Tuesday, August 29, 2023

நீட் தேர்வு - அடுத்த தலைமுறைக்கு நல்ல மருத்துவர்கள் கிடைக்கப்போவதில்லை

கல்வியாளர் தா.நெடுஞ்செழின்

நீட் தேர்வை முன்வைத்துத் தற்கொலைச் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஒரு மாணவனும் அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட செய்தி என்னை அதிகம் பாதித்தது. ஒரு பக்கம் நீட் எதிர்ப்புக் குரல்கள்; இன்னொரு பக்கம் ஆதரவுக் குரல்கள்; இடையில் மாணவர்களின் தற்கொலைகள்... இதுபற்றி நாம் தீவிரமாக ஆராய வேண்டியிருக்கிறது.


நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் அடிப்படை நோக்கமே, தகுதியான மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அதன்மூலம் மருத்துவப் படிப்பின் தரத்தை அதிகரிப்பது. பிரதமர் நரேந்திர மோடி தொடக்கத்திலிருந்தே அதைத்தான் சொல்லிவருகிறார். நீட் தேர்வு வந்தபோது உண்மையிலேயே நாங்களெல்லாம் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று நம்பினோம். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடக்கும் எல்லாத் தவறுகளையும் நீட் தேர்வு மாற்றிவிடப்போகிறது என்று மகிழ்ந்தோம். வரவேற்றோம்.

2010-ல் பெங்களூரு ஐ.ஐ.எம்-க்காக என் வகுப்புத்தோழர் சந்திரசேகர் ஒரு புராஜெக்ட் செய்தார். அந்த புராஜெக்டில், நான் வெளியிலிருந்து உதவும் வழிகாட்டியாகப் பங்காற்றினேன். ‘தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை எப்படி நடக்கிறது' என்பதே அந்த ஆய்வின் அடிப்படை. நிறைய கள ஆய்வுகள் செய்தோம். ஆவணங்கள் சேகரித்தோம். ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் பெற்றோம். அந்தக் காலகட்டத்தில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருந்தது. நிறைய மருத்துவக் கல்லூரிகளில் தகுதியற்ற பலர் சேர்க்கப்பட்டிருந்தனர். தகுதியான மாணவர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தனர். இந்த மோசடிகளை யெல்லாம் முன்வைத்து நாங்கள் உருவாக்கிய ஆய்வறிக்கை தேசிய அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசும் அதைப் பெருமளவு கவனத்தில் கொண்டது.


கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வித் துறையில் இயங்கி வருகிறேன். மாற்றங்களைக் கூர்ந்து அவதானிக்கிறேன். பிரதமர் சொன்னதுபோல, நாங்கள் எதிர்பார்த்தது போல நீட் தேர்வு பயனளிக்கவில்லை. நல்மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. மாறாக அது மருத்துவப் படிப்பின் தரத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது. வெளிப் படையாகவே அது கல்வியைப் பாகுபடுத்தியிருக்கிறது.


நீட் தேர்வு வருவதற்கு முன்பு இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகள்தான் அதிகமிருந்தன. தனியார் கல்லூரிகள் மிகவும் குறைவு. நீட் வந்தபிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாகிவிட்டன. எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் இடங்களும் சமமாகிவிட்டன. 2006-ல் இந்தியாவில், அரசு தனியாரெல்லாம் சேர்த்து 233 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. எம்.பி.பி.எஸ்-ஸுக்கு சுமார் 26,500 இடங்கள் இருந்தன. இன்று 355 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 299 தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசுக் கல்லூரிகளில் 52,333 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 50,150 இடங்களும் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது வளர்ச்சிதானே என்று தோன்றும். ஆனால், கல்வியைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது தனியாரின் திசைநோக்கி நீள்வது மக்களுக்கு வீழ்ச்சி.

பெரும்பாலும் எல்லா அரசியல்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் மருத்துவக் கல்லூரிகள் வைத்திருக்கிறார்கள். அதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்லூரிகளுக்குப் பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தனியார் கல்லூரிகளில் ஓராண்டு மருத்துவப் படிப்புக்கான கட்டணம் சுமார் 20 லட்சம். ஏறத்தாழ ஓராண்டுக்கு 250 முதல் 300 கோடி ரூபாய் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு வருகிறது. முன்பு திரைமறைவில் நடந்த இந்தக் கட்டணப் பரிவர்த்தனை நீட் தேர்வுக்குப் பிறகு சட்டபூர்வமாகியிருக்கிறது. இந்த 300 தனியார் கல்லூரிகளும் ஆண்டுக்கு 10,000 கோடிக்கும் அதிகமாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன.

அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு 18,000 ரூபாய் கட்டணம். இதையே தனியார் கல்லூரிகளும் வாங்கவேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால் நூற்றாண்டு கடந்த கல்லூரியான வேலூர் கிறித்தவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கே ஆண்டுக்கு 55,000 ரூபாய்தான் கட்டணம். அதன் அருகிலேயே இருக்கும் இன்னொரு சுயநிதிக் கல்லூரியில், எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு 20 லட்சம் கட்டணம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம். ஏன் இவ்வளவு இடைவெளி? சேவை செய்வதாகச் சொல்லி டிரஸ்ட் உருவாக்கித்தானே இந்தக் கல்வி நிறுவனங்கள் எல்லாம் தொடங்கப்படுகின்றன? ஒரு கல்லூரியில் 55,000, இன்னொரு கல்லூரியில் 25 லட்சம் என்பதை அரசு எந்த அடிப்படையில் வகைப்படுத்துகிறது? வேலூர் கிறித்தவக் கல்லூரிக்கு 100 இடங்களை மட்டும் தந்துவிட்டு பிற கல்லூரிகளுக்கு 200 முதல் 250 இடங்களுக்கு மேல் அனுமதியளிக்கும் அரசின் நோக்கம்தான் என்ன?

இந்தக் கேள்வியை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிடுவோம்.

நீட் தேர்வு எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்பின் தரத்தைக் குறைக்கிறது என்பதையும் எந்த அளவுக்கு அது கல்வியில் பாகுபாட்டை உருவாக்குகிறது என்பதையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதலில் நீட் தேர்வு நடத்தும் முறை. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடக்கிறது. எல்லாத் தேர்வுகளுக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வறைக்கு வந்தால் போதும். ஆனால், 2 மணிக்கு நடக்கும் நீட் தேர்வுக்கு மாணவர்களைப் பிரித்து 11 மணிக்கு ஒரு பிரிவையும் 12.30 மணிக்கு ஒரு பிரிவையும் 1.30 மணிக்கு ஒரு பிரிவையும் வரச்சொல்கிறார்கள். இதை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதும் ரகசியம். எல்லோரையும் ஒரே நேரத்தில் வரச்சொன்னால் குழப்பமாகிவிடுமாம்.

2 மணித் தேர்வுக்கு ஒரு மாணவனை 11 மணிக்கு வரச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்? கற்றறிந்த எவரும் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். தேர்வு மையம் பெரும்பாலும் நகரத்துக்கு வெளியேதான் இருக்கிறது. 11 மணிக்குத் தேர்வு மையத்தில் இருக்கவேண்டும் என்றால் 9 மணிக்காவது கிளம்ப வேண்டும். சாப்பாடு 8 மணிக்குச் சாப்பிட்டிருப்பார்கள். தேர்வு 5.20-க்கு முடியும் எனறால் கிட்டத்தட்ட 9 மணி நேரம். இவ்வளவு நேரம் சாப்பிடாமல் அமர்ந்திருக்கும் ஒருவரால் எப்படி ஒரு தேர்வை நல்லவிதமாக எழுதமுடியும்?

அதிலும் ஆரம்பத்திலிருந்தே மாணவர்களைப் பதற்றத்தில் வைத்திருக்கிறார்கள். வாகா எல்லையில் பிடிபட்ட தீவிரவாதி மாதிரி சோதிக்கிறார்கள். தலைமுடியிலிருந்து உள்ளாடை வரைக்கும். அதேநேரம் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் சர்வசாதாரணமாக காப்பி அடிக்க முடிகிறது. இதெல்லாம் ஆதாரத்தோடு அம்பலமாகியிருக்கிறது.

உள்ளே வாட்டர் பாட்டிலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதுவும் டிரான்ஸ் பரன்டாக இருக்கவேண்டும். நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நெருக்கடி? யு.பி.எஸ்.சி, ஜே.இ.இ, நாட்டா உட்பட எந்தத் தேர்வுக்கும் இவ்வளவு களேபரங்கள் இல்லை. இப்படியெல்லாம் சோதிப்பதற்குப் பதிலாக தேர்வறைக்குள் இன்னும் இரண்டு கண்காணிப்பாளர்களைப் போட்டு கண்காணிக்கலாமே? தவறு செய்த மாணவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கலாமே?

நீட் வருவதற்கு முன்பெல்லாம் பிளஸ் டூ-வில் 95% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டும்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். மற்றவர்கள் மனதளவில் மருத்துவப் படிப்பை யோசிக்கக்கூட மாட்டார்கள். இன்று பெர்சண்டைல் முறையில் நீட் தேர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. 720 மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில் 110 மதிப்பெண் எடுத்தால் நீங்கள் மருத்துவம் படிக்கத் தகுதியானவராகி விடுவீர்கள். இதுதான் பிரதமர் குறிப்பிடுகிற தரமா? மருத்துவப் படிப்பில் மொத்தமிருக்கும் இடமே ஒரு லட்சம்தான். ஏன் 10 லட்சம் பேருக்கு ரேங்க் தருகிறீர்கள்?

ஐ.ஐ.டி-யில் 20,000 சீட் இருந்தால் 40,000 பேருக்குத்தான் ரேங்க் தருவார்கள். இரண்டில் ஒருவருக்கு சீட் கிடைத்துவிடு்ம். அதே நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் நீட்டுக்கு மட்டும் ஏன் வேறொரு நீதி? தனியார் கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தருவதற்கா?

ஒரு மாணவர் 720-க்கு 600 மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 601 மதிப்பெண்ணோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் நிறைந்துவிட்டால், அந்த மாணவருக்கு அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் சீட் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரியில் 18,000 ரூபாய் ஆண்டுக் கட்டணம் என்றால் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 4.5 லட்சம் ஆண்டுக்கட்டணம். இதர செலவுகளெல்லாம் சேர்த்து 10 லட்சம் வரும். அந்தப் பணம் இல்லையென்றால் அவர் சீட்டை விட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விடுவார். அந்த சீட் 110 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற பணம் வைத்துள்ள ஒருவருக்குக் கிடைக்கும். இதுதான் மெரிட்டா?

தமிழக மருத்துவ கவுன்சிலிங்கில், ரேங்க் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்றுவிதமாக இடங்கள் ஒதுக்கப்படும். அரசுக் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு. இந்த மூன்றுக்கும் அரசே கவுன்சிலிங் நடத்தும். அரசுக் கல்லூரிகளுக்கு 500 ரூபாயும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 30,500 ரூபாயும், சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டுக்கு 1 லட்சம் ரூபாயும் கலந்தாய்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைக் கட்டமுடியாவிட்டாலும் அந்த மாணவர் சீட்டை விட்டுக்கொடுக்க நேரிடும். இதுதான் மெரிட்டா?

கற்பது உலகளவு
கற்பது உலகளவு

720 மதிப்பெண்ணுக்கு 650 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு என்றால் மருத்துவப் படிப்பு தரமாக இருக்கும். ஆனால் 110 மதிப்பெண் எடுத்தவருக்கும் சீட் கொடுத்தீர்கள் என்றால் மருத்துவத்தை நீ்ட் தேர்வு தரம் குறைக்கிறது என்றுதானே பொருள்.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் 15% இடங்களுக்கு AIPMT தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தியது. அதில் குறிப்பிட்ட ரேங்குக்குக் கீழே இருப்பவர்களைப் பரிசீலிக்கவே மாட்டார்கள். ஆனால் நீட், ‘பிளஸ் டூ-வில் 50% எடுத்தாலும் வா, நீட்டில் 110 எடுத்தாலும் வா' என்று அழைக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் சீட். பணம் இல்லாதவர்கள் அதிக ரேங்க் எடுத்தாலும் சீட் இல்லை.

தேர்வு முறையிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். விலங்கியலில் 45, தாவரவியலில் 45, இயற்பியலில் 45, வேதியியலில் 45 கேள்விகள் கேட்கப்படும். 180 கேள்விகளுக்கான பதில்களை 180 நிமிடங்களில் எழுதவேண்டும். எல்லாம் சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்விகள். இதுதான் பழைய நடைமுறை. கொரோனா வந்தபிறகு, சி.பி.எஸ்.இ அவர்களது பாடத்தில் 30% நீக்கிவிட்டது. பிற பாடத்திட்டங்களிலும் 30 முதல் 40% பாடங்களை நீக்கிவிட்டார்கள். இன்று வரைக்கும் அப்பாடங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் எந்தெந்தப் பாடங்களையெல்லாம் நீக்கினார்கள் என்று இப்போது நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எந்த போர்டு சேர்மனையும் கூப்பிட்டுப் பேசவில்லை. ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் தருவோம். 45 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். ஒவ்வொன்றிலும் 5 கேள்விகளை வேண்டுமானால் விட்டுவிடுங்கள் என்கிறது.

இன்னொரு பெரிய விபரீதமும் நீட் தேர்வில் இருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றும் மிகவும் முக்கியமானவை. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது மூன்றிலுமே 95% மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கட்-ஆப் அடிப்படையில் சீட் கிடைக்கும்.

நீட் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண். தேர்ச்சி மதிப்பெண் வெறும் 110. ஆண்டுக்காண்டு இதில் சற்று கூடலாம், குறையலாம். "எனக்கு இயற்பியலும் வேதியியலும் வராது சார்" என்று கோச்சிங் சென்டருக்குப் போகும் மாணவனை அமரவைத்து, "நீ அந்த இரண்டையும் தொட்டுக்கூடப் பார்க்காதே, உயிரியலில் கவனம் செலுத்திப் படி... 110 மதிப்பெண் எடுத்துவிடலாம்... நீ பாஸ்" என்று டெக்னிக்கைக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். உயிரைக் கொடுத்துப் படித்து, பணமில்லாததால் கல்லூரியில் சேரமுடியாத எவரோ ஒருவர் தன் சீட்டை விட்டுக்கொடுத்துவிட்டுப் போவார். அல்லது யாருமே சேராத நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் லட்சங்களைக் கொட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம். இதுதான் நீட் ஏற்படுத்தியிருக்கும் விளைவு.

இப்படித் தேர்ச்சி பெற்றுவரும் மாணவன் மருத்துவப் படிப்பில் எப்படி பயோகெமிஸ்ட்ரி படிப்பார், பிசியாலஜி படிப்பார் என்பதெல்லாம் இமாலயக் கேள்வி. என் கவலையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு நல்ல மருத்துவர்கள் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.