தமிழேண்டா
நன்றி ஆனந்த விகடன்
அனுஷ்காவின் வயது முதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத் தமிழனின் இதயம் பலமானது அல்ல. நேற்றைய குஷ்பு... இன்றைய இனியா என யாருக்கு அநீதி இழைக் கப்பட்டாலும் அறச்சீற்றம் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனே. புரொஃபைல் பிக்சர் மாற்றி கொந்தளிப்போடு அவன் போடும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் சமயங்களில் அவனுக்கே புரியாது. முன்னிரவு 'விஸ்வரூபம்’ படத்தை ஆதரிப்பான். பின்னிரவில் கமலைத் திட்டுவான். நடுநடுவே பெண்ணின் பெயரில் வந்து கும்மியடிப்பது தன் ஃபேக் ஐ.டி. நண்பனே என்பது தெரியாமல் சாட்டில் ஜொள்ளுவான். கமலோ, விமலோ ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை அனுப்பிவைப்பான். ஏற்றுக்கொண்டால், கருத்து கந்தசாமியாக மாறி ஐ.நா. முதல் நைனா வரை கொல வெறி ஸ்டேட்டஸ்களை டேக் செய்து, தன் கருத்துகளைக் கக்கிவைப்பான். 'அரசாங் கங்களுக்கு எதிராக... குறிப்பாக, தமிழ் படிக்கத் தெரியாத மன்மோகன் சிங், ஒபாமாவுக்கு எதிராக ஸ்டேட்டஸ் போட்டால் 'நானும் (ஃபேஸ்புக்) போராளியே’ என்பது அவனுடைய எவர்க்ரீன் நம்பிக்கை!
பண்டிகை நாட்களில் 10 ரூபாய் பெறாத இலவசக் கட்டைப் பைக்காகவே, பர்ஸையும் மீறி நிறைய பர்ச்சேஸ் செய்வான். 30 ரூபாய் பெறுமானம் இல்லாத தம்படிப் பொருளைத் தள்ளுபடியில் 100 ரூபாய்க்கு வாங்கி, பேரின்பப் புளகாங்கிதத்தில் திளைப்பான். 'திருட்டு டி.வி.டி-யை ஒழிக்கணும்பா!’ என்று பேசிக்கொண்டே, திருட்டு டி.வி.டி டாட் காம் பார்ப்பான். தமிழ் தேசியம்... இந்திய உணர்வு என்று பேசிக்கொண்டே காலையில் எழுந்ததும் பல்லு விளக்காமல் கோக் குடிப்பான்.
சாலையில் அவன் பண்ணும் சலம்பல்கள் தனி. ஆம்புலன்ஸுக்குப் போட்டியாக ஹாரன் அடித்து எல்லோரையும் பதறவைப்பான். ஓட்டுவது டி.வி.எஸ். 50-ஆக இருந்தாலும்கூட சிக்னலில் நின்று கிளம்பும் போது 'டுர்... டுர்...’ என முறுக்கி ரேஸுக்கு ஓட்டுவதைப் போல ஓட்டிச் செல்வான். வீட்டுக்குச் சென்று சும்மா விட்டத்தைத்தான் பார்க்க இருக்கிறான் என்றாலும்கூட, செம பரபரப்பாக 'நில்’ கோட்டைத் தாண்டி நின்று க்ரீன் விழும் முன்னே கிளம்பிவிடுவான். கார் ஓட்டுபவன் பைக்கில் செல்பவனையும் பைக் ஓட்டுபவன் நடந்து செல்பவனையும் பார்த்து, 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?’ என்று நலம் விசாரிப்பான். பகலில் மறதியாக ஹெட்லைட் போட்டு யாரேனும் பைக் ஓட்டுவதை எதிரில் கண்டால், அக்கறை அப்பாடக்கராக மாறி அதிரடி சிக்னல் காட்டி பதறித் தெறிக்கவைப்பான். பைக் ஸ்டாண்டில் பைக்கை எடுக்கும்போதோ, நிறுத்தும்போதோ, அடுத்தவன் பைக் இண்டிகேட் டரை உடைத்துவிட்டு, குற்ற உணர்ச்சி ஏதுமின்றி டோக்கன் போடும் இடத்தைக் கடந்து செல்வான்.
ஹவாய் செருப்புடன் த்ரீ ஃபோர்த் டவுசருடன் சிக்ஸ் பேக் சிங்கங்கள் மட்டுமே அணியத் தோதான ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு தெருமுக்கு டீக்கடைக்கு கோவா எஃபெக்ட்டில் நடை போட்டு பீர்த் தொப்பையுடன் டீ குடிப்பான். மற்ற நாளில் குடிக்கிறானோ இல்லையோ... காந்தி ஜெயந்தி, வள்ளுவர் தினம், வள்ளலார் தினம் என சரக் குக் கிடைக்காத சாமானிய தினங்களில் சரக்கு தேடி தீர்த்த யாத்திரையில் திரிவான்.
ரயில் பயணம் என்றால் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் சீட் பிடித்தால், கிரயப்பத்திரம் வாங்கியதுபோல் நச்சென நங்கூரமிட்டு அமர்வான். யூரின் டேங்க்கே வெடித்தாலும் மதுரை டு தாம்பரம் ஆடாமல் அசையாமல் பயணம் செய்வான். மும்மொழியில் அறிவிப்பு எழுதிவைத்திருந்தாலும் ஓடும் ரயில், ஸ்டேஷனில் நிற்கும்போதுதான் இயற்கை உபாதை தணிக்க ரயில் டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைவான்.
ரயில் 80 கி.மீ. வேகத்தில் போகும் போது ஜன்னல் வழி கை கழுவி இரண்டு கம்பார்ட்மென்ட்டுக்கு இலவசமாக முகம் கழுவிவிடுவான். ரயிலில் இரவல் வாங்கி பேப்பரும் புத்தகமும் படித்துவிட்டு, கவனமாக அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டுப் பொறுப்பே இல்லாமல் இறங்கிப் போவான்.
ஜே.கே.ரித்தீஷ் போல... பவர் ஸ்டார் போல புதிதாக யார் கிடைத்தாலும் அவர்களைக் காமெடி பீஸாக்கி கேலி, கிண்டல் பண்ணியே 'நெகட்டிவ் பப்ளிசிட்டி’யில் வளர்த்துவிட்டு, பிறகு தடாரென ஒன் ஃபைன் மார்னிங் ராஜகுமாரன், கணவன் ஆஃப் தேவயானி பக்கம் சாய்வான்.
எத்தனை ஒழுங்காக க்யூ அமைத்து நின்றாலும், தன் பங்குக்கு புது க்யூ உருவாக்கி கூட்டத்தைக் குழப்பியடிப்பான். பிளாஸ்டிக், பாலிதீன்பற்றிய தீமைகளை பிளாஸ்டிக் சேர் போட்டு, பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்துக்கொண்டே சூடாக விவாதிப்பான்.
மரம் நடுவதன் அவசியத்தை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வான். அடுத்தவன் வீட்டு மரம் லேசாக தன் காம்பவுண்டுக்குள் கிளைவிட்டிருந்தாலும்கூட வெட்ட அரிவாளோடு கிளம்பிடுவான்.
மார்கழி மாதங்களில் 10 ரூபாய் காதடைப்பானை வாங்கிக் கவனமாக மாட்டிக்கொள்வான். அதை சித்திரை வந்தாலும் சிக்கேறும் வரை நையப் புடைத்துப் பயன்படுத்துவான்.
'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?’ என்று வெளியே சொன்னாலும், கவனமாகச் சொந்த சாதியில் லக்கேஜோடும் வரதட்சணையோடும் பெண் பார்த்து மணம் முடிப்பான். 'என்ன இருந்தாலும் பரம்பரை கௌரவம் முக்கியம் இல்லையா?’ என்று 'லட்டு தின்ன ஆசையா’ பவர் ஸ்டார் ஃபேமிலியை நினைவுபடுத்துவான். பகலில் பார்க்கவே வாய்ப்பு இல்லாத ஜெமினி டி.வி., வசந்த் டி.வி., கேப்டன் டி.வி. சேனல்களை எல்லாம் பின்னிரவில் கவனமாக டியூன் பண்ணி மிட்நைட் மசாலாவையும், சமையல் மந்திரத்தையும், கில்மா படத்தையும் பார்ப்பான். அபார்ட்மென்ட் பால்கனியில் உள்ளாடைகளை ஈரத்தோடு காயப்போட்டு கீழே படி இறங்கும் சக மனிதர்கள் மீது தீர்த்தம் தெளித்து 'இப்போ என்னா?’ என்பதுபோல் பார்ப்பான்.
அதிகம் மன்னிப்பான். ஆற்காட்டை மன்னித்தது போல் நத்தத்தையும் மன்னிப்பான். அதனால், மாற்றி மாற்றி ஓட்டுக் குத்துவான். குத்திய பிறகு, ஐந்து வருடங்கள் அதை நினைத்து நினைத்து வருந்துவான். ஆனால், இப்போதெல்லாம் தமிழன் சுத்தமாக 'நன்றி’ மறந்துவிட்டான்... கோபம் வேண்டாம் மக்களே... கமல் சொல்வது போல் ஒன்லி 'தேங்க்ஸ்’ மட்டுமே சொல்கிறான்.
No comments:
Post a Comment