மக்கள் சினிமா இயக்குநர்!
ஆர்.சரவணன்
உலகம் முழுவதும் வகாலிவுட்டைக் கொண்டு சேர்த்தது இணையம்தான். பாருங்கள், இந்தியாவில் தென்கோடியிலிருந்து என்னை வாழ்த்துகிறீர்கள்.
“ஒரு பாதையைக் கண்டுபிடியுங்கள்; அல்லது ஒரு பாதையை உருவாக்குங்கள்!” - ரோம தத்துவஞானி செனிக்கா
வகாலிவுட்... இயக்குநர் பாரதிராஜாவின் சினிமாக்களில் வரும் கிராமத்து வில்லன் பேசும் ஒரு வார்த்தைபோல இருக்கும் இந்தப் பெயர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டின் சினிமாவைப் பற்றிய சொல்! தனி மனிதனாக... பேரியக்கமாக வகாலிவுட்டை தன் குடும்ப வறுமையையும் மீறி உருவாக்கி இன்று ஹாலிவுட் வரை கொண்டு சேர்த்திருக்கிறார் வகாலிவுட்டின் ஒற்றை இயக்குநர் இசாக் நப்வானா. நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களுக்காக ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் உகாண்டா’ என்ற பெயரில் ஒரு டாக்குமெண்டரியை ஹாலிவுட்டைச் சேர்ந்த பெண் இயக்குநர் கேத்தரின் ஜூபெக் எடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் இசாக் நப்வானாவுக்கு செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2015-ல் வகாலிவுட் சினிமாக்களைப் பற்றி ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன். இடைப்பட்ட வருடங்களில் ஆப்பிரிக்க சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையாக மாறியிருக்கிறார் 48 வயதான இசாக் நப்வானா. அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் சொன்னேன்.
“வாழ்த்துகள்... சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் உகாண்டாவில் தற்போது வகாலிவுட் சினிமா பாப்புலராகி விட்டதா?”
“உலகம் முழுவதும் வகாலிவுட்டைக் கொண்டு சேர்த்தது இணையம்தான். பாருங்கள், இந்தியாவில் தென்கோடியிலிருந்து என்னை வாழ்த்துகிறீர்கள். என்னுடைய பத்தாண்டுக் கால உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இன்று வகாலிவுட்டை ஹாலிவுட் அங்கீகரித்திருப்பதும், உகாண்டா சினிமாவாக வகாலிவுட் தற்போது வளர்ந்திருப்பதும். உலகம் ஒரு நூற்றாண்டுக்கு முன் சினிமாவை இயக்க ஆரம்பித்து அந்தக் கலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் 2005-ல்தான் திரைப்படங்களே இயக்க ஆரம்பித்தோம். இந்த சினிமா ரேஸில் லேட்டாக ஆரம்பித்தாலும் வேகமாக ஓடி விருதுகள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதே ஒரு உகாண்டாக் குடிமகனாக என் கனவு. சர்வாதிகாரி இடி அமீன் ஆட்சியில் கலை நசித்தொழிக்கப்பட்ட பிறகு தொலைக்காட்சியில் மட்டும் நாடகக் கலையாக வளர்ந்த சினிமாவின் விதை வகாலிவுட் சினிமாவாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. இப்போது தலைநகர் கம்பாலாவில் ஆரம்பித்து முக்கிய நகரங்களில் சினிமா தியேட்டர்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இனி உலக அரங்கில் வகாலிவுட் பெயர் கொடிகட்டிப் பறக்கும்!”
“வகாலிவுட் சார்பாக எத்தனை படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். அவற்றுக்கு உகாண்டாவில் வரவேற்பு எப்படி இருக்கிறது?”
“47 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு மணி நேர சினிமாதான். 2010-ல் தியேட்டர் இல்லாத காலகட்டங்களில் வீடுவீடாகச் சென்று வாடகைக்கு என் படங்களை டோர் டெலிவரி செய்து காசு வாங்கிக் கொள்வேன். என்னுடன் நான் வசிக்கும் வகாலிக்கா ஏரியா மக்கள் துணையாக இருந்தார்கள். கம்பாலாவின் பின்தங்கிய சேரிப்பகுதி தற்போது உகாண்டா சினிமாவின் பிறப்பிடமாக அறியப்படுவது மகிழ்ச்சி. எனக்கு முன்பே திரைப்படங்கள் எடுத்த ஹாஜி அஷ்ரப்புக்கு என் சினிமாக்கள் சமர்ப்பணம். இது என் சினிமா என்று சொல்வதே தவறு. இது உகாண்டா மக்கள் சினிமா!”
“மக்கள் சினிமா என்கிறீர்கள். ஆனால், உங்களை ஹாலிவுட்டில் ‘உகாண்டாவின் குவண்டின் டரண்டினோ’ என்றுதானே அழைக்கிறார்கள். மக்களுக்காக மென்மையான, மனிதம் பேசும் படைப்புகளை எடுக்கலாமே...ஏன் ரத்தம் தெறிக்கத் தெறிக்க இத்தனை ஆக்ஷன் படங்கள்?”
“நான் இடி அமீன் ஆட்சிக்காலத்தில் என் சிறுவயதைக் கடந்தவன். அவர் ஆட்சி செய்த 8 ஆண்டுகளில் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதில் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்தவன் நான். அந்தக் கொடூரத்தின் தாக்கம் என்னுள் இருப்பதால் இப்படிப்பட்ட படங்கள் வரலாம். மற்றபடி ஆக்ஷன் படங்கள் என் சாய்ஸ். என் சகோதரன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலைபார்த்தான். அவர்கள் வீட்டில் அவர்களோடு சேர்ந்து சக் நோரீஸ் மற்றும் புரூஸ் லீ படங்களைப் பார்த்துவிட்டு வந்து வீட்டில் எங்களிடம் சினிமாவைக் காட்சி வாரியாக விவரிப்பான். அவன் சொன்னதைக் காதால் கேட்டே நான் மனதிற்குள் படம் ஓட்டி வைத்திருந்தேன். முதன்முறையாக சக் நோரீஸ் படங்களை நான் வீடியோவாகப் பார்த்தபோது நான் மனதில் நினைத்திருந்ததைவிட ஒருபடி குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். அந்த நொடியே ‘நாம் ஏன் ஆக்ஷன் திரைப்படங்கள் எடுக்கக்கூடாது’ என யோசிக்க ஆரம்பித்தேன். குங்பூ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டேன். 2005-ல் ‘ரேமோன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் திரைப்பட ஸ்டூடியோவை வகாலிகாவில் ஆரம்பித்தேன். ஆக்ஷன் படங்களை இயக்க ஆரம்பித்ததும் என் ஏரியா மக்களே நடிக்க ஆர்வமாக வீட்டின்முன் வந்து நின்றார்கள். ஆக்ஷன் படம் என்றாலும், பார்த்ததும் பயம் வராதபடி காமெடி ஜானரில் எடுக்கிறேன். இப்போது மியூசிக்கல் ஆல்பமும் இயக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபத்தில் என் மகள் ரேச்சல் பாடிய ஒரு ஆல்பத்தை ரிலீஸ் செய்திருக்கிறேன். அது உகாண்டா டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது!”
“திரைப்படங்கள் உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த சிரமங்கள் என்னென்ன?”
“சிரமம் என்று நினைத்திருந்தால் ஒரு படத்தைக்கூட என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எடிட்டிங்கை நான் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் அப்போது செல்போன் கிடையாது. நிறைய புத்தகங்களையும் வீடியோக்களையும் பார்த்து சினிமாவை தியரியாக ஓரளவு கற்று வைத்திருந்தேன். என் 32-வது வயதில் கிடைத்த செகண்ட் ஹேண்ட் கேமராவையும் ஒரு கம்ப்யூட்டரையும் வைத்து மெல்ல மெல்ல சினிமாக்கள் எடுக்க ஆரம்பித்தேன். நானே தப்பும் தவறுமாக எடிட் செய்தேன். ‘Who killed captain Alex?’, ‘Bad Black’, ‘Tebaatusasula’ எனப் படங்களை எடுத்து யூ டியூபில் வெளியிட்டேன். ‘Who killed Captain Alex’ படத்தைப் பார்த்துதான் ஆலன் ஹாஃப்மானிஸ் என்ற ஹாலிவுட் கலைப்பட இயக்குநர் உகாண்டாவுக்கே கிளம்பி வந்து எங்கள் வகாலிவுட்டிலேயே எங்களோடு சில வருடங்கள் வாழ்ந்தார். அவரின் நட்பால் சர்வதேச சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரையும் நடிக்க வைத்து ஆக்ஷன் சினிமாக்களை இயக்க ஆரம்பித்து இன்று உலகத் திரைப்பட விழாக்களில் உகாண்டா சார்பாகக் கலந்து கொண்டு விருதுகள் வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்!”
“தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவது பொருளாதார ரீதியாக உங்களை வளர்த்தெடுத்திருக்கிறதா?”
“நான் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக இருந்தவன். அகதியாக சிறுவயதில் தான்சானியாவுக்கு ஓடிப்போனவன். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு வாழ்ந்தவன். இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டவன். என் கலை குறித்த ஆர்வத்தின்முன், பணம் ஒரு பொருட்டாகவே இல்லை. நைஜீரியா மற்றும் கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் சினிமாக்களைப்போல உகாண்டாவுக்கும் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஜீரோ பட்ஜெட் பிலிம் மேக்கிங்கை இங்கு அறிமுகப்படுத்தினேன். என் மக்களையே நடிக்க வைத்தேன். அவர்களின் ஆர்வம் இல்லையென்றால் நானே இங்கு இல்லை. என் தெருவே லொக்கேஷன், என் வீடே புரொடக்ஷன் ஹவுஸ், இரும்புக் கடையில் கிடைக்கும் பொருள்களை வைத்து நானே ஹெலிகாப்டர்கள் உருவாக்குவது, மரங்களைக் கொண்டு இயந்திரத்துப்பாக்கிகள் உருவாக்குவது, கிரீன் மேட்டில் கிராஃபிக்ஸ் உருவாக்குவது எனச் செய்ததால் அதிகம் செலவு ஆகவில்லை. இப்போது அரசின் சலுகையும் கிடைத்திருக்கிறது. எனக்கு சிறந்த குடிமகன் விருது கொடுத்து அங்கீகரித்திருக்கிறார்கள். சர்வதேசத் திரைப்பட விமர்சகர்கள் என் படங்கள் பற்றி உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். என் திரைப்படங்களின் டி.வி.டிகள் விற்பனையின் மூலம் வருமானமும் கிடைக்கிறது. இதைவிட என்ன வேண்டும்? ஹாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விரைவில் இடி அமீன் ஆட்சிக் காலத்தைக் கண்முன் கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பை சர்வதேச மொழிகளில் உருவாக்கிக்காட்டுவேன். இப்போது மூன்று ஆக்ஷன் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் கனடா திரைப்பட விழாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. என் ஆசை இதே வகாலிவுட்டில் சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றை நடத்துவதுதான். ஆஸ்கர் விருதுக் கனவும் எனக்குண்டு. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!”