Thursday, May 15, 2014

மர்மம் விதைக்கும் நியூட்ரினோ
பாரதி தம்பி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி
 
டுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்... 'நியூட்ரினோ’!
1,450 கோடி ரூபாய் செலவிலான நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி அருகே தேவாரம் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் தங்களுக்கு நன்மையானதா, தீமையானதா என்பது யாருக்கும் தெரியவில்லை. பலர் அஞ்சுகின்றனர்; சிலர் நன்மை நடக்கும் என்கின்றனர். ஆனால், யாருக்கும் நியூட்ரினோ திட்டம் என்பது என்ன என்பதுகூட தெரியவில்லை. தெரிந்தது எல்லாம், 'பூமிக்குள்ள பெருசா குகை தோண்டி எதையோ ஆராய்ச்சி செய்யப்போறாங்க’ என்பது மட்டும்தான். இந்தப் பகுதியில் உள்ள அமைப்புகளும் இயக்கங்களும்கூட, இதைப் பற்றி அதிகம் அறியவில்லை. அந்த அளவுக்கு அரசு இந்தத் திட்டம் பற்றி மௌனம் காக்கிறது.
 
இதற்கிடையில் கேரள கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், 'நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது, அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்காகவே உருவாக்கப்படுகிறது’ என்று கூறியிருப்பது சர்ச்சையை வலுவாக்கியுள்ளது.
 
நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?
 
''நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள். இது மிக, மிக நுண்ணியது. எந்த அளவுக்கு என்றால், ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி, கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். மனிதன் இதுவரை கண்டறிந்த பொருள்களிலேயே எடை குறைந்தது இதுதான். இந்த நியூட்ரினோ துகள், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. உதாரணமாக, இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட, பல்லாயிரம் கோடி நியூட்ரினோ துகள்கள் உங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். மனித உடம்பை மட்டுமல்ல... மொத்த பூமியையும் குறுக்கும் நெடுக்குமாக ஒவ்வொரு கணமும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றுகொண்டே இருக்கின்றன. பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஊடுருவி சென்று அண்ட சராசரத்தில் கலந்துவிடுகின்றன.
 
பொதுவாக ஒரு பொருளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அது மற்ற பொருள்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே அந்த ஆய்வு செய்யப்படும். ஆனால் நியூட்ரினோ என்பது, வேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாத, மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். யாருடனும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாத இறுக்கமான ஒரு நபரைப் புரிந்துகொள்வது சிரமம்தானே..? நியூட்ரினோவுக்கும் அது பொருந்தும். இதனால் நியூட்ரினோ மீதான உலக விஞ்ஞானிகளின் ஆய்வு மோகம் அதிகரித்தது.
 
 
1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார். இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. எனினும், அதன் பிறகான நியூட்ரினோ ஆய்வுகள் ஒன்றும் சூடுபிடித்துவிடவில்லை. மெத்தப் படித்த அறிவியலுக்கு அந்தச் சின்னஞ்சிறிய துகள்கள் இப்போது வரை சவால்விடுகின்றன.
 
நியூட்ரினோ ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது, பூமியின் மேற்பரப்பின் மீது பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள்தான். நியூட்ரினோ சோதனையின் போது காஸ்மிக் கதிர்களும் வினை புரிகின்றன. இதனால் சோதனையின் முடிவில், இது காஸ்மிக் கதிர் ஏற்படுத்தியதா, நியூட்ரினோ ஏற்படுத்தியதா என்று குழப்பம் வந்துவிடுகிறது. ஆகவே, காஸ்மிக் கதிர் ஊடுருவாத இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.
 
1985-ல் ஜப்பானில் 1,000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். கனடாவின் சட்பரி (Sudbury) என்ற இடத்தில் 2,000 மீட்டர் ஆழத்திலும், ஃபிரான்ஸ் நாட்டில் ஆன்ட்டெரீஸ் (Antares) என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்திலும் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவியுள்ளது அமெரிக்கா. இப்போது இந்தியாவில் முதன்முறையாக தேனியில் நிலத்துக்கும் கீழே சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர். இதுதான் உலகளாவிய அளவில் நியூட்ரினோ ஆய்வின் வரலாறு'' என்று விளக்குகிறார் 'சிறகு’ இணையதளத்தில் இதுகுறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகுல் ஹமீது. மதுரையைச் சேர்ந்த இவர், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
 
ஏன் தேனி?
 
தேனி, தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராம எல்லையில் உள்ள மலைப்பகுதிதான் ஆய்வகம் அமையவிருக்கும் இடம். இதை India-based Neutrino Observatory (INO) என்கிறார்கள். சுருக்கமாக, ஐ.என்.ஓ.
 
கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தத் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு தொடங்கிவிட்டது. கோலார் தங்கச் சுரங்கத்தில் 2,500 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டுவந்த ஆரம்ப நிலையிலான நியூட்ரினோ ஆய்வு, 1992-ல் சுரங்கம் மூடப்பட்டதும் தனது பணிகளையும் நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு புதிய ஆய்வகம் அமைக்க இடம் தேடி அலைந்தனர். முதலில் தேர்வு செய்யப்பட்டது முதுமலை காட்டில் உள்ள 'சிங்காரா’ என்ற இடம். அது வனவிலங்குகள் செறிவாக வசிக்கும் ரிசர்வ் வனப்பகுதி என்பதாலும், எதிர்ப்புகள் பலமாக இருந்ததாலும் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தேனியில் வந்து நிலைகொண்டது. இப்போது பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. செயல்படுத்தப்படும் இடத்தைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டத் தண்ணீர் தொட்டி ஒன்று  கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
 
 
என்னதான் பிரச்னை?
 
'இதுதான் திட்டம், இதைத்தான் செய்யப்போகிறோம்’ என்று மக்களுக்கு விளக்காததுதான் முதல் பிரச்னை. உலகில் வெகுசில இடங்களில் மட்டுமே இருக்கும் அறிவியல் ஆய்வகத்தைக் கொண்டுவரப் போகும் நிலையில், அதுகுறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அரசோ, ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மர்மமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அரசியல் கட்சிகளும்கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றன. வழக்கமாக இதுபோன்ற பெருந்திட்டங்களை 'நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ என்று கட்சிகள் உரிமை கோருவார்கள். ஆனால், தேர்தல் சமயமாக இருந்தும்கூட யாரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. யாருடைய கவனத்திலும் நிகழ்ச்சி நிரலிலும் இந்தத் திட்டம் இடம்பெறாதது ஏன்?
 
''நாங்கள் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து சாலை மறியல் செய்தோம். ஆனால், ஊருக்குள் புகுந்து எங்களை எல்லாம் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்து, ஐந்து பேர் மீது வழக்குப் போட்டு கடுமையாக மிரட்டினார்கள்'' என்று இப்போதும் அச்சத்துடன் பேசுகின்றனர் ஐ.என்.ஓ. திட்டத்தின் நுழைவிடத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். மிகவும் செழிப்பான இந்தப் பகுதியில் ஏராளமான காய்கறிகள் விளைகின்றன. எதிர்காலத்தில் நிலம் பறிக்கப்படலாம் அல்லது நீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படலாம் என்பது இந்த மக்களின் பயம். தங்களை ஊரைவிட்டே காலி செய்துவிடுவார்களோ என்றும் அஞ்சுகின்றனர். வைகை அணைக்கு தங்கள் கிராமங்களைத் தாரை வார்த்தவர்களை அறிந்துள்ள இவர்கள், தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று நினைக்கின்றனர்.
 
இந்தப் பகுதி கிராமங்களில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சில விஞ்ஞானிகள் மூலம் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தியது ஐ.என்.ஓ. அதன் பிறகு, யாரும் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை, கூடங்குளம் போராட்டத்தில் இருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கும் அரசு, நியூட்ரினோ திட்டத்தை வேறுவிதமாக அணுக முடிவெடுத்து இப்படிச் செய்யக்கூடும்.
 
''முதலில் இந்தத் திட்டம் குறித்த முழுமையான விளக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை'' என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளரான மோகன்.
 
தேவாரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பேசும்போது, ''கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ஐ.என்.ஓ. திட்டம் அமையும் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை வளைத்து, வளைத்து வாங்குகிறார். நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு முடிந்ததும், பத்திரத்தை நம்மிடமே கொடுத்து, 'கேட்கும்போது நிலத்தைத் தந்தால் போதும்’ என்று சொல்லிவிடுகிறார். என்னிடம்கூட இப்படி 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். யாராவது பணத்தையும் கொடுத்து, நிலத்தையும் திருப்பித் தருவார்களா? ஐ.என்.ஓ-வுக்காக மறைமுகமாக நிலம் வாங்கப்படுகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம்'' என்கிறார்.
 
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா?
 
நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை வரும்? 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ''மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறைய அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்த ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளே சோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போது மீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராது என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. மேலும், 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்'' என்கிறார்.
 
 
மத்திய அரசின் 'விஞ்ஞான் பிரசார்’ அமைப்பில் பணிபுரியும் விஞ்ஞானியும் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து வேறாக உள்ளது.
 
''நியூட்ரினோ ஆய்வகம் என்பது, 100 சதவிகிதம் தெளிவான அறிவியல். அந்த அறிவியலில் கடுகளவும் பிரச்னை இல்லை. அதேபோல சுரங்கம் தோண்டுவதால் அணை பாதிக்கும், சூழல் கெடும் என்பதும் கற்பனையே. உதாரணமாக, சென்னையில் இப்போது மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கிறார்கள். அதனால் ஏதாவது பெரும் பிரச்னை வந்துவிட்டதா? சென்னை போன்ற நகர்ப் பகுதியிலேயே இதை வெற்றிகரமாகக் கையாள முடியும் எனும்போது அங்கு இன்னும் சுலபமாகச் செய்ய முடியும்'' என்கிறார்.
 
அணுக்கழிவைக் கொட்டப்போகிறார்களா?
இதுதான் இருப்பதிலேயே ஆபத்தானதும், விடை காண வேண்டியதுமான சந்தேகம். அச்சுதானந்தன் மட்டுமல்ல... பத்மநாபன் என்கிற விஞ்ஞானிகூட இதுகுறித்து தொடர்ந்து எழுதிவருகிறார்.
 
அவர் தனது கட்டுரை ஒன்றில், 'சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், ஐ.என்.ஓ-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக் கணிதவியல் கழகம், ஐ.என்.ஓ-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில் ஐ.என்.ஓ. என்பதை, 'அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணு உலைக் கழிவுகள்’ என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக் கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று எழுதியுள்ளார் பத்மநாபன்.
 
இதையேதான் சுந்தர்ராஜனும் கூறுகிறார். ''2013 மே 6-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.
 
 
தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஐ.என்.ஓ. தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. மேலும், மதுரை -
 
வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. அவர்கள் ஐ.என்.ஓ-வை அமைத்தாலும்கூட அதில் அணு உலைக் கழிவுகளையும் கொட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை'' என்கிறார்.
 
ஆனால், த.வி.வெங்கடேஸ்வரன் இதை மறுக்கிறார். ''ஐ.என்.ஓ. ஆய்வகத்தில் அணு உலைக் கழிவுகளைக் கொட்டுவது என்பது சாத்தியமே இல்லாதது. காஸ்மிக் கதிர்களை வரவிடாமல் தடுத்து நியூட்ரினோவைப் பற்றி ஆய்வு செய்யத்தான் பூமியின் அடியாழத்துக்குச் செல்கிறோம். அப்படி இருக்கும்போது, கதிர்வீச்சை உமிழக்கூடிய அணுக் கழிவை எப்படி அதற்குள் கொட்ட முடியும்? அதிகம் வேண்டாம்... ஒரே ஒரு சாக்கு மூட்டை அளவு அணுக் கழிவைக் கட்டி அந்தச் சுரங்கத்தில் போட்டுவிட்டால்கூட நியூட்ரினோ ஆய்வை நடத்தவே முடியாது. 10 ஆயிரம் வாட்ஸ் மின்விளக்கின் முன்பு ஒரு மெழுகுவத்தியை வைத்தால், அந்த ஒளியைப் பார்க்க முடியாது இல்லையா... அதுபோல'' என்கிறார்.
 
ஆய்வின் நோக்கம் என்ன?
சரி, இவ்வளவு மெனக்கெட்டு, இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்டி, உலகம் முழுவதும் நடைபெறும் நியூட்ரினோ ஆய்வின் நோக்கம்தான் என்ன?
 
இதற்கு, தீர்மானமான விடை எதையும் சொல்ல இயலாது. ஏனெனில், அறிவியல் ஆய்வு என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். சோதனையின் முடிவுகளில் இருந்து அது அடுத்த கட்டத்தை அடைகிறது. உதாரணமாக, நாம் பேசும் அலைபேசிகளின் அடிப்படை என்ன? ஒலி அலைகள் மின் சைகைகளாக மாற்றப்பட்டு, அவை மீண்டும் ஒலி அலைகளாகப் பெறப்படுகின்றன. இதுகுறித்த ஆரம்பக்கட்ட சோதனையின்போது, 'இதனால் என்ன லாபம்?’ என்று கேட்டிருந்தால், என்ன விடை கூறியிருக்க முடியும்?
 
1897-ல் ரூதர்போர்டு எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அந்த எலெக்ட்ரான் துகள் மூலம்தான் இன்று நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதை, அன்றைய நாளில் யாரும் யூகித்திருக்க முடியாது. ஆகவே, அறிவியல் ஆய்வுகளின் நோக்கத்தை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.
 
 
ஒருவேளை, நியூட்ரினோவைக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அறிவியல் உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கக்கூடும். ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லும் திறன்கொண்ட நியூட்ரினோ பூமியையே ஊடுருவிச் செல்லும் என்றால், மொத்த பூமியின் ஒவ்வொரு விநாடி அசைவையும் கண்காணிக்கும் சாத்தியம் உருவாகலாம். இந்தப் பேரண்டத்தின் பல ரகசியங்கள் திறக்கப்படலாம். இவை எல்லாமே யூகிக்கப்படும் சாத்தியங்களே. ஆனால், அவை நடக்குமா, நடக்காதா, நடந்தால் எப்போது நடக்கும்... எதுவும் தெரியாது.
 
அறிவியலா? தொழில்நுட்பமா?
''அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அறிவியல், ஒரு விஷயத்தைச் சோதனை செய்து கண்டுபிடிக்கும். தொழில்நுட்பம், அதைச் செயல்படுத்தும். அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் முதலீடு தேவை. இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக இன்னும் தன்னிறைவை அடையாத, கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட ஒரு நாடு, அறிவியல் ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி பணத்தை வாரி இறைப்பது மிகவும் தவறானது. மாறாக, மேலை நாடுகளில் கண்டறியப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நாம் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.
 
நியூட்ரினோ என்பது அறிவியல்; அதுவும் விடை தெரியாத, இந்தத் துகளின் மூலம் நன்மை விளையுமா, விளையாதா என்று யூகிக்க முடியாத அறிவியல். உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி ஆய்வு செய்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது, இந்தியா களம் இறங்குகிறது. தொடக்கத்தில் 1,450 கோடி ரூபாய் என்றால், போகப் போக எவ்வளவு செலவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
 
 
இந்திய மக்கள், இப்படி ஓர் ஆய்வகம் வேண்டும் என்று கேட்டார்களா? அவர்கள் கேட்பது எல்லாம் தரமான குடிநீர், நல்ல சாலைகள், வேலைக்கும் உணவுக்குமான உத்தரவாதம், குடியிருக்க வீடுகள், தரமான கல்வி, மருத்துவம் போன்றவைதான். இவற்றைச் செய்துதராத அரசு, நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் என்ன பயன்?
 
யாரோ சில நூறு விஞ்ஞானிகளின் அறிவை நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் ரத்தமும் வியர்வையுமான வரிப்பணம் செலவிடப்படுவது என்ன நியாயம்? கேட்டால் வல்லரசு என்பார்கள். பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தபோதும், இதே போன்ற வெற்றுப் பெருமிதம்தானே பேசப்பட்டது?!'' என்று கேட்கிறார் சாகுல் ஹமீது.
 
கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவைக் கண்டறிய பல்லாயிரம் கோடியை ஒதுக்கும் இந்திய அரசு, கண்ணுக்குத் தெரியும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கேவலத்தை ஒழிக்க எத்தனை ஆயிரம் கோடியை ஒதுக்கியது? அதற்கு ஒரு கருவி செய்ய எந்த ஆய்வகத்தை அமைத்தது? இரண்டையும் நேருக்குநேர் வைப்பது பொருத்தமற்ற ஒப்பீடு என்று சொல்ல முடியாது. அடிப்படை வசதிகள்கூட நிறைவேறாத, தெருப் புழுதிகளில், சாக்கடை ஓரங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்கிற மக்களைக்கொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்விதான் இதற்கான அடிப்படை.
 

வேலைவாய்ப்புக்கு வழி இல்லை!
 
இந்த ஐ.என்.ஓ. திட்டத்தின் செயல்பாட்டில் பல ஆய்வு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்துள்ளன. டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், பாபா அணுசக்தி ஆய்வு மையம், சகா அணு இயற்பியல் நிறுவனம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி-மும்பை என்று நீளும் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகமும் இருக்கிறது.
 
பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வேலைவாய்ப்பு என்பது பிரதான அம்சமாகப் பேசப்படும். ஆனால், ஐ.என்.ஓ.-வைப் பொறுத்தவரை இது ஓர் அறிவியல் ஆய்வகம் என்பதால் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. வெகுசிலருக்கு, அடிமட்ட வேலைகள் கிடைக்கலாம்.
 
 இங்கு அமைக்கப்படும் ஐ.என்.ஓ. ஆய்வகம் என்பது, உலகளாவிய நியூட்ரினோ ஆய்வின் ஓர் அங்கம். மற்ற நாடுகளின் ஆய்வகங்களில் இருந்து நியூட்ரினோ இங்கு அனுப்பப்பட்டு, இங்கிருந்து அங்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படும்

Thursday, May 8, 2014

இரண்டரை ஆண்டுகள்...இன்னமும் சூடு குறையாத கூடங்குளம் போராட்டம்!
 
 
அகிம்சை வழியில் நடக்கும் மக்களின் எதிர்ப்பு, ஆயிரம் நாட்களை கடந்தாலும் வீரியம் குறையாமல் இருக்கும் என்பதற்கு இடிந்தகரையில் நடந்து வரும் அணு உலைக்கு எதிரான போராட்டமே சாட்சி. இதனை வழிநடத்தி வந்தவர்கள் அரசியல் பாதைக்கு திரும்பிய பின்னர், உள்ளூர் பெண்கள் இயக்கத்தினர் தொய்வின்றி போராட்டத்தை தொடர்வதுதான் மேலும் ஆச்சர்யம்.
 
 
கூடங்குளத்தில் ரூ.15,500 கோடி மதிப்பீட்டில் ரஷ்ய தொழில் நுட்பத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டாவது அணு உலை அடுத்த சில மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சத்தில் மக்கள்!

இந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, முதல் அணு உலையானது மின் உற்பத்தியை தொடங்க இருந்த சமயத்தில், ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அந்த பீதி குறித்த எண்ணம் ஓய்வதற்கு முன்பாக கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 
 
அதில், ‘அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்படும்பட்சத்தில் சைரன் ஒலி எழுப்பப்படும். உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும். வாகன வசதி இருக்குமானால் குடும்பத்தினருடன் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி விட வேண்டும்’ என்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இது பொதுமக்களை கடும் பீதி அடைய வைத்தது. திடீரென குழந்தைகள், ஆடு, மாடுகளுடன் வீட்டை விட்டு வெளியேறுவது இயலாத காரியம் என்பதால் அணு உலையை, தங்களின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இந்த அதிருப்தி மக்களை போராட்ட பாதைக்கு திரும்ப வைத்தது. இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு சமுதாய அமைப்பினர் இதில் கலந்துகொண்ட போதிலும் மக்கள் தங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் மீது வைத்ததால் அவர்களை கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
 
 
போராட்டக் களமாக மாறிய இடிந்தகரை!

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டுமென்பதில் அரசு அதீத ஆர்வம் காட்டிய போதிலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்ததே தவிர, முடிவுக்கு கொண்டு வர முடியவே இல்லை. அதே சமயம் வழக்கமான போராட்டங்களில் நடப்பது போன்ற வன்முறை எதுவும், இதில் துளியும் தலைகாட்டாததால் காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்ற போதிலும் நாளடைவில் ஆதரவை மட்டும் அளித்து விட்டு அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். அதன் பின்னர் இடிந்தகரை கிராமமே போராட்டக்காரர்களின் தலைமையகமாக மாறியது. அங்குள்ள லூர்து மாதா ஆலயத்தின் முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்றது.

சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன், மைபா.ஜேசுராஜன் என போராட்டக் குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி இருந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராட்டத்தை தொய்வு இல்லாமல் நடத்தினார்கள். அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டன. இடிந்தகரை கிராமத்தினர் உள்பட போராட்டத்தில் தீவிரம் காட்டியவர்கள் மீது 300க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டதால் இடிந்தகரை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உருவானது.
 
 
ஆபத் பாந்தவனாக ஆம் ஆத்மி!

போராட்டத்தில் பங்கேற்றதற்காக இடிந்தகரை, கூத்தங்குளி, கூடங்குளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டன. இதனால் அவர்களில் யாராவது வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாட்டு வாய்ப்பை இழக்க நேர்ந்தது.

அதேவேளையில், போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவானது. இதனால் அவர்களால் இடிந்தகரை கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. புஷ்பராயனின் தந்தை தூத்துக்குடியில் மறைந்த போதுகூட அவரால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. அவர் வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் வீட்டை சுற்றிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் ‘கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்’ என்று தெரிவித்தபோதிலும் நாள்தோறும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தது.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும் கால் பதிக்க விரும்பிய ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டக் குழுவினரை களம் இறக்க விரும்பினர். இதற்காக பிரசாந்த் பூஷண் இடிந்தகரை கிராமத்துக்கு நேரில் வந்து போராட்டக்குழுவினரை ச்ந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக குமரி தொகுதியில் சுப.உதயகுமாரனும்,. தூத்துக்குடியில் புஷ்பராயனும், நெல்லை தொகுதியில் மைபா.ஜேசுராஜனும் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

பெண்கள் கைக்கு சென்ற போராட்டம்!

அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கலப்பு துளியும் இருக்கக்கூடாது என்பதில் இடிந்தகரை கிராமத்தினர் திட்டவட்டமாக இருந்தனர். அதனால் போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதால் போராட்ட மேடையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வலிமையான இந்த குழுவினர் வெளியேறியதும் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என பலரும் நினைத்த நேரத்தில், இடிந்தகரை பெண்கள் குழுவினர் போராட்டத்தை கையில் எடுத்தனர்.

 
ஏற்கெனவே போராட்டத்துக்கு பக்க பலமாக இருந்த மகளிர் குழுவினர் இப்போது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய சுந்தரி, ‘‘அணு உலையை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எங்கள் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. அதனால் போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அரசியல் பாதையை தேர்வு செய்தனர்.

ஆனாலும் இடிந்தகரை போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெண்கள் குழுவை சேர்ந்தவர்கள் முடிவு செய்து போராட்டத்தை தொடர்கிறோம். முன்பு இருந்த அதே வேகத்துடன் இப்போதும் போராட்டம் தொடர்கிறது. எங்களின் போராட்டத்தால் தற்போது பொதுமக்களிடம் அணு உலைக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. இதுவே எங்கள் போராட்டத்துக்கு கிடைதிருக்கும் வெற்றி’’ என்றார்.

அடுத்த திட்டத்துக்கான ஒப்பந்தம்

போராட்டக் குழுவை சேர்ந்த மேரி பீட்டர், செல்லம்மாள், செல்வி ஆகியோர் நம்மிடம் பேசுகையில், ‘‘மக்களின் அச்சத்தை தீர்க்காமல் அணு உலையை செயல்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் எங்களின் அச்சத்தை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

பேரிடர் ஏற்பட்டால் எப்படி தப்புவது என்பது பற்றிய ஒத்திகை நடத்த நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணு உலையை மூட வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கை வலுத்துவரும் சூழலில், புதிதாக இரு அணு உலைகளை தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்வதில் மத்திய அரசு அக்கறை செலுத்துவதன் மர்மம் புரியவில்லை.

தேர்தல் நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று இந்த ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இதுபற்றி முடிவு செய்யட்டுமே. ஒரு வேளை தங்களால் ஆட்சிக்கு வர முடியாது என்கிற எண்ணத்தில் கடைசி நேரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறதா? போராடும் சாமான்ய மக்களை பொருட்டாக மதிக்காமல் செயல்படும் அரசாங்கத்தை நினைத்து வருத்தப்படுவதை தவிர எங்களால் என்ன செய்ய முடியும்?’’ என்று வேதனைப்பட்டார்கள்.

 
ஆயிரம் நாளாக நடக்கும் இந்த போராட்டம் குறித்து இடிந்தகரையில் தங்கி இருக்கும் முகிலனிடம் கேட்டதற்கு, ‘‘மக்களின் போராட்டம் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. ஏழைகளின் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இப்போது வேண்டுமானால் கேட்காமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவை பார்த்து அரசாங்கம் அச்சப்படுகிறது.

இந்த போராட்டத்தை பொறுத்தவரை, மக்களே நடத்தும் போராட்டம். அதனால் தலைமை மாறினாலும் மக்கள் உணர்வுப்பூர்வமாக இதில் பங்கேற்கிறார்கள். போராட்டத்தை சீர்குலைக்க எத்தனையோ இடையூறுகளை போலீசார் திட்டமிட்டு தூண்டினாலும் மக்கள் அதனை கண்டு அஞ்சாமல் ஆயிரம் நாட்களாக போராடி வருகிறார்கள். அணு கழிவு மேலான்மை பற்றி வாய் திறக்க மறுக்கும் மத்திய அரசு, அடுத்தடுத்த அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இந்த பகுதி மக்களின் கோபத்தை அதிகரித்து இருக்கிறது. மக்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க மறுக்கும் அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்றார் காட்டமாக.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அணு உலை விவகாரம் அதே சூட்டோடு இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இது இனிக்கும் செய்தியல்ல!
 
தேனீ உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
 
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
 
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
 
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,  நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
 
''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
 
தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.
 
 
பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
 
கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!
 
இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
 
 
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
 
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன.  வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
 
சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
 
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''
 
''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''
 
''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
 
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித்
 
தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
 
இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
 
'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை!
சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் கோவை முருகானந்தம்!
 
உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் முருகானந்தம். வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சேர்ந்த முருகானந்தம்.
 
அவர் சாதித்த சாதனை என்ன?
எந்த சகோதரியும் அழுக்குத் துணியை பயன்படுத்தக் கூடாது!
(ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை)
 
பெண்களுக்கான சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் முருகானந்தம். ஆனால், இதற்கு இவர் கொடுத்த விலை... நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவருடைய வார்த்தைகளிலேயே படிப்போம்!
 
 
 'என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறைக்குப் போனேன்.
அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக் குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிட்டேன்.
 
அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க.     வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னை பைத்தியக்காரன் மாதிரி பார்த்துட்டு, திட்டினாங்க. சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனை எலியாக்க முடிவு பண்ணினேன்.
 
என் நண்பரின் கறிக் கடையில் இருந்து சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச் சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டினது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வரும். இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க!
 
 
சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.
 
கண்ணீரோட நான் என் கிராமத்தைவிட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்துட்டேன். ரூம் பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு
 
கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க.
 
நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு  65 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன்.
 
அது என் பல வருஷக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்.
 
சமீபத்துல ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’  என் கண்டுபிடிப்பைத் தேர்வு செஞ்சது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ. இங்க எல்லாம் போய் சிறப்பு விருந்தினராகப் பேசி இருக்கேன். ரத்தன் டாடா, நாராயணமூர்த்தி ஆகியோரும் என் திட்டத்துக்கு உதவ முன்வந்து இருக்காங்க. என்னோட நோக்கம், இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பொண்ணுங்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது...'' -
அவர் பேசி முடித்தபோது எனக்குக் கண்கள் கலங்கி விட்டன!
 

Thursday, April 10, 2014

மோடியும் முகமூடியும்!
 
ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
'பாரத் மா கா ஷேர் ஆயா!’ (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே’ என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி. வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்கிறது.
 
வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்ததைவிட புதிய பெருமை எதையும் சேர்த்துக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியைப் பார்த்து, 'காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுதலை செய்வோம்’ என்கிறது அந்தக் குரல். இந்தியா, இந்தியா என்று பேசுவதையே காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்து, 'இந்தியாவுக்கு வாக்களியுங்கள்’ என்று நரேந்திர மோடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்ததில் ஆரம்பித்தன வித்தைகள்!
 
குஷ்பு ஜாக்கெட் மாதிரி மோடி குர்தா பிரபலம் ஆகிவிட்டது. பி.சி.சர்க்கார் வைத்திருப்பது மாதிரி அவரிடம் மந்திரக்கோல் இல்லை. ஆனால், ஏக இந்தியாவையும் ஒரே நாளில் ஏற்றம் செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை எகிறவைக்கத் துடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி வரும்போதும் அவரது கழுத்துப்பட்டி பட்டன் போட்ட கோட் 'நவீன இந்தியன்’ மாடலை நம் முன் நிறுத்தியது. மன்மோகன் பிரதமர் ஆகும்போதும், 'பொருளாதார மேதை ஒருவரின் கைகளால் இந்தியா சுபிட்சம் அடையும்’ என நம்பவைக்கப்பட்டது. இதோ வளர்ச்சியின் நாயகனாக, இப்போது நரேந்திர மோடி வாக்கு கேட்கிறார்.
 
அத்வானி 'தீவிரவாதி’யாக இருந்தபோது, மிதவாதியான வாஜ்பாயை நடத்தி அழைத்து வந்தார்கள். இப்போது அத்வானி மிதவாதியாக இருக்கும்போது, 'தீவிரவாதி’யான நரேந்திர மோடியை நாலு கால் பாய்ச்சலில் ஓடவிடுகிறார்கள். இந்த இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் மதத்தின் மார்க்கெட்டிங் வேல்யூ கூடியிருக்கிறது என்பதன் அடையாளம் இது. அதனை அறுவடை செய்யவே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வருகிறார்.
 
நாளை அல்ல, இன்றைய பிரதமரே அவர்தான் என்று நம்பவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பலவித பிம்பங்கள் இதோ:
 
1. காங்கிரஸ் வெறுப்பும் எதிர்ப்பும்!
காங்கிரஸ் கட்சி வாங்கி வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான வெறுப்பு, நரேந்திர மோடிக்கு நன்மை. ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ், நிலக்கரி... என, பணம் விளையாடிய இடங்களில் எல்லாம் கைகள் விளையாடியதால்தான் காங்கிரஸ் மீதான கசப்பு அதிகமானது. விலைவாசி, சீரான விகிதத்தில் இல்லாமல் எகிறியது. பெட்ரோல், டீசல் விலையை நினைத்து நினைத்துக் கூட்டினார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால் உய்விக்க வந்திருப்பதாகச் சொன்ன மூன்று பொருளாதார மேதைகளால் (மன்மோகன், ப.சி., மான்டேக்சிங் அலுவாலியா) ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததுதான் மிச்சம்.
 
புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. இருந்த வேலைவாய்ப்பும் பறிபோனது. அந்நிய அச்சுறுத்தல் மிக மிக மோசம். காஷ்மீருக்குள் காலாற நடந்து வந்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். சீனா, நமது எல்லைகளையே தனது நாடு என்கிறது. தமிழக மீனவர்களைக் கொல்வதற்காகவே சிங்கள கடற்படைக்குச் சம்பளம் தரப்படுகிறது. இது எதையுமே கேட்காத காங்கிரஸ் மீதான எதிர்ப்பு, எதிரில் இருக்கும் இன்னொருவர் மீதான பாசமாகத்தானே மாறும்?
மோடிக்கு விழப்போகும் ஓட்டுக்களில் பாதி, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள். காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பதற்காக விழப்போகின்றவை!
 
2
. 'மிலிட்டரி ரூல் வேணும் சார்!’
'அரட்டை அரங்கம்’ ஆரம்பித்து 'நீயா..? நானா?’ வரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்த நாட்டைப் பற்றி கோபம் கொப்பளிக்கப் பேசும் இளைஞர்கள் கடைசியில், 'நம்ம நாட்டுக்கு எல்லாம் ஜனநாயகம் சரியா வராது... மிலிட்டரி ரூல் வேணும் சார். நம்ம நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆளணும் சார்!’ என்பார்கள். அதற்குச் சுற்றிலும் உள்ள இளைஞர்கள் கைதட்டுவார்கள். இன்று இருக்கக்கூடிய பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிந்த பெரிய அரசியல் இதுதான். எல்லா சர்வாதிகாரிகளும் உயிர் விளையாட்டுப் பிரியர்கள் என்ற வரலாறு தெரியாமல் சொல்லப்படுபவை இவை.
 
'பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது என்றால், இங்கு ஆட்சி நடத்துபவர்களிடம் வீரம் இல்லை; சிங்களக் கடற்படை கொல்கிறது என்றால், நம் மீது பயம் இல்லை’ என்றெல்லாம் மோடி பேசுவது இன்றைய மாணவர்களை, புதிய வாக்காளர்களை ஈர்க்கிறது. சுமார் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்ட 2002-ம் ஆண்டு குஜராத் நிகழ்வையேகூட, 'மதக் கலவரங்களை அடக்க எடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கை’ என்று இந்த இளைஞர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். 'சண்டை போடு, வெற்றிகொள்’ என்ற சினிமா மனோபாவத்தின் பிம்பமாக நரேந்திர மோடி இன்றைய இளைய தலைமுறை முன் நிறுத்தப்படுகிறார். அதனால்தான் அவர் பாட்னாவில் பேசுவதை 'லைவ்’ ஆக நெட்டில் மதுரையில் உட்கார்ந்து கல்லூரி மாணவர்கள் கவனிக்கிறார்கள்!
 
3. குஜராத் கனவு!
எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002-ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப்பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர். பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். ''மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை'' என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. ''குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதை வைத்து மட்டுமே அளவிட முடியாது. 1,000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாசலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது'' என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, 'குஜராத் முன்னேறிவிட்டதோ... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!’ என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!
 
4. தொழிலதிபர்களின் அதிபர்!
இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது. 'குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0% வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!
 
5. மோடித்துவா!
'நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும்வகையில் சொல்ல வேண்டுமானால், நான் இந்து என்பதால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத்தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்றுமைதான். ஆனால், 'இங்கு இருப்பது ஒரே ஒரு தேசியம்தான். அது இந்து தேசியம், அதுதான் இந்திய தேசியம்’ என்று சொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதியாக நரேந்திரமோடி தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடி எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறவர், தன்னைப் பச்சையாக 'இந்து தேசியவாதி’ என்று அழைத்துக்கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம்-ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப்பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்று காப்பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாயமாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999-ல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க-வை 2004-ல் வீட்டுக்கு அனுப்பியவர்கள் 'இந்துக்கள்’தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல. இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!
 
6. தான், தான் மட்டுமே!
அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்திவிட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.
 
சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம்தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 'ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக்கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான். அத்வானியிடம் இருந்து 'பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவருடைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். 'மோடி இல்லாவிட்டால் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.
மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பா.ஜ.க. கைப்பற்றியபோது சங்கர் சிங் வகேலாதான் முதல்வராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸுபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸுபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர்வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய், முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!
 
பா.ஜ.க. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்றுவார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!
 
7. சிறுபான்மையினர் சினம்!
இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப் பெரிய மதவெறிப் படுகொலை 2002-ல் குஜராத்தில்தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969-ல் 512 பேரையும், 1985-ல் 300 பேரையும், 1992-ல் 152 பேரையும் பலிவாங்கிய குஜராத், 2002-ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி!) புதைத்தது. கரசேவகர்கள் வந்த ரயில்பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீஸும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். 'எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்’ என்று கை கட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. 'ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.
'காரில் போய்க்கொண்டு இருக்கிறோம். ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002-ம் ஆண்டு நிகழ்வும்’ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தத் தெரியாதா? 'ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர் களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரசாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!
 
மேலும், என்கவுன்டர் என்ற பெயரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!
 
8. மர்மங்களின் மனிதர்!
'நான் ஒரு திறந்த புத்தகம்’ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல்போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.
 
அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும் படாமல் மறைத்துவைக்கப்பட்டார். அவரை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது, ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.
 
மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.
 
மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, 'அவருக்கு அடுத்து இவர்தான்’ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக்கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!
 
9. கொள்கை என்ன?
'காங்கிரஸிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க. எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரை விளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில்தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பா.ஜ.க. ஆட்சியும் பின்பற்றியது.
 
ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பா.ஜ.க-தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பா.ஜ.க. அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பா.ஜ.க. ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரஸும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் ஆயுக்தா பற்றி மோடி தெளிவுபடுத்தவில்லை. 'பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப்போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.
 
மேடையில் ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!
 
10. யார் பிரதமர்?
இதில் என்ன சந்தேகம்? பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர். தனிப்பெரும்பான்மையை பா.ஜ.க. அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? 'நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கும்? ஆர்.எஸ்.எஸ். என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர்பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி, காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள்.
 
இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல்போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது!

Thursday, April 3, 2014

மார்லன் பிராண்டோ
 
 
 
உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை அத்தனை அற்புதமானது. ஒரு நடிகன் என்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் என்பதைப்போன்ற மனோபாவமே பெரும்பாலும் கொண்டிருக்கும் நமக்கு அவரின் வாழ்க்கை ஆச்சரியங்களை அள்ளி வழங்குகிறது.  பத்தே   துளிகளில் அந்த பெருங்கடல் உங்களுக்காக :
 
துன்பங்கள் செதுக்கும் உன்னை !:
அம்மா நடிகை, அப்பா பல ஊர்களுக்கு சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் ரெப். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு அம்மா குடியிலேயே மூழ்கிப்போக அன்பு என்பது என்ன என்றே தெரியாமல் தான் வளர்ந்தார் மார்லான் பிராண்டோ. இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. அப்பா மிலிட்டரி ஸ்கூலில் இருந்து டிராப்பான இவரைப்பார்த்து ,"நீயெல்லாம் உருப்படவே மாட்டே !" என்று அடித்துச் சொன்னார்/ மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் கதியாக கிடந்து மீண்டு வந்தார் பிராண்டோ.
 
மீள்வதே வாழ்க்கை :
சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பிராண்டோ ஒரு காலத்துக்கு பிறகு ஹாலிவுட்டில் காணாமல் போனார்.  எங்கே அவர் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஒரு தீவில் போதும் சினிமா என்று ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ! கப்போலா காட்ஃபாதர் கதையோடு அவரைத்தேடி வந்தார். சுருக்கம் விழுந்து, கண்கள் ஒளி இழந்து அமர்ந்திருந்த இவர் இதற்கு சரிப்படுவாரா என்று அவருக்கு சந்தேகமே வந்து விட்டது.
கதையை அமைதியாக கேட்டுவிட்டு கதவை பிரிந்து போய் சாற்றிக்கொண்டார் பிராண்டோ. கதவுகள் திறந்த பொழுது முழு ஒப்பனையோடு ஒப்புமை இல்லாத இத்தாலி நாட்டை சேர்ந்த காட்ஃபாதர் நின்று கொண்டு இருந்தார். ஆஸ்கரில் வந்து நின்றது அந்த கம்பீரம் !

நடிகன் ஒன்றும் தேவனில்லை :
புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன.   ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,"கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !" என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்
 
 
உலகம் வலிகளால் நிரம்பியது :
உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். "இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !" என்று கச்சிதமாக அவர் குறித்தார்.
 
விருதெல்லாம் வீண் ! :
மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.
 
கண்ணீர் விடலாம் கலைஞன் :
லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர். மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

வாசிப்பை நேசிப்பாய் நண்பா ! :


செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் அவர். கறுப்பின மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தார் அவர். தென் அமெரிக்காவில் எழுந்த போராட்டங்கள் பற்றியும் தீவிர வாசிப்பு மற்றும் பயணத்தால் தெரிந்து கொண்டு எளியவர்களுக்கு குரல் கொடுத்தார் அவர்.

சொந்த நாட்டை விமர்சிப்பதே தேசபக்தி :


காட்ஃபாதர்  படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில்  நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே "அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !" என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.
 
பணம் வாங்கத்தான் நடிக்கிறேன் நான் :
"நான் ஹாலிவுடில்  இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !" என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.
 
 
 
தேவை ஒரு நாயகன் :
"மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்" என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !