தினம் தினம் வருமானம்... கீரை தரும் வெகுமானம்!
*கீரைகளை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
*ஒரு கிலோ விதைக்கு 1,000 கட்டுகள் கீரை கிடைக்கும்.
*சத்தான சந்தை வாய்ப்பு.
*நாள் தோறும் வருமானம்.
ஏதாவது நோய் என்று மருத்துவமனைக்குச் சென்றால், அங்குள்ள மருத்துவர் சொல்லும் முதல் ஆலோசனை ‘உணவில் கீரை சேருங்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அதிக மருத்துவக்குணம் கொண்ட கீரை, மனித உடல் நலத்துக்கு மட்டுமல்ல அதை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கும் நன்மை கொடுக்கும் பயிர் என்றால், அது மிகையில்லை. ஆண்டு முழுவதும் வருமானம் கொடுக்கும் குறுகியகால பணப்பயிரான கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும்.
குறிப்பாக ஆண்டு முழுவதும் மிதமான சீதோஷ்ண நிலை இருக்கும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் கீரை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில், உடுமலை அடுத்துள்ள கிளுவன்காட்டூர் மகாலிங்கம், பழனியம்மாள் தம்பதி, தங்கள் நிலத்தில் ஆண்டுமுழுவதும் பல வகை கீரைகளைப் பயிர்செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள்.
விட்டு விட்டு பெய்யும் அடைமழைச் சாரலை பொருட்படுத்தாமல், கீரை அறுவடை மும்முரத்தில் இருந்த தம்பதியிடம் பேசினோம். அறுவடை செய்துகொண்டே பேசிய மகாலிங்கம், ‘‘இந்த கிளுவன்காட்டூர்தான் எங்களுக்கு பூர்வீகம். கிணத்துப்பாசனத்துல ஏழு ஏக்கர் நிலம் இருக்கு. ஒண்ணரை ஏக்கர்ல தக்காளி நட்டு இருக்கோம், ரெண்டு ஏக்கர்ல கரும்பு போட்டிருக்கோம், ரெண்டு ஏக்கர் நிலம் வெங்காயம் நடவு செய்ய தயாரா இருக்கு. மிச்சம் இருக்கிற ஒண்ணரை ஏக்கர்ல சுழற்சி முறையில மாத்தி மாத்தி தினசரி வருமானம் கொடுக்கிற கீரையைப் பயிர் செய்றோம். போட்டது வெளையுற வண்டல் மண்ணும், சர்க்கரையா இனிக்கும் கேணித்தண்ணியும், பட்டம் தவறாம கிடைக்கிற மழையும் தோதா அமைஞ்ச இந்தப் பகுதியில எந்த வெள்ளாமை செஞ்சாலும், செழிப்பா விளையும்.
கரும்பு நட்டவங்க, வருமானத்தைக் கண்ணுல பார்க்க ஒரு வருஷம் காத்திருக்கணும். அதுக்கு மேல கட்டுபடியாகிற விலையும் பல சமயம் கிடைக்கிறதே இல்லை. அதனால எங்களைப்போல நடுத்தர விவசாயிங்க கரும்பு சாகுபடி பரப்பளவைக் குறைச்சிட்டோம். குறுகிய நாள்ல வருமானம் கொடுக்கிற வெங்காயம், தக்காளி, பீட்ரூட், கீரைனு காய்கறி பக்கம் போயிட்டோம். அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை மூணையும் ஒண்ணரை ஏக்கர்ல மாத்தி மாத்தி பயிர் செய்றோம்’’ என்று மகாலிங்கம் சொல்ல, அறுவடை செய்த கீரைகளை அடுக்கியபடி பேச்சைத் தொடர்ந்தார் பழனியம்மாள்,
‘‘உடுமலைப்பேட்டை உழவர் சந்தை வியாபாரத்தை கணக்குப் பண்ணித்தான் கீரை பயிர் பண்றோம். அரைக்கீரையும் சிறுகீரையும் தலா 150 கட்டு, பாலக் கீரை 100 கட்டுனு மொத்தம் 400 கீரைக் கட்டுக்களை சந்தைக்குக் கொண்டு போவோம். எல்லா கட்டுகளும் ஒரு மணி நேரத்துல காலியாயிடும். ஒரு கட்டு 5 ரூபாய் விலையில விப்போம். அது மூலமா, தினமும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல வியாபாரம் நடக்குது’ என்ற பழனியம்மாள் அடுக்கிய கீரைக்கட்டுக்களை ஈரத்துணி கொண்டு மூடப்போனார்.
மறுபடியும் பேசத் தொடங்கிய, மகாலிங்கம், ‘‘பாலக் கீரை மட்டும் அறுவடைக்கு வந்து சேர 40 நாள் பிடிக்கும். ஒவ்வொரு 40 நாள் இடைவெளியிலயும் பாலக் கீரையை அறுவடை செஞ்சிகிட்டே இருக்கலாம். அரைக்கீரை, சிறுகீரை ரெண்டும் விதைச்ச 22 நாள்ல அறுவடைக்கு வந்துடும். ஒரே அறுவடைதான். அறுவடை முடிஞ்சதும், அந்த நிலத்தை ஆறப்போட்டுட்டு, வேற இடத்தில விதைக்கணும்.
10 சென்ட் இடத்துல இப்படி மாறி மாறி சுழற்சி முறையில சாகுபடி செஞ்சிகிட்டே இருக்கலாம். அடைமழைக் காலங்களில் கீரை விவசாயம் சிறப்பாக இருக்காது. மத்த நாள்ல 30 சென்ட் நிலத்தில இருந்து குறைஞ்சபட்சம் 400 கட்டுகள், கீரை கிடைக்குது. இதுல, விதை, இடுபொருட்கள், ஆள்கூலி, மத்த செலவுனு 500 ரூபாய் போனாலும், சுமாரா ஆயிரத்து 500 ரூபாய் லாபமா நிக்குது’’ என்றவர் நிறைவாக, ‘அடைமழையும் அதிக வெயிலும் கீரைக்கு ஆகாது’னு சொல்லுவாங்க. இந்த சமயத்துல அதை அறுவடைக்கு கொண்டுவர்றவங்களுக்கு ஜாக்பாட்தான். கட்டு 18 ரூபாய்க்கும் கூடவே போகும். உழவர் சந்தையில எங்கள தேடிவந்து கீரை வாங்கிட்டுப் போறவங்க பல பேரு இருக்காங்க. அவங்களுக்கு சில நாட்கள் கீரை கொடுக்கமுடியாமல் போயிடுது. அதுக்கான மாற்றுவழி தெரிஞ்சிட்டா போதும். வருஷம் 365 நாளும் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதற்கு வழி தெரிஞ்சா சொல்லுங்க?” என்ற வினாவுடன் விடை கொடுத்தார்.
வெயில், மழையைச் சமாளிக்கும் முறைகள்!
மகாலிங்கத்துக்கான மாற்று வழி குறித்து பேசிய கோயம்புத்தூர் ஜே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பசுமைக்குடில் விவசாயி கோவிந்தராஜ், ‘‘அதிக மழை, அதிக வெயில் இருக்கும் நாட்களில் கீரை, கொத்தமல்லி போன்றவைகளுக்கு அதிக கிராக்கி இருக்கும். வெயில் காலங்களில் நிழல் வலைபந்தல் அமைத்து, கீரைகளை வளர்க்கலாம் அதிக உயரம் வளராத சிறுகீரை, அரைக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றை, தோட்டத்தில் தென்னை மரங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த நிழலில் வளர்க்கலாம்.
அதேபோல பாத்திகளின் மீது வெயில்படாமல் தென்னங்கீற்றுகளை வைத்து மூடி வைக்கலாம். இந்த கீற்றுகளை மாலைநேரத்தில் அப்புறப்படுத்தி விடவேண்டியது அவசியம். என்னதான் வெயில் சூட்டை தணித்து கீரை வளர்த்தாலும், வழக்கமான நாட்களில் கிடைக்கும் மகசூலை விட, குறைவான மகசூலே கிடைக்கும். ஆனாலும், மகசூல் இழப்பை சரிசெய்யும் அளவுக்கு அதிக விலை கிடைக்கும். அதேசமயம் அடைமழைக் காலங்களில் கீரை வளர்க்க வடிகால் வசதி கொண்ட அடர்த்தியான நிழல் வலைப்பந்தல் அமைக்கலாம் அல்லது பெரிய அளவில் செய்ய விரும்பினால், பசுமைக்குடில் அமைப்பது உகந்தது’’ என்றார்