Monday, February 3, 2025
டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான்.
பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள்.
பணம் தர வேண்டும் என செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். ‘நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன்’ எனச் சொல்லுங்கள்
ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானவை. முதலாவது அவருக்கு அதீத பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை தொடங்குகிறோம், உங்கள் மகன்/மகள் விபத்தில் சிக்கிவிட்டார், போதைப் பொருள் வழக்கில் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்தச் சமூகமும் சிரிக்கும் என இவையெல்லாம் முதல் உத்தி. போலி லோன் செயலிகளின் கலெக்ஷன் பணியாளர்கள் இதைவிட மார்பிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஆனாலும் துளி பயமின்றி, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது, ஒரு ரூபாய் இன்வெஸ்ட் செய்தால் நூறு ரூபாய், க்ரிப்டோ முதலீடு, வீடியோவை லைக் செய்தால் காசு, ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் காசு என சதுரங்க வேட்டை வகையில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும்
இந்தச் சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்குச் சொந்தம்’ என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான்.
நம்மைப் பணக்காரனாகவோ, அதிர்ஷ்டசாலியாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் தொடங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.
ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால், ‘இழந்ததை மீட்கிறேன்’ என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.
‘சிறிய தொகை... இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெருந்தொகையை மோசடி செய்வதுதான் நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஓர் உளவியல் உத்தி.
முதலில் முதலீடு செய்த ஐம்பதாயிரத்தை மீட்க மீண்டும் ஒரு ஐம்பதாயிரம், இப்போது ஒரு லட்சத்தை மீட்க மீண்டும் ஒரு லட்சம் என உங்கள் கவனத்திற்கு வராமலே ஐந்து லட்சத்தை இழந்திருப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்தால் எப்படிப் பெரும் பணம் சேருமோ, அதுபோலவே சிறுகச் சிறுக இழந்தாலும் பெரும் பணம் இழப்பு நேரும்,
ஆகவே மோசடியில் ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு ‘போனது போனதுதான்’ எனக் காவல்துறை நடவடிக்கைக்காகக் காத்திருங்கள். மோசடியாளர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப, மொத்தக் கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.
அதுபோலவே சமூகத்தை இணைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களே இப்போது விலகியிருக்கக் காரணமாக இருக்கின்றன. சதா நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் மனிதர்கள் தெரிவதில்லை. தெரியாத விஷயங்களுக்குப் பணம் அனுப்பும்போது, ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.
மேலும் எத்தனை சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் கடுமையானாலும், இந்த இணைய வேதாளங்கள் விக்ரமாதித்தனைப் போல நம் முதுகில் அனுதினமும் ஏறத் துடித்துக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசடி அழைப்புகள் மூலம் உங்களைக் குறி வைப்பார்கள். அழைப்பை ஏற்ற முதல் நொடியில், ‘ஆளை விடு சாமி, இது மோசடி' என நீங்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும்
விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம்!