Thursday, February 17, 2022

வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தைக் கைவிடுவது எப்படி? 
How to overcome procrastination?
வெ. கௌசல்யா 
நன்றி: விகடன்

நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று, நேரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனத்துடன் இருப்பது. அதிலும் குறிப்பாக மாற்றிக்கொள்ளவே முடியாத விஷயமாக இருப்பது, உடனே செய்ய வேண்டிய, செய்ய முடிகிற விஷயத்தைக்கூட `பிறகு செய்யலாம்', `நாளைக்கு செய்து கொள்ளலாம்' எனத் தள்ளிப்போடுவது. நாம் எவ்வளவுதான் திறமையானவராக, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையை இப்படி தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) வேலை, தொழிலில் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்துவிடும். இதை எப்படிக் கைவிடுவது? சில டிப்ஸ்...














1. நேர அட்டவணை
தள்ளிப்போடுதல் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது. இந்த நேரத்தில்/நேரத்துக்குள் இந்தந்த வேலைகளை முடித்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே உத்தரவிட்டுச் செயல்படுத்துங்கள்.

2. கேள்வி கேளுங்கள்
ஒரு வேலையைத் தள்ளிப்போடும் முன் உங்களிடம் நீங்களே இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: `ஏன் நாம் இதைத் தள்ளிப்போட வேண்டும்? இதனால் ஏற்படப்போகும் பிரச்னைகள் என்னென்ன? தள்ளிப்போடுவதால் நமக்குக் கிடைக்கும் நஷ்டம் என்னவாக இருக்கும்? ஒருவேளை நாம் இந்த வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன?' இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு வேலையைத் தள்ளிப்போடாமல் செய்வதற்கான உத்வேகம் கிடைக்கும், தள்ளிப்போட்டால் ஏற்படும் விளைவுகளும் புரியும்.

3. இயல்பாக இருங்கள்
ஒரு செயலை செய்து முடிக்க, ஒரு வீரனைப்போல உங்களை உணராமல், வழக்கத்துக்கு மீறிய செயல்களைச் செய்யாமல், இயல்பாக இருங்கள். சாதாரணமாகவே அதையெல்லாம் செய்து முடிக்க இயலும் என்பதை நம்புங்கள். கிடைக்கும் நேரத்தில், செய்யக்கூடிய அவசியமான செயல்களை உடனுக்குடன் செய்து பழகுங்கள். அதை உங்கள் இயல்பாக மாற்றுங்கள். இந்தப் பழக்கத்தில் உங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு, எந்த வேலையையும் உங்களைத் தள்ளிப்போட வைக்காது.

4. பிரித்துக்கொள்ளுங்கள்
ஒரு நேரத்தில் ஒரு பெரிய வேலையைச் செய்ய வேண்டிய சூழல் வரும்போது, அதிலுள்ள சிரமங்களை நினைத்து அதைத் தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப்போடுவதால் டெட்லைன் உள்ளிட்ட இன்னும் சில சிரமங்களும் அதில் சேரவே செய்யும் என்பதால், இன்னும் சோர்வடைவீர்கள். மாறாக, ஒரு பெரிய வேலையை, முதலில் செய்ய வேண்டியது, அடுத்து செய்ய வேண்டியது, இறுதி வடிவம் என்று சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகச் செய்துமுடித்துக்கொண்டே வாருங்கள். சிறிது சிறிதாகச் செய்யும்போது, தள்ளிப்போடும் எண்ணம் குறையும்.

5. சாக்குபோக்குகளைக் குறையுங்கள்
ஒரு வேலையைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காமல் இருக்க, `எனக்கு நேரமே இல்லை', `எனக்கு மன அழுத்தமாக இருக்கிறது', `இதை செய்வதற்கான மனநிலையில் இப்போது நான் இல்லை' என்று உங்களுக்கு நீங்களாகவே காரணங்களைத் தேடிக்கொள்ளாதீர்கள், சொல்லிக் கொள்ளாதீர்கள். உண்மையில் இவை காரணங்கள் அல்ல, சாக்குக்களே என்பதை உணருங்கள். உங்களால் எந்த நேரத்திலும், நீங்கள் நினைத்தால் ஒரு வேலையைச் செய்து முடிக்க முடியும். இதை உங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

6. டேட்டாவை ஆஃப் செய்யுங்கள்
இன்று பலரின் வேலைகளையும் தேங்கவைப்பது, இணையப் பயன்பாடுதான். நீங்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், மற்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்வது மிக முக்கியம் என்பதால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, டேட்டாவை ஆஃப் செய்வது, தேவைப்பட்டால் செல்போனையே ஆஃப் செய்வது (இது அனைவரின் பணிக்கும் பொருந்தாது) என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

7. உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்
உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு செயலைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, பிடித்த பாடலைக் கேட்பது, பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது என உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்.

8. பிரச்னைகளை சிந்தியுங்கள்
ஒரு செயலை நீங்கள் செய்யாமல் இருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது நீங்கள்தான் என்பதை உணருங்கள். சரியான நேரத்தில் செய்து முடிக்காத பணியால் உங்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே யோசியுங்கள். திட்டமிடுங்கள். அதன் பின் உங்களால் உங்கள் செயலைத் தள்ளிப்போட முடியாது.

9. உங்களை மன்னியுங்கள்
கடந்த காலத்தைப் பற்றி உங்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவதை நிறுத்துங்கள். `நான் முன்பே தொடங்கியிருக்க வேண்டும்', `நான் ஏன் எப்போதும் தள்ளிப்போடுகிறேன், `என்னால் ஏன் எதையுமே சரியாகச் செய்ய முடிவதில்லை' என்று யோசிப்பதை நிறுத்துங்கள். கடந்த காலத்தில் ஒரு வேலையை நீங்கள் தள்ளி வைத்ததற்காக உங்களை நீங்கள் மன்னிப்பது, வேலை மேலும் தாமதப்படுத்துவதை நிறுத்த உதவும்.

10. கஷ்டமானதை முதலில் முடியுங்கள்
இங்கு பலருக்கும் இருக்கும் ஒரு பழக்கம், இருப்பதிலேயே கஷ்டமான வேலையைக் கடைசியாக முடிக்கலாம் என்று தள்ளிப்போடுவார்கள். மாறாக, அந்த மனத்தடையை உடைத்து கஷ்டமான வேலையை முதலில் எடுத்து முடித்துவிட்டால், மனதில் இருக்கும் பிரஷர் நீங்கி உற்சாகம் ஏற்படும். மற்ற வேலைகளை அந்த வேகத்திலேயே செய்து முடித்துவிடலாம்.