தேர்வும் பெற்றோரும் பிள்ளைகளும்
தேர்வு பற்றி பெற்றோரின் எண்ணம் முதலில் மாறவேண்டும். அவர்கள் தெளிவோடு இருந்தால்தான் பிள்ளைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடியும் ’ என்கிறார் உளவியல் ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன்.
‘பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண்ணில்தான் தங்களின் குடும்ப கௌரவம் இருக்கிறது என்ற எண்ணத்தை பெற்றோர் முதலில் கைவிடவேண்டும். மதிப்பெண்ணை இலக்கு வைத்துப் படித்தால் ஒரு கட்டத்தில் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். வளரும் பருவத்தில் ஏற்படும் இந்த மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மையாக மாறி வாழ்க்கை முழுக்க நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை மதிப்பெண் குறைந்தால் அதைத் தோல்வியாகக் கருதி மீளமுடியாத பாதிப்புக்குள் வீழும் நிலையும் ஏற்படுகிறது.
உளவியல் ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன் சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்.
பெற்றோருக்கு
* வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல சூழலை அமைத்துத்தர வேண்டும். பிள்ளையைப் படிக்கச்சொல்லிவிட்டு மற்றவர்கள் டி.வி பார்த்துக்கொண்டிருந்தால் பிள்ளையின் கவனம் படிப்பில் நிலைக்காது.
* ‘படி', ‘படி' என்று அழுத்தம் தராமல் பிடித்த வேலையைச் செய்ய விட வேண்டும். உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தால் பேச, விளையாட அனுமதிக்க வேண்டும். படிக்கும்போது கவனச்சிதறல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியும் நிம்மதியும் இருந்தால்தான் படித்தது மனதில் பதியும்.
* மதிப்பெண் அழுத்தம் பிள்ளையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ‘உன்னால் முடிந்த உழைப்பைக் கொடு. அதற்கு மீறி நடப்பதைப் பற்றிக் கவலைப்படாதே' என்று தன்னம்பிக்கை தாருங்கள். ‘நாங்கள் எப்போதும் உன் பக்கம்' என்ற எண்ணத்தை விதையுங்கள்.
* பிள்ளைகள் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதை நீங்கள் அவசியம் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் கட்டாயம். தூக்கம் கெட்டால் அது உடல், மனநிலையை பாதிக்கும்.
* முந்தைய தேர்வுகள் குறித்துப் பேசி ஒப்பிடவோ பயமுறுத்தவோ வேண்டாம். தேர்வுக் காலங்களில் நீங்கள் கொடுக்கும் அழுத்தம் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
மாணவர்களுக்கு
* தேர்வு மட்டுமே வாழ்க்கையல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பொறுமை, மன அமைதி, தன்னம்பிக்கை இந்த மூன்றும் தேர்வுக் காலத்தில் மிகவும் அவசியம்.
* கடைசி நிமிடம் வரை படிப்பது பதற்றத்தையே உண்டாக்கும். எனவே, நன்கு திட்டமிட்டு டைம் டேபிள் போட்டுப் படியுங்கள். படித்ததை எழுதிப்பாருங்கள். கவனத்தைச் சிதறடிக்கும் எந்த விஷயத்திலும் தேர்வு முடியும்வரை கவனம் செலுத்தாதீர்கள்.
* ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால், பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் பகிருங்கள். அவர்களிடம் பேசத் தயக்கமாக இருந்தால், நண்பர்களிடமாவது கூறிவிடுங்கள். யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லதல்ல.
* முந்தைய வருட வினாத்தாள்களைப் பார்ப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். எதிர்மறையான எந்தச் செய்திக்கும் சிந்தனைக்கும் இடம் தராதீர்கள்.
* அதிக நேரம் தனியாகப் படிப்பது கவனச்சிதறலை உண்டாக்கும். தூக்கம் கூட வரலாம். க்ரூப் ஸ்டடி செய்வது மிகவும் நல்லது. தெரிந்தவற்றைப் பகிரவும் தெரியாதவற்றை நண்பர்களிடம் கேட்டுப்பெறவும் இது உதவும். ஆனால், குழுவாகச் சேர்ந்து படிக்கிறேன் என்று கேளிக்கைகளில் மூழ்கிவிடக்கூடாது, கவனம்.
* பிரேக் எடுத்துக்கொள்ளத் தயங்காதீர்கள். 40 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோல படிக்கும் சூழலும் ரொம்பவே முக்கியம். உங்கள் மனதுக்கு உகந்த இடத்தில் அமர்வது நல்லது.
* இடையிடையே எழுந்து நடக்கலாம். பிடித்த பாடல் கேட்கலாம். விளையாடலாம். பிடித்த விஷயத்தைச் செய்யலாம். ஆனால், கவனம் சிதைக்கும் கேளிக்கைகள் பக்கம் போகாதீர்கள்.
* தேர்வுக்காலத்தில் மொபைல் பார்க்கலாமா என்றால், தாராளமாகப் பார்க்கலாம். நேரம் போவது தெரியாத அளவுக்கு கேட்ஜட்ஸ் பயன்படுத்துவதுதான் தவறு. சுய கட்டுப்பாட்டுடன் உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு அவற்றை உபயோகிப்பதில் தவறு இல்லை.
* நன்றாகத் தூங்குங்கள். இந்தத் தருணத்தில் உங்களை உற்சாகமாக இயங்க வைப்பது தூக்கம்தான். ஞாபகசக்தி தொடங்கி மனநலம் வரை எல்லாவற்றுக்கும் தூக்கம்தான் அடிப்படை.
* உணவகங்களில் சாப்பிட ஆசையாகத்தான் இருக்கும். ஆனால், கொஞ்ச காலம் வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். வீட்டிலே செய்யப்பட்டாலும் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment