நியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா?
இரா.கலைச்செல்வன், படம்: வீ.சக்தி அருணகிரி
காலை நேரம். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்தச் சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த உலகில் இருக்கும் எதுவும் எல்லாமும் அணுக்களால் ஆனவை. முதலில் ‘அணு’தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. பின்னர், அணுவினுள் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. உல்ஃப்கேங்க் பாலி என்ற விஞ்ஞானி அணுவில் துகள்கள் மட்டுமல்ல, நியூட்ரினோ என்ற அணு உள்துகள்களும் (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.
உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோதான் என்பதால் ஒளியின் வேகத்தில், சமயத்தில் ஒளியைவிடவும் வேகமாக ஊடுருவிச் செல்லும். நியூட்ரினோவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.
இந்தியாவிலும் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்கச் சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியாகத் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான சார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) உள்ள தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான ஐ.என்.ஓ (India-based Neutrino Observatory) அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
என்னதான் திட்டம்?
அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்குக் குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும். மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடைகொண்ட, உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன ‘அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி (Nutrino Detector) அமைக்கப்படும். நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதுதான் திட்டத்தின் அடிப்படை.
ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ‘சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு. இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவு களை இங்கு கொண்டு வந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், அது எழுத்தர் செய்த பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது ஐ.என்.ஓ. இருந்தும் பிரச்னை தீரவில்லை.
“நாங்கள் தேச நலனுக்கோ, அறிவியல் வளர்ச்சிக்கோ எதிராகக் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்வி களாக எழுப்புகிறோம்” என்று தொடர்ந்து பேசத் தொடங்கினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.
“நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம்தான் எங்களுக்குப் பல கேள்விகளையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு ‘உயர் ஆற்றல் இயற்பியல்’ (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பொருட்டு, 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கை யாகக்கூடத் தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது?
ஐ.என்.ஓ-வின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள் (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த ‘மியூவான் கொலைடர்ஸ்’ (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக்கொண்டது. ஓர் ஆராய்ச்சிக்கான மூலப்பொருள் கதிரியக்கத் தன்மைகொண்டதாக இருக்கும்போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும்மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்தத் தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?
அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உள்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழியாகச் சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இதுபோன்ற ஒரு சுரங்கத்தைக் கட்டும்போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது” என்று எச்சரிக்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.
இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.
“இது நம் தேசத்திற்கே பெருமையைத் தேடித் தரும் திட்டம். இது தமிழ்நாட்டில் வருவதற்குத் தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்கவிருக்கிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது.
நாங்கள் எதையும் இங்கு மாசுபடுத்தப் போவதுமில்லை. வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். 90% தமிழக அரசுக்குத்தான். அதை அவர்கள் விற்று, வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பதுபோலெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மைதான். ஓர் அறிவியல் ஆராய்ச்சி என்றால், பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத்தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா?
அணு ஆயுதங்களை நியூட்ரினோக்கள்மூலம் கண்டறிந்து அதை வெடிக்கவும் செயலிழக்கவும் வைக்க முடியும். இது ஆபத்தானது என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு தியரி அளவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியதுதான்...” என்றார் கோபத்துடன்.
அறிவியலின் பயணம் மேல்நோக்கி முன்னேறலாம். ஆனால் அது அறத்துக்கு எதிர்த்தி சையில் அமைந்துவிடக்கூடாது. நியூட்ரினோ திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என்ற கேள்விகள்தான் சந்தேகங்களையும் போராட்டங்களையும் இன்னும் வலுவாக்குகிறது.
No comments:
Post a Comment