Tuesday, May 17, 2022

30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்!

நன்றி - ஆனந்த விகடன்

கோல்பி ஸ்டீவன்சன்

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த கனவை அதன் தாயால் காணமுடிந்தது.

தாய் மட்டுமல்ல, அங்கே பயிற்சி பெறும் பல சாம்பியன் வீரர்கள் கண்களுக்கும் அது படாமலில்லை. பதின் பருவத்தின் தொடக்கத்தில், சாம்பியன் வீரர்கள் செய்வதைப் பார்த்து அவர்களைப் போலவே செய்ய பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான் கோல்பி. பார்க் சிட்டியின் மலைகளில் பரவிக்கிடக்கும் பனியில் எந்த மூலையிலும் கோல்பியைத் தடுக்கும் தடுப்பணை இருப்பதாகத் தெரியவில்லை. மலைகளில் சறுக்கும் அந்தச் சிறுவனுக்காக சிகரம் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், "Life is what happens to us when we are busy making other plans" என்னும் ஜான் லென்னானின் வாக்கியத்திற்கு ஏற்ப, கோல்பியும் ஒரு கொடூரத்தைச் சந்தித்தார்.
2016-ம் ஆண்டு. 16 வயது. காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நெடுநேர பயணத்தினால் அசதியில் சற்றே கண்ணயர்ந்தார் காரை ஒட்டிய கோல்பி. அப்போது நிகழ்ந்த விபத்தில், அவரது உடம்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது மண்டையோட்டில் 8 இடங்களில் முறிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட வலதுபுற மண்டையோடு முழுவதும் பலத்த காயமடைய, 3 நாட்களுக்கு செயற்கையாக கோமாவில் வைக்கப்பட்டார். தான் வாங்கிக்கொடுத்த பனிச்சறுக்கு பலகையுடன் வீட்டில் காத்திருந்த தாயும், சிம்மாசனத்தை ஒதுக்கி வைத்திருந்த சிகரமும், அன்பை அள்ளிக் கொடுக்கத் தயாராயிருந்த அன்பு உள்ளங்களும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தன.

எனினும் கோல்பி உயிர்பிழைத்தார். அப்போது எந்த மனநிலையில் அவர் மருத்துவரிடம் அந்தக் கேள்வியை கேட்டாரெனத் தெரியவில்லை. "நான் மறுபடியும் பனிச்சறுக்கு விளையாடலாமா டாக்டர் ?" . டாக்டர் சிரித்துக்கொண்டே "இவ்வளவு அடிபட்டும் மூளைக்கு எந்த ஆபத்தும் வராமல் பிழைத்துள்ளீர்கள். ஏன் விளையாடக்கூடாது?!", என்று உற்சாகமாகப் பதிலளித்தார். அப்போது கோல்பியின் மனதில் ஒன்றே ஒன்றுதான் இருந்திருக்க வேண்டும். நம்பிக்கை! ஷாஷன்க் ரிடம்ப்ஷன்ன் படத்தில் ஒரு வசனம் வரும். "Hope is a good thing. May be the best of things. And no good thing ever dies"

ஆனால் படுக்கையிலிருந்து மீள்வதே அவருக்கு சுலபமான காரியமாக இல்லை. ஒவ்வொரு நாளும் நரகத்திலிருப்பது போல வாழ்ந்து, 6 மாதங்களை கடத்தி இறுதியாக படுக்கையிலிருந்து மீண்டார் கோல்பி. பின்னர் அடி அடியாகப் பனியில் கால்தடத்தைப் பதித்தார். அத்தகைய கொடூரத்திற்குப் பின்னர் மீண்டும் விளையாடத் தொடங்க ஒரு அதிபயங்கர நெஞ்சுரம் வேண்டும். மனதில் அத்தகைய உறுதி இருந்தால் மட்டுமே அதை நினைத்துக்கூட பார்க்க முடியும். அது கோல்பிக்கு இருந்தது. இதுமாதிரியான சம்பவங்கள் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியமைக்க வல்லவை. காலையில் கண்விழித்து, குளித்துவிட்டு ஒரு சறுக்குக்கு செல்வதோ, அல்லது இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதுவே ஒரு தலைசிறந்த ஆசீர்வாதமாகக் கருதுவதாகக் கூறினார் கோல்பி.

அதே சமயம் இத்தகு சம்பவம் வாழ்க்கையில் பெரும் உந்துதலையும் அளிக்கும். நமது கனவுகளை ஏன் துரத்தக்கூடாது என்ற கேள்வியையும் அதற்கு பதில் ஒன்றே இல்லாதது போன்ற மனநிலையையும் அளிக்கும். "உங்களுக்கு அப்படி ஒரு கொடூரம் நடந்தும் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் கனவை துரத்தாமலிருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதை பின்தொடர்ந்து செல்லுங்கள் முன்னர் இருந்ததைவிட அதிக வெறியுடன், உந்துதலுடன் செயல் படுவீர்கள்" என்றார் கோல்பி. பனிமூட்டம் விலகி சிகரம் அவர் கண்ணுக்கு தெரிய தொடங்கியது. உற்சாக குரல்களும் ஆதரவுக் கரங்களும் அவரை பனியில் தள்ளிவிட தயாராக இருந்தனர். அப்படித்தான் 24 வயதில் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் தனது பலகையுடன் வழியில் இருக்கும் தடைகளை நோட்டம் விட்டுக்கொண்டு நின்றிருந்தார் கோல்பி ஸ்டீவன்சன்.

உலகத்தின் பார்வையே அவர்பால் இருக்க, கோல்பியின் பார்வை சிகரத்தின்மீதே இருந்தது. போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த கோல்பி முதல் முறையில் பாதியிலேயே தடுமாறி கீழே விழுந்தார். கோல்பி அவரது மனநிலையை குறித்து முன்னர் ஒருமுறை பேசியபோது, " நான் மீண்டும் இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கியதும் இத்தகைய உயர்ந்த நிலையில் போட்டியிடுவதையுமேயே மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகக் கருதுகிறேன். அத்தகைய மனநிலை இருப்பதால் அதை விட அதிகமான சாதனைகள் தானாக நடைபெறும்" என்றார்.

அத்தகைய மனநிலையுடனும், அன்றும் அவருடன் இருந்த நம்பிக்கையுடனும் அடுத்த சறுக்கலை தொடங்கினார் கோல்பி. மூன்றாவது சறுக்கலை முடிக்கும்போது , அவரே எதிர்பாராத வகையில் அவர் தன்னுடைய சிறந்த ஆட்ட வகையாக எண்ணிடாத பிக் ஏரில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்சென்றார். சிகரத்தின்மீது காத்துக்கொண்டிருந்த நாற்காலி நிரப்பட்டது. காத்துக்கொண்டிருந்த கரங்கள் ஒலிக்கத் தொடங்கின. அழுதுகொண்டிருந்த தாய் புன்முறுவல் புரிந்தாள். கோல்பி தன் கண்களை ஒருமுறை மூடி திறந்தார். அவருக்கு இப்போதும் எந்த தடையும் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு கனவு, ஒரு பயணம், ஒரு சகாப்தம்... கோல்பி ஸ்டிவென்சனின் இந்த சாதனை என்றும் நமது தோள்களில் ஓரத்தில் ஒரு கையாக நம்மை தட்டி கொடுத்து மேல் எழுப்ப உடன் இருக்கும்.

Tuesday, May 3, 2022

அனுசரிப்பைக் கைவிடும் அடுத்த தலைமுறை!
- மயிலன் ஜி சின்னப்பன்
நன்றி : ஆனந்த விகடன்

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இலக்கியத்திற் கான நோபல் பரிசு பெற்ற பெர்ட்னண்ட் ரஸ்ஸலை பி.பி.சி நேர்காண்கிறது. அதில் இப்படியொரு கேள்வி - ‘இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரான தலைமுறையினருக்கு அக்காலத்திற்கும் பொருந்துவதாக என்ன சொல்ல விரும்புவீர்கள்?’ பதிலை ரஸ்ஸல் இரு பகுதிகளாகப் பிரிக்கிறார். அறிவுசார் கருத்தாக, ‘கிடைக்கும் தரவுகளின் மெய்வடிவத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் எப்படியாக அவற்றை நம்ப விரும்புகிறீர்கள் என்பதோ, அப்படி நம்புவதால் கிட்டக்கூடிய ஆதாயங்களோ உங்களின் சிந்தனையை மடைமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார். இரண்டாவதாக இதைச் சேர்க்கிறார், ‘சகிப்பைப் பழகுங்கள். நம்மைச் சுற்றியிருப்பவர் நமக்கு ஒவ்வாத ஒன்றைச் செய்யும் விதத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு இயங்கமுடியும். இதன் அடிப்படையில் பூமியில் மனிதகுலம் நீடித்திருக்க வேண்டுமெனில் கருணையையும் சகிப்பையும் மனிதன் தக்கவைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.’

மேற்குலகின் சிக்கல்களாக எவையெல்லாம் இருக்கக்கூடுமென அவர் கருதினாரோ, அவற்றைத்தான் மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதியெடுக்க முனையும் இன்றைய நம் தலைமுறை அனுபவிக்கிறது. காலனிய ஆதிக்கத்திற்குப் பின் மெல்லத் தலையெடுத்த இந்த அடையாளச் சிக்கலை இன்றைய துரித வாழ்க்கைமுறை இன்னுமே மலினமாக்கி இருக்கிறது.

கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துவரும் உறவுமுறிவுகளைப் பற்றி ஆய்வாளர்கள் நிறையவே விசனப்பட்டுவிட்டார்கள். அநேகம்பேர் எளிதான பொதுப்புரிதலின் வழியாகவே இதை விளக்க முயல்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று கல்வி . பெரும்பாலான பெண்கள் கல்வியறிவு கிடைத்து மேம்பட்டுவிட்டதாகவும், பொருளாதாரச் சுதந்திரத்தை எட்டிவிட்டதாகவும், மணவாழ்விலிருந்து விலகும் முடிவை மிகத் தீர்க்கமாக அவர்களால் எடுக்கமுடிவதாகவும் இந்த அலசல்கள் சொல்கின்றன. அப்படியான பொருளாதாரச் சுதந்திரமற்றவர்கள் முந்தைய தலைமுறையின் கட்டுப்பெட்டித்தனமான குடும்ப அமைப்பிற்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கருத்து வரையப்படுகிறது. சற்று ஊன்றிப்பார்த்தால், இன்றைய பெரும்பாலான உறவுமுறிவுகளை பெண்தான் ஆணிடமிருந்து விடுதலையடைய முன்னெடுக்கிறாள் என்பதான கருத்தை இது முன்வைக்கிறது. இது முழுக்கவே உண்மையல்ல எனினும் பொருட்படுத்தத்தக்க முதல் காரணமாக இதை ஏற்கவேண்டும்.

உரிமைகள் குறித்த புரிதலுடன் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுவது அதிகரித்துள்ளது. எத்தனைக் குடும்பங்களில் ஆண்பிள்ளைகள் பெண்களின் உரிமைகளைப் பற்றிய புரிதலுடன் வளர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி. அம்மாவே தோசை வார்த்து, அம்மாவே ஜட்டியலசிக்கொடுத்து, அம்மா சாப்பாட்டின் ருசி என நாஸ்டால்ஜியா பேசி... அப்படியான வளர்ப்பிலேயே வந்தவன் ‘அம்மா மாதிரி பொண்ணு வேணும்’ என முந்தைய தலைமுறை எதிர்பார்ப்புடனே மணவாழ்க்கைக்குள் வந்து நிற்கும்போது, தன்னுரிமை பற்றிய தெளிவுடன் வந்து நிற்கும் பெண்ணை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இப்படியான கட்டத்தில், பெண் தெளிவாகிவிட்டாள் என்பதைப் பிரிவுக்குக் காரணமாக எப்படிச் சொல்லமுடியும்? விரும்பத்தகாத ஒன்றிற்கு, ஒரு முன்னகர்வின் மீது பழிபோடும் அபத்தம் அது. பெண்ணின் வளர்ச்சி மட்டும் காரணமில்லை; அதை ஏற்கும் உளப்போக்கு ஆணுக்கு இன்னும் கூடிவரவில்லை என்பதையும், பெற்றோர்கள் அதற்குச் சிரத்தையெடுக்கவில்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டும்.

இன்னொருபுறம் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு நசுங்கி வாழும் ஒரு கூட்டத்தை முற்போக்கின் அளவுகோலைக் கொண்டு இடித்துரைக்கும் அதேவேளை, முடிவெடுக்கும் உரிமத்தின் பேரில் சட்சட்டென முறித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கும் மறுமுனையை ஆராயாமல் விட்டுக்கொண்டிருக்கிறோம்.

‘வேணான்னு முடிவு பண்ணிட்டா யோசிக்காம வெளில வந்துடணும்... ரொம்ப காம்ப்ளிக்கேட் பண்ணி ஜவ்வு மாதிரி இழுத்துட்டிருக்கக்கூடாது. அவசியமே இல்ல...’ ஆறாண்டுக்கால திருமண பந்தத்திலிருந்து வெளிவர ஆயத்தமாகியிருந்த நண்பர் இப்படிச் சொன்னார். அப்படி வெளியேறியும்விட்டார். மூன்றாண்டுக் காதலுக்குப் பின்னர் இருவீட்டு ஒப்புதலோடு நிகழ்ந்த மணம். ‘பிரிவதென்று ஆகிவிட்டது... என்னதான் பிரச்னை இருவருக்கும்?’ என்றால், இன்னதென அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. சுற்றிவளைத்து ‘ஒத்துப்போகல’ என்றார்.

வெறுமனே ‘மேற்கத்திய பாதிப்பு’ என இதனைச் சுருக்கமுடியவில்லை. உறவுகள் சார்ந்த மேற்கத்திய உளவியல் மேலோட்டமாகவே இங்கே தருவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதேசத்துக்கான எதார்த்தத்துடன் அதைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம். பிரிவு என்பது அங்குமே அவ்வளவு லேசில் நிகழ்வதில்லை. பிரிவில் வலிகள் உண்டு. கடந்து மீள ஆலோசனைகளும் சிகிச்சைகளும் உண்டு. அவர்களுடைய கலாசாரப் பின்னணியில் அவர்களுக்கேயான தீவிரம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு தளங்களில் கொண்டு நிறுத்துகிறது. கடந்துசென்று அடுத்த புதிய உறவுக்குள் போவதை மட்டும் இங்கிருந்து பார்த்துவிட்டு ‘அடடே’ என அதையொரு எளிய வடிவமாக நம்முடைய எதார்த்தத்திற்குள் கொண்டுவர நினைக்கிறோம்.

நம்முடைய அடையாளம் குழுமனப்பான்மை மரபை அடிப்படையாகக் கொண்டது. இது மேற்குலகின் சுயம்சார்ந்த சிந்தனைமுறைக்கு கிட்டத்தட்ட நேரெதிரானது. தனிமனிதர்களின் அகவெளிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உளரீதியான சின்னச் சின்னக் காயங்களையும்கூட மிக உன்னிப்பாக அணுகும் போக்கு அங்கிருப்பது. மாறாக, தன்னுடைய குடும்பம், அணி, நண்பர் குழாம் என்ற அமைப்பு நம்முடையது. இப்போது நாமும் மெல்ல இந்த ‘தான்’ என்ற நிலைக்கு நீந்த ஆரம்பித்திருக்கிறோம். பதிந்த ஒன்றுக்கும் பழக நினைக்கும் ஒன்றுக்குமிடையில் அல்லாடும் தலைமுறை நாம். மேற்கைப் பின்பற்றுவதாக நினைத்துக்கொண்டு, இந்தப் புள்ளியில் அவர்களிடமும் இல்லாத ஏதோவொரு நடைமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.


எந்த இரு தலைமுறைகளுக்கும் இடையிலிருக்கும் தூரத்தைவிடவும் அதிகமாக, இந்த முதல் சைபர் தலைமுறை தனக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து மனதளவில் அந்நியப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளேகூட மிகப்பெரிய சிந்தனை இடைவெளியை விதைக்கிறது. 90ஸ் கிட்ஸ் 2K கிட்ஸ் என்பதெல்லாம் வெறும் கேளிக்கை வார்த்தைகளல்ல; மிகக் குறுகிய காலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரும் உளவியல் நகர்வு அது - தீவிர ஆய்வுக்கு உகந்த களம். தொழில்நுட்பத்தின் உடனடித்தன்மைக்கு பதிலீடாக நம்முடைய மென்னுணர்ச்சிகளின் சிறுபகுதி காவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார நகர்வுகள் உண்டாக்கியிருக்கும் கொதிநிலை ஒரு பக்கம், கலாசார அடையாளக் குழப்பங்கள் மறுபக்கம் என ஒரு கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் தலைமுறையில் உறவுகள் குறித்த விழுமியங்கள் எப்படியாக இருக்கமுடியும் என்பதைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. வேளாண்மை அல்லது அரசுப்பணி சார்ந்திருந்த போன தலைமுறையின் பொருளீட்டும் முறை இப்போது தனியார் துறைகளின் பக்கமாகப் பெருமளவு மாறிப்போயிருக்கிறது. சம்பாதிக்கும் எல்லைகளை இது விரிவுபடுத்தி, வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொடுத்திருக்கிறது. அடித்தட்டிலிருந்த குடும்பங்கள் பலவும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளால்தான் மேலெழுந்து வந்துள்ளன. இவ்விடத்தில் இந்தப் பணிச்சூழல் திரிபு உண்டாக்கும் உளப்போக்கு மாற்றங்களையும் சேர்த்தே கவனிக்க வேண்டியிருக்கிறது.

வேளாண்மை அல்லது அரசுப்பணியில் இருக்கும் அடிப்படைச் சுதந்திரமானது பணிநிரந்தரம் என்ற கேந்திரத்தை மையப்படுத்தியது. இந்தப் புள்ளியிலிருந்து மட்டும் பார்த்தால், ஒப்பீட்டளவில் தனியார் நிறுவனம் சார்ந்த பணிகளைவிட இவற்றில் அழுத்தங்கள் குறைவு. தனியார் நிறுவனங்களில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் வதைக்கிறது. Diplomatic ஆக இருப்பதற்கான மனமுதலீடுகள் வேறு விதமாக Displace ஆகின்றன. அடிப்படை சகிப்புணர்வு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. இதன் விளைவுகள் குவியும் இடம் நம் உறவாக இருப்பதுதான் துரதிர்ஷ்டம். ஓர் இடத்தில் அடங்கி இளகும் மனம் மறுவிடத்தில் எளிதில் அதிர்வடைகிறது. பொறுமை இழக்கிறது. சின்னச் சின்னக் கசப்புகளைக்கூட பூதக் கண்ணாடி கொண்டு அலசுகிறது. நேர்க்கோட்டிலிருந்து சிறு வழுவலையும் காயமாகப் பார்க்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என்ற பதத்தை அளவிற்கு அதிகமாகவே உறவுகளுக்கு நடுவில் உபயோகப்படுத்துகிறார்கள்.

முசுடு, முன்கோபி, இறுக்கம் போன்ற எளிய வடிவங்களெல்லாம் இப்போது ‘டாக்ஸிக்’ என்ற அடைப்பிற்குள் கொண்டுபோய் நிறுத்தப்படுகின்றன. உறவுகளைக் கையாளுவதில் ‘சகிப்பு’ என்ற விஷயத்தையே மிகவும் பழைய முறையாகப் பார்க்கிறார்கள். ‘மூடிமறைத்து சுமக்கவேண்டிய அவசியமே இல்லை; சின்னச் சிடுக்கைக்கூட பகிரங்கமாக உடைத்துப் பேச வேண்டும்’ என்ற பார்வை கேட்க ஆரோக்கியமாகத்தான் தெரிகிறது. அப்படி அலசிப் பேசித்தீர்ப்பது சரிதான். தீர்வை நோக்கிப் பேசுவது ஒரு விதம். குற்றம்சாட்டி வாக்குவாதத்தை வளர்க்கவே பேசுவது இன்னொன்று - அதுதான் இன்றைய சுயம் சார்ந்த சிந்தனைப்போக்கில் அதிகம் காணக் கிடைக்கிறது. உட்கார்ந்து பேசித் தீர்க்கலாம் என்பவர்களை உதாசீனப்படுத்துகிறது. விட்டுக்கொடுத்துப் போவதை அவமான மாகப் பார்க்கிறது. கீழ்ப்படிதலையும் அனுசரிப்பையும் ஒரே நிறுவையில் வைத்துக் குழப்பிக்கொள்கிறது.

பிணக்குகளின்போது, அறிவுரைகளுடன் வீட்டிலிருக்கும் முந்தைய தலைமுறை ஆட்கள் உள்ளே வருவார்கள். நம்முடைய நியூ ஏஜ் உறவு வடிவங்களிருந்து பல நூற்றாண்டுகள் பின்தங்கிய ஜீவராசிகளைப் போல அவர்கள் தோற்றமளிப்பார்கள். ‘பூமர்’ என்ற பதம் சமீபப் புழக்கத்தில் ரொம்பவே பிரசித்தமாகியிருக்கிறது. ஒரு பந்தத்திற்குள் சிக்கி, ‘அனுசரிப்பு’ என்ற மந்திரவார்த்தையால் தனக்குத்தானே விலங்கிட்டுக்கொண்டவர்கள்; மீளத் தெரியாமல் அகப்பட்டிருக்கும் தன் முட்டாள்தனத்தையே வாழ்க்கைச் சூத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவர்கள் - முந்தைய தலைமுறையினர் இப்படித்தான் நம் முன் நிற்கிறார்கள். ஒரு தலைமுறையின் நெறிகளைப் புதுத் தலைமுறையின் மீது திணிப்பவர்களாக இவர்களைப் பார்க்கிறோம்.

கசப்பையும் அச்சத்தையும் விதைக்கும் பண்பாட்டுக் காவலர்களின் தீவிரவாதம் ஒரு முனை என்றால், குழப்பவாதிகளின் அவசரமும் நிலையாமையும் மறுமுனையில் நிற்கின்றன. எந்நேரமும் ஏதோவொரு கருத்தியல் அதிர்வை உருவாக்கிக் கொண்டிருப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் போலி ஆவேசக் கும்பல் இது. இவர்களின் அவசரம் நவீனத்தின் சாயத்தால் பூசிமெழுகப்பட்டிருக்கிறது. தழுவிக்கொள்ள ‘மேற்கத்திய’ கவர்ச்சிகர அம்சங்கள் இருக்கின்றன. இடையில் நின்று இரண்டு பக்கங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சாய்வு இந்த இரண்டாம் கூட்டத்தை நோக்கி நிகழ்கிறது.

இறக்கைகள் முளைத்து மேம்பட்ட ஒரு தலைமுறையின் அகக்கட்டுமானம் மிக ரகசியமாக அதிர்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கல்வியறிவில் பின்தங்கிய அதன் இன்னொரு பிரிவு மீசையை முறுக்கிக்கொண்டு அரிவாளைக் காட்டிக்கொண்டு டிக்டாக்கில் சாதிவெறி பேசிக்கொண்டிருக்கிறது. இரண்டாமதைப் பரிகசித்து மேலெழ முனையும் தடுமாற்றத்தில், முந்தைய கூட்டம் தன்னுணர்வின்றி அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கை மேம்படும்போது அதற்கு ஒத்திசைத்து உறுதிப்பட வேண்டிய அகத்தையும் அடையாளங்களையும் புறமயக்கங்களில் தவறவிடும் விளிம்பிலேயே இருக்கிறார்கள்.

குடும்பநல ஆலோசகர்களாக இருக்கும் நண்பர்கள் சிலர், முரண்களைக் களைய நினைப்பதைவிட இன்றைய சமூகம் அவற்றை அடிக்கோடிட்டு பூதாகரப்படுத்தவே முயல்வதாகவும் பிரிவை ஆதரிக்கும் குரல்களையே இவர்கள் தேடுவதாகவும் அவதானிக்கிறார்கள். பிரிவு என்பது ஒருசிலருக்கு நிஜமான விடுதலையாக இருக்கலாம். அதற்காக அதுதான் ஒவ்வொரு சலனத்திற்கும் தீர்வு என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொள்வது ஆபத்தானது.

சகிப்பு என்பது கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதல்ல; தாங்கிக்கொண்டு கடந்துபோவதும் அல்ல. அடுத்தவரின் தரப்பிலிருந்து யோசித்து அவருக்கான நியாயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை இருவருக்கும் இடையிலான தளத்திற்குக் கொண்டுவந்து இருவருக்கும் ஏற்புடைய வடிவமாக அதனை மாற்ற முயல்வது. இது இருபாலாருக்கும் பொருந்தும் நெறி.

`எங்க அப்பா அம்மா வழவழான்னு பண்ணிட்டிருந்த தப்ப நான் பண்ண விரும்பல. இத பிரேக் பண்ணிக்கிறதுதான் ஐடியல்’ என்னுமிடத்தில் மிகத் திட்டவட்டமாக அப்பா அம்மாக்களின் கண்மூடித்தனமான சகிப்புணர்வைக் கொச்சையாகத் தான் இவர்களால் பார்க்கமுடிகிறது. ஒரு தலைமுறை வாழ்க்கைநெறி என நம்பிய ஒன்றை, மொத்தமாக அபத்தம் எனப் புறந்தள்ளும் புள்ளிக்கு அடுத்த தலைமுறை வந்துநிற்கிறது. எத்தனை பெரிய கருத்தியல் பிளவு இது. ஆனால், இந்த இரு புள்ளிகளுக்கும் இடைப்பட்ட வெளியில்தான் எங்கேயோ தீர்வு இருக்கிறது.

Tuesday, April 19, 2022

கடுங்கோபத்துடன் தந்தை இளையராஜாவிற்கு

ஆம் நீங்கள் தற்போது தந்தை இடத்தில் தான் தமிழகம் வைத்திருக்கிறது

ஆதலால்தான் அவ்வப்போது நீங்கள் காட்டும் கோவத்தையும், உளறல்களையும், கர்வத்தையும் பொறுத்துவந்தோம். ஆனால் அந்த பொறுமையை நீங்கள் எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்க பயன்படுத்தினால் எப்பொழுதும் போல பொறுத்துகொள்ளலாகாது.



...........ராசைய்யாவை இளையராஜாவாக்கியது மக்களும் நீங்கள்பிறந்து வளர்ந்த பின்னணி சூழலுமே. அந்த எளிய மக்கள் சூழலில் பிறந்து வளராமல் மேல்தட்டு மக்கள் சார்ந்த சூழலில் வளர்ந்திருந்தால் இப்படிப்பட்ட இசை உங்களிடம் வந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிப்பட்ட இளையராஜா சொந்தமாக கருத்து சொல்ல முழு உரிமை உண்டு. அவர் மதவெறியர்களை ஆதரிக்கவும் முழு உரிமை உண்டு. அதேபோல அதை எதிர்த்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு.

அவர் இதற்கு முன்பு அம்பேத்கரைப்பற்றி எப்பொழுதாவது பேசியிருப்பாரா? நினைத்திருப்பாரா? அப்படி நினைத்திருந்தால் தான் பிறந்த சமூகத்தை தள்ளி மேல்தட்டு பார்ப்பனராய் இருக்க ஏங்கி அழுதிருக்க வாய்ப்பில்லை.

முதலில் அம்பேத்கரை ஒரு மதவெறியரோடு ஒப்பிட்டதே வடிகட்டிய அயோக்கியத்தனம்

நீங்கள் அம்பேத்கரை அந்த மதவெறியரோடு ஒப்பிட்ட முக்கியமான 3 கருத்துகளுக்கு எங்கள் பதிலை சொல்லவேண்டியது எங்கள் கடமை

1. அம்பேத்கரும் அந்த மதவெறியரும் வறுமையான சூழலில் இருந்த வந்தவர்கள் என்கிறீர்கள்

இந்த கூற்றை படித்த போது சிரிப்புதான் வருகிறது. நான் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அம்பேத்கரின் அப்பா ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியவர், மேலும் அவர் நடுத்தர மக்களைவிட செல்வ செழிப்பாக வளர்ந்தவர்.

இதிலிருந்தே தெரிகிறது. உங்களுக்கு அம்பேத்கரையும் தெரியவில்லை. அம்பேத்கர் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்னென்ன செய்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.

சரி அவரோடு ஒப்பிட்ட அந்த மத வெறியரை பற்றியாவது தெரியுமா? அதுவும் தெரியாது. அவருக்காக இந்த தகவல்.

நீங்கள் ஒப்பிட்ட அந்த இந்துத்துவ மதவெறியர், காக்கி டவுசர் போட்டு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயின்றவர் என்பதாவது தெரியுமா?

மேலும் நான் டீ வித்தேன்னு சொன்ன அவர். எப்போது வித்தார் என்று பார்த்த போது அவர் சொன்ன காலத்தில் அங்கு ரயில் நிலையமும் இல்லை எதுவும் இல்லையென்ற செய்தியாவது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே இல்லாத பாடத்தை இல்லாத கல்லூரியில் படித்த அந்த மதவெறியறியரின் கல்வி தகுதி என்னவென்று தெரியுமா?

எல்லாத்துக்கும் மேலே

2002 குஜராத கலவரத்தில் அந்த மதவெறியரின் மேற்பார்வையில் இந்துத்துவா கும்பல் இஸ்லாமியர்களை தேடி தேடி வேட்டையாடியது. உச்ச பச்சமாக கர்ப்பிணிபெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து நெருப்பில் போட்டு எக்காளமிட்டது.

இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்த போது அழகி, ரமணா படத்திற்கு நீங்கள் இசை அமைத்து கொண்டிருந்திருப்பீர்கள். அந்த கலவரத்தைப்பற்றியும் அதில் இறந்து போனவர்களைப்பற்றியும் இதுவரை எதாவது கருத்து கூறியதுண்டா?

2. அம்பேத்கரும், அந்த மதவெறியரும் எப்போது மக்களைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்கள் உதாரணத்திற்கு முத்தலாக் சட்டம் நீக்கி இஸ்லாமியருக்கு நன்மை செய்ததாக சொல்லியிருக்கிறீர்கள்

இந்த கூற்றை சொல்லும் நீங்கள் சிஏஏ, என்.ஆர்.ஸி, விவசாய சட்டம், புதிய கல்வி கொள்கை, நீட், க்யூட், பண மதிப்பிழப்பு பற்றியெல்லாம் சொல்ல மனமில்லையா இல்லை அதனால் நாடு நாசமாய் போய்க்கொண்டிருப்பது தெரியாதா?

சரி அதை விடுங்கள் நீங்கள் சொன்ன முத்தலாக் சட்டத்திற்கே வருவோம் இன்னொரு மதத்தின் சட்டதிட்டங்களை திருத்தி நன்மை செய்யும் அந்த மதவெறியர்.

சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்கு அப்புறமும் சபரி மலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன செய்திருக்கிறார்.
ஹத்ராஸில் இந்து பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, பாலியல் வன்புணர்வு செய்து, நாக்கை அறுத்து எரித்து கொன்ற போது என்ன செய்தார்?

ஒவ்வொரு கோயில் கருவறையிலும் எந்த தாழ்த்த பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துவும் நுழைய முடியாமல் இருக்கிறதே அதற்கு என்ன செய்திருக்கிறார்

மாட்டுக்கறி வைத்திருந்ததிற்காக அடித்து கொலை செய்கிறார்களே. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும்போதெல்லாம் கலவரம் செய்கிறார்களே அதற்கு என்ன செய்திருக்கிறார் அந்த மதவெறியர்

3. அம்பேத்கரும் அந்த மதவெறியரும் இந்தியாவைப்பற்றி கனவு கண்டவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த கூற்றிலிருந்து அம்பேத்கர் கண்ட கனவு எங்களுக்கு தெரியும். அது நம் அனைவருக்கும் அதிகாரம், கல்வி உட்பட சமநீதி கிடைக்கும் நாடாக நம் நாடு இருக்கும்.

ஆனால் அந்த மதவெறியர் கண்ட கனவு இந்து ராஷ்ட்ரம் என்ற ஆர்.எஸ்.எஸ் கனவு என்பது உங்களுக்கு தெரியாதா? தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்றால் இசை அமைப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள்

இந்தியா என்பது மத சார்பற்ற நாடு, இந்த நாடு பன்முகத்தன்மை, பன்மொழி, பல இனம் வாழும் நாடு. பல சமஸ்தானங்களின் ஒன்றியம் என்பது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தெரியும்.

இது போல் எதுவுமே தெரியாமல் இருவரைப்பற்றிய பின்னணி எதுவுமே தெரியாமல். இருவரையும் ஒப்பிடுவது. அறியாமை என்று எடுத்துகொண்டாலும், அதற்காக வருத்தப்படாமல் தன் கருத்தில் உறுதியாய் பின்வாங்காமல் பிடிவாதமாய் இருப்பது கர்வம், திமிர், ஆணவம் இதைத்தவிர வேறென்ன சொல்வது?

இந்த சமயத்தில் கிடைத்தது வாய்ப்பென்று உங்கள் இசை என்னவென்றே தெரியாத அல்லது உங்கள் இசையை கேட்டே இருக்காத சங்கிகளும், இந்து என்ற ஒரு காரணத்திற்காகவே ஆதரவளிக்கும் சிலரை நீங்கள் நம்பி உங்கள் கருத்தில் உறுதியாகக்கூட இருக்கலாம். ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே கூட்டம் நாளை நீங்கள் கொஞ்சம் இடரி தமிழினத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் ஆதரவா ஒரு கருத்து பேசினாலும்

உங்கள் இயற்பெயரான டேனியல் ராசைய்யாவை சொல்லி. உங்களை கிறிஸ்தவ கைக்கூலி என்று எள்ளி நகைக்கும். அன்று உங்களுக்காக வரப்போவது நாங்கள்தான்


இன்று காவிப்பாசாம் பிடித்த உங்கள் எண்ணத்தினால் உங்களுக்கு ஜனாதிபதவியே கூட தரலாம் ஆனால் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் அந்த இருக்கையை விட்டு எழுந்து போன பின் அந்த இடத்தையே தீட்டு என்று கழுவிவிடுவார்கள். சந்தேகம் இருந்தால் தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

எனக்கு தெரிந்து இனி நெஞ்சை அள்ளும் இசை உங்களிடமிருந்து வராது வரவே வராது
அது ஏன் என்று உங்களவாவிடம் கேளுங்கள்
அல்லது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்

இறுதியாக

இலைநிறைய
அறுசுவை உணவு வைத்து
பஹவான் பெயரால்
சாப்பிடு நாயே என்று சொன்னால்
நீங்கள் வேண்டுமென்றால்
குருபிரம்மா குருவிஷ்ணு சொல்லி
நீங்க வேணா சாப்பிடுவீங்க

ஆனால்
உங்க பிள்ளைகளாகவே இருந்தாலும்
விருட்டென எழுந்து இலையை வீசியெறிந்து
வெளியேறுவோம் நாங்கள்
ஏன்னா
சோறைவிட எங்களுக்கு முக்கியம்
சுயமரியாதையும் சமூக நீதியும்

வயதானதால் நீங்கள் மறந்திருக்கலாம்

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு

- ரெ

குறிப்பு:-
இந்த கட்டுரையில் நான் மதவெறியர் என்று குறிப்பிட்டுருப்பது யார் என்று அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். ஏனெனில் அம்பேத்கர் என்ற எழுத்துக்களுக்கு பக்கத்தில் எழுதக்கூட அவருக்கு தகுதியில்லை. வேண்டுமானால் மதவெறியரோடு கலவரக்காரர் என்று போட்டுக்கொள்ளுங்கள்

Thursday, February 17, 2022

வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் கைவிடுவது எப்படி? 
How to overcome procrastination?
வெ. கௌசல்யா 
நன்றி: விகடன்

நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று, நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனத்துடன் இருப்பது. அதிலும் குறிப்பாக மாற்றிக்கொள்ளவே முடியாத விஷயமாக இருப்பது, உடனே செய்ய வேண்டிய, செய்ய முடிகிற விஷயத்தைக்கூட `பிறகு செய்யலாம்', `நாளைக்கு செய்து கொள்ளலாம்' எனத் தள்ளிப்போடுவது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையை இப்படி தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) வேலை, தொழிலில் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்துவிடும். இதை எப்படிக் கைவிடுவது? சில டிப்ஸ்...














1. நேர அட்டவணை
தள்ளிப்போடுதல் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது. இந்த நேரத்தில்/நேரத்துக்குள் இந்தந்த வேலைகளை முடித்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே உத்தரவிட்டுச் செயல்படுத்துங்கள்.

2. கேள்வி கேளுங்கள்
ஒரு வேலையைத் தள்ளிப்போடும் முன் உங்களிடம் நீங்களே இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: `ஏன் நாம் இதைத் தள்ளிப்போட வேண்டும்? இதனால் ஏற்படப்போகும் பிரச்னைகள் என்னென்ன? தள்ளிப்போடுவதால் நமக்குக் கிடைக்கும் நஷ்டம் என்னவாக இருக்கும்? ஒருவேளை நாம் இந்த வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன?' இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு வேலையைத் தள்ளிப்போடாமல் செய்வதற்கான உத்வேகம் கிடைக்கும், தள்ளிப்போட்டால் ஏற்படும் விளைவுகளும் புரியும்.

3. இயல்பாக இருங்கள்
ஒரு செயலை செய்து முடிக்க, ஒரு வீரனைப்போல உங்களை உணராமல், வழக்கத்துக்கு மீறிய செயல்களைச் செய்யாமல், இயல்பாக இருங்கள். சாதாரணமாகவே அதையெல்லாம் செய்து முடிக்க இயலும் என்பதை நம்புங்கள். கிடைக்கும் நேரத்தில், செய்யக்கூடிய அவசியமான செயல்களை உடனுக்குடன் செய்து பழகுங்கள். அதை உங்கள் இயல்பாக மாற்றுங்கள். இந்தப் பழக்கத்தில் உங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு, எந்த வேலையையும் உங்களைத் தள்ளிப்போட வைக்காது.

4. பிரித்துக்கொள்ளுங்கள்
ஒரு நேரத்தில் ஒரு பெரிய வேலையைச் செய்ய வேண்டிய சூழல் வரும்போது, அதிலுள்ள சிரமங்களை நினைத்து அதைத் தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப்போடுவதால் டெட்லைன் உள்ளிட்ட இன்னும் சில சிரமங்களும் அதில் சேரவே செய்யும் என்பதால், இன்னும் சோர்வடைவீர்கள். மாறாக, ஒரு பெரிய வேலையை, முதலில் செய்ய வேண்டியது, அடுத்து செய்ய வேண்டியது, இறுதி வடிவம் என்று சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகச் செய்துமுடித்துக்கொண்டே வாருங்கள். சிறிது சிறிதாகச் செய்யும்போது, தள்ளிப்போடும் எண்ணம் குறையும்.

5. சாக்குபோக்குகளைக் குறையுங்கள்
ஒரு வேலையைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காமல் இருக்க, `எனக்கு நேரமே இல்லை', `எனக்கு மன அழுத்தமாக இருக்கிறது', `இதை செய்வதற்கான மனநிலையில் இப்போது நான் இல்லை' என்று உங்களுக்கு நீங்களாகவே காரணங்களைத் தேடிக்கொள்ளாதீர்கள், சொல்லிக் கொள்ளாதீர்கள். உண்மையில் இவை காரணங்கள் அல்ல, சாக்குக்களே என்பதை உணருங்கள். உங்களால் எந்த நேரத்திலும், நீங்கள் நினைத்தால் ஒரு வேலையைச் செய்து முடிக்க முடியும். இதை உங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

6. டேட்டாவை ஆஃப் செய்யுங்கள்
இன்று பலரின் வேலைகளையும் தேங்கவைப்பது, இணையப் பயன்பாடுதான். நீங்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், மற்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்வது மிக முக்கியம் என்பதால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, டேட்டாவை ஆஃப் செய்வது, தேவைப்பட்டால் செல்போனையே ஆஃப் செய்வது (இது அனைவரின் பணிக்கும் பொருந்தாது) என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

7. உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு செயலைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, பிடித்த பாடலைக் கேட்பது, பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது என உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்.

8. பிரச்னைகளை சிந்தியுங்கள்
ஒரு செயலை நீங்கள் செய்யாமல் இருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது நீங்கள்தான் என்பதை உணருங்கள். சரியான நேரத்தில் செய்து முடிக்காத பணியால் உங்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே யோசியுங்கள். திட்டமிடுங்கள். அதன் பின் உங்களால் உங்கள் செயலைத் தள்ளிப்போட முடியாது.

9. உங்களை மன்னியுங்கள்
கடந்த காலத்தைப் பற்றி உங்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவதை நிறுத்துங்கள். `நான் முன்பே தொடங்கியிருக்க வேண்டும்', `நான் ஏன் எப்போதும் தள்ளிப்போடுகிறேன், `என்னால் ஏன் எதையுமே சரியாகச் செய்ய முடிவதில்லை' என்று யோசிப்பதை நிறுத்துங்கள். கடந்த காலத்தில் ஒரு வேலையை நீங்கள் தள்ளி வைத்ததற்காக உங்களை நீங்கள் மன்னிப்பது, வேலை மேலும் தாமதப்படுத்துவதை நிறுத்த உதவும்.

10. கஷ்டமானதை முதலில் முடியுங்கள்
இங்கு பலருக்கும் இருக்கும் ஒரு பழக்கம், இருப்பதிலேயே கஷ்டமான வேலையைக் கடைசியாக முடிக்கலாம் என்று தள்ளிப்போடுவார்கள். மாறாக, அந்த மனத்தடையை உடைத்து கஷ்டமான வேலையை முதலில் எடுத்து முடித்துவிட்டால், மனதில் இருக்கும் பிரஷர் நீங்கி உற்சாகம் ஏற்படும். மற்ற வேலைகளை அந்த வேகத்திலேயே செய்து முடித்துவிடலாம்.