லிப்பிகா சிங் - நான்கு தேசிய விருதுகள்
லிப்பிகா சிங் டராய். ஒடிஸாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். தனது ஏழு வருடகால திரைப் பயணத்தில் நான்கு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், லிபிக்காவின் `த வாட்டர்ஃபால் (The Waterfall)' ஆவணப்படம், `சிறந்த கல்விப் படம்' என்ற பிரிவில் விருது வென்றுள்ளது.
`ஹூ' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லிப்பிகாவுக்கு ஃபேஸ்புக் வழியாக வாழ்த்துத் தெரிவித்தேன். உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.
``ஒரு பழங்குடிப் பெண்ணாக லித்திகா வளர்ந்த சூழல் எப்படிப்பட்டது?''
``ஒடிஸாவில் இருக்கிற மயுர்பஞ்ச் என்ற குக்கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை வங்கி ஒன்றில் பணி புரிந்தார். அதனால் அடிக்கடி பணியிட மாறுதல் இருக்கும். அது எனக்கு பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. பட்டப் படிப்பை விசாகப்பட்டினத்தில் முடித்த பின்னர், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஆடியோகிராஃபி படித்தேன்.
என் வீட்டுச்சூழலால் பழங்குடிப் பெண் என்பதற்கான இட ஒதுக்கீடோ, கல்வி உதவித்தொகையோ எப்போதும் அவசியமாக இருந்ததே இல்லை. ஆனாலும், என் நிறத்தால் நான் பிறந்த இனத்தால் தினசரி வாழ்வில் பின்னடைவுகளையும் மிகமோசமான பாகுபாடுகளையும் சந்தித்திருக்கிறேன்.
முதன்முதலாக பள்ளி விழா ஒன்றில் நடனமாடும்போது, நன்றாக நடனம் ஆடும் நான் பின் வரிசையிலும், நடனம் ஆடத் தெரியாவிட்டாலும் நல்ல நிறமாக இருந்த பெண் மையத்திலும் நிற்கவைக்கப்பட்டோம். நம்மைச் சுற்றி இருக்கிற பாகுபாடுகளை உணரத் தொடங்கியது அப்போதிருந்துதான். அப்போது இருந்தே இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும், மன தைரியத்தை எனக்கு நானே ஊட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு தேசிய விருது கிடைத்ததைக்கூட இட ஒதுக்கீட்டில் பெற்றதாகக் கேலி செய்கிறவர்களை இப்போதும் எதிர்கொள்கிறேன்.
சில இடங்களில் நான் பெண், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள் உள்ளிட்ட அடையாளங்கள் ஏற்படுத்தும் தடைகளால் ஓர் கடுமையான அழுத்தத்தை உணர்கிறேன். அதிலிருந்து வெளிவந்தாலும், அந்த அழுத்தத்தை அனுமதிப்பதை என் பலவீனம் என நினைக்கிறேன்.''
``அடுத்தடுத்து வெல்லும் தேசிய விருதுகள் பற்றி?''
``முதல் தேசிய விருதை ‘காருட்’ என்கிற படத்தின் சவுண்ட் இன்ஜினீயரிங் வேலைக்காகப் பெற்றேன். அடுத்ததாக, எனக்கு மியூஸிக் கற்றுத்தந்த, சங்கீதத்தை சேவையாகச் செய்துவந்த என் ஆசானின் குரலைப் பதிவிட நினைத்தேன். அவரைத் தேடிச் சென்றபோது அவர் உயிருடன் இல்லை. அச்சமயத்தில், நான் இயக்குநர் ஸ்ரீ மணி கவுல் படத்தில் சவுண்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவர்தான், ஆசிரியரைப் பற்றி ஆவணப்படம் எடுக்கச் சொல்லித் தூண்டினார். அப்படி உருவானதுதான் ‘A Tree A Man A Sea’. அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அந்தப்படம்.
அடுத்த முயற்சி, `ட்ராகன் ஃப்ளை மற்றும் ஸ்நேக்’ ஆவணப்படம். நகர வாழ்வில் இருக்கும் ஒரு பள்ளி மாணவி விடுமுறையில் கிராமத்துக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள், அவள் வளர்ந்த பின், கிராமத்துக்குச் செல்ல இயலாத அவள் சூழல் மற்றும் ஏக்கத்தைப் பேசும் படம். அதுவும் எனக்கு சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது.
இதோ இம்முறை தேசிய விருது வென்றிருக்கும் ‘த வாட்டர்ஃபால்’, பள்ளி விடுமுறையில் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் பற்றியது. இயற்கையை ரசித்தபடி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பற்றிப் பேசித் திரியும் அவர்கள், அரசின் அறிவிப்பால் நீர்வீழ்ச்சி அழியும் நிலை வரும்போது என்ன செய்கிறார்கள் என்பதே கதை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 700 பள்ளிகளில் திரையிடப்பட உள்ளது.''
``ஆவணப்பட தயாரிப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?''
``படம் தயாரிப்பதற்கான பணம்தான் சவால். அதைத்தாண்டி பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமீபத்தில் ‘ஸ்டோரீஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ என்ற, சூனியம் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தேன். படத்துக்காக அந்த மாந்திரீக உலகைச் சேர்ந்த பல பகுதிகளுக்கும் சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். என்னுடைய பட வேலைகளில் பெரும்பங்கை நானே செய்துவிடுவதால் அனைத்தும் என் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். இங்கு நானே பாஸ்.
No comments:
Post a Comment