மனிதத்துக்கு மதம் தெரியாது
நன்றி: ஆனந்த விகடன்
காலித், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். ‘மில்லுக்காரர் குடும்பம்' என்றால் அப்பகுதியில் அறிவார்கள். காலித்... காலத்தில் நிலைத்திருக்கும் ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறக்கும் ஆதரவற்றோரின் உடல்களைப் பெற்று இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்கிறார். கடந்த 6 ஆண்டுகளில் காலித் அடக்கம் செய்த உடல்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.
``ரோட்டோரத்துல வாழ்றதைவிட ரோட்டோரத்துல இறக்கிறது ரொம்பக் கொடுமை சார். எதுவுமே வெளியே தெரியாம, அடையாளமே இல்லாம முடிஞ்சுபோறது துயரம். ஜாதி, மதம், மொழியையெல்லாம் தாண்டி நாமெல்லாம் மனுஷங்க. நம்ம ரெண்டு கையில ஒரு கை, மத்தவங்களை அரவணைக்கன்னு நான் நம்புறேன். யாரும் சாதாரணமா இந்த வேலையைச் செய்ய முடியாது சார். அதுக்கு ஒரு மனநிலை வேணும். ஒவ்வொரு உடலையும் பார்க்கும்போது மனசு இளகி கண்ணு கலங்கும். என் வாப்பாவைப் பார்க்கிறமாதிரி இருக்கும்...'' காலித்தின் வார்த்தைகள் மருகுகின்றன.
காலித் 2007-ல் ஆதரவற்றோர் உடல் நல்லடக்கத்திற்கென `உறவுகள் டிரஸ்ட்' என்ற அமைப்பைத் தொடங்கினார். தினமும் ஐந்து முதல் பத்து ஆதரவற்றோர் உடல்களை உறவுகள் டிரஸ்ட் பெற்று அடக்கம் செய்கிறது.
``அதிராம்பட்டினத்துலதான் படிச்சேன். வழக்கமா எங்க குடும்பத்துல டிகிரி முடிச்சதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிடுவாங்க. என்னையும் அப்படித்தான் எதிர்பார்த்தாங்க. பிளஸ் டூ முடிச்சதும் சென்னை வந்து ஆவடியில ஒரு கல்லூரியில பி.இ சேர்ந்தேன். கல்லூரிக்குப் போற வழியில பிளாட்பாரத்துல ஒரு தாத்தா உக்காந்திருப்பார். சட்டை போட்டிருக்க மாட்டார். யாரும் அவரை நெருங்கமாட்டாங்க. கடுமையா கோபப்படுவார். ஒருநாள் இரவு அவர் குளிர்ல நடுங்கிக்கிட்டிருந்தார். உடனடியா ரெண்டு சட்டையும் உணவும் வாங்கிப் போய் அவருக்குப் பக்கத்துல உக்காந்தேன். ஆரம்பத்துல கோபமா பார்த்தவர் படிப்படியா சாந்தமானார். சட்டையைப் போட்டுவிட்டுட்டு சாப்பிட வச்சேன். மனம் திறந்து பேசினார். மகன், மருமகள் பிரச்னை... வீட்டுல நிம்மதியில்லை. வெளியே போனாப்போதும்னு நினைச்சாங்க. கிளம்பி வந்துட்டேன்'னு சொன்னார். பல வருடங்கள் அவர் மனசுக்குள்ள புதைஞ்சுகிடந்த சோகம் வெளிப்பட்டுச்சு. கையைப்பிடிச்சுக்கிட்டு அழுதார். கடைசியா அவர் சொன்ன வார்த்தை என்னைப் புரட்டிப் போட்டுருச்சு. `இன்னைக்கு நீ சாப்பாடு வாங்கிக்குடுத்தே... சட்டை வாங்கிக்குடுத்தே... நாளைக்கு நான் செத்துட்டா என்னை யார் தூக்கிப்போடுவா... இங்கேயே கெடந்து அழுகிப்போயிருவேனோ..?'ன்னார். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியலே. அந்தக்கேள்வி என்னைத் துரத்த ஆரம்பிச்சிருச்சு.
கொஞ்ச நாள் கழிச்சு நண்பர்களோட வெளியே போனப்போ, ஒரு கடைவாசல்ல படுத்துக்கிடந்த ஒரு பெரியவர் கையை ஆட்டி அழைக்கிறது மாதிரி இருந்துச்சு. கிட்டப்போய் பார்த்தா கிட்டத்தட்ட மரணத் தறுவாயில இருந்தார். தண்ணி கேட்டார். 108-க்கு போன் பண்ணிட்டு தண்ணி தந்தோம். ஆனா கொஞ்ச நேரத்துல இறந்துட்டார். போலீஸ் வந்து உடலை எடுத்துக்கிட்டுப் போனாங்க. இந்தக் காட்சியும் மனசுக்குள்ள ஏறி உக்காந்துக்கிச்சு சார். சாவு பத்தி நிறைய கேள்விகள் வருது. எவ்வளவு பணமிருந்தாலும் தூக்க நாலு பேரு இல்லேன்னா வாழ்க்கை என்னவாகும்..? இறுதியா கிடைக்கிற ஆறடிக் குழிக்கும் அஞ்சடித் துணிக்கும்தானே இப்படியொரு பெரும் பயணம் நமக்கு.
அப்போதான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தச் சம்பவம் நடந்துச்சு. ரெண்டு அண்ணன்களும் வெளிநாட்டுல இருக்காங்க. இன்னொரு அண்ணன் என்கூட சென்னையில இருந்தார். அமெரிக்காவுல இருக்கிற அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால அண்ணியைப் பார்த்துக்க அம்மா போயிட்டாங்க. பிசினஸ் விஷயமா வாப்பா தஞ்சாவூர் போயிருக்கார். ஒரு அறையில் தங்கியிருந்தவர் மாரடைப்பால இறந்துட்டார். ரெண்டு நாள் கழிச்சுதான் அவர் இறந்ததே எங்களுக்குத் தெரிஞ்சுச்சு. ஊர்லேருந்து நாலைஞ்சு பேர் போய் தஞ்சாவூர்லயே இறுதிச்சடங்கு செஞ்சுட்டு வந்தாங்க. பணம், பந்தம்னு எல்லாம் கைநிறைய இருந்தும் மனைவியோ, பிள்ளைகளோ அவர் முகத்தைக்கூடப் பார்க்க முடியலே. இது நீங்கா வலியா மனசுல உக்காந்திருச்சு...'' கண்கள் கலங்குகின்றன காலித்துக்கு.
அதன்பிறகு, ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டார் காலித்.
``ரவி, தீக்ஷனான்னு என் கருத்தொத்த நண்பர்கள் பத்துப்பேர் இருக்காங்க. அவங்ககிட்ட பேசினேன். `நீ எது செஞ்சாலும் கூட நிப்போம்'னு சொன்னாங்க. ஒரு வாட்ஸப் குரூப் ஆரம்பிச்சோம். ஒரு டிரஸ்ட் பதிவு பண்ணினோம். யாருமேயில்லைன்னு இந்த உலகத்துல ஒரு உயிர்கூட இருக்கக்கூடாது... அதுக்காகவே `உறவுகள்'ன்னு பேரு வச்சோம்.சுடுகாட்டுல போய் பேசினேன். `தம்பி, அதெல்லாம் போலீஸோட வேலை... நீ போய் படிக்கிற வேலையைப் பாருப்பா'ன்னு சொல்லிட்டாங்க. மார்ச்சுவரிக்குப் போய் அங்கே வேலை செய்றவங்களைப் பார்த்தோம். `இங்கெல்லாம் நீங்க வரவேகூடாது'ன்னு சொல்லிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன் போக பயம். இருந்தாலும் நானும் நண்பனும் விசிட்டிங் கார்டு எடுத்துக்கிட்டு ஒரு ஸ்டேஷனுக்குப் போய் அங்கிருந்த போலீஸ்காரரைப் பார்த்து, `ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்றோம் சார், இருந்தாக் கூப்பிடுங்க'ன்னு சொன்னோம். மூணு மாசமாச்சு. யாரும் கூப்பிடலே... ஒருநாள் மதியம் நான் கல்லூரியில இருக்கும்போது ஒரு அழைப்பு... `தம்பி கார்டு குடுத்திருந்தீங்கல்ல... இன்னைக்கு ஒரு அடக்கம் இருக்கு, வாரீங்களா'ன்னு கேட்டாங்க. நானும் இம்ரான்னு ஒரு நண்பனும் கல்லூரிக்கு லீவ் போட்டுட்டு ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். அந்த போலீஸ்காரரும் கூட வந்தார். உடலை எடுத்திட்டு சுடுகாட்டுக்குப் போய் மாலை போட்டு பிரார்த்தனை பண்ணி அடக்கம் செஞ்சோம். ரொம்பவே திருப்தியா இருந்துச்சு.
இந்தச் செய்தி போலீஸ்காரங்க மத்தியில பரவ ஆரம்பிச்சுச்சு. ஒரு மாசம் கழித்து இன்னொரு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டாங்க. படிப்படியா போலீஸ்காரங்க தொடர்பு கிடைச்சபிறகு தினமும் அழைப்பு வர ஆரம்பிச்சிருச்சு.
ஆதரவற்றோர் உடலை போலீஸ்காரங்க கைப்பற்றினா அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில வச்சிடுவாங்க. எப்.ஐ.ஆர் போட்டு பேப்பர்ல விளம்பரம் தருவாங்க. ஒரு மாதத்துக்குள்ள யாரும் உரிமை கோரலைன்னா உடலை எடுத்தாகணும். போலீஸ்காரங்க முன்னிலையில உடலை வாங்கி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோம். தூக்கும்போது, குழிக்குள்ள இறக்கும்போது, பிரேயர் பண்ணும்போதுன்னு 9 புகைப்படங்கள் எடுக்கணும். இறுதியா இடுகாட்டுல சான்றிதழ் வாங்கி போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கணும். சில நேரங்கள்ல உடலைப் புதைச்சபிறகு சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களுக்கு புதைச்ச இடத்தைக் காமிப்போம். அந்த இடத்துல மாலை போட்டு அஞ்சலி செலுத்துவாங்க.
இதுபத்தியெல்லாம் சோஷியல் மீடியாவுல எழுத ஆரம்பிச்சேன். சென்னையில இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் எங்க போன் நம்பரோட ஸ்டிக்கர் ஒட்டினோம். தினமும் அழைப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. இடுகாட்டுல, மார்ச்சுவரியில இருக்கவங்க நெருக்கமா பழக ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் இந்தப் பணியில இணைஞ்சுக்க வந்தாங்க.
போன் வந்ததும் அரைமணி நேரத்துல மாலை, ஊதுபத்தி, கற்பூரம், மஞ்சள், குங்குமத்தோட மருத்துவமனைக்கு எங்க வாகனம் போயிடும். அடுத்த அரைமணி நேரத்துல இடுகாட்டுல இறுதிச்சடங்குக்கான காரியங்கள் முடிஞ்சிடும். இப்போ 7 வாகனங்கள் வச்சிருக்கோம். 4 டிரைவர்கள் முழுநேரமா வேலை செய்றாங்க. இடுகாட்டுல குழி வெட்டுறவங்ககூட எங்ககிட்ட காசு வாங்க மாட்டாங்க. ஏதாவது கொடுத்தாகூட 'போ தம்பி... உன் புண்ணியத்துல எனக்குக் கொஞ்சம் சேரட்டும்'னு சொல்லிடுவாங்க.
2020-ல படிப்பு முடிஞ்சுச்சு சார். அதுக்கப்புறம் முழுநேரமா இந்த வேலையில இறங்கிட்டேன். ஊர்ல இருந்து செக்கு எண்ணெய், ஆர்கானிக் பொருள்கள், நெய்யெல்லாம் வாங்கிட்டு வந்து இங்கே விற்பனை செய்றேன். என் செலவுக்குப் போதுமான வருமானம் அதுல கிடைக்குது. இந்தப் பணிக்கு தெரிஞ்சவங்க உதவுறாங்க.
ஆதரவற்றோர் உடல்கள் மட்டுமல்லாம, வசதியற்ற குடும்பங்கள்ல இறப்பு நடந்தது தெரிஞ்சா அவங்களுக்கும் உதவுறோம். வடமாநிலங்கள்ல இருந்து வந்து இங்கே வேலை செய்றவங்க குடும்பங்கள்ல இறப்பு நடந்தாலும் அழைப்பாங்க. அவங்களுக்கும் கூட நிப்போம்
கொரோனா காலம் ரொம்ப கொடுமையான காலம் சார். வெளியில போறதா வேண்டாமான்னு கூட முடிவெடுக்க முடியல. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குப் பக்கத்துல ஒருத்தர் கொரோனாவுல இறந்துட்டதா அங்கிருக்கிற பராமரிப்பாளர் எங்களை அழைச்சார். எது நடந்தாலும் சரின்னு கிளம்பிப்போய் பாதுகாப்பு உபகரணங்களோட அடக்கம் செஞ்சோம். அதுக்கப்புறம் நிறைய அழைப்புகள் வர ஆரம்பிச்சிருச்சு. இரண்டாம் அலைக்காலம் வரைக்கும் 1,600 உடல்கள் அடக்கம் செஞ்சோம். ஆறடிக்குப் பதில் 12 அடி ஆழக் குழி... அவ்வளவு தான் வித்தியாசம். எங்க நண்பர்கள்ல நிறைய பேருக்கு கொரோனா வந்துச்சு. எனக்கும் ரெண்டுமுறை வந்துச்சு. ஆனாலும் எதற்காகவும் அந்த வேலை தடைபடலே.
இப்போ இதுவே வாழ்க்கையாயிடுச்சு சார். ஆரம்பத்துல இருந்து கூட இருந்த பத்துப்பேர் இப்பவும் அதே வேகத்தோட இருக்காங்க. ஒரு பிள்ளையா எங்க வாப்பாவுக்கு என்னால இறுதிச்சடங்குகள் செய்ய முடியலே. ஒவ்வொரு முறை இறுதிச்சடங்கு செய்றபோதும் வாப்பாவுக்குச் செய்ற மாதிரியே நினைப்பேன். அம்மாவும் அண்ணன்களும், `நல்ல விஷயம் செய்றே, முழு மனசோட செய்டா'ன்னு சொல்லிட்டாங்க.
ஆரம்பத்துல நிறைய அழைப்புகள் வரும்போது உற்சாகமா இருக்கும். இ்ப்போ பயமா இருக்கு சார். ஆதரவில்லாம இறக்கறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. உறவுகளுக்கு மதிப்பில்லாமப் போறதைத்தானே இது காட்டுது... அழைப்பே வராமப் போயிடணும்னு இப்போ நினைக்கிறேன். இப்போ உள்ள தலைமுறைக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க விரும்புறேன் சார். பெத்தவங்களைக் கைவிடாதீங்க, அவங்களுக்கு நம்பிக்கையா இருங்க. கைவிட்டா அவங்க மரணம் கொடூரமாயிடும். அந்தப்பாவம் நம்மை காலம் உள்ளவரைக்கும் சுத்தும்...''
அத்தனை தீர்க்கமாகச் சொல்கிறார் காலித்.
No comments:
Post a Comment