Monday, March 25, 2013

விடைகளற்றவை
ரண வீடுகளில்
பூக்களுக்கு
எப்படித்தான் வருகிறதோ
வேறு மணம்
திருமணம் ஆன பிறகு
பெண்களுக்கு
எப்படித்தான் வருகிறதோ
பெரியமனுஷித்தனம்
நாள்காட்டியில்
இல்லாவிட்டாலும்
சிறுவர்களுக்கு
எப்படித்தான் தெரிகிறதோ
பம்பர சீசனும்
கோலி சீசனும்
எல்லா பேருந்தின்
முன் இருக்கைகளிலும்
அமர
எங்கிருந்துதான்
வருகிறார்களோ
சில அழகிகள்!
                                  
- அ.நிலாதரன்

Thursday, March 7, 2013

காதல் அறியாக் காதலர்கள்! - தமிழருவி மணியன்
- நன்றி ஜூனியர் விகடன்  
 
'காதலே என்னு​டைய மதம்’ என்றான் கவிஞன் கீட்ஸ். 'காதலிக்​காமல் உயிர் வாழ்வதைவிட, காதலில் தோற் றுப்போவது உயர்வானது’ என்று வாக்குமூலம் வழங்கினான் டெனிசன். 'காதல் கண்களில் இல்லை. அது காதலிப்பவர் இதயத்தில் இருக்கிறது’ என்று கண்டறிந்து சொன்னான் ஷேக்ஸ்பியர். 'காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று உரத்த குரலில் அனைவரையும் கூவி அழைத்தான் பாரதி. ஆனால், அவர்கள் சொன்ன காதல் இன்றைய இளைய சமூகத்திடம் காணாமல் போய்விட்டது. இப்போது பார்க்கும் இடமெங்கும் உள்ளக்கலப்பின்றி, உடற்கலப்பில் உருக்குலையும் காமமே 'காதல் முகமூடி’ அணிந்து காட்சி தருகிறது.
 
காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களுடைய அழகைச் சிதைத்து, உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா இவர்கள்? காதல்... அன்பில் சுருதி கூட்டும் ஆன்ம ராகம். காமம்... சரீரத்தின் மேடு பள்ளங்களில் சரிந்து விழும் சபலத்தின் தாளம். காதல் தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணித்துவிடும் தேவதை. காமம் தன் அகோரப் பசிக்குச் சகலத்தையும் சுயநலமாய்ப் பறித்துக்கொள்ளும் சாத்தான். இந்த அழிவை உருவாக்கும் சாத்தானுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம்.
மனித மனதில் தோன்றும் பல்வேறு உணர்ச்சிகளில் மிகவும் வலிமையானதும், கட்டுக்குள் அடங்காததும் பாலுணர்ச்சியே. அதை முழுவதுமாக அழிக்க முனைந்தால், கடுமையான எதிர்வினைகளைச் சமூகம் சந்திக்க நேரிடும். நெறிப்படுத்தப்படாத விலங்குணர்ச்சியாக அது வெளிப்படும்போது, குடும்ப உறவுகளும், சமூகக் கட்டுமானமும் முற்றிலுமாகச் சிதைந்துபோகும். தனிமனிதன் சமூக மனிதனாக வாழ்வதற்கு, நம் முன்னோர்கள் பற்பல வழிகளில் சிந்தித்துப் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்தனர். கட்டுப்பாடற்ற பாலுணர்ச்சியும், பண்பாட்டு விழுமியங்களால் வேலியிடப்பட்ட சமூக உணர்ச்சியும் எந்நாளும் பொருந்திப்போகாது. மனிதர்களை அலைக்கழிக்கும் இந்த இருநிலைப் போக்கால் உளப்போராட்டம் (Psychical conflict) உருவாகி விடுகிறது.
 
காதல் என்ற பெயரால் அமிலம் வீசியவர்கள் பண்பாட்டு வேலியைத் தகர்த்து அத்துமீறிய பாலு ணர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள். 'மனித இனமே நோய்வாய்ப்பட்டிருக்கிறது’ என்றார் உளவியல் தந்தை ஃபிராய்ட். நாம் அனைவரும் ஒருவகையில் நோயாளிகளே. அளவில் வேறுபட்டவர்கள். அவ்வளவுதான். பாலுணர்ச்சி நோய்க்கு மனக்கட்டுப்பாடு ஒன்றுதான் மருந்து என்று அனுபவத்தில் தெளிந்தவர்கள் நம் பாட்டன்மார்கள்.
 
உடலின்பமும் மனநிறைவும், பாலுணர்ச்சியால்தான் வாய்க்கப்பெறுகிறது. அதனால்தான், அதுவே நம் வாழ்வின் ஆதாரமாகி விட்டது. காலம் காலமாகக் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பாலுணர்ச்சியின் மூலமே கட்டமைக்கப்படுகின்றன. 'பாலுணர்ச்சியே மனிதகுல இயக்க ஆற்றலாக இருக்கிறது’ என்பதுதான் ஃபிராய்டின் அடிப்படைக் கோட்பாடு. பாலுணர்ச்சியே மாந்தரின் பெருவேட்கை​யாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தை உருக்குலைக்கும் அந்த வேட்கை நிறைவேற முடி யாத நிலையில் உண்டாகும் இறுக்கமே, விபரீத விளைவுகளில் உந்து சக்தியாகிறது. வேட்கைக்கான வடிகால் சமூக ஒழுக்கங்களாலும், சட்டங்களாலும் அடைபடும்போது பாலுணர்ச்சி பால் வெறி யாகி விடுகிறது. அந்த வெறியே உறவுகளின் விதிக்கோட்டை தகர்த்துவிடும் இழிகாமமாகக் கனன்று எரிகிறது. கோவையில், சகோதரிக்குப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சை தாய்மாமனே சீரழித்ததற்கு இந்த இழிகாமமே காரணம். பாலுணர்ச்சியில் இருந்து விடுபட்டு விலகி நிற்க நாம் அனைவரும் விவேகானந்தராவது எளிது இல்லை. அதேநேரத்தில், வேட்கை வெறியாகிக் காமத்தில் கரிந்துபோவதும் வாழ்வு இல்லையே. நமக்கிருக்கும் ஒரே வழி காமத்தைக் காதலாக்குவதுதான். பப்களின் வாசல்களில் தற்காலிகத் துணைக்குத் தவிப்புடன் தவமிருப்பதும், உடல் தினவைத் தணிக்க ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணைப் 'பிக்அப்’ செய்வதும், 'பார்ட்டி’களில் கட்டிப்பிடித்து ஆட்டம்போட்டு, விட்டுப்பிரிந்து வீடு திரும்புவதும், உடனடி நட்பு - உடனடிப் பிரிவுக்காக 'டேட்டிங்’ குறிப்பதும், காதல் இல்லை - கல்யாணம் இல்லை - கண்ணீர் விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தத்துவம் உதிர்ப்பதும், திருமண பந்தம் இல்லாமலே மனச்சான்றின் உறுத்தலின்றிப் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், 'பல இரவுகள்’ பார்த்துவிட்டு 'முதல் இரவு’ கொண்டாடுவது எந்த வகையிலும் வாழ்க்கையாகாது. 'நம் இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியர் தெரியும்; ஷெல்லி தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்; கெட்டழிந்த பின்புதான் பட்டினத்தார் புரியும்’ என்று கண்ணதாசன் சொன்னது ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம்.
 
புதுடில்லியில் நள்ளிரவில், ஓடும் பேருந்தில் 23 வயது நிரம்பிய, மருத்துவம் பயின்ற ஜோதி சிங் பாண்டே, காமவெறி பிடித்த மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு இரையான செய்தி ஊடகங்களின் உதவியால் நாடு முழுவதும் சேர்ந்த பின்புதான் மத்திய - மாநில அரசுகளின் உறக்கம் கலைந்தது. வர்மா கமிட்டி அமைக்கப்பட்டது. மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. பாலியல் பலாத்காரம் செய்யும் பாவிகளுக்குத் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? என்ற விவாதம் எழுந்தது. இதற்குப் பிறகும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மரண தண்டனை இந்த மண்ணில் இருப்பதனாலேயே படுகொலைச் சம்பவங்கள் இல்லாமற் போய்விட்டனவா? நுகர்பொருள் கலாசாரம் இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் 'எல்லாவற்றையும் எப்படியாவது துய்க்க வேண்டும்’ என்ற மனவிழைவும் வேட்கையும் வளரும் வரை குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.
 
பிறக்கும்போது மனித மனம் வெற்றுத்தாளாகவே விளங்குகிறது. காலநடையில் இந்த வெற்றுத்தாளில் புலன் சார்ந்த அனுபவங்கள் சிறிது சிறிதாகப் பதிவாகி, அவற்றிற்கேற்பவே நடத்தைகள் உருப் பெறுகின்றன என்கிறது உளவியல். பெற்றோர், ஆசிரியர், கல்விக்கூடம், குடும்ப உறவு, சமூகச் சூழல், ஊடகம் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்து சேரும் பதிவுகளே தனிமனித நடத்தையை நிர்ணயிக்கின்றன. மனம் சார்ந்தவன்தான் மனிதன். மனதை நலமாக வைத்துக்கொள்வதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. நமக்கு வாய்த்திருக்கும் அரசுகளோ, கருவூலத்தை நிரப்பும் அவசரத்தில் நம் பண்பாட்டைப் பள்ளம் தோண்டிப் புதைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசே தவறு செய்யத் தூண்டும். அதன் தூண்டுத​லால் தவறிழைப்பவனை அதுவே வெட்கமின்றித் தண்டிக்கும். 'உனக்கு நீயே ஒளி’ என்றார் புத்தர். நாம்தான் நமக்குரிய பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.
 
காமம் வேறு... காதல் வேறு. இரண்டு நிமிட இன்பத்தில் காமம் முடிந்துவிடும். வாழ்வின் இறுதிநாள் வரை காதல் இல்லறத்தை இனிமையாக்கும். காதலுக்கென்ற தனியாக ஒரு நாள் கொண் டாடப்படுவதே அபத்தம். இன்றைய இளைஞர்கள் உண்மையான காதல் எதுவென்றறிய, கார்ல் மார்க்ஸ்-ஜென்னி, ஜெயப்பிரகாஷ் நாராயண் - பிரபாவதி காதல் வாழ்க்கையை அறிந்துகொள்வது அவசியம். இவர்கள் புராண - இதிகாசப் பாத்திரங்கள் இல்லை. எலும்போடும் சதையோடும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்கள்.
 
உலகுக்கு 'மூலதனம்’ வழங்கிய கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னியைச் சில நாட்கள் பிரிந்திருக்க நேர்ந்தபோது, அந்தப் பிரிவின் வலியைத் தாங்க முடியாமல் வரைந்த கடிதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. 'உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் என்னுள் எப்போதும் இனிய நினைவுகளை எழச் செய்யும் உன் அழகு முகத்தைப் போல் வேறொரு முகத்தை எங்கு என்னால் காணக்கூடும்? என் எல்லையற்ற துன்பங்களையும், ஈடுசெய்வதற்கு இயலாத இழப்புகளையும், என்னை உள்ளிருந்து வாட்டும் வேதனைகளையும் உன் இனிய முகத்தில் முத்தமிடும்போது முற்றாக மறந்து விடுகிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை உன்னை நான் முத்தமிடுகிறேன். என்னருகில் நீ இருக்கும் தருணங்களில் கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. உன் முன்பு நான் முழந்தாளிட்டுப் பணிகிறேன். உன் தாய்மையான இதயத்தை என் இதயத்துடன் நெருக்கமாக இணைத்துக்கொள்கிறேன். வார்த்தைகள் எதுவுமின்றி மௌனமாகிறேன்’ என்று தன் ஆழமான காதலைக் கடிதத்தில் வெளிப்படுத்திய மார்க்ஸ், புற்றுநோயால் ஜென்னி மரணத்தை நெருங்கியபோது, அந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதார்.
 
ஜென்னி, மார்க்ஸுக்காகவே வாழ்ந்தவர்; பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, மார்க்ஸைக் காதலித்துக் கரம் பற்றியவர். காதல் கணவனுக்காக வறுமையை விரும்பி ஏற்றவர்; இறந்த குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்க முடியாத நிலையிலும் மார்க்ஸின் மனம் நோகப் பேசாதவர்; மார்க்ஸ் நடத்திய போராட்ட வாழ்க்கையின் வலிமை மிக்க பின்புலமாக இருந்தவர். அவன் கண்ணை மூடும்போதும், 'கார்ல் என் சக்தியை நான் பறிகொடுக்கிறேன்’ என்றுதான் இறுதியாகச் சொன்னார். ஜென்னி மரணித்தபோது, 'மார்க்ஸும் செத்துவிட்டான்’ என்றார் ஏங்கல்ஸ். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு, தளர்ந்துபோன மார்க்ஸ் 15 மாதங்களில் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
 
ஜெயபிரகாஷ் நாராயண் இளம் வயதில் பேரழகன். காதல் மனைவி பிரபாவதி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிவிட, கல்வி பயில்வதற்கு அமெரிக்கா சென்ற ஜெ.பி-யின் அழகில் பல அமெரிக்க மாணவிகள் அவரைச் சுற்றிவந்தபோதும், அவர்களை ஏறிட்டும் பார்க்காதவர்; நாடு திரும்பியதும் தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பு தேக சுகம் காண்பதில்லை என்ற மனைவியின் விரதத்தை ஏற்றுக் காதலைக் கௌரவித்தவர். பரமஹம்ஸருக்காக சாரதா தேவியும், காந்திக்காக கஸ்தூரி பாயும் பிரம்மசரியம் ஏற்றனர். ஆனால், பிரபாவதிக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியம் பூண்டவர் ஜெ.பி. இறுதிவரை ஒரே அறையில் இரு படுக்கைகளில் தனித்தனியாக இரவைக் கழித்த ஆன்மநேயக் காதலர்கள் ஜெ.பி-யும் பிரபாவதியும். பிரபாவதி இறப்பைத் தழுவியபோது அனைவரையும் வெளியேற்றிவிட்டுச் சடலத்தின் பக்கத்தில் 15 நிமிடங்கள் தனியே அமர்ந்து அழுத ஜெ.பி., 57 ஆண்டுகள் தன் தாயாய், தோழியாய் உடனி ருந்து சேவை செய்த மனைவியை ஒருநாளும் மறந்ததே இல்லை. அவருடைய படுக்கை அறையில் அவர் வைத்திருந்த ஒரே நிழற்படம் பிரபாவதியின் படம். அன்பிலே தோய்ந்து, அன்பிலே கரைந்து அன்புருவாய் வாழ்வதுதான் காதல் வாழ்க்கை என்று உணர்த்திய தம்பதி இவர் கள்.
 
இன்றைய இளைஞர்கள் ஜெ.பி-யாய் வாழ வேண்டியது இல்லை. ஆனால், கார்ல் மார்க்ஸாய் காதல் வாழ்வு வாழ்வதில் என்ன தடை? காமம் சேர்ந்த பாலியல் குற்றங்களே இப்போது பெருகி வருகின்றன. 'காதலர் தினம்’ கொண்டாடும் இளைய சமூகம் உண்மைக் காதலின் உயர்வை அறியா மலேயே 'காதல்’ வசப்பட்டு, அவசரம் அவசரமாய் இச்சையைப் பூர்த்திசெய்து, உறவு கசந்த நிலையில் விவாகரத்துக்காக நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் காணும் உலகங்கள் நீயாக வேண்டும்’ என்று கசிந்துருகிக் காதல் வளர்க்கும் இருவரிடையே வாழ்க்கை எப்படி விரைவில் கசந்துபோகும்?
 
பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகத்தில்தான் பெண் பாதுகாப்பாக வாழ முடியும். அந்தப் பாதுகாப்பை ஒருபோதும் சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாது. பெண் ஆணுக்குரிய போகப்பொருள் என்ற அழுக்குச் சிந்தனை ஆண்களின் மனதிலிருந்து முதலில் அகல வேண்டும். பெண்ணைக் கடவுளாகவும் போற்ற வேண்டாம்; அடிமையாகவும் நடத்த வேண்டாம்; சக உயிரியாக உணர்ந்து அன்புசெய்தால் போதும். பெண்ணைக் காமத்தோடு பார்க்கும் பார்வையில் இருந்து விடுபட ஊடகங்கள் உதவ வேண்டும். பாடத் திட்டங்கள் பள்ளிகளில் பிள்ளைகளின் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். காதல் என்பது வெறும் காமம் இல்லை என்ற புரிதல் வரவேண்டும்.
 
'காதல் என்பது இன்பம் அல்ல; பொறாமைப்​படுவதும் அல்ல; ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரமோ, ஒருவரையருவர் விரட்டியடிப்பதோ காதலாகாது. உடைமைத்​தனத்திலும், ஒட்டிக்கொள்வதிலும் உண்மையான காதல் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு யுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது. அவர்களில் ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முயல்கிறார். விளைவு ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். இதுதான் காதலா? 'ஆம்’ எனில் காதலே ஓர் அர்த்தமற்ற வார்த்தைதான்’ என்று தெளிவுப்படுத்தும் தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சூத்திரம் போல் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள்...
'புகையிருக்கும் இடத்தில் ஒளியிருக்காது;
ஒளியிருக்கும் இடத்தில் புகையிருக்காது!

Friday, March 1, 2013

தமிழேண்டா 
நன்றி ஆனந்த விகடன் 
 
னுஷ்காவின் வயது முதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத் தமிழனின் இதயம் பலமானது அல்ல. நேற்றைய குஷ்பு... இன்றைய இனியா என யாருக்கு அநீதி இழைக் கப்பட்டாலும் அறச்சீற்றம் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனே. புரொஃபைல் பிக்சர் மாற்றி கொந்தளிப்போடு அவன் போடும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் சமயங்களில் அவனுக்கே புரியாது. முன்னிரவு 'விஸ்வரூபம்’ படத்தை ஆதரிப்பான். பின்னிரவில் கமலைத் திட்டுவான். நடுநடுவே பெண்ணின் பெயரில் வந்து கும்மியடிப்பது தன் ஃபேக் ஐ.டி. நண்பனே என்பது தெரியாமல் சாட்டில் ஜொள்ளுவான். கமலோ, விமலோ ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை அனுப்பிவைப்பான். ஏற்றுக்கொண்டால், கருத்து கந்தசாமியாக மாறி ஐ.நா. முதல் நைனா வரை கொல வெறி ஸ்டேட்டஸ்களை டேக் செய்து, தன் கருத்துகளைக் கக்கிவைப்பான். 'அரசாங் கங்களுக்கு எதிராக... குறிப்பாக, தமிழ் படிக்கத் தெரியாத மன்மோகன் சிங், ஒபாமாவுக்கு எதிராக ஸ்டேட்டஸ் போட்டால் 'நானும் (ஃபேஸ்புக்) போராளியே’ என்பது அவனுடைய எவர்க்ரீன் நம்பிக்கை!
 
பண்டிகை நாட்களில் 10 ரூபாய் பெறாத இலவசக் கட்டைப் பைக்காகவே, பர்ஸையும் மீறி நிறைய பர்ச்சேஸ் செய்வான். 30 ரூபாய் பெறுமானம் இல்லாத தம்படிப் பொருளைத் தள்ளுபடியில் 100 ரூபாய்க்கு வாங்கி, பேரின்பப் புளகாங்கிதத்தில் திளைப்பான். 'திருட்டு டி.வி.டி-யை ஒழிக்கணும்பா!’ என்று பேசிக்கொண்டே, திருட்டு டி.வி.டி டாட் காம் பார்ப்பான். தமிழ் தேசியம்... இந்திய உணர்வு என்று பேசிக்கொண்டே காலையில் எழுந்ததும் பல்லு விளக்காமல் கோக் குடிப்பான்.
 
சாலையில் அவன் பண்ணும் சலம்பல்கள் தனி. ஆம்புலன்ஸுக்குப் போட்டியாக ஹாரன் அடித்து எல்லோரையும் பதறவைப்பான். ஓட்டுவது டி.வி.எஸ். 50-ஆக இருந்தாலும்கூட சிக்னலில் நின்று கிளம்பும் போது 'டுர்... டுர்...’ என முறுக்கி ரேஸுக்கு ஓட்டுவதைப் போல ஓட்டிச் செல்வான். வீட்டுக்குச் சென்று சும்மா விட்டத்தைத்தான் பார்க்க இருக்கிறான் என்றாலும்கூட, செம பரபரப்பாக 'நில்’ கோட்டைத் தாண்டி நின்று க்ரீன் விழும் முன்னே கிளம்பிவிடுவான். கார் ஓட்டுபவன் பைக்கில் செல்பவனையும் பைக் ஓட்டுபவன் நடந்து செல்பவனையும் பார்த்து, 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?’ என்று நலம் விசாரிப்பான். பகலில் மறதியாக ஹெட்லைட் போட்டு யாரேனும் பைக் ஓட்டுவதை எதிரில் கண்டால், அக்கறை அப்பாடக்கராக மாறி அதிரடி சிக்னல் காட்டி பதறித் தெறிக்கவைப்பான். பைக் ஸ்டாண்டில் பைக்கை எடுக்கும்போதோ, நிறுத்தும்போதோ, அடுத்தவன் பைக் இண்டிகேட் டரை உடைத்துவிட்டு, குற்ற உணர்ச்சி ஏதுமின்றி டோக்கன் போடும் இடத்தைக் கடந்து செல்வான்.
 
ஹவாய் செருப்புடன் த்ரீ ஃபோர்த் டவுசருடன் சிக்ஸ் பேக் சிங்கங்கள் மட்டுமே அணியத் தோதான ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு தெருமுக்கு டீக்கடைக்கு கோவா எஃபெக்ட்டில் நடை போட்டு பீர்த் தொப்பையுடன் டீ குடிப்பான். மற்ற நாளில் குடிக்கிறானோ இல்லையோ... காந்தி ஜெயந்தி, வள்ளுவர் தினம், வள்ளலார் தினம் என சரக் குக் கிடைக்காத சாமானிய தினங்களில் சரக்கு தேடி தீர்த்த யாத்திரையில் திரிவான்.
ரயில் பயணம் என்றால் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் சீட் பிடித்தால், கிரயப்பத்திரம் வாங்கியதுபோல் நச்சென நங்கூரமிட்டு அமர்வான். யூரின் டேங்க்கே வெடித்தாலும் மதுரை டு தாம்பரம் ஆடாமல் அசையாமல் பயணம் செய்வான். மும்மொழியில் அறிவிப்பு எழுதிவைத்திருந்தாலும் ஓடும் ரயில், ஸ்டேஷனில் நிற்கும்போதுதான் இயற்கை உபாதை தணிக்க ரயில் டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைவான்.
 
ரயில் 80 கி.மீ. வேகத்தில் போகும் போது ஜன்னல் வழி கை கழுவி இரண்டு கம்பார்ட்மென்ட்டுக்கு இலவசமாக முகம் கழுவிவிடுவான். ரயிலில் இரவல் வாங்கி பேப்பரும் புத்தகமும் படித்துவிட்டு, கவனமாக அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டுப் பொறுப்பே இல்லாமல் இறங்கிப் போவான்.
 
ஜே.கே.ரித்தீஷ் போல... பவர் ஸ்டார் போல புதிதாக யார் கிடைத்தாலும் அவர்களைக் காமெடி பீஸாக்கி கேலி, கிண்டல் பண்ணியே 'நெகட்டிவ் பப்ளிசிட்டி’யில் வளர்த்துவிட்டு, பிறகு தடாரென ஒன் ஃபைன் மார்னிங் ராஜகுமாரன், கணவன் ஆஃப் தேவயானி பக்கம் சாய்வான்.
எத்தனை ஒழுங்காக க்யூ அமைத்து நின்றாலும், தன் பங்குக்கு புது க்யூ உருவாக்கி கூட்டத்தைக் குழப்பியடிப்பான். பிளாஸ்டிக், பாலிதீன்பற்றிய தீமைகளை பிளாஸ்டிக் சேர் போட்டு, பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்துக்கொண்டே சூடாக விவாதிப்பான்.
 
மரம் நடுவதன் அவசியத்தை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வான். அடுத்தவன் வீட்டு மரம் லேசாக தன் காம்பவுண்டுக்குள் கிளைவிட்டிருந்தாலும்கூட வெட்ட அரிவாளோடு கிளம்பிடுவான்.
மார்கழி மாதங்களில் 10 ரூபாய் காதடைப்பானை வாங்கிக் கவனமாக மாட்டிக்கொள்வான். அதை சித்திரை வந்தாலும் சிக்கேறும் வரை நையப் புடைத்துப் பயன்படுத்துவான்.
 
'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?’ என்று வெளியே சொன்னாலும், கவனமாகச் சொந்த சாதியில் லக்கேஜோடும் வரதட்சணையோடும் பெண் பார்த்து மணம் முடிப்பான். 'என்ன இருந்தாலும் பரம்பரை கௌரவம் முக்கியம் இல்லையா?’ என்று 'லட்டு தின்ன ஆசையா’ பவர் ஸ்டார் ஃபேமிலியை நினைவுபடுத்துவான். பகலில் பார்க்கவே வாய்ப்பு இல்லாத ஜெமினி டி.வி., வசந்த் டி.வி., கேப்டன் டி.வி. சேனல்களை எல்லாம் பின்னிரவில் கவனமாக டியூன் பண்ணி மிட்நைட் மசாலாவையும், சமையல் மந்திரத்தையும், கில்மா படத்தையும் பார்ப்பான். அபார்ட்மென்ட் பால்கனியில் உள்ளாடைகளை ஈரத்தோடு காயப்போட்டு கீழே படி இறங்கும் சக மனிதர்கள் மீது தீர்த்தம் தெளித்து 'இப்போ என்னா?’ என்பதுபோல் பார்ப்பான்.
 
அதிகம் மன்னிப்பான். ஆற்காட்டை மன்னித்தது போல் நத்தத்தையும் மன்னிப்பான். அதனால், மாற்றி மாற்றி ஓட்டுக் குத்துவான். குத்திய பிறகு, ஐந்து வருடங்கள் அதை நினைத்து நினைத்து வருந்துவான். ஆனால், இப்போதெல்லாம் தமிழன் சுத்தமாக 'நன்றி’ மறந்துவிட்டான்... கோபம் வேண்டாம் மக்களே... கமல் சொல்வது போல் ஒன்லி 'தேங்க்ஸ்’ மட்டுமே சொல்கிறான்.