Thursday, April 18, 2013

மனதை தொட்ட மனம் திறந்த மடல் 
சமூகப் பிரச்னைகளை சாதிச் சாயத்துடன் அணுக வேண்டாம்!
ன்பிற்கினிய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு...
வணக்கம். வளர்க நலம். உங்கள் திறந்த மடல் மூலம் அழுகிக்கிடக்கும் அரசியல் உலகில் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கு அடித்தளம் அமைத்திருக்கிறீர்கள். நன்றி. விமர்சனம் எவ்வளவு நியாயமாக இருப்பினும், விமர்சித்தவனை வீழ்த்துவதற்கு வியூகம் வகிக்கும் தலைவர்களுக்கு நடுவில், அரசியல் நாகரிகம் அணுவளவும் பழுதுபடாமல், அர்த்தம் செறிந்த கேள்விகளுடன் விளக்கம் அளித்திருக்கும் உங்கள் விவேகமான அணுகுமுறை பாராட்டுக்குரியது.
 
'காதல் நாடகம்’ கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றித் தம்முள் தாமே எதிர்பட்டு, உள்ளத்தளவில் ஒன்றிக் கலக்கும் உணர்வில் கனிவதுதான் உண்மையான காதல் என்று, தெளிந்த இனம் நம் தமிழினம். ஓர் ஆணிடம் ஒரு பெண்ணும், ஒரு பெண்ணிடம் ஓர் ஆணும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முற்றாகத் தன்னை இழப்பதுதான் காதலுக்குரிய ஒரே இலக்கணம். இந்த மாற்றமிலா உண்மையை மறுப்பதில் நியாயமுமில்லை; நேர்மையுமில்லை. நீங்கள் நெறிசார்ந்த காதலுக்கு எதிரியில்லை என்பதில் மகிழ்ச்சி.
'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ, கலப்புத் திருமணங்களுக்கோ தடைவிதிப்பது சரியில்லை. பல காதல் கலப்புத் திருமணங்களை நானே முன் நின்று நடத்திவைத்திருக்கிறேன்’ என்று நீங்கள் வழங்கியிருக்கும் வாக்குமூலம் வரவேற்கத்தக்கது.
 
'பொருளாதார அடிப்படையில் வசதியான குடும்பப் பெண்களுக்கு வலை விரிப்பதும், காதல் வலையில் விழுந்த பின்பு கடத்திச் சென்று லட்சம், கோடிகளில் பேரம் பேசுவதும், ஏழைப் பெண்களைத் திருமணம் செய்து, சில மாதங்களில் வாழாவெட்டியாக்குவதும் காதல் நாடகமன்றி வேறென்ன?’ என்ற உங்கள் கேள்வியில் நிறைந்திருக்கும் நியாயத்தை யார்தான் நிராகரிக்க முடியும்? ஆனால், இந்த இழிந்த காதல் கபட நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் ஈடுபடுகின்றனர் என்று சாதிக்க முயல்வது சரியா? அன்பு கூர்ந்து யோசியுங்கள்.
 
பண்பற்ற மனிதர்களும், பாலியல் வன்முறைக்குப் பெண்களைப் பலியாக்கும் பாழ்பட்ட மிருகங்களும், பணத்துக்காக எந்த இழி செயலிலும் இறங்கும் அறம் பிறழ்ந்த பாதகர்களும் இல்லாத சாதி என்று ஏதாவது ஒன்று உண்டா? 'சாதிகள் ஒழிய வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைவரையும்விட அதிகமான அக்கறைகொண்டவன் நான்’ என்று சொல்லும் நீங்கள், குறிப்பிட்ட ஓர் அமைப்புக்கு எதிராக உங்கள் ஆற்றல் முழுவதையும் விரயமாக்குவது அவசியம்தானா? சாதிகளை மையமாக்கிப் பூசல்களை வளர்ப்பதனால் புத்துலக சமுதாயம் பூத்துவிடுமா?
 
'ஒரு லட்சம் சாதி இந்துப் பெண்களின் வயிற்றிலாவது தலித்துகளின் கரு வளர வேண்டும்’ என்று சிலர் முழங்கியதற்காக ஒரு கோடி தலித்துகளையும் ஒதுக்கிவிடக் கூடுமா? வரம்பு கடந்து வன்முறையை வளர்க்கும் வகையில் சிலர் பேச முற்படும்போது மனதளவில் அவர்கள் காயம்பட்டவர்கள் என்ற பரிந்துணர்வோடு, அவர்களுடைய பேச்சுக்கான சமூகக் காரணிகளை நாம் ஆய்ந்துபார்க்க வேண்டும். 'ஒரு பகுதி மக்கள் மற்றொரு பகுதி மக்கள் மீது சந்தேகம் பூண்டிருப்பது சமூகத்தைப் பாதிக்கும். பசித்திருக்கும் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு உணவும், நிர்வாணமாக நிற்பவர்க்கு ஆடையும் வழங்குவது குறித்துச் சிந்திக்க நேரமின்றி ஒருவருக்கொருவர் மோதலில் மூழ்கிக்கிடப்பது நியாயமா?’ என்று, அண்ணல் காந்தி அன்று கேட்டது இன்றும் பொருந்தக்கூடியதாக இல்லையா?
 
'படித்து முடித்து வேலைக்குச் சென்று பெண்ணுக்கு 21 வயது முடிவடைந்த பின்னர் நடக்கும் காதல் திருமணங்களை அனுமதிக்கலாம் என்ற எங்கள் நிலைப்பாட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வலுப்படுத்தியிருக்கிறது’ என்கிறீர்கள். இந்த விஷயத்தில் பெண்ணைப் பெற்ற அனைவரும் உங்களை அழுத்தமாக ஆதரிப்பார்கள் என்பது உண்மை. சிறுமிகளின் 'காதல்’, ஹார்மோன் கோளாறுகளால் கனன்றெழும் உடல் கவர்ச்சி என்பதும் அறிவியல் பூர்வமான உண்மையே. இந்தக் கருத்தை நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிச் சீரழியும் இளைய தலைமுறையிடம் அழுத்தமாக நீங்கள் அன்றாடம் அறிவுறுத்துங்கள். ஆனால், சாதிச் சாயத்துடன் நீங்கள் சமூகப் பிரச்னைகளை அணுகுவதில்தான் என்னைப் போன்றவர்கள் உங்களுடன் முரண்பட நேர்கிறது.
 
என்னிடம் நீங்கள் கேட்டிருக்கும் மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை. 'இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் உருவாகிவிட்டதா?’ என்று கேட்கிறீர்கள். 'உருவாகிவிடவில்லை’ என்று வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறேன். 'இந்த மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளாக நம் சாதி முறை சமயரீதியாக, தத்துவ ரீதியாக, அமைப்பு ரீதியாக, மனுஸ்மிருதி போன்ற சட்டரீதியாக, சமூகக் கட்டுப்பாடாக, மாறுதல்களே இல்லாமல், மாற்றவும் முடியாமல், இன்று வரை நிரந்தரமாக, இறைவனின் ஆணையாகக் கெட்டிப்படுத்தப்பட்டுவிட்டது. சாதிக்குள் மட்டுமே திருமணம் என்ற தவறான சமூகக் கட்டுப்பாட்டால், சாதிப் பரம்பரை, சாதிச் சடங்கு, சாதிக் கடவுள், சாதி ஆசாரம் என்ற வழிமுறை காரணமாக சாதித் தனித்துவம் உடைக்க முடியாதபடி இறுகிவிட்டது’ என்ற ஞானையாவின் விளக்கம்தான் உங்கள் கேள்விக்குச் சரியான பதில். இப்படி இறுகிக் கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதிய அமைப்பு நீடிப்பது உங்களுக்குச் சம்மதமா? இந்த மோசமான அமைப்பு முறையில் சமூக நீதி சாத்தியமா? 'காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளைச் சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்?’ என்று கேட்கிறீர்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் ஆண் சார்ந்திருக்கும் சாதியையே பிள்ளைகளுக்குப் பதிவுசெய்யும் வழக்கம், ஆணாதிக்கத்தின் எச்சம். இதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஒரு தனி மனிதன் சாதியைத் தவிர்க்க விரும்பினாலும் அரசு அவன் தலை மீது அதைத் திணித்துவிடுகிறதே... சட்டம்தானே சாதியைக் காப்பாற்றுகிறது? அதை எதிர்த்துப் போராடப் புறப்படுவோம்.
 
'நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு’ என்று, பெரியார் மிகச் சரியாகச் சிந்தித்து, சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் நினைந்து பார்ப்பது நல்லது.
 
'சாதி என்பதே இருக்கக் கூடாது. சாதிப் பிரிவுகள்தாம் நம்மை ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் ஆக்கிவிட்டன. நாம் யாவரும் சமம் என்ற நிலை வரவேண்டும். ஆதிதிராவிடர், ஹரிஜனம், தாழ்த்தப்பட்டவர், பறையர், பஞ்சமர், தீண்டாதவன், புலையன் ஆகிய பட்டங்களை ஒழித்தாலொழிய இப்பழங்குடி மக்கள் மனிதத்தன்மையுடன் வாழ முடியாது. தோழர்களே... திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்’ என்ற, பெரியாரின் பாதையில் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்பது என் பெருவிருப்பம்.
 
எனக்கு என் மூக்கின் முனை​யளவும் சாதி உணர்ச்சி என்றும் இருந்ததில்லை. என் மகனும் மகளும், சாதி, மதங்களை மீறிய மனிதம் சார்ந்து நடப்பவர்கள் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. ஆனால், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் சாதியை முன் நிறுத்தும் அரசியலமைப்பு மாற்றப்படாத​வரை சாதிப் பதிவு தவிர்க்க முடியாதது. இன்றைய முதல் தேவை சாதியுணர்வுகொள்ளாமல் இருப்பது; சாதியை முன்வைத்துப் பூசலை வளர்க்காமல் சமத்துவம் காண்பது. இந்தப் பார்வை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் உண்டு. அனைவருக்கும் இது அவசியம் என்பதுதான் சமூக நீதிக்கான பாதை.
 
'சாதிகள் சாகாத வரை தமிழ்ச் சாதி மேன்மையுறாது. அதனால் சாதியைச் சாகடியுங்கள். காதல் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியுங்கள்’ என்று நான் பேசியது உண்மை. நீங்கள் காதலுக்கு எதிரி இல்லை. அதனால், என் பேச்சில் நீங்கள் காயப்பட வாய்ப்பு இல்லை. நாடகக் காதலை யார் நடத்தினாலும் அவர்களை உங்களோடு சேர்ந்து கடுமையாக நானும் எதிர்க்கிறேன். நீங்கள் சொல்லும் சிலர் செய்யும் தவறுகளை நானும் ஆதாரங்களோடு அறிவேன். அதற்காக அனைவரையும் பழித்தல் சரியில்லை என்கிறேன்; தர்மபுரிக் கலவரத்தில் நியாயம் இல்லை என்கிறேன்.
 
'தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு; தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு’ என்று முழங்கிய நீங்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சம வாய்ப்பு சாத்தியப்படுவதுதான் சமூக நீதி என்று தெளிவாக உணர்ந்த நீங்கள் - சாதிய அமைப்புகளோடு சங்கமித்தது, உங்கள் அரசியல் பயணத்தில் நீங்களாக வலிந்து தேடிக்கொண்ட வீழ்ச்சி என்றே நான் நம்புகிறேன். மதுவை ஒழிக்கவும். புகையிலையைத் தவிர்க்கவும் இடைவிடாமல் போராடும் நீங்கள், கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகிவரும் நிலையில், தொலைந்துபோன நம் தொன்மையான கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறு​களை மீட்டெடுக்கும் முயற்சி​யில் சமரசமின்றி நீங்கள் முன்​னெடுக்க வேண்டிய முக்கிய​மான பணிகளில் இருந்து திசை மாறி​விட்டதற்காக வருந்து​கிறேன்.
 
தாய்மொழிக் கல்வி, சமச்சீர் கல்வி குறித்த உங்கள் பார்வை, தமிழகத்தின் வளர்ச்சிக்கான உங்கள் தொலைநோக்கு, அரசின் தவறுகளைக் கறாராக விமர்சிக்கும் துணிவு, வட மாவட்டங்களில் தலித்துகளும் வன்னியரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பெருமைக்குரியவை. ஆனால், இந்தப் பெருமைகள் உங்கள் சமீபகாலச் சாதிய நடவடிக்கைகளால் சாரமற்றுப்போய்விட்டதை நீங்கள் ஏன் உணரவில்லை?
 
'மாற்றங்கள் ஏற்படுத்தும் மகத்தான எந்திரம் காலம் ஒன்றுதான்’ என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். கீழ்வெண்மணி முதல் தர்மபுரி வரை ஆயிரம் கொடுமைகளை அனுபவித்துவிட்ட மக்களை அன்போடு அரவணைத்து, அனைத்துச் சாதியினரின் அன்பைப் பெற்றவராய், நீங்கள் மாற வேண்டும். இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும், மதுவின் வாசம் வீசாத மாநிலமாக நம் மண்ணை மாற்றியமைக்கவும். குறைந்தபட்ச கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் மாற்று அரசியல் அணியை வலிமை​யாக உருவாக்கவும் உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தும் தலைவராக நீங்கள் மாற வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் சொந்த சாதி நலன் குறித்துச் சிந்திப்பவர் என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சித் தமிழினத்தின் பாதுகாப்புக் கவசமாக இனி மாற வேண்டும். உங்கள் பயணம் சாதிகளற்ற, சமதர்ம இலக்கை நோக்கி நடக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழும்போது, சாதாரண மணியனை விடுங்கள், ஒட்டுமொத்த தமிழினமே உங்கள் பின்னால் அணிவகுக்கும். அப்படி நீங்கள் மாறுவீர்களா மருத்துவரே?
தங்கள் அன்புள்ள,
 
- தமிழருவி மணியன்

No comments:

Post a Comment