வரலாற்றை இசைப்பவன்!
சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெநன்றி : ஆனந்த விகடன்
மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வாழ்வைப் பிணைத்துக் கட்டமைத்துள்ளார். சவுண்ட் இன்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவரான மணிகண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, துபாய், ஓமன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் பறை கற்றுத்தருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய கின்னாரக் கலைஞர் அருணாசலம் ஐயா குறித்த ஆவணப்படம், பெரிதும் கவனம் பெற்றது. ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். மணிகண்டனுடன் மனதுக்கு நெருக்கமான ஓர் உரையாடல்.
“சொந்த ஊரு ஈரோடு. ரொம்ப சாதாரணக் குடும்பம். அம்மா வீட்டில் துணி தைக்கிறாங்க. அப்பா டிரைவர். சின்ன வயசில் இருந்து இசை மீது ஆர்வம்னு சொல்றதைவிட, பறை மீது ஈர்ப்பு அதிகம்னு சொல்லலாம். எங்க ஊரு கோயில் திருவிழாக்களில் பறை அடிப்பாங்க. ஒரு மணி நேர ஆட்டத்துக்குப் பிறகு, ஆடிக் களைச்ச கலைஞர்கள் தண்ணி கேட்டாக்கூட , குடுக்கத் தயங்கிட்டு ஊர்க்காரங்க வீட்டுக்குள்ள போயிருவாங்க. அப்போவெல்லாம் ‘சாதிதான் இதுக்குக் காரணம்’னு எனக்குப் புரியல.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் வகுப்பு மேசையில் தாளம் தட்டிட்டிருந்தேன். அப்போ எங்க ஆசிரியர் குறிப்பிட்ட சாதிப் பெயரைச்சொல்லி, ‘அவன மாதிரி தாளம் தட்டிட்டு இருக்கே’ன்னு திட்டினாங்க. அந்த வார்த்தைகள் என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகளை விதைச்சுது. பறை மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாச்சு. பறைங்கிறது தமிழர்களின் அடையாளம், அதை ஒரு சாதிப் பெயரைச் சொல்லி ஒதுக்குறது எப்படி நியாயம் ஆகும்? ஒதுக்குறவங்க எல்லாரையும், நான் இசைக்கும் பறைச் சத்தத்தால் ஆட வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். பறைக் கலைஞர்கள் பறை வாசிச்சு முடிச்சு ஓய்வு எடுக்கும் நேரம், நான் போய் பறையை எடுத்து வாசிப்பேன். வீடு தொடங்கி, சொந்தம் வரை அத்தனை எதிர்ப்புகள். வீட்டில் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பேன். பறை கற்பது கர்வம்னு சொல்லிட்டு விமர்சனங்களைக் கடந்து போயிருவேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், பறை மீதும் பழங்குடி இசைக்கருவிகள் மீதும் இருந்த ஆர்வத்துக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் பிரிவைத் தேர்வு பண்ணினேன். இசைக்கருவிகள் பத்தித் தேடுறதுக்கு முழுச் சுதந்திரம் கிடைச்சுது.
இருளர், சோளகர், ஊராளி மக்கள் இருக்கும் திம்பம் பகுதியிலிருந்து என் பயணத்தைத் தொடங்கினேன். அவங்ககிட்ட இருக்கும் பீனாச்சி, புகுரி, அரைத் தம்பட்டை எல்லாம் ரொம்பப் பழைமையான இசைக்கருவிகள். பழங்குடிகள் அடையாளம் இல்லாமல் இருப்பது போலவே, அவர்களுடைய இசைக்கருவிகளும் சாதிங்கிற திரை போட்டு, அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கு. அந்தக் கருவிகளை மீட்டெடுப்பதுதான் முதல் லட்சியமா இருந்துச்சு. ஆரம்பத்தில் அவங்க என்னை நம்பவே இல்ல. எத்தனையோ ஏமாற்றங்களையும், வலிகளையும் கடந்து வந்த மக்கள் இப்போதெல்லாம் மத்த மனுஷங்களைப் பார்த்தாலே பயப்படுறாங்க. அவங்களை சமுதாயம் ஒதுக்குன மாதிரி, அவங்களும் சமுதாயத்தை ஒதுக்கிப் பல வருஷம் ஆச்சுன்னு அப்போதான் புரிஞ்சுது. அவங்க மேல கோபம் வரல. எவ்வளவு காயப்பட்டுருக்காங்கன்னு தெரிஞ்சுது. ரெண்டு நாள் அவங்க இருப்பிடத்திலேயே இருந்தேன். என் நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு எனக்காக அவங்களோட இசைக்கருவிகளை வாசிச்சுக் காண்பிச்சாங்க. சில கருவிகளையும் எனக்காகக் கொடுத்தாங்க. அவங்க வாசிச்சதை ரெக்கார்டு பண்ணிட்டு வந்து திரும்பத் திரும்பக் கேட்டு நானும் வாசிக்கக் கத்துக்கிட்டேன்.
அதன்பின் வெவ்வேறு கிராமங்களுக்குப் பயணம் பண்ணி, `பவுனி, கொக்கரை, மரக்காப்பு, நெடுந்தாரை, வட்டக்கிளி, இடிகுவளை, மலையொலி மூங்கில், நெடுமக்குடி, சிரட்டைக் குழல், குட்டைத்தாரை’ன்னு 60க்கும் மேற்பட்ட கருவிகளை மீட்டெடுத்திருக்கேன். கரகம், ஒயில், பெரிய கம்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம்னு 20க்கும் மேற்பட்ட ஆட்டக் கலைகள் ஆடுவேன்.
இதுபோன்ற ஒரு பயணத்தில் சந்திச்சவர்தான் கின்னாரக் கலைஞர்அருணாசலம் ஐயா. அவர்தான் தமிழ்நாட்டில் இருக்கும் கடைசிக் கின்னாரக் கலைஞர். அவரோடு அந்தக் கலையும் கருவியும் அழியும் நிலையில் இருந்துச்சு. அவரை நான் தேடிப்போகும்போது, சின்னக் குடிசையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அவர் கின்னாரம் வாசிச்சு, கோவலன், கண்ணகியைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்கும்போது ‘எந்த மேல்நாட்டு இசைக்கருவியும் எங்ககூட போட்டிபோட முடியாது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருந்துச்சு. ஆனா, அவருக்கு சொந்த ஊரில்கூட மரியாதை கிடைக்கல. கின்னாரத்தை மக்களிடம் கொண்டு போயி சேர்க்கணும்னு முடிவு பண்ணி ஆவணப்படமாக்கினேன். அது பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுத்துச்சு. அவருக்கு உதவிகளும் கிடைச்சுது’’ என்று சொல்லும்போதே மணியின் கண்களில் அத்தனை ஆனந்தம்.
“நம் பாரம்பரியக் கலைகளையெல்லாம் மீட்டெடுக்கிறது என்பது அந்தக் கருவிகளை இயக்கக் கத்துக்கிறது மட்டுமல்ல, உருவாக்கக் கத்துக்கிறதும்தான். அதற்கான பணிகளைத்தான் இப்போ தொடங்கியிருக்கேன். நிறைய இசைக்கருவிகளை அதன் அடிப்படை தெரிஞ்சு நானே வடிவமைச்சிருக்கேன். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு பாடத்திட்டத்தை வடிவமைச்சு, அதை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு. கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்ல. அவங்களுக்கு அவங்களை எப்படி வெளிப்படுத்திக்கணும்னு தெரியல. அதான் ஒவ்வொரு கலையையும் நாம் இழந்துட்டு வர்றோம். பறையை ஒதுக்குறாங்கன்னு சொல்லிச் சொல்லி, இப்போ மக்கள் மத்தியில் பறை குறித்துப் போதிய விழிப்புணர்வு வந்திருக்கு. அதே மாதிரி மற்ற கருவிகளையும் மீட்டெடுக்கணும்’’ என்ற மணிகண்டன், வெளிநாடுகளில் தமிழ்க்கலையைக் கொண்டு சேர்த்த விதம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
“ஒருமுறை கல்லூரியில் சக நண்பர்களுக்குப் பறை வாசிக்கக் கத்துக்கொடுத்துட்டு இருந்தேன். ஒரு இலங்கைத் தமிழர் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் வெர்சாய் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, ஒரு மாதம் பிரான்ஸில் பயிற்சி வழங்க என்னைக் கூட்டிப் போனாங்க. அங்க பயிற்சிகள் கொடுத்தேன். எந்தக் குடும்பம் நான் பறை அடிப்பதை இழிவாக நினைச்சாங்களோ, அவங்களே என்னைப் பெருமையா பார்த்தாங்க. எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சுது. அதன் தொடர்ச்சியாக கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குப் பறைப் பயிற்சிகள் வழங்கினேன். சொன்னா நம்ப மாட்டீங்க. ஒரு ஐ.டி ஊழியர் சம்பளத்தைவிட ஆன்லைன் மூலமாகப் பறைப் பயிற்சி கொடுத்து நான் சம்பாதிச்ச காசு அதிகம். அந்தத் தொகையில் கொரோனா நேரத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கிய கலைஞர் களைத் தேடிப் போய் உதவி பண்ணினேன். கலைஞர்கள் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. இங்க இருக்கும் கலைஞர்கள், தங்களுக்கு வசதியான வாழ்க்கை வேணும்னு நினைக்கிறது இல்ல. தங்கள் திறமைக்கு மரியாதையும், வாய்ப்பும்தான் எதிர்பார்க் கிறாங்க. சாதி அடையாளங் களைக் கடந்து நம் இசைக் கருவிகளையும் இசைப் பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். மேற்கத்திய இசையை அண்ணாந்து பார்ப்பதை விட்டுவிட்டு நம் பாரம்பரிய இசைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவாய் நிற்போம்” என்கிறார் மணிகண்டன்.
பண்பாட்டின் பழம்வாசனை ஒவ்வொரு வார்த்தையிலும் வீசுகிறது!
No comments:
Post a Comment