மதராசி வக்கீல் !
களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு சமூகப் போராளியின் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் ஒருபோதும் 'நான்’ என்பது துருத்திக்கொண்டு நிற்காது. எந்தச் சூழலிலும் அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவது இல்லை. 68 வயதாகும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அப்படி ஓர் அற்புதம்!
மணிக்கணக்காகப் பேசினாலும் உரையாட லில் ஓர் இடத்தில்கூட 'நான்’ என்று ஒரு தடவைகூட உச்சரிக்க மாட்டார். திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் கடந்த 45 ஆண்டுகளாக ரத்தினம் ஆற்றி வரும் களப் பணிகள்... ஆர்வம் உள்ள எல்லோருக்கும் அரிச்சுவடி. மேலவளவு படுகொலை, அத்தியூர் விஜயா, மனித மலத்தை வாயில் திணித்த திண்ணியம் வன்கொடுமை... இப்படி ஒடுக்குமுறைகள் நிகழும் இடங்களில் இவரைக் காணலாம். நைந்த செருப்பு, ஒரு பழைய சூட்கேஸ்... இவைதான் ரத்தினத்தின் உடைமைகள். இவற்றோடு நீதிக்கான நீண்ட பயணத்தை நிகழ்த்தும் மனிதர்.
''விருத்தாசலத்தில் முருகேசன் என்ற தலித் பையன், கண்ணகி என்ற வன்னியர் பெண்ணைக் காதலிக்கிறார். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து, அந்தப் பெண்ணைத் தன் உறவினர் வீட்டில் தங்கவைக்கிறார். பெண்ணைக் காணவில்லை என்றதும் தேடுகின்றனர். முருகேசன் மீது சந்தேகம் வந்து, அடித்துச் சித்ரவதை செய்கிறார் கள். அவர் வலியைப் பொறுத்துக்கொண்டு, 'எனக்குத் தெரியாது’ என்கிறார். உடனே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோண்டிவைத்திருந்த 300 அடி ஆழக் குழிக்குள் முருகேசனைக் கயிற்றில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுகின்றனர். உயிர் பயத்தில் உண்மையைச் சொல்கிறார். உடனே, உறவினர்கள் சென்று கண்ணகியை அழைத்து வருகிறார்கள். அந்த இடைவெளியில் ஊரில் விறகுகள் அடுக்கி எரிப்பதற்கு மயானம் தயார் செய்யப்படுகிறது. பெண்ணை அழைத்து வந்தது முருகேசனின் சித்தப்பா. அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, மற்றவர்கள் சேர்ந்து முருகேசனுக்கும் கண்ணகிக்கும் வாயில் விஷத்தை ஊற்றுகின்றனர். அவர்கள் குடிக்காமல் துப்பவே, காதில் விஷத்தை ஊற்றி இருவரையும் கொல்கிறார்கள். கண்ணகியை மட்டும் வன்னியர் சுடுகாட்டில் எரித்துவிட்டு, முருகேசனை வேறு ஓர் இடத்தில்வைத்து எரிக்கிறார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து செல்கிறது. எதுவுமே நடக்காததுபோல அடுத்த நாளில் இருந்து இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.
இது ஏதோ கற்காலத்தில் நடந்தது அல்ல.
சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் நடந்தது தான். முருகேசனும் கண்ணகியும் செய்த தவறு என்ன? காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் அவ்வளவு பெரிய குற்றமா? முருகேசன் இன்ஜினீயரிங் படித்தவர். கண்ணகி பி.காம். படித்தவர். ஒரு கிராமப்புற தலித் குடும்பத்துப் பையன் இன்ஜினீயரிங் வரை படிப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. கடைசியில் சாதி வெறி முருகேசனைக் காவு வாங்கிவிட்டது. படித்துவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும் என்று சொல்வது எத்தனை அபத்தமானது?'' - ரத்தினத்தின் குரலில் கோபம் தெறிக்கிறது.
தமிழ்நாட்டு தலித்துகள் மீதான மிக மோசமான அடக்குமுறைக்குச் சான்றாக இருக்கும் சம்பவம் மேலவளவு முருகேசன் படுகொலை. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட மேலவளவு ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதும் வெற்றிபெற்றதும்தான் முருகேசன் செய்த ஒரே தவறு. விளைவு... உள்ளூர் ஆதிக்கச் சாதி வெறியர்களால் முருகேசனும் இன்னும் ஐந்து தலித்துகளும் பட்டப்பகலில் பேருந்தை வழி மறித்து வெட்டிக் கொல்லப்பட்டார்கள். வெட்டி எடுக்கப்பட்ட முருகேச னின் தலையை ஒரு கிலோ மீட்டர் தள்ளி வீசினார்கள். மொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்தப் படுகொலையில் தலித் மக்களுக்காகக் களம் இறங்கி உச்ச நீதிமன்றம் வரையிலும் சட்டப் போராட்டம் நடத்தி 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர் ரத்தினம். தற்போது மதுரையில் இருந்து செயல்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் என்ற கிராமம்.
''என் அப்பா ஒரு சிறு விவசாயி. திருச்சி தேசியக் கல்லூரியில் பி.காம். படித்தேன். பாடப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படிக்கப் படிக்க... மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. வீட்டில் என்னை எம்.பி.பி.எஸ். படிக்கவைக்க ஆசைப்பட்டார்கள். எனக்குச் சட்டம் படிக்க ஆசை. 'இரண்டையும் படித்துவிட்டு மக்களுக்காக உழைப்போம்’ என்ற எண்ணத்தில் சென்னைக்கு சட்டம் படிக்கப் போனேன். அங்கு சமூக அக்கறையுடன் செயல்படும் பல தோழர்கள், அமைப்புகளின் தொடர்பு கிடைத்தது. நிறையப் பேசுவோம், எழுதுவோம். 'புது நிலவு’ என ஒரு பத்திரிகை நடத்தினோம். பாக்கெட் சைஸில் 'சுட்டி’ என்ற பத்திரிகை நடத்தி, அது 22 ஆயிரம் பிரதிகள் விற்றது.
சட்டக் கல்லூரியில் தமிழில் பாடத்திட்டம் கொண்டுவரச் சொல்லி சட்டமன்றத்தில் போய்ப் போராடினோம். உடனே, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 'தமிழில் பாடம் நடத்தப்படும். ஆனால், தேர்வுகள் ஆங்கிலத்தில் நடக்கும்’ என்றார். எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்?! மறுபடியும் அதற்குப் போராடி தமிழிலேயே தேர்வும் எழுதலாம் என அறிவிக்கவைத்தோம்.
குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தப்படுவதற்கு எதிராக வேலைகள் பார்த்தோம். இப்போது வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடம் ஒரு குடிசைப் பகுதிதான்.
கல்லூரி முடிந்ததும் வீட்டில் திருமணப் பேச்சு நடத்தினார்கள். 'நான் சொத்து சேர்க்கும் வக்கீல் கிடையாது. நான் இப்படித்தான் இருப்பேன். யாராவது சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு, தருமபுரி பகுதியில் வால்டர் தேவாரத்தின் மோசமான மனித உரிமை மீறல் களுக்கு எதிராக வேலை பார்த்தோம். பல வழக்குகள், போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் என மாநிலம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். பிறகு, நண்பர்கள் அழைப்பின் பெயரில் குஜராத் துக்குச் சென்றேன். அங்கு, பரோடாவுக்கும் சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்தில் ஒரு மலைக் கிராமத்தில் பழங்குடி மக்களிடையே
வேலை பார்த்தோம். காவல் துறையும் வனத் துறையும் சேர்ந்துகொண்டு பழங்குடி மக்கள் மீது விருப்பம்போல பொய் வழக்குகளைப் போடுவார்கள். ஒருமுறை, புதிதாகத் திருமணம் முடித்திருந்த ஒரு பழங்குடிப் பெண்ணைக் காவல் துறையினரும் வனத் துறையினரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டார்கள். அடிமைகளைப் போல ஒடுக்கப்பட்டுஇருந்த பழங்குடி மக்களுக்கு, இதற்கு எதிராகப் போராடி நியாயம் பெறலாம் என்று நம்பிக்கை தந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தோம். அந்த வழக்கு குஜராத்திலும் டெல்லியிலும் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. என்னை 'மதராசி வக்கீல்’ என்று சொன்னார்கள். ஐந்து போலீஸ்காரர்களுக்கு 10 வருடங்கள் தண்டனை வாங்கிக்கொடுத்தோம். நான்கு வருடங்கள் குஜராத்தில் இருந்துவிட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன்!'' நினைவுகள் அழைத்துச் செல்லும் திசையில், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டே போகிறார் ரத்தினம்.
''
நம் நாட்டின் சாதிய அமைப்பு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கிறது. எல்லா சாதிக்காரர்களும் தனக்கும் கீழே ஒரு சாதி இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகச் சாதி ஒழிந்தால்தான் அந்த இழிவு போகுமே தவிர, தனக்கு மேலே இருக்கும் சாதி ஆதிக்கத்தை மட்டும் தனியே ஒழிக்க முடியாது. இப்போது உள்ள ஒடுக்கப்பட்டோர் கட்சிகள் எல்லாமே, தலித் மக்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கின்றன. உண்மையில் அந்தக் கட்சிகள் சாதி இருப்பதை விரும்புகின்றன. சாதி ஒழிந்துவிட்டால், அவர்களால் பிழைக்க முடியாது. தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த திண்ணியம் வழக்கில் குறைந்தபட்சத் தண்டனையோடு குற்றவாளிகள் வெளியே வந்துவிட்டனர். அதற்கு எதிரான மேல் முறையீடு செய்ய தலித் அமைப்புகளே முட்டுக்கட்டை போட்டுவிட்டன. இத்தகைய பிழைப்பு வாதக் கட்சிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அரசியல் கிரிமினல்களை ஒழித்துக்கட்டி, மக்களின் மீது உண்மையான கரிசனம் உள்ள புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னலமற்ற அமைப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்'' என்கிற ரத்தினம், மாநிலம் முழுவதும் உள்ள சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து 'சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்’ என்ற பெயரில் செயல்படுகிறார். 'புத்தர் பாசறை’, 'சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு’ போன்றவை யும் இவர் உருவாக்கியவையே.
ரத்தினத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் புகழ் பெற்றவை. நீதிமன்றங்களையும் நீதிபதிகளை யும் வழக்கு நடக்கும்போதே நேருக்கு நேர் விமர்சிப்பார். ஆனாலும் இதுவரை 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’ இவர் மீது பாய்ந்தது இல்லை.''ஏனெனில் உண்மை என் பக்கம் இருக்கிறது. என்னை 'ஒன் மேன் ஆர்மி’ என்பார்கள். நான் ஜூனியர்கள் வைத்துக்கொள்வது இல்லை. கூட்டத்தைத் திரட்டுவது இல்லை. உண்மையை மட்டுமே சொல்கிறேன்.
அச்சம் இல்லாமல் சொல்கிறேன். எதற்கு அஞ்ச வேண்டும்? 'தலித்துகள் எல்லாம் ஃப்ராடுகள்’ என்று ஓப்பன் கோர்ட்டில் ஒரு நீதிபதி சொல்கிறார். அவருக்கே அச்சம் இல்லை. நாம் எதற்குப் பயப்பட வேண்டும்? நீதிபதிகள் எல்லோரும் மக்கள் ஊழியர்கள்தான். நமது வரிப் பணத்தில்தான் அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், நீதிமன்றங்கள்பற்றிய மிகையான பெருமிதமும் அச்சமும் மக்களுக்கு இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணய்யர் ஓய்வுபெறும்போது, 'நான் நிறையத் தவறுகள் செய்துவிட்டேன்போல் இருக்கிறது. நீதிமன்றத்தின் மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார். மக்களின் நம்பிக்கை ஒரு பக்கம் இருக்க... 90 சதவிகித வழக்கறிஞர்களே இன்னமும் 'மை லார்டு’ என்றுதான் சொல்கிறார்கள். நீதிபதிகள் அதை விரும்பவில்லை என்றாலும் வக்கீல்கள் கைவிட மறுக்கிறார்கள். நாம் இவை அனைத்தையும் கடந்துதான் பாதிக்கப்படும் மக்களுக்கான நீதியைப் பெற வேண்டி இருக்கிறது!''
No comments:
Post a Comment