Friday, August 1, 2014

வைரமுத்துவின் வரிகளில் வருத்தமும் விருத்தமும் 
11 ஜூலை காலை... மதுரை செல்லும் விமானத்தில் ஆரம்பித்தது அது. இடுப்பில் சூல்கொண்ட ஒரு வலி, வலது கால் தொடையில் மையம்கொண்டு, கெண்டைக் காலில் கரை கடக்கிறது. சற்று நேரத் தில் என் கட்டுப்பாட்டில் இருந்து உடல் நழுவுவது தெரிகிறது. விமானத்தில் என்னோடு பயணித்த முன்னாள் மத்திய அமைச்சர் சகோதரர் ஜி.கே.வாசன், என்னோடு பேசிய சொற்கள் எல்லாம் செவியில் விழுகின்றன; ஆனால் மூளையில் சென்று முட்டவில்லை. விமானத்தை விட்டு இறங்கும்போது, என் வலது காலை ஊன்ற முடியவில்லை. ஏன் என்று தெரிய வில்லை. இதற்கு முன் இப்படி ஓர் அனுபவத்தை உடல் உணர்ந்தது இல்லை.
 
அத்தை பேத்தியின் திருமணத்தில் வலியோடு வாழ்த்திவிட்டு, மதுரை அப்போலோ விரை கிறோம். காந்த ஒத்ததிர்வுத் தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) எடுத்துப் பார்த்தால் அதிர்ச்சி. முதுகெலும் பில் இருந்து விலகி வந்த சவ்வுச் சதை ஒன்று, வலது கால் நரம்பை ஆழ்ந்து அழுத்துகிறது; ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது; நடக்கும் வலிமையை அது உடைக்கிறது. கலங்கிப் போன மருத்துவர்கள் நீங்கள் பயணம் செய்யக் கூடாது என்று அச்சுறுத்தி அறிவுறுத்தினார்கள். என் புன்னகையில் துயரம் கசிந்தது.
 
விடிந்தால், கோவையில் தமிழ்ப் பெரு விழா, என் மணி விழா. பன்னீராயிரம் இளைஞர்கள் என் தலைமையில் தமிழுக்காக நடை நடந்து வருகி றார்கள். நாளை தமிழ் நடக்கப்போகிறது, தலைமை தாங்கும் என்னால் நடக்க முடியாதாம். 'என்ன கொடுமை இது’ - காலைப் போலவே மரத்துப் போனது மனது.
 
அறிஞர் பெருமகன் அப்துல் கலாம் வருகிறார்; உலகத் தமிழர்கள் ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள்; கோவையில் என் உயிர்ச் சகோதரர்கள், மூன்று திங்களாக வேர்வை கொட்டி வேலை செய்திருக் கிறார்கள்; அறிஞர் கூட்டம் கொட்டி முழக்கவிருக் கிறது; ஒரு துண்டுத் தமிழ்நாடு ஒரு கூரையின் கீழ் அமரவிருக்கிறது. 'மருத்துவ நண்பர்களே, என்னை மூட்டை கட்டியேனும் கோவையில் சென்று கொட்டிவிடுங்கள்' என்றேன்.
 
மாத்திரை தந்தார்கள்; ஊசியிட்டார்கள். என் அன்பு உறவுகள் அபிநாத், ஈஸ்வர், சுரேஷ் மூவரும் என்னை முன் ஆசனத்தில் தூக்கி வைத்தார்கள்.
 
'வலியே வழிவிடு. விழா முடியும் வரை வலிக்காதே என் விலாவே’
 
பிரசவத்தில் தவிக்கிறவளுக்குத்தான் தெரியும் மருத்துவமனையின் தூரம். கொள்ளை வலியில் துடிக்கிறவனுக்குத்தான் தெரியும் கோவை வழியின் நீளம்.
 
கோவை நகரத்தில் சரிந்த வாழையாக நான் முறிந்து விழுந்தபோது, என் காலைக் கட்டிக் கொண்டு கதறினார் என் கூடப் பிறவாச் சகோதரர் கோவை ரமேஷ். முட்டும் கண்ணீரோடு எட்டி நின்றிருந்தார் என் இலக்கிய இணை மரபின் மைந்தன் முத்தையா. அங்கு குவிந்த அப்போலோ - கங்கா மருத்துவர் குழு என்னைச் சோதித்த பிறகு 'நாளை தமிழ் நடை உங்களுக்குச் சாத்தியம் இல்லை. அதை மீறியும் அக்கறை இருந்தால், சக்கர நாற்காலியில் செல்லலாம்' என்றது. என் வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது.
 
தமிழ் நடைக்குச் செல்லாவிடில், இந்தக் கால் இருந்தென்ன இழந்தென்ன என்று உள்ளுக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டேன். மகன்களும் மருமகள்களும் விடிய விடிய விழித்திருக்க, ஊசி மருந்தில் உறங்கினேன்.
 
ஐந்தே கால் மணிக்கு எழுந்தேன். ஒற்றைக் கால் ஊன்றி என் உடல் தயாரித்தேன். என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன். பன்னீராயிரம் இளைஞர்களைத் தமிழ் நடையில் கண்டதும் மொத்த வலியும் மறந்துவிட்டேன். உடம்பின் பாரத்தை இடது காலில் மட்டும் இட்டு, வலது காலைப் பட்டும் படாமல் வைத்துக்கொண்டேன். தமிழ் நடையில் நான் மட்டும் நடந்து வராமல், திறந்த வாகனத்தில் ஏன் வந்தேன் என்பதை என் துயரம் அறிந்த கண்கள் மட்டும் துப்பறிந்துகொண்டே வந்தன. பேரணி வெற்றி; பெரு வெற்றி.
பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக வேண்டும்; நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும்... என்ற பல்லவிகளை பன்னீராயிரம் பதினெட்டு வயதுக் குரல்கள் கூடிப் பாடியபோது குலுங்கியது கோவை.
 
மாலையில் கோவை பொன்னே கவுண்டன் புதூரில் ஆறாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், வைர வனம் உண்டாக்கினார்கள் என் உயிர் நண்பர்கள். அங்கே சென்றேன்; மரக்கன்றும் நட்டேன்.
 
மறுநாள் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அய்யா அப்துல் கலாம் தலைமையில், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனும், நீதியரசி விமலாவும் கலந்துகொண்ட கவிஞர்கள் திருநாளிலும், பிற்பகல் நடந்த மணி விழாவிலும் உலகத் தமிழர்களாலும், அறிஞர்களாலும், இயக்குநர் பெருமக்களாலும் என் தமிழ் கொண்டாடப்பட்டபோது உள்ளுக்குள் கவிஞர் அபி எழுதிய ஒரு கவிதையை நினைத்துக் கொண்டேன். 'பழத்தின் அழகைப் பாராட்டுவீர், உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாரறிவீர்.’
 
நிறைந்தது விழா. விரைந்தேன் சென்னைக்கு. ரஜினியின் 'லிங்கா’வுக்கு ஒரு பாட்டு; கே.வி.ஆனந் தின் 'அநேகன்’ படத்துக்கு ஒரு பாட்டு; விகடன் நிகழ்த்திய ஜெயகாந்தன் விழாவுக்கு என் பேச்சை ஒலிப்பதிவுசெய்த குறுந்தகடு; இந்த ஆண்டு இலக்கியத்துக்காக எனக்குத் 'தமிழன் விருது’ வழங்கிய புதிய தலைமுறைக்கு ஒரு நேர்காணல்... போன்ற அவசரக் கடமைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கோவை திரும்பினேன்.
 
கங்கா மருத்துவமனையில் என்னை ஒப்படைத் தேன். உலகப் புகழ்மிக்க முதுகெலும்பு நிபுணர் மருத்துவர் ராஜசேகர் உலகப் பயணம் கொள்ளாமல் இந்தியாவில் இருந்தது என் நற்பேறு.
 
ஜூலை 23 அதிகாலை 5:45-க்கு மயக்க மருந்து கொடுத்தது மட்டுமே எனக்குத் தெரியும். என் மகன்கள் என்னை எழுப்பியபோது, மாலை மணி 5. நான் கிடத்தப்பட்டிருந்தேன்; இன்னொரு கிரகத்தில் இருந்தேன்; என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்; மறந்துபோன இதயம் மீண்டும் மலர்ந்தேன்.
 
என் கைகளும் கால்களும் மருத்துவத் தளையுண்டு கிடந்தன. அசைய நினைக்கிறது மனம், அசைய மறுக்கிறது உடல். இந்த நிலைதான் அறுவைசிகிச்சையின் துன்ப நிலை. 'இந்த இரவில் இருந்து மட்டும் என்னை எப்படியாவது கடத்திவிடுங்கள் டாக்டர்' என்கிறேன். இரவின் அத்தனை இருளும் என் மீதே சொட்டுச் சொட்டாய்ச் சொட்டுவதாய், அத்தனை அடர்த்தி அந்த இரவு. ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது.
 
இப்போது நான் சந்தித்த முக்கியத் துன்பத்தை முன்மொழியப்போகிறேன். என் சிறுநீர்ப் பை நிறைந்து, நவம்பர் மாதத்துச் செம்பரம்பாக்கமாய்த் ததும்பி நிற்கிறது; வெளியேற வாசல் தேடி எல்லாத் திசைகளையும் எல்லாத் திசுக்களையும் முட்டுகிறது. ஆனால், வெளியேற்றும் திறம் என் உடலுக்கு இல்லை. 'என்னால் முடியவில்லை டாக்டர்' என்று முனகுகிறேன். படுத்த நிலையிலேயே கழியுங்கள் என்று பாத்திரம் பொருத்தப்படுகிறது. அப்படி ஒரு முயற்சியை என் வாழ்க்கையில் மேற்கொண்டது இல்லையே என்று வருந்துகிறேன். என் உயிர்த் துன்பம் அறிந்து என்னைத் தூக்கி உட்கார வைக்கிறார்கள்; முக்குகிறேன். சொட்டுகள் கசிகின்றன. ஆனால், வெள்ளம் வெளியேறவில்லை. முதுகுப் பக்கம் அறுக்கப்பட்ட சதை, என்னை முக்கவிடவில்லை.
 
என்னைத் தூக்கி நிறுத்துங்கள் என்று துடிக்கிறேன். தலைமை மருத்துவரின் அனுமதி பெற்று என்னைத் தூக்கி நிறுத்துகிறார்கள் மருத்துவப் பணியாளர்கள். வாழ்க்கையில் முதன்முதலாய் ஆண்கள் புடைசூழ சிறுநீர் கழிக்கச் சித்தமாகிறேன். என் வெட்கத்தைத் தின்றுவிட்டது வலி. மழை கழிந்த பின்னிரவில் அதிகாலையில் சொட்டும் இலைத் துளிகளைப் போல, சொட்டுச்சொட்டாய் வெளியேறுகிறது வலியின் திரவம். ஆனாலும் முற்றும் முடியவில்லை. உடலின் சூத்திரமும் படைப்பின் மர்மமும் இப்போது புரிகிறது. நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நடத்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்... என்ற உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டுமொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை; முழுமையும் அடைவது இல்லை.
 
ஒட்டுமொத்தத் தசைகளின் ஒத்திசைவுதான் உயிர்ப்பு. இது பிரபஞ்சத்துக்கும் பொருந்தும்; இந்தப் பிண்டத்துக்கும் பொருந்தும். ஒற்றை மழைத்துளி மண்ணில் விழுவதற்கும் ஐம்பூதங்களும் ஒரே நேரத்தில் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. என் பின் தசைகளின் ஒத்திசைவு இல்லாவிடில், மூளியாகிப்போகிறது முன்னுறுப்பு. எனவே உடல் நலம் என்பது ஒட்டுமொத்த உறுப்புகளின் கூட்டணி என்ற உண்மையை என் காதில் சொல்லி வெளியேறுகிறது வலி.
 
நோயை வரவேற்க வேண்டாம், வந்தால் எதிர்கொள்வோம். உடலை நோய் கொண்டாடுகிறது; நோயை நாம் கொண்டாடுவோம். நோய் கொண்டாடிவிட்டுப் போக, நம்மைவிட்டால் யார் இருக்கிறார்கள்? நோயை நம் ஆரோக்கியம் கற்றுக்கொடுக்கும் ஆசான் என்று அறிவதே சரி.
 
ஆசியாவின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவர், கோவை கங்கா மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகர். அவர்தான் சிலந்தி வலை பின்னுவது போல எனக்குச் சிறப்பு அறுவை சிகிச்சை செய்தவர். இவரைப் போன்ற அறிவாளர்கள் ஆராதிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மனிதவளம் என்பது இவர்களையும் சேர்த்துத்தான். டாக்டர் ராஜசேகருக்கு என் வருத்தம் தீர்ந்த பிறகு ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தேன். அது இது.
 
ஆள்நடை கண்டே என்னை
   அடையாளம் அறிந்த பேர்கள்
கால்நடை தளர்ந்த தென்றே
   கலங்கியே நின்ற வேளை
கோல்நடை காணும் முன்னம்
   கொற்றவன் போல என்னை
மேல் நடை காணவைத்த
   மேதையே ராஜ சேகர்
துரும்பொன்று நுழையும் வண்ணம்
   துளையொன்று செய்து; சின்ன
எறும்பொன்று புகுதல் போலே
   எந்திரம் செலுத்தி; ஒற்றை
நரம்பொன்றும் பழுது றாமல்
   நலமுறச் செய்த உம்மைக்
கரும்பொன்று தந்த சொல்லால்
   கவிகட்டி வாழ்த்து கின்றேன்.
 
இந்த உடலின் வழியேதான் உலக இன்பங்கள் உணரப்படுகின்றன. ஆனால், உடல் என்பது சந்தோஷங்களை மட்டும் உணரும் சதைக்கருவி அல்ல, துன்பங்களை உணர்வதும் அதுவேதான். இன்பங்கள்... பெற்றுக்கொள்ள. துன்பங்கள்... கற்றுக்கொள்ள.
 
கற்றுக்கொண்டேன்.
 
வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று.
 உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.
 உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.
 எவர் மீதும் பகை கொள்ளாதே.
 அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை.
 எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு.
 உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்

No comments:

Post a Comment