இந்தியாவின் மார்ஸ் மிஷன்!
நன்றி : விகடன்
சூரியனைச் சுற்றிவரும் மூன்றாவது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். ஆங்கிலத்தில் 'மார்ஸ்’ என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டிவிட்டன!
இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு சாதனைப் பயணத்துக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இந்தியாவின் விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ESA (ஃப்ரான்ஸைத் தலைமையாகக்கொண்ட 13 ஐரோப்பிய நாடுகள்), ஜப்பான், சீனா... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள்...
பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும்.
பிரம்மாண்ட ஆழமும் அகலமும்கொண்ட பள்ளத்தாக்குகள், எரிமலைகள் பூமியில்
இருப்பதைப் போல செவ்வாயிலும் உண்டு. செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 7 கி.மீ., அகலம் 4,000 கி.மீ.; பூமியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 1.8 கி.மீ., நீளம் 400 கி.மீ. (அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான்). செவ்வாயில் இருக்கும் மிகப் பெரிய எரிமலையின் உயரம் 26 கி.மீ., இதன் விட்டம் 602 கி.மீ; பூமியில் உள்ள மிகப் பெரிய எரிமலையின் உயரம் 10.1 கி.மீ., விட்டம் 121 கி.மீ.
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன. 2008-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 'சந்திராயன்-1’ அனுப்பப்பட்டதற்கு பிறகு, அடுத்த சாதனைப் பயணத்துக்கு 'இஸ்ரோ’ தயார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் 3,850 லட்சம் கி.மீ. இந்தத் தூரத்தை இந்திய விண்கலம் கடந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய சுமார் 10 மாதங்கள் பிடிக்கும். அதாவது, இந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை 4.27 மணிக்கு விண்கலம் சரியாகப் புறப்படுமானால், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு செவ்வாய்க்குப் போய்ச் சேருமாம். எவ்வளவு வியப்பூட்டும், துல்லியமானத் தகவல்!
எம்.ஓ.எம். (’மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’) என்ற இந்தத் திட்டத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி. 1,350 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
பெங்களூரூவில் உள்ள 'இஸ்ரோ’ மையத்தின் திட்ட இயக்குநரான சுப்பையா
அருணன், ஒரு தமிழர். ''இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் இது. செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், அந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆராய்வதுமே நமது நோக்கங்கள். இவற்றுக்கு மேலாக, கிரகம்விட்டு கிரகம் பயணிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு இந்தப் பயணம்தான் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ’விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப் பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண்கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!
நாம் அனுப்பும் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கப்போவது இல்லை. செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரப்போகிறது. இது ஒரு தொழில்நுட்ப சோதனைத் திட்டமே தவிர, அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அல்ல. கிரகம்விட்டு கிரகம் பயணிக்கும் சாத்தியக்கூறு நம்மிடம் இருப்பதை உறுதிசெய்யும் திட்டம். பல்வேறு விதமான நோக்கங்களுடன் ஐந்து முக்கியக் கருவிகளை இந்த விண்கலத்தில் பொருத்தியுள்ளோம்.
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் உபகிரகமாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு உபகிரகங்கள். இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயிலிருந்து தரையையும் உப கிரகங்களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக்கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.
விண்கலத்தின் எடை 1,350 கிலோ என்றாலும், அதனுள் 852 கிலோ எரிபொருள் அடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புறப்படவுள்ள விண்கலத்தை ஏற்றிச் செல்ல பி.எஸ்.எல்.வி. சி 25 என்ற ராக்கெட், நான்கு எரிபொருள் நிலைகளுடன் தயார். இது இந்தியாவின் சில்வர் ஜூப்ளி ராக்கெட்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுப்பையா அருணன்.
செவ்வாய் கிரகத்தை ஆராய, அட்லஸ் மற்றும் டைட்டன்ஸ் எனும் மிகப் பெரிய, ஏராள பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, ராக்கெட்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அவற்றை ஒப்பிடுகையில் குறைந்த செலவிலான இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் பயன்படுத்துவது இந்திய விண்வெளி ஆய்வுச் சிறப்புகளில் ஒன்று. பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவுபெறும் இடத்தை அடைய 9,18,347 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். 'இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் விண்கலத்தில் மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தி இந்தச் சாதனையைச் செய்ய இருக்கிறது.
'
'ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். தூய்மையான நீர், கழிவு நீரால் அசுத்தமாகி வருகிறது. சுவாசிக்கும் பிராண வாயு, நச்சுப்புகையால் மாசுபடுகிறது. ஓஸோன் மண்டலம் பழுதுபட்டு வருகிறது. சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. இப்படி பூமியை நாம் பாழ்படுத்திவருகிறோம். ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன்.
'அக்டோபர் 28’ என்று நாள் குறித்திருப்பதில் ஒரு நுட்பம் இருக்கிறது. இந்த நாளில் இந்தியாவைவிட்டு விண்கலம் புறப்பட்டால்தான் அது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசையில் செலுத்தப்பட்டு, செவ்வாயின் சுற்றுப்பாதையைச் சரியாக அடைய முடியுமாம். சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் 44 டிகிரியில் ஒன்றுசேருதல் (மிகக் குறைந்த எரிபொருள் செலவில்) சாத்தியமாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 15 வரைதானாம். இந்தக் காலத்தைத் தவறவிட்டால், ஜனவரி 2016 அல்லது மே 2018தான்
அடுத்தடுத்த சாய்ஸ்! ''நாம் நிச்சயம் சாதிப்போம்'' என்கிறார் அருணன் உற்சாகமாக.
தமிழன் சாதிப்பான். விகடனின் வாழ்த்துகள்!
யார் இந்த அருணன்?
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர். மனைவி கீதா, பெங்களூரூவில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியை. மகள் ஸ்ருதி அருணன், பெங்களூரூவில் எம்.பி.பி.எஸ். மாணவி. அருணனின் தாயார் மாணிக்கம், ராக்கெட் உளவு வழக்கில் சிக்கி, நிரபராதி என்று விடுதலைசெய்யப்பட்ட பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மூத்த சகோதரி. அருணனின் மனைவி கீதா, நம்பி நாராயணன் - மீனா தம்பதியரின் மகளே!