Thursday, May 8, 2014

இரண்டரை ஆண்டுகள்...இன்னமும் சூடு குறையாத கூடங்குளம் போராட்டம்!
 
 
அகிம்சை வழியில் நடக்கும் மக்களின் எதிர்ப்பு, ஆயிரம் நாட்களை கடந்தாலும் வீரியம் குறையாமல் இருக்கும் என்பதற்கு இடிந்தகரையில் நடந்து வரும் அணு உலைக்கு எதிரான போராட்டமே சாட்சி. இதனை வழிநடத்தி வந்தவர்கள் அரசியல் பாதைக்கு திரும்பிய பின்னர், உள்ளூர் பெண்கள் இயக்கத்தினர் தொய்வின்றி போராட்டத்தை தொடர்வதுதான் மேலும் ஆச்சர்யம்.
 
 
கூடங்குளத்தில் ரூ.15,500 கோடி மதிப்பீட்டில் ரஷ்ய தொழில் நுட்பத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டாவது அணு உலை அடுத்த சில மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சத்தில் மக்கள்!

இந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, முதல் அணு உலையானது மின் உற்பத்தியை தொடங்க இருந்த சமயத்தில், ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அந்த பீதி குறித்த எண்ணம் ஓய்வதற்கு முன்பாக கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
 
 
அதில், ‘அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்படும்பட்சத்தில் சைரன் ஒலி எழுப்பப்படும். உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும். வாகன வசதி இருக்குமானால் குடும்பத்தினருடன் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி விட வேண்டும்’ என்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இது பொதுமக்களை கடும் பீதி அடைய வைத்தது. திடீரென குழந்தைகள், ஆடு, மாடுகளுடன் வீட்டை விட்டு வெளியேறுவது இயலாத காரியம் என்பதால் அணு உலையை, தங்களின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இந்த அதிருப்தி மக்களை போராட்ட பாதைக்கு திரும்ப வைத்தது. இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு சமுதாய அமைப்பினர் இதில் கலந்துகொண்ட போதிலும் மக்கள் தங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் மீது வைத்ததால் அவர்களை கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
 
 
போராட்டக் களமாக மாறிய இடிந்தகரை!

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டுமென்பதில் அரசு அதீத ஆர்வம் காட்டிய போதிலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்ததே தவிர, முடிவுக்கு கொண்டு வர முடியவே இல்லை. அதே சமயம் வழக்கமான போராட்டங்களில் நடப்பது போன்ற வன்முறை எதுவும், இதில் துளியும் தலைகாட்டாததால் காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்ற போதிலும் நாளடைவில் ஆதரவை மட்டும் அளித்து விட்டு அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். அதன் பின்னர் இடிந்தகரை கிராமமே போராட்டக்காரர்களின் தலைமையகமாக மாறியது. அங்குள்ள லூர்து மாதா ஆலயத்தின் முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்றது.

சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன், மைபா.ஜேசுராஜன் என போராட்டக் குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி இருந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராட்டத்தை தொய்வு இல்லாமல் நடத்தினார்கள். அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டன. இடிந்தகரை கிராமத்தினர் உள்பட போராட்டத்தில் தீவிரம் காட்டியவர்கள் மீது 300க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டதால் இடிந்தகரை விட்டு வெளியே வர முடியாத நிலைமை உருவானது.
 
 
ஆபத் பாந்தவனாக ஆம் ஆத்மி!

போராட்டத்தில் பங்கேற்றதற்காக இடிந்தகரை, கூத்தங்குளி, கூடங்குளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டன. இதனால் அவர்களில் யாராவது வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாட்டு வாய்ப்பை இழக்க நேர்ந்தது.

அதேவேளையில், போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவானது. இதனால் அவர்களால் இடிந்தகரை கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. புஷ்பராயனின் தந்தை தூத்துக்குடியில் மறைந்த போதுகூட அவரால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. அவர் வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் வீட்டை சுற்றிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் ‘கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்’ என்று தெரிவித்தபோதிலும் நாள்தோறும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தது.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும் கால் பதிக்க விரும்பிய ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டக் குழுவினரை களம் இறக்க விரும்பினர். இதற்காக பிரசாந்த் பூஷண் இடிந்தகரை கிராமத்துக்கு நேரில் வந்து போராட்டக்குழுவினரை ச்ந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக குமரி தொகுதியில் சுப.உதயகுமாரனும்,. தூத்துக்குடியில் புஷ்பராயனும், நெல்லை தொகுதியில் மைபா.ஜேசுராஜனும் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

பெண்கள் கைக்கு சென்ற போராட்டம்!

அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கலப்பு துளியும் இருக்கக்கூடாது என்பதில் இடிந்தகரை கிராமத்தினர் திட்டவட்டமாக இருந்தனர். அதனால் போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதால் போராட்ட மேடையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வலிமையான இந்த குழுவினர் வெளியேறியதும் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என பலரும் நினைத்த நேரத்தில், இடிந்தகரை பெண்கள் குழுவினர் போராட்டத்தை கையில் எடுத்தனர்.

 
ஏற்கெனவே போராட்டத்துக்கு பக்க பலமாக இருந்த மகளிர் குழுவினர் இப்போது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய சுந்தரி, ‘‘அணு உலையை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எங்கள் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. அதனால் போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அரசியல் பாதையை தேர்வு செய்தனர்.

ஆனாலும் இடிந்தகரை போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெண்கள் குழுவை சேர்ந்தவர்கள் முடிவு செய்து போராட்டத்தை தொடர்கிறோம். முன்பு இருந்த அதே வேகத்துடன் இப்போதும் போராட்டம் தொடர்கிறது. எங்களின் போராட்டத்தால் தற்போது பொதுமக்களிடம் அணு உலைக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. இதுவே எங்கள் போராட்டத்துக்கு கிடைதிருக்கும் வெற்றி’’ என்றார்.

அடுத்த திட்டத்துக்கான ஒப்பந்தம்

போராட்டக் குழுவை சேர்ந்த மேரி பீட்டர், செல்லம்மாள், செல்வி ஆகியோர் நம்மிடம் பேசுகையில், ‘‘மக்களின் அச்சத்தை தீர்க்காமல் அணு உலையை செயல்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் எங்களின் அச்சத்தை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

பேரிடர் ஏற்பட்டால் எப்படி தப்புவது என்பது பற்றிய ஒத்திகை நடத்த நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணு உலையை மூட வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கை வலுத்துவரும் சூழலில், புதிதாக இரு அணு உலைகளை தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்வதில் மத்திய அரசு அக்கறை செலுத்துவதன் மர்மம் புரியவில்லை.

தேர்தல் நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று இந்த ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இதுபற்றி முடிவு செய்யட்டுமே. ஒரு வேளை தங்களால் ஆட்சிக்கு வர முடியாது என்கிற எண்ணத்தில் கடைசி நேரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறதா? போராடும் சாமான்ய மக்களை பொருட்டாக மதிக்காமல் செயல்படும் அரசாங்கத்தை நினைத்து வருத்தப்படுவதை தவிர எங்களால் என்ன செய்ய முடியும்?’’ என்று வேதனைப்பட்டார்கள்.

 
ஆயிரம் நாளாக நடக்கும் இந்த போராட்டம் குறித்து இடிந்தகரையில் தங்கி இருக்கும் முகிலனிடம் கேட்டதற்கு, ‘‘மக்களின் போராட்டம் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. ஏழைகளின் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இப்போது வேண்டுமானால் கேட்காமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவை பார்த்து அரசாங்கம் அச்சப்படுகிறது.

இந்த போராட்டத்தை பொறுத்தவரை, மக்களே நடத்தும் போராட்டம். அதனால் தலைமை மாறினாலும் மக்கள் உணர்வுப்பூர்வமாக இதில் பங்கேற்கிறார்கள். போராட்டத்தை சீர்குலைக்க எத்தனையோ இடையூறுகளை போலீசார் திட்டமிட்டு தூண்டினாலும் மக்கள் அதனை கண்டு அஞ்சாமல் ஆயிரம் நாட்களாக போராடி வருகிறார்கள். அணு கழிவு மேலான்மை பற்றி வாய் திறக்க மறுக்கும் மத்திய அரசு, அடுத்தடுத்த அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இந்த பகுதி மக்களின் கோபத்தை அதிகரித்து இருக்கிறது. மக்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க மறுக்கும் அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்றார் காட்டமாக.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அணு உலை விவகாரம் அதே சூட்டோடு இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

No comments:

Post a Comment