Thursday, August 23, 2012



 
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் போட்டியில் குவோர் மாரியல் என்ற வீரர் ஓடினார். அவர் 47-வது இடம்தான் பிடித்தார். ஆனால், அவர் படைத்திருப்பது ஓர் அசாத்திய சாதனை.

மாரியல் சூடான் நாட்டைச் சேர்ந்தவர். சூடானின் அரசப் படைகள் தெற்கு சூடான் மக்களை மோசமாகச் சித்ரவதை செய்து, கொலை செய்தது. மாரியலின் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 12 வருடங்களுக்கு முன்பு சூடானில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தார் மாரியல். லண்டன் ஒலிம்பிக்கின் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றும் அவரால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாத நிலை. ஏனெனில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டுமாயின் ஒரு நாடு வேண்டும். அமெரிக்காவில் வசிப்பிட உரிமைதான் உண்டே ஒழிய, குடியுரிமை கிடையாது. அண்மையில் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், அதனிடம் ஓர் ஒலிம்பிக் குழு இல்லை

'மாரியல் விரும்பினால் சூடான் சார்பாக ஓடலாம்’ என்று சூடான் அதிபர் அழைப்புவிடுத்தார். ஆனால், தன் சகோதரர்களைக் கொலை செய்த, தன்னை நாட்டை விட்டு விரட்டியடித்த சூடான் சார்பாக ஓட மாரியல் விரும்பவில்லை. அந்த அழைப்பை நிராகரித்தார்.

இதற்கிடையே, தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று ஓட முடியாத மாரியலுக்கு ஆதரவாகப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்தது. ஏராளமானோர் கையெழுத்திட்டு மனு அனுப்பினார் கள். இறுதியில் மாரியல் ஒலிம்பிக்கில் பங்கெடுக்க அனுமதித்தது ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி. ஆனால், அவருக்கு என்று ஒரு நாடு இல்லாத தால் ஒலிம்பிக் கொடியே அவருடைய அடை யாளம் ஆனது. 'என்னிடம் தெற்கு சூடான் கொடி இல்லை. ஆனால், நான் ஓடும்போது ஒட்டுமொத்த நாடும் என் பின்னால் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் மாரியல்.
 
இதைப் பற்றித் தனது இணையதளத்தில் எழுதி இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 'குவோர் மாரியல் ஓடும்போது சூடான் உள்நாட்டுப் போரில் மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைத்துக்கொள்வேன். போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மாரியலின் எட்டு சகோதரர்களை நினைத்துக்கொள்வேன். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டவீரன் அவன்தான், நாடற்றவன்!’ என்று முடித்திருக்கிறார். வெற்றி என்பது முதல் இடம் மட்டும்தானா

No comments:

Post a Comment