தமிழை இந்தியாவின் இரண்டாவது மொழி ஆக்குங்கள்!”
பி.ஆரோக்கிய வேல்
''இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும் அறிந்துகொள்ளவில்லை.
ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது.
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!'' - இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. தருண் விஜய் என்றால் நம்ப முடியுமா? அதுவும், 'இந்திதான் இந்தியாவையே இணைக்கும் மொழி’ என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரின் குரல் இது என்பது கூடுதல் வியப்பு!
'பி.ஜே.பி-யின் சிந்தனைச் சிற்பிகளில் ஒருவர்’ என்று சொல்லப்படும் தருண் விஜய், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சீடர். வாஜ்பாயைத் தொடர்ந்து 'பஞ்சன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ். இதழுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர். அவரைத் தொடர்புகொண்டு தமிழ்க்குறித்து அவர் பேசியதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். நம்மைவிட மகிழ்ச்சியாக பேசத் தொடங்கினார் தருண் விஜய்...
''என்னுடைய தமிழ் ஆர்வத்தைப் பார்த்த என் மகள் சாம்பவி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அவளது தோழியிடமிருந்து தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிவந்து கொடுத்திருக்கிறாள். வசந்தி ஸ்டான்லி போன்ற சில நண்பர்களின் உதவியோடு தமிழ் படித்துவருகிறேன். தமிழ் முனிவர் அகத்தியர் தொடங்கி சுப்பிரமணிய பாரதி வரை தமிழ் அறிஞர்கள் பலரைப் பற்றி படித்திருக்கிறேன்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்தபோது தமிழில் 'வணக்கம்’ என்று சொன்னேன். அதோடு பாரதியின் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றையும் அவருக்குப் பரிசளித்தேன்!''
'' 'இந்தி’யைத் தாய்மொழியாகக் கொண்ட உங்களுக்கு 'தமிழ்’ மொழி மீது எப்படி இந்த அளவுக்குக் காதல்?''
''கங்கையை வணங்குவதற்கு ஒருவர் கங்கை நதிக்கரையில்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோலத்தான், தமிழின் மேன்மையைப் போற்றுவதற்கு நான் தமிழ்நாட்டில் வாழ்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!
தமிழ் மொழி, ஒரு வானவில் போன்றது. அதன் வண்ணங்களை பல மொழிகளிலும் காண முடியும். பாரத தேசத்தின் பண்பாட்டையும் ஞானத்தையும் தமிழ் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றுக்கும் அதுதான் ஊற்று மொழி. குறிப்பாக, விந்திய மலைக்குத் தெற்கே இருக்கும் அனைத்து மொழிகளிலும் தமிழின் தாக்கம் மிகவும் அதிகம். அதனால் தமிழ் மொழிக்காகப் பேசவேண்டியது 'இந்தியன்’ என்ற வகையில் எனது தர்மம்.
உலகின் எந்தப் பெருநகரங்களுக்குச் சென்றாலும் அங்கே ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொடுக்க ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மொழிகளைக் காட்டிலும் இலக்கணமும் இலக்கியச் செறிவும்கொண்ட மொழி, தமிழ். ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் மொழிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் ஏன் தமிழுக்குத் தரப்படவில்லை என்பதே என் ஆதங்கம்!''
''வட இந்தியர்கள் தமிழைத் தள்ளிவைப்பதற்கு என்ன காரணம்?''
'' 'இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்’ என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், ஏன் அப்படிப்பட்ட போராட்டம் அங்கு தோன்றியது என்பதன் பின்னணி சொல்லப்படவில்லை. இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ... தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!''
''ஆனால், ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழி உள்பட பல இந்திய மொழிகளை பெருமளவு பாதித்து இருக்கிறதே!''
''உண்மைதான்! இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்தும் வர்த்தகத்துக்கும், விஞ்ஞானத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் ஆங்கிலத்தை வெகுவாகச் சார்ந்திருக்கின்றன. 'ஆங்கிலம்தான் வளர்ச்சிக்கான வழி’ என்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் அனைத்திலும் ஆங்கிலம் இல்லை. அந்த நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழிதான் கோலோச்சுகிறது. அதே நிலையை இந்தியாவிலும் சாத்தியப்படுத்த வேண்டும்!''