Tuesday, March 19, 2019

ஆண் குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் 10 வயதிலிருந்தே பேச ஆரம்பியுங்கள்!’

- செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக்

``சிறுவர்களும் வயதுக்கு வருவார்களா? அப்போது அவர்களுடைய உடம்பில் மற்றும் மனதில் நிகழ்கிற மாற்றங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?’’ 
``ஆண் குழந்தைகளும் வயதுக்கு வருவார்கள் என்கிற விழிப்புணர்வு இன்றைக்கு பலருக்கும் வந்துவிட்டாலும், அது எந்த வயதிலிருந்து எந்த வயதுக்குள் வரும்; அதனால் சிறுவர்களுக்குள் நிகழ்கிற மாற்றங்கள்; அந்த நேரத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. 
ஒரு சிறுவனுடைய 10 வயதில் இந்தப் பருவ மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். உடலளவில் ஆணுறுப்பு, விதைப்பைகள் பெரிதாக ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பைச் சுற்றியும், அக்குளிலும் ரோமங்கள் வளர ஆரம்பிக்கும். கை, கால்களின் தசைகள் இறுகி, மென்மையான குரல் உடைந்து கரகரப்பான ஆண் குரல் தலைகாட்ட ஆரம்பிக்கும். இவையெல்லாம் ஓர் அசெளகர்யத்தைக்கூட அந்தச் சிறுவனுக்குத் தர ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு 9 வயதாகும்போதே, அம்மாவோ, அப்பாவோ... அவர்களைக் குளிப்பாட்டும்போது `நீ உச்சா போற இடம் சின்னதா இருக்கா... இனி நீ வளரப்போற, நெறையா தண்ணீர் குடிக்கணும். நிறைய உச்சா போகணும். ஸோ நீ உச்சா போற இடம் பெருசாகும். நம்ம உடம்புல முடி வளர்றதே உடம்பு சூடாகிறதைத் தணிக்கத்தான். உனக்கு உச்சா போற இடம், கைக்கு அடியில எல்லாம் முடி வளர ஆரம்பிக்கும். அப்படினா நீ கொஞ்சம் கொஞ்சமா பெரிய பையன் ஆகுறேனு அர்த்தம் என்று அவர்களுக்கு ஏற்ற பாஷையில் உடல் வளர்ச்சியை விளக்கிக் கூறுங்கள். நிச்சயம் பெற்றோரில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு உடல் அளவில் கொடுக்கப்படுற அக்கறை ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆம், பெண் பிள்ளைகளுக்கு பீரியட்ஸ், சுத்தம், நாப்கின் உபயோகிப்பது பற்றி ஒவ்வோர் அம்மாவும் ஆழ யோசித்து அவர்களை மனதளவில் உடல் அளவில் தயார் செய்கிறார்கள். அதே அம்மாக்கள் தன் மகன்கள் வயதுக்கு வரும்போது எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்திருக்கிறார்களா என்றால் குறைவே.
ஆண் குழந்தைகள் வயதுக்கு வரும் நேரத்தில் மனதளவில், எதிர்பாலினமான பெண்கள் மேல் ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அதனால், பெண்களைப் பற்றி நண்பர்களிடம் அதிகமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அடுத்தது, எதிர்பாலினம் பற்றி நெட்டில் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நெட்டில் நல்ல விஷயங்கள் மட்டுமா இருக்கின்றன..? நெட்டில் டாய்ஸ் என்று தேடினால், அது செக்ஸ் டாய்ஸா என்றே கேட்கிறது. ஆண்  குழந்தைகளுடைய உலகத்தின் பல பிரச்னைகள் இன்றைக்கு இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.
பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பின்பு, இதுதொடர்பான சந்தேகங்களை இயல்பாகத் தங்கடைய அம்மாவிடம் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு இங்கேயும் சிக்கல் ஆரம்பிக்கிறது. பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், சிறுவர்கள் பொதுவாக அம்மாக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், எத்தனை அம்மாக்கள் தன் மகன்களிடம் வயதுக்கு வருதல் பற்றியோ, அந்த வயதில் வருகிற எதிர்பாலின கவர்ச்சி பற்றியோ, செக்ஸ் பற்றியோ பேசுகிறார்கள்? பருவமடைகிற நேரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதைப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துச் சொல்லி, ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும்.  பேரண்ட்ஸ் - டீச்சர் அஸோசியேஷன் என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுபோல ஒன்றிணைந்து எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று டிஸ்கஸ் செய்து பதின்ம வயது சிறுவர்களை வழி நடத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

வயதுக்கு வரும் பிள்ளைகளிடம் நட்பின் அவசியம் பற்றி பேசுங்கள். நட்புனா அதுல எதுக்கு ஆண் பெண் பேதம். உனக்கு உன் கிளாஸ்ல யார்கூட பேசினா கம்ஃபர்டா இருக்கோ அவங்களை அம்மா அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வை. தாராளமா வீட்டுக்குக் கூட்டிட்டு வா. உனக்கு இந்த வயசுல உன் கிளாஸ்ல உள்ள ஏதாவது ஒரு பொண்ணு மேல ஸ்பெஷல் கேர் வரலாம். அதெல்லாம் சகஜம். அது தப்பில்லை. தாராளமா அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா. நாம் எல்லாம் சேர்ந்துகூட வெளிய போகலாம்’’ என்று அந்த வயதில் வருகிற பாலின ஈர்ப்பைச் சகஜம், இதெல்லாம் கடந்து போக வேண்டும் என்பதை நண்பனாகச் சொல்லி புரிய வையுங்கள். இல்லையென்றால் படங்களில் காட்டுகிற பட்டாம்பூச்சியெல்லாம் உங்கள் மகனின் வயிற்றில் பறக்க ஆரம்பிப்பதாகத் தேவையில்லாத கற்பனையில் ஈடுபடுவார்கள்.’’  
``பதினைந்து, பதினாறு வயதிலேயே ஒரு சிறுவனுக்கு காதல் வந்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?’’
``இந்த வயதில், ஆண் குழந்தைகளுக்கு உடன் படிக்கிற கேர்ள்ஸ் மீது நட்பும் ஈர்ப்பும்தான் இருக்கும். அதைக் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் எங்களைப் போன்ற டாக்டர்களை அணுகினால், இந்த ஈர்ப்பு இயல்பானது என்பதையும், இதை எந்த எல்லைக்குள் நிறுத்திக்கொண்டால் நல்லது என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்துவிடுவோம். இந்தச் சொல்லித் தருதல்கூட, மாணவனுக்கு மாணவன் வேறுபடும். 
போன தலைமுறை சிறுவர்களை, `நீ இதைத்தான் செய்யணும்’ என்று பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இந்தத் தலைமுறை சிறுவர்களை நாம் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம். அவர்களைக் கேட்டுதான் அவர்களுக்கான முடிவுகளையே தீர்மானிக்கிறோம். ஆண் பிள்ளைகளின் இன்றைய நிலைமை பெற்றோராகிய நம்மால் நிகழ்ந்ததுதான். இனிமேலும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமானாலும் அவர்களுடைய சுதந்திரத்தில் எல்லைக் கோடுகள் போடலாம். கண்காணிக்கலாம். இத்தனை வயதுக்கு மேல் காதலிக்கலாம் என்பதுபோல எடுத்துச் சொல்லலாம். இந்த விஷயத்தில் சரியான தீர்வு இதுதான்.’’ 
உங்கள் பிள்ளை ஆபாசப் படங்களைப் பார்த்தால், எப்படி ரியாக்ட் செய்வது?’’ 
``கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என்று சிறுவர்களின் உள்ளங்கைகளுக்குள் ஆபாசப்படங்கள் வந்துவிட்டன. அதனால், உங்கள் பதின்ம வயது மகன் ஆபாசப்படம் பார்ப்பதைக் கண்ணெதிரே பார்த்துவிட்டீர்கள் என்றாலும், ஆத்திரப்படாதீர்கள். அவன் அதை விருப்பப்பட்டு, திட்டமிட்டுத்தான் பார்க்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலால் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். அல்லது நெட்டில் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக ஆபாச வீடியோக்கள் கண்ணில் பட்டிருக்கலாம். அதனால், இந்த விஷயத்தைக் கொஞ்சம் நிதானமாக ஹேண்டில் செய்யுங்கள். `இது உன் கவனத்தை சிதறடித்துவிடும்; இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் இதற்கு நீ அடிமையாகிவிடுவாய்; பிறகு உன் படிப்பு, வேலை, வாழ்க்கை எல்லாம் பாழாகிவிடும். இதற்கு இது வயது கிடையாது; இதிலிருந்து நீ மீண்டு வர நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று கோபப்படாமல் எடுத்துச் சொல்லுங்கள். இப்படிச் சொல்வதிலும் சில வழிமுறைகள் இருக்கின்றன. சில சிறுவர்கள், அதட்டினால் கட்டுப்பட மாட்டார்கள். சில சிறுவர்களை அதட்டித்தான் சீர்ப்படுத்த முடியும். உங்கள் மகன் எந்த ரகம் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதற்கேற்றாற்போல அதட்டியோ, அன்பு காட்டியோ வழிக்குக் கொண்டு வாருங்கள்.’’
``பெண்கள் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை... கேலி செய்யும் பதின்ம வயது சிறுவர்கள்... என்ன தீர்வு?’’
``இந்த இடத்தில்தான் செக்ஸ் எஜூகேஷன் நம் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு உதவும். நமக்கு ஆணுறுப்பு, விதைப்பை வளர்வதைப்போல பெண்களுக்கு மார்பகம் வளரும்; இடுப்பு விரிவடையும், மாதந்தோறும் ரத்தப்போக்கு நிகழும், அந்த நேரத்தில் அவர்களுக்கு வலி இருக்கும், சோர்வாக இருப்பார்கள்’ என்பதை சிறுவர்களுக்கு அவர்களுடைய டீன் ஏஜின் ஆரம்பத்திலிருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை சொல்லித் தராதபட்சத்தில்தான், பெண்களின் ஆடையில் ரத்தத்திட்டு இருந்தால் பையன்கள் அதைக் கேலி, கிண்டல் செய்கிறார்கள்.’’
``ஆண் குழந்தை வளர்ப்பில் யாருக்குப் பொறுப்பு அதிகம்... அம்மாவுக்கா, அப்பாவுக்கா?’’
``பன்னிரண்டு, பதிமூன்று வயதுகளில்கூட ஆண் குழந்தைகள் அம்மாக்களிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கலாம். அதனால், அப்பாக்கள்தான் இந்த வயதில் ஆண் பிள்ளை வளர்ப்பில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். இதுதான் சிம்பிளான, சரியான தீர்வு. நீங்கள் அவர்களுக்குக் காதுகொடுத்தால், அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். பதின்ம வயது சிறுவர்களிடம் ஒரு தோழன் போலவும் நடந்துகொள்ளுங்கள். முக்கியமாக, மகனுடைய கண் முன்னால் அவனுடைய அம்மாவுக்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள். பின்னாளில் அவன் மற்றப் பெண்களுக்கு மரியாதை கொடுப்பான்.’’
குழந்தைகளில் ஏன் வேறுபாடு காட்ட வேண்டும். நமக்கு ஆணோ, பெண்ணோ சிறு வயதிலிருந்தே அவர்களை உடல் மற்றும் மனதளவில் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் அவ்வளவே. அது நம் கடமையும்கூட என்று நச்சென சொல்லி முடித்தார் டாக்டர்.

No comments:

Post a Comment