ஹிட்லர் ஹீரோவா?
பாரதி தம்பி
கடந்த இரு வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு சிறிய துணிக் கடை அகில உலகக் கவனம் ஈர்த்தது. பல ஐரோப்பிய ஊடகங்கள் அந்தக் கடையைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. காரணம், அந்தத் துணிக் கடையின் பெயர்... ஹிட்லர்!
ராஜேஷ் ஷா என்பவர் திறந்த அந்தக் கடை யூதர்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. '60 லட்சம் யூதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று ஒழித்த அரக்கன் ஹிட்லர். அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று முறையிட்டனர். அவரோ அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், 'எனக்கு ஹிட்லர் என்பவர் யார் என்றே தெரியாது. என் பங்குதாரரின் தாத்தா கண்டிப்பானவர் என்பதால், அவரை ஹிட்லர் என்று அழைப்பார்கள். கடைக்குப் பெயர் வைக்கும்போது அது ஞாபகம் வந்தது. பெயர் கவர்ச்சியாக இருந்ததால், ஹிட்லர் என்று வைத்தோம். இங்கு உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் யாரும் இந்தப் பெயரை எதிர்க்கவில்லை. நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? பெயரை மாற்ற முடியாது'' என்றார். இதற்கு இடையே செய்தி பரவி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாடுகளில் வாழும் யூதர்கள் அந்தக் கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது விவகாரம். ஆனால், ராஜேஷ் ஷாவோ, ஓசியில் உலக அளவில் விளம்பரம் கிடைப்பதாகச் சொல்லிச் சிரித்தார். அதற்கு ஏற்ப அந்தச் சின்ன கடையைத் தினமும் மீடியாக்கள் மொய்த்தன. ஒரு கட்டத்தில், யூதர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, இஸ்ரேல் அரசு நேரடியாகத் தலையிட்டு இந்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க... உள்ளூர் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடைக் குப் படையெடுத்ததும் வேறு வழியின்றி கடையின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்டு இருக் கிறார் ராஜேஷ்.
No comments:
Post a Comment