தர்மபுரிக் கலவரமே கடைசியாக இருக்கட்டும்..!
நன்றி: ஆனந்த விகடன். மற்றும் தமிழருவி மணியன்
'நான் ஓர் இந்துவாகப் பிறந்தது என்னை மீறிய செயல். அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அப்போது என் கைகளுக்கு இல்லை. இந்துவாகப் பிறந்ததால், ஏராளமான இன்னல்களையும் இழிவுகளையும் அனுபவித்து விட் டேன். இனி நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மட்டும் சர்வநிச்சயம்’ என்று ஒருமுறை தன் இதயத்தின் சுமையை இறக்கி வைத்தார் அண்ணல் அம்பேத்கர். 'சமத்துவமின்மையே! உன் பெயர்தான் இந்து மதமா?’ என்று அவர் கேட்ட கேள்வி, இன்று பல கோடி நெஞ்சங்களில் பாறையாய்க் கனக்கிறது.
'நாங்கள் போராடுவது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அல்ல. எங்கள் விடுதலைக்கும், வாழ்வுரிமையை மீட்பதற்கும்தான் போராடுகிறோம்’ என்று வேதனையோடு வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். 'இந்திய அரசமைப்புச் சட்டப்படி, தீண்டாமை தடுக்கப்பட்டு விட்டது. ஆனால், எம் மக்கள் மோசமாக நடத்தப்படுவதும், அவமானத்துக்கு உள்ளாவதும், அநியாயமாய்த் தாக்கப்படுவதும், அவர்களது வீடுகள் எரிக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வன்முறைக்குப் பலியாவதும் இன்றளவும் நின்று விடவில்லை’ என, அன்று அம்பேத்கர் சொன்னதற்கு, கீழ்வெண்மணியில் இருந்து தர்மபுரிக் கலவரம் வரை கட்டியம் கூறுகின்றன.
பொறுக்க முடியாத வலி
யும், சகிக்க முடியாத இழிவும் அம்பேத்கரை மதம் மாறச்செய்தன. அவருடன் சேர்ந்து 1956-ல் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தலித்துகள் புத்த மதத்தைத் தழுவினர். ஆனாலும், இன்றுவரை கோடிக்கணக்கான தலித்துகள் இந்துக்களாகவே நீடிக்கின்றனர். உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் யூதர்கள் தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனித்திருக்கவே விரும்பி அழிவுக்கு ஆளாயினர். ஆனால், தலித் பெருமக்களோ இந்துக்களுடன் இணைந்து வாழ விரும்பியே இழிவுக்கு ஆட்பட்டனர்.
நதிமூலம், ரிஷிமூலம் போன்றே இந்துக்களின் சாதி மூலமும் உயர்ந்ததன்று. இந்து சமூகத்தின் சாதிப் பாகுபாடு ஓர் இழிந்த சாபம். பண்டைய பாரதத்தில் தொழில் வழிபட்ட வருணப் பாகுபாடு இணக்கமான சமூகக் கட்டுமானத்துக்கு அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னாளில் உயர் சாதிகளின் சூழ்ச்சியால் வருணப் பாகுபாட்டில் வந்து சேர்ந்த சாதிப் பிரிவுகள், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் கல்லறை சமைத்து விட்டன. புத்தர் காலம் தொட்டு இன்றுவரை 2,500 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிப்பாகுபாடு சமூக நீதிக்கு எதிராகவே இயங்கி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட சாதி 'அகமணமுறை’ மூலமாகவே தன் அடையாளத்தை இழந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. சாதிக்குள்ளேயே நிகழும் மண உறவுகளில்தான் அதனுடைய 'சுத்தத்தன்மை’ பராமரிக்கப்படுகிறது. வேறொரு சாதியின் 'ரத்தக் கலப்பு’ குலத் தூய்மையைக் குலைத்துவிடக் கூடும் என்று ஒவ்வொரு சாதியும் அச்சப்படுகிறது. காதல் திருமணங்கள் மூலமாகவே சாதிக் கட்டுமானம் சரிந்து விடும் என்ற உண்மை, சாதி வெறியர்களை உறங்கவிடாமல் அலைக்கழிக்கிறது. இந்த அச்சமும் அலைக்கழிப்பும்தான் தர்மபுரி சாதிக் கலவரத்தின் அடித்தளம்.
இரண்டு வேறுபட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் அன்பால் இணைந்து, காதலில் கலந்து, கருத்தொருமித்துக் கணவன் மனைவியாய் வாழத் தொடங்கிய பாவத்துக்கு, நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி காலனிகள் தீக்கிரையாயின. குடிசைகள் கருகிச் சாம்பல் மேடாய் சரிந்து விட்டன. வியர்வை சிந்தி சேமித்த பொருட்கள் பறிபோய்விட்டன. பெண்ணின் தந்தையின் தற்கொலையில் 'சாதித்தூய்மை’ களங்கப்படாமல் தப்பி விட்டது. திட்டமிட்ட ஊழித்தாண்டவம் சபிக்கப்பட்ட தலித்துகளின் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விட்டது.
தொகுப்பு வீடுகளில் ஒடுங்கிக் கிடக்க வேண்டிய தலித்துகள், தனிவீடுகள் கட்டி வாழத்தகுமோ? செருப்பின்றி நடக்க வேண்டிய சாதி, மோட்டார் சைக்கிளில் சவாரி வருவது சகிக்கக்கூடியதோ? இரும்பு அணிகலன்களில் அழகு பார்க்க வேண்டிய பெண்மை, பொன்னால் அலங்கரித்துக்கொள்வதைப் பொறுக்கலாகுமோ? கூரையின் கீழே குடும்பம் நடத்தவேண்டிய பஞ்சமர் கான்கிரீட் கட்டடங்களில் கால் பதிக்கலாகுமோ? சாதி இந்துக்கள் என்று பட்டயம் கட்டிக்கொண்டவர்களின் பொறாமைத் தீயில் பொசுங்கி விட்டன மூன்று காலனிகள்.
மழைக்கால வேதனையில் மயில் நடுங்குவதாக நினைத்துப் போர்வையால் மூடிய பேகனும், பற்றிப் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தரையில் வாடிக்கிடந்த முல்லைக் கொடிக்குத் தேர் தந்து நடந்து சென்ற பாரியும், மலரில் அமர்ந்து உறவில் மயங்கிய வண்டுகள் மருண்டுவிடக் கூடாதென்று ஓடும் தேரின் மணிநா ஓசையை நிறுத்த முயன்ற சங்க இலக்கியக் காதலனும் வாழ்ந்து மறைந்த தமிழகத்தில், தலித்துகளுக்கு எதிராக தர்மபுரிக் கலவரம் நிகழ்த்தப்பட்டது நியாயந்தானா?
'ஜீவ ஒழுக்கமாவது ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவரிடத்தும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது’ என்று சமூக நீதிக்குப் பாதை அமைத்துப் பயணித்த வள்ளல் பெருமான், வாடிய பயிரைக் கண்டும் வாடினாரே, அந்த வாழ்க்கை முறையை வளர்த்தெடுக்காத சாதிகள் இருந்தென்ன? இல்லாமற்போயென்ன?
'தாழ்த்தப்பட்டவர்’ என்று சொன்னாலே, தாழ்த்தியவர் யார்? என்ற கேள்வி எழுகிறதே! 'ஒடுக்கப்பட்டவர்’ என்று உரைக்கும்போதே, ஒடுக்கியவர் யார்? என்ற வினா விளைவது இயல்புதானே! இந்தக் குலத்தில் பிறந்து இவ்வளவு இழிவுகளைச் சந்திக்க வேண்டும் என்று இறை வனிடம் வரம் வாங்கியா இங்கு வந்தார்கள்?
கீழ்வெண்மணியில் விவசாயக் கூலிகள் ஊதிய உயர்வு கேட்டதற்காக 1969-ல் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு யார் காரணம்? தலித் என்பதற்காக மேலவளவு ஊராட்சித் தலைவர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டதற்கும் எது வெறியை வளர்த்தது? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளில் 10 ஆண்டுகள் தேர்தலே நடத்தப்படாமல் ஜனநாயக நடைமுறைகள் ஏளனத்துக்கு உள்ளானது எந்த மதத்தின் போத னையால்? கொடியன்குளம், சங்கரலிங்கபுரம், உத்தப்புரம், நாலுமூலைக்கிணறு, மாஞ்சோலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடுகளுக்கு மதமா துணை போனது? கவுண்டம்பட்டியில் ஒரு தலித் வாயில் சிறுநீர் ஊற்றியதும், திண்ணியம் கிராமத்தில் இரண்டு தலித்துகளின் வாயில் மனித மலம் திணித்ததும் மதபோதகர்களின் தூண்டுதலாலா? சில சாதி வெறியர்களின் தவறுகளுக்கும் ஆதாய அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிக்கும் சமயம் என்ன செய்யும்?
மதுரை வைத்தியநாத அய்யர் தலைமையில் மீனாட்சி கோயிலில் ஜூலை 8, 1939 அன்று ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், 75 ஆண்டுகளுக்குப் பிறகும் சில ஆலயங்களில் தலித்துகளின் பிரவேசம் சாதி இந்துக்களால் தடுக்கப்படுவதில் யாருக்குச் சம்மதம்? தலித்துகள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று, கடவுள் கனவில் தரிசனம் தந்து திருவாய் மலர்ந்தாரா? 'இறைவனைச் சிந்திக்கும் ஒருவனைக்கூடத் துன்பம் தாக்குமெனில், அத்தகைய இறைவனால் என்ன பயன்? அந்தக் கடவுளைப் பசிபிக் பெருங்கடலில் வீசி எறிந்து விடுங்கள்’ என்று, சான்பிரான்சிஸ்கோவில் விவே கானந்தர் முழங்கியதை நம் தலித்துகள் முதலில் யோசிக்கட்டும்.
சுடுகாட்டில்கூடச் சாதி சமத்துவம் இல்லாத தேசம், நரகத்தைவிட மோசமானது. தலித்துகளின் பிணங்களைப் பொதுச்சுடுகாடுகளில் எரிக்கவும், புதைக்கவும் அனுமதி இல்லையெனில், சுதந்திர இந்தியாவில் அவர்கள் அடைந்த வாழ்வியல் உரிமைகள்தான் எவை? தீண்டாமைச் சுவர்களும், தனி மயானப் பாதையும், இரட்டைக் குவளையும் இன்றும் தொடர்ந்தால், நாகரிக சமுதாயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அந்த தலித் மக்களுக்கு ஆதரவாகக் கரம் நீட்ட வேண்டாமா? தலித் பிள்ளைகள் படிக்கும் அரசுப்பள்ளிகளில் சாதி இந்துக்களின் குழந்தைகளைச் சேர்க்க மறுப்பதும், தலித் பெண்கள் சமைக்கும் சத்துணவு மையங்களில் சிறுவர்களைச் சாப்பிடாமல் தடுப்பதும் தமிழ்ப் பண்பாடா?
பஞ்சமி நிலம் பறிப்பு, பராமரிப்பின்றிப் பழுதடைந்து கிடக்கும் தொகுப்பு வீடுகள், சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை, குழி விழுந்த சாலைகள், தரமற்ற பள்ளிக் கல்வி, மருந்து இல்லாத மருத்துவமனைகள், மோசமான கழிப்பிடங்கள் என்று தலித்துகள் வாழ்க்கை வாகனம் புறக்கணிப்புப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கிறது. இந்திய சுதந்திரத்தின் பயன் இவர்களுக்கு இல்லையா? இந்த ஆதித்தமிழர்களுக்குத் தேவை நம் ஆறுதல் வார்த்தைகள் அன்று; படிநிலைச் சமூகத்தின் இறுக்கமான பிடியிலிருந்து விடுதலையும், பூரணமான வாழ்க்கை உரிமைகளும்தான் அவர்களின் அவசரத் தேவைகள்.
இந்து மதம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது அரங்கேற்றப்பட்ட தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அந்தக் கொடுமைகள் இப்போது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்படுவது இல்லை. பார்ப்பனர் தனித் தீவாக ஒதுங்கி விட்டனர். இன்று 'சாதி இந்துக்கள்’ என்ற பட்டயத்தைச் சுமப்பவர்கள் பார்ப்பனர் அல்லாதோரே! தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்’ எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகளையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்’ என்ற பழைய பஞ்சாங் கத்தையே புரட்டுகின்றனர். பிராமணர் அல்லாதார் இயக்கங்களால் சாதி ஆதிக்கம் வேறு வடிவங்களில் வளர்ந்திருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தில் இன்று 86 வகைகளில் தீண்டாமை வலம் வருவதாக ஓர் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
'இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு காலநிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. கதவடைப்புக் கருத்தின் (closed door policy) வாயிலாகத் தன்னைத்தானே ஒரு சாதியாக அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப் பெரியனவாகவும், மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமுமே ஆகும்’ என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லது.
சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும், மொழிப் பற்றையும் முற்றாகப் புறந்தள்ளி விட்டு, மலிவான கட்சிஅரசியலிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்து விட்டதுதான் மிக மோசமான அவலம். சாதிகளுக்கு இடையே பகையை வளர்ப்பதை விடவும் பண்பாடற்ற, பாவகரமான செயல் வேறொன்றும் இல்லை என்பதை எல்லாச் சாதித் தலைவர்களும் முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு சாதியையும் வாக்கு வங்கியாகத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் போக்கில் இருந்து தலைவர்கள் விடுபட வேண்டும். கதியற்ற மக்களுக்குத் தொண்டு புரிவதுதான் உண்மையான சமயத்தின் சாரம் என்பதை மதவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
'என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி, 'தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார். 'இந்தியாவின் உயர்சாதி மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். 'நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.
'இந்த நாட்டில் லட்சோப லட்சம் ஏழை மக்கள் பசிப்பிணிக்கும், அறியாமைக்கும் இரையானவர்களாக இருக்கும் வரையில், அவர்களுடைய உழைப்பின் பயனைக்கொண்டு கல்வி கற்று, அவர்களைக் கவனிக்காமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் நான் துரோகி என்றே சொல்வேன். துன்பத்தில் ஆழ்ந்துள்ள ஏழைகளை வதைத்துப் பெற்ற பணத்தைக்கொண்டு சொகுசாக அலைந்து திரிபவர்கள் பசியில் வாடும் 20 கோடி மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால், அவர்களை நன்றி கெட்ட பாதகர்கள் என்றே பறை சாற்றுவேன்’ என்று நெஞ்சக் கனல் தெறிக்க முழங்கினார் அந்த ஆன்மிகத் துறவி.
'சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க, நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி, நான் வேறு சாதி; அவன் வேறு சாதி. எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை சாதிப்பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமையை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. ஆனால், தமிழகத்தின் தலித் தலைவர்களுக்கோ இந்த காந்தியும், விவேகானந்தரும், பாரதியும் என்றால் கசக்கின்ற வேம்பு, முதலில் கசப்பது முடிவில் இனிக்கும் என்பதை அவரறியார்!
தமிழினமே! தர்மபுரிக் கலவரமே கடைசியாக இருக்கட்டும். தலித்துகளே ஆதித் தமிழர்கள். அவர்கள் அனைவருமே உண்மை உழைப்பாளிகள். அவர்களுடைய உழைப்பின்றி எந்த சாதி இந்துவுக்கும் உயர்வில்லை. அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வரை நம் இனத்தின் பண்பாட்டுக்கு எந்தப் பெருமையும் இல்லை!