தற்கொலை உணர்வு வந்தா அப்பா அம்மாவை யோசிங்க!
நன்றி ஆனந்த விகடன்
பரபரப்பான கோவைப் பூ மார்க்கெட் பகுதியில், இடைவெளியே இல்லாமல் ஒடுங்கியிருக்கும் ஒரு வீட்டில் அழகுலட்சுமியைச் சந்தித்தேன். டபுள் டியூட்டி முடிந்து தொய்ந்துபோய் வந்திருந்தார் அழகு லட்சுமியின் அப்பா சிவக்குமார். தாய் செல்வி சமையல் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் கிளாஸில் மூழ்கியிருந்த அழகுலட்சுமி, சிறிய இடைவேளை விட்டு நம்முடன் பேசத் தொடங்கினார்
“அப்பா ஹோட்டல்ல செக்யூரிட்டி. அம்மா இன்னொரு ஹோட்டல்ல சர்வர் நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ப்ளஸ் 2-ல 1120. நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட். நல்ல மார்க் வாங்கறதால, அதை கரெக்டா பயன்படுத்திக்கணும்னு எம்.பி.பி.எஸ் கனவு வந்துச்சு. நீட்டோட முதல் பேட்ச்ல நான் எழுதியிருக்கேன். ஒரு மாசம் கோச்சிங் போனேன். முதல்முறை ரொம்பவே பயந்துட்டுதான் எழுதினேன். 202 மார்க் எடுத்தேன். அது பாஸ் மார்க்தான். ஆனா, எம்.பி.பி.எஸ் கிடைக்கல
ரெண்டாவது தடவ நல்ல மார்க் எடுக்கணும்னு ஒரு வருஷம் கோச்சிங் போனேன். இன்ஸ்டிட்யூட்ல பேசி பீஸ் கம்மி பண்ணச் சொன்னோம். அவங்க கம்மி பண்ணின பீஸ கட்டக்கூடப் பணம் இல்ல. எங்க ஸ்கூல் ஹெச்.எம் பாதி, நாங்க பாதி போட்டு பீஸ் கட்டினோம். இந்தமுறை 316 மார்க் எடுத்தேன். ரெண்டு தடவையும் எனக்கு எம்.பி.பி.எஸ் கிடைக்கலை. பி.டி.எஸ் தான் கிடைச்சுது. அதுவும் பிரைவேட் காலேஜ்ல. கணக்கு பண்ணிப் பார்த்தா, அதுக்கும் கிட்டத் தட்ட எம்.பி.பி.எஸ் பீஸ்தான் ஆகுது.
எம்.பி.பி.எஸ்தான் கனவுங்கறதுல நான் உறுதியா இருந்தேன். கடைசியா ஒருமுறை முயற்சி பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா, கோச்சிங் போக காசு இல்ல. வீட்லயும் வேணாம்னு சொன்னாங்க. அப்பறம் ஆனந்த விகடன்ல என்னப்பத்தி வந்த செய்திய பார்த்துட்டு, கோச்சிங் பீஸ் கட்ட ஒரு என்.ஜி.ஓ உதவி பண்ணினாங்க. இந்தமுறை 420 மார்க் எடுத்தேன்.
ஒருவழியா எம்.பி.பி.எஸ் படிக்கறது சந்தோஷமா இருந்தாலும் நீட்ல பாஸாகியும் சீட் கிடைக்கலங்கறப்ப ரொம்ப உடைஞ்சுட்டேன். ரெண்டு வருஷம் உழைச்சதுக்கு எந்தப் பலனும் இல்லை.
நான் 2017-ல ஸ்கூலிங் முடிச்சேன். அப்பவே எனக்கு சீட் கிடைச்சிருந்தா, இந்நேரம் நான் எம்.பி.பி.எஸ் பைனல் ஸ்டேஜ்ல இருந்திருப்பேன். ஆனா, இப்பதான் நான் எம்.பி.பி.எஸ் பர்ஸ்ட் இயர் முடிச்சிருக்கேன். இதுக்கப்பறம் பி.ஜி படிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதெல் லாம் முடிக்க இன்னும் பல வருஷம் ஆகும். அப்பா, அம்மா அதுக்கு இன்னும் அதிகமா உழைக்கணும். அப்பா ஹார்ட் பேஷன்ட். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. சுகரும் இருக்கு. கொரோனா வால அம்மாக்கு முன்ன மாதிரி வேலை இருக்கறதில்ல. அப்பாவோட வருமானத்துல தான் குடும்பம் நடந்துட்டி ருக்கு. தொடர்ந்து, தேர்வு எழுதி சீட் கிடைக்காதப்ப, எனக்கும் தற்கொலை யோசனை வந்துச்சு. ஆனா, நாம போனா அப்பா, அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சேன். அந்த வலிய அவங்களால தாங்கிக்க முடியாது. தற்கொலை உணர்வு வரும் எல்லோருமே, கொஞ்சம் அவங்க அப்பா அம்மா பத்தி யோசிங்க” என்று அழகுலட்சுமி சொன்னபோது குறுக்கிட்ட செல்வி, “டிவில வர நியூஸ பார்க்கவே முடியல. யாரும் அப்படிப் பண்ணாதீங்க சாமி” என்றார்.
மீண்டும் தொடர்ந்த அழகுலட்சுமி, ‘’நான் நீட் எக்ஸாம் ஹால்ல சீரியஸா எக்ஸாம் எழுதறப்ப, என் காதுல டார்ச் அடிச்சுப் பார்த்தாங்க. ஆனா, சில இடங்கள்ல போலியா ஆள்மாறாட்டம் பண்ணியெல்லாம் நீட் எழுதியிருக்காங்க. எதைத் தடுக்கணுமோ அதைப் பண்ணாமே, சம்பந்தமே இல்லாம மாணவர்களை ஸ்ட்ரெஸ் ஆக்கிட்டு இருக்காங்க. அப்புறம் சி.பி.எஸ்.இ தரத்துக்கு, நம்ம பாடத்திட்டத்தையும் மாத்தினா இன்னும் உதவியா இருக்கும். முக்கியமா, சீட்களை அதிகரிச்சு, பீஸ் தொகையையும் கம்மி பண்ணணும். இதையெல்லாம் சீக்கிரமா பண்ணுனா, என்னை மாதிரி சூழ்நிலைல இருந்து வரவங்களுக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்.”
அழகுலட்சுமியின் கசப்பான அனுபவம் மற்ற மாணவர்களுக்கு வராமல் தடுப்பதும் தவிர்ப்பதும்... ஒட்டுமொத்த சமூகத்தின் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது
No comments:
Post a Comment