தமிழினத்தந்தையின் இறுதி மணித்துளிகள்
நன்றி: ஆனந்த விகடன்
வேப்பேரியில் காலை 9 மணி. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக்கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடைபோல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந்தது. 19-ம் தேதி தி.நகரில் கடைசியாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.பேச்சின் இடையில் திடீரென்று அவர், ''ஐயோ... அம்மா...'' என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு ''என்ன... என்ன?'' என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியாருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்குவதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது.பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். ''இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு?'' என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.
பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7-30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார். கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு, சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி, மலைப்பழம் சாப்பிடுவார். பழங்களில் மலைப்பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறைவான சோறுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது. ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.
சரியாக 2.30 மணிக்கு 'அம்மா’ என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவது உண்டு. ஒரு வேளைதான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடுவார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரவில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடுவதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக்கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.
கடைசி நாட்கள்...
டிசம்பர் 21-ம் தேதி வட ஆற்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால், 20-ம் தேதி பிற்பகல், ஹெர்னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந்தைகளைப் போலப் பயம். ''பார்த்துக் குத்துங்க...'' என்று சொல்வார். சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள், அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசாரித்துஇருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே, 21-ம் தேதி பிற்பகல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.
வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார் டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றா கத் தூங்கியிருக்கிறார். மறுநாள் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித்திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு 'வீரமணி’ என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயு வினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலிசெய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.
23-ம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ் கொடுத்தபோது, 'என்ன அய்யா, வாயில ஊத்தணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன்’ என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக்கொண்டார். 'எதையாவது சாப்பிட்டால் தாடியை அழுத்தமாகத் துடைத்துக்கொள்வதுபோல அப்போதும் துடைத்துக்கொண்டார்’ என்றார் வீரமணி.
23-ம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரியாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால், பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸிஜன் குழாயைப் பொருத்தினார்கள்.
24-ம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. 'பல்ஸ்’ குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7-10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன்றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரியாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.
''யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புடவையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடைவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக்கொண்டார். எல்லோ ரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலி யையும் கொண்டுவரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்ந்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்.''
உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச்சியைக் கண்கள் கலங்கக் கூறினார் விடுதலை வீரமணி