகளைப் பத்தி அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 'சுற்றுலாப் பொழுதுகளை மோசமாகக் கழிப்போர்’ பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்! எங்கே போகப்போறோம், எங்கே தங்கப்போறோம் என்ற திட்டமிடல் இல்லாமல் கிளம்பிப் போறது, சுற்றுலாவுக்குப் போன இடத்துலயும் ஆபீஸ் வேலையை உட்கார்ந்து செய்றது... இந்த ரெண்டு காரணங்களும் இந்தியர்களின் சுற்றுலாவை வெற்றுலாவா மாத்தியிருக்குனு அந்த ஆய்வு சொல்லுது.
 
ஆக, 'நாங்களும் டூர் போனோமே... டூர்!’ என ஃபேஸ்புக்கில் போட்டோ போடவே கிளம்பிப் போறவங்கதான் இங்கே அதிகம் மக்களே. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா, போறது டூருக்கு... அதுக்கு வீட்டு பீரோல இருக்கிற பாதி உடுப்புகளை லக்கேஜ்னு அமுக்கி வெச்சுட்டு சாதா ரயிலை கூட்ஸ் வண்டியா மாத்துவோம் பாருங்க... மன்னிக்கவே முடியாத கும்பிபாகக் குற்றம் அது. அது போதாதுனு போன இடத்துலயும் ஏதோ காணாததைக் கண்ட மாதிரி டி-ஷர்ட், பனியன், ஜட்டிகளை பார்சல் பண்ணி எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஏத்திக்குவோம்.
 
கூகுள் மேப்ல பார்த்த அத்தனை இடங்களையும் ஒரே நாள்ல சுத்திப் பார்க்கலைனா, சாமி கண்ணைக் குத்திடுமா? தெரியாமத்தான் கேட்கிறோம்... குட்டி குலுவான்களையும் சீனியர் சிங்கங்களையும் இழுத்துட்டு, 'இது பேரீச்சம் லேக், இது செட்டியார் பார்க், இது கோக்கர்ஸ் வாக், இது பிரையன்ட் பார்க், இது டால்ஃபின் நோஸ்’னு ரன்னிங் கமென்ட்ரிலயே இடங்களைக் காட்டிட்டு ஹோட்டலுக்கு வந்து கட்டையைச் சாய்க்கிறது... பாவம் பாஸ். அலைஞ்ச அலைச்சல்ல மொத்தக் குடும்பமும் எக்ஸ், ஒய், இஸட் ஷேப்ல மட்டையா மடிஞ்சு ஹோட்டல்லயே தூங்கிக் கிடக்கிறதுக்குப் பேர்தான் இன்பச் சுற்றுலாவா?
அட... இதைக்கூட விட்டுரலாம். இந்த பேச்சுலர் பசங்க பண்றதைப் பத்தி சொல்லவே பயமா இருக்கு! நாலு சுவத்துக்குள்ள பண்ற அம்புட்டு கரைச்சல்களையும் 'ஓப்பன் பப்ளிக்’ல பண்றதுக்குப் பேர்தான் அவங்களைப் பொறுத்தவரை டூர்! வீட்டை விட்டுக் கிளம்பின பத்தாவது நிமிஷம் காருக்குள்ளயே கதகளியை ஆரம்பிச்சுடுறான். சரக்கடி உற்சவத்தை முடிச்சுட்டு இலக்கை அடையிறதுக்குள்ள நாலுவாட்டி மசக்கை ஆகிடுவான். அங்கே போன பிறகு... என்ன நடக்கும்? மறுபடியும், 'அதாரு... உதாரு...’னு காட்டாறா சரக்கைப் பாய்ச்சுவான். இப்படி நித்தம் மூணு வேளை குளிகை கணக்கா குடிமேளா நடத்திட்டு வீடு திரும்புறப்போ, மனசுல மங்கலாக்கூட எந்த ஊருக்குப் போனோம்னு ஞாபகம் இருக்காது!
 
சென்னைக்கு ஓரளவுக்கு அருகே இருக்கும் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போனீங்கன்னா... ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். கடற்கரை ஓரமா வெளிநாட்டு டூரிஸ்ட்கள் ஷோக்கா ஒரு சேர்ல சாய்ஞ்சுட்டே கையில புத்தகமோ, காதுல ஹெட்செட்டோ வெச்சுட்டு அமைதியா கடலைப் பார்த்து ஏகாந்தத்தை ரசிப்பாங்க. கடல்ல இறங்கி சாஃப்ட்டா குளிப்பாங்க. அவங்க குழந்தைங்க ஒரு பக்கம் மணல்ல வீடு கட்டி கிரியேட்டிவ்வா விளையாடுவாங்க. அதிகபட்சம் 2,000 ரூபாய்க்கு அந்த ஊர்ல மட்டுமே கிடைக்கும் ஏதேனும் விசேஷ வஸ்துகளை வாங்குவாங்க. நல்லா வகைதொகையா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கிட்டு ஊரைப் பார்க்கப் போயிருவாங்க. இதுதான் அவங்களோட ஒட்டுமொத்த இந்திய வெக்கேஷன். 'டூர் போனோமா... உடம்பையும் மனசையும் சார்ஜ் ஏத்தினோமா... மனசு முழுக்க இனிப்பு நினைப்புகளோடு ஊருக்குத் திரும்பினோமா’னு இருப்பாங்க.
 
ஆனா, நம்மாளுங்க பண்ற அலப்பறை இருக்கே! 'எச்சரிக்கை... மிக ஆபத்தான கடற்கரை. கடந்த ஒரு வருடத்தில் இங்கு 46 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்’னு எச்சரிக்கிற பலகையை எத்தி மிதிச்சுட்டு, அந்த அபாயப் பிரதேசத்தில் குடும்பத்தோடு குட்டிக்கரணம் அடிச்சு வித்தை காட்டுவான். ரெண்டு வாட்டி மணலோடு கலந்த உப்புத் தண்ணியைக் குடிச்சு புரையேறி இருமிட்டு, சுத்திமுத்தி பார்த்து... 'யாரும் பார்க்கலையே... பார்க்கலையே’னு பெருமைப்பட்டுக்குவான். சுண்டல், காரப்பொரி, ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், சோளம், மிளகா பஜ்ஜினு வெறிகொண்ட மிருகம் கணக்கா வேட்டையாடுவான். கொடைக்கானல் குணா குகையைப் பார்த்ததுமே, கமல் போல மாறி மத்தவங்களுக்கு மரண பயத்தை உண்டாக்குவான்.
 
அட சம்மர் டூரைவிட... இந்த சம்மர் டூருக்குக் கிளம்புற ஆயத்தம் இருக்கே... கண்ணு வேர்த்திரும்! தினம் 7 மணிக்கு அடிக்கிற அலாரம் அன்னைக்கு மட்டும் 3 மணிக்கே அடிக்கும். இயல்பா பேய்த்தனமா வேலை பார்க்கிற அம்மா அன்னிக்கு ரத்தக்காட்டேரியாவும் மாறி பரபரப்பா வேலை பார்ப்பாங்க.
 
'புளியோதரை’ - இது சுற்றுலா செல்லும் தமிழனின் தேசிய உணவா பாஸ்? சாதத்தை வடிச்சுக் கொட்டி, புளியைக் கரைச்சு ஊத்தி, அழகா வாழை இலை வெட்டி, ஊசிப்போற துவையலோடு சேர்த்துப் பொட்டலம் கட்டி, மொத்தக் குடும்பத்துக்கும் டிரெஸ் எடுத்துவெச்சு, எல்லாரையும் கிளப்பி ரயிலைப் பிடிக்க அரக்கப்பரக்க ஓடி வந்தா... அன்னைக்குனு அதிசயமா ஒரு மணி நேரம் தாமதமா வரும் ரயில். அப்புறம் என்ன... மசமசனு விடியும்... பகபகனு பசிக்கும். புளிச்சாதம் பார்சல் விநியோகிக்கப்படும். சோத்து மூட்டையில கால்வாசியைக் காலி பண்ணிட்டு, ரயில்ல ஏறி உக்கார்ந்து லக்கேஜ் பையைப் பார்த்தா, ஒரு பாக்கெட் வாயைப் பிளந்து ஒட்டுமொத்த பையையும் நாசம் பண்ணிருக்கும். அத்தானின் ஃபேவரிட் டி-ஷர்ட் 'ஆயில் ஷர்ட்’டா மாறியிருக்கும். கடுப்புல வீட்டு அம்மணிக்குத் திட்டு விழ, பதிலுக்கு அந்த அம்மா சும்மா இருக்குமா? சங்கர் சிமென்ட் ஆன்ட்டியா மாறி, 'கிளம்புறப்போ வீட்டைப் பூட்டினீங்களா?, கியாஸை ஆஃப் பண்ணீங்களா?, பீரோவைச் சாத்துனீங்களா’னு தேனீ கூட்டைக் கலைச்சுவிடுவாங்க. குடும்பமே 'டவுட்டு தனபாலா’ மாறி கதிகலங்கி நிக்கும்.
 
இப்படியான ரணகளங்களுக்கு மத்தியிலும் எப்படியோ பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போயாச்சுப்பா. ஊட்டிக்குப் போனா தொட்டபெட்டா டெலஸ்கோப்ல மேகமூட்டம் வானத்தைப் பார்க்க, மூணு மணி நேரம் தேவுடு காத்து க்யூல நிப்பான். கொடைக்கானல் மலர் கண்காட்சியில் தீபாவளி சீஸன் ரங்கநாதன் தெரு கணக்கா கூட்டம் அம்மும். வியர்க்க விறுவிறுக்க ஆளுங்களை முட்டி மோதித் திரிஞ்சு முட்டி தேய செட்டிலாவான். சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டிட்டா, 'இன்னும் ஏன்டா முழிச்சுட்டு இருக்க கைப்புள்ள... தூங்கு’தான். இதுல குடும்ப உறுப்பினர்களோடு மனம்விட்டு என்ன பேசுறது?! 'அட... பேசிட்டு இருக்கிற நேரத்துல ஏரியை இன்னொரு ரவுண்டு அடிக்கலாம்ல’னு அபத்தமா கேள்வி கேப்பாங்க நம்மாளுங்க.
 
இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் வந்ததுல இருந்து, கம்பளியை இறுக்கிப் போத்திட்டு தூங்கிட்டே இருப்பாங்க சிலர். காட்டேஜ்காரன் இலவசமா ஏற்பாடு பண்ற கேம்ப் ஃபயருக்குக் கூப்பிட்டாக்கூட, 'கங்கு கண்ணுல பட்ருமே... ஆத்தாடி... என்னா குளிரு சாமி!’னு ஃபீல் பண்ணுவாங்க. ஊட்டி, கொடைக்கானல்ல குளிரடிக்காம அனலா அடிக்கும் செல்லம்?! ஊட்டியில செல்ஃபி எடுக்கிறதைவிட குல்ஃபி சாப்பிடுறதுல கிக் அதிகம்னு எப்போ உணர்வீங்க?
 
'ஓய்... குத்தம் சொல்றவன் மனுஷன்; வழிகாட்டுறவன் பெரிய மனுஷன். நீ மனுஷனா... பெரிய மனுஷனா?’னு நீங்க கேட்கிறது புரியுது. அந்த அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியே மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு சில டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அதையும் காதுல போட்டுவிடுறோம்...
 
* கொடைக்கானலோ கோவாவோ... எங்கேயும் ப்ளான் பண்ணிக் கிளம்பணும். பல வலைதளங்கள் பார்த்து கையைக் கடிக்காத பட்ஜெட்ல ஹோட்டல் புக் பண்ணிட்டு நிம்மதியா கிளம்புங்க. ஏன்னா, 'பட்ஜெட் பிக்னிக்’னு ஏலகிரி போய் இறங்கிட்டு, 'என்ன இங்கே ஒண்ணுமே இல்லை?’னு கேட்கிறதுல அர்த்தமே இல்லை. செலவைக் குறைக்கத் திட்டமிடலாம். ஆனா, அதுலயே கடமை கண்ணாயிரமா இருக்கேன்னு சுற்றுலா சந்தோஷத்தை அனுபவிக்க மறந்துராதீங்க!
 
* சின்ன கல்லு... பெத்த லாபம்! கொஞ்சம் லக்கேஜ்... நிறைய சந்தோஷம். எந்த ஊர், எந்த சீஸன்... அதுக்கு ஏத்த மாதிரி திட்டம் போட்டாலே, லக்கேஜ் அளவைக் குறைச்சிரலாம். ஸ்வெட்டர் எடுத்துட்டு ராமேஸ்வரம் போக வேணாம்... பெர்முடாஸ் போட்டுட்டு ஊட்டிக்குப் போக வேணாம்.
 
* அனுபவி ராஜா அனுபவி! முடிஞ்சவரை மொபைல், லேப்டாப் போன்ற எந்திரன்களுக்கு தடா போடுங்க. சுற்றிலும் இருக்கிற இயற்கையை ரசிச்சு மகிழுங்க. ராத்திரி தூறல்ல நனையிறது, அதிகாலைச் சூரியனை ரசிக்கிறதுனு அந்தந்தத் தருணங்களை அதற்கு உண்டான சந்தோஷத்தோடு கொண்டாடுங்க. சுற்றுலாவில், டெட்லைன் கிடையாது; டார்கெட் கிடையாது. கடல் அலையை ரசிச்சபடி அரை மணி நேரம் கூடுதலா காற்று வாங்கினா, குடிமுழுகிப்போயிடாது. 'சூசைட் பாயின்ட்’ படங்கள் வேணும்னா, கூகிள்ல மழையாக் கொட்டும். அங்கே போய் அந்த அபார மலைச் சரிவை ரசிக்காம, கேமரா ஆங்கிள் பார்த்துட்டு இருக்காதீங்க.
 
* ரெஸ்ட் இஸ் பெஸ்ட்! சுற்றுலாவின் முக்கியமான அம்சம்... ஓய்வு. புளியோதரையைக் கிண்டிட்டு வந்துட்டோமேனு கிண்டி ரேஸ் குதிரை மாதிரி சுத்திட்டே இருக்கணும்னு அவசியம் இல்லை. 'நாய்க்கு வேலை இல்லை... நிக்க நேரம் இல்லை’ங்கிற மாதிரி அலைய எதுக்கு அம்புட்டு தூரம் போகணும்? ஒரு நாளின் பாதியை அலைச்சலுக்கும்... மீதியை ஓய்வுக்கும் ஒதுக்குங்க.
கட்டக்கடைசியா...
 
பல ஐரோப்பிய நாடுகள்ல சுற்றுலாவை சலுகையாப் பார்ப்பது இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவைனு சட்டமே சொல்லுது. 'நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம்’னு சீனப் பழமொழி சொல்லுது. ஆனா, இந்தியா போன்ற வளரும் நாடுகள்ல, 'டூரா... தலைக்கு மேலே வேலை கெடக்கே பாஸ்!’னு சொல்லிட்டே இருக்கோம். அதான், இந்தியா டல்லரசாவே இருக்குது... ஆங்!
இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி
-பாரதி தம்பி

'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று, விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
 
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
 
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
 
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
 
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
 
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
 
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
 
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
 
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
 
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''