Friday, June 15, 2018

யூ ஆர் எ ஜெண்டில்மேன் இரஞ்சித்!

அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்
...நன்றி இரஞ்சித்!












`எங்களுக்குப் போராடவும் தெரியும்; அடிக்கவும் தெரியும்!
``வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே.. இதுல எங்கே முத்தம் கொடுக்க..!
``நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்!
``சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்!
`சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் படத்தில், பெண் கதாபாத்திரங்கள் இவ்வளவு அழுத்தமான, யதார்த்தமான வசனங்கள் பேசி கேட்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ‘காலாதிரைப்படத்தில் பெண்களின் உரிமையையும் சமத்துவத்தையும் பேசும் இதுபோன்ற பல வசனங்கள் சாத்தியமாகியுள்ளன. ஏனென்றால், இது நிலம் பற்றி பேசும், ’நீலம்பற்றி பேசும் அரசியல்வாதி (அலெஸ்) இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம்!

இரஞ்சித்தின் திரைப்படங்களில், மண் அரசியலுக்கு அடுத்து அதிகம் இருப்பது பெண்ணும் பெண்ணைச் சுற்றியிருக்கும் அரசியல்தான். மெட்ராஸ்கலையரசி, ‘கபாலிகுமுதவல்லி என ஆணை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இருக்கும். ஓர் முரட்டு ஆணை உருக்கவைக்கும் காதல் இருக்கும். ஓர் அதிரடி ஆண் மகனைப் பணியவைக்கும் அதிகாரம் இருக்கும். அப்படிதான் காலாவின் பெண்களும்.

ஆனால், இரஞ்சித்தின் மற்ற திரைப்படங்களில் காட்டிய பெண் கதாபாத்திரங்களைவிடவும், காலாவின் பெண்களிடம் அவ்வளவு அழகு; அவ்வளவு அழுத்தம்; அவ்வளவு அதிகாரம்; அவ்வளவு அன்பு.

இரண்டே காட்சிகளில் கடந்துவிடும் பெண்ணும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறார். ``என் புருஷனை முதன்முதலில் சந்தித்தது பப்ளிக் டாய்லெட்கிட்ட!எனச் சொல்லும் அந்த நடுத்தர வயது பெண்மணி;

``உன் புருஷன் என்ன பண்றாரு?” என காலா கேட்டதும், 'ஐ யம் சிங்கிள் மதர்' என்று கேஷூவலாக சொல்லும் முன்னாள் காதலி சரினா (அங்கே எந்தவிதமான பரிதாபமோ அனுதாபமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!), முன்னாள் காதலியைப் பார்த்துவிட்டு வந்த கணவனிடம், ``என்னையும்தான் பெருமாளுன்னு ஒருத்தன் சுத்திச் சுத்தி வந்தான். எனக்கும் ஆசைதேன். அதான் நீங்க கட்டிக்கிட்டு வந்துட்டீங்களே.

சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்என்று நையாண்டி செய்யும் மனைவி செல்வி, ``துப்பாக்கியைத் தூக்கிட்டு, நீ இங்கிருந்து தைரியமா வெளில போய்டுவியா?” என்று காக்கிச் சட்டையைக் கேள்வி கேட்கும் பெண்மணி, ``அவருக்கு அரசியல் எல்லாம் தெரியாது மாமா; அப்பாதான் தெரியும்.
இன்னொரு உயிரைப் போக விட்டுடக்கூடாது மாமாஎன்று நியாயமான கோபத்துடன் கூறும் காலாவின் மருமகள் என ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களுக்கும் அழுத்தமான வசனங்கள். அவர்கள் எல்லோரின் குரல்களிலும் உரிமையும் சுதந்திரமும் ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

கபாலியில் 'உன் கறுப்பு நிறத்தைத் தொட்டு பூசிக்கணும்' என்று வெள்ளை நிற கதாநாயகி சொல்லும் இடத்தில், ஆண் பார்வையில் சறுக்கியிருந்தார் இரஞ்சித்.

'காலா'வில் ஈஸ்வரி ராவின் கறுப்பழகில் அதை நேர்ப்படுத்தியிருக்கிறார். தாதாவின் மனைவி என்றால், வெள்ளை வெளேரென அழகாகவோ, அழகான கண்களில் பயத்தைக் காட்டுபவர்களோ இருப்பார்கள். இல்லையென்றால், அவர்களும் 'ஏய்' என்று தொண்டை நரம்புத் தெறிக்க குரல் கொடுப்பார்கள்.

'காலா'வின் லேசாக மஞ்சள் பூசிய கதாநாயகிதான், தோன்றும் இடங்களில் எல்லாம் தன் கணவனைக் காதலுடன் நையாண்டி செய்பவளாகவே வருகிறாள். 'காலா' தன் முன்னாள் காதலியை, 'ஏய் லூஸு' என்று கடிந்துகொள்ளும்போது, 'நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்' என்று சீறுகிறார் சரினா. காதலித்தவனே என்றாலும் 'லூசு' என்பது பெண்களை வெகுளியாக்க செய்யும். 'வா தலையை முட்டிக்கலாம்' என்று இன்னும் லூசுப் பெண்ணாகவே காட்டிக்கொள்ளும். இங்கே அப்படியல்ல. ஒரு காட்சியில், தன் காலில் விழச்சொன்ன வில்லனுக்கு, மற்றொரு காட்சியில் கை கொடுத்து, 'சம உரிமைன்னா என்னனு கத்துக்கோ'னு சொல்லும் சரினாவின் கதாபாத்திரம் செம்ம மாஸ்!

'ப்யூர் மும்பை' திட்டத்தின் கீழ் உங்களுக்கு வசதியான இருப்பிடம் கட்டித் தருகிறோம். உங்களுக்குத் தேவையானதைச் சொல்லுங்க எனக் கேட்டதும், `வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே. இதுல எங்க முத்தம் கொடுக்க!' என்றும், `எங்களுக்கு படிக்க ஸ்கூல் வேணும்', 'ஆஸ்பத்திரி வேணும்', 'பாத்ரூம் வேணும்', 'வயசுப் பிள்ளைங்க வீட்டுல இருக்கு'னு ஒவ்வொருவரும் சொல்லும் வரிகள் வடுக்களாகப் பதிகின்றன.

தன் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சாருமதியை (அஞ்சலி பட்டேல்), காவல்துறை குறிவைத்து ஆடையை உருவி எறிகிறது. ஒரு கணம் கூனிக் குறுகி உட்காரும் அவளுக்கு ஒரு பக்கம் அவிழ்க்கப்பட்ட ஆடை, மறுபக்கம் அடித்து நொறுக்க காத்திருக்கும் லத்தி. ஒரு கணம் எதை எடுப்பது என்று யோசித்து, அடுத்த கணம் எடுத்தது லத்தியை. தன்னை அவமானப்படுத்த நினைத்த காவல்துறையை அடித்து துவைக்கிறாள். அடியும் வாங்குகிறாள். அங்கு அவள் அடிப்பதும் அடி வாங்குவதும் விஷயமல்ல, அவள் எடுத்த முடிவுதான் முக்கியம்.

அதுதான் ஒரு பெண்ணின் போராட்டத்தின் உச்சம். தன்மானத்தை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் தன் உரிமையை மீட்டெடுப்பாள் என்பதற்கான உதாரணம் அந்தக் காட்சி.
அந்தப் பெண் போராளியை உருவாக்கியதற்கு நன்றி இரஞ்சித். பெண்களின் நிர்வாணத்தின் மீது இனி எந்த ஆணும் தன் வெற்றி வரலாற்றை எழுதமுடியாது என்பதை 'காலா' அழுத்தமாகப் பதிவிட்டிருக்கிறது.

இதுவரையிலான திரைப்படங்களில், ரஜினி பெண்களை மட்டம்தட்டிப் பேசும்போதெல்லாம், ஆரவாரித்தது ஒரு தலைமுறை. ஆனால், இந்தத் தலைமுறை கிளிஷேஹீரோயிசங்களை காலாவின் மனைவியும், முன்னாள் காதலியும் உடைக்கும் இடங்களில் ஆரவாரிக்கிறது. வெல்டன் ரஞ்சித்!

வில்லனின் பேத்தி தன் தாத்தாவிடம் காலாவைப் பற்றி, ``He seems to be a nice man'' என்பாள். அதுபோல, பெண்களின் சார்பில் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்...

யூ ஆர் எ ஜெண்டில்மேன் இரஞ்சித்!


சென்னை ===> சேலம் 8 வழிச்சாலை
சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன? அழிவுகள் என்ன?
நன்மைகள்
1. சேலம் டு சென்னைக்கு தற்போது 5 1/2 முதல் 6 மணி நேரம் ஆகிறது. ஆனால் 8 வழி பசுமைச் சாலை அமைந்தால் 3 மணி நேரத்தில் சென்னைக்கு சென்று விடலாம். இதனால் சுமார் 2 1/2 நேரம் மிச்சமாகிறது.
2. எரிபொருள் செலவு குறைகிறது. வருடத்துக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சம் ஆகும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
3. இந்த 8 வழி பசுமைச் சாலையில் தனியார் கார்களும், சொகுசுப் பேருந்துகள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற மாயை உள்ளது. அது தவறு. வெகுஜன மக்களும் பயணிக்கும் வகையில் பேருந்துகள் விடப்பட இருப்பதால் இச்சாலை அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
4. வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்துக்கு இந்த 8 வழிச் சாலை அவசியமானது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விரைவாக நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும்.
5. பெருமளவு விபத்துகள் குறைக்கப்படும்.
6. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விரைவில் சென்னை போன்ற பெரு நகரத்துக்குக் கொண்டு செல்லுவதோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதனால் விவசாயிகளின் விலைப் பொருள்களின் மதிப்பு கூடும். விலை அதிகரிக்கும்.
7. இந்தப் புதிய திட்டத்தால் பின் தங்கிய மாவட்டமாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளின் நிலத்தின் மதிப்பு கூடுவதோடு சாலை போக்குவரத்து வணிகம் அதிகரிக்கும்.
8. புதிய தொழில் நிறுவனங்கள் வரக்கூடும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
9. தமிழகம் வேளாண்மைத் துறையில் இருந்து தொழில் துறைக்கு முன்னேற்றம் அடையும்.
10. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.












தீமைகள்
1. பசுமைச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.
2. இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. தற்போது உணவுப் பொருள்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைப் போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும்.
3. இந்தியாவில் விவசாயம் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும். விவசாயத் தொழிலை நம்பி வாழக்கூடிய விவசாயிகள், விவசாயக் கூலிகள், விவசாயத் தொழிலைச் சார்ந்து வாழக்கூடிய சார்பு நிலை தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழக்கக் கூட நேரிடலாம்.
4. இத்திட்டத்தால் அதிகளவு விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும். உணவுப் பஞ்சம் ஏற்படக் கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத மாநிலமாக தமிழகம் மாறும்.
5. கனிம வளங்கள் இல்லாத நிலம் பாலைவனம் என்பதைப் போல கஞ்சமலை, கவுதிமலை, வெடியப்பன் மலையில் உள்ள இரும்புத் தாதுகளும், தருமபுரியில் மாவட்டத்தில் பிளாட்டின பாறைகளும், கல்வராயன் மலை, ஜருகு மலையில் உள்ள கருங்கற்களும் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடியில் உள்ள கனிமங்களும் பாதிக்கும்.
6. பசுமை வழிச் சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும்.
7. இச்சாலையில் தொடக்கமே 120 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் சாதாரண வாகனங்கள் செல்ல முடியாது.
8. இச்சாலை 10 ஆயிரம் கோடியில் உருவாக்குவதால் டோல்கேட் சார்ஜ் குறைந்தது கி. மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் இச்சாலையில் பயணிக்க முடியாது.
9. ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, அரூர் போன்ற பகுதிகளில் 23 கி.மீட்டர் வனப்பகுதியில் செல்லுவதால் வன உயிரினங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
10. இயற்கையைக் காக்க உலக நாடுகள் முன் வரும் நிலையில் இத்திட்டத்தால் பழைமை வாய்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகிறது. அதற்குப் பதிலாக 4 மடங்கு மரங்கள் நட்டாலும் அது சமநிலை செய்யக் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மரங்கள் அழிக்கப்பட்டால் கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்கும், ஆக்ஸிஜன் குறையும். கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்தால் உலக வெப்ப மயமாதல் அதிகரிக்கும்.

Friday, June 8, 2018

டேட்டா சுரண்டலுக்கு டாட்டா!
ஞா.சுதாகர்
நன்றி: ஆனந்த விகடன்
எப்போதும் இல்லாத அளவுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் உலவத் தொடங்கியிருக்கின்றன. அதில் பாதி நாமே பகிர்ந்து கொண்டவை. மீதி நமக்கே தெரியாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மிடமிருந்து பெற்றவை. இந்தத் தகவல்களை நிறுவனங்கள் எப்படிக் கையாளுகின்றன, அவற்றை வைத்து என்ன செய்கின்றன, விற்பதாக இருந்தால் யாருக்கு, எதற்கு... என்பதை எல்லாம் முறைப்படுத்த இப்போதைய தகவல் பாதுகாப்பு சைபர் சட்டங்கள் வலுவானதாக இல்லை!
நொடிக்கு நொடி அப்டேட் ஆகும் டெக் நிறுவனங்களைப் போல, இந்த சட்டங்கள் வேகமாக அப்டேட் ஆவதில்லை. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் இதுதான் நிலை. இந்தப் பிரச்னைக்கான தீர்வாகத்தான ஐரோப்பிய யூனியன் கொண்டு வந்துள்ள சட்டம் GDPR (General data protection regulation).

GDPR
பொதுமக்களின் டேட்டாவைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ஒரே சட்டம் 90-களில் உருவாக்கப் பட்ட Data protection directive மட்டும்தான். அதற்கு மாற்றாகவும், காலத்திற்கேற்பவும் புதிதாக அமலுக்கு வந்திருக்கும் சட்டம்தான் GDPR. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் வசிக்கும் மக்களின் டேட்டாவைக் கையாளும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
GDPR ன் சில முக்கிய அம்சங்கள்
* ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த விதிகள் என்றில்லை. ஐரோப்பிய மக்களின் தகவல்களை, உலகின் எந்த நிறுவனங்கள் கையாண்டாலும் இந்த விதிகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் இயங்கவேண்டும்.
* நம்முடைய பெயர், வயது உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் முதல் அந்தரங்கத் தகவல்கள் வரை எல்லாத் தரவுகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் பாதுகாப்பு கிடைக்கும்.
* பயனாளர் ஒருவரின் தகவல்களை டெக் நிறுவனங்கள் சேகரிக்குமானால், அவை எதற்காகப் பெறப்படுகின்றன, யாருடன் எல்லாம் அந்தத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன உள்ளிட்ட எல்லா விவரங்களையும் பயனாளருக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும்.
* நிறுவனங்கள் நம்மைப் பற்றிச் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை முழுமையாகப் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்தச் சட்டம் வழிசெய்கிறது.
* நிறுவனத்திடம் இருக்கும் நம் டேட்டாவை நாம் கேட்டால் அவர்கள் 30 நாட்களுக்குள் தரவேண்டும். அந்த டேட்டாவைப் பிற நிறுவனங்களுக்கு மாற்றவேண்டும் (Data Portability) என்றால் அதற்கும் அந்நிறுவனங்கள் உதவ வேண்டும்; உதாரணமாக, ஒரு மருத்துவமனையில் இருக்கும் நம்மைப் பற்றிய தகவல்களை, இன்னொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்றால் அதற்கு அந்த மருத்துவமனை உதவவேண்டும்.
* நம் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட எவற்றையுமே நம் அனுமதியின்றி நிறுவனங்கள் வைத்திருக்கக்கூடாது.
* நம்முடைய டேட்டாவை நம் அனுமதியின்றி யாரும் பார்வையிட உரிமையில்லை.
இப்படி மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ள இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கு கடும் தண்டனையையும் விதிக்கிறது. ஒரு நிறுவனம் அதன் வாடிக்கையாளரின் தகவல்களைத் தவறான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினாலோ, அனுமதியின்றி வேறு யாருடனாவது பகிர்ந்துகொண்டாலோ அந்நிறுவனத்திற்கு அதிக பட்சம் 20 மில்லியன் யூரோக்கள் அல்லது அதன் உலக வருமானத்தில் 4 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தால், இனி கூகுள் முதல் சின்ன சின்ன ஸ்டார்ட்அப்கள் வரை, ஐரோப்பியர்களின் டேட்டாவைக் கையாளும் அனைத்து நிறுவனங்களுமே, GDPR-க்கு ஏற்ப தங்கள் சேவைகளை மாற்றியமைக்க வேண்டும். 
தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் இந்தச் சட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றாலும், தொழில்நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைப் பெற்றிருக்கிறது. காரணம், இந்தச் சட்டம் கைவைத்திருப்பது அதன் அடிமடியில் அல்லவா? அமலுக்கு வந்த முதல்நாளே கூகுள் மற்றும் ஃபேஸ்புக் மீது GDPR-க்கு எதிராகச் செயல்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை வருங்காலத்தில் இன்னும் அதிகளவில் காணலாம்.
என்ன செய்யவிருக்கிறது இந்தியா?
ஐரோப்பாவைப் போலவே, இந்தியாவிலும் காலத்திற்கேற்ற டேட்டா பாதுகாப்பு சட்டங்கள் இல்லை. நம்மிடம் இப்போதைக்கு இருப்பது தகவல் தொழில்நுட்பச் சட்டமும் (2000), ஆதார் (2016) சட்டமும்தான். ஆனால், இந்தியர்களின் டேட்டா பாதுகாப்புக்கு இந்த இரண்டு மட்டுமே போதாது. இந்த சிக்கலைத் தீர்த்து, இந்தியாவிற்கென தனி டேட்டா பாதுகாப்பு விதிகளை உருவாக்க அவ்வப்போது சில முன்னெடுப்புகள் நடந்தாலும், எவையுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் இல்லை. இந்திய மக்களின் தகவல் பாதுகாப்புக்கென பிரத்யேக விதிமுறைகளை உருவாக்குவதற்காக, கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இதன் அறிக்கை வெளியான பின்னர்தான் அரசு என்ன செய்யவிருக்கிறது என்பது தெரியும். எவ்வளவு தடைகள் இருந்தாலும், ஐரோப்பிய யூனியனைப் போலவே இந்தியாவிலும் டேட்டா பாதுகாப்புச் சட்டங்களை விரைந்து உருவாக்க வேண்டும். காரணம் நாட்டின் குடி மக்களோடும், அவர்கள் பாதுகாப்போடும் தொடர்புடைய விஷயம் இது!

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

ம.குணவதி - படங்கள்: சாய் தர்மராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்
நன்றி: ஆனந்த விகடன் 
தொடர்ச்சியாக நாடு முழுக்க நடக்கும் படுகொலைகளின் பட்டியலில் ஒன்றாகக் கரைந்துபோகாமல்,  கொடூரத்தன்மை காரணமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் காரணமாகவும் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளிக்கு வந்திருக்கிறது கச்சநத்தம் படுகொலை.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்,  தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இச்சம்பவத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இன்னும் 5 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்   தெய்வேந்திரனும், அவரது நண்பர் பிரபாகரனும், கால் மேல் கால் போட்டுத் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி  வன்மமே, கொலைக்கான காரணம் என்பது முதற்கட்டச் செய்தியாக வெளிவந்தது. மேலும் கஞ்சா விற்பனை, கந்துவட்டி எனப் பல பிரச்னைகளால், நெடுங்காலமாக அவர்கள் அவதிப்பட்டு வருவதை ஆற்ற முடியாத கண்ணீரின், வார்த்தைகளின் வழி அறிய முடிந்தது.

சம்பவம் நடந்துமுடிந்த நான்காவது நாளில், கச்சநத்தம் கிராமமே மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரில், நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தது. சாதிப் பெயரை சொல்லித் தாக்கப்பட்ட 36 வயது இளைஞர் சந்திரசேகர் இறந்த செய்தி கேட்டு, போராடிய மக்கள் மருத்துவமனை நோக்கி ஓடினர். ‘இனி நாங்க எதுக்கு வாழணும்?’ என்று பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தார் சந்திரசேகரின் தாய். லாரி ஓட்டுநரான சந்திரசேகரனுக்கு, ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். பிறவியிலேயே பேச முடியாத குறைபாட்டோடு பிறந்த மகளுக்கு, சமீபத்தில் ஓர் அறுவைச் சிகிச்சையும் நடந்து முடிந்திருக்கிறது.  ஆனால் அந்த மகளைக் கவனித்துக்கொள்ள இப்போது சந்திரசேகர் இல்லை.

“சண்முகநாதன் (படுகொலை செய்யப்பட்ட மற்றொருவர்) அண்ணன், ஆதிக்கச் சாதிக்காரங்க கஞ்சா விக்குறதையும், கந்துவட்டி வாங்குறதையும் எதிர்த்ததோடு நிறைய முறை இவற்றுக்கு எதிரா மனுவும் கொடுத்திருக்கார். கஞ்சா விக்கிறதைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுக்கப் போகையிலதான், எங்க சித்தப்பாவும் கூடப் போச்சு. ஊட்டுக்குள்ள புகுந்து வெட்டும்போது, எங்க ஜாதிப் பேரை அசிங்கமாத் திட்டிக்கிட்டேதான் வெட்டினாங்க. தடுக்க வந்தவுங்களையும் மிரட்டினாங்க. வீடுகளை அடிச்சு உடைச்சாங்க” - விலகாத பயத்தோடு, நடுங்கும் குரலில் அன்றைய சம்பவத்தை விவரித்தார் சந்திரசேகரனின் அண்ணன் மகள்.
ராணுவ வீரராகப் பணிபுரியும் தெய்வேந்திரன்.  “திருவிழா முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு, நானும், பிரபாகரனும் கோயில் வாசல்ல உக்காந்து பேசிட்டே டீ குடிச்சிட்டு இருந்தோம். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சுமன் ‘என்னடா, எங்க முன்னாடியே திமிரா உட்காருவீங்களா?’ன்னு எகத்தாளமாப் பேசினான். நாங்க கோபப்பட்டுத் திரும்பப் பேசினதும், கத்தியால குத்த வந்தான். நான் திருப்பாச்சேத்தி போலீஸிடம் புகார் கொடுத்தேன். சுமனை போலீஸ்காரங்க தேடிப் போனப்போ அவன் இல்ல. போலீஸ்காரங்க, அவனோட அப்பாவக் கண்டிச்சு ஒரு அடி கொடுத்தாங்க. அதை வன்மமா வெச்சுட்டு ரெண்டு நாள் கழிச்சு ஆட்களைக் கூட்டிட்டு வந்து, இப்படிப் பண்ணிட்டான். எங்கப்பாவக் கொன்னுட்டாங்க” என குரல் ஒடுங்கி நிறுத்தியவர், “ஆனா, இது மட்டுமே பிரச்னையோட மூல காரணமில்லங்க. நாங்க படிக்கப் போறது, மதுர டவுன்ல வீடெடுத்து இருக்கிறது, நல்ல வேலைக்குப் போறது, என்னை மாதிரி ஆளுங்க ராணுவத்துக்குப் போறதுன்னு சுயமரியாதையா வாழ்றது அவங்களுக்குப் பிடிக்கல. இதோ லீவு முடிஞ்சு நான் நாட்டைக் காப்பாத்தப் போகணும். இவங்ககிட்ட இருந்து என் வீட்டையே காப்பாத்த எனக்குத் துப்பில்லாமப் போச்சு” என்று கதறுகிறார்.
“பட்டியலின மக்கள் பெருவாரியாகவும், ஆதிக்கச் சாதியினர் சிறுபான்மையாகவும் வசிக்கும் கிராமம் கச்சநத்தம்.  சொந்தமாக நிலம் இருந்தாலும் ஆதிக்கச் சாதியினர் வயல்களில்   அவர்களை வேலை செய்ய நிர்ப்பந்திப்பது, பெண்களைச் சீண்டுவது, தேநீர்க் கடைகளில் கூட வேற்றுமை பாராட்டுவது என சாதி ரீதியான பாரபட்சம் நீண்டகாலமாகவே நிலவுகின்றன” என்கிறார் தேவேந்திர சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கண்ணா, 

‘முக்குலத்தோர் எழுச்சிக் கழகம்’ என்னும் அமைப்பின் தலைவர் வி.கே.கவிக்குமார், “இந்தக் கொலையை சாதி அடிப்படையில் ஆதரிக்காதீங்கன்னு, எங்க மக்கள்கிட்டயே சொல்றேன். கொலைகாரங்களைக் கைது பண்ணுங்க. என்ன காரியத்துக்காகக் கொலை செஞ்சாலும் தப்புதான்.  அந்த குடும்பங்களுக்கு எங்க அனுதாபங்கள தெரிவிச்சுக்கிறோம். ஆனால், கொலை செஞ்சவங்கள விட்டுட்டு, மக்களைத் திருப்திப்படுத்தணும்னு கூடுதலா நாலஞ்சு பேர் மீது வழக்குப் பதிவு செஞ்சா, இந்தப் பிரச்னை தீராது. இந்த வன்மம் அப்படியே தொடரும். பீஸ் கமிட்டி போட்டுப் பேசணும். அதெல்லாம் செய்யாம, கையில கிடைக்குறவனை யெல்லாம் கைது பண்ணா எதுவும் மாறாது” என்கிறார்.

``சிவில் இன்ஜினீயரிங் படிக்கும் ஒரு பையன், வீட்டுக்குள் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். சம்பவத்தன்று, பிரச்னை என்னவென்றே தெரியாத அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாதியரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அடிநிலையில் இருப்பவர்கள் முன்னேறுவதைக்கூட ஆதிக்கச் சாதி மனங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. முதியவர் ஒருவரின் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். அவர் ஒவ்வொரு நொடியும் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பிரச்னை குறித்து முன்பே காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.அவர்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் மூன்று பேரின் இறப்பைத் தடுத்திருக்கலாமே.
பட்டியல் இன மக்கள் சாமி கும்பிடச் செல்லும்போதும், வெளியே சென்று திரும்பும்போதும் ஏதேனும் சொல்லிச் சீண்டுவதை ஒரு கும்பல் வழக்கமாகக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, சட்டம் படித்துவரும் மாணவனின் கைகளை வெட்டியதாகச் சொல்லப்ப டுகிறது. அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், மீண்டும் அதே ஆதிக்கத்துக்கு பயந்து ஒடுங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா விற்பனை, கந்துவட்டி, சாதிக் கொடுமை என எதற்காகவும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருந்தென்ன, இல்லாமலென்ன? அரசு எதைக் கவனித்துக்கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,
கொலை செய்யப்பட்ட வர்களுக்காக நீதி கேட்டுப் போராடியதன் விளைவாக சிபிசிஐடி விசாரணை, இழப்பீடு, பழையனூர், திருப்பாச்சேத்தி வன்கொடுமை மண்டலமாக அறிவிப்பு, குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், கச்சநத்தம் பெண்களுக்கு தாட்கோ லோன் என்பது மட்டுமில்லாமல், தனிச்சுடு காட்டை நோக்கிய இறுதி ஊர்வலத்தில் 800 போலீஸார் பாதுகாப்பு - இவையெல்லாம் உயிரிழப்புகளுக்குப் பிறகு... 

உயிரோடு இருக்கும்போதே உரிமைகளை  உறுதி செய்ய அரசும், சிவில் சமூகமும் எப்போது தயாராகும்?

Thursday, June 7, 2018

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்

நன்றி - இ.பு.ஞானப்பிரகாசன்


Godfathers of Reservation in India

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

கேள்வி (1): அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய அரசு, இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்குவது முறையா?

நான் பார்த்த வரையில், நம் சமூகத்தில் மிகப் பெரும்பாலானோர் இட ஒதுக்கீட்டை சலுகை என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே முதல்பெரும் தவறு! இட ஒதுக்கீடு என்பது சலுகையே இல்லை. அனைவருக்கும் சரிநிகராக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நுட்பமான ஓர் ஏற்பாடு அது, அவ்வளவுதான்.

Is this Not Reservation?
ஓட்டப் போட்டி (running race) பார்த்திருக்கிறீர்களா? அதில் வீரர்களை எப்பொழுதும் நேர்க்கோட்டில் நிறுத்த மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத்தான் நிறுத்துவார்கள். ஏன்? இப்படி நிறுத்தினால், முன்னால் நிற்பவர் முதலில் ஓடிப் போய் எல்லைக்கோட்டைத் தொட்டு விட மாட்டாரா? அப்படியானால், ஓட்டப் போட்டிகளில் முதலில் நிற்பவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனப் பொருளா?

அப்படி இல்லை! ஓட்டப்போட்டிகள் நடத்தப்படும் திடல்கள் (மைதானங்கள்) எப்பொழுதும் வட்ட அல்லது நீள்வட்ட வடிவில்தான் இருக்கும். ஒரு வட்டம், அதற்குள் இன்னொரு வட்டம் என வரையும்பொழுது ஒன்றை விட ஒன்று சிறிதாக இருப்பது இயல்பு. ஓட்டப்போட்டித் திடல்களும் இப்படித்தான். அவற்றில் ஓடுதடங்கள் (runways) வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன.

இந்நிலையில் எல்லோரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்திப் போட்டியை நடத்தினால், ஓட வேண்டிய தொலைவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். திடலின் உள்வட்ட ஓடுதடத்தின் சுற்றளவு குறைவாகவும், அதற்கு அடுத்தடுத்த ஓடுதடங்களின் சுற்றளவு கூடுதலாகவும் இருப்பதால், உள்வட்டத்தில் ஓடுபவரை விட வெளிவட்டத்தில் ஓடுபவர் கூடுதலான தொலைவைக் கடக்க வேண்டியிருக்கும். இதனால்தான் ஓட்டப்போட்டிகளில் எப்பொழுதும் ஒருவர் பின் ஒருவராக வீரர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு என்பதும் இப்படித்தான் நண்பர்களே!

தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.

நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் இடையிலும் தொடர்ந்து கல்வி கற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருகைக்கு முன்பான தமிழ் அரசர்கள் காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையிலாகட்டும், பிரிட்டிஷ் இந்தியா காலத்தின் திண்ணைப் பள்ளிக்கூடக் காலத்திலாகட்டும், விடுதலை பெற்ற இந்தியாவிலாகட்டும், முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றுதான் வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து படிக்க வருகிற மாணவர்களுக்கு மரபணு வாயிலாகவே கல்வியறிவு ஓரளவுக்கு உண்டு. படிப்பு என்பது அவர்கள் குருதியில் (blood) ஊறியது. தவிரவும், படிப்பில் ஏதாவது ஐயங்கள் எழுந்தால் கற்பிக்க அவர்களுக்கு வீட்டிலேயே ஆட்கள் உண்டு. படிக்கிற பிள்ளைக்கு எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற புரிதல் அவர்கள் குடும்பத்தினருக்கு உண்டு. கல்வி என்பது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு உண்டு. வீட்டிலும் வெளியிலும் அவர்கள் பழகும் இடங்களில் படித்த சமூகச் சூழல் அவர்களுக்கு உண்டு. என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவெல்லாம் வழிகாட்ட நிறைய பேர் அவர்களுக்கு உண்டு.

இதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக இல்லை. படிப்பில் ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தனியாகச் செலவு செய்து மாலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலை. சரியாகப் படிக்காவிட்டால், பெரியவர்களை மதித்து நடக்காவிட்டால் எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழல்.

இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் கொண்ட இருவேறு பின்னணிகளிலிருந்து வருகிற இந்த மாணவர்களில், கல்விக்கு உகந்த சூழல் இல்லாத இடத்திலிருந்து வரும் மாணவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும், முழுக்க முழுக்கக் கல்வி சார்ந்த பின்னணியிலிருந்து வருகிற மாணவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! உண்மையில், உவப்பில்லாத (adverse) பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கும் அந்த ஐம்பது மதிப்பெண், நல்ல பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கிற நூறு மதிப்பெண்ணை விடப் பெரியது இல்லையா? அப்படிப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களை விட மதிப்பெண் தகுதியைக் (mark eligibility) குறைத்து வரையறுப்பது எப்படித் தவறாகும்?

அப்பாவோ அம்மாவோ படித்தவர்களாக இல்லாத நிலையில் ஆங்கிலம், கணிதம், இந்தி என ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியே சிறப்பு வகுப்புகளுக்குச் செலவழித்துப் படிக்க வேண்டியிருக்கிற இட ஒதுக்கீட்டு வகுப்பினரிடம், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை விடக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கட்டணத்தைக் குறைத்து வாங்குவது எப்படி சலுகையாகும்?

சரியான சூழல் இல்லாததால் படிக்க முடியாமல் தேர்வுகளில் தோல்வியுறுவது, கல்வி இடைநிறுத்தப்படுவது போன்ற பல காரணங்களால் உரிய வயதுக்குள் படிப்பை முடிக்க முடியாத அவர்களுக்காக வயது வரம்பைத் (age limit) தளர்த்துவது எப்படிப் பாகுபாடு (discrimination) ஆகும்?

இப்பொழுது, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள்! இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

கேள்வி (2): ஏழைகள் எல்லா சாதிகளிலும்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க, குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது ஏன்?

இப்படிக் கேட்கும் நாம் முதலில் ஒரு விதயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருவது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கைதானே தவிர, பொருளாதார அடிப்படையிலானது இல்லை. காரணம், இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் படிக்கக்கூடாது, இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன தொழில்களை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நூற்றாண்டுக் கணக்காக இருந்து வந்த, வருகிற அடக்குமுறைகள் அனைத்தும் சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டனவே தவிர, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இல்லை. ஏழை என்கிற காரணத்தால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை, குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தைக் காட்டித்தான் மறுக்கப்பட்டது. எனவேதான், அதே சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இங்கு மட்டுமில்லை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா என நிறம், இனம், பாலினம் போன்ற பிறப்பு அடிப்படையிலான காரணங்களைக் காட்டி எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அப்படிப்பட்ட நாடுகளிலெல்லாம் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை மேலே கொண்டு வர அவர்களுக்கெனத் தனியே ஒதுக்கீடு வழங்குவது வழக்கமான ஒன்றுதான்.

கேள்வி (3): இட ஒதுக்கீடு பெறும் சாதிகளிலும் வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிலும் ஏழைகள் பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் செயல்படுத்தி வசதி படைத்தவர்களும் அதன் பலனைப் பெறும்படியும், உண்மையாக அரசு உதவி தேவைப்படும் ஏழைகள் பலருக்கு அது கிடைக்காமல் போகும்படியும் செய்வது எப்படி முறையாகும்?

இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

முதல் தலைமுறை மாணவர்கள், படிப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அவை அனைத்தும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்தானே? எனில், இதில் ஏழை – பணக்கார வேறுபாடு எங்கிருந்து வந்தது?

இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.

ஆக, முன்பே கூறியபடி, இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டமே, குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட, குறிப்பிட்ட தொழில் தவிர மற்றவற்றைச் செய்யக்கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும், விரும்பிய பணியைச் செய்யும் உரிமையும் கிடைப்பதற்காகத்தான். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழைகளிலும் இருக்கிறார்கள், பணக்காரர்களிலும் இருக்கிறார்கள் எனும்பொழுது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படவில்லை எனக் குறை சொல்வதும், அவ்வாறு மாற்றியமைக்கக் கோருவதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி (4): இப்படி வகுப்புவாரியாகக் கல்வி இடங்களையும் பணியிடங்களையும் வழங்குவதால் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனையோ பேர் திறமையும், தகுதியும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே?

உண்மைதான். ஆனால், அப்படிப் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேற்கொண்டு படிப்போ, வேலைவாய்ப்போ கிடைக்காமல் போய்விடுவதில்லை. அரசுக் கல்வியோ, அரசுப் பணியோ கிடைக்காமல் போனாலும் தனியாரிடமிருந்து அவர்கள் தங்களுக்குண்டான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். காரணம், மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களை விட அவர்கள் பெறும் மதிப்பெண் கூடுதல். ஆனால், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விடக் குறைந்த மதிப்பெண் பெறும் மற்ற சாதி மாணவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை என்னாகும்? எந்தத் தனியார் நிறுவனம் அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வரும்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இந்தியாவில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

அதே போல, இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டும் இன்னும் அவர்களில் பெரும்பாலோர் கல்வி பெறாதவர்களாகவும், பல விதங்களிலும் பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு சாரார் இப்படி அடிப்படை நல்வாழ்வைக் கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது, சாதிய அமைப்பு முறையை உருவாக்கி அவர்களின் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த முற்பட்ட வகுப்பினர், அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு மட்டும் தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய இடம் தொடர்ந்து எல்லாக் காலக்கட்டங்களிலும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனிதத்தன்மையா?

கேள்வி (5): வகுப்புவாரி இட ஒதுக்கீடு எனும் பெயரில் இப்படித் திறமையான மாணவர்கள் எல்லாரையும் ஒதுக்கிவிட்டுத் திறமையில்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் நாடு எப்படி முன்னேறும்?

குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் முட்டாள்களோ, கூடுதலான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் மேதாவிகளோ கிடையாது. அப்படியே இருந்தாலும், திறமை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் பணியில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் (guarantee) இல்லை.

என்னதான் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையாக இருப்பினும் குறைந்தளவு (minimum) தேர்ச்சியாவது பெற்றவர்களுக்குத்தான் இடங்கள் வழங்கப்படுகின்றனவே தவிர, எல்லாருக்கும் தூக்கிக் கொடுத்து விடப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு பணியைத் திறம்படச் செய்ய என்னென்ன தகுதிகளெல்லாம் தேவைப்படுமோ அவைதான் அந்தப் பணிக்கான குறைந்தளவுத் தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. ஆகவே, போதுமான தகுதியைப் பெற்ற பிறகுதான் எல்லோரும் அவரவர் இருக்கைகளை அடைந்திருக்கிறார்கள், அடைகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் ஆய்வு முடிவு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதாரப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், இட ஒதுக்கீட்டால் திறமையோ உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. சொல்லப் போனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உயர் பதவிகளில் அமர்த்தப்படும்பொழுது தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்காக மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். (மேலும் விவரங்களுக்கு: http://goo.gl/yMZrp3).

தன்னிடம் இருக்கும் மனித ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதன் மூலம்தான் ஒரு சமூகம் முழு வேகத்தோடு முன்னேற முடியுமே ஒழிய, மேல் மட்டத்தில் இருக்கும் மிகச் சிலருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து, மற்றவர்கள் எப்படியோ போகட்டும் என விட்டுவிட்டால் அது நடக்காது. சலுகையோ, முன்னுரிமையோ, நெறித் தளர்வோ (relaxation) எந்தப் பெயரில் வேண்டுமானாலும் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அப்படி ஏதாவது ஒன்றை வழங்கியாவது அனைவரையும் படித்தவர்களாகவும், துறைசார் திறமையுள்ளவர்களாகவும் மாற்றுவதுதான் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரே வழி. ஆக, இட ஒதுக்கீடு என்பது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக் கொடுத்து மக்களை வளர்ச்சி அடையச் செய்வது இல்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மற்ற எல்லாத் திட்டங்களையும் போலத்தான் அதுவும். எனவே, இட ஒதுக்கீட்டின் மூலம் நாடு முன்னேறாமல் போகிறது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

கேள்வி (6): அந்தக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்தன என்பதற்காக இன்றும் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமா?

இந்தக் காலத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? இன்றைக்கும் நம் சமூகத்தில் இரட்டைச் சுடுகாட்டு முறை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் ஊர்ப்புறங்களில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கத்தான்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் நாய் தங்கள் எல்லைக்குள் நுழையக்கூடாது எனப் பட்டப் பகலில் வெட்ட வெளிப்படையாகப் பலகை மாட்டியிருக்கும் கிராமங்கள் இன்றும்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.

'நாட்டாமை' படம் பார்த்திருப்பீர்கள். அதில், பெரிய வணிகராகவும், ஆளுநர் முதலானோர் மதிக்கும் அதிகாரமும் செல்வாக்கும் உடையவராகவும் உள்ள ஜெய்கணேஷ் தன் ஊரின் நாட்டாமையான சரத்குமாரிடம் கைகட்டிக் குனிந்து பணிந்து பேசும் காட்சி ஒன்று வரும். அதுதான் இன்றும் இந்திய கிராமங்களின் நிலைமை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அளவுக்கு சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும், இங்கும் பொதுமக்கள் வாழும் பகுதியும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியான சேரிகளும் தனித் தனியாகப் பிரித்துத்தான் வைக்கப்பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படத்தான் செய்கிறது; தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதனால் மனம் குமுறத்தான் செய்கிறார்கள்.

ஆக, இன்னும் எதுவும் அவ்வளவு மாறிவிடவில்லை நண்பர்களே! பார்க்கப் போனால், முன்பை விட நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.

‘கௌரவக் கொலை’ என்கிற பெயரில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கொடுமை இதற்கு முன் தமிழ்நாடு காணாத பேரிழிவு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதற்காகப் பெற்ற தாயே மகளைக் கதறக் கதற நஞ்சு கொடுத்துக் கொல்வது, இதற்கென ஓர் அமைப்பே நடத்திக் கொண்டு, முற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கூடத் தூக்கிக் கொண்டு போய்த் தலையை வெட்டிவிட்டுத் தண்டவாளத்தில் வீசுவது போன்றவையெல்லாம் அம்பேத்கர் - பெரியார் காலத்தில் கூட நடந்ததில்லை.

இவை ஒருபுறம் இருக்க, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய மட்டங்களில் பார்க்கும்பொழுது, இத்தனை நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்தியும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலோர் இன்றும் அடிமட்டத் தொழில்களைச் செய்பவர்களாகவும், மிகவும் கடைமட்ட வாழ்க்கை முறையில் உழல்பவர்களாகவும், சேரி - குப்பம் போன்ற மிக மிக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிலும் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறை மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இன்றும் இருக்கிறது என்பதே உண்மை!

கேள்வி (7): இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கியும் பெரும்பான்மையினர் இன்றும் படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள் எனில், அந்தத் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகத்தானே பொருள்? அப்புறம் ஏன் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அரசு ஊழியர், ஆசிரியர் வேடம் என்றாலே பஞ்சகச்ச வேட்டியோ, நாமமோதான் ஒப்பனை (make-up). எண்பதுகள் வரைக்கும் அப்படித்தான்.

ஆனால், இன்றைக்கு அரசு அலுவலகங்களில் சென்று பார்த்தால் தெரியும், எத்தனை விதமான சாதி - சமயங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு கலந்து பணிபுரிகிறார்கள் என்பது. அந்த அளவுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதிகளின் மக்கள்தொகைப்படி பார்க்கும்பொழுது முன்னுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட வராதவர்களின் எண்ணிக்கை கூடுதல், அவ்வளவுதான். அதற்காக, இட ஒதுக்கீட்டால் பலன் இல்லை என்பதில்லை.

கேள்வி (8): எவ்வளவுதான் படித்தாலும், உயர்ந்தாலும் அதனால் ஒருவரின் சாதி மாறிவிடுவதில்லை, குறிப்பிட்ட சாதி சார்ந்த அடக்குமுறைகளுக்கு அவரும் ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது எனும்பொழுது இட ஒதுக்கீடு எதற்காக?

பொதுமக்கள் மட்டுமில்லை அரசு, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் போன்றோர் கூடத் தவறு செய்யும் இடம் இதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சாதியத்தையும், அதன் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அது பிழை! சாதி காரணமாக மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டே இரண்டு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. அந்த வகையில் அது சரியாகத்தான் பலனளித்து வருகிறது. தொடர்ந்து அதற்கான தேவையும் இருந்தே வருகிறது. ஆனால், இட ஒதுக்கீடு எனும் ஒன்றை மட்டுமே வைத்து சாதி அடிப்படையிலான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என நினைத்தால் அது மிகப் பெரிய மூடநம்பிக்கை!

கேள்வி (9): மற்ற சாதிகளுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வழங்குவது போல முற்பட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கி விட்டால் இப்படி எந்தச் சர்ச்சைக்குமே இடமில்லாமல் போகும் இல்லையா?

மற்ற சாதியினரின் இன்றைய கீழ் நிலைக்குக் காரணமே முற்பட்ட சாதியினர்தான். அப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முன்னுரிமையை அவர்களுடைய பாதிப்புக்குக் காரணமானவர்களுக்கும் எப்படி வழங்க முடியும்?

மேலும், பல தலைமுறைகளாகக் கல்வியே கற்காதவர்கள் என்பதால்தான் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பெண், வயது, கட்டணம் என எல்லாவற்றிலும் தளர்வு (relaxation) வழங்கப்படுகிறது எனும்பொழுது தலைமுறை தலைமுறையாகப் படித்த சாதிகளிலிருந்து வருகிற முற்பட்டோருக்கு எந்தக் காரணத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியும்?


கேள்வி (10): பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும்தான். ஆனால், அதற்காக முற்பட்ட சாதியினர் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும் முன், சாதியைக் காரணம் காட்டிப் பெரும்பாலான மக்களைக் கல்விப் போட்டியிலிருந்து அறவே ஒதுக்கிவிட்டு, கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரிய தனிச் சொத்தாகவே பல நூற்றாண்டுகளாகத் துய்த்து (அனுபவித்து) வந்தனர் முற்பட்ட பிரிவினர். அப்படியோர் அட்டூழியமான இட ஒதுக்கீட்டின் பலனை அத்தனை காலமாகப் பெற்று வந்தவர்கள், அதைச் சரி செய்வதற்கான இந்த இட ஒதுக்கீட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது கடமை இல்லையா?


Equality Vs. Reservation

எனக்குத் தெரிந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகள் இவ்வளவுதான்.

சுருக்கமாகச் சொன்னால், பிறப்பைக் காரணம் காட்டிப் பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குத் திடீரென அந்த உரிமைகளைத் திருப்பி வழங்கும்பொழுது, அவற்றைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களோடு சரிநிகராகப் போட்டியிட அவர்களால் முடியாது என்பதால் அவர்களுக்காக நெறிமுறைகளையும், வரம்புகளையும் ஓரளவு தளர்த்திக் கொண்டு முன்னுரிமை அளிப்பதற்குப் பெயர்தான் இட ஒதுக்கீடு. சிலருக்கு முன்னுரிமை தருவது என ஆகி விட்டாலே அதனால் சிலருக்குப் பாதிப்பும் ஏற்படத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதனால் ஒரேயடியாக அவர்களின் வாழ்க்கைத்தரமே பாதிக்கப்பட்டு விடுவதில்லை எனும்பொழுது தங்களோடு சேர்ந்து வாழ்கிற சக மனிதர்களான தாழ்த்தப்பட்டோருக்காக முற்பட்டோர் விட்டுக் கொடுப்பதே மனிதத்தன்மை.

இவ்வளவுக்குப் பிறகும், இட ஒதுக்கீடு தவறானது என யாருக்காவது தோன்றினால், அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி!
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா?
ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், சாதி காரணமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே. ஆக, சாதி ஒழிந்து விட்டாலே இட ஒதுக்கீட்டுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, முற்பட்ட வகுப்பினர் தங்களுக்கு சாதி தேவையில்லை எனப் புறக்கணித்து, சாதிய அமைப்பிலிருந்து வெளியே வந்தால் அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் வெளியேறுவார்கள். அதன் தொடர்ச்சியாக, சில தலைமுறைகளில் சாதி என்பதே முற்றிலும் ஒழிந்து போகும். அதற்குள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எல்லா சாதியினரும் முன்னேறியும் விடுவார்கள் என்பதால், இட ஒதுக்கீட்டையும் எடுத்து விடலாம்.

ஆனால், இட ஒதுக்கீட்டைத் தவறு எனக் கூறும் முற்பட்டவர்கள் அதற்கான தேவையை ஏற்படுத்தும் சாதிய அமைப்பிலிருந்து மட்டும் வெளியே வருவதில்லை. சாதி தவறுதான், அதனால் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது உண்மைதான் என்பவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்காத அவர்கள் அப்படிப்பட்ட சாதி அமைப்பிலிருந்து வெளிவருவதற்கு மட்டும் விரும்புவதில்லை. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்களே தங்கள் சாதிய அடையாளத்தை உதற முன்வராதபொழுது இட ஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் எப்படி அதை விட்டு வெளிவருவார்கள்?

இப்படி எல்லோரும் சாதி முத்திரையைத் தங்கள் நெற்றியில் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தால் சாதி உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். சாதி உயிரோடு இருக்கும் வரை அதன் காரணமாக விளையும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருக்கத்தான் செய்யும்.

ஆகவே, முற்பட்ட சாதியினரே புரிந்து கொள்ளுங்கள்! இட ஒதுக்கீட்டை அப்புறப்படுத்துவது அரசின் கையிலோ, அதனால் பலனடைபவர்களின் கையிலோ, வேறு யார் கையிலுமோ இல்லை. உங்கள் கையில்தான் இருக்கிறது! அதன் பின் உங்கள் விருப்பம்!