Thursday, April 27, 2023

உழைப்பும் ஓய்வும் இரு கண்கள்

நன்றி ஆனந்த விகடன்

மே தினம் என்னும் தொழிலாளி வர்க்கத்தின் திருவிழா இந்தியாவில் கொண்டாடப்பட்டதன் நூற்றாண்டு இது. இந்தியாவில் மே தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது தமிழ்நாட்டில் என்பதும், அதை முன்னெடுத்தவர் ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' என்று அழைக்கப்படும் சிங்காரவேலர் 

இந்தியாவிலேயே முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டதும் தமிழ்நாட்டில்தான்; முதன்முதலில் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டதும் தொழிற்சங்கத்தின் சார்பில் பின்னி மில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதும் தமிழ்நாட்டில்தான்; தொழிற்சங்கம் என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பே 1908-ல் திருநெல்வேலி கோரல் மில் நிர்வாகத்தை எதிர்த்து வ.உ.சி தலைமையில் மாபெரும் தொழிலாளர் கிளர்ச்சி நடைபெற்றதும் தமிழ்நாட்டில்தான்

வரையறையற்ற வேலை நேரத்தில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்ட போதுதான் உலகமெங்கும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. முதலில் ‘பத்துமணி நேர வேலை' என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை, பிறகு ‘எட்டுமணி நேர வேலை' என்பதாக மாறியது. ‘எட்டுமணிநேர வேலை, எட்டுமணி நேர உறக்கம், எட்டுமணி நேர ஓய்வு' என்று ஒருநாள் பிரிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த உரிமைகள் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.

குடும்பத்துக்காகத் தியாகம் செய்து உழைப்பது ஒருவரை உயர்த்தும் என்பது உண்மைதான். ஆனால், அந்த உழைப்புக்காக வாழ்வையே தியாகம் செய்வதில் என்ன மிஞ்சும்? தினமும் பல மணி நேரம் பயணம் செய்து உழைக்க நேரும் மனிதர்களிடம், ‘எப்போது நீங்கள் கடைசியாக சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ நிதானமாகப் பார்த்து ரசித்தீர்கள்' என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் விரக்திப் புன்னகைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் தெரியும்.

இந்தியாவுக்கு உரிமைகளை உச்சரிக்கும் உதடுகளாக விளங்குவது தமிழ்நாடுதான். பணிப்பாதுகாப்பு, வரையறுக்கப்பட்ட வேலைநேரம் ஆகியவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் தருணத்தில்தான் தற்பொழுது தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலைத் திட்டத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றியிருக்கிறது. (எதிர்ப்புகளைத் தொடர்ந்து இதன் செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக இப்போது தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது!) 


இந்த 12 மணி நேர வேலை என்பதை, ‘தொழிலாளர்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு’ என்று முகமூடி போட்டு முன்னிறுத்துகிறார்கள். உண்மையில் தொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அக்கறையில் கொண்டுவரப்பட்ட மசோதாவா இது? இல்லை, இது தொழில் நிறுவனங்களின் தேவை. ‘வேலை நேரத்தில் இப்படிப்பட்ட நெகிழ்வுத் தன்மையை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன’ என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். 

1948-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தில் இதன்மூலம் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் விதிவிலக்குகள் ஏராளம். வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே ஒருவர் பணிபுரிய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு, ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, ஒருநாளில் 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்கக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு அதிகமாகவோ அல்லது ஒரு வாரத்தில் 48 மணி நேரத்துக்குக் கூடுதலாகவோ வேலை பார்த்தால் சாதாரண ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு அளவுக்கு ஓவர்டைம் ஊதியம் தர வேண்டும் என்பதிலிருந்தும் விலக்கு.


தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அரசுகள் கலைத்துப் போடு வதற்கு கொரோனாவைப் பயன் படுத்திக் கொண்டன. தொழிலாளர் விதிகளில் மத்திய அரசு 2020 நவம்பரில் கொண்டுவந்த திருத்தம், தினமும் 12 மணி நேரம் வரை ஊழியர்களை வேலை வாங்க அனுமதித்தது. அதற்கு முன்பாகவே குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசம் என்று ஆறு மாநில அரசுகள், 12 மணி நேர ஷிப்ட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டன. இதில் குஜராத் மஸ்தூர் சபா போட்ட வழக்கை அடுத்து, குஜராத் அரசு கொண்டுவந்த திருத்தத்தினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் 12 மணி நேர வேலைத் திட்டம், இரவு ஷிப்டிலும் பெண்கள் வேலை செய்ய அனுமதி, ஓவர்டைம் நேரம் இரண்டு மடங்காக அதிகரிப்பு என்று கர்நாடகா சில மாதங்களுக்கு முன்பு சட்டங்களை மாற்றியது. தமிழ்நாடும் அதே மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

சில நிறுவனங்கள் மட்டுமே இதைப் பின்பற்றும்' என்கிறது அரசு. ஆனால், இது தொற்றுநோய் போல! ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேகமாகப் பரவும். ‘தொழிலாளர் விரும்பினால் 12 மணி நேரம் வேலை பார்க்கலாம். இல்லையெனில் மறுக்கலாம்' என்கிறது அரசு. ‘விருப்பமில்லை’ என்று மறுக்கும் உரிமை ஒரு தொழிலாளிக்கு இருக்கிறதா? அப்படி மறுக்கும் தொழிலாளியை வேலையில் தொடர்வதற்கு விட்டுவைக்குமா ஒரு நிறுவனம்?

‘‘8 மணி நேர வேலையென்பது நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கம் பெற்ற உரிமை. இன்று உலகம் முழுவதும் முதலாளித்துவ நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அரசியல் மட்டத்திலும் அவர்களின் கை ஓங்கியிருக்கிறது. அவர்கள் நலனைப் பாதுகாக்கவே அரசுகள் பெரிதும் முனைப்புக் காட்டுகின்றன. தமிழக அரசும் அந்த நெருக்குதலுக்குப் பணிந்துவிட்டது. ஐ.டி, எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் வைத்த கோரிக்கைகளின்படியே இந்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த மசோதாவின் நோக்கமே 8 மணி நேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை காலிசெய்வதுதான். உண்மையில் ஒரு மனிதர் 12 மணி நேரம் ஒரே வேலையைப் பார்க்கவே முடியாது.

ஐ.டி துறையைப் பொறுத்தவரை 12 மணி நேர வேலை, 14 மணி நேர வேலையெல்லாம் சர்வசாதாரணம். 12 மணி நேர வேலை என்பதை சட்டபூர்வமாக்கிவிட்டால் ஐ.டி நிறுவனங்கள் அதற்கு மேலும் வேலை வாங்கும். ஐ.டி நிறுவனங்களில் சங்கங்கள்கூட வலுவாக இல்லை. ஏற்கெனவே அடிமைகளாக இருப்ப வர்களை இந்த மசோதா கொத்தடிமைகளாக மாற்றப்போகிறது.

‘சாப்ட்வேர், எலெக்ட்ரானிக் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுதான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார்கள் அமைச்சர்கள். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஐ.டி நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. Tamilnadu Shops and Establishments Act-ன் கீழ்தான் பதிவு செய்யப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஐ.டி நிறுவனங்களுக்கான வரையறை தெளிவாகவே இல்லை.

ஐ.டி நிறுவனங்களைக் கண்காணிக்க தமிழக அரசிடம் சிஸ்டமே இல்லை. சட்டத்தில் இருக்கும் எந்தச் சலுகையும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குக் கிடைப்பதேயில்லை. நாங்கள் அரசுக்குப் புகார் அளித்தாலும் விசாரிக்கிறோம் என்று கூறி இழுத்தடித்துச் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.

நாங்கள் 48 மணி வேலை நேரத்தை 30 மணி நேரமாகக் குறையுங்கள் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறோம். நான்காவது தொழில்புரட்சிக்காலம் இது. தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு சான்றிதழ்களை நாங்கள் நிறுவனங்களுக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. படிக்காவிட்டால் இந்தத்துறையில் தாக்குப்பிடிக்கவே முடியாது. இன்று தனிப்பட்ட வாழ்க்கையை, குடும்பத்தை இழந்துதான் ஐ.டி ஊழியர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள். அதன் விளைவாக நிறைய குழந்தையின்மைப் பிரச்னைகள், விவாகரத்துகளை எதிர்கொள்கிறார்கள். இதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்...'' என்கிறார் மென்பொருள் துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின்.

‘‘பழைய தொழிற்சாலைச் சட்டம் வாரத்துக்கு 48 மணி நேர வேலையை உறுதிப்படுத்துகிறது. மூன்று மாதங்களுக்கு 75 மணி நேரம் ஓவர்டைம் செய்யவும் அனுமதிக்கிறது. ஓவர் டைமுக்கு உரிய சம்பளம் தரவேண்டும். பத்து நாள்களுக்குள் ஒருநாள் விடுமுறை கட்டாயம் தரப்பட வேண்டும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கமுடியாவிட்டால் தொழிலாளருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அடுத்தடுத்த நாள்களில் வழங்க வேண்டும். இப்படிப் பல பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டிருக்கிறது.

தற்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்தை வெறும் 12 மணி நேர வேலைச் சட்டம் என்று சுருக்கிப் பார்க்கிறார்கள். உண்மையில் தொழிலாளர் சட்டம் இதுவரை அளித்த எல்லாச் சலுகைகளையும் இந்தப் புதிய சட்டம் நீக்கியிருக்கிறது

முன்பு தொழிலாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை அரசு தீர்மானித்தது. இனி தொழிற்சாலைகளே தீர்மானித்துக்கொள்ளலாம். தொழிலாளர்கள் இனி எந்தக்குரலையும் எழுப்ப முடியாது. தொழிற்சங்கங்களும் செயல்பட முடியாது. இதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. வேலை நேரத்தை நிறுவனமே தீர்மானித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதன்மூலம், கூடுதலாக சம்பளம் வாங்குபவர்களை இனி நீங்கள் 5 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று அனுப்பிவிட்டு, குறைந்த சம்பளம் வாங்குபவர்களை அதிக நேரம் வைத்து வேலை வாங்கும் நிலைகூட ஏற்படலாம். இப்படியொரு நிலை ஏற்பட்டால் தொழிலாளர்கள் எங்கும் இதுகுறித்துப் புகார் செய்ய முடியாது. சட்டம் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

கம்யூனிச சீனாவில் வேலைக்கலாசாரம் மோசம். இதை ‘996' என்பார்கள். தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாள்கள் வேலை. ‘இந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று சோஷியல் மீடியாவின் டார்லிங்காக இருக்கும் சீனத் தொழிலதிபர் ஜாக் மா சொல்வார். ஆனால், அது வரமல்ல, சாபம். இந்த வேலை நெருக்கடி தாளாமல் அங்கு தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சீனக் குடும்பங்களில் குழந்தை பிறப்புகள் குறைந்திருப்பதற்கும் இந்த வேலை நேர நெருக்கடிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பல ஆய்வுகள் சொல்கின்றன.

மாறிவரும் வேலை நேரமும் உற்பத்தி உயர்வும் 

ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் உற்பத்தி அதிகரித்துள்ளது. போதிய ஓய்வு கொடுத்துத் தொழிலாளர்களிடம் வேலை வாங்கும்போது உற்பத்தித்திறன் கூடும் என்பது உலகளாவிய உண்மை.

4 DAY WEEK GLOBAL- 4DWG’ எனும் நிறுவனம் பாஸ்டன் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாரத்தில் நான்கு நாள்கள் வேலையை இங்கிலாந்தின் பல தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது. அதற்குமுன்பே உலகெங்கிலும் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பல நிறுவனங்கள் மற்றும் நாடுகள் நடைமுறைப்படுத்திப் பார்த்தன.

ஐஸ்லாந்தில் 2015-ம் ஆண்டில் வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணிநேரத்திலிருந்து 35-36 மணிநேரமாகக் குறைத்தனர், ஊதியத்தில் எந்தக் குறைவும் இல்லாமல். பல ஆண்டுகளாக இந்த சோதனை நடத்தப்பட்டது . இச்சோதனையின் வெற்றியால் 2021-ம் ஆண்டு குறுகிய வேலை வாரத்தை நிரந்தரக் கொள்கையாக ஐஸ்லாந்து அரசு மாற்றியது. ஸ்வீடனில் 2015-ல் முழு ஊதியத்துடன் நான்கு நாள் வேலை வாரம் அறிமுகமானது. சோதனையில் பணத்தைச் செலவழிக்கும் முறை அதிகரித்ததால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை.

ஜப்பான் நாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை முயற்சியாக 2019 ஆகஸ்டில் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் விடுமுறை வழங்கியது. சோதனை வெற்றிகரமாக இருந்தது, உற்பத்தித்திறன் 40% அதிகரித்தது. ஊழியர்கள் 25% குறைவான நாள்கள் விடுமுறை எடுத்தனர். ஸ்பெயின் அரசு, 2021-ல் நான்கு நாள் வேலை வாரத்தை ஊதியத்தில் எந்தக் குறைப்பும் இல்லாமல் அறிமுகப்படுத்த முற்பட்டது. இது இன்னும் செயல்படுத்தப்படாமல் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது. யூனிலீவர் நிறுவனம் நியூசிலாந்தில் இந்த சோதனையை 12 மாதங்களுக்கு நடத்தியது. அதில் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்ததற்கு அதே ஐந்து நாள்களுக்கான ஊதியத்தை வழங்கியது.

கடந்த 2022 பிப்ரவரியில், பெல்ஜியம் ஊழியர்கள் சம்பளத்தை இழக்காமல் வழக்கமான ஐந்து நாள்களுக்குப் பதிலாக நான்கு நாள்களில் வாரத்தின் முழு வேலையையும் செய்யும் உரிமையைப் பெற்றனர். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாள்கள் வேலை செய்வது பற்றி ஊழியர்கள் முடிவு செய்ய அனுமதிக்கும் மசோதா அங்கு நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்தது.

மிகக் குறுகிய சராசரி வேலை வாரங்களின் தாயகம் ஜெர்மனி என்று கூறலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) கருத்துப்படி அங்கு வாரத்தின் சராசரி வேலை நேரம் 34.2 மணி நேரம்தான். ஆனாலும், தொழிற்சங்கங்கள் வேலை நேரத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இது வேலைகளைத் தக்கவைக்கவும், பணிநீக்கங்களைத் தவிர்க்கவும் உதவும் என்று வாதிடுகின்றன.

ஒட்டுமொத்தமாக, நான்கு நாள் வேலை வாரம் என்பது உலகம் முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ளது. ஆனால், அங்கெல்லாம் வேலை நேரமும் சேர்த்துக் குறைக்கப்பட்டுள்ளது

‘‘நரகத்தில் இருப்பது போல வேலை செய்யுங்கள். வாரத்தில் 80 முதல் 100 மணி நேரம் வேலை செய்பவர்களை சீக்கிரம் வெற்றி நெருங்கும். மற்றவர்கள் வாரத்தில் 40 மணி நேரம் வேலை பார்த்து ஓராண்டில் அடையும் இடத்தை, நீங்கள் நான்கே மாதங்களில் அடைந்துவிடுவீர்கள்.'' இது இளம் தொழிலதிபர்களுக்கு எலான் மஸ்க் சொல்லும் அறிவுரை. அவர் அப்படித்தான் வேலை செய்கிறார். ஆனால், அவர் வெறுமனே ஆபீஸில் தன் இருக்கையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதில்லை. பிசினஸ் பயணங்களையும் அவர் வேலை நேரமாகக் கணக்கிடுகிறார் என்றாலும், அப்படி உழைப்பதுகூட நல்லதில்லை.

‘தினமும் 8 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்கும் நிறுவனங்களில்தான் உற்பத்தித் திறனும் லாபமும் அதிகரிக்கின்றன' என்பது 19-ம் நூற்றாண்டிலேயே ஆய்வு செய்து கண்டறியப்பட்ட உண்மை. அதிக நேரம் வேலை பார்த்தால் உடல்நலக் கேடுகளும் வரக்கூடும். தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் நீண்ட நாள்கள் வேலை பார்ப்பவர்களுக்கு இதயநோய்கள் வரும் ஆபத்து 67% அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கம் பறிபோவது, மன அழுத்தம், நினைவாற்றல் குறைபாடு, குடிக்கு அடிமையாவது, தாறுமாறான உணவுப்பழக்கத்தால் சர்க்கரை நோய் வருவது என்று அதிகரிக்கும் வேலை நேரத்தால் பிரச்னைகள் நிறைய!

Tuesday, April 25, 2023

மனிதத்துக்கு மதம் தெரியாது 

நன்றி: ஆனந்த விகடன்

காலித், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். ‘மில்லுக்காரர் குடும்பம்' என்றால் அப்பகுதியில் அறிவார்கள். காலித்... காலத்தில் நிலைத்திருக்கும் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறக்கும் ஆதரவற்றோரின் உடல்களைப் பெற்று இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்கிறார். கடந்த 6 ஆண்டுகளில் காலித் அடக்கம் செய்த உடல்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.

``ரோட்டோரத்துல வாழ்றதைவிட ரோட்டோரத்துல இறக்கிறது ரொம்பக் கொடுமை சார். எதுவுமே வெளியே தெரியாம, அடையாளமே இல்லாம முடிஞ்சுபோறது துயரம். ஜாதி, மதம், மொழியையெல்லாம் தாண்டி நாமெல்லாம் மனுஷங்க. நம்ம ரெண்டு கையில ஒரு கை, மத்தவங்களை அரவணைக்கன்னு நான் நம்புறேன். யாரும் சாதாரணமா இந்த வேலையைச் செய்ய முடியாது சார். அதுக்கு ஒரு மனநிலை வேணும். ஒவ்வொரு உடலையும் பார்க்கும்போது மனசு இளகி கண்ணு கலங்கும். என் வாப்பாவைப் பார்க்கிறமாதிரி இருக்கும்...'' காலித்தின் வார்த்தைகள் மருகுகின்றன.

காலித் 2007-ல் ஆதரவற்றோர் உடல் நல்லடக்கத்திற்கென `உறவுகள் டிரஸ்ட்' என்ற அமைப்பைத் தொடங்கினார். தினமும் ஐந்து முதல் பத்து ஆதரவற்றோர் உடல்களை உறவுகள் டிரஸ்ட் பெற்று அடக்கம் செய்கிறது.

``அதிராம்பட்டினத்துலதான் படிச்சேன். வழக்கமா எங்க குடும்பத்துல டிகிரி முடிச்சதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிடுவாங்க. என்னையும் அப்படித்தான் எதிர்பார்த்தாங்க. பிளஸ் டூ முடிச்சதும் சென்னை வந்து ஆவடியில ஒரு கல்லூரியில பி.இ சேர்ந்தேன். கல்லூரிக்குப் போற வழியில பிளாட்பாரத்துல ஒரு தாத்தா உக்காந்திருப்பார். சட்டை போட்டிருக்க மாட்டார். யாரும் அவரை நெருங்கமாட்டாங்க. கடுமையா கோபப்படுவார். ஒருநாள் இரவு அவர் குளிர்ல நடுங்கிக்கிட்டிருந்தார். உடனடியா ரெண்டு சட்டையும் உணவும் வாங்கிப் போய் அவருக்குப் பக்கத்துல உக்காந்தேன். ஆரம்பத்துல கோபமா பார்த்தவர் படிப்படியா சாந்தமானார். சட்டையைப் போட்டுவிட்டுட்டு சாப்பிட வச்சேன். மனம் திறந்து பேசினார். மகன், மருமகள் பிரச்னை... வீட்டுல நிம்மதியில்லை. வெளியே போனாப்போதும்னு நினைச்சாங்க. கிளம்பி வந்துட்டேன்'னு சொன்னார். பல வருடங்கள் அவர் மனசுக்குள்ள புதைஞ்சுகிடந்த சோகம் வெளிப்பட்டுச்சு. கையைப்பிடிச்சுக்கிட்டு அழுதார். கடைசியா அவர் சொன்ன வார்த்தை என்னைப் புரட்டிப் போட்டுருச்சு. `இன்னைக்கு நீ சாப்பாடு வாங்கிக்குடுத்தே... சட்டை வாங்கிக்குடுத்தே... நாளைக்கு நான் செத்துட்டா என்னை யார் தூக்கிப்போடுவா... இங்கேயே கெடந்து அழுகிப்போயிருவேனோ..?'ன்னார். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியலே. அந்தக்கேள்வி என்னைத் துரத்த ஆரம்பிச்சிருச்சு.

கொஞ்ச நாள் கழிச்சு நண்பர்களோட வெளியே போனப்போ, ஒரு கடைவாசல்ல படுத்துக்கிடந்த ஒரு பெரியவர் கையை ஆட்டி அழைக்கிறது மாதிரி இருந்துச்சு. கிட்டப்போய் பார்த்தா கிட்டத்தட்ட மரணத் தறுவாயில இருந்தார். தண்ணி கேட்டார். 108-க்கு போன் பண்ணிட்டு தண்ணி தந்தோம். ஆனா கொஞ்ச நேரத்துல இறந்துட்டார். போலீஸ் வந்து உடலை எடுத்துக்கிட்டுப் போனாங்க. இந்தக் காட்சியும் மனசுக்குள்ள ஏறி உக்காந்துக்கிச்சு சார். சாவு பத்தி நிறைய கேள்விகள் வருது. எவ்வளவு பணமிருந்தாலும் தூக்க நாலு பேரு இல்லேன்னா வாழ்க்கை என்னவாகும்..? இறுதியா கிடைக்கிற ஆறடிக் குழிக்கும் அஞ்சடித் துணிக்கும்தானே இப்படியொரு பெரும் பயணம் நமக்கு.

அப்போதான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தச் சம்பவம் நடந்துச்சு. ரெண்டு அண்ணன்களும் வெளிநாட்டுல இருக்காங்க. இன்னொரு அண்ணன் என்கூட சென்னையில இருந்தார். அமெரிக்காவுல இருக்கிற அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால அண்ணியைப் பார்த்துக்க அம்மா போயிட்டாங்க. பிசினஸ் விஷயமா வாப்பா தஞ்சாவூர் போயிருக்கார். ஒரு அறையில் தங்கியிருந்தவர் மாரடைப்பால இறந்துட்டார். ரெண்டு நாள் கழிச்சுதான் அவர் இறந்ததே எங்களுக்குத் தெரிஞ்சுச்சு. ஊர்லேருந்து நாலைஞ்சு பேர் போய் தஞ்சாவூர்லயே இறுதிச்சடங்கு செஞ்சுட்டு வந்தாங்க. பணம், பந்தம்னு எல்லாம் கைநிறைய இருந்தும் மனைவியோ, பிள்ளைகளோ அவர் முகத்தைக்கூடப் பார்க்க முடியலே. இது நீங்கா வலியா மனசுல உக்காந்திருச்சு...'' கண்கள் கலங்குகின்றன காலித்துக்கு.

அதன்பிறகு, ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டார் காலித்.

``ரவி, தீக்‌ஷனான்னு என் கருத்தொத்த நண்பர்கள் பத்துப்பேர் இருக்காங்க. அவங்ககிட்ட பேசினேன். `நீ எது செஞ்சாலும் கூட நிப்போம்'னு சொன்னாங்க. ஒரு வாட்ஸப் குரூப் ஆரம்பிச்சோம். ஒரு டிரஸ்ட் பதிவு பண்ணினோம். யாருமேயில்லைன்னு இந்த உலகத்துல ஒரு உயிர்கூட இருக்கக்கூடாது... அதுக்காகவே `உறவுகள்'ன்னு பேரு வச்சோம்.

சுடுகாட்டுல போய் பேசினேன். `தம்பி, அதெல்லாம் போலீஸோட வேலை... நீ போய் படிக்கிற வேலையைப் பாருப்பா'ன்னு சொல்லிட்டாங்க. மார்ச்சுவரிக்குப் போய் அங்கே வேலை செய்றவங்களைப் பார்த்தோம். `இங்கெல்லாம் நீங்க வரவேகூடாது'ன்னு சொல்லிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன் போக பயம். இருந்தாலும் நானும் நண்பனும் விசிட்டிங் கார்டு எடுத்துக்கிட்டு ஒரு ஸ்டேஷனுக்குப் போய் அங்கிருந்த போலீஸ்காரரைப் பார்த்து, `ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்றோம் சார், இருந்தாக் கூப்பிடுங்க'ன்னு சொன்னோம். மூணு மாசமாச்சு. யாரும் கூப்பிடலே... ஒருநாள் மதியம் நான் கல்லூரியில இருக்கும்போது ஒரு அழைப்பு... `தம்பி கார்டு குடுத்திருந்தீங்கல்ல... இன்னைக்கு ஒரு அடக்கம் இருக்கு, வாரீங்களா'ன்னு கேட்டாங்க. நானும் இம்ரான்னு ஒரு நண்பனும் கல்லூரிக்கு லீவ் போட்டுட்டு ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். அந்த போலீஸ்காரரும் கூட வந்தார். உடலை எடுத்திட்டு சுடுகாட்டுக்குப் போய் மாலை போட்டு பிரார்த்தனை பண்ணி அடக்கம் செஞ்சோம். ரொம்பவே திருப்தியா இருந்துச்சு.


இந்தச் செய்தி போலீஸ்காரங்க மத்தியில பரவ ஆரம்பிச்சுச்சு. ஒரு மாசம் கழித்து இன்னொரு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டாங்க. படிப்படியா போலீஸ்காரங்க தொடர்பு கிடைச்சபிறகு தினமும் அழைப்பு வர ஆரம்பிச்சிருச்சு.


ஆதரவற்றோர் உடலை போலீஸ்காரங்க கைப்பற்றினா அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில வச்சிடுவாங்க. எப்.ஐ.ஆர் போட்டு பேப்பர்ல விளம்பரம் தருவாங்க. ஒரு மாதத்துக்குள்ள யாரும் உரிமை கோரலைன்னா உடலை எடுத்தாகணும். போலீஸ்காரங்க முன்னிலையில உடலை வாங்கி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோம். தூக்கும்போது, குழிக்குள்ள இறக்கும்போது, பிரேயர் பண்ணும்போதுன்னு 9 புகைப்படங்கள் எடுக்கணும். இறுதியா இடுகாட்டுல சான்றிதழ் வாங்கி போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கணும். சில நேரங்கள்ல உடலைப் புதைச்சபிறகு சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களுக்கு புதைச்ச இடத்தைக் காமிப்போம். அந்த இடத்துல மாலை போட்டு அஞ்சலி செலுத்துவாங்க.

இதுபத்தியெல்லாம் சோஷியல் மீடியாவுல எழுத ஆரம்பிச்சேன். சென்னையில இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் எங்க போன் நம்பரோட ஸ்டிக்கர் ஒட்டினோம். தினமும் அழைப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. இடுகாட்டுல, மார்ச்சுவரியில இருக்கவங்க நெருக்கமா பழக ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் இந்தப் பணியில இணைஞ்சுக்க வந்தாங்க.


போன் வந்ததும் அரைமணி நேரத்துல மாலை, ஊதுபத்தி, கற்பூரம், மஞ்சள், குங்குமத்தோட மருத்துவமனைக்கு எங்க வாகனம் போயிடும். அடுத்த அரைமணி நேரத்துல இடுகாட்டுல இறுதிச்சடங்குக்கான காரியங்கள் முடிஞ்சிடும். இப்போ 7 வாகனங்கள் வச்சிருக்கோம். 4 டிரைவர்கள் முழுநேரமா வேலை செய்றாங்க. இடுகாட்டுல குழி வெட்டுறவங்ககூட எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க. ஏதாவது கொடுத்தாகூட 'போ தம்பி... உன் புண்ணியத்துல எனக்குக் கொஞ்சம் சேரட்டும்'னு சொல்லிடுவாங்க.

2020-ல படிப்பு முடிஞ்சுச்சு சார். அதுக்கப்புறம் முழுநேரமா இந்த வேலையில இறங்கிட்டேன். ஊர்ல இருந்து செக்கு எண்ணெய், ஆர்கானிக் பொருள்கள், நெய்யெல்லாம் வாங்கிட்டு வந்து இங்கே விற்பனை செய்றேன். என் செலவுக்குப் போதுமான வருமானம் அதுல கிடைக்குது. இந்தப் பணிக்கு தெரிஞ்சவங்க உதவுறாங்க.

ஆதரவற்றோர் உடல்கள் மட்டுமல்லாம, வசதியற்ற குடும்பங்கள்ல இறப்பு நடந்தது தெரிஞ்சா அவங்களுக்கும் உதவுறோம். வடமாநிலங்கள்ல இருந்து வந்து இங்கே வேலை செய்றவங்க குடும்பங்கள்ல இறப்பு நடந்தாலும் அழைப்பாங்க. அவங்களுக்கும் கூட நிப்போம்

கொரோனா காலம் ரொம்ப கொடுமையான காலம் சார். வெளியில போறதா வேண்டாமான்னு கூட முடிவெடுக்க முடியல. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குப் பக்கத்துல ஒருத்தர் கொரோனாவுல இறந்துட்டதா அங்கிருக்கிற பராமரிப்பாளர் எங்களை அழைச்சார். எது நடந்தாலும் சரின்னு கிளம்பிப்போய் பாதுகாப்பு உபகரணங்களோட அடக்கம் செஞ்சோம். அதுக்கப்புறம் நிறைய அழைப்புகள் வர ஆரம்பிச்சிருச்சு. இரண்டாம் அலைக்காலம் வரைக்கும் 1,600 உடல்கள் அடக்கம் செஞ்சோம். ஆறடிக்குப் பதில் 12 அடி ஆழக் குழி... அவ்வளவு தான் வித்தியாசம். எங்க நண்பர்கள்ல நிறைய பேருக்கு கொரோனா வந்துச்சு. எனக்கும் ரெண்டுமுறை வந்துச்சு. ஆனாலும் எதற்காகவும் அந்த வேலை தடைபடலே.


இப்போ இதுவே வாழ்க்கையாயிடுச்சு சார். ஆரம்பத்துல இருந்து கூட இருந்த பத்துப்பேர் இப்பவும் அதே வேகத்தோட இருக்காங்க. ஒரு பிள்ளையா எங்க வாப்பாவுக்கு என்னால இறுதிச்சடங்குகள் செய்ய முடியலே. ஒவ்வொரு முறை இறுதிச்சடங்கு செய்றபோதும் வாப்பாவுக்குச் செய்ற மாதிரியே நினைப்பேன். அம்மாவும் அண்ணன்களும், `நல்ல விஷயம் செய்றே, முழு மனசோட செய்டா'ன்னு சொல்லிட்டாங்க.


ஆரம்பத்துல நிறைய அழைப்புகள் வரும்போது உற்சாகமா இருக்கும். இ்ப்போ பயமா இருக்கு சார். ஆதரவில்லாம இறக்கறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. உறவுகளுக்கு மதிப்பில்லாமப் போறதைத்தானே இது காட்டுது... அழைப்பே வராமப் போயிடணும்னு இப்போ நினைக்கிறேன். இப்போ உள்ள தலைமுறைக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க விரும்புறேன் சார். பெத்தவங்களைக் கைவிடாதீங்க, அவங்களுக்கு நம்பிக்கையா இருங்க. கைவிட்டா அவங்க மரணம் கொடூரமாயிடும். அந்தப்பாவம் நம்மை காலம் உள்ளவரைக்கும் சுத்தும்...''

அத்தனை தீர்க்கமாகச் சொல்கிறார் காலித்.

Friday, April 21, 2023

 சமூக நீதியின் காவலர் வி.பி.சிங்


சமூக ஜனநாயகத்தின் அடித்தளம் அம்பேத்கர் ஏற்படுத்தினார் என்றால், அதில் இரும்பு கோட்டையை உருவாக்கி அரணாக நின்றவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற விபி.சிங் என்று சொல்லலாம். வெறும் 11 மாதங்களே ஆட்சியில் இருந்தாலும் மக்களாட்சி என்ற வார்த்தைக்கு இந்திய அரசியல் அகராதியில் அர்த்தத்தைத் தந்தவர் வி.பி.சிங். 

* அம்பேத்கர் பதவியை ராஜினா செய்ய காரணமாக இருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC, MBC ( OBC ) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.

* அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் கொண்டாட்டமாக நாடாளுமன்றத்தில் நடுவே அண்ணலின் புகைப்படத்தை நிறுவினார்.

* பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் நிறைவேற்றினார்.

* தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தார்.

* சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார்.

* ராஜிவ் காந்தி, ‘அமைதி படையினர்’ என்று இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். அவர்கள் மேல் பல குற்றச்சாட்டுகள் எழ அந்த படையினரைத் திரும்ப நாடு வரச் செய்தார்.


* பிறப்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சட்ட அமைச்சரான ராம் விலாஸ் பாஸ்வானை கொண்டு நிறைவேற்ற முன்னெடுப்பு செய்தார்.

* ‘பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று நாடு முழுவதும் எதிர்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும். ஒருவன் சமூக அடிப்படையில் தான் பல்லாயிரம் வருடம் ஒடுக்கப்பட்டு இருக்கிறான். அதனால் சமூக அடிப்படியில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்தார். அதன்வழி மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இடஒதுக்கீடுக்கான கோரிக்கையை நிறைவேற்றினார்.

* மாணவர் அமைப்புகள் மண்டல் கமிஷனை எதிர்த்துப் போராட்டம் செய்தனர். இதில் கொடுமையாக யாருக்காக, யாருடைய உரிமைக்காக வி.பி.சிங் போராடி கொண்டு இருந்தாரோ, அதே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வைத்தே போராட்டம் நடைபெற்றது. தவறான தூண்டுதலில் உயிர் இழப்பும் நடைபெற்றது .

* முடிவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பெற்று இவரது ஆட்சிக் கலைக்கப்பட்டது. சமூக நீதிக்காக போராடிய ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார்.

* பாபர் மசூதி இடிப்பின் போது அமைதிக்காக உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மதவாத கும்பல் இவரது அருகில் உணவு உண்ணும் போராட்டம் ஒன்றை நடத்தியது. அதனால் போராட்டத்தைத் தீவிரப்படுத்த தண்ணீரும் அருந்துவதில்லை என்று முடிவு செய்தார். போராட்டத்தின் நாட்கள் அதிகரிக்க மக்களின் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அன்று தொடங்கிய சிறுநீரக கோளாறு அவரது உயிரைப் பறித்தது.

* நல்ல அரசியல் தலைவராக இருந்த வி.பி.சிங் சிறந்த ஓவியரும் கவிஞருமாவார். இவரது தமிழாக்கம் செய்யபட்ட கவிதை புத்தகமான 'ஒரு துளி பூமி, ஒரு துளி வானம்' சமத்துவ சிந்தனைகளை தன் கவிதைகளில் பேசியுள்ளது.

கடைசியாக இவரது பதவி பறிபோகும் போது "இது உங்கள் கடைசி நாள் அல்லவா அதைப் பற்றி என்ன நினைக்குறீர்கள்? என்று இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 'There is no last date in the Political Calendar' அன்று பதில் சொன்னார். அதாவது ‘அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்பது இல்லை’ என்பதே அதற்கு பொருள்

ஒடுக்கப்படுகிற மக்களுக்காகவும், சமூக நீதிக்காவும் வாழ்வின் இறுதிவரை போராடினார் விபி சிங். இன்று ஒடுக்கப்படுகிற பிற்படுத்தப்படுகிற மக்களின் பெயருக்கு பின்னால், கல்வி பட்டங்கள் இருக்கிறது என்றால் அதற்கு வி.பி.சிங்கின் பணிகள் முக்கிய காரணமாகும். இப்போது வர போகிற சிலையும் சரி, அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வி பட்டங்களும் சரி, நமக்கு சொல்வது என்னவென்றால். விபி சிங்கிற்கு அரசியல் நாள்காட்டியில் கடைசி நாள் என்பது இல்லை என்பதாகும்.