எனக்குப் பள்ளிக்கூடம் போக ரொம்பப் பிடிக்கும்
பள்ளிப் பேருந்து நடுவழியில் பிரேக் டவுன் ஆனாலோ, அரசுப் பேருந்து முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தாலோ... நம் பள்ளி மாணவர்கள் பலர் என்ன செய்வார்கள்? 'நாளைக் குப் பார்த்துக்கலாம்!’ என்று பள்ளிக்குச் செல்லாமல் 'கட்’ அடித்துவிடுவார்கள். ஆனால், கோவை - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பூச்சமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா செய்வதோ வேறு!
ஆறாவது படிக்கும் சந்தியாவுக்கு பள்ளிப் பேருந்து பஞ்சாயத்தெல்லாம் கிடையாது. ஆனால், 'பரிசல்’ பஞ்சாயத்து உண்டு! பூச்சமரத்தூர் கிராமத்திலிருந்து பரளியில் அமைந்திருக்கும் பவர் ஹவுஸ் பள்ளிக்கூடத்தை அடைய, பவானி ஆற்றைக் கடக்க வேண்டும். ஆறு என்றால் சலசலத்து ஓடும் வாய்க்கால் அல்ல; சீற்றமும் வேகமுமாகச் சுழித்துக்கொண்டு ஓடும் ஆறு. அந்த ஆற்றை பரிசலில் பெரும்பாலும் தனிநபராகக் கடந்து, பள்ளி சென்று வருகிறாள் சந்தியா. நாங்கள் அவளைச் சந்திக்கச் சென்றிருந்தபோதும், தனியாளாக துடுப்புப் போட்டபடி பரிசலில் வந்து இறங்கினாள் அவள்.
நாம் ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கவனித்தவள், ''என்னண்ணா அப்படிப் பார்க்கிறீங்க? எங்க ஊர்ல எல்லாருக்கும் பரிசல் ஓட்டத் தெரியும். பெரிய அண்ணன்களோட பள்ளிக்கூடத்துக்குப் போறப்ப நான் துடுப்புப் போட்டு ஓட்டக் கத்துக்கிட்டேன். அண்ணன்கள் வராதப்ப எங்களை மாதிரி சின்னப் பொண்ணுங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டாங்க. ஆனா, எனக்குப் பள்ளிக்கூடம் போக ரொம்பப் பிடிக்கும். அதனால நான் மட்டும் துடுப்புப் போட்டுட்டுக் கிளம்பிடுவேன். என் சோட்டுப் பிள்ளைங்கள்லாம் தனியா என்கூட வரப் பயந்தாங்க. ஏன், என் அப்பாவே பயந்தாரு. ஆனா, நான் பள்ளிக்கூடத்துக்குப் போயே ஆகணும்னு பிடிவாதம் பண்ணதால, 'பத்திரமா போய்ட்டு வரணும்’னு சொல்லி ஒருதடவை ஆத்துக்குள்ள வழியைக் காட்டி, பரிசலைக் கையில கொடுத்துட்டாரு. காலையில ஒரு அளவுல இருக்கிற தண்ணி, சாயங்காலம் ஜாஸ்தியாகிடும். காலையில துடுப்புப் போடுறதுதான் கஷ்டம். ஏன்னா, ஆத்துத் தண்ணிக்கு எதிர் திசைல படகை ஓட்டிட்டுப் போகணும்'' - குழந்தைக் குறும்பும் மழலைத் தொனியும் மாறாத வார்த்தைகளில் பேசுகிறாள் சந்தியா.
''பரிசல் ஓட்டும்போது பயமா இருக்காதா? ஆறு முழுக்க தண்ணி தளும்பி ஓடுதே!''
''பயம்லாம் கிடையாது. ஆனா, மழைக் காலத்துல மட்டும் கொஞ்சம் திக்..திக்னு இருக்கும். அப்போ யாரும் பள்ளிக்கூடத்துக்கும் போக மாட்டாங்க. ஆத்துத் தண்ணியும் ரொம்ப வேகமா இருக்கும். ஆனா, நான் என்ன பிரச்னைனாலும் பள்ளிக்கூடத்துக்கு லீவ் எடுக்க மாட்டேன். ஆனா, உடம்பு சரியில்லாதப்ப மட்டும் வீட்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டாங்க. அப்போலாம் கஷ்டமா இருக்கும். சீக்கிரம் உடம்பு சரியாகணும்னு, எந்தச் சேட்டையும் பண்ணாம இருப்பேன்!''
''இப்படி ரிஸ்க் எடுத்து பரிசல்ல பள்ளிக்கூடம் போற அளவுக்கு படிப்பு மேல அவ்ளோ இஷ்டமா?''
''ஆமாண்ணா! படிப்புதானே முக்கியம். ஆனா, அதை எங்க ஊர்ல பல பிள்ளைங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நான் நல்லா படிப்பேன். எனக்கு காலேஜ்லாம் போய் படிச்சு டீச்சர் ஆகணும்னு ஆசை. அப்பத்தான் எங்க ஊர்லயே வெச்சு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரமுடியும். ஒருவேளை டீச்சர் ஆக முடியலைன்னா, நர்ஸ் ஆகணும். அப்பத்தான் எங்க ஊர்ப் பொண்ணுங்களுக்கு ஊர்லயே பிரசவம் பார்க்கலாம்...'' பெரிய பெரிய கனவுகளை எளிமையான வார்த்தைகளில் அடுக்கிக்கொண்டே இருக்கிறாள் சந்தியா.
''ஆனா, அதுல ஒரு சிக்கல்ண்ணா...'' என திடீரென குரல் கம்முகிறது சந்தியாவுக்கு. 'என்ன சிக்கல்?’ என்று விசாரித்தால், ''இப்ப நான் படிக்கிற பள்ளிக்கூடத்துல பத்தாப்பு வரைக்கும்தான் இருக்கு. அப்புறம் வெள்ளியங்காடு போகணும். அது இங்கே இருந்து
30 கிலோமீட்டர் இருக்கும். அங்கே ஹாஸ்டல்லயே தங்கிப் படிக்கணும். ஆனா, எங்க ஊர்க்காரங்க யாரும் அப்படிலாம் வெளியே தங்க மாட்டாங்க. அதனால என்னை அங்கே அனுப்பிப் படிக்க வைப்பாங்களானு தெரியலை. ஆனா, நான் படிச்சிருவேன்னு நினைக்கிறேண்ணா. ஏன்னா, பரிசல்ல துணைக்குப் போக ஆள் இல்லைனு என் அக்காவை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிப்பாட்டிட்டாங்க. நான் பரிசல் ஓட்டக் கத்துக்கிட்டு இப்போ தனியாவே பள்ளிக்கூடத்துக்குப் போயிடுறேன். அதே மாதிரி வேறு எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிச்சுடுவேண்ணா!''
சந்தியாவின் நம்பிக்கையை ஆமோதிப்பது போல சலசலக்கிறது பவானி ஆறு!
No comments:
Post a Comment