நாம் எல்லோரும் நல்லவர்கள்தானா? - பாரதி தம்பி
நன்றி : ஆனந்த விகடன்
'உங்களில் யார் குற்றம் இழைக்காதவரோ, அவர்கள் முதல் கல் எறியட்டும்’ என்றார் இயேசுநாதர். இதுவரை அந்தக் கல் எறியப்படவில்லை.
அன்றாட வாழ்க்கையில் நாம் தெரிந்தே செய்யும் தவறுகள் அநேகம். காலம் காலமாக அவற்றைச் செய்து பழக்கப்பட்டு இருப்பதால் அவை தவறுகளாக நமக்குத் தோன்றவில்லை. அதையே மற்றவர்கள் செய்யும்போது பதறித் துடிக்கிறோம். எல்லாவிதத் தனிமனித ஒழுங்கீனங்களையும் 'சாமர்த்தியம்’ என்று வரையறுப்பதும், சமூகப் பொறுப்பின்மையுடன் வாழ்வதை 'இயல்பு வாழ்க்கை’போலச் சித்திரிப்பதும்தான் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனநிலை... அல்லது பொதுப் பண்பு.
சின்னச் சின்ன தவறுகளே பெரிய தவறுகளுக்கு வழி அமைத்துக்கொடுக்கின்றன. திரையுலகத்தினர் வெள்ளிக்கிழமைதோறும் திருட்டு டி.வி.டி.பற்றிப் பேசும்போது எல்லாம் 'ஆமா, தப்புதான்’ என்று நினைக்கிறோம். ஆனால், நம் வீட்டில் இருக்கும் திருட்டு டி.வி.டி-க்கள் நினைவுக்கு வருவது இல்லை. தமிழ்நாட்டின் அநேகம் பேர் வீடுகளில் குறைந்தது இரண்டு திருட்டு டி.வி.டி-க்கள் இருக்கின்றன. இதற்காகக் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான சட்டப்பூர்வமான முகாந் திரங்கள் அனைத்தும் உண்டு. ''சினிமா டிக்கெட் விற்கும் விலைக்கு குடும்பத்தோடு தியேட்டருக்குப் போனால், குறைந்தது 1,000 ரூபாய் செலவாகுது. எங்களுக்கு வேறு என்னதான் வழி?'' என்று கேட்பதில் உள்ள நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், அதற்காக திருட்டு டி.வி.டி. வாங்கி சினிமாவைப் பார்த்தே ஆக வேண்டுமா என்ன? டிக்கெட் விலை அதிகம் என்றால், சினிமாவையே புறக்கணிக்கலாம். அதைவிடுத்து திருட்டு டி.வி.டி. வாங்கி சினிமா பார்ப்பது சரியா? கேட்டால், 'யார்தான் இங்கே யோக்கியம்?’ என்று பதில் வரும்.
இந்த எண்ணம்தான் பொதுச் சொத்துக்களை இஷ்டம்போலக் கையாள்வதற்கு அழைத்துச் செல்கிறது. தனியார் மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவரில் எச்சில் துப்பவே அஞ்சும் அதே மக்கள்தான், அரசு மருத்துவமனை வராந்தாக்களைக்கூட பொதுக் கழிப்பிடங்களைப்போலப் பயன்படுத்துகின்றனர். பொதுக் கழிப்பிடங்களின் நிலவரமோ... மோசத்திலும் மோசம். பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், மருத்துவமனைகளில், அரசு அலுவலகங்களில் பொதுக் கழிப்பிடங்கள் எத்தனை பொறுப்பின்மையுடன் பயன்படுத்தப்படுகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம் வீட்டுச் சுவரில் கீறல் விழுந்தாலே பதறிப்போகும் நாம்தான், பொதுக் கழிப்பறைக் கதவுகளில் வக்கிரமாக எழுதிவைத்து ஆனந்தப்படுகிறோம். இதன் பொருள், இந்த அரசாங்கச் சேவைகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பது அல்ல. இதே மக்கள்தான் தமது சொந்தப் பயன்பாட்டுக்கு என வரும்போது, அரசின் சேவைகளுக்காக முண்டி அடித்து முன்னுக்கு நிற்கின்றனர்.
மத்திய கலால் துறையில் பணிபுரிகிறார் அந்த நண்பர். கை நிறையச் சம்பளமும், அதைவிட அதிகமாகக் கிம்பளமும் வாங்கும் அவரது வீட்டில் ஹாலில் ஒன்றும், படுக்கைஅறையில் ஒன்றுமாக இரண்டு பிளாஸ்மா டி.வி-க்கள் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் வழங்கிய இலவச டி.வி-யையும் வாங்கினார். இலவச மிக்ஸி தந்தபோது, அலுவலகத்தில் இரண்டு மணி நேர பெர்மிஷன் போட்டுவிட்டு வரிசையில் நின்று வாங்கினார். ''நம்ம வரிப்பணத்துல தர்ற பொருள் சார். ஏன் அதை விடணும்?'' என்று உரிமையோடு ரூல்ஸ் பேசும் இவர், 100 பேர் வரிசையில் நிற்கும் ரயில்வே டிக்கெட் கவுன்டரில் தான் மட்டும் எப்படியாவது குறுக்குவழியில் காரியம் சாதிக்கத் தயங்குவது இல்லை. ரயில் டிக்கெட்டோ, வருமானச் சான்றிதழோ... லஞ்சம் கொடுக்காமலும், நேர தாமதம் இல்லாமலும் வாங்குவதற்கு என்ன வழி? இன்னும் அதிக ஊழியர்கள் வேண்டும், அதற்குரிய கட்டமைப்புகள் வேண்டும். அவை இல்லை எனும்போது, அவற்றைக் கேட்டுப் போராட வேண்டும். ஆனால், மக்களுக்கு இதற்கெல்லாம் பொறுமை இல்லை. ''ஒரு ரேஷன் கார்டு வாங்க போராட முடியுமாங்க?'' என்கிறார்கள். பிறகு எதற்குத்தான் போராடுவது? நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் எல்லாம், மேலும் மேலும் அதிகப் பணம் சம்பாதிப்பதில் மட்டும்தான் இருக்கிறது. அதைச் சேர்த்துவிட்டால், மற்ற விஷயங்களை எல்லாம் பணத்தைக்கொண்டு சாதித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்குச் சமூகப் பொறுப்பு உணர்வு போன்ற 'சிறிய விஷயங்களுக்கு’ எல்லாம் நேரம் இல்லை.
நாம் ஷங்கர் படங்களில் பார்த்திருப்போம்... 'என்னங்க நாடு இது? எல்லா இடத்துலயும் லஞ்சம், ஊழல், பொய்’ என்று மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் கருத்துச் சொல்வார். அதுதான் நடுத்தர வர்க்க உணர்வின் நடு நரம்பு. ஆனால், ஆகப் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் பிளாக்கில் வாங்கிய கேஸ் கனெக்ஷன் வைத்திருக்கிறது, போலி ரேஷன் கார்டு வைத்திருக்கிறது, 'ஆண்டு வருமானம் 40 ஆயிரம்’ என்று கூசாமல் வருமானச் சான்றிதழ் வாங்கி சலுகைகளை அனுபவிக் கிறது. இப்படிச் சூழ்ச்சியையும், தந்திரமாகப் பிழைப்பதையும் சாமர்த்தியம் என்று நினைக்கிறது. இத்தனையும் செய்துகொண்டு 'நாடு கெட்டுப்போச்சுங்க’ என்று அலுத்துக்கொள்கிறது.
இதன் மற்றொரு கோணத்தைப் பார்ப்போம். இன்றைய நடுத்தர வர்க்கத்தினர் கலாசாரரீதியாக எப்படி இருக்கின்றனர்? 'வரதட்சணை வாங்குவது தப்பு’ என்று 'நீயா... நானா’வில் அனல் பறக்கப் பேசுகின்றனர். ஆனால், சொந்த வாழ்க்கையில் பெரும்பான்மையானோர் வரதட்சணையைக் கைவிடவில்லை. 'நாங்களா எதுவும் கேட்கலை. அவங்களா செய்யுறாங்க’ என்று சப்பைக்கட்டு கட்டுபவர்கள், அவர்களாக எதுவும் செய்யவில்லை என்றால் சும்மா விடுவார்களா என்ன? இதில் பிற்போக்கு, முற்போக்கு என யாரும் விதிவிலக்கு இல்லை. கிடைத்தவரை ஆதாயம் என்றே எண்ணுகின்றனர். இதேபோலத்தான் சாதி விஷயத்திலும். காலம் எவ்வளவோ தூரம் முன்னேறிவிட்டது. அசிங்கமான சாதிச் சகதியைக் கைவிட வேண்டும் என்பதை இன்னும் கருத்து அளவில்கூட பலரும் ஏற்கவில்லை. சொல்லப்போனால், முன்பைவிட சாதியைப் பின்பற்றுவது இப்போது அதிகரித்து இருக்கிறது. ஏதோ தர்மபுரிக் கிராமங்களில் மட்டும் சாதி உயிர் வாழவில்லை. படித்தவர்கள் புழங்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் சாதித் திமிர் புதுப் பொலிவுடன் வளைய வருகிறது. சினிமா, இலக்கியம், அரசியல் துறைகளில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்துகொள்கிறார் கள். கேட்டால் 'யார்தான் சாதி பார்க்கலை?’ என்று மற்றவர்களைச் சுட்டிக்காட்டி தனது சாதிப் பற்றுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
இதே மனநிலைதான், 'போலீஸ்னா அடிக்கத்தான் செய்வான், அரசு ஊழியர்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான், அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான்’ என்று சமூகச் சீரழிவுகளை ஏதோ 'சூரியன் கிழக்கே உதிக்கும்’ என்பதுபோல சாதாரணமாக ஏற்றுக்கொள்ளவைக்கிறது. இப்படிச் செய்வதன் வழியாகத் தங்களின் சிறு சிறு தவறுகளுக்குத் தார்மீக அங்கீகாரத்தைக் கோருகின்றனர். ஏட்டு 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதை இன்ஸ்பெக்டர் கண்டுகொள்ளாமல்விட்டால், அவர் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது ஏட்டு கண்டுகொள்ள மாட்டார். அதுபோல போலீஸ், அரசியல்வாதி, அரசு ஊழியர் இவர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடும் பொதுமனம், தனக்கும் அவ்வாறான தவறு களைச் செய்வதற்கு உரிமை இருப்ப தாக நம்புகிறது. இதுதான் 'யார்தாங்க யோக்கியம்?’ என்ற 'அறச் சீற்றமாக’ வெளிப்படுகிறது.
'கொஞ்சம்கூட சமூக அக்கறை இல்லாம இருக்கீங்களே?’ என்று கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கேட்டால், 'நான் வருஷம் ஒருமுறை அநாதை ஆசிரமத்துக்குச் சாப்பாடு வாங்கிப் போடுறேன்’ என்றோ, 'தினமும் சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவ னுக்குக் காசு கொடுக்கிறேன்’ என்றோ சொல்வார்கள். சிலருக்கு நான்கு மரம் வளர்ப்பதும், இயற்கையைக் கெடுக்காத ஆர்கானிக் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதும் சமூக அக்கறை.
அதிகபட்ச நடுத்தர வர்க்கத்தினர் மனிதாபிமானத்துடன் பண உதவி செய்ய முன்வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் வரம்புக்கு உட்பட்டு உதவுவது சரியே. ஆனால், அது மட்டுமே நிரந்தரத் தீர்வுக்கான வழி அல்ல. இப்போது, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினியின் சிகிச்சைக்குத் தேவை பணம். அதே நேரம், இன்னொரு வினோதினி உருவாகாமல் தடுக்கத் தேவை மக்களின் விழிப்பு உணர்வும் போராட்டமும். ஆனால், யதார்த்தம் என்ன? போராடுபவர்களை 'ஏன் இப்படி பப்ளிக்கை டார்ச்சர் பண்றாங்க?’ எனப் பொது அமைதிக்குக் கேடு விளைவிப்பவர்களாகப் பார்க்கிறோம். அவர்கள் யாரும் சொந்தப் பிரச்னைக்காக சாலையில் நின்று கோஷம் போடவில்லை. கல்விக் கட்டணக் கொள்ளைக்காக போலீஸ் லத்தியால் அடி வாங்குபவர்களைத் தனிமைப் படுத்துவதன் வழியே, நடுத்தர வர்க்கம் தனக்குத் தானே வேட்டு வைத்துக்கொள்கிறது.
இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. சமீப காலமாக ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பெருமளவில் நடுத்தர வர்க்க மக்கள் திரண்டு வருகிறார்களே, எப்படி? ஆம், உண்மைதான். அவர்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையுடன்தான் வருகின்றனர்; மன உறுதியுடன் வரவில்லை. மெழுகுவத்தி ஏந்துவது, மிஸ்டு கால் கொடுப்பது, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவது எனத் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குச் சிறு இடையூறும் இல்லாத போராட்ட வடிவங்களே இவர்களின் தேர்வு. கூடங்குளம் மக்கள் போல நோக்கத்தில் தீர்க்கமும் வழிமுறையில் உறுதியும் எல்லோருக்கும் இருப் பது இல்லை.
இன்னொரு பக்கம் சட்டத்தை மீறிக் கொள்ளையடிப்பதை மட்டுமே 'ஊழல்’ என்று வரையறுக்கின்றனர். சட்டப்படி நடந்தால் இவர்களுக்கு எல்லாம் ஓ.கே. மக்கள் பணத்தைச் சூறையாடிய ஸ்பெக்ட்ரம், ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப். முறைகேடு போன்றவை ஊழல் என்றால், கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு 4 லட்சத்து 19 ஆயிரத்து 786 கோடி ரூபாய் வரிச் சலுகை வழங்கியிருப்பதை என்னவென்று சொல்வது? சட்டப்படி நடந்ததால், இது ஊழல் இல்லையா? இரண்டு ஸ்பெக்ட்ரம் தொகையைவிட இது அதிகம். இப்படி பெரும் நிறுவனங்களுக்குக் கருணை காட்டிவிட்டு, விலைவாசியை உயர்த்தி மக்களை வதைக்கின்றனர். ஆகவே, 'சட்டப்படி’ நடக்கும் ஊழல்கள்தான் அதிகம் என்பதை நடுத்தர வர்க்கம் உணர வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு சென்னை, வேளச்சேரியில் சாலை ஓரத்தில் இளநீர்க் கடை வைத்திருக்கும் ஒருவர், தேங்காய்க் கழிவுகளை சாக்கடையில் தொடர்ந்து வீசிவந்ததால் அடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லி, அவருக்கு 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் செய்தது தவறுதான். ஆனால், கூவம் நதியை ஆக்கிரமித்து பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழும்பி நிற்கின்றனவே... அவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லையே... ஏன்?
நடுத்தர வர்க்கம்பற்றிப் பேசும்போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வோம். பூக்கார அம்மாவிடம் இரண்டு ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள், ஷாப்பிங் மால்களில் கேட்பதைக் கொடுத்துவிட்டுக் கூடுதலாக டிப்ஸும் தருவார்கள். காரணம், கௌரவம். ரேஷன் கடையில் வரிசையில் நிற்க இடம் கொடுக்காத இவர்களின் கௌரவம், ஐநாக்ஸ் தியேட்டரில் ஸ்நாக்ஸ் வாங்க வரிசையில் நிற்கும்போது எங்கே போகிறது என்று தெரியவில்லை. இந்தப் போலி கௌரவம்தான் பேராசையாக உருவெடுக்கிறது. தேக்குமரம், ஈமு கோழி என ஆசைகாட்டி ஏமாற்றுபவர்களின் முதலீடே இந்த நடுத்தர வர்க்கத்தின் பேராசைதான். மீண்டும் மீண்டும் இந்தப் புதைகுழிக்குள் விழுகிறார்கள். கடைசி யில் ஏமாந்துபோய் சாமியார்களை நாடு கின்றனர். அவர்களோ மறுபடியும் மிடில் கிளாஸை முதலீடாக்கிப் பணம் பார்க்கிறார் கள்.
நடுத்தர வர்க்கத்தினர் இவ்வளவு தூரம் 'சூதானமாக’ இருக்கிறார்களே... இவர்களின் சொந்த வாழ்க்கையாவது சுகமாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. எக்கச்சக்க உழைப்பு, ஏராளமான தவணைகள், வாழ்நாள் முழுக்கக் கடனாளி, மனம் முழுவதும் அழுத்தம் என்று அனுதினமும் பரிதாபத்தில் உழல்கிறார்கள். சரி, ஏன் இப்படி இருக்கிறது நடுத்தர வர்க்கம்? ஏனெனில், எல்லாப் பிரச்னைகளுக்கும் எளிய, தனி நபர் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். அதிகம் சிரமப்படாமல் எல்லாம் வேண்டும். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. தடியும் உடையக் கூடாது, பாம்பும் சாக வேண்டும். உணவு, உழைப்பு, சிந்தனை, காதல், குடும்பம் அனைத்திலும் இந்த மேலோட்டத்தன்மை தொடர்கிறது. ஆழமும் உறுதியும் அற்ற நடுத்தர வர்க்கக் குடும்ப உறவுகள் கடைசியில் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு போடுவதில் போய் முடிகிறது.
இப்போது உழைப்பு நேரம் எகிறிவிட்டது. 8 மணி நேரம் எல்லாம் கிடையாது. 12 மணி நேரம், 13 மணி நேரம் என்றாகிவிட்டது. மன அழுத்தம் ஏற்படுகிறது. குடிக்கிறான், உடல் கெடுகிறது, குடும்பத்தில் சண்டை வருகிறது. விபத்து நடக்கிறது. வேலை நேரத்தை முறைப்படுத்தினால் இத்தனையும் சரியாகும். ஆனால், நடுத்தர வர்க்கமோ, ஒவ்வொரு தவறையும் துண்டித்து தனித்தனியே தீர்வு தேடுகிறது. ஒன்றுடன் ஒன்று பின்னிக்கிடக்கும் இந்தச் சங்கிலியில் தனியே எதையும் வெட்டி எடுத்துத் தீர்வு காண்பது சாத்தியம் இல்லை.
இந்தக் கட்டுரையில் நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் தவறு கள் நேரடியாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருக் கின்றன. இதன் பொருள், பணக்காரர்கள் அனைவரும் நல்லவர்கள் என்பதல்ல. நாம் வாழும் இந்த சமூகச் சூழலையும், சுற்றுச் சூழலையும், அரசியல் சூழலையும் தங்களது லாப வெறிக்காக கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது பெரு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும்தான். இதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்த அபாயத்தை அனைத்து மக்களும் உணரவிடாமல் தடுப் பது நடுத்தர வர்க்கம்தான். ஏனெனில், ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் மனதுக்குள்ளும் ஒரு மில்லியனர் கனவு ஒளிந்திருக்கிறது.
No comments:
Post a Comment