Saturday, November 2, 2013

ட்ரோன் - புதிய தொழில்நுட்பம் 
நன்றி: ஆனந்த விகடன் 
 
தீபாவளி ஸ்பெஷலில் இந்தக் கட்டுரை வெளிவருவதால், டாபிக்கலாக ஆரம்பிக்கலாம்.
சரவெடி, தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு... என பல பட்டாசுகளுக்கு மத்தியில், என் ஃபேவரைட் எப்போதுமே ராக்கெட்தான். எந்தத் திசையில் பயணிக்கும், எங்கே சென்றடையும் என்பதெல்லாம் தோராயமாக இருந்தாலும், பறக்கும் ஒரே பட்டாசு 'ராக்கெட்’ என்பதால் அதன் கவர்ச்சியும் மதிப்பும் அதிகம்.
 
தீபாவளி ராக்கெட் பட்டாசுக்கும், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் விமானங்களுக்கும் நடுவில் இருக்கும் தானியங்கி விமானங்களான 'ட்ரோன்’களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். Unmanned  Aerial Vehicles, சுருக்கமாக, UAV வகையறாவில் இடம்பெறும் ட்ரோன்களின் பயன்பாட்டை, விவசாயம், ஊடகம், பாதுகாப்பு என, பல துறைகளில் இப்போது பார்க்க முடிகிறது. என்றாலும், ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது முதலில் உளவு பார்ப்பதற்கே. விண்கோள்களில் இருந்து தெளிவாகத் தெரியாத இடங்களை ஆள் இல்லாமல் இயங்கும் ட்ரோன்களைத் தாழப் பறக்கவைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் உளவு வேலையை ஈரான், லிபியா, வட கொரியா போன்ற தன்னுடன் நட்புடன் இல்லாத நாடுகளின் எல்லைகளுக்குள் பல ஆண்டுகள் செய்துவருகிறது அமெரிக்கா. அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியவை, சிவிலியன் வாழ்க்கையில் ட்ரோன்களைப் பயன்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள்.
 
 
ஆஸ்திரேலியாவில் zookal என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனம், மாணவர்கள் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள உதவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இணையதளத்தையோ அல்லது அலை மென்பொருளையோ பயன்படுத்தி, நீங்கள் ஆர்டர் செய்யும் புத்தகத்தை ஏற்றிக்கொண்டு நீங்கள் குறிப்பிடும் இடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறது இவர்களது ட்ரோன். அதே அலை மென்பொருளைப் பயன்படுத்தி ட்ரோனின் பறந்துவரும் பாதையை நிகழ் நேரத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இப்போதைக்கு மார்க்கெட்டிங் ஸ்டன்ட் போல இருந்தாலும், ஆட்களைப் பயன்படுத்தி டெலிவரி செய்வதைவிட, ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் டெலிவரி செலவு மிகவும் குறைவாக இருப்பதால், இன்னும் பல ட்ரோன்களை வாங்கப்போவதாகச் சொல்கிறது மேற்படி நிறுவனத்தின் வலைப்பதிவு. இவர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய வீடியோவைப் பார்க்க, இந்த உரலிக்கு செல்லுங்கள் www.vimeo.com/76606906
 
பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, ட்ரோன் உபயோகம் ஒரு வரப்பிரசாதம். பயிர்களுக்கு மேல் ட்ரோனைப் பறக்கவிட்டு அது எடுக்கும் வீடியோவைப் பார்த்து, பூச்சிகளின் பாதிப்பு போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ட்ரோன்களின் தயாரிப்பு விலை மிகக் குறைவாக இருப்பதைச் சொல்லியாக வேண்டும். 500 டாலர்களுக்குள் நல்லதொரு ட்ரோனைத் தயாரிக்க முடிகிறது. உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், ட்ரோன்களை நீங்களே தயாரித்துக்கொள்ள உதவும் வலைத்தளங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய தளம் http://diydrones.com/

  
உடனே 'ட்ரோன் ஒன்றை வாங்கியோ, தயாரித்தோ மெரினா பீச்சில் பறக்கவிடப் போகிறேன்’ என்று படபடக்காதீர்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ட்ரோன்களை பொது இடங்களில் பறக்கவிடுவது சட்டவிரோதம். ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் சில நாடுகளில் ட்ரோன் உபயோகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் தீயணைப்பு சேவை, அவசர மருத்துவச் சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் ட்ரோன்களைப் பயன்படுத்திக்கொள்ள உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'பொதுமக்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டத்தை, 2015-ல்தான் கொண்டுவருவோம்’ என அறிவித்து இருக்கிறது அமெரிக்க அரசு. இந்திய அரசின் கொள்கை பற்றி முடிந்த வரை தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் துறையில் விவரம் தெரிந்தவர்கள் @antonprakash-க்கு ட்வீட் செய்து தகவல் பகிர்ந்துகொண்டால், நான் வடிவமைக்கும் ட்ரோனில் உங்கள் பெயரை எழுதி மரியாதை செலுத்துவேன்.
 
அணிந்துகொள்ளும் தொழில்நுட்ப (Wearable Computing) சாதனங்களும், 'பொருட்களின் இணையம்’ (Internet of Things) எனப்படும் பிரிவின் கீழ்வரும் சாதனங்களும் தொடர்ந்து சந்தைக்கு வந்தபடியே உள்ளன. நாம் தினமும் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களை இணையத்தில் இணைத்துவைத்திருப்பதில் மிகப் பெரிய ரிஸ்க் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்க்கலாம்...

No comments:

Post a Comment