Friday, April 20, 2018

தேம்பி அழுகிறது தேசம்!

ஓவியங்கள்: ஹாசிப்கான், ரவி
நன்றி: ஆனந்த விகடன் 
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க, ‘செல்வமகள் சேமிப்புத்திட்டம்’   தொடங்கிய நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவின் இரு மாநிலங்களில், இரு சிறுமிகள் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு சம்பவத்திலும் ஏதோ ஒருவகையில் பா.ஜ.க-வினர் சம்பந்தப்பட்டிருப்பது, தேசமெங்கும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் எழுப்பியிருக்கிறது. 

 எட்டு வயது காஷ்மீர் சிறுமியின் மரணம், ஒவ்வொருவர் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. ஆனால், குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன மனசாட்சியற்றவர்களோ, இப்போது  அந்தச் சிறுமியின் பெற்றோர் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் தீபிகா எஸ்.ராஜாவாட்டையும் வன்புணர்வு செய்துவிடுவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார்கள்.  

 ஜனவரி 10-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு , எப்போதும்போல மேய்ச்சல் நிலங்களுக்கு அந்தச் சிறுமியோடு சென்ற குதிரைகள் மாலை நான்கு மணி வாக்கில் வீடு திரும்பின. ஆனால், அழைத்துச் சென்ற சிறுமி மட்டும் வீடு திரும்பவேயில்லை. அது அவளுக்கு நன்கு பரிச்சயமான காடுதான். ஆனாலும் அவள் தொலைந்துபோனாள்.

பொழுது கழிந்த பின்னும், குழந்தையைக் காணவில்லையே என்ற பதற்றத்தில் காட்டில் சல்லடை போட்டுத் தேடியும் அவளது பெற்றோரால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘யாரேனும் குழந்தையைக் கடத்தியிருக்கக்கூடும்’ என்று கருதியவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறை அதிகாரி முன்ஷி, புகாரைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, 12-ம் தேதிதான் புகார் பதிவுசெய்யப்பட்டது.

அதற்குப்பிறகும், காவல்துறை மெத்தனமாகத்தான் தேடியிருக்கிறது. ஜக்தீஷ்ராஜ்  என்ற பழங்குடி இளைஞர் தன் குதிரையைத் தேடிக் காட்டுக்குள் சென்று வந்தபிறகு கொடுத்த தகவலின்பேரில்தான் 17ம் தேதி வாக்கில் கடுமையான காயங்களோடு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் அந்தச் சிறுமி. கத்வா மாவட்ட மருத்துவமனையில்  பிரேதப் பரிசோதனை முடித்து, குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சௌதா என்ற இறுதி நிகழ்வின்போது, சிறுமியின் மரணத்துக்காக நீதி கேட்டுக் குரலெழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தவும் தயங்கவில்லை காவல்துறை.

கிராமத்துப் பெண் ஒருவர், ‘சாஞ்சிராம்  பட்வாரி என்பவரின் வீட்டிலிருந்து சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டபடியே இருந்தது’ என்ற தகவலை அந்தச் சிறுமியின் தாயாரிடம் கூற, விசாரணை வேறு திசையில் திரும்பியது.காவல்துறையின் மோப்ப நாய், சாஞ்சிராம் பட்வாரி என்பவரின் மாட்டுக்கொட்டிலுக்கே சென்றது.

சாஞ்சிராம் பட்வாரி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மற்றும் தேவிஸ்தான் கோயிலின் நிர்வாகி. காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜூரியா, சுரீந்தர்குமார் உள்ளிட்ட எட்டுப் பேர் இந்தக் குற்றத்தை இழைத்ததாகக் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமை நடந்தது தேவிஸ்தான் கோயிலில். ஐந்து நாள்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, காட்டில் தூக்கிவீசப்பட்டிருக்கிறாள்.

இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதுதான் மனித அறம். ஆனால், மத அடையாளத்தை முன்னிறுத்தி,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற இந்துத்துவ அமைப்பு பேரணி நடத்தியது. பேரணியில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  பா.ஜ.க-வைச் சேர்ந்த காஷ்மீர் வனத்துறை அமைச்சர் சௌத்ரி லால் சிங், தொழில்துறை அமைச்சர் சி.பி.கங்கா உள்ளிட்டவர்கள். 

ஆணாதிக்கத் திமிர், அதிகார போதை, மதவாத அரசியல் என்று பல விஷயங்கள் இந்த அநீதி ஆதரவின் பின்னே உள்ளது. அத்துடன் பழங்குடி மக்களுக்கு எதிரான மனநிலையும் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான சாஞ்சி ராம், பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்கள் இனி ஊருக்குள் வராதபடி செய்ய விரும்பினார் என்று முதல் தகவல் அறிக்கையிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இறந்துபோன அந்தச் சிறுமி பகர்வால் என்னும் இஸ்லாமிய நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெருவாரியாக உள்ள குஜ்ஜார் என்ற சமூகத்திலிருந்து கிளைத்தவர்கள். பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், மேய்ச்சல் நிலத்தைத் தேடியும் இடம்பெயர்ந்து மலைப்பகுதிக்கு வந்த இந்தச் சமூகத்தினர், இடம்பெயர்வதை இயல்பாகக் கொண்டுள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாகவே இந்தியா முழுவதிலும் பழங்குடியினர் காடுகளிலிருந்து அகற்றப்படும் சூழலில், காஷ்மீர்க் காடுகளிலிருந்து பகர்வால் இனத்தவரை வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இந்தியா முழுக்கப் பழங்குடிகளுக்கென இருக்கும் ‘வனவுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2006’ சிறப்பு அந்தஸ்து காரணமாகக் காஷ்மீரில் செல்லுபடியாகாது. காஷ்மீரத்துப் பழங்குடிகள் இந்தச் சட்டத்தை ஜம்முவுக்கும் நீட்டிக்க வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவருகிறார்கள். ‘அப்படி நீட்டிக்க வேண்டுமானால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று பா.ஜ.க கூறுகிறது.  

எப்படி இருந்தபோதும் குரலற்றவர்களாக, கோரிக்கைகள் கவனிக்கப்படாதவர்களாக, புறக்கணிப்பின் வெம்மையில் தள்ளப்பட்டவர்களாக இந்த எளிய மக்கள் இருக்கிறார்கள். சிறுமியின் இறுதி அடக்கம் நடந்த கிராமத்துக்கு, குடிநீர் வினியோகம் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டது. கால்நடைகள் தண்ணீரின்றி வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதிகார வர்க்கம் முடிந்தவரை தன் பலத்தைப் பிரயோகித்துப் பார்த்தபின்னும், நீதியின் வெளிச்சம் கசிந்துதான், இப்போது இந்தச் சம்பவம் தேசம் முழுவதும் விவாதமாய் மாறியிருக்கிறது. 

இன்று அந்தச் சிறுமி இயற்கையோடு கலந்து புல்லாகவும் பனியாகவும் மாறிவிட்டாலும்  நீதிக்கான  குரல் எழுப்ப வேண்டியது, இந்தியாவில் வாழும் எல்லாச் சிறுமிகளுக்காகவும்தான்.

இது காஷ்மீர் அவலம் என்றால் உத்தரப்பிரதேசத்துத் துயரமும் நெஞ்சம் கனக்கச் செய்வது. 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு சிறுமி, உதவி கேட்டு  பா.ஜ.க எம்.எல்.ஏவான குல்தீப் சிங்கிடம் சென்றிருக்கிறார். உதவி கேட்டு வந்த சிறுமியை எம்.எல்.ஏ மற்றும் சகோதரர் உட்பட சிலர் கூட்டாகச் சேர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள். தான் வன்புணர்வு செய்யப்பட்டோம் என்று அந்தச் சிறுமியும் அவர் குடும்பமும் குறுகிப்போய் மூலையில் உட்கார்ந்துவிடவில்லை. செய்தவர்கள் செல்வாக்குள்ளவர்கள் என்றாலும் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையில் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.  புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி அந்தச் சிறுமியின் தந்தையை எம்.எல்.ஏ-வின் அடியாட்கள் தாக்கியிருக்கிறார்கள்.

இதையும் புகாராகக் காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார்கள். பல நாள்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தக் குடும்பம் சளைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு முன் சென்று நீதி கேட்டுப் போராடுகிறார். ஒருகட்டத்தில் சலிப்படைந்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். உடனே காவல்துறையினரால் அந்தச் சிறுமி அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்.

அதன்பிறகு நடந்ததுதான் அநீதியின் உச்சம்.  அச்சிறுமியின் தந்தை மீது, பழைய வழக்கு ஒன்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து,  போலீஸ் காவலில் அழைத்துச் செல்கிறார்கள்  காவல்துறையினர். போலீஸ் காவலில் இருந்த அந்தச் சிறுமியின் தந்தை இறந்துபோனதால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தான் பாதிக்கப்பட்டு,  தந்தையையும் இழந்த அந்தச் சிறுமி செய்த தவறு உதவி கேட்டு எம்.எல்.ஏ - விடம் சென்றது மட்டுமே. 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமீபத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நீதித்துறை மீதும் கடவுள் மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காதலர் தினத்தை எதிர்ப்பது, ‘கலாசாரத்தைக் காப்போம்’ என்று முழங்கி கேளிக்கை விடுதிகளில் நுழைந்து பெண்களை அடித்து உதைப்பது, திரைப்படங்களுக்கு மிரட்டல் விடுப்பது என்று கலாசாரக் காவலர்களாய்த் தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த  எம்.எல்.ஏ ஒருவரே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களே ஊர்வலம் போவதும், ‘இதுதானா நீங்கள் காப்பாற்ற விரும்பும் கலாசாரம்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

2010-ல் பா.ஜ.க எம்.எல்.ஏ த்விவேதியால் தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக ஒரு பெண் குற்றம் சாட்டி, யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதம் உ.பி. மீடியாக்களில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்டது, பிரச்னையின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. 

 காஷ்மீரிலும் உத்தரப்பிரதேசத்திலும் மட்டும் அநீதியின் கரங்கள் தீண்டி நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

சாதி, மதம், அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, இந்தச் சிறுமிகள் செய்த தவறு இந்தியாவில் பிறந்ததும், பெண் குழந்தையாக இருப்பதும்தானா?


ந்தியாவில் உள்ள 30% சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அதாவது, தற்போது பதவியிலிருக்கும் 1581 பேர்மீது  கிரிமினல்  வழக்குகள் இருக்கின்றன. அதில், 3 எம்.பி, 48 எம்.எல்.ஏ என 51 பேர் பெண்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதில் 4 பேர் மீது வன்புணர்ச்சி வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க 34 வழக்குகளோடு முன்னணியில் இருக்க, சிவசேனை 7 பேருடன் இரண்டாவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 6 இடங்களோடு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி...

 2016 - 1,06,958 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 222 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றவை.

  2016 - 1775 குழந்தைகள் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள்.

காஷ்மீரில் பதிவான குழந்தைகள் கொலை மட்டும் - 6.

கடத்தப்பட்ட குழந்தைகள்: 

இந்தியா முழுவதும் - 54,723.  

ஜம்மு -காஷ்மீர் - 168.

Tuesday, April 17, 2018

நியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா?

இரா.கலைச்செல்வன், படம்: வீ.சக்தி அருணகிரி

காலை நேரம். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்தச்  சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த உலகில் இருக்கும் எதுவும் எல்லாமும் அணுக்களால் ஆனவை. முதலில் ‘அணு’தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. பின்னர், அணுவினுள் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.  உல்ஃப்கேங்க் பாலி என்ற விஞ்ஞானி அணுவில் துகள்கள் மட்டுமல்ல, நியூட்ரினோ என்ற அணு உள்துகள்களும் (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்.  பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோதான் என்பதால் ஒளியின் வேகத்தில், சமயத்தில் ஒளியைவிடவும் வேகமாக ஊடுருவிச் செல்லும். நியூட்ரினோவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

இந்தியாவிலும் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்கச் சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அனுமதி மறுக்கப்பட்டது.  இறுதியாகத் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான சார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) உள்ள தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான  ஐ.என்.ஓ (India-based Neutrino Observatory) அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. 

என்னதான் திட்டம்?

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்குக் குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும்.  மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடைகொண்ட,  உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன ‘அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி (Nutrino Detector) அமைக்கப்படும். நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.  இதுதான் திட்டத்தின் அடிப்படை. 

ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ‘சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு.  இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவு களை இங்கு கொண்டு வந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், அது எழுத்தர் செய்த பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது ஐ.என்.ஓ. இருந்தும் பிரச்னை தீரவில்லை.

“நாங்கள் தேச நலனுக்கோ, அறிவியல் வளர்ச்சிக்கோ எதிராகக் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்வி களாக எழுப்புகிறோம்” என்று தொடர்ந்து பேசத் தொடங்கினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

“நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம்தான் எங்களுக்குப் பல கேள்விகளையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு ‘உயர் ஆற்றல் இயற்பியல்’ (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பொருட்டு, 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கை யாகக்கூடத் தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது?

ஐ.என்.ஓ-வின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள்  (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம்  ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த ‘மியூவான் கொலைடர்ஸ்’ (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக்கொண்டது. ஓர் ஆராய்ச்சிக்கான மூலப்பொருள் கதிரியக்கத் தன்மைகொண்டதாக இருக்கும்போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும்மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்தத் தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?

அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உள்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழியாகச் சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இதுபோன்ற ஒரு சுரங்கத்தைக் கட்டும்போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது” என்று எச்சரிக்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

“இது நம் தேசத்திற்கே பெருமையைத் தேடித் தரும் திட்டம். இது தமிழ்நாட்டில் வருவதற்குத் தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் நவீன  தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்கவிருக்கிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது. 

நாங்கள் எதையும் இங்கு மாசுபடுத்தப் போவதுமில்லை. வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். 90% தமிழக அரசுக்குத்தான். அதை அவர்கள் விற்று, வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பதுபோலெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மைதான். ஓர் அறிவியல் ஆராய்ச்சி என்றால், பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத்தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா? 

அணு ஆயுதங்களை நியூட்ரினோக்கள்மூலம் கண்டறிந்து அதை வெடிக்கவும் செயலிழக்கவும் வைக்க முடியும். இது ஆபத்தானது என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு தியரி அளவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியதுதான்...” என்றார் கோபத்துடன். 

அறிவியலின் பயணம் மேல்நோக்கி முன்னேறலாம். ஆனால் அது அறத்துக்கு எதிர்த்தி சையில் அமைந்துவிடக்கூடாது. நியூட்ரினோ திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என்ற கேள்விகள்தான் சந்தேகங்களையும் போராட்டங்களையும் இன்னும் வலுவாக்குகிறது.

Tuesday, April 10, 2018

நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார்
நன்றி: ஆனந்த விகடன் 

நிருபர்: சார் வணக்கம். ‘மத்திய அரசு தமிழகத்துக்குப் போதுமான நிதி வழங்கலை’னு கோபப்பட்டுச் சொல்லி யிருந்தீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: கோபப் பட்டா? சத்தமா சொல்லி டாதீங்க சார். சொன்னேன்னு சொல்லுங்க, அவ்ளோதான்!

நிருபர்: அப்போ உங்களுக்குக் கோபம் வராதா சார்?

ஓ.பன்னீர்செல்வம்: யார்கிட்ட என்ன கேள்வி கேட்டீங்க, கோபமாவது, எனக்காவது?

நிருபர்: அப்போ சசிகலாவை எதிர்த்துக் கோபப் பட்டீங்களே?
ஓ.பன்னீர்செல்வம்: அது தர்மயுத்தம். ‘தர்மயுத்தம்னா கோபப்படணும்’னு சொன்னாங்க.

நிருபர்: யார் சார் சொன்னது?
ஓ.பன்னீர்செல்வம் : அது...அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!

நிருபர்: என் கேள்விக்கு இது பதில் கிடையாதே?

ஓ.பன்னீர்செல்வம் : பதில் சொல்ல முடியாத கேள்வி களுக்கு எல்லாம் இனிமே இதுதான் பதில்.

நிருபர்: மோடி சொல்லிதான் கட்சியை இணைச்சீங்களாமே?

ஓ.பன்னீர்செல்வம்: யார் சொன்னது?

நிருபர்: நீங்கதான் சார் சொன்னீங்க.

ஓ.பன்னீர்செல்வம்: ஓ, நானேதான் சொன்னேனா! அப்போ சரியாதான் இருக்கும்.

நிருபர்: அப்போ உங்க தர்மயுத்தத்தை வழிநடத்தினது மோடிதானே?

ஓ.பன்னீர்செல்வம்: இருக்கலாம். யுத்தம்னா யாராவது வழிநடத்திதான் ஆகணும். மகாபாரத யுத்தத்தைக் கிருஷ்ணன்தான் வழிநடத்தினார்.

நிருபர்: உங்க கட்சிப் பிரச்னையை இன்னொரு கட்சிக்காரர் தீர்க்கிறது தப்பில்லையா?

ஓ.பன்னீர்செல்வம் : யுத்தத்தில சரி, தப்புன்னு எதுவும் கிடையாது.
நிருபர்: தப்பு, சரி எதுவும் இல்லாத யுத்தத்துக்கு தர்ம யுத்தம்னு ஏன் பேர் வெச்சீங்க?

ஓ.பன்னீர்செல்வம்: அது... அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!
நிருபர்: ரைட்டு! ஆமா, இந்த தர்மயுத்தம் காவிரிப் பிரச்னைக்காக எல்லாம் பண்ண மாட்டீங்களா?

ஓ.பன்னீர்செல்வம்: அதான் உண்ணாவிரதம் இருக்கப் போறோமே?

நிருபர்: அது எதிர்க் கட்சிக்காரங்க, எம்.எல்.ஏவே இல்லாத கட்சிக் காரங்ககூட இருப்பாங்க. உங்க எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ராஜினாமா பண்ணலாமே?

ஓ.பன்னீர்செல்வம்: எங்களுக்கு ராஜினாமால்லாம் பண்ணத் தெரியாது. யாராவது பதவியைப் பிடுங்கினாத்தான் உண்டு. அப்படித்தானே சசிகலா குடும்பம் என் பதவியைப் பிடுங்கிச்சு?

நிருபர்: முதல்வர் பதவியைக் கொடுத்ததும் சசிகலாதானே?

ஓ.பன்னீர்செல்வம்: அதுக்கு முன்னால அம்மா ரெண்டுதடவை என்னை முதல்வர் ஆக்கினாங்களே, ஆனா நான்தான் முதல்வர்னு அப்போ நானே சொல்ல மாட்டேன்!

நிருபர்: அதான் ஊருக்கே தெரியுமே, அப்போகூட ஜெயலலிதாவைத்தானே ‘மக்களின் முதல்வர்’னு சொன்னாங்க. அவங்க மக்களுக்கு முதல்வர்னா நீங்க யாருக்கு முதல்வர்?

ஓ.பன்னீர்செல்வம்: அவங்க மக்களோட முதல்வர், நான் அரசாங்கத்துக்கு முதல்வர்!

நிருபர்: அப்போ மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

ஓ.பன்னீர்செல்வம்: எங்க ஆட்சியைப் பார்த்துமா இப்படி ஒரு கேள்வி?

நிருபர்: ஆமா, நீங்க பொசுக்கு பொசுக்குன்னு ஜெயலலிதா காலில் விழுந்தீங்களே? ஏன், சசிகலா காலில்கூட விழுந்தீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: காலில் மட்டுமா விழுந்தேன்? கார் டயர்ல விழுந்தேன், ஹெலி காப்டரைப் பார்த்துக் கும்பிடு போட்டேன். கட்சிப் பணி களைக் குறைச்சு மதிப்பிடாதீங்க சார்!

நிருபர்: இதெல்லாம் பெருமையா, கடமை, கடமை. ஆமா இப்படிக் காலில் விழுறதை நினைச்சு நீங்க வெட்கப்பட்டதில்லையா?
ஓ.பன்னீர்செல்வம்: வெட்கமா, அதெல்லாம் வேற டிபார்ட்மென்ட். ‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’னு எம்.ஜி.ஆரே பாடியிருக்கார்!

நிருபர்: அடுத்த வரியில ‘துணிவு வரவேண்டும்’னும் பாடியிருக்காரே?
ஓ.பன்னீர்செல்வம் : அதுவேற பாடியிருக்காரா? முதல் வரியில சொன்னதை எடுத்துக்கிட்டாதான் வாழ்க்கையில முன்னேற முடியும்.

நிருபர்: அதுசரி, ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனப்போ அழுதுகிட்டே பதவியேற்றீங்க. அவங்க இறந்தபிறகு பதவி யேற்றப்போ சிரிச்சுக் கிட்டே பதவியேற்றீங்களே?

ஓ.பன்னீர்செல்வம்: ‘உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன்’னு எம்.ஜி.ஆரே பாடியிருக்கார் சார். 

நிருபர்: அது சிவாஜி பாட்டாச்சே?

ஓ.பன்னீர்செல்வம்: அதுவேறயா? ஸாரி டங் ஸ்லிப் ஆயிடுச்சு. ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்’னு எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறாரே?

நிருபர்: அதுவும் சிவாஜி பாட்டுதான் சார்.

ஓ.பன்னீர்செல்வம்: அது...அதுவந்து... நடப்பது அம்மா ஆட்சி!

நிருபர்: நான் கரெக்டான எம்.ஜி.ஆர் பாட்டு சொல்லவா சார்? ‘ சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!’

(கோபம் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் ஆழ்கிறார்)

Wednesday, February 7, 2018


கிம்பர்லி ஒரு அருவி 
இதை 100-வது முறையாகப் பொதுவெளியில் சொல்கிறார். அந்த வீல்சேரில் மிகுந்த சோர்வுடன் உட்கார்ந்திருந்த அவரை மெதுவாகத் தள்ளிவருகின்றனர். கொஞ்சம் வேகமாக அசைந்தாலும் அவருக்குப் பெரும் வலி ஏற்படும். 
"













நான் இதுவரை யாருடனும் உடலுறவு வைத்தது கிடையாது
; சத்தியம். நம்புங்கள். எந்தவொரு போதை மருந்தையும் நான் எடுத்ததில்லை. நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இருந்தும் நான் தாங்கமுடியாத வலியைச் சுமக்கிறேன். 
என் வாழ்க்கை என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எனக்குக் கல்யாணம்செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு வாழ வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. ஆனால், என் வாழ்வு பெரும் நரகமாகிவிட்டது..." என்று மெதுவாக நிறுத்தி, நிதானமாகப் பேசினார். இடையே பல தடவை இருமல் வந்தது. மொத்தக் கூட்டமும் அமைதியாக அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இனம்புரியா அமைதி, அவரின் வலியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். 
என் வாழ்க்கை சீரழிந்ததற்கு டாக்டர்.ஆக்கர் (Dr. Acer) தான் முக்கியக் காரணம். அவர் மட்டுமல்ல இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் கூடத்தான். அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது தெரிந்தும், அதை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்த ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான். என் வாழ்க்கையையும் என் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லோரும் சேர்ந்து சீரழித்துவிட்டீர்கள்.
நான் பெரும் வலியில் இருக்கிறேன். நான் இறந்தும் போய்விடுவேன். ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப்படாவிட்டால், நான் பட்ட அத்தனை கஷ்டங்களும், இழப்புகளும் வீணாகிவிடும். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் செத்துவிடுவேன். எதையெல்லாமோ சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விடைபெறுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல எனக்கு நேரமில்லை." அவர் வெடித்துச் சிதறினார். ஆனால், அந்த வெடிப்பு அவர் குரலை உயர்த்தவில்லை. குரலை உயர்த்தி, வெடித்துக் கத்த அவர் உடலில் தெம்பு இல்லை. அழவும் அவருக்கு அவ்வளவு பிடிக்காது. 
இவரையும், இவர் கதையையும் தெரிந்துகொள்வதற்கு முன்னர் ஒரு நிமிடம்... உங்களுக்கு நெருக்கமான ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரியவந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று தெரிந்த பின்னர், அவர் உங்கள் வீட்டுக்கு வருகிறார். சில மணி நேரம் உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்கள் அவருக்கு நெருக்கமானவர் என்றால், உங்கள் மடியில் சற்று நேரம் சாய்ந்து படுக்க நினைக்கிறார். இந்தச் சூழல்களை எல்லாம் நீங்கள் உண்மையில்... உண்மையில் எப்படிக் கையாள்வீர்கள் என்று ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிந்தனை கிம்பர்லியின் கதையை, வாழ்வை, வலியை உணரவைக்க உதவும்
என் வாழ்க்கை சீரழிந்ததற்கு டாக்டர்.ஆக்கர் (Dr. Acer) தான் முக்கியக் காரணம். அவர் மட்டுமல்ல இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் கூடத்தான். அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது தெரிந்தும், அதை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்த ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான். என் வாழ்க்கையையும் என் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லோரும் சேர்ந்து சீரழித்துவிட்டீர்கள்.
நான் பெரும் வலியில் இருக்கிறேன். நான் இறந்தும் போய்விடுவேன். ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப்படாவிட்டால், நான் பட்ட அத்தனை கஷ்டங்களும், இழப்புகளும் வீணாகிவிடும். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் செத்துவிடுவேன். எதையெல்லாமோ சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விடைபெறுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல எனக்கு நேரமில்லை." அவர் வெடித்துச் சிதறினார். ஆனால், அந்த வெடிப்பு அவர் குரலை உயர்த்தவில்லை. குரலை உயர்த்தி, வெடித்துக் கத்த அவர் உடலில் தெம்பு இல்லை. அழவும் அவருக்கு அவ்வளவு பிடிக்காது. 
இவரையும், இவர் கதையையும் தெரிந்துகொள்வதற்கு முன்னர் ஒரு நிமிடம்... உங்களுக்கு நெருக்கமான ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரியவந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று தெரிந்த பின்னர், அவர் உங்கள் வீட்டுக்கு வருகிறார். சில மணி நேரம் உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்கள் அவருக்கு நெருக்கமானவர் என்றால், உங்கள் மடியில் சற்று நேரம் சாய்ந்து படுக்க நினைக்கிறார். இந்தச் சூழல்களை எல்லாம் நீங்கள் உண்மையில்... உண்மையில் எப்படிக் கையாள்வீர்கள் என்று ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிந்தனை கிம்பர்லியின் கதையை, வாழ்வை, வலியை உணரவைக்க உதவும்
கிம்பர்லி பெர்கலிஸ் (Kimberly Bergalis). ஒரு பழைய ஹாலிவுட் ஹீரோயின் போன்ற தோற்றம் அவருக்கு. (இந்தக் கதை நடப்பது 1980-களின் இறுதி). அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் தமக்குவா (Tamaqua) எனும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். 10-வது வயதில் ஃப்ளோரிடா மாகாணத்துக்குக் குடிபெயர்கிறது கிம்பர்லியின் குடும்பம். அப்பாவுக்குக் கணக்குத்துறையில் வேலை. அம்மாவுக்கு எய்ட்ஸ் நோயாளி பிரிவில் மருத்துவ வேலை. எய்ட்ஸ் என்பது பெரிதாக வெளியே தெரியாத காலம் அது. எந்த மருந்தும் கிடையாது. எய்ட்ஸ் என்பதைக் கொடூர அரக்கனாக, எய்ட்ஸ் வந்தவர்களைக் கேவலமான புழுக்களாகப் பெரும்பான்மையான சமூகம் பார்த்த ஒரு காலகட்டம். 
பள்ளிப்படிப்பை முடிக்கிறார். பெரும் குதூகலத்துடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார் கிம்பர்லி. அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்களோடு இருக்கிறார். 21 வயதில் அவருக்கு வளர்ந்த ஞானப் பல்லில் (Wisdom Teeth) சில பிரச்னை ஏற்பட்டது. அதனால், தன் பகுதியிலிருந்த பல் மருத்துவரான டாக்டர் டேவிட் ஆக்கரை (Dr. David Acer) சந்திக்கிறார். முழுக்கை சட்டை, நீளமான கோட், கழுத்தை மறைக்கும் ஸ்கார்ஃப் என இருந்த டாக்டர் ஆக்கர், கிம்பர்லிக்கு இரண்டு ஞானப்பற்களையும் பிடுங்குகிறார். கிம்பர்லிக்கு அது வலித்தது. ஆனால், ஓரிரு நாள்களில் சரியாகிவிட்டது.
பற்கள் பிடுங்கப்பட்டு ஓராண்டு காலமாகியிருந்தது. ஒரு நாள் கல்லூரியிலிருந்து மிகுந்த சோர்வுடன் வீட்டுக்கு வந்தார் கிம்பர்லி. சற்று காய்ச்சல் அடித்தது. மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சலும்கூட இருந்தது. சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வாரத்துக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்றே நினைத்தனர். ஆனால், நாளாக நாளாக உடல் மிகவும் மோசமாகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் துணிந்து கேன்சராக இருக்குமோ என்று நினைத்து, அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், கேன்சர் இல்லை.
டாக்டர்களுக்கு ஒரே குழப்பம். ஆனால், கிம்பர்லியின் அம்மா ஆன்னாவுக்கு (Anna) மட்டும் ஒரு சின்ன சந்தேகம் மனத்தின் ஓரம் இருந்து கொண்டேயிருந்தது. அதுவாக இருக்கக் கூடாது என்று வேண்டியபடியே, அந்தப் பரிசோதனையைக் கிம்பர்லிக்குச் செய்துபார்த்தார். ஆம், கிம்பர்லிக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். எய்ட்ஸ். துடி துடித்துப்போனார் ஆன்னா.
காரணங்களைத் தேடி அலையத் தொடங்கினர்.
மொத்தப் பேரும், கிம்பர்லி யாருடனோ உடலுறவு வைத்துக்கொண்டதில்தான் இது ஏற்பட்டுள்ளது என்று பேசத் தொடங்கிவிட்டனர். பேசுவது என்றால் சும்மா இல்லை. கதைக்கு கண், காது, மூக்கு, வாய், புருவம், கன்னம், கருவிழி என எல்லாம் வைத்துப் பேச ஆரம்பித்தார்கள். அதுவரை யாருக்கும் எந்தப் பதிலையும் கிம்பர்லி சொல்லிவிடவில்லைதான். ஆனால் ஒரு கட்டத்தில், என்ன செய்வதெனத் தெரியாமல்... ஆன்னாவே கிம்பர்லியிடம் கேட்டுவிட்டார்...
"என்னதாண்டி பண்ணித் தொலைச்சே...சொல்லித் தொலையேன். யாருகூடன்னு சொல்லிடுடி!"
உடைந்து நொறுங்கி, உதிர்ந்துபோனார் கிம்பர்லி. ஆனால், உறுதியாகச் சொன்னார்.
"நான் யாருடனும் உடலுறவுகொள்ளவில்லை. எந்த போதை ஊசியையும் போடவில்லை." ஒரு முறை அல்ல. ஓராயிரம் முறை அல்ல. ஒரு லட்சம் முறைகளுக்கும் அதிகமாக இதை உறுதியாகச் சொன்னார் கிம்பர்லி. கிம்பர்லிக்கு துணையாக ஆன்னா உறுதியாக நின்றார். சில பேரன்புகொண்ட நண்பர்களிடமும் காரணங்கள் ஆராயப்பட்டன. ஒரு மிகப்பெரும் உண்மை வெளிப்பட்டது.

கிம்பர்லிக்குப் பல் சிகிச்சை அளித்த டாக்டர். ஆக்கருக்கு எய்ட்ஸ். 1987-லேயே அது கண்டறியப்பட்டால், அதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார் ஆக்கர். தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து மறைத்துவந்துள்ளார். அன்று கிம்பர்லியின் பற்களைப் பிடுங்கும்போது போட்டிருந்தாரே அந்த முழுக்கை சட்டையும், நீளக் கோட்டும், ஸ்கார்ஃபும்கூட தன் உடலில் இருந்த புண்களை மறைக்கத்தான் அவர் போட்டிருந்தார். 
கிம்பர்லி தன் நோயோடு போராடுவதோடல்லாமல், தனக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மிக வீரியமாகக் குரல்கொடுத்தார். உலகிலேயே எய்ட்ஸ் நோய் அடுத்தவருக்குப் பரவியதாக அறியப்பட்ட முதல் நபர் கிம்பர்லி. அவருக்கு அந்த நோயைக் கொடுத்தவர், டாக்டர்.ஆக்கர்.
இதிலும் கிம்பர்லியின் மானத்தைக் கூறுபோட்டது ஒரு கூட்டம். டாக்டருக்கு எய்ட்ஸ் என்றால், கிம்பர்லிக்கு எப்படி? கிம்பர்லிக்கும் டாக்டருக்கும்? அந்தப் பேச்செல்லாம் கிம்பர்லிக்கு அருவருப்பாக இருந்தது. கிம்பர்லியைப் பார்த்து ஒரு பெரும் மந்தைக் கூட்டம் அருவருப்படைந்தது. தொடர்ந்து போராடி, டாக்டர்.ஆக்கர் செய்த குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார் கிம்பர்லி. அவரிடம் சிகிச்சை மேற்கொண்ட பல நூறு பேரை பரிசோதித்தார்கள். அதில் கிம்பர்லி தவிர இன்னும் 5 பேருக்கு நோய் பரவியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். என்ன செய்வதென யாருக்கும் தெரியவில்லை?!
டாக்டர் ஆக்கரின் உதவியாளர்களை விசாரித்தபோது, ஒருவர் சொன்னார்...
"அவர் மருத்துவ கவுன்சிலின் எந்தவொரு சட்டதிட்டங்களையும் பின்பற்றவில்லை. எந்தக் கருவியையும் சரியாகக் கழுவி (Sterilize) உபயோகப்படுத்தவில்லை." என்று வாக்குமூலம் கொடுத்தார். இதிலிருந்து கிம்பர்லி மற்றும் அந்த ஐவருக்கும் நோய் எப்படி பரவியிருக்கும் என்பது தெரிந்தது. 
இன்னும், இன்னும் விசாரணை நடந்தது. டாக்டர். ஆக்கர் இருபால் உணர்வு கொண்டவர் (Bisexual) கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமானோருடன் உடலுறவுகொண்டிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு எய்ட்ஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும்,ஒரு கூட்டம் கிம்பர்லிக்கு எதிராகவே செயல்பட்டுவந்தது. கிம்பர்லி டாக்டருடன் உறவுகொண்டார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயின் வலியிலிருந்த கிம்பர்லிக்குப் பல தடவை கன்னித்தன்மை (Virginity) சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் கிம்பர்லி அப்பழுக்கற்றவர் என்பது நிரூபணம் ஆனது.
இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எய்ட்ஸ்குறித்து அனைவரையும் பேசவைத்தது. டாக்டர். ஆக்கரால் பாதிக்கப்பட்ட மற்ற 5 பேரும் அவர்மீது வழக்குத் தொடர்ந்தார்கள். அவரின் சொத்துகளை முடக்கி, தங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் வழக்குப் போட்டார்கள். ஆனால், கிம்பர்லியோ ஒரு புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டுவர வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்து போராடினார். 
தொடர்ந்து போராடிக்கொண்டேயிருந்தார் கிம்பர்லி. தன் 23-வது வயதில், டிசம்பர் 8-ம் தேதி 1991-ம் ஆண்டு, உடல் உருகி உருக்குலைந்த நிலையில், அவர் மரணத்தைத் தழுவும் நொடி வரை போராடினார். அந்தப் போராட்டம் இறுதியில் வெற்றிகண்டது. எய்ட்ஸ்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தியதோடு அல்லாமல், மருத்துவ உபகரணங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும், அப்படித் தவறினால் மிகக் கடுமையான தண்டனைகள் என அமெரிக்க அரசின் சட்டங்களில் புதிய திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 
கிம்பர்லிக்குத் தன் வாழ்க்கை பறிக்கப்பட்டது பெரும் வலியைக் கொடுத்தது. தாங்கமுடியாத அந்த மன வலி, அவரின் இறுதி மூச்சு வரை இருக்கவே செய்தது. ஆனால், அதைத் தாண்டி ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்காக அவர் போராடினார். 
எய்ட்ஸ் என்பது சாவுகுறித்தது அல்ல. அது வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் போராடுவது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தும் என் வாழ்க்கை என்னிடமிருந்து பறிக்கப்பட்டது..." என்று கடைசியாக கிம்பர்லி இதைச் சொன்னபோது, அவரின் உடல்... அந்தத் தோல்... எலும்போடு உருகி ஒட்டிப்போயிருந்தது. கிம்பர்லி வலியில் அலறியபடியே இறந்துபோனார்.