பணம் சேர்க்கும் ஆசை எனக்கு வரவில்லை
'மனநல மருத்துவர் ருத்ரன்' என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில், நீண்ட முடியும், வெண்தாடியும், நெற்றியில் குங்குமமும், கூர்மையான கண்களும், அவர் தீட்டும் ஓவியங்களும் என... ஒரு தீர்க்கமான பிம்பம் மனதில் தோன்றும்!
மருத்துவத் துறையில் 35 ஆண்டுகளைக் கடந்திருக்கும் ருத்ரன், மருத்துவத்தை 'தொழில்' என்பதை மீறி... மனோதர்மம், சேவை என்பதாகவே பார்ப்பதுதான் வியக்கவைக்கிறது. கட்டணம் தொடங்கி சிகிச்சை வரை இவரின் மருத்துவக் கோட்பாடுகள், மிகமிக மரியாதைக்குரியவை!
டாக்டருடன் இ-மெயிலில் பேசினோம்.
''நல்ல மதிப்பெண்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் நான் இடம் பிடித்திருந்த சமயம், என் அப்பாவின் சூதாட்ட மோகத்தினால் எங்கள் வீடு கோரமான வறுமையின் பிடியில் இருந்தது. என் ஓவியத் திறமையால் படங்கள் வரைந்து விற்றும், அச்சகத்தில் இரவு நேரங்களில் வேலை பார்த்தும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டினேன். 18-வது வயதில் இருந்து என் தேவைகளை நானே சமாளித்து, இளமைக் காலத்தை முடக்க நினைத்த வறுமையை அடக்கி மேலே வந்தேன். வறுமை ஒருபோதும் என்னை வருத்தவில்லை... மாறாக, மேலும் உழைக்க ஊக்குவித்தது.
வறுமையில் இருந்தபோதும் சரி, மருத்துவரான பின் வசதிகள் வந்து சேர்ந்தபோதும் சரி... இல்லாதவர்களிடம் நான் மருத்துவக் கட்டணம் பெறுவதில்லை. வறுமையில் இருந்து வந்ததால் கிடைக்கப் பெற்ற குணம் என்று இதை நான் நினைக்கவில்லை. என் தேவைகள் பூர்த்தி ஆன பின், அதிக பணம் சேர்க்கும் ஆசை எனக்கு வரவில்லை... அவ்வளவுதான்!'' என்றவர், ஆரம்பகால பயணம் பற்றி நினைவுகூர்ந்தார்.
''35 ஆண்டுகளுக்கு முன், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சொந்த கிளினிக் ஆரம்பித்த நாளில்... 'யார் வருவார்கள்' என்று நான், என் நண்பர் மற்றும் அவருடைய மனைவி மூவரும் காத்திருந்தோம். யாருமே வரவில்லை. 'இன்னும் ஒரு மணி நேரம் வரை பார்த்துவிட்டுக் கிளம்பலாம்' என்று நினைத்த நேரத்தில் வந்து சேர்ந்தார் அன்வர் பாய்.
'காலில் ஆணி கீறிடுச்சு, ஆயின்மென்ட் நானே போட்டுக்கிட்டேன், நீங்க செப்டிக் ஊசி மட்டும் போட்டு விடுங்க’ என்ற அன்வரிடம் ஊசியின் பெயரை எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொன்னேன். ஊசி போட்டதும், 'பரவாயில்ல... வலிக்காம போட்டுட்டீங்க’ என்றபடியே கிளம்பியவரிடம், எப்படி ஃபீஸ் கேட்பது, எவ்வளவு கேட்பது என்று மையமான ஒரு புன்முறுவலுடன் நான் நிற்க, 'காசு எடுத்துட்டு வரல, எதுத்தாப்லதான் கடை. பையன்கிட்ட கொடுத்தனுப்புறேன்’ என்று சொல்லிச் சென்றவர், இரண்டு ரூபாயைக் கொடுத்தனுப்பினார். அது என்னுடைய முதல் வருமானம்!' என்று சொல்லும் டாக்டரின் கிளினிக்கில், இப்போதும் நோயாளிகளிடமிருந்து இதுதான் கட்டணம் என்று எதையும் நிர்ணயித்துப் பெறுவதில்லை என்பது ஆச்சர்யமே!
''நோயாளிகள் என்னைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது, வெளியே என் உதவியாளரிடம் ஒரு நோட்டு இருக்கும். அதில் ஒவ்வொருவரும் என் உதவியாளர் சொல்லும் தொகையைக் கொடுத்து, நோட்டில் அதைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும். சிலர், தங்களுக்கு முன் உள்ள பெயர்களைப் பார்த்துவிட்டு, தங்களுக்கான கட்டணத்தை அறிந்துகொள்வார்கள். சிலர் 'இல்லை’ என்றும் எழுதிவிட்டு போவார்கள். சிலர், எளியவர்கள் யாராவது தங்களால் இயன்றதைக் கொடுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, 'அவங்க மட்டும் இவ்வளவுதானே கொடுத்திருக்காங்க...’ என்று தாங்களும் அதையே கொடுப்பார்கள். சிலர், 'முன்னாடி உள்ளவங்க கொடுக்கல... நான் ஏன் கொடுக்கணும்' என்று கொடுக் காமல் போவதும் உண்டு. சிலர், மறதியில் கொடுக்காமலே சென்றுவிடுவார்கள். கட்டணம் குறித்து யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. என் சிகிச்சையால் பலன் இருக்காது என்று கருதுபவர்களிடம், கட்டணம் வாங்குவதும் இல்லை. ஆனால், அவர்களோ முருங்கைக்காய், கொய்யா, வாழைப்பழம் என்று தங்கள் வீட்டில் விளைந்தவற்றைக் கொண்டு வந்து கொடுத்து அன்பைச் செலுத்துவார்கள். சிலர் எனக்குப் பிடிக்கும் என்று புத்தகங்கள், பொம்மைகள்கூட வாங்கி வருவார்கள்'' என்றவர்,
''நோயாளிகளிடத்தில் சில நிபந்தனைகள் எனக்கு உண்டு. மறுபரிசோதனைக்கு நான் குறிப்பிட்ட காலத்துக்குள் வராவிட்டாலோ, பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் விட்டாலோ, அந்தத் தடவை மட்டும் சிகிச்சை அளித்து, 'நான் சொன்னதைப் பின்பற்றாத உங்களுக்கு இனி மருத்துவம் பார்க்க மாட்டேன்’ என்று அனுப்பிவிடுவேன். சிலர், இனி அப்படி நடக்காது என்று உறுதி கூறி, மீண்டும் வருவார்கள்; என் சிகிச்சையை முறைப்படி பின்பற்றுவார்கள். இது என் பிடிவாதத்துக்காக செய்வது அல்ல; நோயாளிகளின் நலன் கருதி செய்வது. ஆனால் சிலர், என் இந்த அணுகுமுறை பிடிக்காமல் போய்விடுவார்கள்.
யாராக இருந்தாலும் வரிசைப்படி மட்டுமே மருத்துவம் பார்ப்பது மாறாத வழக்கம். இதனால் பல பிரபலங்கள், பணம் படைத்தவர்கள் கசந்து திரும்பிவிடுவதும் உண்டு. தேவைப்பட்டால், ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக்கொள்வேன். தேவையில்லை என்றால், அதிகப்படியாக ஒரு நிமிடம்கூட செலவிடமாட்டேன்'' என்ற டாக்டர்... இன்று சமூக, அரசியல், பொருளாதார நிர்பந்தங்களால் மருத்துவம் பணம் பிடுங்கும் தொழிலாகிக் கிடப்பதை சுட்டி வருந்தினார்.
''என்னிடம் வரும் சிலர், 'டாக்டர், ஸ்கேன் எடுக்கலாமா... எம்.ஆர்.ஐ செய்யவா?’ என்று தாங்களாகவே கேட்பார்கள். 'அதையெல்லாம் செய்து, உங்க வீட்டுல மாட்டி வெச்சுக்கோங்க. எங்கிட்ட கொண்டுட்டு வராதீங்க’ என்பேன் கண்டிப்புடன். அவசியம் என்றால், கட்டணம் குறைவான இடத்தில் பரிசோதனைகளைச் செய்து வரப் பரிந்துரைப்பேன்.
மருத்துவத்தைச் சேவையாகக் கருதும் மருத்துவர்கள் இன்றும் சத்தமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். என் மருத்துவ ஆசிரியர்கள், நண்பர்கள் பலரிடம் இந்த குணத்தைப் பார்த்திருக்கிறேன். தாம்பரத்தில் உள்ள கண் மருத்துவர் டாக்டர் ரவீந்திரன் சட்டென நினைவுக்கு வருகிறார்'' என்ற டாக்டர் ருத்ரன்,
''சுருங்கப் பேசினால்தான் ருசிக்கும். இத்துடன் முடித்துக்கொள்வோமே!'' என்றபடி முடித்துக்கொண்டார்!
No comments:
Post a Comment