Wednesday, December 18, 2013

சிவாஜி என்றொரு கலைஞன் 
 
 
ந்த ஆண்டு 'திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் 80 பிராயமான 'அப்பர்’ ஆக நடித்து, தனிச் சாதனை ஒன்றை நிகழ்த்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே சமயத்தில் 'வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தில் 'பிரஸ்டீஜ் பத்மநாபன்’ ஆகத் தோன்றி, அந்தப் பாத்திரத்தை நினைத்த மாத்திரத்திலேயே கண்களில் நீர் தளும்பும்படியும் ஓர் அற்புத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
 
இந்த இரு பாத்திரங்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணும் நடிகர் திலகம், அந்தப் பாத்திரங்களை ஒட்டிய தமது எண்ணங்களை இங்கே தருகிறார்!
''ஒரு நடிகர் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும் என்பது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை தொடங்கினால்தான், நாளாக நாளாக அவன் நடிப்புப் பண்பட்டு, மெருகடையும். பக்திப் படங்களில் நடிக்கும்போது, நடிப்புக்கான மிக உயர்ந்த கல்விச்சாலை ஒன்றில் இருப்பதுபோன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. அந்த நினைப்பில், 'திருவருட்செல்வர்’ அப்பராக நான் நடித்ததை ஒரு பெறற்கரிய பேறாகக் கருதுகின்றேன்.
 
அப்பராக நான் நடித்திருப்பதைப் பார்த்தவர்கள், நம் காலத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கும் காஞ்சிப் பெரியவர் அவர்களையே என்னுடைய நடிப்பு நினைவூட்டுவதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மையே. அப்பராக நடிக்க வேண்டும் என்ற அழைப்பு வந்தவுடனேயே, என் மனத்தில் பளிச்சிட்டவர் அந்த மகான்தான்.
காஞ்சிப் பெரியவர் அவர்களை நான் சந்தித்ததைப் பற்றி நினைத்தால், இப்போதுகூட என் உடல் புல்லரிக்கிறது.
 
எனக்கு, தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டையில் ஒரு பண்ணை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் எதேச்சையாக அந்தப் பண்ணைக்கு விஜயம் செய்திருக்கிறார். அங்கே சில மணி நேரம் அவர் தங்கியிருக்கிறார். ஏராளமான குடும்பப் படங்கள் அங்கே இருப்பதைக் கண்ட அந்த மகான், அங்கே நிறையப் பேர் வசிப்பதாக எண்ணிவிட்டார்போலும். உடனே, அருகில் இருக்கும் சத்திரத்துக்குச் சென்று தங்கியிருக்கிறார்.
 
 
பிறகு, நான் பண்ணைக்குச் சென்றபோது, அவர் அங்கு வந்த செய்தியை அறிந்தேன். பெரியவரை நேரில் பார்க்க வேண்டும், அந்தக் கனிந்த முகத்தவரோடு மனம்திறந்து பேச வேண்டும் என்ற வேகம் எனக்குள் ஏற்பட்டது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளுடன் ஒன்றிவிட்ட அந்தச் சந்திப்பு, கபாலீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. அப்போது அங்குதான் பெரியவர் தங்கியிருந்தார்.
 
கல்யாண மண்டபத்தை நான் அடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. என்றுமே இருந்திராத ஒரு புத்துணர்ச்சியோடு, படபடக்கும் நெஞ்சுடன் பெரியவர் இருந்த அறையில் நுழைந்தேன். கீழே விழுந்து, உடல் பூமியில் படும்படி வணங்கினேன். மின்சார விளக்குகளை அணைக்கும்படி சொன்னார் பெரியவர். அருகில் இருந்த குத்துவிளக்கு மட்டும் மங்கிய ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்த நிழலாடிய ஒளியில், பளிச்சிட்டன அவர் கண்கள். அழகிய குறுந்தாடிக்கு இடையில் மென்முறுவலுடன், நல்ல கனிந்த குரலில் அன்பொழுகப் பெரியவர் பேசலானார். என் கண்கள் அவரை விட்டு அகல மறுத்தன. காதுகள், அவர் பேச்சுக்கு அடிமையாக, எனது நா சிலவற்றுக்கு அடக்கமாகப் பதில் சொல்லிற்று. என் உள்ளத்தில் அவருடைய அந்த இணையற்ற உருவம் என்றும் அழியாதபடி பதிவாகிக்கொண்டிருந்தது. 10 நிமிடங்கள் அந்தத் தெய்வ சந்நிதியில் இருந்தேன்.
 
இந்தச் சந்திப்பின் உச்சகட்டமாகப் பெரியவரிடம் விடைபெறும்போது, அவர் ஆசீர்வாதமாகச் சொன்ன வாய்மொழியைக் கேட்டு நான் கண்ணீர் உகுந்தேன். 'நீங்க நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்றதுக்கு உங்க தாய்-தந்தையர் பல்லாண்டு வாழப் பகவானைப் பிரார்த்திக்கிறேன்’ என்று சொன்னார் பெரியவர்.
 
தாய்-தந்தையை முன்னிலைப்படுத்தி அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மெய்சிலிர்க்காமல் இருக்குமா?
 
அன்று நடந்த அந்தச் சந்திப்பினால் பெரியவரின் பாவங்கள், என் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டன. 'அப்பர்’ வேடத்தில் நான் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, என் மனத்தில் படிந்த அந்தப் பாவங்கள் தானாகவே என் நடிப்பில் ஆட்சி செய்தன.
 
ல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மகானைக் கற்பனையில் கண்டு நடிப்பது மிகவும் சிரமமானது. நிகழ்காலத்தில் நடமாடுகின்ற ஒரு மகானைப் போல அப்பரைச் சித்திரிப்பதனால்தான், மக்களிடையே அப்பரைச் உணரச் செய்வதில் இன்னும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணினேன். மொட்டைத் தலையுடன் நெற்றியில் உத்திராட்ச மாலையை அணிந்து நடித்திருந்தால், பக்தியால் நெஞ்சுருகிய அப்பரை என்னால் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியிருக்க முடியாது என்பது என் எண்ணம். பெரியவர், சில சமயம் காட்சி தரும் நரைத்த குறுந்தாடியுடன் அப்பர் இருந்தால்தான், 80 வயதுக்கான முதிர்ந்த பருவத்தைத் தெளிவாகக் காட்ட முடியும் என்று நினைத்தேன் நான்.
 
காஞ்சிப் பெரியவர் அவர்களை மனத்தில் எண்ணிக்கொண்டேதான் மேக்கப் நடந்தது. பிளாஸ்டிக் மேக்கப் அது.         16 நாட்களுக்கு அதைப் போட்டுப் போட்டு எடுக்கும்போது ஒரு யுகம் கழிவதுபோல் இருந்தது எனக்கு. இந்த மேக்கப் போட மூன்று மணி நேரம் பிடித்தது. இன்னும் எனக்குக் கன்னத்தில் வலி இருக்கிறது.
 
அப்பராக நான் நடித்ததில், எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு.      80 வயதான அப்பரும், ஒன்பது வயதான சம்பந்தரும் சேர்ந்து திருக்கோயிலின் கதவினைத் திறக்கும் காட்சி அது. ஞானசம்பந்தரின் ஒரு பாட்டுக்குக் கதவு மூடிக்கொண்டுவிட்டதே என்று உணர்ச்சிப் பெருக்கெடுக்கச் சொல்லுவார் அப்பர். எனக்கு அப்போது உண்மையாகவே உணர்ச்சி வந்துவிட்டது. ஆனால், என் உணர்ச்சியை அந்தக் குரலில் பூரணமாகக் காட்ட முடியவில்லை. ஏனென்றால், அந்தக் குரல் பிற்பாடு 'டப்பிங்’ செய்யப்பட்டது. அது 'அவுட்டோர்’ படப்பிடிப்பு. கடலின் இரைச்சலில் என் குரலைச் சரியாகக் கொடுக்க முடியவில்லை என்று, தனியாக 'டப்’ செய்தார்கள்.
 
ப்பர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர். ஆனால் வியட்நாம் வீட்டில் வரும் 'பிரிஸ்டீஜ்’ பத்மநாபன், நிகழ்காலத்து - 'மாடர்ன் பெரியவர்’. இவ்வாறு ஒரு சிறிய அளவு ஒற்றுமையை இந்த இரு பாத்திரங்களிலும் நான் காண்கிறேன். இந்த நாடகம் பிரமாத வெற்றி பெற்றதென்றால் அதில் என்னுடைய உழைப்பு பாதி. ஆனால், பெருமை எல்லாம் கதாசிரியர் சுந்தரத்தைச் சேரும். அவர் என்னை அப்படி நடிக்க வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
 
'வியட்நாம் வீடு’ கதையை நாடகமாக ஆக்க முடிவு செய்தவுடன்,  சுந்தரத்துடன் நான் தஞ்சாவூருக்குப் போனேன். மூன்று நாட்கள் நாடகத்தின் வசனத்தைப் படித்தார் சுந்தரம். என் வசனம் மட்டும் 125 பக்கங்கள் இருந்தன. இரண்டு நாட்களில் என் வசனங்கள் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. என் மனத்துக்குப் பிடித்துவிட்டதென்றால், வசனம் எனக்கு உடனே மனப்பாடம் ஆகிவிடும்.
 
பிராமண பாஷை வருகிறது என்றவுடன் நான் அதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டேன். இதுவரையில் பிராமண பாஷையை நாடகத்தில் கிண்டலுக்கும் கேலிக்குமாக - 'காமெடிப் பகுதிக்கே’ - பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நான் அந்தப் பிராமண பாஷையைக்கொண்டு, உணர்ச்சிமயமாக நடிக்கவேண்டியதாக இருந்தது. ஆகவே, அதில் பூரண வெற்றி பெறுவதை ஒரு சங்கற்பமாகக் கொண்டேன்.
 
வெற்றி பெறத்தான் செய்தேன் என்பதை நாடகம் நடக்கும்போது மெதுவாகவும் உரக்கவும் என் காதுகளில் விழுந்த விம்மல் ஒலிகள் நன்கு நிரூபித்துவிட்டன. சொந்த வாழ்க்கையில் நடந்த  உணர்ச்சிகளைக் கொட்டத்தக்க சிறிய சம்பவத்தின் சாயல் ஒன்றை நாடக மேடையில் பார்க்கும்போது, பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவங்களை எண்ணிப் பார்த்து, அழுதேவிடுகிறார்கள். பத்மநாபன், உயர்ந்த நிலையிலிருந்து இறங்குகின்ற நிலையைத் தங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு அழுதவர்கள் பலர். அவர் தன் தாயைப் பற்றிக் கூறும்போது, தங்கள் தாயை நினைத்துக் கண்ணீர் விட்டவர்கள் பலர்!
 
அப்பர் பாத்திரத்திலும், பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்திலும் நடித்ததை என் நடிப்புத் துறையின் மைல் கற்களாகவே எண்ணிக்கொள்கிறேன். மறைந்த திரு.ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள் என் நாடகம் ஒன்றுக்குத் தலைமை வகித்தபோது சொன்னது என் நினைவுக்கு வருகிறது. 'சிவாஜி கணேசனுக்கு நடிப்பதற்குத் 'திராணி’ இருக்கிறது. நடிக்கிறார்... பார்ப்பதற்கு வந்திருக்கும் உங்களுக்கு அவர் நடிப்பின் தன்மையைப் பூரணமாக உணர்ந்து ரசிக்கின்ற 'திராணி’ வேண்டும்’ என்றார் அவர்.
 
நல்ல நடிப்பைப் போற்றுகிற மனப்பான்மை குறைகிறதோ என்ற பயம் எனக்கு உண்டு. 'கப்பலோட்டிய தமிழன்’ படம் நல்ல முறையில் வெற்றி பெறாதது இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
 
அப்பரையும், பிரஸ்டீஜ் பத்மநாபனையும் பார்த்து உருகுகிறார்கள் என்றால், அந்தப் பயத்துக்கு அவசியம் இல்லை என்று நினைக்கவும் தோன்றுகிறது.
 
எத்தனையோ பாத்திரங்களில் நடிக்கலாம். 'நாம் என்று நிற்க வேண்டும்’ என்று சொல்வார்களே, அதைப் போல - நான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை முழுமையாகக் காட்ட இந்த இரு பாத்திரங்களிலும் நான் செவ்வனே நடித்திருந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.''