Friday, August 29, 2014

சிக்கன் 65 சிக்கல் - 65
ம.பிரியதர்ஷினி
சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!
 
சமீபத்தில் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, 'கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு பெயர் போன நாமக்கல்லில் பிராய்லர் கோழி வளர்க்கும் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தன் பெயர், அடையாளங்களைத் தவிர்த்துப் பேசியவர், ''நாங்க பெரிய கோழி கம்பெனிகளுக்காக ஒப்பந்த முறையில கோழிகளை வளர்த்து தர்றோம். அவங்க குஞ்சு கோழியோட, மக்காச்சோளம், சோயா, கருவாடு, உப்பு, கடலைப் புண்ணாக்குனு கோழிகளுக்கான தீவனங்களோட இன்னும் சில மருந்துகள் கலந்து உலர்தீவனமா மூட்டையில கொண்டுவந்து இறக்குவாங்க. அதைப் பிரிச்சு கோழிகளுக்குக் கொடுப்போம். 35 - 42 நாள்ல வளர்த்து உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். 42 நாள் கோழி, தன்னோட வாழ்நாள்ல 3 கிலோ 600 கிராம் தீவனத்தை சாப்பிட்டிருக்கும். பிராய்லர் கோழியை கறிக்கோழினு சொல்வோம். இது கறிக்கு மட்டும்தான் உபயோகப்படும். முட்டைக்காக வளர்க்கப்படுற கோழியை லேயர்னு சொல்வோம்'' என்றவர்,
 
''தடுப்பூசி, குடிநீர்ல கலக்குற மருந்து இதையெல்லாம் கம்பெனிக்காரங்களே தந்துடுவாங்க. இதுபோக கோழிகளுக்கு கண்ல டிராப்ஸ் ஊத்துவோம். கோழிகளுக்கு தண்ணீர் எல்லாம் சொட்டு நீர் முறையிலதான் கொடுப்போம். அந்த தண்ணியில சில மருந்துகளையும் கலப்போம். ஆனா, இதுக்கெல்லாம் பேர் எதுவும் தெரியாதுங்க'' என்றார் வெள்ளந்தியாக!
 
பூப்பெய்தும் வயது... குறையும் ஆபத்து!
இப்படிப் பல ஊசிகளும், ஊட்ட மருந்துகளும் கொடுத்து வளர்க்கப்படும் இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது பற்றி, திருமானூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் காசி.பிச்சையிடம் பேசினோம்.
 
''ஒவ்வொரு உயிரினத்துக்குமான வளர்ச்சியை, இயற்கை தானாக அதன் உடம்பில் நிர்ணயித்திருக்கும். அப்படியிருக்க, ஒன்றரை மாதத்திலேயே ஒரு கோழி செயற்கையாக வளர்க்கப்படுகிறது என்றால், அதை சந்தேகப்பட வேண்டாமா? அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள், மருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், க்ரோத் ஹார்மோன் எனப்படுகிற வளர்ச்சிக்கான மருந்துகளே இந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படுகின்றன என்பது உண்மை. குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தக் கோழிகள் அடைய இதுவே காரணம். இத்தகைய கோழிகளில் சிக்கன்-65 எல்லாம் செய்து சாப்பிடுவது... நம் உடலுக்கு சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களையே கொண்டுவந்து சேர்க்கும்.
 
 
கிராமத்து நாட்டுக்கோழியை கவனித்தீர்களென்றால், அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ கணக்கில்தான் அதன் எடை இருக்கும். நம் வீட்டில், தெருவில் உள்ளதை உண்டு, ஓடியாடி, இயல்பாக வளரும் கோழி அது. அதனால் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் (இப்போது நாட்டுக்கோழியையும் கலப்பின மாற்றம் செய்து, பிராய்லர் போலவே வளர்ப்பவர்களும் பெருகியுள்ளனர் என்பது தனிக்கதை). அதேபோலதான் மனிதனின் வளர்ச்சியும் இயல்பானது, சீரானது. ஆனால், சமீப வருடங்களாக பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது 14-ல் இருந்து படிப்படியாகக் குறைந்து, இன்று 10, 9 என்று வந்து நிற்கிறது. மாதவிலக்குப் பிரச்னைகள், சீக்கிரமே ஏற்படும் மெனோபாஸ் நிலை என இவையெல்லாம் சங்கிலி விளைவுகளாகிவிடும்.
 
உயரம் ஊட்டத்தால் அல்ல!
ஆண் குழந்தைகளும் சட்டென ஏழடியில் வளர்ந்து நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் நின்று யோசித்தால், இப்படி வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்படுகிற இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால்தான் என்பது புரியும். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சியை, உணவால் ஏற்பட்ட பிரச்னை என்று உணராமல், ஏதோ ஊட்டச்சத்தால் ஏற்பட்ட போஷாக்கு என்று நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவு அறியாமை!'' என்று சொல்லி பதறவைத்த டாக்டர், இந்த வகை உணவுகளால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இன்னும் விரிவாகப் பேசினார்.
 
''வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட உணவுகள் விஷயத்தில், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தபோது, 'மாதவிலக்கில் பிரச்னை உள்ள பெண்கள் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள்’ என்று சொன்னேன். அத்தனை பெண்கள் என் அறைக்கு முன் வந்து நின்றதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்! இதற்கெல்லாம் காரணம், உணவுப் பழக்கம்தான். தவிர, அதிகப்படியான ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தாய்மார்களின்  பால் சுரக்கும் தன்மை மாறிப்போகிறது. இதனால் பால் சுரப்பு நின்றுபோகும் தாய்மார்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள். இன்னொருபுறம், இந்த உணவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சீக்கிரமே பூப்படைதல், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே மெனோபாஸ் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன'' என்று எச்சரித்தார் டாக்டர்.
 
சிக்கனை, கிச்சனிலிருந்து தள்ளுங்கள்!
அசைவப் பிரியர்கள் தங்கள் உணவு முறையில் செய்யவேண்டிய மாற்றங்களை அறிவுறுத்தினார், கோவையைச் சேர்ந்த 'செக்ஸாலஜிஸ்ட்' கோமதி சின்னசாமி. ''நாட்டுக்கோழி சாப்பிட கடினமாக, சமைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேசமயம், அதிக வலு தருவது நாட்டுக்கோழிதான். சென்னை போன்ற மாநகரங்களில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கூடவே பிராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், சாப்பிட மிருதுவாக இருப்பதுடன் சீக்கிரமே சமைக்க முடிகிறது என்பதாலும், பிராய்லர் கோழிகளைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான கொழுப்பால், அதை சாப்பிடும் பலருக்கும் ஒபிசிட்டி ஏற்படுவது நிஜம். இன்றைய குழந்தைகள், அரை கிலோ சிக்கன்-65 உணவை தனியாளாகவே சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கொழுப்பைக் கரைப்பதற்குத் தேவையான உடல் இயக்கம் தராமல் டி.வி முன் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் எப்படி அந்தக் கொழுப்பு கரையும்? இப்படி அதிகப்படியான கொழுப்பால்தான், பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இதுவே ஆண்களுக்கு, அவர்களின் ஆண் உறுப்பின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்தக் குழந்தைகள் வளரும்போது, இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது'' என்று அதிர்ச்சி கொடுத்தவர், சிக்கனை உடனே விடமுடியாது என்பவர்களுக்கான டிப்ஸ் (பார்க்க: பெட்டிச் செய்தி) கொடுத்ததோடு...
''மொத்தத்தில், சிக்கனை கொஞ்சம் தள்ளி வையுங்கள்... உங்கள் கிச்சனில் இருந்து!'' என்று முத்தாய்ப்பாய் சொன்னார்.

 
 
சிக்கனை விடமுடியாது எனநினைப்பவர்களுக்கு...
 வாரம் ஒரு முறை அரை கிலோ சிக்கனை குழம்பாக வைத்து, ஆளுக்கு இரண்டு பீஸ் சாப்பிடலாம்.
 உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு முதலியவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.
 வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடலாம். இவை, கொழுப்பை குறைவாக சேமித்து வைக்கும்.
 வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கறியில் ஹார்மோன் அபாயம் இல்லை. எனவே, மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.
 கடல் மீன்களைப் பொறுத்தவரை, ஒரே வகை மீனாக அல்லாமல் பல வகை மீன்களாக சாப்பிடலாம். மீனில் கொழுப்பு மிகக்குறைவு.
 
பின்குறிப்பு: குளத்து மீன் என்று சொல்லப்படுகிற நெய் மீனை (பார்க்க வழுவழுவென்று இருக்கும்) உயிரோடு நம் கண் முன்பாகவே வெட்டித் தருவார்கள். இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை, கோழியின் கழிவுகளை சாப்பிட்டு வளரும், இந்த மீனைச் சாப்பிட்டால், சரும அலர்ஜிகள் வர வாய்ப்பிருக்கிறது.
 
ஆன்டிபயாடிக் ஆபத்து!
கோழிகளுக்கு அதிகப்படியாக செலுத்தப்படும் டெட்ராசைக்ளின், அமினோக்ளைக்கோசைட், ஃப்ளோரோகைனோலோன் போன்ற ஆன்டிபயாடிக் எல்லாம் கோழிகள் உடம்பில் ஏற்படும் கிருமிகளை அறவே அழித்துவிடுகின்றன. இத்தகைய மருந்துகளை உட்கொண்ட கோழிகளை சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள செல்களை அழிப்பது, எதிர்பார்த்திராத சைட் எஃபெக்ட்ஸ் வர வைப்பது என நம் உடம்பின் இயல்பான மாற்றத்தை, வளர்ச்சியை அது சீர்குலைத்துவிடும்!

 
'
 
'அதிகப்படி ஏதுமில்லை!''
சிக்கன் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாளர்களின் பதில்..?
இதைப் பற்றி பேசும் 'வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ்' நிறுவனத்தின் தமிழக துணைப்பொதுமேலாளார் டாக்டர் செல்வகுமார், ''பொதுவா எல்லா கோழி பண்ணையிலயும் இந்த மாதிரி ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுறதில்லை. கோழிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளுக்கு குஞ்சுகளா கொடுத்திருவோம். அந்தந்த ஊர்ல உள்ள வெட்னரி டாக்டர் உதவியோட கோழிகளுக்கு ஊசி போடுவாங்க. கோழிகள் வளர்ந்ததும் அதை அப்படியே வித்துட முடியாது. நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் விற்பனை செய்ய முடியும். இப்படி செய்யுறப்ப கோழிக்கு எதாவது பிரச்னை இருந்தாகூட தெரிஞ்சுடும்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படுற டிரக்ஸ் என்ன அளவுல எப்படி கொடுக்கணும்ங்கிற மாதிரியான சார்ட் இருக்கு. அதை அரசாங்கம் எப்பவும் கவனிச்சுட்டே இருக்கும். அங்க உபயோகிக்கிற மருந்துகள் அளவைத்தான் இங்கேயும் நாங்க உபயோகிக்கிறோம். இந்தியாவுக்குனு எந்தவித அளவீடும் கிடையாது. ஆனாலும் தேவையில்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுறது கிடையாது. இந்திய பிராய்லர் கோழிகளை ஜப்பான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். அதிகப்படியான ஆன்டிபயாடிக் கொடுக்கிறதா இருந்தா, அவங்கள்லாம் தங்கள் நாட்டுக்குள்ள எப்படி அனுமதிப்பாங்க?'' என்று கேட்டார்

Friday, August 1, 2014

வைரமுத்துவின் வரிகளில் வருத்தமும் விருத்தமும் 
11 ஜூலை காலை... மதுரை செல்லும் விமானத்தில் ஆரம்பித்தது அது. இடுப்பில் சூல்கொண்ட ஒரு வலி, வலது கால் தொடையில் மையம்கொண்டு, கெண்டைக் காலில் கரை கடக்கிறது. சற்று நேரத் தில் என் கட்டுப்பாட்டில் இருந்து உடல் நழுவுவது தெரிகிறது. விமானத்தில் என்னோடு பயணித்த முன்னாள் மத்திய அமைச்சர் சகோதரர் ஜி.கே.வாசன், என்னோடு பேசிய சொற்கள் எல்லாம் செவியில் விழுகின்றன; ஆனால் மூளையில் சென்று முட்டவில்லை. விமானத்தை விட்டு இறங்கும்போது, என் வலது காலை ஊன்ற முடியவில்லை. ஏன் என்று தெரிய வில்லை. இதற்கு முன் இப்படி ஓர் அனுபவத்தை உடல் உணர்ந்தது இல்லை.
 
அத்தை பேத்தியின் திருமணத்தில் வலியோடு வாழ்த்திவிட்டு, மதுரை அப்போலோ விரை கிறோம். காந்த ஒத்ததிர்வுத் தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) எடுத்துப் பார்த்தால் அதிர்ச்சி. முதுகெலும் பில் இருந்து விலகி வந்த சவ்வுச் சதை ஒன்று, வலது கால் நரம்பை ஆழ்ந்து அழுத்துகிறது; ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது; நடக்கும் வலிமையை அது உடைக்கிறது. கலங்கிப் போன மருத்துவர்கள் நீங்கள் பயணம் செய்யக் கூடாது என்று அச்சுறுத்தி அறிவுறுத்தினார்கள். என் புன்னகையில் துயரம் கசிந்தது.
 
விடிந்தால், கோவையில் தமிழ்ப் பெரு விழா, என் மணி விழா. பன்னீராயிரம் இளைஞர்கள் என் தலைமையில் தமிழுக்காக நடை நடந்து வருகி றார்கள். நாளை தமிழ் நடக்கப்போகிறது, தலைமை தாங்கும் என்னால் நடக்க முடியாதாம். 'என்ன கொடுமை இது’ - காலைப் போலவே மரத்துப் போனது மனது.
 
அறிஞர் பெருமகன் அப்துல் கலாம் வருகிறார்; உலகத் தமிழர்கள் ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள்; கோவையில் என் உயிர்ச் சகோதரர்கள், மூன்று திங்களாக வேர்வை கொட்டி வேலை செய்திருக் கிறார்கள்; அறிஞர் கூட்டம் கொட்டி முழக்கவிருக் கிறது; ஒரு துண்டுத் தமிழ்நாடு ஒரு கூரையின் கீழ் அமரவிருக்கிறது. 'மருத்துவ நண்பர்களே, என்னை மூட்டை கட்டியேனும் கோவையில் சென்று கொட்டிவிடுங்கள்' என்றேன்.
 
மாத்திரை தந்தார்கள்; ஊசியிட்டார்கள். என் அன்பு உறவுகள் அபிநாத், ஈஸ்வர், சுரேஷ் மூவரும் என்னை முன் ஆசனத்தில் தூக்கி வைத்தார்கள்.
 
'வலியே வழிவிடு. விழா முடியும் வரை வலிக்காதே என் விலாவே’
 
பிரசவத்தில் தவிக்கிறவளுக்குத்தான் தெரியும் மருத்துவமனையின் தூரம். கொள்ளை வலியில் துடிக்கிறவனுக்குத்தான் தெரியும் கோவை வழியின் நீளம்.
 
கோவை நகரத்தில் சரிந்த வாழையாக நான் முறிந்து விழுந்தபோது, என் காலைக் கட்டிக் கொண்டு கதறினார் என் கூடப் பிறவாச் சகோதரர் கோவை ரமேஷ். முட்டும் கண்ணீரோடு எட்டி நின்றிருந்தார் என் இலக்கிய இணை மரபின் மைந்தன் முத்தையா. அங்கு குவிந்த அப்போலோ - கங்கா மருத்துவர் குழு என்னைச் சோதித்த பிறகு 'நாளை தமிழ் நடை உங்களுக்குச் சாத்தியம் இல்லை. அதை மீறியும் அக்கறை இருந்தால், சக்கர நாற்காலியில் செல்லலாம்' என்றது. என் வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது.
 
தமிழ் நடைக்குச் செல்லாவிடில், இந்தக் கால் இருந்தென்ன இழந்தென்ன என்று உள்ளுக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டேன். மகன்களும் மருமகள்களும் விடிய விடிய விழித்திருக்க, ஊசி மருந்தில் உறங்கினேன்.
 
ஐந்தே கால் மணிக்கு எழுந்தேன். ஒற்றைக் கால் ஊன்றி என் உடல் தயாரித்தேன். என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன். பன்னீராயிரம் இளைஞர்களைத் தமிழ் நடையில் கண்டதும் மொத்த வலியும் மறந்துவிட்டேன். உடம்பின் பாரத்தை இடது காலில் மட்டும் இட்டு, வலது காலைப் பட்டும் படாமல் வைத்துக்கொண்டேன். தமிழ் நடையில் நான் மட்டும் நடந்து வராமல், திறந்த வாகனத்தில் ஏன் வந்தேன் என்பதை என் துயரம் அறிந்த கண்கள் மட்டும் துப்பறிந்துகொண்டே வந்தன. பேரணி வெற்றி; பெரு வெற்றி.
பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக வேண்டும்; நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும்... என்ற பல்லவிகளை பன்னீராயிரம் பதினெட்டு வயதுக் குரல்கள் கூடிப் பாடியபோது குலுங்கியது கோவை.
 
மாலையில் கோவை பொன்னே கவுண்டன் புதூரில் ஆறாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், வைர வனம் உண்டாக்கினார்கள் என் உயிர் நண்பர்கள். அங்கே சென்றேன்; மரக்கன்றும் நட்டேன்.
 
மறுநாள் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அய்யா அப்துல் கலாம் தலைமையில், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனும், நீதியரசி விமலாவும் கலந்துகொண்ட கவிஞர்கள் திருநாளிலும், பிற்பகல் நடந்த மணி விழாவிலும் உலகத் தமிழர்களாலும், அறிஞர்களாலும், இயக்குநர் பெருமக்களாலும் என் தமிழ் கொண்டாடப்பட்டபோது உள்ளுக்குள் கவிஞர் அபி எழுதிய ஒரு கவிதையை நினைத்துக் கொண்டேன். 'பழத்தின் அழகைப் பாராட்டுவீர், உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாரறிவீர்.’
 
நிறைந்தது விழா. விரைந்தேன் சென்னைக்கு. ரஜினியின் 'லிங்கா’வுக்கு ஒரு பாட்டு; கே.வி.ஆனந் தின் 'அநேகன்’ படத்துக்கு ஒரு பாட்டு; விகடன் நிகழ்த்திய ஜெயகாந்தன் விழாவுக்கு என் பேச்சை ஒலிப்பதிவுசெய்த குறுந்தகடு; இந்த ஆண்டு இலக்கியத்துக்காக எனக்குத் 'தமிழன் விருது’ வழங்கிய புதிய தலைமுறைக்கு ஒரு நேர்காணல்... போன்ற அவசரக் கடமைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கோவை திரும்பினேன்.
 
கங்கா மருத்துவமனையில் என்னை ஒப்படைத் தேன். உலகப் புகழ்மிக்க முதுகெலும்பு நிபுணர் மருத்துவர் ராஜசேகர் உலகப் பயணம் கொள்ளாமல் இந்தியாவில் இருந்தது என் நற்பேறு.
 
ஜூலை 23 அதிகாலை 5:45-க்கு மயக்க மருந்து கொடுத்தது மட்டுமே எனக்குத் தெரியும். என் மகன்கள் என்னை எழுப்பியபோது, மாலை மணி 5. நான் கிடத்தப்பட்டிருந்தேன்; இன்னொரு கிரகத்தில் இருந்தேன்; என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்; மறந்துபோன இதயம் மீண்டும் மலர்ந்தேன்.
 
என் கைகளும் கால்களும் மருத்துவத் தளையுண்டு கிடந்தன. அசைய நினைக்கிறது மனம், அசைய மறுக்கிறது உடல். இந்த நிலைதான் அறுவைசிகிச்சையின் துன்ப நிலை. 'இந்த இரவில் இருந்து மட்டும் என்னை எப்படியாவது கடத்திவிடுங்கள் டாக்டர்' என்கிறேன். இரவின் அத்தனை இருளும் என் மீதே சொட்டுச் சொட்டாய்ச் சொட்டுவதாய், அத்தனை அடர்த்தி அந்த இரவு. ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது.
 
இப்போது நான் சந்தித்த முக்கியத் துன்பத்தை முன்மொழியப்போகிறேன். என் சிறுநீர்ப் பை நிறைந்து, நவம்பர் மாதத்துச் செம்பரம்பாக்கமாய்த் ததும்பி நிற்கிறது; வெளியேற வாசல் தேடி எல்லாத் திசைகளையும் எல்லாத் திசுக்களையும் முட்டுகிறது. ஆனால், வெளியேற்றும் திறம் என் உடலுக்கு இல்லை. 'என்னால் முடியவில்லை டாக்டர்' என்று முனகுகிறேன். படுத்த நிலையிலேயே கழியுங்கள் என்று பாத்திரம் பொருத்தப்படுகிறது. அப்படி ஒரு முயற்சியை என் வாழ்க்கையில் மேற்கொண்டது இல்லையே என்று வருந்துகிறேன். என் உயிர்த் துன்பம் அறிந்து என்னைத் தூக்கி உட்கார வைக்கிறார்கள்; முக்குகிறேன். சொட்டுகள் கசிகின்றன. ஆனால், வெள்ளம் வெளியேறவில்லை. முதுகுப் பக்கம் அறுக்கப்பட்ட சதை, என்னை முக்கவிடவில்லை.
 
என்னைத் தூக்கி நிறுத்துங்கள் என்று துடிக்கிறேன். தலைமை மருத்துவரின் அனுமதி பெற்று என்னைத் தூக்கி நிறுத்துகிறார்கள் மருத்துவப் பணியாளர்கள். வாழ்க்கையில் முதன்முதலாய் ஆண்கள் புடைசூழ சிறுநீர் கழிக்கச் சித்தமாகிறேன். என் வெட்கத்தைத் தின்றுவிட்டது வலி. மழை கழிந்த பின்னிரவில் அதிகாலையில் சொட்டும் இலைத் துளிகளைப் போல, சொட்டுச்சொட்டாய் வெளியேறுகிறது வலியின் திரவம். ஆனாலும் முற்றும் முடியவில்லை. உடலின் சூத்திரமும் படைப்பின் மர்மமும் இப்போது புரிகிறது. நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நடத்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்... என்ற உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டுமொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை; முழுமையும் அடைவது இல்லை.
 
ஒட்டுமொத்தத் தசைகளின் ஒத்திசைவுதான் உயிர்ப்பு. இது பிரபஞ்சத்துக்கும் பொருந்தும்; இந்தப் பிண்டத்துக்கும் பொருந்தும். ஒற்றை மழைத்துளி மண்ணில் விழுவதற்கும் ஐம்பூதங்களும் ஒரே நேரத்தில் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. என் பின் தசைகளின் ஒத்திசைவு இல்லாவிடில், மூளியாகிப்போகிறது முன்னுறுப்பு. எனவே உடல் நலம் என்பது ஒட்டுமொத்த உறுப்புகளின் கூட்டணி என்ற உண்மையை என் காதில் சொல்லி வெளியேறுகிறது வலி.
 
நோயை வரவேற்க வேண்டாம், வந்தால் எதிர்கொள்வோம். உடலை நோய் கொண்டாடுகிறது; நோயை நாம் கொண்டாடுவோம். நோய் கொண்டாடிவிட்டுப் போக, நம்மைவிட்டால் யார் இருக்கிறார்கள்? நோயை நம் ஆரோக்கியம் கற்றுக்கொடுக்கும் ஆசான் என்று அறிவதே சரி.
 
ஆசியாவின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவர், கோவை கங்கா மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகர். அவர்தான் சிலந்தி வலை பின்னுவது போல எனக்குச் சிறப்பு அறுவை சிகிச்சை செய்தவர். இவரைப் போன்ற அறிவாளர்கள் ஆராதிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மனிதவளம் என்பது இவர்களையும் சேர்த்துத்தான். டாக்டர் ராஜசேகருக்கு என் வருத்தம் தீர்ந்த பிறகு ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தேன். அது இது.
 
ஆள்நடை கண்டே என்னை
   அடையாளம் அறிந்த பேர்கள்
கால்நடை தளர்ந்த தென்றே
   கலங்கியே நின்ற வேளை
கோல்நடை காணும் முன்னம்
   கொற்றவன் போல என்னை
மேல் நடை காணவைத்த
   மேதையே ராஜ சேகர்
துரும்பொன்று நுழையும் வண்ணம்
   துளையொன்று செய்து; சின்ன
எறும்பொன்று புகுதல் போலே
   எந்திரம் செலுத்தி; ஒற்றை
நரம்பொன்றும் பழுது றாமல்
   நலமுறச் செய்த உம்மைக்
கரும்பொன்று தந்த சொல்லால்
   கவிகட்டி வாழ்த்து கின்றேன்.
 
இந்த உடலின் வழியேதான் உலக இன்பங்கள் உணரப்படுகின்றன. ஆனால், உடல் என்பது சந்தோஷங்களை மட்டும் உணரும் சதைக்கருவி அல்ல, துன்பங்களை உணர்வதும் அதுவேதான். இன்பங்கள்... பெற்றுக்கொள்ள. துன்பங்கள்... கற்றுக்கொள்ள.
 
கற்றுக்கொண்டேன்.
 
வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று.
 உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.
 உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.
 எவர் மீதும் பகை கொள்ளாதே.
 அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை.
 எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு.
 உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்