பாராட்ட விடுபட்டவர்களை நாம பாராட்டுவோம்
பல பாராட்டு விழாக்கள் பார்த்த கலைஞர் முதல், பல பாராட்டுகளைப் பெற்ற கலைஞர்கள் வரை சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுல கண்டுக்கப்படாமப் போயிட்டாங்கனு குறை இருக்கு. ஆயிரம் வேலை இருக்கிற ஃபிலிம் சேம்பர், அவங்களைக் கண்டுக்கலைன்னா என்ன, நாம பாராட்டுவோம் பாஸ்!
ராஜ்கிரண்: 'டைனிங் டேபிள்ல வாழை இலை போட்டுச் சாப்பிடுறவங்க மத்தியில, வாழை இலையவே டைனிங் டேபிளா பயன்படுத்தி சாப்பிட முடியும்’னு காண்பிச்சவர் நம்ம மாயாண்டி. இவர் கறி திங்கிறதை மட்டும் ஆடும் கோழியும் பார்த்துச்சுன்னா, அதுங்களே கைக்காசு போட்டு குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கும்.
டவுசர் தெரிய வேட்டி கட்டியே நடிச்சவர்... சாராயத்தை சர்பத்தாக் குடிச்சவர்! ரைமிங்ல தக்காளினு வர்ற கெட்ட வார்த்தையை, தான் பேசுற ஒவ்வொரு வார்த்தையோட ஆரம்பத்திலும் வெச்சிப் பேசி நடிச்ச இவரை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. இருந்தாலும் தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் 'முனியாண்டி விலாஸ்’ சார்பா முந்திக்கிட்டுப் பாராட்டிக்கிறோம்!
நெப்போலியன்: 'அதிகமா அருவாள் வெச்சிருந்தது அய்யனார் சிலையா... இந்த ஆறடி மலையா?’னு, பொங்கலுக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வெக்கிற அளவுக்கு அருவா தூக்கி நடிச்சவர் இவர். அருவாளும் அரிக்கேன் விளக்கும் வெச்சிக்கிட்டு, சுத்துவட்டாரத்தையே காக்கும் குலசாமியா ரெண்டு லட்சம் படங்களில் நடிச்சவர்.
இன்னைக்கும் தமிழ் சினிமாவுல 'எட்டுப்பட்டி’யைக் காக்கிற செக்யூரிட்டி வேலைக்கு இவரை அடிச்சுக்க ஆளே இல்ல... ஆளே இல்ல... ஆளே இல்ல. இவரை புதுக்கோட்டை பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பா பாராட்டிருவோம்!
வாகை சந்திரசேகர்: தமிழ் சினிமா கண்ட தன்னிகரற்ற தற்கொலை வீரர். அவனவன் காரை பார்க் பண்ண இடம் கிடைக்காமத் தவிக்கிறப்போ, வில்லனுங்க கத்தியை பார்க் பண்றதே இவர் வயித்துலதான். ஹீரோவை வில்லன் கத்தியால குத்த வர்றப்பவும், துப்பாக்கியால சுட வர்றப்பவும், இவரா குறுக்க பாய்ஞ்சு வயித்துல வாங்கிக்குவார். தமிழ் சினிமாவுல இப்படி இவர் காப்பாத்துன உயிர்களின் எண்ணிக்கை, 40 ஏக்கர் நெற்பயிர்களின் எண்ணிக்கையைவிட நாலைஞ்சு மடங்கு அதிகம்.
இன்று தமிழ் சினிமாவில், வேலை வெட்டி இல்லாம புட்டி அடிச்சுட்டு, குட்டி பின்னால சுற்றும் போஸ் பாண்டிக்களுக்கு, கேடிகளுக்கு முன்னோடி இவரது டீம்தான். இவரை தமிழ்நாடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
காந்திமதி: 'நல்லெண்ண, விளக்கெண்ண, கடலெண்ண, நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன’, 'கூட்டிக் கூட்டிப் பிஞ்சிப்போச்சாம் வெளக்கமாறு... ரவிக்கை போடாம போறவ எந்த ஊரு?’, 'ஒத்தையூரு மேட்டுக்காரி முப்பது புள்ள பெத்தாளாம்... மேலத் தெரு வீட்டுக்காரி முக்கி முக்கிச் செத்தாளாம்’ போன்ற பல பல டின்ச் டயலாக்குகளைச் சொல்லி தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் பாரம்பரியத்தை ஆரம்பித்துவைத்தவர்.
இன்றளவும் தமிழ் சினிமாவில் இவரோடு ஒப்பிட்டுப் பார்க்க ஓர் அப்பத்தாவும் இல்லை என்பதே இவரது சரித்திர, விசித்திர வெற்றி! 'அடியே இவளே, அவ புருஷன் கதையக் கேளேன்...’ என்று இவர் கிளப்பிய புரளிகளும் குசலங்களும்தான் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் மெகா சீரியலாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமரரான இவரை, தமிழக பெட்டிக் கடை வியாபாரிகள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
ஆனந்த்ராஜ்: இதுவரை தமிழ் சினிமாவுல அதிகமான கற்பழிப்பு முயற்சிகள் மேற்கொண்டது இவர்தான். ஆனா, கற்பழிப்பு வெற்றிபெறும் விகிதம் நூத்துக்கு மூணோ, நாலோதான். அதுவும் ஹீரோவோட தங்கச்சியா இருந்தா மட்டும்தான். ஹீரோயின்கிட்ட முயற்சி நடக்கிறப்பவே விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்னு வந்து இவரை நொங்கெடுத்து ஹீரோயினைக் காப்பாத்திக் கட்டித் தழுவி அழைச்சிட்டுப் போயிடுவாங்க. தமிழ் சினிமாவுல கிட்டத்தட்ட எல்லா ஹீரோயினுக்கும் முறைமாமனா நடிச்சது இவராத்தான் இருக்கும். ஆனா, எப்பவும் ஹீரோயினுங்க இவரைக் குறை மாமனாத்தான் பார்ப்பாங்க. பனியன் வெளிய தெரியற அளவு சில்க் ஜிப்பால வந்து சீன் போடுறதும், ஹீரோ அடிக்கிற அடியில சட்டை கிழிஞ்சி அதே பனியன் வெளியே தொங்குறதும் இவரது கேரக்டரின் சிறப்பு அம்சம். அதனால, அண்ணனுக்கு உள்ளாடை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பா உளமாறப் பாராட்டிக்கிறோம்!
விசு: 'பறந்து கடிச்சா கொசு... பேசிக் கடிச்சா விசு’னு ஸ்கூல் பசங்க ரைமிங் பண்ற அளவு பிரபலம் நம்ம விசு சார். 'இங்க பாருடா கண்ணா...’னு இவரு பேச ஆரம்பிச்சா, அவனவன், ரத்தக்கண்ணீர் மட்டுமில்ல... வாழ்நாளுக்கான மொத்தக் கண்ணீரையும் வடிச்சிருவான்.
இவர் சினிமாக்களுக்கு வசனம் எழுதுன காலகட்டங்கள்ல, தமிழ்நாட்டுல பல பேப்பர் மில்லுங்க செழிப்பா வாழ்க்கையை ஓட்டுச்சுங்க. ஒருதடவை இவர் வசனம் எழுதிய ஃபைல்களை, லாரி வெச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு போனாங்கன்னா பார்த்துக்கங்க. இவருக்கு தமிழ்நாடு பேப்பர் மில் தொழிலாளர்கள் சார்பா பாராட்டுத் தெரிவிச்சிக்கிறோம்!
வினு சக்ரவர்த்தி: உள்ளூர்ல கோவணம் காணாமப்போனதில் இருந்து, உலகளவுல விமானம் காணாமப்போனது வரை எல்லா பஞ்சாயத்துலயும் 'உள்ளேன் ஐயா’ போடுற ஒரே தமிழ் சினிமா நடிகர் நம்ம ஆளுதான். ஒரு பஞ்சாயத்துல, 'ஆட்டுற விரலு யாருக்குச் சொந்தம்... ஆட்டுப்புழுக்கை யாருக்குச் சொந்தம்’னு இவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டு ஐ.நா. சபையே அசந்து போச்சாம்.
'என்ன எழவுடா இது?’னு இவர் சீன்ல என்ட்ரி கொடுத்தாலே, ஆலமரத்து மேல குடியிருக்கிற காக்காங்க ஆறு மாசம் வெளியூர் சுற்றுப்பயணம் போயிடுங்க. பஞ்சாயத்து சீன்ல சொம்புங்கிற பிராப்பர்ட்டிய பிராப்பரா யூஸ் பண்ற ஒரே நடிகர். சந்தனத்தை மாருலயும், கட்டுப்பாட்ட ஊருலயும் வெச்சிருக்கிற இவரை, பித்தளைச் செம்பு தயாரிப்போர் சங்கம் சார்பா தாராளமாப் பாராட்டிரலாம்!
'மைக்’ மோகன்: I don't know-னு சொல்லி தலையாட்டுறவர் மன்மோகன்னா, என்ன பாடுறோம்னே தெரியாம மைக்கு முன்னால தலையாட்டுறவரு 'மைக்’ மோகன். ஒருகாலத்துல தமிழ் சினிமா நடிகைகளின் அம்மாக்கள் தங்கள் பொண்ணுங்களை இவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு நினைச்ச அளவுக்கு ஜென்டில்மேன். இவரை தமிழ்நாடு மைக் செட் மற்றும் மேடை அலங்காரம் சங்கத்தினர் சார்பா, பாராட்டிக்கிறோம்!
விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் ஹீரோ. பாலை தூக்கி அடிக்கிற கேப்டன் டோனின்னா, காலைத் தூக்கி அடிக்கிற கேப்டன் இவர். தமிழ்நாடு காவல் துறைகிட்ட சம்பளம் வாங்கினாலும், வேறுபாடு பார்க்காம, இன்டர்போல், அமெரிக்கக் காவல் துறை, நேபாள கூர்க்கா குழுனு எல்லாத்துக்காகவும் டியூட்டி பார்ப்பார்.
இவர் இதுவரை புடிச்ச பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணிக்கை, பாகிஸ்தான் வாக்காளர் லிஸ்ட்டைவிட பெரிசு. பள்ளி குழந்தைங்க எப்படி யூனிஃபார்ம்லயே இருப்பாங்களோ, அதுபோல24 மணி நேரமும் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுத் திரிஞ்சவர் நம்ம கேப்டன். இப்ப நடிக்கிறதை விட்டாலும், அடிக்கிறதை விடலை. இப்படித்தான் போன தேர்தல் பிரசாரத்தின்போது... ஓ... அப்படியா? ஸாரிங்க... இது சினிமா கட்டுரையாம். அரசியல் கலக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. எட்டி உதைச்சே பல பேரு முட்டியப் பேத்த நம்ம கேப்டனுக்கு கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டோர் சங்கம் சார்பா பாராட்டுகளைக் குவிச்சுடுறோம்!
சாருஹாசன்: பல மாசம் சாப்பிடாத கேரக்டர் போல இருந்ததால, எப்பவும் ரொம்ப சாஃப்ட் கேரக்டர்ல நடிச்சே தமிழ் ஜனங்களின் மனங்களில் நின்னவர். சாஃப்ட்னா சாதாரண சாஃப்ட் இல்லை, ஜாக்கி ஜட்டியைவிட சாஃப்ட்... சொல்லப்போனா, microsoft. தளபதி படத்துல 'நீ என்ன கோத்திரம்?’னு இவரு மூணு வார்த்தை டயலாக் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, டி.வி. பார்க்கிற பொம்பளைங்க, மொத்தப் பாத்திரத்தையும் கழுவி வெச்சிட்டு வந்திடுவாங்க. 30 வருஷமா இவர் தமிழ் சினிமாவுல பேசின மொத்த டயலாக்குகளையும் மொத்தமா 40 பக்க நோட்டுல எழுதினாலும், பாதி நோட்டு காலியா கெடக்கும். அதனால ஐயாவை, பேட்டை வெத்தலை வியாபாரிகள் சங்கம் சார்பா வாழ்த்திக்கிறோம்!
ஜெய்சங்கர்: தமிழ் சினிமாவின் முதன்மையான, முக்கியமான சி.ஐ.டி. ஆபீஸர். 'இல்லை இல்லை... சி.ஐ.டி. காலனில இருந்த ஒரு ஆபீஸ்ல வேலை செஞ்சதால, இவருக்கு சி.ஐ.டி. ஆபீஸர்னு பேர் வந்துச்சி’னு சொல்வாங்க பொறாமைக்காரங்க. ஒரு படத்துல இவர்தான் சி.ஐ.டி-னே கடைசி சீன் வரை சொல்ல மாட்டாங்க. அவ்வளவு சஸ்பென்ஸா இருக்கும். ஆனா, படத்தோட பேரு 'சி.ஐ.டி.’ சங்கர்! ஒரு பக்கமா சாய்ஞ்சிட்டு ஓடுறது, எப்பவும் ஒரு காலை மடக்கி முட்டிக்கால் போட்டுச் சுடுறதுனு இவர் ஸ்டைல் எல்லாமே பட்டையைக் கிளப்பும். மாவீரன் அலெக்ஸாண்டர், மாவீரன் நெப்போலியனுக்குப் பிறகு அதிகமா குதிரையில போனது இவர்தான். அதனால விண்ணுலகில் இருந்து அருள்பாலிக்கும் ஜெய்சங்கர் சாரை ஊட்டியில் குதிரை சவாரி கூட்டிப் போறவர்கள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
சின்னி ஜெயந்த்: உலகத்துலயே அதிகமான நாள் காலேஜுக்குப் போனவர் என்ற கின்னஸ் சாதனையை வெச்சிருப்பவர். இவர் கல்லூரிப் படிப்பை முடித்து டிகிரி வாங்குவதற்குள் 137 பிரின்சிபால்களும், 12,478 புரொஃபஸர்களும் ரிட்டையர்டு ஆகியிருக்காங்கனு புள்ளிவிவரம் சொல்லுது. படிக்கிற பசங்களை கேன்டீனுக்கு அடம்பிடிச்சி அழைச்சிட்டுப் போய் வடை, பஜ்ஜி, போண்டா விற்பனைக்கு அடித்தளமிட்டதால், கல்லூரி கேன்டீன் உரிமையாளர்கள் சங்கம் சார்பா இவரை கும்பிட்டுக்கிறோம்!
'வெண்ணிற ஆடை’ மூர்த்தி: தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ஆசான்... இல்லை இல்லை... குரு! எஸ்.ஜே.சூர்யா, சந்தானம் போன்ற பல பலாமரங்கள் இந்த ஆலமர நிழலில் வளர்ந்தவைதான். சிவாஜி சார் முதல் சிவகார்த்திகேயன் வரை எல்லோரையும் 'தம்ப்ரீரீரீ...’ என்ற வார்த்தையிலும், சரோஜாதேவி முதல் ஷகிலா வரை 'பாப்ப்ப்ப்பா...’ என்ற வார்த்தையிலும் அடக்கிவிடும் இரட்டை அர்த்த ஜாம்பவான். வாயில் இருந்து 'ப்ப்ப்பர்ர்ர், டர்ர்ர்ர்ர்’னு டீசல் தீர்ந்த பம்புசெட் மோட்டார் போல வினோத சத்தமிட்டே நடித்து முடித்த இவருக்கு சைக்கிள் - டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்கள் மற்றும் காத்தடிப்பவர்கள் சங்கம் சார்பா பாராட்டுகள்!
No comments:
Post a Comment