Tuesday, March 14, 2023

 இவளே சிங்கப்பெண்

நன்றி அவள் விகடன்

மகளிர் மருத்துவமும், மகப்பேறியலும் மட்டுமே பெண்களுக்கான துறைகளாகப் பார்க்கப்பட்ட காலம் அது. மருத்துவ அறிவியல்துறையின் இந்த மடமையைப் புறந்தள்ளி, நரம்பியல் மருத்துவப் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர் டாக்டர் ப்ரித்திகா சாரி. நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் வலிப்புநோய் மருத்துவர் என பல கிரீடங்களைச் சுமப்பவர், இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற பெருமைக்கும் உரியவர். 75 வயதிலும் எனர்ஜி குறையாமல் மருத்துவம் பார்க்கும் அதிசய மனுஷி.


சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்தால் திரும்பும் பக்கமெல்லாம் நம்பிக்கையளிக்கும் வாச கங்கள்... ‘`அது பத்தி அப்புறம் சொல்றேன்...’’ சஸ்பென்ஸுடன் தன் சக்சஸ் ஸ்டோரி பகிர ஆரம்பிக்கிறார் ப்ரித்திகா.

‘`1978-ம் வருஷம் சென்னை மருத்துவக் கல்லூரியில நரம்பியல்துறை படிப்புல சேர்ந்த முதல் பெண் நான்தான். ரொம்ப கடினமான படிப்பான அதை எடுக்க பலரும் பயப்படு வாங்க. எனக்கு அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடணும்னு ஆசை. ஆண் களுக்கான படிப்பா இருந்த நரம்பியல் துறையில ஒரு பெண்ணா நான் சந்திச்ச சவால்கள் எக்கச்சக்கம். நரம்பியல் துறையில சென்னை பல்கலைக்கழகத்துல பி.ஹெச்டி பண்ணின முதல் பெண் நான்தான். அடுத்து நியூரோ சர்ஜரி படிச்சேன். 1993-ல இங்கிலாந்து போய் வலிப்பு நோய்த்துறையில பயிற்சி எடுத் துட்டு, 1994-ல சென்னையில வலிப்புநோய்க்காக ஒரு சிகிச்சை மையம் ஆரம்பிச்சேன். வலிப்பு நோய் பாதிக்கிறவங்களை இந்தச் சமூகம் ஒதுக்கிவைக்குது. அந்த நோய் தொடர்பான மூட நம்பிக்கையும் அதிகமா இருக்கு. வலிப்பு நோய் உள்ளவங்களும் மத்தவங்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழலாம்னு எடுத்துச் சொல்லணும்னுங்கிறதுதான் நோக்கம்...’’ என்று சொன்ன ப்ரித்திகா, மூளை தொடர் பான சிகிச்சையில் நம்பர் ஒன்னாக இருந் தாலும், தான் ‘பியூட்டி வித் பிரெயின்’ என்பதை நிரூபிக்க பல வருடங்கள் போராடிய அனுபவங்களைப் பகிர ஆரம்பித்தார்.

ப்ரித்திகா சாரி
ப்ரித்திகா சாரி

‘`நான் பண்ணின முதல் பிரெயின் சர்ஜரி எமர்ஜென்சி கேஸ். தலையில அடிபட்டு வந்த பையனுக்கு அதிக ரிஸ்க் உள்ள ஆபரேஷனை பண்ண வேண்டியிருந்தது. மண்டை ஓட்டை எடுக்காம, மூளையில சேர்ந்த ரத்தத்தை எடுத்துவிடணும். பயமில்லாட்டாலும் முதல் ஆபரேஷனை வெற்றிகரமா செய்யணுமேங்கிற தவிப்பு இருந்தது. நினைச்ச மாதிரியே சக்சஸ் ஃபுல்லா செய்து முடிச்சேன். தலையில அடி பட்டு வர்றவங்களுக்குச் செய்யுற இன்னொரு ஆபரேஷன்ல மண்டை ஓட்டைத் தனியா எடுத்து, வயித்துக்குள்ள ப்ரிசர்வ் பண்ணு வோம். பிரஷர் எல்லாம் அடங்கினதும் அதைப் பொருத்துவோம். அதுக்கு ‘க்ரானியோ பிளாஸ்டி’னு (Cranioplasty) பெயர். ரொம்ப கலைநயத் தோட, நேர்த்தியா பண்ண வேண்டிய அந்த ஆபரேஷன் லயும் நான் எக்ஸ்பர்ட். தவிர வலிப்புநோய்க்கான பிரத்யேக சர்ஜரிலயும் ஸ்பெஷலைஸ் பண்ணிருக்கேன்’’ - மூளையால் முன்னேறியவருக்கு அது அத்தனை எளிதாக வாய்த்துவிடவில்லை.

‘`பெண்ணோட வெற்றியை ஆண்களால இயல்பா ஏத்துக்க முடியறதில்லை. பெண்ணை வித்தியாசமா நடத்தறதுக்குப் பின்னாடி ‘நீ லாயக்கில்லை’னு சொல்றதைவிடவும் அவளைத் தவிர்க்கிறதுதான் பிரதான காரணமா இருக்கு. எனக்கும் இதெல்லாம் நடந்திருக்கு. ‘நீ சிரிச்சே எல்லாத்தையும் சாதிச்சிடு வே’ன்னு கமென்ட் அடிச்சாங்க. காலப்போக்குல எல்லாம் மாறுச்சு. பெரிய ஆபரேஷன் தேவைப்படற கேஸ்ல எல்லாம் என் முடிவை இறுதியா எடுத்துக்கிற அளவுக்கு என்னை மதிச்சாங்க. அந்த இடத்துல நான் பெண்ணுங்கிற பிம்பம் உடைஞ்சு என் திறமை எனக் கான அடையாளமா நின்னது...’’ சாதித்துக் காட்டியவர், சிங்கிளாக வாழவும் முடிவெடுத்தி ருக்கிறார்.

‘`எம்டி முடிச்சதும் எனக்கு வரன் பார்த்தாங்க. ஜாதகத்துல தோஷம் இருக்கிறதாவும் கல்யாணம் பண் ணினா புருஷன் செத்துடுவான்னும் சொன்னாங்க. அந்தப் பழியைச் சுமக்க நான் தயாரா இல்லை. அடுத் தடுத்து மேல்படிப்பு, உயர் பொறுப்புனு ஒரு கட்டத்துல நான் ஓவர் குவாலிஃபைடு ஆயிட்டேன். அதுக்கேத்த மாதிரியான வரன் பார்க்க முடியலை. ‘என் வேலையை நான் நேசிக்கிறேன். வாழ்க்கை அப் படியே போகட்டும்’னு சொல்லிட் டேன்.

வாழ்க்கை ரொம்ப நல்லாதான் போயிட்டிருந்தது. ரோட்டரி கிளப்ல தலைவரா இருந்தேன். அந்த வேலைகள் ஒருபக்கமும் என் மருத்துவத் தொழில் இன்னொரு பக்கமுமா பயங்கர பிசியா இருந்த நேரம் அது. 2016-ம் வருஷம்... பர்சனல் வாழ்க்கையில சில பிரச்னைகள்... அதனால நான் கடுமையான ஸ்ட்ரெஸ்ல இருந் தேன். ரோட்டரி கிளப்ல பூடானுக்கு ஒரு ட்ரிப் போனோம். ஒவ்வொரு வருஷமும் நான் வருடாந்தர ஹெல்த் செக்கப் பண்ணுவேன். பூடான் போறதுக்கு முன்னாடி என்னோட கைனகாலஜிஸ்ட் என்னை டெஸ்ட் பண்ணிட்டு என் வெஜைனாவுல வித்தியாசமா, கவலைப்படற மாதிரி யான மாறுதல் தெரியுதுனு சொல்லி, ட்ரிப் முடிச்சிட்டு வந்ததும் பார்க்கச் சொன்னாங்க. ட்ரிப் போயிட்டு வந்த நான், டாக்டரை சந்திக்கிறதுல தாமதப்படுத்திட்டேன். செக்கப் போனபோது பாலிப்னு சொல்ற சதை வளர்ச்சி மாதிரி தெரியுது, சர்ஜரி பண்ணணும்னு சொன்னாங்க. அப்போ என்னோட ஹீமோகுளோபின் அளவு வெறும் 7 தான் இருந்தது. பெண்களுக்கு அது 13-க்கு மேல இருக் கணும். தீவிரமான அனீமியா... நல்லாதான் சாப்பிடறேன்... ஆனாலும் எனக்கு ஏன் அனீமியா வரணும்... அப்போ எனக்கு எங்கேயோ ப்ளீடிங் ஆகுதுனு யோசிச்சேன். மூணு மாசமா அடிக்கடி வயிற்றுவலி, திடீர்னு பேதி, திடீர்னு மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது ரத்தம் கலந்து வந்ததுனு பல விஷயங்களையும் வெச்சு யோசிச்சேன். டெஸ்ட் பண்ணதுல என் மலக்குடல்ல ஆபத்தான கிரேடு 3 புற்றுநோய் இருக் கிறது உறுதியாச்சு.

கேன்சர் உறுதியானதும் ‘இன்னும் ஆறு மாசம்தான் உயிரோட இருப் பே’ன்னு சொன்னாங்க. 70 வயசுல இறப்பை நினைச்சு நான் கவலைப் படலை. ஆனா, கேன்சருக்கான கீமோதெரபி ட்ரீட்மென்ட் எடுக்கும் போது என்கூட யார் இருப்பாங்க, எப்படி சமாளிக்கப் போறேங்கிற கவலைதான் பெருசா இருந்தது. அந்த நிலையில நான் மூணு விஷயங்களை முடிவு பண்ணினேன். அடுத்தவங்களுக்கு நம்ம மேல எவ்வளவுதான் அன்பும் அக்கறையும் இருந்தாலும் நம்ம நோயை, வலியை நாமதான் அனுபவிச்சாகணும். பணம், உதவி, எந்த டாக்டர், எந்த மாதிரியான சிகிச்சைனு எல்லாத்தையும் முடிவு பண்ணினேன். இந்த நிலைமை யில எனக்கு உதவி தேவைனு உணர்ந்து ஃபிரெண்ட்ஸ், குடும்பம்னு எல்லார் கிட்டயும் உதவிகள் கேட்டேன். சர்ஜரிக்கும் கீமோதெரபிக்கும் இடையிலான நாலு மாசங்கள்ல என்னை நான் ஸ்ட்ராங்கா மாத்திக்கிட் டேன். காலை விரிச்சுவெச்ச நிலையில தான் ஆபரேஷன் பண்ணுவாங்கன்னு கால்களை பலப்படுத்தற யோகா பயிற்சிகள் பண்ணினேன். அதனால தான் எட்டரை மணி நேர சர்ஜரி, தலை கீழா, காலை விரிக்கவெச்சுப் படுக்க வெச்சபோது என்னால அதைத் தாங்க முடிஞ்சது. எல்லாம் முடிஞ்சு ஆறு வருஷங்களாச்சு. இப்போ நான் கேன்சர் ஃப்ரீ...’’ புற்றுநோயிலிருந்து மீண்டு விட்டாலும் பிரச்னைகளிலிருந்து மீள வில்லை டாக்டர்.

``ரேடியேஷன் கொடுத்ததால குடல்ல உள்ள நரம்பு செல்கள் செத்துப்போச்சு. மலக்குடலை முக்கால் பங்கு வெட்டி எடுத்துட்டதால சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிற உணர்வு வரும். அடிக்கடி டாய்லெட் போகத் தோணும். ஆனா லும் என் சாப்பாடு, லைஃப்ஸ்டைல் மூலமா சமாளிச்சிட்டிருக்கேன். மலக் குடல்ல போட்ட தையல் வெஜைனா வோட சுவரோட ஒட்டி, ஓட்டை விழுந்துருச்சு. அதனால மலக்குடல்ல உள்ள மலமானது வெஜைனா வழியே வும் வரலாம். அந்தப் பிரச்னையையும் தாங்கிட்டு ஓடிட்டிருக்கேன்.

இயல்பிலேயே நான் ரொம்ப பாசிட் டிவ்வான மனுஷி. என் பிறப்புக்கு ஓர் அர்த்தம் இருக்குனு நம்பறேன்.கேன்சர்லேருந்து மீண்டதும் என் பாசிட்டிவிட்டி இன்னும் அதிகமா யிடுச்சு. டைம் கம்மியா இருக்கு... வயசாயிடுச்சு... எவ்வளவு வேகமா, எத்தனை மனிதர்களுக்கு நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்துட ணும்னு இன்னும் வேகமா ஓடறேன்... என்னை நானே மோட்டிவேட் பண்ணிக்கிறேன். வீடெங்கும் நீங்க பார்க்குற மோட்டிவேஷனல் வாசகங் கள் அதுக்குதான்...’’ கற்பனைக்கெட்டாத வலிகளுடன் வாழ்பவர், சொல்லும் மெசேஜ், நம் ஒவ்வொருவருக்குமானது.

‘`டாக்டரா இருந்துட்டு நானே என் ஹெல்த்தை கவனிக்கிறதைத் தள்ளிப் போட்டது மிகப் பெரிய தப்பு. அந்தத் தப்பை நீங்க யாரும் பண்ணிடாதீங்க. உங்க உடம்புல திடீர்னு வித்தியாசமான அறிகுறியை உணர்ந்தீங்கன்னா அது இதுவா இருக்கும், அதுவா இருக்கும்னு நீங்களா கற்பனை பண்ணாம உடனே டாக்டரை பாருங்க. ஏன்னா, வாழ்க்கை ரொம்ப அழகானது. அதை முழுமையா வாழ்ந்து பார்த்துடுங்க!’



Thursday, March 9, 2023

தேர்வும் பெற்றோரும் பிள்ளைகளும்

தேர்வு பற்றி பெற்றோரின் எண்ணம் முதலில் மாறவேண்டும். அவர்கள் தெளிவோடு இருந்தால்தான் பிள்ளைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடியும் ’ என்கிறார் உளவியல் ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன்.

‘பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண்ணில்தான் தங்களின் குடும்ப கௌரவம் இருக்கிறது என்ற எண்ணத்தை பெற்றோர் முதலில் கைவிடவேண்டும். மதிப்பெண்ணை இலக்கு வைத்துப் படித்தால் ஒரு கட்டத்தில் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். வளரும் பருவத்தில் ஏற்படும் இந்த மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மையாக மாறி வாழ்க்கை முழுக்க நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை மதிப்பெண் குறைந்தால் அதைத் தோல்வியாகக் கருதி மீளமுடியாத பாதிப்புக்குள் வீழும் நிலையும் ஏற்படுகிறது.

 உளவியல் ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன் சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்.

பெற்றோருக்கு 


* வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல சூழலை அமைத்துத்தர வேண்டும். பிள்ளையைப் படிக்கச்சொல்லிவிட்டு மற்றவர்கள் டி.வி பார்த்துக்கொண்டிருந்தால் பிள்ளையின் கவனம் படிப்பில் நிலைக்காது.

* ‘படி', ‘படி' என்று அழுத்தம் தராமல் பிடித்த வேலையைச் செய்ய விட வேண்டும். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தால் பேச, விளையாட அனுமதிக்க வேண்டும். படிக்கும்போது கவனச்சிதறல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியும் நிம்மதியும் இருந்தால்தான் படித்தது மனதில் பதியும்.

* மதிப்பெண் அழுத்தம் பிள்ளையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ‘உன்னால் முடிந்த உழைப்பைக் கொடு. அதற்கு மீறி நடப்பதைப் பற்றிக் கவலைப்படாதே' என்று தன்னம்பிக்கை தாருங்கள். ‘நாங்கள் எப்போதும் உன் பக்கம்' என்ற எண்ணத்தை விதையுங்கள்.

* பிள்ளைகள் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதை நீங்கள் அவசியம் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் கட்டாயம். தூக்கம் கெட்டால் அது உடல், மனநிலையை பாதிக்கும்.

* முந்தைய தேர்வுகள் குறித்துப் பேசி ஒப்பிடவோ பயமுறுத்தவோ வேண்டாம். தேர்வுக் காலங்களில் நீங்கள் கொடுக்கும் அழுத்தம் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்


மாணவர்களுக்கு

* தேர்வு மட்டுமே வாழ்க்கையல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பொறுமை, மன அமைதி, தன்னம்பிக்கை இந்த மூன்றும் தேர்வுக் காலத்தில் மிகவும் அவசியம்.

* கடைசி நிமிடம் வரை படிப்பது பதற்றத்தையே உண்டாக்கும். எனவே, நன்கு திட்டமிட்டு டைம் டேபிள் போட்டுப் படியுங்கள். படித்ததை எழுதிப்பாருங்கள். கவனத்தைச் சிதறடிக்கும் எந்த விஷயத்திலும் தேர்வு முடியும்வரை கவனம் செலுத்தாதீர்கள்.

* ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால், பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் பகிருங்கள். அவர்களிடம் பேசத் தயக்கமாக இருந்தால், நண்பர்களிடமாவது கூறிவிடுங்கள். யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லதல்ல.

* முந்தைய வருட வினாத்தாள்களைப் பார்ப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். எதிர்மறையான எந்தச் செய்திக்கும் சிந்தனைக்கும் இடம் தராதீர்கள்.

* அதிக நேரம் தனியாகப் படிப்பது கவனச்சிதறலை உண்டாக்கும். தூக்கம் கூட வரலாம். க்ரூப் ஸ்டடி செய்வது மிகவும் நல்லது. தெரிந்தவற்றைப் பகிரவும் தெரியாதவற்றை நண்பர்களிடம் கேட்டுப்பெறவும் இது உதவும். ஆனால், குழுவாகச் சேர்ந்து படிக்கிறேன் என்று கேளிக்கைகளில் மூழ்கிவிடக்கூடாது, கவனம்.

* பிரேக் எடுத்துக்கொள்ளத் தயங்காதீர்கள். 40 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோல படிக்கும் சூழலும் ரொம்பவே முக்கியம். உங்கள் மனதுக்கு உகந்த இடத்தில் அமர்வது நல்லது.

* இடையிடையே எழுந்து நடக்கலாம். பிடித்த பாடல் கேட்கலாம். விளையாடலாம். பிடித்த விஷயத்தைச் செய்யலாம். ஆனால், கவனம் சிதைக்கும் கேளிக்கைகள் பக்கம் போகாதீர்கள்.

* தேர்வுக்காலத்தில் மொபைல் பார்க்கலாமா என்றால், தாராளமாகப் பார்க்கலாம். நேரம் போவது தெரியாத அளவுக்கு கேட்ஜட்ஸ் பயன்படுத்துவதுதான் தவறு. சுய கட்டுப்பாட்டுடன் உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு அவற்றை உபயோகிப்பதில் தவறு இல்லை.

* நன்றாகத் தூங்குங்கள். இந்தத் தருணத்தில் உங்களை உற்சாகமாக இயங்க வைப்பது தூக்கம்தான். ஞாபகசக்தி தொடங்கி மனநலம் வரை எல்லாவற்றுக்கும் தூக்கம்தான் அடிப்படை.

* உணவகங்களில் சாப்பிட ஆசையாகத்தான் இருக்கும். ஆனால், கொஞ்ச காலம் வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். வீட்டிலே செய்யப்பட்டாலும் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.