Thursday, April 18, 2013

மண் சம்மர். - (நன்றி: ஆனந்த விகடன்)
 
க்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்னரே வறுத்தெடுக்கிறது வெயில்! இந்தக் கொடும் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர் அருந்தச் சொல்கிறார்கள். அதே சமயம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். மின்சார ரெஃப்ரிஜிரேட்டர்களில் குளிர்ச்சி ஏற்படுத்திக் குடிக்கும் நீர் அத்தனை ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து நிலவுகிறது. அவை இயங்குவதற்குப் போதுமான மின்சாரமும் இல்லை. இந்த நிலையில், வெயில் அனலை எப்படித்தான் சமாளிப்பது?
மண்ணால் ஆன ரெஃப்ரிஜிரேட்டர், மண்ணால் ஆன வாட்டர் பியூரிஃபயர் ஆகியவற்றின் மூலம்தான்! ஆம்... மண்பானையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக மண்ணால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள்தான் இப்போது சந்தையில் சக்கைப்போடு போடுகின்றன. அந்த மண் பொருட்கள்பற்றி ஒரு ரவுண்ட்அப்...
மண் ஃப்ரிஜ்
பெரும்பாலான நேரம் மின்சாரமே காணாப் பொருளாகிவிட்டதால், இப்போது ரெஃப்ரிஜி ரேட்டர் இருந்தும் இல்லாத நிலைதான். இந்த மண் ஃப்ரிஜ்ஜுக்கு மின்சாரம் தேவையில்லை. ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் மூலமே குளிர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும் இந்த ஃப்ரிஜ், 50 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 5 கிலோ வரை காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் இதர பொருட்களை வைக்கலாம். இந்த ஃப்ரிஜ்ஜின் மேல்பாகத்தில் ஊற்றும் தண்ணீர், சிறிது சிறிதாகக் கீழிறங்கி குளுமையை உண்டாக்கும். மின்சார ஃப்ரிஜ் போலவே, சேம்பருக்குள் 15 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை குளிர்நிலை நிலவுகிறது. 10 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றி வைத்துக்கொண்டு அதைக் குடிநீராகப் பயன்படுத்தலாம். இதில் வைக்கப்படும் காய்கறிகள் மூன்று நாட்கள் வரை கெடாது. முழுக்க சுட்ட மண்ணால் செய்யப்பட்ட இந்த ஃப்ரிஜ்ஜை மாதத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்துவது மட்டுமே இதன் அதிகபட்சப் பராமரிப்பு. காற்றோட்டம் உள்ள ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டால், சேம்பரின் குளிர்பதம் இன்னும் அதிகரிக்கும். விலை 4,000 முதல் 5,000 ரூபாய் வரை. பத்திரமாகப் பராமரிக்கும் முறையைப் பொறுத்துப் பல வருடங்கள் பயன்படுத்தலாம்!
வாட்டர் பியூரிஃபயர்
முழுக்கவே மண்ணால் செய்யப்பட்ட இந்த நீர் சுத்திகரிப் பான் 10, 15 மற்றும் 20 லிட்டர் கொள்ளளவுகளில் கிடைக்கிறது. விலை 800 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை. இதன் உள்ளே பொருத்தப் பட்டு இருக்கும் மண்ணால்செய்யப் பட்ட கேண்டில் (நீரை வடிகட்டும் உருளை) தண்ணீரை வடிகட்டி, சிறிது சிறிதாக கலனின் அடிப்பகுதியில் சேமிக்கிறது. இயற்கை முறையிலான சுத்திகரிப்பு என்பதால், பிற நீர் சுத்திகரிப்பான்களைவிட தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். மாதத்துக்கு ஒரு முறை கேண்டில்களை வெந்நீரில் காயவைத்து சுத்தப்படுத்தினால் போதும். மின்சாரம் தேவை இல்லாத இந்த சுத்திகரிப்பான், தண்ணீரைச் சுத்திகரிப்பதோடு குளுமையாகவும் வைத்திருக்கிறது. ஆக, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
மண் குக்கர்
பால் குக்கர் போன்ற இயக்கம்தான். ஆனால், உள்ளே அழுத்தத்தை வைத்துக்கொள்ளாது என்பதால், விசில் அடித்துக் கொண்டே இருக்கும். அரிசி, பருப்பு, பால் என குக்கரில் சமைக்கும் எல்லாவற்றையுமே இதிலும் சமைக்க முடியும். மேல் மூடியைக் கழற்றிவிட்டால், வறுவல், பொரியலுக்குக்கூடப் பயன்படுத் தலாம். இந்த மண் குக்கர் விரைவில் சூடாகி வெப்பத்தைச் சேமித்து எளிதில் கடத்தும் திறன் உடையவை என்பதால், 50 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிப்பும் கியாரன்ட்டி. 2 மற்றும் 3 லிட்டர் அளவுகளில் கிடைக்கும் இந்த குக்கர்களின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை. இவை தவிர, வாட்டர் கன்டெய்னர்கள், டின்னர் செட் உட்பட 29 வகையான பொருட்கள் சந்தையில் உள்ளன.
நமக்குத்தான் இவை புதுசாகத் தோன்றுகின்றன. ஆனால், வட மாநிலங்களில் இந்தப் பொருட்கள் நீண்டகாலமாகப் பயன்பாட்டில் உள்ளன. இப்போது குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், விலை சற்று அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தயாரிக்கும் நிலையோ, அதிகமான பயன்பாடோ வந்தால், விலை குறைய வாய்ப்புகள் அதிகம். வீட்டில் இந்த மண் பொருட்களைக் குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு அம்சத்தைத் தவிர, எந்தக் குறைபாடும் இல்லை!

No comments:

Post a Comment