Thursday, October 11, 2012

இரு வியாபாரிகள்


 
ரு வியாபாரி காசுக்காக ஜென் தத்துவங்களைப் போதித் துக்கொண்டு இருந்தான். அவனி டம் ஜென் கற்க ஒரு ஏழை மது வியாபாரி வந்தான். ஜென் வியாபாரி முன்பணம் கேட்டான். அதற்கு ஏழை வியாபாரி தன்னி டம் பணம் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மதுவைத் தருவதாகவும் கூறினான். 'சரி, உன்னிடம் உள்ள மதுவில் பாதி யைக் கொண்டுவா' என்றான் ஜென் வியாபாரி. மது வியாபாரி யும் அவ்வண்ணமே செய்தான். மதுவை வாங்கிக்கொண்ட ஜென் வியாபாரி, நாளை முதல் வகுப்பு தொடங்கும் என்று சொன்னான். ஏழை வியாபாரி மறு நாள் பாடம் படிக்க வந்தான். ஜென் வியாபாரி அப்போது நிறைய மது அருந்தி முழு போதையில் இருந்தான். 'குருவே, ஜென் என்றால் என்ன?' என்றான் மது வியாபாரி.
 
அதற்கு குரு சொன்னான்: 'எது இருக்கிறதோ அது இல்லா மலும் எது இல்லையோ அது இருந்துகொண்டும் இல்லாதிருக் கிற நிலை மாறாமலும் மாறிக் கொண்டும் இருக்கின்றபோது மலரும் பூவின் மீதமரும் வண்டின் பறத்தல்தான் ஜென்.'
 
குருவின் போதையைப் புரிந்துகொண்ட மது வியாபாரி, 'குருவே, இதைச் சொல்வது நீங்களா, மதுவா?' என்றான்.
 
'நான் வேறு, மது வேறா?' என்றான் குரு. ஏழை வியாபாரிக்கு அக்கணமே ஞானம் பிறந்தது.
 
ஹிட்லர் ஹீரோவா?
 
பாரதி தம்பி
 
 
டந்த இரு வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு சிறிய துணிக் கடை அகில உலகக் கவனம் ஈர்த்தது. பல ஐரோப்பிய ஊடகங்கள் அந்தக் கடையைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. காரணம், அந்தத் துணிக் கடையின் பெயர்... ஹிட்லர்!
 
ராஜேஷ் ஷா என்பவர் திறந்த அந்தக் கடை யூதர்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. '60 லட்சம் யூதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று ஒழித்த அரக்கன் ஹிட்லர். அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று முறையிட்டனர். அவரோ அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், 'எனக்கு ஹிட்லர் என்பவர் யார் என்றே தெரியாது. என் பங்குதாரரின் தாத்தா கண்டிப்பானவர் என்பதால், அவரை ஹிட்லர் என்று அழைப்பார்கள். கடைக்குப் பெயர் வைக்கும்போது அது ஞாபகம் வந்தது. பெயர் கவர்ச்சியாக இருந்ததால், ஹிட்லர் என்று வைத்தோம். இங்கு உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் யாரும் இந்தப் பெயரை எதிர்க்கவில்லை. நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? பெயரை மாற்ற முடியாது'' என்றார். இதற்கு இடையே செய்தி பரவி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாடுகளில் வாழும் யூதர்கள் அந்தக் கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது விவகாரம். ஆனால், ராஜேஷ் ஷாவோ, ஓசியில் உலக அளவில் விளம்பரம் கிடைப்பதாகச் சொல்லிச் சிரித்தார். அதற்கு ஏற்ப அந்தச் சின்ன கடையைத் தினமும் மீடியாக்கள் மொய்த்தன. ஒரு கட்டத்தில், யூதர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, இஸ்ரேல் அரசு நேரடியாகத் தலையிட்டு இந்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க... உள்ளூர் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடைக் குப் படையெடுத்ததும் வேறு வழியின்றி கடையின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்டு இருக் கிறார் ராஜேஷ்.

Friday, October 5, 2012

பறை இசையில் காதலும் சாத்தியம் என்கிறது புத்தர் கலைக் குழு!

''சாதி மறுப்புத் திருமணத்தைப் பண்ணு
அப்பதான் சக்கிலியனும் பாப்பாத்தியும்
ஒண்ணோட ஒண்ணு
தமிழன், தமிழன்னு பீத்துற கண்ணு
தலித்தும் தமிழன்தான்
கல்யாணம் பண்ணு!''
 
பறை இசையை எங்கும் பரப்புவதே இவர்களின் வாழ்நாள் நோக்கம். ''பறை, சாவுக்கான கலை இல்லை; அது வாழ்வுக்கான கலை. பறை, ஒரு சாதிக்கான கலை இல்லை. அது ஆதிக்கம் அறுக்க வந்த ஆதிக் கலை. ஆனால், நடைமுறை யில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே பறை இசைக்க வற்புத்தப்படுகின்றனர். ஏன், ஒரு வன்னியர், தேவர், பிள்ளைமார், செட்டியார், ஐயர், நாடார், கவுண்டர், நாயக்கர் இவர்கள் எல்லாம் பறை இசைக்கக் கூடாதா? இந்த ஆதிக் கருவி நம் அனைவருக்கும் சொந்தம். வாருங்கள், சாதி ஒழிப்பின் முதல் அடியைப் பறை முழக்கத்துடன் தொடங்கிவைப்போம்!'' - அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் மணிமாறன். 'புத்தர் கலைக் குழு’வை உருவாக்கி, ஊர் ஊராகத் தன் குழுவினருடன் பறை இசையைப் பரப்பிவருபவர். இவருடைய மனைவி மகிழினி பாடல்கள் பாட, மகன்கள் சமரன், இனியன் பறை முழக்கம் செய்ய... மொத்தக் குடும்பத்தையும் குழுவில் இணைத்துக்கொண்டு, வேடந்தாங்கலில் இருந்து எல்லாத் திசைகளுக்கும் பறக்கிறது இந்தக் குழு!

Thursday, October 4, 2012

வாசித்ததில் நேசித்தது 
 
மின்வெட்டு... நிஜப் பின்னணி!
 
சமஸ்
து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால். தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது. இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78. ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.
 
மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.
 
கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.
நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?
 
புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.
 
ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.
 
இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!

காரணத்தைத் தேடுகிறது அரசு!
மின்சாரம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் சா.காந்தி, தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர். மின் துறைச் சீர்கேடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்.
''அரசு மின் வாரியங்கள் - ஊழியர்களின் திறமையற்ற செயல்பாடுகள் தானே மின் துறை தனியார்மயமாக்கப்படக் காரணம்?''
''இவ்வளவு பெரிய நாட்டில் வலு வான மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியது யார்... அரசு மின் வாரியங்கள்தானே? தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 1971-ம் ஆண்டிலேயே 99 சதவிகிதக் கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்றுவிட்டோம். 1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''

''அப்படி என்றால் மின் வாரியங்களின் நஷ்டத்துக்கு என்னதான் காரணம்?''
''அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம். பத்து ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி மூன்று ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என்றால், நஷ்டம் வராமல் என்ன செய்யும்? முதலில் இது லாப - நஷ்டக் கணக்கு பார்க்கும் வணிகத் துறை இல்லை. உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''

''நவீன உலகின் உயிர்நாடியான மின் துறையை அரசு தனியார்மயமாக்க விரும்புகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''
''தனியார்மயத்தின் வருகைக்குப் பிறகுதானே 1.76 லட்சம் கோடி ஊழல், 1.86 லட்சம் கோடி ஊழல்களை எல்லாம் பார்க்கிறோம்? தனியார்மயம் எங்கு புகுத்தப்படுகிறதோ, அங்கே ஊழல் திளைக்கும். மின்சாரம் என்பது காசு கொழிக்கும் வளம்!''